In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 10(முடிந்தது)

“சேலை கட்ட தெரியும்னா, போய் கட்டிக்கிட்டுவா, ஒரு வேலையிருக்கு…” என்றான்

அரைமணி நேரத்தில் அவர்கள் மதுரை - திருச்சி ரோட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்தார்கள் ஆனால் இடைவெளி மட்டும் அப்படியே இருந்தது.

“நாம இப்ப எங்க போறோம்?”

“எங்கப்பாவைப் பார்க்க…”

“எதுக்கு?”

“நம்ம விஷயத்தை சொல்லப்போறோம்…”

“இங்கப் பாருங்க, அதுக்கு முன்னாடி உங்க அம்மாகிட்ட சொல்லலாம்ல, உங்கப்பா கோபக்காரருன்னு வேற சொல்றீங்க. உங்கம்மாகிட்ட சொன்னா அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்கல்ல…”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்…” அவன் சொல்லி நிறுத்தினான்.

“தாஸ், கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க.”

அவன் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினான். நேராக அவனெதிரில் வந்தவள்.

“என்ன சொன்னீங்க?”

“அம்மாவுக்கு எல்லாம் தெரியும்னு…”

“எல்லாம்னா?”

“எல்லாம் தான்.”

அவள் உடனே தலையில் அடித்துக் கொண்டு, பக்கத்தில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்தாள். ஐந்து நிமிஷம் ஆகியிருக்கும். லேசாக சிரித்துக் கொண்டே அவனருகில் மீண்டும் வந்தவள்.

“என்ன தாஸ் இது, அம்மாகிட்ட எதையெல்லாம் சொல்றதுன்னு விவஸ்தையில்லை, நான் இனிமே உங்கம்மா முகத்தில எப்பிடி முழிப்பேன். அன்னிக்கு ஹாஸ்டல்ல என்னைய விட்டுட்டு போனதுக்கு பிறகு என்ன நடந்தது. உங்கம்மா கிட்ட எப்ப சொன்னீங்க, அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“அன்னிக்கு என்கிட்ட அப்பிடி நடந்துக்கிட்டதுக்காக, எனக்கு உம்மேல துளிகூட கோபமில்லை, உனக்கும் அப்படித்தான்னு தெரியும். ஆனா அன்னிக்கு நைட்டு தூக்கமே வரலை எனக்கு, ஒரே கெட்ட கெட்ட கனவா வந்தது. ஏற்கனவே சின்ன பெண்ணை ஏமாத்திட்டதா ஒரு கில்டி ஃபிலிங். கனவுல இந்தியன் தாத்தா வந்து, ‘செய்வியா, செய்வியா’ ன்னு கத்தியில குத்துறார். ஒரு பையன் வந்து, ‘நீ இந்த செமஸ்டர்ல மூணு அரியர்’னு சொல்றான். நான் ரொம்பவே பயந்திட்டேன். இடையில நீ வேற கனவுல வந்து சிரிக்கிற. முதல் நாள் சமாளிச்சிட்டு காலேஜ் வந்தேன். நீ வேற விடாம திரும்பத் திரும்ப வந்து என்னைப் பார்த்துக்கிட்டிருந்தியா… அதான் அடுத்த நாள் நேரா போய் அம்மாகிட்ட சொன்னேன்.”

“என்னன்னு சொன்னீங்க?”

“அம்மாவுக்கு ஏற்கனவே இதப்பத்தி தெரியும், நானும் அம்மாவும் பேசிவச்சிட்டுத்தான் அன்னிக்கு உன்னைய பூஜைக்கே வரச்சொல்லியிருந்தோம். அதனால நான் அம்மாகிட்ட நேராப் போய், ‘நைனாகிட்ட பேசு’ ன்னு சொன்னேன். அம்மா அதுக்கு என்னடா அவசரம்னு கேட்டாங்க; நான் அவசரம் தான்னு சொல்லிட்டு தலையை குனிஞ்சுகிட்டேன். அம்மாவுக்குப் புரிந்துவிட்டது…”

“அத்தே என்ன சொன்னாங்க?”

“நான் அப்பவே நினைச்சேன்னு சொன்னாங்க”. அவன் சொல்லிவிட்டு சிரித்தான். பக்கத்தில் வந்து தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு, “பண்ணியதெல்லாம் நீங்க, கெட்டபேரு மட்டும் எனக்கா? அத்தே என்னைத்தான் தப்பா நினைச்சிருப்பாங்க. சரி அது என்னா கையில, என்னவோ வைச்சிருக்கீங்க?”

“உனக்குத்தான்” சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த தங்கச் சங்கிலியை அவளிடம் கொடுத்தான்.

“ஐ, எனக்கா சூப்பராயிருக்கு. உண்மையை சொல்லுங்க உங்களுக்கு இதெல்லாம் தோணாதே, யார் சொன்னாங்க வாங்கிக்கொடுக்கச் சொல்லி?”

“யாரும் சொல்லலை, அம்மாதான் இதை கொடுத்து, அகிலாகிட்ட கொடுன்னு சொன்னாங்க.”

அவன் சொன்னதும், அதுவரை அவள் கையில் வைத்திருந்த லாப்டாப்பை அவன் கையில் திணித்து, “நீங்க இதையே கட்டிக்கிட்டு அழுங்க, உங்களையெல்லாம் நான் கல்யாணம் செய்துக்க முடியாது.”

அவன் அப்பா முன்னாடி நின்றுகொண்டிருந்தான் அகிலாவுடன்.

"நைனா நான் இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்". சொன்னவுடன் நெருங்கி வந்து பளீரென அறைந்தார்.

"ஏண்டா நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்ததும். உனக்கு கூடப்படுத்துக்க பாப்பாத்தி கேட்குதா?"

உடனே அம்மா தலையிட்டு, "என்ன பாவா இது, சின்னப்பிள்ளைங்க கிட்ட இப்பிடியா பேசுறது" என்று கேட்டவுடன்.

அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார்.

அம்மா அவனை அழைத்து, "டேய், நீ போய் கனிமொழியைக் கூப்பிட்டுட்டு வா"

அவன் கனிமொழியை கூப்பிட்டு வரவும் அப்பா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. அப்பா கனிமொழியிடம், "ஏய் உனக்கும் இதெல்லாம் தெரியுமா?"

"இல்லைப்பா, எனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. அண்ணே இப்பத்தான் சொன்னாரு," ஒரு குண்டை போட்டாள்.

"சரி பெண்ணு எப்பிடி, அவங்க குடும்பம் எப்பிடி?"

"அப்பா, பெண்ணு ரொம்ப நல்ல பெண்ணு, அவங்க அப்பா புரோகிதர், அம்மா கிடையாது. மற்றபடிக்கு நல்ல குடும்பம்தாம்பா.."

"ஏண்டி அந்த பொண்ணு எங்க?" இது அம்மாவிடம்.

"அகிலா, இங்க வந்து மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க!" அம்மா சொன்னதும் அகிலா வீட்டுக்குள்ளிருந்து வந்தாள். அம்மாவுடைய கல்யாணப் புடவை, அம்மாவுடைய நகைகள் எல்லாம் போட்டுக்கிட்டு, கல்யாண பெண்ணு மாதிரி இருந்தாள்.

"என்னங்க அப்பிடியே, குலதெய்வம் கோயிலுக்கு போய்ட்டு வந்திரலாம், அப்புறம் நீங்க அவங்க அப்பாகிட்ட பேசுங்க. ஆறு மாதம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்."

மோகன் அப்பாவும் ஒத்துக்கொள்ள, ஆறுமாதத்திற்குப் பிறகு அவர்கள் திருமணம் நடந்தது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து...

அன்புள்ள பாவாவுக்கு,

நல்லாயிருக்கீங்களா, உங்களுக்கென்ன, ஆண்டவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான். ஆனால் என்னைத்தான் இப்படி பழிவாங்கிட்டான் பாவி. உங்களை மாதிரி ஒரு கணவனை கொடுத்துட்டு பாதியிலேயே புடுங்கிக்கிட்டான்.

ஆனால் உங்களுக்கு எப்படி தெரியும் பாவா, நீங்கமட்டும் அன்னிக்கு அப்பிடி கேட்கலைன்னா. இன்னிக்கு உயிரோட இருப்பேனான்னா தெரியாது. ஒருநாள் ராத்திரி நான் புரண்டு படுக்கும் போது முழிச்சிக்கிட்டு இருந்தீங்க. நான் உங்களை தொட்டதும், 'அகிலா நான் ஏதாவது காரணத்தால, செத்துட்டாலும் நீ உயிரோடயிருக்கணும். நம்ம புள்ளையை வளர்க்கணும்'னு சொன்னீங்க. நான் தூக்கக் கலக்கத்துல, 'அப்பிடியெல்லாம் பேசக்கூடாது..' னு சொல்லிவிட்டு இன்னும் இறுக்கமா உங்களை கட்டிக்கிட்டு படுத்துட்டேன்.

அன்னிக்கு உங்களுக்கு ஆக்சிடெண்ட்ன்னு சொன்னதும் நானும் உங்கம்மாவும் நம்பவே இல்லை, உயிரும் உடம்புமா இருந்த உங்களை அப்பிடிப் பார்க்கவே மாட்டோம்னு சொல்லிட்டோம். உங்கப்பாவை பார்த்து நான் ரொம்ப பயந்திருக்கேன். அதுவும், 'கையில நாலு காசு வந்ததும் கூடப்படுத்துக்க பாப்பாத்தி கேட்குதா'ன்னு கேட்டாருல்ல, அதுல ரொம்பவும் பயந்துதான் போயிருந்தேன். அன்னிக்கு ஒரு பக்கம் நான் மயக்கமாக விழ, இன்னொருபக்கம் அத்தை மயக்கமாகி விழ, பாவம் அவரோட சோகத்தையும் மறைச்சிக்கிட்டு, அப்பப்பா உங்கப்பா ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். மோகனா அக்காவும் பரவாயில்லை சமாளிச்சிட்டாங்க.

உங்கம்மாவும், மோகனாவும் அவ்வளவு சோகத்திலையும் நான் பாத்ரூம் பக்கமோ, இல்லை வேறு எங்கேயாவதோ போனா பின்னாலையே வந்து நான் ஏதும் பண்ணிக்க போறேன்னு என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாங்க. நான் கூப்பிட்டு சொல்லிட்டேன். உங்க பையன் அன்னிக்கு கேட்டுக்கிட்டார். அதனால பயப்படாதீங்க. ஆனா எனக்கு உங்கம்மா மேல ரொம்ப பொறாமையாப் போச்சு, மாஞ்சு மாஞ்சு அழறாங்க. எனக்கு ஒன்னுதான்; எப்பிடி என்கிட்ட சொல்லாம போகமுடியும்; இனிமே உங்கிட்ட பேசமாட்டேன், உன்னைப் பார்க்க மாட்டேன், உன்னைத் தீண்டமாட்டேன்னு எப்பிடி சொல்லாம போகமுடியும்னு தான் அழுகையே.

பாவா, உங்க பையன் அப்பிடியே உங்களை மாதிரிதான். எங்கிட்டையும், அத்தைகிட்டையும் தான் இருப்பான். இதில் உங்கப்பாவுக்கு சிறிது வருத்தம் தான். அவன் அத்தைகிட்ட போனாலும் போவான். உங்கப்பாகிட்ட வரமாட்டான். இரண்டு வயசுதானே ஆகுது. சரியாயிரும்.

அன்னிக்கு உங்கக்காவும், அத்தையும் என்கிட்ட வந்து எதுவும் பேசாமல் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் என்னன்னு கேட்டேன். அதுக்கு அத்தை, 'மாமா ரொம்ப வருத்தப்படறார். சின்ன வயசுதானே உனக்கு, இதே மோனாவுக்கு ஆயிருந்தா சும்மா விட்டிருப்போமா வேறு எதைப்பத்தியும் யோசிக்க மாட்டோம். அதனால... ' அப்பிடின்னு என்னன்வோ சொன்னாங்க. நான் நேரா மாமாவிடம் போய், "நான் இங்க இருக்குறதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?" னு கேட்டேன்.

"என்னம்மா இது, இப்பிடியா பேசுறது. உனக்கென்ன சின்ன வயசுதானே?"

"மாமா, நானும் அவரும் வாழ்ந்த ரெண்டு வருடம் ரொம்ப சந்தோஷமாத்தான் வாழ்ந்தோம். அவரு பையனோடயே நான் வாழ்ந்திருறேன். கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் இனிமே இதப்பத்தி பேசாதீங்கன்னு" சொல்லிட்டேன்.

தாஸ் ஆரம்பத்திலேர்ந்தே நீங்க என்னிடம் ஒன்னும் கேட்டதில்லை, உங்களோட நான் சந்தோஷமாத்தான் இருந்தேன். ஆனா நீங்க என்கூட சந்தோஷமா இருந்தீங்களான்னு தெரியலை. ஆனா உங்கம்மாவும் அக்காவும் நீங்க சந்தோஷமாத்தான் இருந்ததா சொல்றாங்க. அதே போல் இப்பவும் ஒரு வேண்டுகோள். நீங்க எனக்காகக் காத்திருக்கணும், அடுத்த பிறவியிலும் நீங்கத்தான் எனக்கு புருஷனா வரணும். இது பேராசைன்னாலும் வேறு வழியில்லை, இன்னொருத்தரை புருஷனா என்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியலை.

இப்படிக்கு உங்கள்
அகிலா.

(முடிந்தது.)

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts