In சிறுகதை முதலிரவு

முதலிரவு

அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம்.  கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், திறந்த மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்கினான்.

கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தான், அவர்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை. பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ தெரியாது. அவன் அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா? திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம்.

அவளைப் பற்றி என்ன தெரியும் அவன் யோசித்துப் பார்த்தான். பெயர் அலமேலு, படித்தது ஹோலிகிராஸ் கல்லூரியில் முது அறிவியல் கணிப்பொறி பயன்பாட்டியல், அவ்வளவுதான். இதற்கு முன்னர் வெகுசில சமயந்தான் அவளைப் பார்த்திருக்கிறான். ஒரு முறை நிச்சயதார்த்தத்தின் பொழுதும் பிறகு கல்யாணப் புடவை எடுக்க வந்தபொழுதும். பின்னர் இன்று கல்யாண மேடையிலும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் கோவிலிலும்.

இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை, இடையில் வந்து பரிசளித்த அவன் பக்கத்து உறவினர்களை அவளுக்கும் அவள் பக்கத்து உறவினர்களை அவனுக்கும் அறிமுகம் செய்து வைத்ததைத் தவிர. அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டதற்காக திருமணம் ஷ்யாமினுடைய சொந்த ஊரில் - திருவிளையாட்டத்தில் - நடைபெற்றது. ஆனால் ஷ்யாம் வீட்டு வழமையில், முதலிரவு அவர்கள் வீட்டில்தான் நடைபெற வேண்டுமென உறுதியாக இருந்ததால், அங்கிருந்து காரில் திருச்சிக்கு மீண்டும் பயணித்தார்கள். ஷ்யாம் தனிக் காரில் அவன் குடும்பத்துடன், அலமேலு வேறொரு காரில் அவளது குடும்பத்துடன்.

அன்றிரவு தான் வரமுடியும் என முன்பே தெரிந்தும் தீர்மானித்தும் விட்டதால் வரவேற்பு அடுத்தநாள் மாலைதான். இடையில் வீட்டிற்கு வந்து சேரும் நேரம், நல்ல நேரமாக இல்லாத காரணத்தால் நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு போகச்சொல்லி ஷ்யாமின் பாட்டி சொல்ல மறுமொழியில்லாமல் கார்கள் மலைக்கோட்டைக்கு நகர்ந்தன.

அதற்குப் பிறகுதான் வீட்டிற்கு வந்தது. கல்யாணத்திற்காக நினைத்த நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதியளித்த ஷ்யாமின் அலுவலகம், ஒரேயொரு கட்டளையிட்டிருந்தது. அது மின்னஞ்சலில் அனுப்பப்படும் பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்மென்பது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அவன் அம்மா, திருமண நாளன்று மடிக்கணினியை பிடுங்கி வைத்துக்கொண்டது தான் சோகமே. நாள் முழுக்க வந்த அஞ்சல்களைப் படிக்க வேண்டித்தான் அவன் முதலிரவு என்றுகூட பார்க்காமல் மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தான்.

நினைவு தெரிந்ததிலிருந்தே அவன் உபயோகப்படுத்திய அறைதான், சினிமாவில் காண்பிப்பதைப் போன்று பெரிதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்படாத அவன் உபயோகப்படுத்திய அதே பழைய கட்டில், ஒரேயொரு வித்தியாசம் ஒன்றிற்கு இரண்டாய் தலையணைகளும், சற்றே பெரிய படுக்கை விரிப்பும்.

உள்ளே வந்தவள், மிருதுவாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது; கல்யாணப்புடவைதான் அணிந்திருந்தாள்; இது அவன் அம்மாவின் வேண்டுகோளாயிருக்குமென்று நினைத்தான். அவள் முகத்தைப் பார்த்ததிலிருந்தே மணியம் செல்வத்தின் ஒர் ஓவியம் உருக்கொண்டு வந்ததைப் போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நீண்ட கண்கள், செழுமையான புருவங்கள், அளவான நெத்தி, நீண்ட சடை, கானலை போலில்லாமல் காணும்படியான இடைகள் ஒன்றுதான் வித்தியாசம் அந்த ஓவியங்களுக்கும் இவளுக்கும் என்று நினைத்தான்.

"உங்களுக்கு வேலையிருந்தால் முடித்துவிடுங்கள். பரவாயில்லை." ஓவியம் அசைந்து பேசுவதுபோல் தான் இருந்தது. பின்னர் நினைவிற்கு வந்தவனாய், "இல்லை முடிஞ்சிருச்சு. நிக்கிறியே உட்காரு!" சொன்னவன் மடிக்கணினியை மடியில் இருந்து பிரித்து அந்தப் பக்கம் வைத்தான்.

"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..."

அவசரமாய், "இங்கப்பாரு இன்னிக்கின்னு மட்டுமில்லை, என்னிக்குமே நீ என் காலில் விழணும் அப்பிடின்னு அவசியம் இல்லை. எனக்கு பிடிக்காத ஒருவிஷயத்தில இதுவும் ஒன்னு. பரவாயில்லை உட்காரு."

"இல்லை அம்மா சொல்லியிருக்காங்க..."

"உங்கம்மாவா, பரவாயில்லை நாளைக்கு கேட்டாங்கன்னா விழுந்தேன்னு சொல்லு, என்கிட்ட கேட்டாங்கன்னா நானும் சொல்றேன்." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். கொஞ்சம் குழப்பமாய் இருப்பதாய்ப் பட்டது, மெதுவாக கட்டிலில் அவன் அருகில் உட்கார்ந்தவளிடம், "இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும், பேசலாமா?" கேட்டான்.

அவனுக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான அவன் அறிமுகமும் மிகக்குறைவே, தன் அம்மாவைத்தவிர வேறு பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறானே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறான்.

"ம்ம்ம்..." அவ்வளவுதான் பதில் வந்தது.

"எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியணும், உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, எதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க ஆசைப்படுற, என்னைப் பத்தி என்ன தெரியணும். இன்னிக்கு உன்னைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம்."

"நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?" கேட்டுவிட்டு  அவனையே பார்த்தாள். அந்தக் கண்களின் உள்ளே சென்று பார்க்க நினைத்தான், அந்தக் கண்கள் எதையுமே தனியாக விளக்கவில்லை.

"நிச்சயமா, கேளு!"

"உங்களுக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா?"  இந்தக்கேள்வி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எதிர்பார்த்ததுதான், ஆனால் முதல் கேள்வியாக இருக்குமென நினைக்கவில்லை.

"புரியலை, நீ கெட்ட பழக்கம்னு எதைச் சொல்லவர்ற? சிகரெட் பிடிக்கிறது, இல்லை தண்ணியடிக்கிறதப் பத்தி கேக்கறன்னா, கிடையாது. வேற எதையாச்சும் பத்தின்னா குறிப்பா கேட்டாத்தான் சொல்ல முடியும்." சொல்லிவிட்டு சிரித்தான், ஏனென்றே தெரியாமல்.

"இல்லை நீங்க குறிப்பிட்டதைத்தான் கேட்டேன், ஏன் நீங்க அந்த தப்பையெல்லாம் பண்ணலை?"

ஆச்சர்யமான கேள்வி என்று நினைத்தான் பலர் இந்தக்கேள்வியை அவனிடம் கேட்டதில்லை, இந்தக் கேள்விக்கான பதில் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது,

"உண்மையைச் சொல்லவா?" தூண்டில் போட்டான்.

"அது உங்கள் விருப்பம்." சிரித்தாள். முதல்முறை இப்பொழுதுதான் விகல்பமில்லாமல் அவள் சிரிப்பதாய்ப் பட்டது. கல்யாண மண்டபத்தில் பரிசுப்பொருள்கள் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது இருந்த அவளுடைய சிரிப்பில் இருந்து தற்போதைய சிரிப்பு வித்தியாசமாய் இருந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு செயற்கைத்தன்மையிருந்தது.

"சரி சொல்றேன், உண்மையா இல்லையான்னு நீதான் முடிவு பண்ணணும். எங்கப்பா தண்ணியடிப்பாரு, சொல்லப்போனா தினமும் அதனால வந்தப் பிரச்சனைகளை நேரில் இருந்து பார்த்தவன்ங்கிறதால தண்ணியடிக்க முடியலை. சிகரெட் பத்தி கேட்டீன்னா, என் மாமா சிகரெட் குடிப்பான் அவன் அதை நிறுத்த முடியாம தவிக்கிறதை நேரில் பார்த்திருக்கேன். இதெல்லாம் ஆரம்பத்தில் நான் தவறு செய்யாம இருந்ததுக்கு காரணம்; இப்ப வரைக்கும் அது தொடருதுன்னா அதுக்கு காரணம்..." அங்கே நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் மிகவும் ஆர்வமாய் அவன் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

"எனக்கு நெத்தி கொஞ்சம் பெரிசுங்கிறதால, ஆரம்பத்திலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அழகான பொண்ணுக்கு பரிசா எதையாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் இன்னிவரைக்கும் தொடர்ந்துட்டு வர்றேன். இனிமேலும் என்னை நல்லவனா காப்பாதிக்க வேண்டியது உன் பொறுப்பு." சொல்லிவிட்டு சிரிக்க அவள் சிரிக்காமல் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நம்ப முடியலையா?"

அவள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியில் இறங்கினாள்.

"நீங்க யாரையாவது காதலிச்சீங்களா?" அவள் வாய்தான் பேசியதேயொழிய கண்கள் அவன் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன; உண்மையை மட்டும் உறிஞ்சக் கூடிய அன்னங்களாய்.

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."

அவன் சொல்லச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்ச்சியே இல்லையாகையால், "ஏய் என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா?"

"இல்லை இதைப் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்; நீங்கதான்னு நிச்சயமான பிறகு என்கிட்ட தொலைபேசலை, எனக்கு ஏன்னு தெரியாது, நான் நினைச்சேன் ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு. உங்கம்மாகிட்ட நான் பேசிக்கிட்டுத் தான் இருந்தேன். அவங்க நீங்க சொன்ன அத்தனையையும் சொன்னாங்க, ஒருவரி விடாம. இன்னோன்னும் சொன்னாங்க."

"என்ன சொன்னாங்க?"

"நீங்க இனிமேலும் தண்ணியடிக்காம, சிகரெட் பிடிக்காம இருக்கிறதுக்கு உத்திரவாதம் தர்றதாகவும் ஆனால் இன்னொரு பொண்ணு பின்னாடி போக மாட்டீங்கங்கறதுக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னும், நான்தான் காப்பாதிக்கணும்னும் சொன்னாங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

அவனுக்கும் தெரியும் அவங்கம்மா இதை சொல்லியிருப்பார்கள்தான், அக்காவோ தங்கையோ இல்லாத காரணத்தால் அவன் சம்மந்தப்பட்ட அத்துனை நிகழ்ச்சிகளும் அவன் அம்மாவிற்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவன் தன் அம்மாவை வம்பிழுக்க சில சமயங்களில் அதிகமாகவே அவனைப் பாதித்த பெண்களைப்பற்றி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம்.

"நமக்கு நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமணம் முடிந்தபிறகுதான் பேசவேண்டும் அப்பிடின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது என் கொள்கை சார்ந்த ஒரு முடிவு. சரி என்னைப் பத்தியே கேட்டுக்கிட்டிருக்கியே, உன்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லு." அவன் கேட்க,

"என்னைப் பத்தி சொல்றதுன்னா, உங்களமாதிரித்தான் எனக்கும் தண்ணியடிக்கிற, தம்மடிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இன்ஃபேக்சுவேஷன், உங்களமாதிரி தூயதமிழ்ல சொல்லணும்னா இனக்கவர்ச்சி இருந்ததுண்டு, அதுவும் உங்கள மாதிரிதான், ஆனா எனக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. மற்றபடிக்கு நிறைய கோவில் குளமுன்னு ஊர் சுத்துவேன், நிறைய கதையடிப்பேன், புஸ்தகம் படிப்பேன். எனக்குன்னு தனியா கொள்கை எதுவும் கிடையாது, அதேமாதிரி கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கமாட்டேன். எனக்காகத்தான் கொள்கை, கொள்கைக்காக நான் கிடையாது. இன்னிக்கு நீளமான தலைமுடியோட இருக்கிறது பிடிக்குதுங்கறதுக்காக வைச்சிருக்கேன், நாளைக்கே தலைவலிக்கிற மாதிரி இருந்ததுன்னா பாப் அடிச்சிட்டு வந்து நிப்பேன்..." அவள் சொல்லிவிட்டு ஷ்யாமையே பார்த்தாள். அவன் இதற்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசித்துக் கொண்டிருந்தான்.

"இதுக்கு நீங்க பதில் சொல்லணும் அப்பத்தான், உங்களைப்பத்தி நான் புரிஞ்சிக்க முடியும்." அவள் கேட்டும் இவன் யோசித்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்தவள், "நிச்சயம் ஆன நாள்ளேர்ந்து காத்துக்கிட்டிருந்தேன்; நம்மாளுக்கிட்ட கடலை போடலாம்னு. நீங்க போன் பண்ணாததால், காதல் தோல்வி போலிருக்கு, நம்ம தலையில கட்டிவைக்கிறாங்கன்னுதான் நினைச்சேன். இப்படி லூசுத்தனமான கொள்கையிருக்கும்னு நினைக்கலை." அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

அவனும் லேசாய் சிரித்துவைத்தான்.

"இங்கப்பாரு நீ இப்படி வெளிப்படையா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. நீ உன் முடியை பாப் வெட்டிக்கிட்டு வந்தாலும் சரி, இல்லை நான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்தான் போடுவேன்னு சொன்னாலும் சரி, அது உன்னோட விருப்பம். அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். எனக்கு நீ பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்."

அவள் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்பதால் கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டான்.

"எங்கம்மா பத்தி நான் சொல்லணும், நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் அம்மாதான்; அடுத்தநாள் உயிரோட இருப்பனான்னே தெரியாத நாட்கள் என்னோட வாழ்கையிலே இருந்திருக்கு, அதிலேர்ந்தெல்லாம் மீண்டு நானும் எங்க குடும்பமும் வந்திருக்குன்னா அதுக்கு ஒரேயொரு காரணம் அம்மாதான். அதனால அம்மாவை மட்டும் நீ அனுசரிச்சுப் போகணும். அதுமட்டும்தான் நான் உன்கிட்ட கேக்குறது, எனக்கும் இந்த பெண்சுதந்திரம் அப்பிடிங்கிற விஷயத்தில் எல்லாம் நம்பிக்கையுண்டு."

அவன் சொல்லிமுடித்ததும் பலமாகச் சிரித்தாள்.

"நான் நினைச்சேன், நீங்க சரியான அம்மா புள்ளையாத்தான் இருப்பீங்கன்னு; சரியாத்தான் இருக்கு. இங்கப் பாருங்க எனக்கும் ஒரு அண்ணன் உண்டு; அவனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி எங்க வீட்டிலையும் இருக்காங்க. அதனால நீங்க பயப்படாதீங்க; நிறைய கதை கட்டுரையெல்லாம் படிச்சு பயந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க உங்கம்மாவை நான் கடிச்சி தின்னுடமாட்டேன். பிரச்சனையே வராதுன்னு சொல்லமாட்டேன், வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம்.

இன்னோன்னு, இந்த பெண் சுதந்திரம் இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது சந்தோஷமா இருக்கு. கதை கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போலிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாப் அடிப்பேன்னு சொன்னா, நீங்க உங்க பக்கத்து எதிர்பார்ப்பைச் சொல்லணும், இல்லை என் பொண்டாட்டி பாப்பெல்லாம் அடிக்ககூடாதுன்னோ இல்லை பரவாயில்லை அடிச்சுக்கோன்னோ; அதெல்லாமில்லாம அது உன்னோட விருப்பம்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. உரிமை எடுத்துக்கணும் என்கிட்ட, அதேபோல்தான் நானும், பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் ஆம்பளைங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலைன்னா, உங்களை நடக்க விடமாட்டேன். அந்த உரிமையை நீங்களும் எடுத்துக்கலாம்.

எனக்கு இந்த விவாகரத்து பண்றதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது, இனிமே எனக்கு நீங்கதான், நீங்க மட்டும்தான். அதேமாதிரிதான் உங்களுக்கும் நான் மட்டும்தான், உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.

கடைசியா ஒன்னு, நீங்க குறிப்பிட்டதால சொல்றேன். எனக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடுறது பிடிக்காது." சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

ஆச்சர்யமாய் இருந்தது, வந்தவுடன், "இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..." அப்பிடின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே கேட்ட பொண்ணா இவள் என்று யோசித்தான். சந்தேகமாய் இருந்தது, அதேபோல் சந்தோஷமாயும். மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிவிடுகிற பெண்கள் எப்பொழுதுமே பிரச்சனையில்லாதவர்கள், அவன் அம்மாவைப்போல்.

அவன் யோசித்துக்கொண்டிருக்க, "என்ன பலத்த யோசனை?" அவள் கேட்டாள்.

"இல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நல்ல பொண்ணா, கொஞ்சம் எழுந்திருச்சி நிக்கிறீங்களா அப்பிடின்னு கேட்ட பொண்ணா இதுன்னு யோசிச்சேன்." சொல்லிவிட்டு சிரித்தான்.

"கால்ல விழுறதப் பத்தி கேக்குறீங்கன்னா, இப்பவும் கேக்குறேன் எந்திரிச்சு நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்லநாள் பெரியநாள்னா பெரியவங்க காலில் விழுவது சம்பிரதாயம் தான், நானும் ஏன் என் அண்ணணுமே இன்னமும் எங்க மாமா, அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உண்டு, அதனால் புருஷனான உங்கள் காலில் விழுவதிலும் எனக்கு பிரச்சனை கிடையாது. இல்லை நான் அதிகமா பேசுறேன்னு நினைச்சீங்கன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பழக்கதோஷம்னு வேண்ணா வைச்சுக்கோங்கோ." முகம் லேசாக வாடத் தொடங்கியிருந்தது. அவன் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "இல்லம்மா, நான் வேடிக்கையாத்தான் சொன்னேன், நீ உங்கவீட்டில் எப்படி இருப்பியோ அப்படியே இங்கையும் இருக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் குழந்தைகளைப் பற்றி நீ எதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா, வேலைக்கு போறாப்புல எதுவும் ஐடியா இருக்கா?"

"எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க; அவங்க சொன்னாங்க, நம்ம இரண்டுபேருக்கும் குழந்தை பெத்துக்குறதுக்கு இதுதான் நல்ல வயசாம். அதனால தள்ளிப்போடாம பெத்துக்கச் சொன்னாங்க. எங்கம்மாவும் இதைத்தான் சொன்னாங்க; மற்றபடிக்கு நீங்க வேற ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருந்தா சொல்லுங்க, அதேமாதிரி வேலைக்கு போறாப்புல ஐடியாயெல்லாம் கிடையாது, லட்சியமே அதுதான், நீங்கத்தான் பெரிய கம்பெனியில வேலை பார்க்குறீங்கல்ல. வாங்கிக் கொடுங்க." சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரித்தாள்.

"எனக்கும் நாம் சீக்கிரமா குழந்தை பெத்துக்குறதுதான் நல்லதா படுது, உன் வேலையைப் பத்தி கவலைப் படாதே, உனக்கு ஆர்வமிருந்தா போதும், படிப்பு முடிந்தவுடன் வாங்கிரலாம். வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேளு, இல்லைன்னா ஒரே ஒரு வேண்டுகோள், எனக்கு கொஞ்சம் மின்னஞ்சல் எல்லாம் பாக்க வேண்டியிருக்கு, பத்து நிமிஷம் கொடுததேன்னா பார்த்திடுவேன்." கெஞ்சலாய்ப் பார்த்தான்.

"அப்பவே சொன்னேன்ல பார்த்துக்கோங்கன்னு, ஆனா ஒன்னு உங்க அம்மா சொன்னாங்க லேப்டாப் உங்க முதல் பொண்டாட்டி மாதிரின்னு; அப்பிடியிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்பிடித்தான்னா உங்க லாப்டாப்புக்கு நேரம் சரியாயில்லைன்னு அர்த்தம், உங்களை நீங்களே மாத்திக்கோங்க." சொல்லி விட்டு மீண்டும் நக்கலாய்ச் சிரித்தாள்.

"அம்மா தாயே லாப்டாப்பை ஒன்னும் பண்ணீராதம்மா, இனிமே இந்த ரூமிற்குள்ளேயே எடுத்துட்டு வரமாட்டேன். இன்னிக்கு ஒருநாள் மன்னிச்சிரு." இரண்டு கைகளையும் கூப்பி அவனும் நக்கலடித்தான்.

"சரி சரி பொழச்சுப்போங்க, முதல் நாள்னு மன்னிக்கிறேன், நான் இந்த புடவையை கழட்டிவைச்சிட்டு நைட்டி போட்டுட்டு வருவேன்; அதுக்குள்ள பாத்து முடிச்சிருக்கணும். என்ன புரியுதா?" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, அவன், 'ஆகா, ப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ?!' என்று யோசிக்க ஆரம்பித்தான்.

Read More

Share Tweet Pin It +1

32 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 4

ஞாயிற்றுக் கிழமை, காலையில் மோகன் எழுந்ததிலிருந்து சன் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்தால் மதியம் மணி ஒன்றாகியிருந்தது, தலைவருடைய தளபதி படம் வேறு போட்டிருந்தான். மோகன் அவனுடைய அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனுக்கு நினைவில் வந்தது அகிலாவிடம் அவன் அன்றைக்கு லைப்பரரிக்கு வருவதாகச் சொல்லியிருந்தது. உடனே  அவசரமாக கிளம்ப நினைத்தவன், அம்மா "தம்பி, இருடா நைனா பால் வாங்கிட்டு வந்திரும். காப்பி குடிச்சுட்டு போ!" சொல்லவும் அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி ஐந்து. அந்த லைப்ரரி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆறு மணிக்கெல்லாம் சாத்திவிடும். அவனுக்கென்னமோ அவள் வந்திருக்கமாட்டாள் என்று எண்ணம் ஓடினாலும், அவளைப் பார்ப்பதற்காக இல்லாவிடினும் புத்தகம் மாற்றவாவது போகலாம் என்று நினைத்துக் கொண்டு லைப்ரரி சென்றான்.

தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே அங்கு, அகிலா உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆகா காலையிலேயே வந்திருப்பாள் போலிருக்கிறது, இன்றைக்கு மாட்டிக்கொள்ளாமல் நாளைக்கு கல்லூரிக்கு வந்து வேறு ஏதாவது சாக்கு சொல்லிக் கொள்ளலாம் என அப்பொழுதுதான் திரும்பியிருப்பான், பின்னால் யாரோ வேகமாக நகர்ந்து அவனை நோக்கி வருவதைப்போல் தோன்றியது. திரும்பினால் எதிரே அவள் தான் நின்று கொண்டிருந்தாள்.

"இல்லை சாரி, மறந்துட்டேன். அடுத்தவாரம் வந்து பண்ணிக்கலாமே?" உண்மையிலேயே மனம் சங்கடப்பட்டது, சமாதானம் சொன்னான்.

"காலையிலேர்ந்து வெய்ட் பண்ணுறேன், இப்பத்தான் வந்தீங்க. என்னைப் பார்த்ததும் ஏதோ பேயைப் பார்த்ததை போல ஓடுறீங்க?" அவள் கண்களில் கோபமில்லை விளையாட்டுத்தனம் இருந்தது ஆனால் என்னயிருந்தாலும் தவறு அவனுடையது என்பதால்.

"அதான் சாரி கேட்டேன்ல..." என்றான்.

"பண்ணறதை எல்லாம் பண்ணீற்ரது, அப்புறம் சாரி கேட்கிறது," வேறு எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள். அவள் எந்த நிகழ்ச்சியைச் சொல்ல வருகிறாள் என்று தெரிந்திருந்தாலும் சட்டென பழகிய வார்த்தை மனதில் ஓடியது.

"what do you mean?" வந்துவிட்டது.

"I mean, what I mean!" பெரிய இங்கிலீஷ் ப்ரொபசர் போல் பதில் சொன்னாள், ஆனால் எந்தக் கணத்திலும் கோபம் மட்டும் இல்லவேயில்லை, கண்கள் விளையாட்டாய்ச் சிரித்துக் கொண்டேயிருந்தது.

ரொம்பத்தான் என்று நினைத்துக் கொண்டவனாய், "சரி இப்ப என்ன பண்ணனுங்ற?" அவன் கேட்க,

"என்னைக் காக்க வைச்சதுக்குப் பரிகாரமா, காபி ஷாப் கூட்டிட்டு போகணும்"
என்னடா இது இரண்டு நாளில் தைரியம் அதிகம் வந்துவிட்டது போலிருக்கே என்று நினைத்தபடியே,

"எதுக்கு?" 

"காபி ஷாப் எதுக்கு போவாங்க, காப்பி சாப்பிடத்தான்" சொல்லிச் சிரிச்சாள்.

காபி ஷாப் வந்து சேர்ந்தார்கள். பேரர் வந்ததும் இரண்டு நெஸ்கஃபே ஆர்டர் செய்துவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னா?" அவனையே தின்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தது சங்கடத்தை அளித்தது. அப்படி வெறுமனே அவள் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அவளிடம் பேசிவிடுவதே உத்தமம் என்று நினைத்துக் கேட்டான்.

"இல்ல உங்ககிட்ட பர்ஸனலா கொஞ்சம் பேசணும்." என்றாள்.

"எதைப்பத்தி?"

"உங்களைப்பத்தி..."

"என்னைப் பத்தி என்னா?"

"சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..." இழுத்தாள்.

"தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போற?"

"இல்ல சும்மாத்தான், அக்கா உங்களைப் பத்தி நிறைய சொல்லுவாங்க."

"என்ன சொல்லுவா?"

"நீங்க நல்லா படிப்பீங்க, நிறைய ட்ராயிங்க் வரைவீங்க, தனியா ப்ராஜக்ட்டெல்லாம் எடுத்துப் பண்றீங்கன்னு, நான் கூட வரைவேன்..."

"ம்ம்ம், தெரியும். அதுக்கென்ன?"

"இல்ல, நான் வெறும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க?"

"நானும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், அதுக்கென்ன?"

"இல்ல, நான் அப்ஸரா 4B பென்சில் தான் உபயோகிக்கிறேன். நீங்க?"

"ஏய்! உனக்கு என்ன கேட்கணும் நேரா கேளு?"

"நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?" கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள். அவள் எங்கே எதற்கு வருகிறாள் என்பது சரியாய்த் தெரியாவிட்டாலும் இப்படியொன்று இருக்க முடியுமென்று ஊகித்திருந்தான். அவள் கண்களில் தெரிந்த அந்த விளையாட்டு, சுட்டித்தனம் எல்லாம் அதையே வழிமொழிந்தன.

"ஆமாம் காதலிக்கிறேன், என் சொந்தக்கார பொண்ணு ஒருத்தியை"

அதற்குப்பிறகு அவள் எதுவும் பேசவேயில்லை, நான் காபிக்கு காசு கொடுத்துவிட்டு, "கொஞ்சம் வேலையிருக்கு வர்றேன்" என்று சொல்லி வீட்டிற்கு வந்துவிட்டான்.

"அப்பா நிம்மதி", இனிமே தொந்தரவு பண்ண மாட்டாள் என்று நினைத்தான். ஆனால் அடுத்த நாள் இடி ஒன்று தலையிறங்கியது. காலையில் ஃப்ரெண்ட் வண்டியில் கல்லுரிக்கு வந்தான். அகிலாவைப் பார்க்கவேண்டாம் என்பது தான் முக்கிய காரணம். ஆனால் கல்லூரி பஸ் வந்த கொஞ்ச நேரத்திலேயே, கனிமொழி நேராக அவன் கிளாஸ் ரூமிற்கு வந்து என் அருகில் அமைதியாக நின்றாள். அப்படியிருக்கும் பழக்கமில்லாதவள் ஆகையால் அவனே தொடங்கினேன்.

"என்ன கனிமொழி?"

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." தயங்கினாள்.

"ம்ம்ம், சொல்லு. என்ன விஷயம்."

"இல்லண்ணே, தனியாத்தான் சொல்லணும்."

"சரி வா, கேன்டீனுக்கு போகலாம்" என்று சொல்லி கேன்டீனுக்கு அழைத்து வந்தான். அங்கே வந்தும் பேசாமல் இருந்தாள்.

"என்னம்மா சொல்லு, எதைப்பத்தி பேசணும் உன் பிரண்ட்டப் பத்தியா, பரவாயில்லை சொல்லு..." அவளை வழிக்குக் கொண்டுவர நினைத்தவனாய்.

"ஆமா அவளைப்பத்தி தான்..."

"என்ன விஷயம்"

"அண்ணே நான் சொல்ரனேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது, அவ உங்களைக் காதலிக்கிறாளாம். இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லணும்னு ஒரே அடம். நான் எவ்வளவோ சொல்லிட்டேன கேட்கவே மாட்டேங்குறா." ஏறக்குறைய இப்படிப்பட்ட ஒன்று நடக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால் அத்தனை சுலபமாய் அவளால் இந்த விஷயத்தை நகர்த்த முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அவளுக்கு அவன் மனம் தெரிந்திருந்தது கனிமொழி மூலமாய் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வைத்ததில் ஒரு தனித்திறமை இருந்தது. அந்தத்திறமை அவனுக்கு கோபமளித்தது. ஆனால் பாவம் கனிமொழி, அகிலா இந்த விஷயத்தில் கனிமொழியை இழுத்திருக்கவேண்டாம் என்றே நினைத்தான்.

"என்னாடி இது வம்பாயிருக்கு, அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து விளையாடுறீங்களா, நேத்திக்கு அவ என்னன்னா வீட்டுக்கு வந்து ‘அத்த என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க’ன்னு எங்கம்மா கால்ல விழுறாள். நீ என்னடான்னா இன்னிக்கு வந்து அவள் காதலிக்கிறான்னு சொல்றே. என்னம்மா இது. அவதான் சின்ன பிள்ளை உளருறான்னா நீயுமா? அதுசரி நேத்திக்கு தான் நான் அவகிட்ட என் சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னேனே. அப்புறமும் ஏன் இப்படி சொன்னாள்."

"நான் அவகிட்ட சொல்லியிருக்கேன், உங்க அக்கா, அம்மாவுக்கு பிறகு ஒரு பெண்ணுக்கிட்ட பேசுறீங்கன்னா அது நான் தான்னு. அதனால நீங்க சொன்னத அவ சுத்தமா நம்பவேயில்லை, இதிலே கொடுமையென்னன்னா என்கிட்டையே நீ அவரை காதலிக்கிறியான்னு கேட்டா, ஒரே அறை, ஆனா வாங்கிட்டு சிரிக்கிறா. நான் அவகிட்ட அதுக்குப்பிறகு பேசவேயில்லை, ஆனா ராத்திரி முழுக்க தூங்காம ஒரே அழுகை, பார்க்க சகிக்கலை. அதான், உங்ககிட்ட சொல்லிட்டேன், இனி நீங்களாச்சு, உங்க காதலியாச்சு" அவன் அவளிடம் அதீத கோபம் காட்டாததன் காரணமாய் அவள் அவனைச் சீண்டினாள்.

"அக்கா, தங்கச்சி ரெண்டுபேரும் உதை வாங்கப் போறீங்க, நீ போய் உடனே நான் அவளைப் பார்க்கணும் சொன்னேன்னு சொல்லு."

கால் மணிநேரத்தில் அகிலா கேன்டீனுக்கு வந்தாள்.

"ஏய், கனிமொழிக்கிட்ட என்னடி சொன்ன?" கத்தினான்.

மௌனமாக நின்றாள்.

"கேட்கிறேன்ல, சொல்லமாட்டே, இங்கப்பாரு உனக்கு ஒரு பதினாரு இல்லை பதினேழு வயசிருக்குமா, அதுக்குள்ள உனக்கு காதலா. நீ எப்பிடியோ போ, ஆனா என்னை ஏன் பிரச்சனையில் மாட்டிவிடுற. எனக்கு எத்தனையோ கனவு இருக்கு, உன்னைப்போல யாருண்ணே தெரியாத பெண்ணை - பெண்ணை என்ன பெண்ணை - குழந்தையையெல்லாம் காதலிக்க முடியாது. அதுமட்டுமில்லாம நான் காதலிக்கிறதுக்காக இங்க வரலை. இதனாலத் தான் நான் பொண்ணுங்க கூட பழகுறதேயில்லை. இப்பப் பாரு கனிமொழிக்கு எனக்கும் இருக்கிற உறவையே நீ சந்தேகப்படுற. இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே இதைப்பத்தி நீயோ இல்லை யாராவதோ என்கிட்ட பேசினா, நான் உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதே மாதிரி என் பின்னாடியே சுத்தறது, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறது, எல்லாத்தையும் நிறுத்தணும் இல்லைன்னா நான் இந்த காலேஜ் விட்டே நின்னுடுவேன். என்ன புரியுதா?"

தலையை மட்டும் ஆட்டினாள்.

"வாயத்திறந்து பதில் சொல்லு..."

"சரி, ஆனா ஒரே ஒரு சந்தேகம். நீங்க என்கிட்ட சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னது உண்மையா? பொய்யா?"

"அதெதுக்கு உனக்கு?"

"நான்தான் நீங்க கேட்டதுக்கு சரின்னுட்டேன்ல, சொல்லுங்க?"

"சரி பொய், அதுக்கென்ன?"

"அது போதும்," என்று அவன் தாடையைத் தடவி அவள் உதட்டில் வைத்து "உம்மா.............." என்று சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள்.

அவன் தலையில் அடித்துக் கொள்ள, கேன்டீனில் டீ விற்கும் கிழவி அவனைப் பார்த்து சிரித்தாள்.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts