Showing posts with label சோழர்_வரலாறு. Show all posts
Showing posts with label சோழர்_வரலாறு. Show all posts

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு நட்சத்திரம்

சோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்

கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்டியன் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தான். சேவூர்ப் போரில் பராந்தகன் தன் பகைவர்களின் யானைகளை வெட்டிவீழ்த்தி, இரத்த ஆறு ஒடச்செய்தான் என்றும் அவனது மகன் ஆதித்தன் சிறுவனாய் இருந்தும் சிங்கம், யானையுடன் போரிடுவதுபோல், வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன.

புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன்

இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கூறுகின்றனர். இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது 'வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது. "

பாண்டிய தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசர் என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்த்ர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத்தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிறது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதிய ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை நாம் தெரிவித்ததின் முடிவுகளைச் சுருங்கச்சொல்லுவோம்.

இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.

பரந்தூர்க் கல்வெட்டு

பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.

அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.

எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.

ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

நாம் இதுவரை ஏற்ற வாதங்களுடன் மற்றொரு முடிவான வளத்தையும் காண வேண்டியுள்ளது. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969/0 உத்தம சோழ அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 - 5ல் தொடங்கியிருக்க வேண்டும்.

இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.

இரண்டாம் ஆதித்தன் கொலை

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூட்ம் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்)" கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

நாம் முன்பே இராஜகேசரி, பரகேசரி பிரச்சனைகளைப்பற்றி பார்த்துள்ளோம். அதைப்போலவே, சுந்தர சோழனால் இரளவரசுப்பட்டம் அளிக்கப்ப்ட்ட இரண்டாம் ஆதித்தன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே மரணம் அடையவே, இராஜகேசர் சுந்தரசோழன் இறந்தபிறகு, அரியணையேறிய மன்னன் நியதிப்படி ஒரு பரகேசரியாகவே ஆட்சி செய்தான்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு

சோழ வரலாறு 2ம் பாகம் - முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர்

தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள்

கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம்

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர்

இதுவும் சோழ வரலாற்றில் ஒரு முக்கயமான போர் என்பதால் விரிவாகப் பார்ப்போம்.

பிரதிவீபதியின் மரணம்

சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இராஜாதித்தன்

திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராஜாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான்.

வாணர், வைதும்பர் ஆகியோருக்கு எதிராகத்தான் கடைப்பிடித்த ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவுகளைப்பற்றி கவலையுற்ற பராந்தகன், இரண்டாம் பிரதிவீபதியிடம் மட்டும் இந்தப் பொருப்புக்களை ஒப்படைக்காமல் பல எச்சரிக்கை நடவடிக்கைகளை, தானே மேற்கொண்டான். இத்தகைய ஏற்பாடுகள் பல ஆண்டுகளாகதப் பராந்தகனின் நாட்டைப் பாதுகாத்து வந்தது. ஆனால் கி.பி. 949ல் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த படையெடுப்பு தக்கோலத்தில் பெரும்போரில் முடிவுற்றது.

தக்கோலத்தில் மூவடி சோழ இராஜாதித்தனுடன் பொருது அவனைக் கொன்று கன்னரதேவன் வெற்றி கொண்டதாக, ஆதகூர் கல்வெட்டு கூறுகிறது. பூதகனது இந்த வீரச்செயலைப் பாராட்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு வனவாசி 12,000 பெல்வோலோ 300 என்ற பகுதிகளை வழங்கினான். இதை சோழர்களின் சான்றுகளை ஒப்புகின்றன.

இப்போரில் வெற்றி பெற்றாலும் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மறைந்துவிடவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இம்மன்னன் கடும் போர் புரிய வேண்டிய நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் படையெடுப்பால் சோழ நாடு சிறறுண்டது. வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக, பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான் என்பது திண்ணம். சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றது, அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டிய நிலையை அடைந்தது.

பராந்தகன் ஆட்சியின் முடிவு

பராந்தகனது ஆட்சியின் இறுதி ஆண்டுகளைப் பற்றி தஞ்சையை அடுத்துள்ள இடங்களஇலிருந்து கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். இதைக்கொண்டு இம்மன்னன் 48-ம் ஆட்சி ஆண்டு வரை உயிர்வாழ்ந்தான்.

இம்மன்னன் பல மனைவியரை மணந்திருந்தான், இவர்களில் பதினொருவருடைய பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெறுகிறது. இராஜாதித்தனைத்தவிர, பராந்தகனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிந்திகை அல்லது பட்டயங்களில் காண்பது போல அரிஞ்சயன் என்பவராவர். பராந்தகன் சிறந்த சிவ பக்தன் என்று திருவாலங்காட்டுப் பட்டயம் சொல்கிறது. முதலாம் ஆதித்தனால் மேற்கொள்ளப்பட்ட கோயில் எடுப்பிக்கும் பணீ இவனது காலத்தில் சிறந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனுடன் முதலாம் பராந்தகனின் வரலாறு முடிவுறுகிறது. அடுத்து முதலாம் பராந்தகனின் மறைவிலிருந்து (கி.பி. 955) முதலாம் இராஜராஜன் அரியணையேறும் வரையிலான காலத்தைப்பற்றி பார்க்கலாம்(கி.பி. 985).

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு

சோழ வரலாறு 2ம் பாகம் - விஜயாலயன், முதலாம் ஆதித்தன்

சங்ககாலத்திற்குப்பிறகு, ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குக் கடுங்கோன் வழிவந்த பாண்டியர்களும், சிம்மவிஷ்ணு வமிசத்துப் பல்லவர்களும் எவ்வாறு தமிழ்நாட்டைக் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர் என்பது புதிராகவே உள்ளது. இதுபோன்று அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் அதாவது ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயாலயன் ஆட்சிக்கு வரும்வரை சோழ மன்னர்களின் வரலாறு இருள் சூழ்ந்ததாக உள்ளது.

இந்நீண்ட இடைக்காலத்தில் இப்பெரிய ஆட்சிகளில் ஏற்பட்ட மாறுதல்களைப்பற்றிக் கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியந்திலிருந்தும் ஒருவாறு அறிந்து கொள்கிறோம். சோழநாட்டின் வீழ்ச்சிக்கு பிறகு வடக்கிழும் தெற்கிலும் பல்லவர்களும், பாண்டியர்களும் வலுப்பெற்றப்போது, சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் வெற்றிபெற்ற தம் பகைவரிடமும் பணி புரிந்ததோடு அவர்களது உரிமைகளையும் பெற்று வந்தனர் இத்தகைய நிகழ்ச்சி, இந்திய வரலாற்றில் சர்வசாதாரணமாக ஏற்பட்ட ஒன்றாகும்.

ராஷ்டிரகூடரின் எழுச்சியின் போது மேளைச்சாளுக்கியரும், இராஜராஜன் காலத்துக்கும் வேங்கியைக் கைப்பற்றிய முதலாம் குலோத்துங்கன் சோழ அரியணையில் ஏறுவதற்குமிடையே கீழைச் சாளுக்கியரும், பாண்டியரும், பல்லவர்களும், கங்கர்களும், பாணர்களும், விஜயாலயன் ஆட்சிக்குப்பின் தம் பகைவரிடம் பணிபுரிந்ததற்கான பல சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒரு சிலவாகும்.

களப்பிரர்கள்

நாட்டில் பல அரசியல் மாறுதல்கலூக்குக் காரணமாக இருந்த தெளிவற்ற ஒரு குலத்தைச் சார்ந்த களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடுத்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.

இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

சோழர்களின் வீழ்ச்சி

அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு (எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூறஇயலாது), களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளஇல் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணத்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.

தமிழ்நாட்டில் சோழர்கள்

இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்பற்றி நம்மால் அறிய முடியவில்லை, இக்காலத்தைச்சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவேரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்று முக்கியமுள்ள செய்திகளைத்தரவில்லை.

இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொள்வதை அறிகிறோம். இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர்கள் தங்களுக்கென்று ரேனாட்டுப் பகுதியில் இரண்டாம் புகலிடத்தைத்தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப்பாடுபட்டனர்.

விஜயாலயனின் எழுச்சி முதலாம் ஆதித்தன் (கி.பி. 850 - 907)

திருப்புறம்பயம்

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப்போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன் காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது. "புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்" என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன் கங்க மன்னன் முதலாம் பிரதிவீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவிதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870 யிலிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது என்றும் இதிலிருந்து அறியலாம்.

முதலாம் ஆதித்தன்

சஹுயாத்திரி மலைத்தொடரிலிருந்து பரந்த கடல்வரையுள்ள பகுதிகளில், காவிரியாற்றின் இரு கரைகளிலும், தன் வெற்றிச் சின்னங்களாகச் சிவபெருமானுக்கு வரிசை வரிசையாக வானோக்கி பல கோயில்களை எடுப்பித்தான் என்று ஆதித்தனைப்பற்றி (கி.பி. 871 - 907) அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது.

தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களஇன் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும், இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கை மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான்.

தஞ்சாவூர்-பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது.

இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

மறைவு

சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.


இத்துடன் விஜயாலயன் மற்றும் முதலாம் ஆதித்தனின் வரலாறு முடிகிறது. அடுத்து முதலாம் பராந்தகனைப்பற்றிப் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சோழர் சோழர் வரலாறு சோழர்_வரலாறு

சோழ வரலாறு முதல் பாகம் தொடர்ச்சி - கிள்ளி & Co.

நலங்கிள்ளி

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளiனுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப்பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. (புறம். 73)

நெடுங்கிள்ளி

நலங்கிள்ளிக்கு எதிராகப் போர் புரிந்த நெடுங்கிள்ளியைப்பற்றி,இவ்விருவரையும் சமாதானப்படுத்த முயன்று கோவூர்க்கிழார் பாடிய இரு பாடல்களில் காண்கிறோம். உறையூரை நலங்கிள்ளி, முற்றுகையிட்டு அங்கு நெடுங்கிள்ளியை சிறை வைத்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது. கீழ்க்காணும் இப்பாடல் இம்முற்றுகையின் விவரங்களை நமக்குப்படம் பிடித்துக் காட்டுகின்றது.

உறையூரில் கோட்டைக்கட்டி ஆளும் நெடுங்கிள்ளியே, உன் கோட்டையை நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நீயோ அதைப் பொருட்படுத்தாமல் உன்னுடைய கோட்டைக்குள் கவலையின்றி இருக்கிறாய். இது கோழையின் செயல், வீர அரசர்களுக்கு ஏற்க்குமா? ஒன்று கோட்டையை விட்டு வெளியே வந்து அவனுடன் போரிடுக, அல்லது அவனுடன் சமாதான உடன்பாட்டைக் காண்க, இரண்டும் கெட்டான் நிலையில், மக்கள் துன்பப்பட்டுகிறார்கள். யானைகள் உணவின்றி தவிக்கின்றன. பெண்டு பிள்ளைகள், குழந்தைகள் எல்லாம் கூடப்பட்டினியால் தவிக்கின்றனர். உன் ஆட்சிக்கு இதெல்லாம் இழுக்கு அல்லவா? நீயாகிலும் ஆட்சி செய், அல்லது அவனையாகிலும் ஆளவிடு. (புறம். 44)

நலங்கிள்ளியின் பகுதியிலிருந்து உறையூருக்குள் வந்த இளந்தத்தன் என்ற ஒரு புலவரை ஒற்றர் எனக்கருதி, அவரைத் தூக்கிலிட இவன் உத்தரவிட்டான். ஆனால் அங்கு இருந்த கோவூர் கிழாரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இது சங்க கால புலவர்களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கிறது.

இளந்தத்தன் என்ற புலவர், நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்ற பிறகு, நெடுங்கிள்ளியிடம் பரிசல் பெற வருகிறார். நலங்கிள்ளியிடமிருந்து வருவதால் புலவர் ஒற்றராக இருக்கலாம் என்று அச்சப்படுகிறான் நெடுங்கிள்ளி. ஐந்தாம் படைப் பேர்வழிகளைப்போல அவரைக் கொன்றுவிடவும் முடிவு செய்கிறான். இது தகுமோ? புலவர் ஒற்றர் அல்லர், அவர்கள் வறுமையால் வாடுபவர்கள், பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகள் போல, வள்ளல்களைச் தேடிச்செல்வது அவர்களுடைய இயல்பு. பொருள்பெற்று, சுற்றத்தை வாழ வைக்க வேண்டியது புலவர் கடமை. அவர்கள் ஒரு நாளும் பிறருக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். தங்களை இகழ்ந்தார் நாணும்படி நடந்து கொள்வர். மண்ணை ஆளும் அரசர் போல அவர்களும் தலைமையே விரும்புவர்.

கிள்ளிவளவன்

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த கோப்பெருஞ்சோழன் இக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

பெருங்கிள்ளி

சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.


தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க. (புறம். 367)

பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

கோச்செங்கணான்

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற யுத்தத்தைப்பற்றி கொடுரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

இத்துடன் கிள்ளி & Co.ன் வரலாறு முடிகிறது. இனி சோழர்களின் பொற்காலத்தை தொடங்கி வைத்த விஜயாலய மன்னன் பற்றி அடுத்து பாரக்கலாம்...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு

சோழ வரலாறு முதல் பாகம் - கரிகாலன்

காவேரி

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களஇன் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களஇலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.


சோழர்கள் காலம்

தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாக்கம் நிறைந்த காலப்பகுதி சோழர் காலமாகும். அக்காலத்தில் முதன் முதலாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. புதிய சூழ்நிலைகள் தோன்றியபோது ஆட்சிமுறைச் சிக்கல்களைச் சமாளிக்கவும் தீர்க்கவும் சோழர் காலத்தில் அக்கறையுடன் முயற்சியகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் ஆட்சிமுறை, கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளஇல் பிற்காலங்களில் மீண்டும் அடைய இயலாத ஒரு பொற்காலத்தை, ஒர் உயர்வைத் தமிழ்நாடு இக்காலத்தில் பெற்றது. வெளிநாட்டு வாணிகம், கடலக வாழ்வின் செயல்முறைகள் ஆகியவற்றைப்போல, முன்சொன்ன துறைகளிலும் ஏற்கனவே பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பெற்ற இயக்கங்கள், சோழர் காலத்தில் முழுமை பெற்றன.

சோழர் என்னும் பெயர்

சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.

இலச்சினைச் சின்னம்

சோழர்களின் இலச்சினை அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களஇல் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை.

பண்டைய இலக்கியங்களின் தன்மை

சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பண்டைய சோழர்களைப்பற்றித் தெளிவாக அறிய முடிகிறது. இவ்விலக்கயங்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதற்சில நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன என்பது பொதுவாக எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விலக்கியங்களின் கால வரையறையை இவற்றில் கிடைக்கும் குறிப்புக்களைக் கொண்டு அறுதியிட்டுக் கூறஇயலவில்லை. இதுவே இக்காலத்தின் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதத்தடையாக உள்ளது. அரசர்கள், இளவரசர்கள் ஆகியோரின் பெயர்களும், இவர்களுடைய புகழ்பாடிய புலவர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கின்றன. விஜயாலயச் சோழர்களின் காலம் உறுதியாக்கப்பட்ட பிறகு, இலக்கியத்தின் மெய்யான இயல்பும் உறுதியும் குலைந்து, அரண்மனைகளில் வீற்றிருக்கும் தனி மனிதர்களின் புகழ்பாடும் பாக்களாக அது குறைந்துவிடுகிறது.

இருபெரும் மன்னர்கள்

சங்க இலக்கியங்கள் கூறும் சோழ மன்னர்களுள் இரு பெருவேந்தர் சிறந்து விளங்குகின்றனர். இவர்களது நினைவு பல பாடலகளிலும், கற்பனை கதைகளிலும் பிற்காலத்தில் போற்றப்படுகிறது. கரிகாலனும் கோச்செங்கணானுமே இவ்விருவர்.

இவ்விருவருள் முன்னால் வாழ்ந்தவர் யார்? இவர்களுக்கிடையே நிலவிய உறவு யாது? இவர்களுக்கும், இவர்கள் காலத்தில் வாழ்ந்த மற்ற மன்னர்களுக்கும், குறுநில மன்னர்களுக்கும் இடையே நிலவிய உறவு எத்தகையது? என்பது போன்ற குறிப்புக்கள் நமக்குத்தெளிவாகக் கிடைக்கவில்லை. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் கரிகாலன் காலத்தின்தான் சிறப்பில் உயர்வு பெற்றதெனில், உறையூரில் ஒன்றும் புகாரிலும் மற்றொன்றுமாகத் திகழ்ந்த சோழகுலத்தின் கிளைகள் இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட உட்பூசல், கரிகாலன் ஆட்சிக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும்.

சங்ககால மன்னர்களைப்பற்றி ஆராயுமுன், சங்க இலக்கியத்தில் இவர்களைப் பற்றி காணப்பெறும் செவிவழிக் கதைகளை பார்ப்போம். பசுவின் கன்றுமீது தேரிணை ஏற்றிக்கொன்ற தன் மகனுக்கு மரணதண்டனை அளித்த மன்னனையும் பருந்திடமிருந்து புறாவினைக் காத்த மன்னனையும் பற்றி இவ்விலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் சிபி, மனு ஆகியோர் பெயர்கள் இவற்றில் கூறப்படவில்லை. புறாக்கதையில் கூறப்படும் மன்னனே செம்பியன் என்பவனாவான். இக்கதைகளுள் கன்றுக்குட்டியும் இளவரசன் ஆகிய கதைகள் சங்கஇலக்கயத்தொகை நூல்களில் காணப்படவில்லை, ஆனால் முதல்முறையாக சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக்காப்பியங்களில் காணப்படுகின்றன.

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

"வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி
கொன்று யானை பிடிபுக்காங்கு"
(பட்டினப்பாலை 220 – 228)

"நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்"
(பட்டினப்பாலை 220 – 228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளஇருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக்கதைகள்

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

சமயம் இறப்பு

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

அடுத்து சோழர் பரம்பரையில் இருந்த கிள்ளி மன்னர்கள், கில்லியில்லை கிள்ளி, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், பெருங்கிள்ளி ஆகியோர் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு

சோழர் வரலாறு

சோழர் வரலாறு

சோழர்களது நீண்ட வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. சங்க இலக்கிய காலம்
2. சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்
3. விஜயாலயனுடைய மரபு புகழ்பெற்று விளங்கிய காலமான கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதலான காலம்(இதில்தான் இராஜராஜன் இராஜேந்திரன் வருவார்கள்)
4. சாளுக்கிய - சோழ குல மன்னன் முதலாம் குலோத்துங்கனும் அவனது பின்னோரும் புகழ்பெற்று விளங்கிய கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலம்.

நாம் இதில் முதல் பகுதியான சங்க இலக்கிய காலத்தை பற்றி முதலில் பார்ப்போம். ஆதாரமாக நான் வைத்து எழுதிக் கொண்டிருப்பது, சோழர்கள், பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியது, தமிழில் மொழிபெயர்த்தது, கே. வி. ராமன்.

Read More

Share Tweet Pin It +1

25 Comments

Popular Posts