In சோழர்கள்

சோழர்களும் கேசரிப்பிரச்சனையும்

பராந்தகன் இறந்ததற்கும், முதலாம் இராஜராஜன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகள் கொண்ட குறுகிய காலமாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். இப்பகுதிக்கான ஆதாரங்கள் அறிஞர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் முழு விவாதத்திற்கு பிறகே யார் யார் எப்போது அரியணை ஏறினர் என்பதை ஒருவாறு நிர்ணயிக்க முடியும்.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்

முதலில் நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் தன்மையை ஒருவாறு அறிய வேண்டும், இவற்றில் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளே முக்கிய ஆதாரங்களாகும்.

இந்த காலநிலையைப்பற்றிய கல்வெட்டுக்களைத்தவிர, பல செப்புப்பட்டயங்களும் நமக்குச் சான்றுகளாக உள்ளன. இச்சான்றுகளிலிருந்து முதலாம் பராந்தகனுக்கும் இராஜராஜனுக்குமிடையேயான சோழமன்னரின் வமிசாவழியை நாம் முடிவு செய்யவேண்டும்



கண்டராதித்தன்

இராஜகேசரி கண்டராதித்தனின் ஆட்சிக்குத் திருவாலங்காடு, லெய்டன் பட்டயங்களும் திருச்சிராய்ப்பள்ளி மாவட்டத்தில் கிடைக்கும் 8-ம் ஆண்டைச்சேர்ந்த பிள்ளையார் மற்றும் ஆழ்வார் அரிகுலகேசரி தேவ என்று குறிப்பிடும், பல இராஜகேசரி கல்வெட்டுக்களும் தென் ஆற்காட்டில் கிடைக்கும் மும்முடிச் சோழ கண்டராதித்தனின் 2-ம் ஆண்டைச்சேரந்த கல்வெட்டு ஒன்றும் சான்று கூறுகின்றன.

இவனது பட்டத்தரசி

செம்பியன் மாதேவி என்ற மனைவி மூலம் பிறந்த உத்தமசோழன் என்ற சிறுகுழந்தையை விட்டுச்சென்றான். இவ்வரசி மிகுந்த சிவபக்தியுடையவள். இளவயதிலேயே தன் கணவனையும் பின் தன் மகனையும் இழந்த செம்பியன் மாதேவி, கி.பி. 1001 வரை பல ஆண்டுகள் வாழ்ந்தாள். இவ்வரசி எடுப்பித்துள்ள சிவன் கோயில்களும், இவற்றைப்பராமரிக்கும் பொருட்டு தன் மகனுடைய ஆட்சியில் விடப்பட்ட பல அறக்கட்டளைகளை இதற்கு சான்றுகூறுகின்றன.

அரிஞ்சயன்

அரிகுலகேசரி, அரிஞ்சயன் அல்லது அரிந்தமன் ஆகிய பட்டங்களின் பொருள் ஒன்றாயிருப்பதன் அடிப்பஆயில், இவை முதலாம் பராந்தகனின் இளையமகனையே குறிப்பிடுகின்றன. அரிஞ்சய பரகேசரி தன் சகோதரன் கண்டராதித்தனை அடுத்து சிறிது காலம் ஆட்சிசெய்தான்

அரிஞ்சயனைப் பொருத்தமட்டில் இவனது ஆட்சியைப்பற்றிக் கூறும் சில செப்பேடுகளுடன் 12-ம் ஆட்சிஆண்டைச் சேர்ந்த இராஜகேசரிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அரிஞ்சயன் நெடுநாள் வாழ்ந்து அரசுரிமையைப் பெற்றிருந்தபோதும், இவ்வுரிமையைச் சிறிதுகாலமே அவன் நுகரமுடிந்தது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.

சுந்தரசோழன்

அரிஞ்சயனுக்குப்பின் அவனுக்கும் அன்பில் பட்டயங்களில் கூறப்படும் அவனது ஒரே பட்டத்து அரசியான வைதும்பை இளவரசி கல்யாணிக்கும் பிறந்த ஒரே மகனே அரியணை ஏறினான். இவன் பெயர் இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன். இவன், மதுரை கொண்ட இராஜகேசரி என்றும் அழைக்கப்பட்டான்.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னைடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டதாலும், இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்று அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து வானவன் மாதேவி என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.


தலைகொண்ட என்பதற்குப் பொருள்

இக்காலப்பகுதியின், வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைகொண்ட என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்பதை காணலாம். சோழ மன்னன் ஒருவனின் தலையைக் கொண்டதாக, வீரபாண்டியனும், வீரபாண்டியனது தலையைக்கொண்டதாக மற்றவரும் கூறியிருக்கின்றனர்.

பாண்டிய மன்னனால் தலையை வெட்டி எறியப்பட்ட சோழ மன்னர் யார் என்பதைப்பற்றி சர்ச்சைகள் இருந்துவருகின்றன. ஆனால் இந்தச் சொற்றொடர், தன்னை வெற்றிகொண்ட மன்னனிடம் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வகையில், ஒரு மன்னன் தலைசாய்ந்து நிற்பதையே குறிக்கும்.

இதே காலத்தில், இரண்டாம் ஆதித்தன் வீரபாண்டியனைப் போரில் கொன்று, வெட்டப்பட்ட அவனுடைய தலையைச் சோழநாட்டின் தலைநகருக்குக் கொணர்ந்தான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் திட்டவட்டமாகக்கூறுகின்றன. இவ்வாறிருக்க ‘தலைகொண்ட’ என்ற விருதை வீரபாண்டியன் ஏற்றிருப்பது தான் ஒரு சோழ மன்னன் அல்லது இளவரசன் மீது தற்காலிகமாகக்கொண்ட வெற்றியைப் புகழ்ச்சியுடன் கூறிக்கொள்வதையே குறிக்கும்.

கேசரி பிரச்சனை

அதாவது சோழ மன்னர்கள் தங்களின் பெயர்களுக்கு பின்னால் பரகேசரி, மற்றும் இராஜகேசரி என்ற பட்டப்பெயர்களை ஒரு ஒழுங்குமுறையில் வைத்துக்கொண்டனர். அதாவது பட்டத்தில் இருக்கும் மன்னன் இராஜகேசரியாக இருந்தால் அடுத்து பட்டத்திற்கு வரும் மன்னர் பரகேசரி. இது அப்படியே அடுத்த முறை மாறும் அதாவது இராஜகேசரியாக. இப்பொழுது உள்ள பிரச்சனையைப் பார்ப்போம்.

அதாவது, மதுரை கொண்ட இராஜகேசரி என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவது யார்? என்பதைப்பற்றிய கேள்வி. கண்டராதித்த இராஜகேசரி, ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கல்வெட்டுக்களில் உள்ளது.

பராந்தகன், வாழ்நாளிலேயே இராஜாதித்தன் இறந்தபிறகு, இளவரசுப்பட்டம் பெற்ற இவனது ஆட்சி தொடங்கி இருக்கவேண்டும். கண்டராதித்தன் ஒரு பரகேசரி என்றும் திருவாலங்காட்டு பட்டயங்களில் இவனுக்கு அடுத்துக் கூறப்பட்டுள்ள அரிந்தமனே, மதுரை கொண்ட இராஜகேசரி ஆவான் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே கூறியபடி இந்தவாதம் தவறானது. இராஜாதித்தன், இளவரசுப்பட்டம் பெற்ற பொழுது இராஜகேசரி விருதைப் பெற்றிருக்கலாம், ஆனால் இவன் தன் தந்தைக்கு முன்பே இறப்பதனால், இவனுடைய விருதையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் பராந்தகப் பரகேசரியை அடுத்தவந்த மன்னன், ஒரு இராஜகேசரியே ஆவான் கண்டராதித்தன் ஒரு இராஜகேசரியே என்பது பொதுவான கருத்தாகவே உள்ளது என்றாலும். இது இராஜாதித்தன் தன் தந்தைக்கு முன்பே இறந்ததன் விளைவே இது என்பது தளிவாக உணரப்படவில்லை.

அரியணையில் அமர்ந்திருக்கும் மன்னர் இராஜகேசரியா? அல்லது பரகேசரியா? என்பதைப் பொறுத்தே இளவரசனோ அல்லது இளவரசர்களோ, இராஜகேசரி அல்லது பரகேசரி என்ற விருதினை ஏற்ற வழக்கத்திலிருந்து, வாரிசுப்பிரச்சனையை நாம் தளிவாக தீர்க்கமுடியும்.

அரிஞ்சயனின் மகன் சுந்தரசோழன் ஒரு இராஜகேசரி என்று அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. இவனே மதுராந்தகன் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தான். இவன் பாண்டியர்களுடன் போரிட்டான் என்பதையே ‘பாண்டியனை சுரம் இறக்கின‘ என்ற இவனுடைய பட்டத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இக்குறிப்புக்களின் படி, இரண்டாம் பராந்தகச் சுந்தரசோழனே இவன் எனவும். இவனுடைய கல்வெட்டுக்கள் சிலவற்றில் மதுரை கொண்ட இராஜகேசரி எனக் குறிப்பிடப்பட்டான்.

Related Articles

4 comments:

  1. கட்டுரை நன்றாக இருக்கிறது. ஆதாரங்களை எங்கே பிடித்தீர்கள்?

    ReplyDelete
  2. நிலா அது நான் மரத்தடிக்காக எழுத ஆரம்பித்த தொடர். அதன் மற்ற பாகங்களை வலது ஒரத்தில் பார்க்கலாம்.

    ஆதாரத்தையும் குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  3. ம்ம்.., அங்கத்தொட்டு, இங்கதொட்டு திரும்பவும் சோழர்'க்கு வந்ததருக்கு நன்றி :-)

    ReplyDelete
  4. வந்துட்டேன்ல பார்ப்போம் கொஞ்சம் நேரமும் நிறைய மனசும் வேணும் ரவிகுமார். அதான் கொஞ்சம் லேட்டாகுது.

    ReplyDelete

Popular Posts