In இருத்தலியநவீனம்

கிழிந்து தொங்கும் முகமூடியின் கண்ணீர்த்துளிகள்

காதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனனின் திறமையை பரிகசிக்கும் விதமாய் யாரோ ஒருவனின் அம்பால் அனுமதியோடோ அனுமதியில்லாமலோ கிழித்தெறியப்பட்ட காற்றை சுவாசத்திற்கு ஒப்புக்கொள்ளும் மனநிலையுடனும் இருந்த என்னை என் மனைவி மணமான சில மாதங்களுக்குள் புரிந்து கொண்டிருந்தால் தான் ஆச்சர்யமே. கேள்விகளைத் தொக்கிக்கூட அவளுடைய புரிதல்கள் நிற்கலாம், எல்லாம் தெரிந்துமா என்ற கேள்விகளுக்கான பதில்களை நானே இன்னும் தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவளுக்கான விடையின் தொலைவு எல்லைகளைக் கடந்திருந்ததில் ஆச்சர்யமெதுவில்லை. புரிதல்களுக்குப் பிறகான உறவுதான் அவளுக்கான நிம்மதி வெளியை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தாலும் உடலுக்கான வேட்கை தனக்கான வெளியில் எகிறிக்குதித்து அடங்கி நிற்க, பின்னிரவின் பொல்லாத கணத்தில் உடல்வலியுடனோ இல்லாமலோ எழுதிக்கொண்டேயிருக்கும் புத்தகமாக நீளும் மனதின் வலியை ஒரு பக்கமாவது கிழித்துப்போட முயல்வது போல அவள் அழும் சப்தம் செவிப்பறையை அறைந்தாலும் என் விழிப்பால் அவளடையப்போகும் பீதி கண்திறக்கவிடாமல் செய்கிறது.

ரகசியங்களைத் தெரிந்துகொண்ட பிறகும் தெரியாதது போல் நடிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, போட்டு உடைத்து எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டு வெளியேறிவிடுவதுண்டு. பிரச்சனைகளைக் கண்டு தெரிக்காமல் வாழப்பழகு என்றும் வாழ்தலும் காலமும் பிரச்சனையை இல்லாமல் செய்யும் என்று பிரச்சனைகளின் பாரத்தால் உறக்கம் தொலைத்த பௌர்னமி இரவொன்றில் தெருவோரச் சித்தர் சொன்ன இரண்டு மாதத்தில் நான் பிரச்சனைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். திருமணம் என்ற கோட்டால் இணைந்த இரு புள்ளிகளில் ஒரு புள்ளி மற்றதிலிருந்துவிலகி கோட்டின் நீளத்தை அதிகரிக்கச்செய்த முயற்சிகளைத் என் மறுமுனையை நோக்கிய நகர்தலால் தடுமாறச் செய்துகொண்டிருந்தேன். அதற்கு பௌர்னமிச் சித்தர் சொன்ன பொன்மொழிகள் மட்டுமில்லாமல் கோடு மறைந்து இரண்டு புள்ளிகளும் ஒன்றாய் ஆகமுடியாத காரணமும் புரிந்ததால் தான். மற்ற புள்ளியின் தடுமாற்றமே ஒன்றாவதால் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயமே, ஆனால் சுயம் அதுவாகயில்லாமல் போலியான ஒன்றைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது.

மனமொருமிக்காமல் ஒத்திசைவில்லாமல் நிகழ்ந்து கொண்டிருந்த இரவு நேரத்து நாடகம் ஓரங்க நாடகமாகவேத் தொடர என் பக்கத்து வருத்தத்தைவிடவும், அவள் பக்கத்து வேதனை புரிந்ததால் நான் மறுத்தளிக்க, அவள் கழிவிரக்கத்தால் சுமூகமாய் நகர்ந்துகொண்டிருந்த பகல் பொழுதுகள் மற்றதையின் வேதனையையும் சேர்த்து கூட்டிக்கொண்டிருந்தாள். ஏதேதோ இல்லாத காரணங்களைக் காட்டி நாடகத்துக்கான ஒத்திகையில் அவள் மீண்டும் இறங்க நான் அவள் சொல்லாத காரணமும் தெரிந்தவன் என்ற முறையில் அரிதாரம் தாங்கிய அகோர முகத்தை வெறுத்தாலும் சமாதானத்திற்கான வெளி என்பக்கத்தில் திறந்தேயிருந்தது, எப்பொழுதும் திறந்தேயிருக்கவேண்டும் என்ற ஆவலுடன். திரையரங்குகளின் கனத்த மௌனத்தில் அலைந்து செல்லும் ஒளி ஒலியினூடாகவும், கடற்கரையில் நுரைத்துக் கரையும் அலைகளினூடாகவும், உணவகத்தில் 'என்ன சாப்பிடுற' என்பன போன்ற மிதமான கேள்விகளினூடாகவும் அவள் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ளும் ஒவ்வொரு முறையும் அவளுடைய தோல்வியை படம்பிடித்து என்னுள் மறைத்துக் கொண்டேன்.

"காதலைப் பற்றி என்ன நினைக்கிற சரோ?"

அவளைச் சுற்றி எப்பொழுதும் வண்ணத்துப்பூச்சிகளாய் கேள்விகள் பறப்பதாய் நான் கற்பனை செய்துகொண்டிருந்தேன். அவளாய் விருப்பப்பட்டே அனுமதித்ததாயும் விடைகளத்தேடியே அவள் வண்ணத்துப்பூச்சிகளுடனான உறவை தொடங்கினாள் என்றும் பட்டது எனக்கு. எங்கள் மனவாழ்வின் தொடக்கத்திலிருந்தே அவள் எதற்கான விடையையோ தேடிக்கொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. ஆனால் விடைதெரியாத, ஒப்புக்கொள்ளமுடியாத கேள்விகள் புதிதுபுதியாய் வண்ணத்துப்பூச்சிகளாய் உருவாக்கிக்கொண்டிருந்தன என்று நினைத்தேன். எனக்குப் வண்ணத்துப்பூச்சிகளாய்த் தெரிவது அவளுக்கு கொடுக்குளுடன் கூடிய குளவிகளாய் இருந்திருக்கலாம், நான் இந்தக் கேள்வி குளவியாய் இருக்குமென்று உணர்ந்தே கேட்டேன். பதில் சொல்லும் முகமாய் அவளுடைய பரிமாணங்களைத் தரிசிக்கும் ஆவலுடன். பலசமயங்களில் நான் எதிர்பார்க்கும் கேட்டால் சொல்லிவிடலாம் மனநிலையை உணர்ந்தவன் என்பதால் அவளுக்கு ஒரு அத்தகைய வாய்ப்பளிக்கும் சூழலை உருவாக்கிக்கொண்டேன்.

கோயில் எனக்கான சூழலை இயல்பாய் உருவாக்கிக்கொடுத்தது, அவள் அன்று மனக்குழப்பங்களில் மூழ்காமல் அமைதியாய் இருந்தாள். பெரும்பாலும் நிறைய பேருக்கு கோயில் கொடுக்கும் அமைதி எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவளின் அமைதி எனக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது, சூழ்நிலையை அசௌகரியமாக்க விரும்பாவிட்டாலும் இதைவிட்டால் சந்தர்ப்பம் இப்படிப்பட்டாதாய் அமையாது என்று நினைத்தவனாய் கேட்டேன்.

முதலில் பதில் சொல்லவில்லை, நிமிர்ந்து பார்த்தவள் மென்மையாய்ச் சிரித்தாள். அவள் சிரித்து எப்பொழுது பார்த்தேன் நினைவில் இல்லை. பின்னர் குனிந்து கொண்டாள் சாய்ந்திருந்த தூணை சுரண்டியபடி,

"ஏன் கேக்குறீங்க!" கேள்விக்கான மறுகேள்விதான் என்றாலும் ஒரு உரையாடலைத் தொடங்கிவிட்ட சந்தோஷம் எனக்கு சட்டென்று என் கேள்விக்கான பதிலாய் தன்னுடைய உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டும் என்ற பேராசையை ஓரங்கட்டி வைத்தவனாய், "இல்லை சும்மாதான்!" என்றவாரு அவள் மௌனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். வெகு அதிசயமாய் அந்தக் கோவில் பற்றியும் கோவிலின் சிறப்புகள் பற்றியும் சொன்னாள், அவளுடைய லாவகம் ஆச்சர்யமாகயிருந்தது மூடநம்பிக்கையில்லாமல் அவள் கோர்த்தாள், மூடநம்பிக்கையாக அவள் நினைக்கும் இடங்களில் அவளுடைய சொற்பிரயோகம் அருமையாக இருந்தது. அவள் இப்படியே எல்லா சமயங்களிலும் என்னிடம் சகஜமாகயிருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவளால் எப்படி என்னை வெகு எளிதாய் வசப்படுத்திவிடமுடிகிறது என்ற கேள்விக்கு, அவள் அவளுக்கு உண்மையாய் இருப்பதால் தான் என்ற பதிலே என்னால் ஒப்புக்கொள்ள முடிந்த ஒன்றாயிருந்தது.

கோயிலை விட்டு வெளியில் வந்து பூ வாங்கும் சமயத்திலேயே அவள் தன் கூட்டுக்குள் சென்றுவிட்டதாகப் பட்டதெனக்கு. மல்லிப்பூ பிடிக்கவில்லையென்றால் கனகாம்பரம் வாங்கி வைத்துக் கொள்ளலாம், ஆனால் நினைவில் இருக்கும் அழிக்கமுடியாத நினைவுகளை மீண்டும் கிளம்பும் வன்மை கொண்டதாய் நீளும் ஒன்றாய் மல்லிப்பூ இருக்கலாம் என்று நினைத்தேன் நான். நான்கு சுவர்களுக்குள் அவள் உணர்வதாய் நினைக்கும் சுயத்தை வெளியில் அவள் இழப்பதைப் போல் காட்டிக்கொண்டதில்லை, வெளியில் அவளுடைய இயல்பான மனநிலை ஆச்சர்யமளிப்பதாயிருந்தாலும் என் பொருட்டு செய்துகொண்ட சமாதனமாய் நான் புரிந்துகொண்டேன்.

"நான் இங்க கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்னு இருக்கேன் உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே?"

வற்புறுத்தல்கள் சீண்டத்தொடங்கிய பொழுதில், மனைவியைக் காரணம் காட்டி தப்பிக்க மனம் வராத நெருக்கமுடியை உறவினர் வீட்டில் அவள் காதில் கிசுகிசுக்க, அப்பொழுதும் கோயில் பார்த்த அனுபவித்த ரசித்த அதே புன்னகை. தோளைக் குலுக்கியபடி "பிரச்சனையில்லை" என்று சொன்னவளின் கண்களின் உண்மையிலேயே பயம் இல்லை.

அவள் என்னிடம் தைரியமாகப்பேச தன் மனதில் இருப்பதைக் கொட்டிக்கவிழ்க்க இது போன்ற ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருந்தாள் என்று நினைக்காவிட்டாலும், அன்று அவள் தன் ரகசியக்கதவுகளை திறந்துகாட்டிவிட முடிவு செய்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது. அன்றை விட கோப்பைகள் அதிகமான நாட்களில் உணராத போதை அன்று வெகுவிரைவாக வந்தது, என் கட்டுப்பாட்டில் இருந்து சுயம் வெளியில் குதித்ததை உணரமுடிந்தாலும் அடக்கமுடியவில்லை. பழக்கம் நிலை தடுமாறாமல் இருக்க உதவினாலும் மனம் வெகுவாகத் தடுமாறிக்கொண்டிருந்தது. பாதிவழியில் காரை நிறுத்தி அவள் கொடுத்த சந்தர்ப்பம் போதுமாயிருந்தது என்னைத் திறந்துகாட்ட, சில வரிகள் அந்தத் தேவையைப் பூர்த்திசெய்தன.

"நீயும் ரமேஷும் காதலிச்சது எல்லாம் எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு முன் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்று கொடுத்த 50 பக்க ரிப்போர்ட்டில் பார்த்திருக்கேன்"

அதற்கு மேல் சொல்ல எனக்கு எதுவுமில்லை, அவளுடைய ஆச்சர்யத்தை வெளிகாட்டாமல் இருக்க அவள் முயற்சி செய்யவில்லை. எனக்கு பதிலொன்றும் சொல்லாமல் வெகுநேரம் காரில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தாள். வேதனையோ வருத்தமோ துக்கமோ நான் அவள் பக்கம் என்று சொல்ல அருகில் சென்று கட்டிக்கொண்ட மறுகணம் இருவரும் கோடானது அந்த இருட்டில் கரைந்து புள்ளியாய் மாறியதாய் உணர்ந்தேன் நான். அத்தனை நாளாய் பேசாமல் வைத்திருந்த அத்தனையையும் பேசிக் களைத்தது அவள் உதடு, எத்தனை சுலபமாய் முடிந்திருக்ககூடிய ஒன்றை இழுத்தடித்ததற்காய் மனம் குழம்பியது. சட்டென்று வெளியைக் குளிராக்கிய காற்றொன்று அடித்துச் சென்ற கண்ணீர்த்துளிகள் நான்கு இருளில் காணாமல் போனது.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

Popular Posts