ஞாயிற்றுக் கிழமை, காலையில் மோகன் எழுந்ததிலிருந்து சன் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நிமிர்ந்தால் மதியம் மணி ஒன்றாகியிருந்தது, தலைவருடைய தளபதி படம் வேறு போட்டிருந்தான். மோகன் அவனுடைய அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனுக்கு நினைவில் வந்தது அகிலாவிடம் அவன் அன்றைக்கு லைப்பரரிக்கு வருவதாகச் சொல்லியிருந்தது. உடனே அவசரமாக கிளம்ப நினைத்தவன், அம்மா "தம்பி, இருடா நைனா பால் வாங்கிட்டு வந்திரும். காப்பி குடிச்சுட்டு போ!" சொல்லவும் அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் காப்பி குடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி ஐந்து. அந்த லைப்ரரி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆறு மணிக்கெல்லாம் சாத்திவிடும். அவனுக்கென்னமோ அவள் வந்திருக்கமாட்டாள் என்று எண்ணம் ஓடினாலும், அவளைப் பார்ப்பதற்காக இல்லாவிடினும் புத்தகம் மாற்றவாவது போகலாம் என்று நினைத்துக் கொண்டு லைப்ரரி சென்றான்.
தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே அங்கு, அகிலா உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆகா காலையிலேயே வந்திருப்பாள் போலிருக்கிறது, இன்றைக்கு மாட்டிக்கொள்ளாமல் நாளைக்கு கல்லூரிக்கு வந்து வேறு ஏதாவது சாக்கு சொல்லிக் கொள்ளலாம் என அப்பொழுதுதான் திரும்பியிருப்பான், பின்னால் யாரோ வேகமாக நகர்ந்து அவனை நோக்கி வருவதைப்போல் தோன்றியது. திரும்பினால் எதிரே அவள் தான் நின்று கொண்டிருந்தாள்.
"இல்லை சாரி, மறந்துட்டேன். அடுத்தவாரம் வந்து பண்ணிக்கலாமே?" உண்மையிலேயே மனம் சங்கடப்பட்டது, சமாதானம் சொன்னான்.
"காலையிலேர்ந்து வெய்ட் பண்ணுறேன், இப்பத்தான் வந்தீங்க. என்னைப் பார்த்ததும் ஏதோ பேயைப் பார்த்ததை போல ஓடுறீங்க?" அவள் கண்களில் கோபமில்லை விளையாட்டுத்தனம் இருந்தது ஆனால் என்னயிருந்தாலும் தவறு அவனுடையது என்பதால்.
"அதான் சாரி கேட்டேன்ல..." என்றான்.
"பண்ணறதை எல்லாம் பண்ணீற்ரது, அப்புறம் சாரி கேட்கிறது," வேறு எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னாள். அவள் எந்த நிகழ்ச்சியைச் சொல்ல வருகிறாள் என்று தெரிந்திருந்தாலும் சட்டென பழகிய வார்த்தை மனதில் ஓடியது.
"what do you mean?" வந்துவிட்டது.
"I mean, what I mean!" பெரிய இங்கிலீஷ் ப்ரொபசர் போல் பதில் சொன்னாள், ஆனால் எந்தக் கணத்திலும் கோபம் மட்டும் இல்லவேயில்லை, கண்கள் விளையாட்டாய்ச் சிரித்துக் கொண்டேயிருந்தது.
ரொம்பத்தான் என்று நினைத்துக் கொண்டவனாய், "சரி இப்ப என்ன பண்ணனுங்ற?" அவன் கேட்க,
"என்னைக் காக்க வைச்சதுக்குப் பரிகாரமா, காபி ஷாப் கூட்டிட்டு போகணும்"
என்னடா இது இரண்டு நாளில் தைரியம் அதிகம் வந்துவிட்டது போலிருக்கே என்று நினைத்தபடியே,
"எதுக்கு?"
"காபி ஷாப் எதுக்கு போவாங்க, காப்பி சாப்பிடத்தான்" சொல்லிச் சிரிச்சாள்.
காபி ஷாப் வந்து சேர்ந்தார்கள். பேரர் வந்ததும் இரண்டு நெஸ்கஃபே ஆர்டர் செய்துவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னா?" அவனையே தின்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தது சங்கடத்தை அளித்தது. அப்படி வெறுமனே அவள் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அவளிடம் பேசிவிடுவதே உத்தமம் என்று நினைத்துக் கேட்டான்.
"இல்ல உங்ககிட்ட பர்ஸனலா கொஞ்சம் பேசணும்." என்றாள்.
"எதைப்பத்தி?"
"உங்களைப்பத்தி..."
"என்னைப் பத்தி என்னா?"
"சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு..." இழுத்தாள்.
"தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போற?"
"இல்ல சும்மாத்தான், அக்கா உங்களைப் பத்தி நிறைய சொல்லுவாங்க."
"என்ன சொல்லுவா?"
"நீங்க நல்லா படிப்பீங்க, நிறைய ட்ராயிங்க் வரைவீங்க, தனியா ப்ராஜக்ட்டெல்லாம் எடுத்துப் பண்றீங்கன்னு, நான் கூட வரைவேன்..."
"ம்ம்ம், தெரியும். அதுக்கென்ன?"
"இல்ல, நான் வெறும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க?"
"நானும் பென்சில் ஸ்கெட்ச் மட்டும் தான் பண்ணுவேன், அதுக்கென்ன?"
"இல்ல, நான் அப்ஸரா 4B பென்சில் தான் உபயோகிக்கிறேன். நீங்க?"
"ஏய்! உனக்கு என்ன கேட்கணும் நேரா கேளு?"
"நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா?" கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள். அவள் எங்கே எதற்கு வருகிறாள் என்பது சரியாய்த் தெரியாவிட்டாலும் இப்படியொன்று இருக்க முடியுமென்று ஊகித்திருந்தான். அவள் கண்களில் தெரிந்த அந்த விளையாட்டு, சுட்டித்தனம் எல்லாம் அதையே வழிமொழிந்தன.
"ஆமாம் காதலிக்கிறேன், என் சொந்தக்கார பொண்ணு ஒருத்தியை"
அதற்குப்பிறகு அவள் எதுவும் பேசவேயில்லை, நான் காபிக்கு காசு கொடுத்துவிட்டு, "கொஞ்சம் வேலையிருக்கு வர்றேன்" என்று சொல்லி வீட்டிற்கு வந்துவிட்டான்.
"அப்பா நிம்மதி", இனிமே தொந்தரவு பண்ண மாட்டாள் என்று நினைத்தான். ஆனால் அடுத்த நாள் இடி ஒன்று தலையிறங்கியது. காலையில் ஃப்ரெண்ட் வண்டியில் கல்லுரிக்கு வந்தான். அகிலாவைப் பார்க்கவேண்டாம் என்பது தான் முக்கிய காரணம். ஆனால் கல்லூரி பஸ் வந்த கொஞ்ச நேரத்திலேயே, கனிமொழி நேராக அவன் கிளாஸ் ரூமிற்கு வந்து என் அருகில் அமைதியாக நின்றாள். அப்படியிருக்கும் பழக்கமில்லாதவள் ஆகையால் அவனே தொடங்கினேன்.
"என்ன கனிமொழி?"
"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." தயங்கினாள்.
"ம்ம்ம், சொல்லு. என்ன விஷயம்."
"இல்லண்ணே, தனியாத்தான் சொல்லணும்."
"சரி வா, கேன்டீனுக்கு போகலாம்" என்று சொல்லி கேன்டீனுக்கு அழைத்து வந்தான். அங்கே வந்தும் பேசாமல் இருந்தாள்.
"என்னம்மா சொல்லு, எதைப்பத்தி பேசணும் உன் பிரண்ட்டப் பத்தியா, பரவாயில்லை சொல்லு..." அவளை வழிக்குக் கொண்டுவர நினைத்தவனாய்.
"ஆமா அவளைப்பத்தி தான்..."
"என்ன விஷயம்"
"அண்ணே நான் சொல்ரனேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது, அவ உங்களைக் காதலிக்கிறாளாம். இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்லணும்னு ஒரே அடம். நான் எவ்வளவோ சொல்லிட்டேன கேட்கவே மாட்டேங்குறா." ஏறக்குறைய இப்படிப்பட்ட ஒன்று நடக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால் அத்தனை சுலபமாய் அவளால் இந்த விஷயத்தை நகர்த்த முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அவளுக்கு அவன் மனம் தெரிந்திருந்தது கனிமொழி மூலமாய் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வைத்ததில் ஒரு தனித்திறமை இருந்தது. அந்தத்திறமை அவனுக்கு கோபமளித்தது. ஆனால் பாவம் கனிமொழி, அகிலா இந்த விஷயத்தில் கனிமொழியை இழுத்திருக்கவேண்டாம் என்றே நினைத்தான்.
"என்னாடி இது வம்பாயிருக்கு, அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து விளையாடுறீங்களா, நேத்திக்கு அவ என்னன்னா வீட்டுக்கு வந்து ‘அத்த என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க’ன்னு எங்கம்மா கால்ல விழுறாள். நீ என்னடான்னா இன்னிக்கு வந்து அவள் காதலிக்கிறான்னு சொல்றே. என்னம்மா இது. அவதான் சின்ன பிள்ளை உளருறான்னா நீயுமா? அதுசரி நேத்திக்கு தான் நான் அவகிட்ட என் சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னேனே. அப்புறமும் ஏன் இப்படி சொன்னாள்."
"நான் அவகிட்ட சொல்லியிருக்கேன், உங்க அக்கா, அம்மாவுக்கு பிறகு ஒரு பெண்ணுக்கிட்ட பேசுறீங்கன்னா அது நான் தான்னு. அதனால நீங்க சொன்னத அவ சுத்தமா நம்பவேயில்லை, இதிலே கொடுமையென்னன்னா என்கிட்டையே நீ அவரை காதலிக்கிறியான்னு கேட்டா, ஒரே அறை, ஆனா வாங்கிட்டு சிரிக்கிறா. நான் அவகிட்ட அதுக்குப்பிறகு பேசவேயில்லை, ஆனா ராத்திரி முழுக்க தூங்காம ஒரே அழுகை, பார்க்க சகிக்கலை. அதான், உங்ககிட்ட சொல்லிட்டேன், இனி நீங்களாச்சு, உங்க காதலியாச்சு" அவன் அவளிடம் அதீத கோபம் காட்டாததன் காரணமாய் அவள் அவனைச் சீண்டினாள்.
"அக்கா, தங்கச்சி ரெண்டுபேரும் உதை வாங்கப் போறீங்க, நீ போய் உடனே நான் அவளைப் பார்க்கணும் சொன்னேன்னு சொல்லு."
கால் மணிநேரத்தில் அகிலா கேன்டீனுக்கு வந்தாள்.
"ஏய், கனிமொழிக்கிட்ட என்னடி சொன்ன?" கத்தினான்.
மௌனமாக நின்றாள்.
"கேட்கிறேன்ல, சொல்லமாட்டே, இங்கப்பாரு உனக்கு ஒரு பதினாரு இல்லை பதினேழு வயசிருக்குமா, அதுக்குள்ள உனக்கு காதலா. நீ எப்பிடியோ போ, ஆனா என்னை ஏன் பிரச்சனையில் மாட்டிவிடுற. எனக்கு எத்தனையோ கனவு இருக்கு, உன்னைப்போல யாருண்ணே தெரியாத பெண்ணை - பெண்ணை என்ன பெண்ணை - குழந்தையையெல்லாம் காதலிக்க முடியாது. அதுமட்டுமில்லாம நான் காதலிக்கிறதுக்காக இங்க வரலை. இதனாலத் தான் நான் பொண்ணுங்க கூட பழகுறதேயில்லை. இப்பப் பாரு கனிமொழிக்கு எனக்கும் இருக்கிற உறவையே நீ சந்தேகப்படுற. இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே இதைப்பத்தி நீயோ இல்லை யாராவதோ என்கிட்ட பேசினா, நான் உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதே மாதிரி என் பின்னாடியே சுத்தறது, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறது, எல்லாத்தையும் நிறுத்தணும் இல்லைன்னா நான் இந்த காலேஜ் விட்டே நின்னுடுவேன். என்ன புரியுதா?"
தலையை மட்டும் ஆட்டினாள்.
"வாயத்திறந்து பதில் சொல்லு..."
"சரி, ஆனா ஒரே ஒரு சந்தேகம். நீங்க என்கிட்ட சொந்தக்கார பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னது உண்மையா? பொய்யா?"
"அதெதுக்கு உனக்கு?"
"நான்தான் நீங்க கேட்டதுக்கு சரின்னுட்டேன்ல, சொல்லுங்க?"
"சரி பொய், அதுக்கென்ன?"
"அது போதும்," என்று அவன் தாடையைத் தடவி அவள் உதட்டில் வைத்து "உம்மா.............." என்று சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள்.
அவன் தலையில் அடித்துக் கொள்ள, கேன்டீனில் டீ விற்கும் கிழவி அவனைப் பார்த்து சிரித்தாள்.
(தொடரும்...)
உள்ளம் உடைக்கும் காதல் 4
Mohandoss
Sunday, October 16, 2016
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
கொஞ்ச நாளா,நீங்க கதையே எழுதாமல் இருந்ததுனால,உங்க பழைய கதைகளையே திரும்ப திரும்ப படிச்சுக்கிட்டிருந்தேன்.இந்த புது தொடர் அமர்க்களமாக போய்க்கிட்டிருக்கு!
ReplyDeleteமோகன்,
ReplyDeleteதொடர்ந்து படிங்க.
waiting the next episode.....
ReplyDeleteஅடுத்த அத்தியாயத்துக்காக காத்திருக்கின்றோம்
ReplyDeleteஇதையும் படியுங்கள்
http://charuleaks.blogspot.com/2013/01/blog-post_15.html
"நைனா " ஆ, அப்போ கதா நாயகன் எங்கே இருக்காரு ? குப்பத்திலையா
ReplyDeleteஎதுக்காக பொய் என்று சொல்லணும். உண்மை என்று சொல்லியிருக்கலாமே.
ReplyDeleteமோகனுக்கு சின்ன ஐடியா இருக்கு. அதுதான் விட்டு பிடிக்கிறார்.
nalla padicchhu munnerungappa....
ReplyDeletechumma idhu madhiri time waste pannikittu