In இருத்தலியநவீனம் கவிதைகள்

கனசதுரங்களை உடைத்தெறியும் பயணம்

என் எல்லைகளைப் பற்றிய கேள்வி
ஒரு நாளைப் போலில்லாவிட்டாலும்
எல்லா நாட்களிலும் இருக்கிறது
நீள அகலமாய் குட்டை நெட்டையாய்
அவரவர்களுக்கென்று எனக்கான
எல்லை கனசதுரமாய்

சுருங்கத்தான் போகிறதென்றாலும்
நீண்டு கொண்டேயிருக்கும் வெளியின்
சாத்தியக்கூறுகளுடன் எனக்கான
எல்லை ஒளி ஆண்டுகளாய் நீள்கிறது

கனசதுரத்திற்கு வெளியில்
என் நிழலின் நடமாட்டம்
தடுமாற்றங்களுடன் முகத்தில் அறைந்து
கணங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது
 
தவிர்க்கமுடியாததாயும்
ஒப்புக்கொள்ள முடியாததாயும்
நகரும் நாளின் ஒவ்வொரு பக்கத்திலும்
உடைத்தெரியப்பட்ட கனசதுரத்தின்
தெறிக்கும் ஒலியுடனும் சிரிக்கும் ஒளியுடனும்
வெளிகளைக் கடந்து நீளூம் என் பயணத்தின் குறிப்பு
நிரப்பப்படுகிறது
நிரப்பப்படாத பக்கங்களைப்
பற்றிய பயமில்லாமல்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ்

புத்தாண்டு வாழ்த்துக்களும் அதைப் பற்றிய சில குறிப்புக்களும்

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் சொல்ல வேண்டும் என்று என்னுள் நிறைய கேள்விகள் தோன்றியிருக்கின்றன. நாளை மற்றொரு நாளே என்பது போன்ற எண்ணங்கள் உண்டென்றாலும், கொண்டாட்டங்களுக்கான நாட்கள் என்று எனக்கும் சில இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன.

புதிய ஆண்டு உங்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதாக இருக்கட்டும் என்கிற போக்கில் வாழ்த்துச் சொல்கிறோம். ஆனால் இன்றில்லாத நாளையோ அல்லது அடுத்த 365 நாட்களில் எப்பொழுதோ ஒரு முறை/பல முறை வரக்கூடிய சந்தோஷத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும். எல்லா நாளும் நல்ல நாட்களே, எல்லா பொழுதுகளும் மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மையை அளிப்பதாக அமையட்டும் என்று சொல்லலாம் என்றால், ப்ராபபிலிட்டு படி அதன் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைந்ததாக இருக்கும்.
 

எனக்கும் சில வருடப் பிறப்பு நினைவுகள் உண்டு, கிரிக்கெட் பித்து பிடித்து அழைந்த நேரத்தில் 12 மணிக்கு தேசியக் கொடியேற்றி தெருவிற்கே இனிப்பு வழங்கி கலாய்த்திருக்கிறேன் என் கிரிக்கெட் அணியுடன். ரோடு முழுக்க பெரிதாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எழுதியிருக்கிறேன், என் கையெழுத்து காரணமாய். பைக்கில் வேகமாய் சுற்றியிருக்கிறேன் பிஎச் இஎல் ரோடுகளில். நான்கைந்து முறை சர்சிற்குச் என்று என் பாவங்களைக் கழுவியிருக்கிறேன், அப்படியே கோவில்களுக்கும். ராத்திரி 12.00 மணிக்கு சர்ச், 6.00 மணிக்கு கோவில்.

இப்பொழுதெல்லாம் அத்தனை பெரிதாய் மனம் தத்தளிப்பதில்லை, புது வருடப் பிறப்பென்று ஆனாலும் மற்றவர்களுக்காக நானும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வாழ்த்துக்கள் பெற்று அனுப்பி வருகிறேன் இந்த வருடமும்.

வலைபதிவு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

புதிய வருடம் உங்களுக்கு மேன்மைகளைக் கொண்டு வரட்டும். :)

 

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

தாரே ஜமீன் பர்

இன்று டெல்லியில் எனக்கிருந்த ப்ளான்களை திருப்பிப்போட்டது, ஆசிப்பின் சூடான இடுகையில் இருந்த இந்தப் படத்தின் விமர்சனம். சட்டென்று புரட்டிப் பார்த்துவிட்டு நேரம் இருந்ததால் சட்டென்று கிளம்பி வசந்த் விகார் பிவிஆர் சினிமாஸில் இந்தப் படத்தின் டிக்கெட்கள் கேட்டேன், ஏற்கனவே புக் செய்திருந்த ஒரு குடும்பத்தில் ஒரு டிக்கெட் மீந்துவிட எனக்கு தந்துவிட்டார்கள் காசுக்குத்தான்.

ஆசிப்பிற்கு தமிழ் படங்கள் பிடிக்காதென்பது எனக்கு புது விஷயமல்ல, இதே அவர் இப்படி ஒரு தலைப்பை வைத்துவிட்டு மலையாளப்படத்தைப் பற்றி எழுதியிருந்தால் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால் இந்தப் படத்தைப் பற்றி போகோவில் முன்பே விளம்பரங்கள் பார்த்திருந்ததால். சட்டென்று இந்தப் படத்தின் பால் ஆசைப்பட்டேன் அப்படி என்னத்தான் கிழிச்சிட்டார் அமீர் கான் என்று.
 
அமீர் கானின் பக்வாஸ் தனத்தை ஒத்த சில கான்செப்ட்கள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் சினிமா என்பதில் அவருடைய தனிப்பட்ட விருப்பங்களைப் போட்டுக்குழப்பி விட விரும்பவில்லை. லகான் படத்தை இந்தியாவே பாராட்டிக் கொண்டிருந்த பொழுது. நான் டெல்லியில் இருந்தேன் என்று நினைக்கிறேன் அந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை. இன்றும் லகான் பார்க்கவில்லை என்று சொல்லி நண்பர்களின் தேசப்பக்தி மிகுந்த பேச்சுக்களைக் கொண்டுவந்து ஒரு மாதிரி அவர்களை வம்பிழுத்திருக்கிறேன். அவருடைய லகான் படம் என்னைக் கவரவில்லை.

இதனால் இந்தப்படத்தைப் பற்றிய ஆர்வம் இன்னும் அதிகமானது.

 Dyslexia என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றிய கதையிது. படத்தின் தொடக்கத்தில் அந்தப் பையனின் பெயரைப் போட்டு பின்னர் அமீர்கான் பெயர் போடுவதெல்லாம் எனக்குப் பெரிய விஷயமாகப் படவில்லை. ஏனென்றால் இந்தப்படத்தைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் அந்தச் சிறுவன் தான் ஹீரோ என்பது தெரியும் அப்படியிருக்க அமீர்கானின் பெயரைப் போடாமல் அவர் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்ததற்காக அமீர்கானை, டைரக்டராக, தயாரிப்பாளராக நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். படம் மனதைக் கவர்வதாக, பிசைவதாக, கண்ணீர் சிந்த வைப்பதாக இருக்கிறது. நான் படம் பார்த்து கண்ணீர் விடுவதெல்லாம் பெரியவிஷயம் இல்லை, ஏனென்றால் நிறைய படங்கள் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன், ஆனால் ஒன்று கிளைமேக்ஸில் ஆயிருக்கும் இல்லாவிட்டால் படத்தின் ஏதோ ஒரு தருணத்தில் ஆய் இருக்கும். ஆனால் இந்தப் படம் என்னை கண்ணாடிக்குள் இருக்கும் கண்களைத் துடைத்தபடியே படம் பார்க்க வைத்தது.

அந்தப் பையனை தேர்ந்தெடுத்தது யாரென்று தெரியவில்லை, படத்தில் அமீர் கான் தவிர்த்து மற்ற அனைவரும் மிக இயல்பாகவே பொருந்துகிறார்கள். அந்தப் பையனின் அப்பா, அம்மா ஆகட்டும் அண்ணன் ஆகட்டும் ஆசிரியர்கள் ஆகட்டும்(அமீர் கான் தவிர்த்து) தேடிப்பிடித்து கோர்த்தது போல் இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடுமாற வைக்காத இசை, பின்னணி இசை பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கின்றன. ஏற்கனவே கேட்ட பாடல்கள் தான்.

ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, படத்தில் வண்ணங்கள் ஒரு பகுதி என்பதால், ஒளிப்பதிவின் தேவை அதிகமாகயிருந்திருக்கும் நன்றாகச் செய்திருக்கிறார் காமராமேன். ஓவியங்கள் வரைந்தது யார் என்று தெரியவில்லை அருமையாக இருக்கிறது ஒவ்வொன்றும் அதிலும் கடைசியில் அந்தச் சிறுவன் வரைந்த ஒன்றும் அமீர்கான் வரைந்த ஒன்றும் பிரம்மாதமாகயிருக்கிறது.

லகே ரஹோ முன்னாபாய்க்கு பிறகு ஸ்டான்டிங் அப்ளாஸ் எனக்குத் தெரிந்து நான் பார்ப்பது இந்தப் படத்திற்குத்தான்.

தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் சென்று பார்க்கவேண்டும் என்று கட்டளை ஒன்று போட்டால் நன்றாகயிருக்கும் ஆனால் பாவம் மக்களுக்கு இந்தி தெரியாதே(:)) ஜோக்ஸ் அபார்ட் நிச்சயம் படம் சொல்ல வரும் விஷயம் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் சென்று சேரக்கூடியது. அதென்ன தமிழ்க்குடும்பங்கள் என்று சண்டைக்கு வராதீர்கள், வேண்டுமானால் கல்யாணம் ஆகி குழந்தைக்காகக் காத்திருக்கும் அனைவருமே பார்க்கவேண்டிய ஒரு படம்.

ஆனால் ஒரு படம் சமுதாயத்தை மாற்றிவிடுமா தெரியவில்லை, ஓவியத்தின் மூலம் போட்டிகளின் உலகத்தின் கத்திச் சண்டை போட முடியுமா தெரியவில்லை. படத்தை மசாலா தடவித்தான் எடுத்திருக்கிறார் அமீர்கான், படத்தின் முடிவு எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது இதைத் தவிர்த்து ஒரு முடிவை இந்தப் படம் வைத்திருக்கவே முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. அவ்வளவே. குஜராத்தில் இந்தப் படம் ஓடுகிறதா என்று தெரிந்து கொள்ள ஆசையாகயிருக்கிறது. அமீர்கான் 'கஜினி' ரீமேக் போன்ற பக்வாஸ் படங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இது போல் இறங்கலாம் என்று மனம் சொன்னாலும் அவருடைய பொருளாதாரம் அதற்கு அனுமதிக்காதென்றே நினைக்கிறேன். எல்லோரும் ஒரு முறை பார்க்கவேண்டிய படம் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை, அம்மாவையும் அப்பாவையும் அழைத்துவந்து காண்பிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் எழுகிறது.

படம் பார்த்து முடித்ததும் நிச்சயமாய் சொல்லலாம் அமீர்கான் என்னமோ கிழித்துத்தான் இருக்கிறார் என்று. ஆனால் அது அழகான ஓவியமாக இருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In பயணம்

காஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து

ஒரு வழியாக நான் காஷ்மீர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கே வந்தாகிவிட்டது. மனம் நிறைந்த அனுபவத்தைத் தந்தது காஷ்மீர் பயணம்.

காஷ்மீரின் லோக்கல் கார்டன்கள், கோவில்கள் ஒருநாள் சுற்றிவிட்டு, இன்னொரு நாள் குல்பர்க் சென்றுவிட்டு கடைசியாக காஷ்மீர் நினைவாக பர்சேஸ் முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கு இன்று காலை வந்து சேர்ந்தேன். முடிவு செய்திருந்ததை விடவும் அதிக நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்தேன் என்றே சொல்லலாம். ஆனால் நிச்சயமாக வாழ்நாளில் அனைவரும் ஒரு முறை வின்டரில் காஷ்மீர் வந்து செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள், வாழ்க்கையில் ஒரு தடவை செய்யப்போற சந்தோஷமா செய்துட்டு வா என்று, ம்ஹூம் இனி வருஷத்தில் ஒரு தடவை கூட வந்து போகலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் சீசனில் ஒரு முறை வரவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் இப்பொழுதே வருகிறது. :)

பிற்பாடு விரிவாக எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

அடுத்த இரண்டு நாட்கள் 30,31 டெல்லியில் தங்குவேனாயிருக்கும். இடையில் ஜெய்பூர் சென்றுவரும் ஒரு ப்ளானும் இருக்கிறது.

காலம் ரொம்ப வேகமாய் ஓடுகிறதாயிருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In பயணம்

காஷ்மீர் பயணம் - ஜம்முவிலிருந்து

ஜம்மு வந்தாகிவிட்டது. பழைய தில்லியிலிருந்து நேற்றிரவு 9.30க்கு கிளம்பி இன்று காலை 11.30க்கு ஜம்மு மெயில் கொண்டு வந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டது. உடன் வந்த மூன்று வாலிபர்கள் என்ன நினைத்து வந்தார்களோ, ஒரேயொரு ஸ்வெட்டரை மட்டும் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டிருந்தனர். ஆனால் இரவின் பின்நேரங்களில் கம்பளி இல்லாமல் ரயிலின் உள் சமாளிக்க முடியாது என்பது மிகவும் லேட்டாக அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

காலையில் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டு வந்தார்கள். கல்லூரி மாணவர்களாம், வைஷ்ணவ் தேவி பார்க்க வந்திருக்கிறார்கள், நான் ஜம்மு வரை வந்து வைஷ்ணவ் தேவி பார்க்கவில்லை என்றதும் கிறிஸ்தியனா என்று கேட்டார்கள், என் பெயரும் ஒரு மாதிரி சுத்தி கிறிஸ்துவப்பெயர் போல் இருப்பதால் இந்த சந்தேகம் வந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

நானென்னமோ ரொம்பவும் குளிரும் என்று ஸ்வெட்டர் போட்டு மேலே ஜெர்கின் போட்டுக்கொண்டு ஜம்முவில் இறங்கினால் அத்தனை குளிரில்லை, இப்பொழுது ஜெர்கினின் உள் வேகிறது. இங்கிருந்து ஸ்ரிநகர் 12 மணிநேர பயணம் என்று சொல்கிறார்கள். ஜம்முவிலிருந்து ஸ்ரி நகர் போகும் வழி பிரம்மாதமாகயிருக்கும் என்று சொல்லி ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறார்கள். பார்ப்போம். இன்று வரை வைஷ்ணவ் தேவி போகும் ஆவலில்லை, தெரியாது. ஸ்ரிநகரில் இருந்து வந்த பிறகு நேரம் இருந்தால் ஒரு தடவை போய்வரலாம் என்றிருக்கிறேன்.

முந்தையது

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In காஷ்மீர் பயணம் பயணம்

காஷ்மீர் பயணம்

ஒரு வழியாக டெல்லி வரை வந்தாகி விட்டது. அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணம் தொடங்கணும். இது வரை அத்தனைக் கடியாகலை. பெஙளூரில் இருந்து நேராய் ஆக்ராவிற்கு வந்துவிட்டேன். இங்கேயே என் திட்டத்தின் முதல் மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் நல்ல மாற்றம், பைசா அதிகம் செலவாகாமல் தாஜ்மகால் பார்த்துவிட்டு தில்லிக்கு வந்தாகிவிட்டது.

கர்நாடகா எக்ஸ்பிரஸ் பயணத்தில் 'குறட்டைச் சுதந்திரம்' என்றொரு கதையொன்று எழுதும் ஐடியா தோன்றியது. அதனால் அந்தத் தலைப்பை பதிவு செய்து வைக்கிறேன். ஆக்ராவில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் சென்று சேர்த்த பொழுது மணி 7.20 போல, நான் நேராய் ஹோட்டலுக்கு போகலாமா இல்லை தாஜுக்கே போய்விடலாமா என்று யோசனை செய்தேன். என்னவோ நினைத்தவனாய் தாஜிற்கு சென்றேன் நல்லதாய்ப் போனது. என்னால் மிக எளிதாய் உள்ளே செல்ல முடிந்தது. நான் தாஜில் இருந்து வெளியில் வரும் பொழுது 2 அல்லது 3 கிலோமீட்டருக்கு கியூ.

அதிகமாய் இல்லாமல் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன். என்னை தாஜ் மகாலுடன் சேர்த்து பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றாலும் ஒருவரை தொந்தரவு செய்து படம் ஒன்று எடுத்துக் கொண்டேன். ஆக்ரா கோட்டை போகும் எண்ணம் எதுவும் இல்லை, முன்னமே இரண்டு முறையோ என்னமோ பார்த்திருக்கிறேன். ஷாஜகான் அங்க படுத்தார் இங்க உருண்டார் எல்லாம் ஏகப்பட்ட தடவை கேட்டாகிவிட்டது, பயணிகள் தொடர்ச்சியாகச் செல்லும் இடங்களுக்குச் செல்ல இப்பொழுதெல்லாம் அலர்ஜியாக உள்ளது. என்ன செய்ய சொல்லுங்கள். ஆனாலும் கொடுமையே கொடுமை என்று இன்னுமொறு முறை என் காமெராவிற்காக சென்று வந்தேன்.

ஆக்ராவில் இருந்து மீண்டும் திலிக்குச் செல்ல தாஜ் எக்ஸ்பிரஸ் பிடித்துக் கொள்ள, டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை கடைசிவரையில் வெயிட்டிங் லிஸ்ட் 350 எல்லாம் ரொம்ப ஓவர் என்று எனக்கே தெரியும். தில்லிக்கு வந்து ஹோட்டலில் படுத்து தூங்கிவிட்டு கிளம்பி பழைய இடங்களைப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் இந்தியா கேட்டுக்கு சென்று வந்து இப்ப தூங்கப் போகிறேன் அதற்கு முன் சும்மா வந்த இன்டர்நெட் பூத்தில் என் காமெரா வொர்க் ஆக சரி பதிவொன்னு எழுதுவோம் என்று உட்கார்ந்துவிட்டேன்.

கடைசியில் இருக்கும் ரோடு ராஜ்பத் என்றழைக்கப்படும் ஜனவரி 26ல் இந்திய ராணுவத்தின் பரேட் நடக்கும் ரோடு. சிங்கிள் ஸ்ட்ரெயிட்டா இந்த ரோடுதான் இந்தியாவிலேயே பெரிசு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.





PS1: என் புகைப்படங்கள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று ரோமிங்கில் இருக்கும் எனக்கு போன் போட்டுச் சொன்ன நண்பருக்கு நன்றிகள்.(உட்கார்ந்து யோசிப்பாங்க்யளோ???)

PS2: பைக்கில் ஜம்மு வரும் நண்பரை இங்கே டெல்லியில் சந்திக்க வேண்டியது, நண்பர் ஜெய்சல்மர் நன்றாகயிருக்கும் அங்கே போகாமல் இருக்காதீர்கள் என்று நண்பர்கள் சொல்லப்போய் அவர் ஜெய்சல்மர் சென்று விட, இப்போதைக்கு ஜம்முவில் சந்திப்பதாக உத்தேசம் நான் Srinagar சென்று விடுவேன் என்றாலும் பார்த்துக் கொண்டாலும் கொள்வோம்.

PS3: பின்னூட்டங்கள் அவ்வளவு சீக்கிரம் வராதாயிருக்கும் நண்பர்கள் பொறுத்தருள்க.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In நாட்குறிப்பு

மரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்

என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் பெரிய இழப்பை மரணம் அளித்ததில்லை, ஆனால் மரணத்தைப் பற்றிய பயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஏகப்பட்ட கேள்விகள் விடையில்லாமல் தொக்கி நின்றிருக்கின்றன, முதல் முறையாக ஒரு மரணம் உன்னை எப்படி பாதிக்கும் தெரியுமா என்ற கேள்வி அளித்த கொடூரம் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. என் அப்பா "நாளைக்கு நான் இறந்து போனால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்வியை என்னிடம் கேட்ட பொழுது எனக்கு என்ன வயது என்று தெரியாது, ஆனால் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி என் மீது வீசப்பட்டிருக்கிறது. மரணம் கொடுக்கும் இல்லாமையைப் பற்றி சிந்திக்கக் கூடத் தெரியாத நாட்களிலேயே இந்தக் கேள்விக்கான விடையை யோசித்திருக்கிறேன்.
 
நெருக்கமான சொந்தங்களில் நண்பர்களில் மரணம் இதுவரை சம்பவித்ததேயில்லை, எனக்குத் தெரிந்து இறந்து போனது என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும் தான். சாமியாராய்த் திரிந்த என் தாத்தாவின் மரணம் பற்றிய செய்தி தான் கிடைத்தது, நீண்ட நெடிய உருவம் இடுப்பு வரை நீளும் தாடியுடனும் பிருஷ்டத்தைத் தொடும் தலைமுடியுடன் இருந்தவரை அவ்வளவு பழக்கம் கிடையாது. இந்திய-இங்கிலாந்து விமானப்படையில் இருந்ததாகவும் பிறகு காது கேட்காததால் விமானப்படையின் கனரக ஓட்டுனராக சில காலம் இருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு வந்ததாகவும் அங்கங்கே சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், அவருடைய பெயர் தான் எனக்கு வைத்திருந்தார்கள் "பவானிதாஸ்" இன்னும் தாஸ் என்ற அளவிலும் என் மாமா சித்தியின் மூலமாகவும் அவருடைய பெயரின் இருப்பு இருக்கிறது. அதுதான் முதன்முதலில் சந்தித்த மரணமாயிருக்கும். சின்னவயது ஒன்றும் தெரியாத காலத்தில் நடந்தது.
 
அப்பாவின் அம்மாவிற்கு என் மீது கொள்ளைப் பிரியம், குழந்தையாக என்னை அவர்களிடம் கொடுத்துவிட்டு அம்மா டீச்சர்ஸ் டிரெயிங் சென்றுவிட்டார் என்று தெரியும். என்னை சிறிது காலம் வளர்த்தது அவர்தான். கொஞ்சம் மனநலம் பிறழ்ந்து அவர் என் வீட்டின் ஒரு அறையில் இருந்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது, அவர் இறந்த பிறகு கூட அம்மா அந்த அறையை உபயோகப்படுத்த மாட்டார். என்னமோ இன்னமுமே கூட அந்த அறையைப் பற்றிய நினைப்பு சட்டென்று 'பாச்சம்மா' பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வருகிறது. அவருக்கு வெத்தலைப் பாக்கு சீவல் புகையிலை வாங்க அப்பா கொடுக்கும் இரண்டு ரூபாயில் கமிஷன் அடித்து ஐம்பது காசுக்கு வாங்கிக் தின்று விட்டு 1.30 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவிற்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் பாச்சம்மா அப்பாவிடம் போட்டுக்கொடுத்து எனக்குத் தெரியாது. அக்காவுடனான என் சண்டைகளில் அப்பாவும் அம்மாவுமே கூட அக்கா பக்கம் பேச அவர் மட்டும் என் பக்கம் பேசியது நினைவில் இருக்கிறது. அப்பா தன் தம்பியிடம் அவரை அனுப்பிய சிறிது காலத்தில் எல்லாம் அவர் இறந்துவிட்டார், என் வீட்டில் அந்த மரணம் நிகழ்ந்திருந்தால் நான் பட்டிருக்கக்கூடிய வேதனை அப்பொழுது அனுபவிக்கவில்லை.
 
அவ்வளவுதான் மரணம். ஆனால் மரணம் பற்றிய தொடர்ச்சியான கேள்விகள் இருந்ததுண்டு, பொன்னியின் செல்வன் போல், வந்தியத்தேவன் போல், சுஜாதா போல் சாதிக்காமலேயே இறந்துவிடுவேனோ என்ற பயம் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. மரணம் பற்றிய கேள்விகள் இயல்பாய் எழுப்பும், மரணத்திற்குப் பின் யாருக்கு என்னைத் தெரியும் உலகத்திற்கு என் நினைவு எப்படி வரும் உலகில் எத்தனை பேருக்கு என்னைத் தெரியும் போன்ற கேள்விகள். அந்தச் சமயம் பார்த்த கடவுள் படங்கள் நினைவில், அசுரனாக என்னையே நினைத்துக் கொண்டு எப்படி சிக்கலான கேள்வி கேட்டு இறப்பற்ற வாழ்க்கையை கடவுளிடம் யாசிக்கலாம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. எத்தனை இரவுகள் எத்தனை இரவுகள் கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, மரணமற்ற பெருவாழ்வைப் பற்றிய வரத்துடன் நான் இருப்பதைப் போன்ற நினைப்புகள்.
 
பொன்னியின் செல்வன் படித்து, ஆதித்த கரிகாலனின் வாசகமான, இளம் வயதில் சாதித்து இறந்துவிட்டால்  வயதான தோற்றம் மறைக்கப்பட்டு சிறுவயது நபராகவே உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவேன் என்று நினைத்திருக்கிறேன். என் பாட்டியின் நிலையைப் பார்த்து சிறு வயதிலேயே இறந்துவிடும் ஆவல் அதிகமாயிருக்கிறது. இந்தியாவிற்காக உடலெல்லாம் வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு பாகிஸ்தானில் குதிப்பது கொஞ்ச காலக் கனவு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிறு வயது மரணம் தேவைப்படும் புகழ். இந்தியாவிற்கு வேறொரு நாட்டிற்கு வரும் சண்டையில் என்னை தற்கொலைப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு நான் நிற்கும் காட்சிகள் மனக்கண்ணில் இன்றும் ஓடுகிறது. எல்லாம் கடந்து போய் மரணத்தை பற்றிய பயம் தோன்றிய காலமும் உண்டு, அப்பா இறந்திவிட்டால் என்ன செய்வது அடுத்த நாள் வாழ்க்கை எப்படி போகும். அம்மாவின் 1500 ரூபாய் சம்பளத்தில் என்னையும் அக்காவையும் வளர்க்கமுடியுமா? அம்மா அடிக்கடி சொல்லும் உங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு இன்னொரு வீட்டில் கூட போய் நிற்கமுடியாது என்ற வார்த்தைகளைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். பாரதியின் "பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை" என்னை அப்படியே நெருப்பின் அருகில் நிறுத்துவதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.
 
பாரதியைப் பற்றிய எத்தனையோ வேறுவிதமானக் கட்டுரையைப் படித்திருந்தாலும் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போனதோ அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டதோ ஆன சிலவரிகள், என் மனதில் கற்பனைகளுக்கெட்டாத உயரத்தில் கோட்டை கட்டி அவரை உட்கார வைத்துவிட்டது. இந்த வரிகளை உங்களால் படித்து உணர்ந்து கொள்ளவேமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துவிட்டு பாரதியின் இந்த வரிகளை படிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் பாரதிக்கான கோட்டை சிம்மாசனம் எல்லாம் தானாய்த் தோன்றும். டெல்லியில் பெங்களூரில் என இந்த வரிகளை பாரதி எழுதியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை எத்தனையோ தடவை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். என்னைப் போல் ஒருவனைப் பார்த்த உணர்வில் மனம் நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் உட்கார்ந்திருக்கிறேன். அந்த வரிகள் மட்டுமல்ல அச்சமில்லை கவிதையின் அத்தனை வரிகளும் எனக்கு உத்வேகத்தை என் வழியில் தொடரும் இடற்பாடுகளைத் தூக்கியெறிந்து என் பயணத்தை தொடர உதவியிருக்கின்றன.
 
அப்பா தன்னுடைய இம்பார்ட்டன்ஸைக் காட்டுவதற்காகக் கேட்ட அன்றைய கேள்வி இன்றுவரை தொடர்கிறது ஆனால் அந்தக் கேள்வி என்னை அணுகும் முறை வித்தியாசமாய் இருக்கிறது. பல சமயம் நினைத்துக் கொள்வே என் அப்பாவின் மரணம் என்னிடத்தில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று. அந்த பதிலுமே கூட காலத்தின் ஓட்டத்தில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் இது மாதிரியான எந்தக் கேள்வியும் என் அம்மாவைப் பற்றி வந்ததில்லை, நெருப்பென்று சொன்னால் சுட்டுடுமா என்றால் என் அம்மா விஷயத்தில் சுடும் என்று சொல்வேன். அம்மாவிற்கும் அப்பாவிற்குமான கண்ணோட்டத்தில் கூட என்னால் ஒற்றுமையைப் பார்க்க முடியவில்லை. நரை விழுப்போகும் அம்மாவைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத காலங்கள் எல்லாம் என் வாழ்வில் உண்டு.
 
எத்தனையோ திடமானவன் என்று என்னை நானே நினைத்துக் கொண்டாலும் விபத்தை அருகில் சென்று அணுகும் தைரியம் வந்ததில்லை. சில சமயங்களில் நமது தைரியங்களுக்குப் பின்னால் தான் பயம் மறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு என் மரணம் நிகழ்ந்தால் என் வீட்டில் நடைபெறப்போகிற மாற்றங்களைப் பற்றி அலுவலகத்தின் நான் மட்டும் வேலை பார்க்கும் சில இரவுப் பொழுதுகளில் யோசித்துக் கொண்டிருப்பேன். கற்பனைகள் எல்லைகளில்லாதவை உங்களுக்கு ஏற்றது போல் கற்பனை மாறும் நீங்கள் நினைக்கும் விதமாய் கற்பனை தோன்றும் கற்பனை பொய்.
 
அப்பாவிடம் நேற்று எப்ப பெங்களூர் வரீங்க நான் காஷ்மீர் போறேனே என்று கேட்டதற்கு "தம்பி பயமாயிருக்கு போய்த்தான் ஆகணுமா?" என்ற கேள்வி எனக்குள் ஏற்படுத்திய சந்தோஷம் எழுதுவதற்கு அப்பாற்பட்டது. "நைனா நான் காஷ்மீர் போகலை ஜம்முதான் போறேன் அங்க பிரச்சனையே கிடையாது" என் அப்பாவிடம் நாங்கள் யாரும் உண்மை பேசமாட்டோம் ஆனால் அவருக்கு உண்மை தெரியும் எங்கள் வாய்களின் மூலமாய் அவருடைய காதுக்கு உண்மை போகாது. அக்காவிடம் விளையாட்டிற்குச் சொன்ன இந்தியாவில் அடுத்த குண்டு வெடிச்சா அது பெங்களூரில் தான் வெடிக்குமாயிருக்கும் அது நான் வேலை செய்ற ஆபிஸில் வெடிச்சா என்ன ஆகுமோ அதுதான் நான் ஜம்மு-காஷ்மீர் போறப்ப எதிர்பாராத விதமா எதுவும் நடந்தா ஆகும் என்றேன். அக்காவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும் மரணம் என்பது நெருப்பைப் போல பலருக்கு சொன்னாலே சுடும்.

Read More

Share Tweet Pin It +1

18 Comments

In நாட்குறிப்பு

நெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்

சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேறும் பொழுது மனம் அப்படியே பறக்கத் தொடங்குகிறது. நான் சாஃப்ட்வேர் இன்டஸ்ட்ரியில் சேர்ந்த பொழுது, லாப்டாப் வாங்கிய பொழுது என இப்படி மனம் உற்சாகத்தில் குதித்திருக்கிறது. சில ஆசைகள் திணிக்கப்பட்டதாக இப்பொழுது புரிந்தாலும் அந்தக் கனவுகளுடன் தான் நான் வாழ்ந்திருக்கிறேன் எனும் பொழுது அவற்றை அடைந்த தருணங்கள் பறப்பது போன்ற உணர்வுகளையே தந்திருக்கின்றன.
 
அப்படிப்பட்ட ஒன்றுதான் காஷ்மீர் செல்லவேண்டுமென்ற என் ஆசையும் கூட, இந்திய தேசியத்தின் மீதான ப்ரியமானது இன்றையைவிடவும் அதிகம் இருந்த காலக்கட்டங்களில் நான் செல்லாவிட்டால் வேறு யார் செல்வார், என்று கோபப்பட்ட காலங்கள் உண்டு. இன்று காஷ்மீர் செல்வதற்கான ஆரம்பகட்ட திட்டங்கள் முடிவடைந்து நகர்தலுக்கான நாட்கள் நெருங்க மனம் திரும்பவும் இறக்கை கட்டிக்கொண்டது. மனிதனுடைய நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாய் பறப்பதைச் சொல்லலாம், விமானத்தில் பறப்பதைச் சொல்லவில்லை. நீந்துவதைப் போல் தனியாய் பறப்பதைச் சொல்கிறேன். அதனாலேயே உணர்வுப்பூர்வமாய் பறப்பது என்பது மிகப்பெரிய விஷயமாகயிருக்கிறது.
 
பெங்களூரின் குளிர் ஓரளவுக்கு உதவுமென்றாலும் நான் டெல்லியில் இறங்கும் பொழுது கடும்குளிர் என்னை கட்டி அணைத்து வரவேற்க காத்திருக்கும், பாவம் குளிருக்கு என்ன தெரியும் அது தன்னுடைய வரவேற்பை உற்சாகத்தை தடைசெய்யாமல் வழங்குகிறது.எப்பொழுதும் இயற்கை மட்டும் ஒருவருக்கு கொடுத்து ஒருவருக்கு மறுப்பதில்லை, மனிதர்கள் தான் அதைச் செய்வது. இந்த பெங்களூர்-டெல்லி மாற்றம் என்னை பெரிய அளவில் தாக்காமல் இருப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கியாகிவிட்டேன் என்றாலும் டெல்லியின் கடுங்குளிரை அனுபவித்தன் என்ற முறையில் பயத்துடன் ஒரு குதூகலமும் இருக்கிறது.
 
படிக்கும் காலங்களைப் போலில்லாமல் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு கையில் சம்பளம் வாங்கத் தொடங்கிய பிறகான வாழ்க்கை அதிகம் சம்பாதிக்கும் வெறியை தானாகத் தோற்றுவிக்கும், கையில் டெல்லியில் வாழ்வதற்கான சம்பளம் வாங்காமல் உறவினர் வீட்டில் தங்கியிருந்து சமாளித்தக் காலங்களில் முனிர்க்கா தெருக்களில் அலைந்திருக்கிறேன் இந்த பணம் சம்பாதிக்கும் வெறியுடன் யாருமில்லா ரோடுகளில் "வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்ரு நினைத்தாயோ" என்று சப்தமிட்டு கவிதை சொல்லியிருக்கிறேன். இன்று மனநிறைவாக சம்பாதிக்கும் பொழுது நினைத்துக் கொள்கிறேன் அந்தப் பொழுதுகளை, ஆரம்பத்திலேயே அதிக சம்பளம் கிடைத்திருக்குமானால் இன்றிருக்கும் நானாக நான் இருந்திருக்க மாட்டேன்.
 
எல்லாம் புடம் போடுவதற்காகத்தான் என்ற தெளிவு வந்த பிறகு, 'காலம் உனக்குச் சொல்லித்தரும்' என்ற பதிலில் இப்பொழுதெல்லாம் கோபம் வருவதில்லை ஆனால் வருத்தம் வருகிறது. இதைச் சொல்லும் மனிதனை அருகில் அழைத்து 'ரகசியங்கள் ரகசியங்களாக இருந்தால் தான் மதிப்பு, உனக்குத் தெரிந்த இந்த ரகசியத்தை அதிகம் வெளியில் சொல்லி தானாயும் உணறமுடியாமல் செய்துவிடாதே!' என்று சொல்லவேண்டும் போலிருக்கிறது. ஈகோவைக் கழட்டிவிட்டு உண்மையை நெருங்கும் சாத்தியத்தை காலம் வழங்குகிறது ஆனால் அதை முன்னமேயே சொல்லிக்காட்டி கர்ண கவச குண்டலமாய் மாற்றுவதால் நீங்கள் அடையப்போவது என்ன என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது.
 
கையில் பணம் இல்லாமல் இருந்த திருச்சியை அதேபோல் இருந்த டெல்லியுடன் ஒப்பிட முடியவில்லை, டெல்லியில் நான் சுயமாய் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். என் உழைப்பு மதிப்பற்றது அதற்கான மதிப்பை பெறவில்லை என்ற கோபம் ஆதங்கம் இன்றும் சரியென்று தான் படுகிறது. ஆனால் அனுபவங்களை தராசின் இன்னொரு பக்கத்தில் வைத்தால் என் கோபம் ஆதங்கம் இன்னபிறவெல்லாம் தூசியாகிப்போகின்றன. ஆனால் இன்று கையில் காசுடன் நான் நினைத்த எதையும், எதையும் செய்யும் சாத்தியக்கூறுகளுடன் டெல்லி செல்வதை நினைக்கும் பொழுதே மூளைத்தசைகளின் அடியில் ஒளிந்திருக்கும் பழைய நினைவுகள் மேலெழுந்து மகிழ்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை உண்டாக்குகின்றன. நான் டெல்லியில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்னர் நினைத்ததை எல்லாம் ஆசைப்பட்டதை எல்லாம் இன்று கையில் பணமிருப்பதால் செய்துவிடுவேனா என்று கேட்டால் ம்ஹூம் மாட்டேன்.
 
ஏனென்றால் பணம் என்பது வெறும் காகிதத்தால் ஆன ஒரு பொருளாய் நான் நினைக்கவில்லை, அதனுடன் நாம் நம் அனுபவங்களையும் சேர்த்து பொட்டலம் கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் அந்த எண்ணம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது, நானலைந்த முனிர்காவின் சந்துகள், கனாட்ப்ளேசின் சந்துகள், பாலிகா பசார் கடைகள், ஜேஎன்யூவின் வீதிகள் எல்லாவற்றிலும் சந்தோஷத்துடன் நடக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுவோமா என்று கேவிய இரும்புக் கதவுகள், சிமென்ட் பெஞ்சுகள், பனிவிழுந்த ரோடுகள் எல்லாவற்றையும் திரும்பவும் சந்தித்து இல்லை நான் அப்படி முடிந்து போகவில்லை. இன்றைக்கு கொஞ்சம் நிமிர்ந்து இருக்கிறேன் என்று கட்டித்தழுவி சொல்லவேண்டும் போலிருக்கிறது. இன்னொரு முறை உங்களிடம் இதே போன்று வருபவர்களிடம் அவர்களும் ஒரு நாள் என்னைப்போல் ஆவார்கள் என்று ஆறுதல் கூறுங்கள் என்று சொல்லத் துடிக்கிறேன்.
 
ஒரு பயணத்தைப் பற்றிய நினைப்பு கிளறிவிடும் நினைவுகள் சட்டென்று முடிந்துவிடுவதாய் இல்லை. எங்கேயோ இத்தனை நாளாய் மூளையின் சிக்கலான நரம்புப்பிணைப்புகளில் காணாமல் போயிருந்த ஏகப்பட்ட எண்ணங்களை கிளறிவிட்டு கால்கள் தரையில் பரவவிடாமல் செய்துவிடுகின்றன. மனிதர்களைப் போல் தாவரங்களைப் போல் கட்டிடங்களுக்கும் ரோடுகளுக்கும் பெஞ்சுகளுக்கும் நகரங்களுக்கும் உயிரிருப்பதாய் படுகிறது. என்னுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆசையோடு நெருங்குவதாகவும் அவற்றின் மொழி எனக்குப் புரிபடாததால் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற எண்ணமே மேலிடுகிறது. ப்ரெட் ஆம்லெட் சாப்பிட்ட இரவு நேர கனாட்ப்ளேஸ் முட்டுச் சந்து, சமோசா - குலோப் ஜாமுன் சாப்பிட்ட மார்கெட் பகுதியின் பெரிய கடை, எருமைப்பாலின் காச்சப்படும் வாசத்தோடு லஸ்ஸி சாப்பிடும் முனிர்காவின் இன்னொரு கடை என திரும்பிச் சென்று விசாரிக்க ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள் மனதில் ஓடுகிறது.
 
அங்கே இருக்கப்போகும் இரண்டு நாளில் ஒரு நாள் தாஜ்மகால் பார்க்க என்று வைத்திருக்கிறேன், ஒரு வகையில் அதன் பிரம்மாண்டத்தாலேயே என் மனதில் அதற்கு இடமில்லாமல் போனது கைக்கடக்கமான தாஜ்மகால் தான் உண்மையான தாஜ்மகாலைப் பார்க்கும் வரை மனதில் இருந்தது. அதன் பிரம்மாண்டம் என் மனதில் இருந்த தாஜ்மகாலின் இடத்தை அழித்துவிட்டது, மீண்டும் முன்முடிவுகள் இல்லாமல் இன்னொரு முறை பார்த்தால் தாஜ்மகாலுக்கான இடம் மீண்டும் மூளைச்சந்துகளில் தோன்றுமா என்று கேள்விகளுடன் என் பயணம் பெங்களூரில் இருந்து இந்த வாரம் 21ம் தேதி கிளம்புகிறது, 23ம் தேதி டெல்லியில் இருப்பேன் என்றாலும் ஜம்முவிற்கான பயணம் 25ம் தேதிதான் 24 தாஜ்மகால் பயணம் என்று வைத்திருக்கிறேன். இது திட்டமிடப்பட்டதல்ல மாற்றங்களுக்குரியதே, 'நான் திட்டமிட்டேன் என்று சொன்னால் கடவுள் சிரிப்பார்' என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறேன் கடவுள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் அந்த பழமொழி சொல்லவரும் விஷயத்தை கடவுள் என்ற ஒன்று இல்லாமலே புரிந்து கொண்டிருக்கிறேன். 29 ஜம்முவில் இருந்து கிளம்பி டெல்லிவந்து 1ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூர் வருவதாக உத்தேசம். 4ம் தேதிக்கு சென்னையில் புத்தகக்கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்பதும் விருப்பம், இடையில் கன்னியாகுமாரியை தொட்டுவிட்டாவது வந்துவிடணும் என்பது இப்போதைக்கு ஒரு பெருங்கனவும். ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான இறைவன் கருணை வைத்தால் எல்லாம் சரியாக நடந்துவிடும் இல்லையா? :)
 
 

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In அக்கினிக்குஞ்சு

நடுவர்களுக்கு அடிதடி தமிழ்மணத்தில் ரகளை

தமிழ்மணத்தில் அவ்வப்பொழுது ஒரு ட்ரென்ட் பிடித்து கொண்டு ஆட்டும் தமிழ் சினிமா போல், இப்ப விருது கொடுக்கும் ட்ரென்ட் போலிருக்கு. வர்றவன் போறவன் நின்னவன் நடந்தவன் எல்லாம் நானும் விருது கொடுக்குறேன் பிடிச்சிக்கோ என்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொம்மாஞ்சக்க, எவனுக்கு எவன்டா விருது கொடுக்குறது. தகுதியை நிரூபிக்கணுமாம். எவனோட தகுதியை எவன்கிட்ட நிரூபிக்கணும். தன்னைத்தானே பீடத்தில் அமர்த்திக்கிட்டு கூட இன்னும் கொஞ்சம் பேரையும் நீயும் உக்காந்துக்க நீயும் உக்காந்துக்க என்று பீடத்தை பகிர்ந்து கொடுத்துட்டா போச்சுதா பீடத்தில உட்கார்ந்தவனுங்க எல்லாம் கிழிச்சிட்டதா அர்த்தமா? இந்த கிழிச்ச பிரகஸ்பதிகள் தான் 2007ல் நீதான் பெஸ்டா கிழிச்சன்னு சொல்வாங்களா?

நல்லா இருக்கே உங்க கதை! இப்படியே போனா எல்லாரும் கடைசியில் பீடத்தில் உட்கார்ந்துக்குக்கிட்டு வேடிக்கதான் பார்க்கணும் என்கிட்ட வாங்க விருதுவாங்க என்கிட்ட வாங்கன்னு. கொடுக்கத்தான் ஆளிருக்கும் வாங்க இல்ல. கடைசியில் பெரிய அடிதடி நடக்கப்போகுது இவர நான் தான் முதல்ல நடுவரா நியமனம் செய்தேன் அவரை நீ எப்படி கூப்பிடலாம்னு.

முதல்ல விருது கொடுக்குறதுக்குள்ள தகுதியை வளர்த்துக்கோங்க அப்புறம் கொடுக்கலாம் விருது. இன்னிக்கு வெப்சைட் தொடங்கி நாளைக்கு அறிவிப்பு செய்து அடுத்த நாளே விருது கொடுத்திடுனுமாம் ஏன்னா பயமாம், எங்கடா புலியொன்னு வந்திடும்னு. இன்னும் நாலு மொக்கைப் பதிவைச் சேர்த்து போடு, பின்னூட்ட விளையாட்டு விளையாடு அப்புறம் என்ன தேவைப்படுற டிராபிக் கிடைக்கும். அதுக்கு ஏன்டா எழுதுறவங்க தாலிய அறுக்குறீங்க.

முதலில் நீயாரு நீயென்ன கிழிச்சன்னு பாரு அப்புறம் 2007ல் எவன் என்ன கிழிச்சான்னு அவார்ட் கொடுக்கலாம். வர்ட்டா!

Read More

Share Tweet Pin It +1

34 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

பில்லா திரைவிமர்சனம்

பில்லா படம் பார்க்கச் சென்றிருந்தேன், அஜீத்தின் படம் என்பதனால் மட்டுமல்ல, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வருவது என்பது கூட ஒரு காரணம். எனக்கு தமிழ் பில்லா நினைவில் இல்லை, ஆனால் ஒன்றிற்கு இரண்டு முறை பார்த்த ஷாருக்கின் டான் படம் நன்றாக நினைவில் இருந்தது. படத்தின் ஒருவரி விமர்சனம் வேண்டுமென்றால் நீங்கள் ஷாரூக்கின் "டான்" ரீமேக் படம் பார்த்துவிட்டீர்கள் என்றால் இந்த அஜீத்தின் பில்லா அதன் பக்கத்தில் கூட இல்லை, ஆனால் தமிழ்படங்களில் எடுக்கப்பட்ட விதத்தில் அசத்தலாகயிருக்கிறது. ஆனால் நான் டான் படத்தைப் போல ஒன்றை எதிர்பார்த்துச் செல்ல ம்ஹூம் ஒன்றுமேயில்லை.
 
"டான்" படத்தின் இந்தி ரீமேக்கின் பொழுது பழைய படத்தில் இருந்து வித்தியாசப்படுத்தியிருப்பார்கள், கடைசியில் டான் சாகாதது போலும் கடைசிவரை பிழைத்து இருப்பதைப் போலவும். அது போன்ற ஒரு கடைசி நிமிட திருப்பத்திற்கு வாய்ப்பேயில்லை என்று படத்தின் பாதியிலேயே தெரிந்துவிட்டது. தேங்காய் சீனிவாசன் கேரக்டர் கட். மற்றபடிக்கு எடுக்கப்பட்ட விதத்தைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை இந்தப் படத்தில்.
 
அஜீத் குமார் பரவாயில்லை நன்றாக முயற்சித்திருக்கிறார், ஒன்றிரண்டு ஸ்டண்ட் காட்சிகள் அவர் செய்வது போல் இருக்கிறது அவர் தானா டூப்பா தெரியவில்லை. முக்கியமாக அந்தக் கார் 180 டிகிரி சுற்றுவதைப் போன்ற காட்சி. ஒருவேளை ரஜினியை ரிப்ளேஸ் பண்ணமுடியலையா தெரியலை ஆனால் அஜீத்குமார் ரஜினி கதாப்பாத்திரத்தில் ஒட்டவேயில்லை, ஏனென்றால் அஜீத் வில்லனாகயில்லாமல் ஹீரோவாக வந்தவர் என்பது கூட காரணமாகயிருக்கலாம். பில்லா என்பது வில்லன் கேரக்ட்டரின் படம் எனக்கென்னமோ அஜீத் ஒட்டாமல் இருப்பதாகவே பட்டது.
 
நயன்தாரா நன்றாக ஆட்டிக் காண்பித்திருக்கிறார் எதையென்று நான் சொல்ல விரும்பவில்லை, இடையில் பிகினியில்(technically பிகினின்னு சொல்லமுடியாது) வேறு வருகிறார். "டான்" பிரியங்கா சோப்ரா கண்ணில் நிற்கிறார், இங்க ம்ஹூம் வேறென்னமோ தான் கண்ணில் நிற்கிறது. ஸ்ரீப்ரியா கேரக்டரை சப்பென்று ஆக்கிவிட்டார்கள். அதில் இந்தம்மா(நயன்தாரா) இரண்டு தடவை வேறுவேறு காலக்கட்டங்களில் கால்ஷீட் கொடுத்திருக்கும் போலிருக்கிறது, புருவம் இருக்கிற அழகை வைத்தே சொல்லமுடிகிறது. பாதிநேரம் காட்டிக்கொண்டே நிற்கிறது மார்கெட் கவிழ்ந்து கொண்டிருக்கிறதோ? உருப்படாதது நாராயணன் பதிவில் சொல்லியிருந்தேன் பக்வாஸ் செய்திருப்பார்கள் என்று அப்படியே.
 
நமீதா பாவம் அவருண்டு சத்யராஜ் சிபிராஜ் படமுண்டு என்று இருந்தவரை செகண்ட் ஹீரோயின் என்று சொல்லி அழைத்துவந்து ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடவிட்டு காலிசெய்வதை இப்பொழுதெல்லாம் இயக்குநர்கள் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
 
படம் ஸ்டைலிஷ்ஷா எடுத்திருக்கிறார் இயக்குநர், பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் நன்றாகயிருக்கிறது. முதல் பாடல் 'செய்' நன்றாக வந்திருக்கிறது. இயக்குநரின் ஃபேவரைட்டான 'ராப்' வகை நடனம் இந்தப்படத்திலும் இருக்கிறது. ஸ்டண்ட் நன்றாகச் செய்திருக்கிறார்கள், ரொம்பக் காலம் கழித்து(இல்லை முதல் முறையோ) ஏகே 47 வகையறா துப்பாக்கியை கூடவரும் போலீஸ்காரர்கள் சரியாகப் பிடித்திருக்கிறார்கள். விஜயகாந்த் படங்களில் அதென்னமோ டப்பா துப்பாக்கின்னு தெரிஞ்சாலும் ஒரு கெத்தா பிடிப்பாங்களான்னா அது கிடையாது. அந்த விதத்தில் இயக்குநரை பாராட்டலாம், ஸ்டண்ட் நன்றாக உழைத்து செய்திருக்கிறார்கள்.
 
டூப்ளிகேட்-பில்லா போலீஸிடம் தப்பிக்கும் சீனை வெகு ஆவலாக எதிர்பார்த்திருந்தேன், மொக்கை, மொக்கை, என்ன சொல்றது ஒரு வேனை வைத்து முடித்துவிட்டார்கள். என்னயிருந்தால், எவ்வளவு தான் எனக்கு நானே மறுத்துக் கொண்டாலும், டானில் அற்புதமாக வந்திருந்தது அந்த சீன். எனக்கும் புரிகிறது எத்தனை காப்பி ஹிந்தி படம் போடுகிறார்கள் எத்தனை காப்பி தமிழ்படம் போடுகிறார்கள் என. ஆனாலும் என்ன செய்வது பாழும் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. சரி பட்ஜெட் பத்தலை என்றாலும் கதையையாவது மாற்றியிருக்கலாமே ஒரு ட்விஸ்ட் வருகிற மாதிரி. ம்ஹூம்.
 
நான் இந்தி டான் அளவு எதிர்பார்த்திருக்காவிட்டாலோ இல்லை இந்தி டான் ரீமேக் பார்த்திருக்காவிட்டாலோ ஒருவேளை பிடித்திருக்குமோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஓடுமாயிருக்கும் விகடன் 41 தருவார்களாயிருக்கும். இந்த விமர்சனமும் பாரபட்சமுடையதாகவே பார்க்கிறேன், இதை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வராதீர்கள் இன்னும் நாலுபேர் சொல்வதைக் கேளுங்கள். வர்ட்டா இந்தப் படத்தை இன்னொரு தடவை வேறு பார்க்கணும், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மம்மிமிமிமிமிமி.









Read More

Share Tweet Pin It +1

21 Comments

In நாட்குறிப்பு

நான் பூப்பிடிக்க போன கதை

மலர்கள் என்று PIT யில் போட்டி அறிவித்ததுமே காலங்கார்த்தால போய் லால்பாஹ்வில் புகைப்படம் எடுப்போம் என்று தீர்மானித்திருந்தேன். வேலை காரணமாக இரவு நேரங்கழித்து வீட்டிற்கு வருவதாலும் வந்த பிறகும் 'குழும' மடல்களைப் படித்துக் கொண்டிருப்பதால் 1.00, 1.30 மணிக்கு தூங்கப்போவதால் காலையில் 6.00 மணிக்கு எழுவதில் தொடர்ச்சியாக பிரச்சனையிருந்தது. அலுவலகத்தில் இன்னிக்கு நீ லால்பாஹ் போனியா என்று கேட்கும் அளவிற்கு 'நானும் ரௌடி' ரேஞ்சில் ஏக பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களாய் அலுத்துப்போய் விட்டுவிட்டார்கள், ஏற்கனவே வயநாட் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த செம்பருத்தியும், மாமல்லபுரம் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த தாமரையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தாலும். போட்டின்னு வந்துட்டா டெடிகேஷனா போய் படம் எடுக்கணும் என்று நினைத்திருந்ததால் சரி புதுசா எடுத்துப் போடலாம் என்று வைத்திருந்தேன்.





நாங்கள் செய்துகொண்டிருந்த ப்ரொஜக்ட் வெற்றிகரமாக UAT முடிந்து கொண்டிருந்ததால், இன்னொரு சின்ன ப்ரொஜக்ட் பார்ட்டி தருவதாகச் சொல்ல, கூட வேலை செய்யும் பெண்கள் ஒரு படம் பார்த்துவிட்டு பார்ட்டிக்குப் போகலாம் என்று வற்புறுத்த, அங்கேயும் பெண்கள் பாலிடிக்ஸ் செய்து "Jab we met" என்ற ஹிந்தி படத்தை தேர்ந்தெடுத்துத் தொலைத்தார்கள். நானும் ஃபோரம் இல்லாவிட்டால் கருடா மாலிற்குத்தான் செல்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் கேள்விப்படாத சிக்மா மாலின் Fun Cinemaவில் டிக்கெட் பதிவு செய்ய, கன்னிங்கஹாம் ரோட்டில் அந்த தியேட்டர் பரவாயில்லை என்று தான் சொல்வேன்.

ஷாஹித் கபூரும் கரீனா கபூரும் நடித்தப் படம், அப்பா இறந்துவிட அம்மா இன்னொரு நபருடன் ஓடிவிட, காதலித்த பெண் இதன் காரணங்களுக்காக விட்டுவிட்டு வேறொருவனை மணந்துகொள்ள, அம்மா ஓடிப்போனதால் கம்பெனி ஷேர்களில் இருந்த பிரச்சனைகள் பெரிதாக ஹீரோ வீட்டை விட்டு வெளியேறுவதில் தொடங்குகிறது படம். சரி பயங்கர மொக்கை படம் போலிருக்கு என்று நினைக்கும் பொழுது கரீனா கபூரின் அறிமுகம், படத்தை தாங்கி நிற்கிறார் கரீனா. பின்னர் ஹீரோவின் காரணமாக ஹீரோயின் டிரெயினில் இருந்து கீழிறங்க, டிரெயினை கோட்டை விட்டுவிட்டு பின்னர் ஹீரோயினை அவரது வீட்டுற்கு கூட்டிக்கொண்டு போகும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார் ஹீரோ. வீட்டிற்குச் சென்றதும் ஹீரோயின் தனக்கு பார்த்திருக்கும் மணமகனை விரும்பாமல் வீட்டை விட்டு ஓடிச் செல்ல நினைக்க வரும் பிரச்சனைகள் கடைசியில் எப்படி ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கரீனா கொஞ்சம் ஷாஹித் கபூரை விட வயதானவராகத் தெரிகிறார், ஆனாலும் கனமான கதாப்பாத்திரம் என்பதால் வேறுவழியில்லை என்று நினைத்திருக்கலாம். கொஞ்சம் சிவாஜி போல் ஓவர் ஆக்ட் போல் இருந்தாலும் ரொம்பவும் ஆட்(Odd)ஆக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்திற்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார்கள் என்ற கோபத்தில் நானும் ஹிந்தி தெரியாத/புரியாத சோகத்தில் பிரபுவும் சோகக்காட்சியில் எல்லாம் கெக்கெபிக்கே என்று சிரித்து கூட வந்திருந்த இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தவர்கள் வம்பிழுத்துக்கொண்டிருந்தோம். படம் முடிந்து இன்ஃபேண்ட்ரி ரோட்டில் உள்ள ஓரியண்டல் ஸ்பைஸஸில் இரவு உணவு முடித்துக்கொண்டு வந்ததும் வந்த களைப்பில் உறங்கிவிட இன்றைக்கு காலங்கார்த்தாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. சரி இன்னிக்கு தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்தவனுக்கு சட்டென்று லால்பாஹ் நினைவில் வர வேகவேகமாய்க் கிளம்பிச் சென்றேன். ஆறுமணிக்கு அங்கே இருந்தேன்.

ஆனால் கொடுமை என்னவென்றால் ஒட்டுமொத்த லால்பாஹ்விலும் ஒரே ஒரு ரோஜாப்பூதான் இருந்தது. ரோஸ் கார்டன் என்றே ஒரு இடம் உண்டு லால்பாஹ்வில் ஆனால் இது சீசன் இல்லையாமாம், பக்கத்தில் இருந்த லோட்டஸ் பாண்ட்டில் தாமரை இருக்கா என்று பார்க்கச் செல்ல இருந்த ஒன்றிரண்டு சின்ன தாமரை மொக்குகள் பக்கத்தில் கூட என் ஷூம் செல்லவில்லை என்பதால் பக்கத்தில் இருந்த வேறு சில மலர்களைச் சூட்டிங் போட்டுக்கொண்டு வந்தாகிவிட்டது. எடுத்த சில படங்கள் கீழே.











என்னோட சாய்ஸ் முதலாவதும் ஐந்தாவதும்

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In சுய சொறிதல் நாட்குறிப்பு

சில முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள்

காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணாலி போய்விட்டு நல்லபிள்ளையாய் திரும்ப வந்துவிடலாமா என்று. சிறுவயது ஆசை, காஷ்மீர் போகவேண்டும் என்பது; கையில் காசிருக்கிறது, 45,000 செலவு செய்து வாங்கிய காமெரா இருக்கிறது, கேட்பதற்கு ஆளில்லை வேறென்ன வேண்டும். மனம் ஒரு விசித்திர விலங்கு என்று அடிக்கடி தோன்றும் இந்த விஷயத்தில் உண்மைதானா என்று படுகிறது. இன்று வரை ப்ளானில் மாறுதல் இல்லை, காஷ்மீர் என் வருகைக்காக காத்திருக்கிறது.
 
கடவுள் நம்பிக்கை இல்லாமல் போன சமயம் நினைவில் இல்லை, ஆனால் குழப்பமாய் இருந்து கடவுள் இருக்கமுடியுமா என்று நிறைய யோசித்த சமயம் தெரியும், எல்லாம் கல்லூரி படிக்கும் பொழுதுதான். எந்த ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலோ இல்லை குறிப்பிட விஷயத்தின் காரணமாகவோ நான் நாத்தீகனாகவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்றுவரை நம்புவது தொடர்ச்சியான புத்தக அறிவும், ப்ராக்டிக்கலான அணுகுமுறையும் தான் என்னை நாத்தீகனாக்கியது என்பேன். எனது குடும்பத்தில் இன்றுவரை நாத்தீகர்கள் கிடையாது, கடைசி வரைக்கும் பார்த்தால் கூட ஏதோ ஒரு சக்தி இயக்குதுன்னு சொல்வார்களாயிருக்கும். சொல்லப்போனால் தீவிர ஆஸ்தீகர்கள் இருந்தது வேண்டுமானால் அவர்களுடன் என்னை ஆர்க்யுமென்ட் செய்வதற்காக தேடிப்படித்தது காரணமாயிருக்கும்.
 
ஆனால் ரொம்பக் காலம் நிறைய superstition இருந்திருக்கிறது, எக்ஸாம் எழுதப் போகும் பொழுது உணவு சாப்பிட மாட்டேன், காலை பரிட்சையாக இருந்தால் பரவாயில்லை சில சமயம் மதிய பரிட்சைக்கு கூட சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். இது ஒரு உதாரணத்திற்கு இன்னும் நிறைய உண்டு, எனக்கு சிவபெருமான் பிடிக்கும் இன்றைக்கு நினைத்துப் பார்க்கும் பொழுது நிச்சயம் சொல்வேன் அழிவிற்கான கடவுள் என்பதால் தான் அவரை எனக்குப் பிடித்திருந்தது. ஆக்கப்பூர்வமானதை விடவும் அழிவுப்பூர்வமானதில் ஆர்வம் அதிகமமிருந்திருக்கிறது. வீட்டில் எனக்காக சாமியறையில் லிங்கம் வைத்திருந்திருக்கிறார்கள். வீட்டில் லிங்கம் வைக்கமாட்டார்கள், ரொம்ப சுத்தமாயிருக்கணும் என்பது ஒன்றென்றாலும் சிவனுக்கு ஆலயம் தனியாகத்தான் இருக்கணும் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். என்னுடன் கோயிலுக்கு வருபவர்கள் சிரித்துவிடாமல் இருக்க பெரும்பாடு படுவார்களாயிருக்கும், எதையாவது சொல்லி நக்கல் அடித்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவை வேடிக்கைக்காக சொல்வது மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்த பிறகு பெரும்பாலும் இது போன்ற கிண்டல்களைக் கூட தவிர்த்திருக்கிறேன். ஆனால் என் ஈகோவை டச் செய்துவிட்டால், எப்பாடுபட்டாவது திரும்பவும் எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்திவிட்டு தான்  மறுவேலை பார்ப்பேன்.
 
இன்றைக்கும் கூட பெரிய பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது நாமாய் எதுவும் செய்து பிரச்சனையில் இருந்து வெளியேற முடியாத பொழுது அன்னிய சக்தி எதுவும் காப்பாற்றுமா என்று, ஆஸ்தீகர்கள் ஒரு நிமிடம் சட்டென்று நாத்தீகனாகித் திரும்புவதைப் போல். ஆனால் நாத்தீகம் என்பதை ஒருவரை, ஒரு குறிப்பிட்ட மக்களை வம்பிழுப்பதற்காகவோ இல்லை பழிதீர்த்துக் கொள்வதற்காகவோ இல்லாமல் உணர்ந்து ஏற்றுக்கொண்டதாக நினைப்பதால் புன்னகையுடன் அத்தருணங்களை ஒதுக்கிவிடமுடிகிறது. இன்றைக்கு என்னால் இதைப் பற்றி எழுத முடிவதைக் கூட வெற்றி என்று தான் நினைப்பேன்.
 
உரையாடல்/ஆர்க்கியூ செய்யும் பொழுது வெற்றி என்பதை எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்துவது என்று நான் வைத்திருந்தேன். இதை நிறையவே செய்தும் இருக்கிறேன், ஆனால் அந்தச் சமயம் முடிந்ததும் நாம் செய்தது தவறோ என்ற எண்ணம் வருவதுண்டு. இதன் காரணமாகவே பெரும்பாலும் உரையாடல் செய்யும் பொழுதோ இல்லை ஆர்க்கியூ செய்யும் பொழுதோ என்னை எளிதில் கோபப்படுத்திவிட முடியாது. இன்றைக்கும் என் கம்பெனியில் சொல்வதுண்டு 'என்னுடன் ஆர்க்கியூ செய்வது கஷ்டம்' என்று; ஏனென்றால் எதிர்முனை ஆளைக் கோபப்படுத்திவிடும் பொழுது, அவர் ஆர்க்கியூமென்டில் இருந்து விலகிவிடுவார். நாம் ஆர்க்கியூமென்டில் நிற்கும் பொழுது அவரால் பேசமுடியாது. இந்த கோபப்படுத்தும் அளவுகோல் என்வரையில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது, பெரும்பாலும் கடைசியில் உபயோகிக்கும் ஆயுதமாக 'கடவுளை' வைத்திருப்பேன் இப்பொழுதெல்லாம் 'தேசியம்' ஒரு கருப்பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக தமிழர் தவிர்த்த மற்ற இந்திய மாநிலத்தவருடன் வெகுசுலபமாக அவர்களுடைய ஈகோவை தொட்டு உசுப்பேத்தி விட முடிந்திருக்கிறது.
 
சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரியில் வரும், 'தமிழ்' எத்தனை எத்தனை ஆதியின மொழிகளை வழக்கொழித்து வந்திருக்கிறது என்பதை தமிழ் எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று வரும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேனோ இல்லையோ என்னை விவாதத்திற்காக இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டு என்னுடன் பேசிக்கொள்ள முடிந்திருக்கிறது. எனக்குள் இருக்கும் புனித பிம்பங்கள் ஒன்றொன்றாக அவிழ்த்து நிர்வாணப்படுத்தி கிழித்து தொங்கவிட முடிந்திருக்கிறது. ஆனால் எல்லாரையும் செய்துவிட்டேன் என்றில்லை, இன்னமும் சிலர் அந்த லிஸ்டில் உண்டு குறிப்பாய் ஒன்றிரண்டு பேரைச் சொல்லவேண்டுமென்றால் 'விவேகானந்தரை' சொல்லலாம். ஆனால் முற்றிலுமாக யாரையும் ஏற்றுக்கொண்டதில்லை அது விவேகானந்தராகயிருக்கட்டும், ஹிட்லர், காந்தியாக இருக்கட்டும். அவரவர்களிடம் எனக்குப் பிடித்த நல்ல குணங்களை எடுத்துக் கொள்வதில் பிரச்சனையிருந்ததில்லை.
 
ஜெயமோகனுடைய நினைவில் நதியில் எழுதியிருப்பார் சுராவுடனான பல உரையாடல்களில் தன்னுடைய நிலையை எடுத்து வைக்க முடியாமல் கோபப்பட்டதாக, உரையாடல் மீதான இயல்பான ஆர்வம் என்னை நினைவின் நதியில் படித்தப் பின்னர் சுராவை நோக்கி இழுக்கிறது என்றுதான் சொல்வேன். கடவுளை நம்பாமல் எல்லாவற்றையும் தத்துவ ரீதியிலாக அணுகியதாகவும், எதைப்பற்றிய உரையாடலுக்கும் ஆர்வமாகயிருந்த சுராவை நேரில் சந்திக்க முடியாமல் போனதை நினைத்துக் கொள்கிறேன். ஆனால் சுராவைப் போல் ஆயிரம் நபர்கள் இருப்பார்கள் இன்னமும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேடல் தான் தேவையே தவிர தத்துவ ரீதியான மனிதர்கள் முற்றிலும் இல்லாமல் இல்லை. கடவுள் என்பவர் உரையாடல் மூலம் உணரமுடியாதவராக, தத்துவ ரீதியில் விளக்க முடியாதவராக இருந்து உணர்வுப் பூர்வமாயும் லாஜிக்களுக்கு அந்தப் பக்கம் இருந்து கொண்டு, என்னுடைய இயலாமையின் தவிப்பின் பொழுதுகளில் தன்னைக் காட்டிக் கொள்வார் என்றால், நான் என் இயலாமையின் வாழ்வின் கடைசிப் பொருளைத் தேடும் வரை கடவுளை விலக்கிவைக்கிறேன். இந்த வயது இப்படித்தான் இருக்கும் அனுபவம் உனக்கு கடவுளைக் காட்டுமென்றால் அந்த அனுபவம் தான் கடவுள் என்றால் ஒரு பெரிய கும்பிடு அது வரும்பொழுது வாக்குவாதத்துடன் சந்தித்துக் கொள்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In நாட்குறிப்பு

போனஸ் பார்ட்டி பேச்சுலர் பேச்சிலர் பெங்களூரு

முன்னமே லே-ஆஃப் பற்றி எழுதியிருந்தேன் அப்படியே என் வருடக்கடைசி கிறிஸ்மஸ் பார்ட்டி பற்றியும், பார்ட்டியின் முதல் நாள் இரவு கேள்விப்பட்ட விஷயம் தான் இந்த வருடம் போனஸ் கிடையாதென்பது. மற்ற கம்பெனிகள் போலில்லாமல் 10% போனஸ் என்று அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரிலேயே எழுதிக் கொடுத்தனர். சொல்லப்போனால் கிடைத்த மற்ற ஆஃபர்களை விடுத்து இந்தக் கம்பெனியில் சேர்ந்ததற்கு முக்கியமான காரணமே CTCக்கு வெளியில் கொடுப்பதாய்ச் சொன்ன போனஸ் தான். Core Team அவர்களுடைய அடுத்த ரிலீஸில் மும்முறமா இருந்து சனி, ஞாயிறு என்று லேட் நைட் வேலையெல்லாம் செய்தார்கள் அதைப் போலவே நாங்களும் ரிலீஸ் காரணமாக நிறைய வேலை செய்ததற்கு பரிசு நோ-போனஸ். பார்ட்டியில் எல்லோருக்கும் தெரியும் முன்னர் தண்ணி அடித்திருந்த பெருந்தலை ஒன்று புலம்ப இந்த விஷயம் பொதுவில் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே தெரிந்து போனது. ஒரு பல்க் அமௌண்ட் என்பதால் ஏகப்பட்ட ப்ளான்கள் முன்னமே போட்டு வைத்திருந்தேன். எல்லாவற்றிற்கும் அரோகரா! ஆனாலும் நாங்கள் கடைசியாக செய்த ப்ரொஜக்ட் நல்ல வகையில் UAT போய்க்கொண்டிருப்பதால், கடைசி நேரத்தில் கூட போனஸ் கிடைக்கும் என்று நண்பர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அது போகட்டும் இந்த வருட கிறிஸ்மஸ் பார்ட்டி செலவு 25 லட்சம் என்றதும் ஏகக்கோபமாகிப்போனார்கள் உடன் வேலை செய்யும் நண்பர்கள். பெங்களூரில் இருக்கும் அங்ஸானா ரிஸார்ட்டில் சனிக்கிழமை மதியத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஆன செலவு இது! பேச்சுலர் மக்களுக்காவது எதாவது செய்து போனஸ் தொகை இல்லாமல் போனதை சரிசெய்துவிடமுடியுமாயிருக்கும். குடும்பம் என்ற அளவில் செட்டில் ஆனவர்களுக்கு அது முடியாதது என்ற அளவில் 25 லட்சம் செலவைக் கேட்டதும் கொஞ்சம் போல் ஆடித்தான் போய்விட்டார்கள் மணமானவர்கள். பேச்சுலர்களுக்கும் இது ஒரு பெரிய இடிதான் என்றாலும் பேச்சிலருக்கு இது அடர்ப் பச்சையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ரிசார்ட் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, கம்பெனி டிராவலுக்கான வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் நாங்கள் எங்கள் க்ரூப்பாக டூவீலரில் சென்றிருந்தோம். இரண்டு நாடகங்கள் நடத்தினார்கள், இரண்டு ஐட்டம் நம்பர்ஸ் பிறகு வழமையான பேஷன் ஷோ. கொஞ்சம் போல் புகைப்படங்கள் தட்டினேன். வழமை போலவே தண்ணியடித்ததும் ஏகப்பட்ட உண்மைகள், அழுகைகள், கேலிகள் தொடர்ந்தன. எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு சிக்கன் கபாப்களை காலி செய்து கொண்டிருந்தேன். இரவு camp fireல் சினிமா பேர் கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டைத் தொடர்ந்ததும் சண்டை போட்டு இந்தியுடன், ஆங்கிலப்படங்களையும் சேர்த்தோம். தண்ணியடித்தவர்கள், அடிக்காதவர்கள் என ரகளையாக நடந்தது. பெங்களூரில் பனிதான் பொழிந்து கொண்டிருந்தது நேற்றில் இருந்து மழைவேறு பெய்கிறது. டெல்லி குளிருடன் ஒப்பிட முடியாதென்றாலும்  winter இங்கேயும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. காலையில் கம்பளியில் இருந்து விடுவித்துக் கொண்டு கம்பெனிக்கு கிளம்புவதற்கு முதலில் மனதை தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. திரைப்படம் ஒன்றை தியேட்டரில் சென்று பார்த்து மாதக்கணக்காகிறது! காரணம் புரிவதால் என்னை நானே விடுவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுவயதிலிருந்தே தொடரும் வழக்கமாக விடுமுறைக்கான நாட்களை நோக்கியபடி இப்பொழுதெல்லாம் நினைவுகள் அலைமோதுகிறது. இந்த பலூன் விடுமுறையின் கடைசி நாட்களுக்கு முன்னர் உடைந்து மனமெங்கும் பரப்பும் வெறுமை எழுதித்தள்ள முடியாததாக இருக்கிறது. இந்த முறையும் தொடரும் என்று நினைக்கிறேன்.
 
------------------------
 
இதை எழுதி டிராஃப்டில் வைத்திருந்தேன். அப்ரைஸல் முடிந்துவிட்டது வெற்றிகரமாக, பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாததாலோ என்னவோ அப்ரைஸல் முடிந்ததும் No Hard Feelings. ;)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை

கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்

"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

Read More

Share Tweet Pin It +1

50 Comments

Popular Posts