இந்நீண்ட இடைக்காலத்தில் இப்பெரிய ஆட்சிகளில் ஏற்பட்ட மாறுதல்களைப்பற்றிக் கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியந்திலிருந்தும் ஒருவாறு அறிந்து கொள்கிறோம். சோழநாட்டின் வீழ்ச்சிக்கு பிறகு வடக்கிழும் தெற்கிலும் பல்லவர்களும், பாண்டியர்களும் வலுப்பெற்றப்போது, சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் வெற்றிபெற்ற தம் பகைவரிடமும் பணி புரிந்ததோடு அவர்களது உரிமைகளையும் பெற்று வந்தனர் இத்தகைய நிகழ்ச்சி, இந்திய வரலாற்றில் சர்வசாதாரணமாக ஏற்பட்ட ஒன்றாகும்.
ராஷ்டிரகூடரின் எழுச்சியின் போது மேளைச்சாளுக்கியரும், இராஜராஜன் காலத்துக்கும் வேங்கியைக் கைப்பற்றிய முதலாம் குலோத்துங்கன் சோழ அரியணையில் ஏறுவதற்குமிடையே கீழைச் சாளுக்கியரும், பாண்டியரும், பல்லவர்களும், கங்கர்களும், பாணர்களும், விஜயாலயன் ஆட்சிக்குப்பின் தம் பகைவரிடம் பணிபுரிந்ததற்கான பல சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒரு சிலவாகும்.
களப்பிரர்கள்
நாட்டில் பல அரசியல் மாறுதல்கலூக்குக் காரணமாக இருந்த தெளிவற்ற ஒரு குலத்தைச் சார்ந்த களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடுத்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.
சோழர்களின் வீழ்ச்சி
அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு (எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூறஇயலாது), களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளஇல் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணத்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.
தமிழ்நாட்டில் சோழர்கள்
இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்பற்றி நம்மால் அறிய முடியவில்லை, இக்காலத்தைச்சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவேரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்று முக்கியமுள்ள செய்திகளைத்தரவில்லை.
இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொள்வதை அறிகிறோம். இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர்கள் தங்களுக்கென்று ரேனாட்டுப் பகுதியில் இரண்டாம் புகலிடத்தைத்தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப்பாடுபட்டனர்.
விஜயாலயனின் எழுச்சி முதலாம் ஆதித்தன் (கி.பி. 850 - 907)
திருப்புறம்பயம்
தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.
இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப்போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.
வரகுண மன்னன் காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது. "புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்" என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.
விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன் கங்க மன்னன் முதலாம் பிரதிவீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.
பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவிதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.
இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870 யிலிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது என்றும் இதிலிருந்து அறியலாம்.
முதலாம் ஆதித்தன்
சஹுயாத்திரி மலைத்தொடரிலிருந்து பரந்த கடல்வரையுள்ள பகுதிகளில், காவிரியாற்றின் இரு கரைகளிலும், தன் வெற்றிச் சின்னங்களாகச் சிவபெருமானுக்கு வரிசை வரிசையாக வானோக்கி பல கோயில்களை எடுப்பித்தான் என்று ஆதித்தனைப்பற்றி (கி.பி. 871 - 907) அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது.
தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களஇன் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.
புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும், இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கை மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான்.
தஞ்சாவூர்-பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது.
இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.
மறைவு
சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.
இத்துடன் விஜயாலயன் மற்றும் முதலாம் ஆதித்தனின் வரலாறு முடிகிறது. அடுத்து முதலாம் பராந்தகனைப்பற்றிப் பார்க்கலாம்.