கட்டபொம்மு 1799 அக்டொபர் 16 அன்று கயத்தாரில் அவரது 36ஆவது வயதில் தூக்கிலடப்பட்டார். அவரது உறவினர்கள் பெண்களும் ஆண்களுமாய்ப் பதினேழுபேர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர், கொல்லவாருப்பட்டி பாளையங்கள் பறிக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சியின் பெரும்பாலான பகுதிகள் எட்டையபுரம், மேல்மாந்தை, மணியாச்சி பாளையங்களுக்குப் பகிர்ந்தளிகப்பட்டது. பறிக்கப்பட்ட பாளையங்களிலிருந்த கோட்டைகள் எல்லாம் இடிக்கப்பட்டன. ஆயுதங்கள் பிடுங்கப்பட்டன. மக்களது சுய பாதுகாப்புக்கும் வழியில்லாமல் போகவே திருட்டுகள் அதிகரித்தன. அனைத்துப் பாளையங்களின் நிர்வாகத்தையும் கும்பினி ஏற்றெடுத்தது. கும்பினி ஊழியர்கள் வரி வசூல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். 'தேசக் காவல்' என்றொரு புது வரியும் உயர்ந்தது. வரி கட்ட இயலாமல் போகும் போது சொத்துக்கள் எதுவாயினும் பறிமுதல் செய்யப்பட்டன. கும்பினி அதிகார்கள் ஊழலில் கொழித்தனர். நவாப்பின் நிர்வாகமே இந்தப் போக்கைக் கண்டு மிரண்டு, நாடு பாழ்பட்டுப் போய்விட்டது என்று குற்றம் சாட்டியது.
பாளையங்கோட்டை சிறை அதிகாரியின் மனைவி ஊமைத்துரையின் மேல் அனுதாபம் கொண்டிருந்தாள். அதைப் பயன்படுத்தி நீத்தார் கடன் செய்வதற்குப் பழங்களும் பண்டங்களும் வாங்க வேண்டுமென்று சொல்லவும் அதற்கு அனுமதி கிடைத்தது. சிறைக்கு விறகு கொண்டு வரும் பொட்டிப் பகடை என்ற சக்கிலியர்தான் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் ரகசிய ஓலைப் பரிமாற்றத்திற்கு உதவியாக இருந்தார். சிறைக்குள் வந்த வாழையிலைக் கட்டு, விறகு, பழக்கூடைகளுக்குள் ஆயுதங்கள் இருந்தன.
2.2.1801 அன்று இரவானதும் திருச்செந்தூருக்குக் காவடி எடுத்துப் போகும் பக்தர் கூட்டம் ஒன்று கோட்டையின் அருகே பாடிக்கொண்டு சென்றது. தெற்கு வாசலுக்கு அப்பால் இருளில் குதிரைகளோடு வீரர்கள் கூட்டம் ஒன்று காத்து நின்றது.
பாட்டுச்சத்தம் நெருங்கியதும் ஊமைத்துரையின் உறவினர்கள் ஆயுதங்களோடு காவல் வீரர்களோடு மோதி, கோட்டைக் கதவை திறந்து ஓடினர். மூன்று பேர் சண்டையில் இறந்துவிட, பதினான்கு பேர் தப்பி காத்திருந்த கூட்டத்தோடு வல்லநாட்டு மலைக்கு ஓடினர். பின் தொடர்ந்த சிறைக்காவலர்கள் அடிபட்டுத் திரும்பினர்.
பாஞ்சாலங்குறிச்சியில் காவலில் இருந்த கும்பினிச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஒரே வாரத்தில் மீண்டும் அங்கே ஒரு மண் கோட்டை எழும்பிக் கொண்டிருந்தது. பிப்ரவரி இறுதிக்குள் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ஆழ்வார்த்திருநகரி வரை உள்ள கும்பினி ராணுவ நிலைகளை அழித்துவிட்டனர். கோட்டைகள் இடிக்கப்பட்ட ஐந்து பாளையங்களிலும் மீண்டும் அவை கட்டப்பட்டன.
பாஞ்சாலங்குறிச்சியைப் பிடிப்பதற்காகக் காலின் மெக்காலே சங்கரன்கோவில் கயத்தாறு வழியாக வந்து கடையநல்லூரில் முகாமிட்டிருந்தார். நள்ளிரவில் நாற்புறமிருந்தும் அவர் படை தாக்கப்பட்டது. சண்டையில் பாஞ்சாலங்குறிசி வீரர்கள் 40 பேர் மடிந்தனர். மறுநாள் ஒட்டபிடாரத்தைப் பிடிக்கும் மெக்காலேயின் முயற்சி முறியடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ராணுவத்தின் பின்புறமாகவும் பக்கவாட்டிலும் துப்பாக்கிகளுக்குப் பயப்படாமல் வந்து தாக்கினர். மெக்காலே பின்வாங்கினார். ஊமைத்துரை அந்தச் சண்டையில் 110 பேரை இழந்தான். இரவெல்லாம் நடந்து பிப்ரவரி 10ல் மெக்காலே பாளையங்கோட்டை போய்ச் சேர்ந்தார்.
மார்ச்சில் ஊமைத்துரை தூத்துகுடியைத் தாக்கினான். கோட்டையின் தளகர்த்தர் உட்வர்ட் ஓர்ம்ஸ்லே சரணடைந்தார். மற்றொரு அதிகாரியான பாக்காட் சிறையில் அடைபட்டார். அவர் மனைவி ஊமைத்துரையைச் சந்தித்து அவருக்கு உயிர்ப் பாதுகாப்பு வேண்டியபோது இரு அதிகாரிகளும் குடும்பம் உடைமகளோடு வெளியேற ஊமைத்துரை அனுமதித்தான்.
வல்லநாட்டு மலையிலிருந்து பாளையங்கோட்டையைத் தாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கும்பினுக்கு எதிரான இந்த எழுச்சி ராமநாதபுரத்திற்கும் பரவியது. மார்ச்19ல் ஸ்ரீவைகுண்டத்தைத் தாக்கி மேஜர் செப்பர்டின் படையை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.
மெக்காலே மேலதிகத் துருப்புகளைச் சேர்த்துக்கொண்டு மார்ச் 30ல் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் போனார். ஊமைத்துரையின் ஆட்கள் பசுவந்தனையில் மறித்துத் தாக்கினர்; 96 பேரை இழந்து பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிவிட்டனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மார்ச் 31ல் வளைத்த பிரிட்டிஷ் படை காலையிலிருந்தே பீரங்கிக்ளால் சுடத் தொடங்கியது. கோட்டையில் இரட்டை மண்சுவர்களுக்கு நடுவே பருத்திமாருகள் அடுக்கப் பட்டிருந்ததால் குண்டுகள் அதில் செருகி நின்றுவிட்டன. உட்புறச்சுவர் பாதிக்கப்படவில்லை.
மாலை 3 மணிக்கு ஒருபகுதிச்சுவர் இடிக்கப்பட்டது. அதன் வழியே நுழைய முயன்ற பிரிட்டிஷ் சிப்பாய்கள் சுடப்பட்டும் ஈட்டி, வல்லயங்களால் குத்தப்பட்டும் விழுந்தனர். எதிர்ப்பு கடுமையாக்க இருந்தது. குலவையிட்டுக் கொண்டே பாஞ்சாலங்குற்ச்சி வீரர்கள் தாக்கினர். சுவர்களில் ஏற முயன்ற பிரிட்டிஷாரை வல்லயங்கள் குத்தித் தள்ளின. சுவர்மீது பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் தென்படும் போதெல்லாம் பிரிட்டிஷ் துப்பாக்கிகள் சுட்டு வீழ்த்தின. என்றாலும் அதே இடத்தில் மீண்டும் ஒருவன் ஏறி நின்றான். மதில்மேல் பிரிட்டிஷாரால் ஏற முடியவேயில்லை. கோட்டையின் கிழக்குப் பக்கமிருந்து எட்டையபுரம் வீரர்கள் தாக்கினாலும் அவர்கள் சுலபமாக விரட்டப்பட்டனர்.
கோட்டையின் காவல் அரண்களிலிருந்து பிரிட்டிஷ் வீரர்களை நோக்கித் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்தபடியிருந்தது. கோட்டையைக் கைப்பற்றும் மெக்காலேயின் முயற்சி தோற்றுப்போனது. வலிமையையான பிரிட்டிஷ் படை தோற்றுவிட்டது என்பதை விட மெக்கால்லேக்கு ஆச்சரியமாக இருந்தது அந்தச் சிறிய மண்கோட்டையை எப்படி ஊமைத்துரையால் தற்காத்துக்கொள்ள முடிந்தது என்பதுதான்.
வீரத்திற்கும் நேர்மைக்கும் பேர் போனவராகக் கருதப்பட்ட, இந்தியச் சூழலை நன்கறிந்த லெ. கேணல் அக்னியு வசம் மதராஸ் ராணுவப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மதராஸ் ஜார்ஜ் கோட்டை, பரங்கிமலை, ஆர்க்காடு, மலபாரிலிருந்தும் வீரர்கள் வந்து அவரோடு மே 23ல் கோவில்பட்டியில் இணைந்து கொண்டனர். 24ந் தேதி பாஞ்சாலங்குறிச்சியை பீரங்கிகள் துளைத்துக் கொண்டிருந்தன. உடைபட்ட மதில்களினூடே நுழையப் பெருவாரியான ஆட் பலத்தோடு பிரிட்டிஷார் முயன்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக சின்ன பீரங்கிகளும் துப்பாக்கிகளும் சுட்டவாறு இருந்தன. நுழைய முயன்றவர்கள் மீது உள்ளிருந்து கடும் தாக்குதலும் துப்பாக்கிப் பிரயோகமும் நிகழ்ந்தது. இரு பக்கமும் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் பலியாயினர்.
சிதந்த மதிலின் ஒரு 'வழி'க்குப் பின்புறம் எதிர்த்து நின்ற வீரர்கள் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் பிரிட்டிஷ் வீரர்கள் அந்த வழியே மொத்தமாக உள் நுழைய முயன்றனர். அந்தத் தருணத்தில் கோட்டையில் இருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் 3000 பேர் கிழக்கு வாசல் வழியாக வெளியேறி, இரு பிரிவுகளாகக் கிழக்கிலும் வடக்கிலும் விரைந்து ஓடித் தப்பித்தனர். கோட்டைக்குள் 1050 பேர் இறந்து கிடந்தனர்.
பிடிபட்ட வீரர்களைக் கோட்டையில் வெளிப்புறத்தில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டார் அக்னியு.
கேணல் ஜேம்ஸ் வெல்ஸ் வந்து அவரைச் சந்தித்தார். 'சார் உங்களுக்குச் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன். தூத்துக்குடியைக் கைப்பற்றியபோது பிரிட்டிஷ் அதிகாரிகளை குடும்பத்தோடு வெளியேற ஊமைத்துரை அனுமதித்தார். அதை விடவும் மெக்காலே தோற்று பாளையங்கோட்டைக்குத் திரும்ப முயன்றபோது அவரது படையை ஊமைத்துரை நிர்மூலகாக்கியிருக்கமுடியும் ஆனால் திரும்பிச் செல்ல அனுமதித்தார்!'
அக்னியு சுருட்டைப் புகைத்தவாறு மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
'காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு இளைஞனின் சாகசங்கள் பிரமிப்பூட்டுகின்றன. அவர் சைகைகளை தேவ கட்டளைகளாக ஏற்று எல்லோரும் கீழ்ப்படிகின்றனர். எல்லாத் தாக்குதல்களிலும் அவர் முன்னால் நின்றிருக்கிறார். தன்னைவிட நூறுமடங்கு வலிமை வாய்ந்த எதிரியைக் கண்டு அவர் அஞவில்லை. அவரது படையின் சக்தியைவிட சாதனைகள் பல மடங்கு பெரியவை.'
சுருட்டை வாயிலிருந்து எடுத்த அக்னியு சொன்னார் 'தெரியும். அவனைப் பற்றி அனைத்தையும் அறிந்த பிறகே இங்கே வந்தேன். நான் அறிந்த அபாரமான போர்வீரர்கள் வெகுசிலரில் இவன் ஒருவன். அவனை மிகவும் மதிக்கிறேன். என்ன செய்வது? அவனை எதிர்த்துப் போரிட அல்லவா வந்திருக்கிறோம்.'
அக்னியுவின் ஆணைப்படி பிடிபட்ட வீரர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கே தப்பியோடிய ஊமைத்துரையின் கூட்டத்தை பிரிட்டிஷ் வீரர்கள் துரத்திச் சென்றனர். கடும் சண்டை நடந்தது. மீண்டும் அவர்கள் சிதறி ஓட, பிரிட்டிஷ் வீரர்கள் கோட்டைக்கே திரும்பிவிட்டனர். அருகிலுள்ள கிராமத்திலிருந்த பெண்கள் காயம்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்தக் களத்திற்கு வந்தனர். அதிலொருவன் உயிர் பிரியும் தருணத்திலும் அருகில் விழுந்து கிடந்த ஊமைத்துரையைக் காட்டி 'சாமிய எப்படியாவது காப்பாத்துங்க' என்று சொன்னான்.
குமாரசாமி நாயக்கன் கட்டபொம்முவிற்கும் செவத்தய்யாவிற்கும் தம்பி; கும்பினியார்க்கு ஊமீ, டம்ப்பி; முகமதியர்களுக்கு மூங்கா; மக்களுக்கு ஊமைத்துரை, துரைசிங்கம்; வீரர்களுக்கு சாமி!
-------------------------------------------------------------------------------------
வெள்ளை மருதுவும் அவர் தம்பி சின்னமருதுவும் சிவகங்கைப் பகுதிகளில் கும்பினிக்கு எதிராக வீரர்களைத் திரட்டினர். காளையர் கோவில் தான் மையத்தளமாக இருந்தது அந்தக் கோவில்தான் நிலைக்களன். அது மேலதிக உத்வேகத்தை அளித்தது. தெற்கிலிருந்து விரட்டப்பட்டுப் போனார்களுக்கு அதும், விருபாஷி பாளையமும் தான் புகலிடங்களாக இருந்தன. கமுதியிலிருந்து ஊமைத்துரையை சின்னமருது சிறுவயலுக்கு அழைத்துப் போனார். அவர் வீட்டுப் பெண்கள் அவன் உடல் தேறுவதற்காகப் பொங்கல் வைத்துப் படயலிட்டு சாமிகளை வேண்டினர். அங்குள்ள மறவர்கள் முத்துக் கருப்பத் தேவரையே தங்கள் அரசராக ஏற்றுக்கொண்டிருந்தனர். முதலில் திருப்பத்தூர், நத்தத்திலிருந்து கும்பினி துருப்புகளை விரட்டிவிட்டனர். மேளூர், திருவெள்ளூர் கோட்டைகளை ஆயுத தளவாடங்களோடு கைப்பற்றினர். ஏற்கனவே மழை இல்லாததால் தானியங்களுக்கு பெரும் தட்டுப்பாடாய் இருந்தது. மக்கள் புரட்சியாளர்களுக்கு ஆதரவாய் செயல்பட்டனர். ஆண்கள் பெருவாரியாய் வந்து சேர்ந்தனர். கிழக்குக் கடற்கரைத் துறைகளைக் கைப்பற்றினர். பிறகு இலங்கையிலிருந்து தோணிகளில் தானியங்கள் வந்திறங்கின.
உடல் தேறியதும் ஊமைத்துரை தனது வீரர்களோடு போய் பாளையநாட்டைக் கைப்பற்றினான். மேலூர்க் கள்ளர்கள் நத்தத்திலிருந்து மதுரை வரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓரிரவில் விருபாஷி குப்பள நாயக்கர் தலைமையில் திண்டுக்கல் பாளையக்காரர்கள் அனைவரும் ஊமைத்துரையோடு சேர்ந்து படையோடு மதுரைக் கோட்டையைச் சுற்றி வளைத்தனர். மூன்று நாட்களாக அலங்ககளிலிருந்த பீரங்கிகள் நாலு திசையிலும் சுட்டுக் கொண்டேயிருந்தன. நெருங்கமுடியவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
சின்னமருதுவின் மகன் செவத்தத் தம்பி கடலோரமாக வீரர்களுடன் தஞ்சைப் பகுதியில் நுழைந்தான். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆதியார்குடியைக் கைப்பற்றினர். மாங்குடிக்கான சண்டையில் கேப்டன் வில்லியமும் மருது வீரர்களும் வெற்றி தோல்விகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். கடைசியில் அதுவும் மறவர்களிடம் பிடிபட்டது. தஞ்சைப் பகுதியிலிருந்து கிடைத்த உணவு தானியங்கள் பேருதவியாய் இருந்தன.
----------------------------------------------------------------------
காளையர்கோவிலை நோக்கி பிரிட்டிஷ் படை காட்டுக்குள் நிதானமாக முன்னேறிக் கொண்டிருந்தது. மருதுவின் வீரர்கள் தொடர்ந்து வந்து மோதிக் கொண்டேயிருந்தனர். காட்டுக்குள் எங்கும் ரத்தத் திட்டுகள் கிடந்தன. மேலும் அவர்கள் முன்னேற முடியாமல் ஆகி, பின்பக்கத் தொடர்புகளும் அற்ந்து போயின. அக்னியு சிறுவயலுக்கே திரும்பிவிட்டார். தஞ்சை, புதுக்கோட்டை ராஜாக்களின் உதவியுடன் அறந்தாங்கி, பட்டுக்கோட்டைப் பகுதியிலிருந்த கலகக்காரர்களை கும்பினிப் படை முற்றாக விரட்டிவிட்டது. காரைக்குடி சென்று கொண்டிருந்த மக் லீனின் அணியை மூவாயிரம் பேருடன் ஊமைத்துரை தாக்கினான். அதை முறியடித்து, சிங்கம்புணரி காடுகளிலிருந்த வீரர்களையும் மக்லீன் விரட்டிவிட்டான். மார்ட்டிஸ் ராமநாதபுரத்திலும், எட்டையபுரம் வீரர்கள் உதவியுடன் மெக்காலே அபிராமத்திலும் நடந்த சண்டையில் வென்றனர்.
பல இடங்களிலும் தோற்றுத் திரும்பிய வீரர்கள் காளையர்கோவில் காட்டில் வந்து சேர்ந்தனர். காளையர்கோவிலைத் தாக்கும்முன் அக்னியு ஒரு தந்திரம் செய்தார். ஒய்யத் தேவருக்கு சிவகங்கை அரசராகப் பட்டம் கட்டினார். மருதுவின் மறவர்கள் இரு எதிரணிகளாகப் பிரிய நேர்ந்தது.
காளையர்கோவில் மீது இரண்டாம் முறை தாக்குதல் தொடங்கியது. ஒய்யத் தேவர் உதவியுடன் பிறமலை, மேலூர், நந்திக் கோட்டை தாண்டி ஒக்கூர் வந்தார் அக்னியு. காளையர்கோவிலுக்கு மேற்கிலுள்ள வாணியங்குடி, மூதூர் பிடிபட்டன. செப்டம்பர் 30ல் லெ. கேணல் ஸ்பிரே காளையர்கோவிலை நோக்கிப் போனார். கவனத்தை திசை திருப்ப அக்னியு சிவகங்கைச் சிறிய படையை அனுப்பிவிட்டு, ஸ்பிரேக்கு உதவ வேறு வழியில் ஷெப்பர்டின் அணியை அனுப்பினார்.
அக்டோபர் 1ல் அக்னியுவும் இன்னிஸும் மேற்கிலிருந்து தாக்கினர். மூன்று புறமிருந்தும் காளையர்கோவில் நெருக்கப்பட்டது காட்டுக்குள்ளிருந்த வீரர்கள் கிடைத்த வழிகளில் தப்பியோடினர். மூன்றாள் உயர மதில்களுடன் கூடிய கம்பீரமான கண்ணத்தாள் கோவிலினுள் கும்பினிப் படை புகுந்தது.
மருது சகோதரர்கள் சிங்கம்புணரி காடுகளுக்குப் போய்விட்டனர்.
----------------------------------------------------------------------------------
ஊமைத்துரையும், செவத்தய்யாவும் திண்டுகல்லுக்கு தப்பிச் சென்றனர். விருபாஷிக்கு ஊமைத்துரை சென்று சேர்ந்த நாலே நாளில் பொதுமக்களில் 5000 பேர் திரண்டு அவனோடு சேர்ந்தனர். விருபாஷி செல்லும் வழியெல்லாம் தடுப்பரண்களை ஏற்படுத்தினர். விருபாஷியை நோக்கிப்போன மேஜர் ஜோன்ஸ் தோற்றுத் திரும்பினர்.
உடனடியாக இந்த எழுச்சியைத் தடுக்க நினைத்தார் அக்னியு. அக்டோபர் 12ல் இன்னிஸ் தலைமையில் பெரும்படை சென்றது. அவர் அந்நிலப்பரப்பையும் சூழலையும் ஏற்கனவே நன்கறிந்தவர் தடையரண்களை மீறி பிரிட்டிஷார் விருபாஷி பாளையத்தில் நுழைந்தனர்.
முதலில் சந்திரப்பட்டியில் ஊமைத்துரை எதிர்கொண்டு தாக்கினான். தோற்று விருபாஷிக்குப் பின்வாங்கினான். பிரிட்டிஷ் சிறு பீரங்கிகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் முன்னே தாக்குப் பிடிக்க முடியாமல் விருபாஷி விழுந்தது. ஊமைத்துரையின் வீரர்கள் திண்டுக்கல் சமவெளிக்குத் தப்பியோடினர்.
கூளப்ப நாயக்கன் முதலான பாளையக்காரர்கள் அங்கிருந்து தமது ஊர்களுக்குத் திரும்பினர். ஊமைத்துரை அய்யம்பாளையம் மலைமேல் ஏறி ஒளிந்து கொள்ளும் நோக்குடன் தனது நண்பர்களோடு தெற்கே ஓடிக் கொண்டிருந்தான். மேஜர் பர்ரோஸ் ஓடுகிறவர்களைத் தம் குதிரைப் படையுடன் துரத்தினார். சோறுதண்ணி இல்லாமல் வீரர்கள் மூன்று நாட்களாக 51மைல் தூரம் ஓடியிருந்தனர். இன்னும் சற்று தூரத்தில்தான் அந்த மலை இருந்தது. வத்தலகுண்டை எட்டும் முன்னே பலர் களைத்துச் சுருண்டு விழுந்தனர்.
இவ்வளவு சண்டைகளிலும் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிய ஊமைத்துரை இப்போது 65 வீரர்களுடன் சிக்கிவிட்டான்.
சிங்கம்புணரி காடுகளில் பிடிபட்ட மருது சகோதரர்கள் 24.10.1801ல் திருப்பத்தூர் கோட்டையில் கொல்லப்பட்டனர்.
ஊமைத்துரையும் செவத்தையாவும் மற்ற 65 பேரும் 16.11.1801ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தலை துண்டிக்கப்பட்டனர். இடிக்கப்பட்ட கோட்டை மேட்டில் ஆமணக்கு விதைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆமணக்கு விளைச்சல் எவ்வளவு என்ற கணக்கு கும்பனிக்கு வந்து சேர்ந்தது. கணக்கு எழுதி அனுப்பியது எட்டையபுரம். ஆனால் பிரிட்டிஷ் கௌரவத்திற்குப் பங்கம் விளைவித்த பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கும்பினி ஆவணங்களிலிருந்து அகற்றப்பட்டது.
---------------------------------------------------------------------------------------
காவல் கோட்டம்.
In
ஊமைத்துரை
Posted on Monday, January 07, 2019
ஊமைத்துரை
Mohandoss
Monday, January 07, 2019
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
0 comments:
Post a Comment