In உண்மைக்கதை மாதிரி சுய சொறிதல்

ஒரு சிறு அறிமுகம்

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சியில் தான். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். என்னைப்பற்றிய அறிமுகம் என் கதைகளின் மூலமாக ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் கொஞ்சம் வித்தியாசமாய், என் பதிவுலக ஆரம்பம் வளர்ச்சி என சில வரிகள்.

நான் முதன்முதலில் இணையத்தளத்தை வலம் வர தொடங்கிய பொழுது என் மாமாவெல்லாம் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர் (அதேதான் நிலா, காதல், மற்றும் இன்னபிற - அவர்களை எல்லாம் பார்த்தால் ஆச்சர்யமாய் இருக்கும் இதையெல்லாம் கூட கவிதையாய் இப்படியெல்லாம் எழுதலாமா என்று :-)). அதனால் ஏஞ்சல் பயர் அறிமுகமாகி, அப்புறம் காப்பி பேஸ்ட் டெக்னாலஜிக்களை வைத்து முதன்முதலில் ஒரு இணையத்தளத்தை ஏஞ்சல் பயரில் தொடங்கினேன். பின்னர் ஜியோசிட்டியில் ஒன்று. பிறகுதான் கொஞ்சம் அளவாய் கதை எழுதுகிறேன் பேர்வழியென்று. கீதம்.நெட்டை கொஞ்ச காலம் வாட்டி வதைத்தேன்.

பின்னர் போதும் நீ கீதத்தில் கிழித்தது என்று நானே நினைத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், தான் காலச்சுவட்டில் ஜேபி சாணக்யாவின், ஆண்களின் படித்துறையை படித்து விட்டு, ஜேபி யை கூகுளில் தேட அது பிகேசிவக்குமாரின் வலைபதிவிற்கு சென்றது. இலக்கியத்தேடல் எனக்கு இருந்ததுன்னு இப்பவாவது ஒத்துக்கோங்க மக்களே, வேற வழியேயில்லை. அங்கே போட்டேன் முதல் பின்னூட்டத்தை. ஆனால் அவர் அதை கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அதனால அப்படியே விட்டுற்றதா, நான் யாருன்னு காண்பிக்காம விடறதில்லைன்னு மரத்தடிக்கு போனேன்.

பின்னர் அப்படியே கொஞ்ச நாள் மரத்தடியில் ஓசி காஜி அடித்துவிட்டு, தொடங்கியது தான் என்னுடைய வலைத்தளம். (கேவிஆர், நடராசன், ஆசாத் பாய், மீரான் அண்ணாச்சி போன்றோர் இனிமேல் கதையெல்லாம் எழுதினே கையக்காலை உடைச்சிறுவேன் பயமுறுத்தியதால் தான் நான் மரத்தடியை விட்டு(அந்தப் பழம் புளிக்கும்) வலைத்தளம் தொடங்கினேன் என்பதெல்லாம் வதந்தி என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.)

அப்படியே தமிழ்மணத்திற்கு தொடுப்பு கொடுத்துவிட்டு பார்த்தால், பெரிய பெரிய விஷயமெல்லாம் நடத்துக்கிட்டு இருந்தது தமிழ்மணத்தில். சரி இதையும் ஒரு கை பார்ப்போமுன்னு களத்தில் குதித்தேன். இருக்கவே இருந்தது விகடன்.கொம். வெள்ளிக்கிழமை சுடச்சுட விகடனிலிருந்து மாவெடுத்து தோசையை நான் என் வலைபதிவில் சுட, பின்னூட்டம் வந்துச்சோ இல்லையோ கவுண்டரு எப்பப்பாரு ஆயிரம் பேரு வந்தாங்க வெள்ளிக்கிழமைன்னு சொல்லிக்கிட்டேயிருந்துச்சு.

சரி இப்படியே உட்டால் அப்புறம் சரி வராதுன்னு, நம்ம பழைய கதையை எல்லாம் விட்டேன் இதையும் யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அப்ப முடிவெடுத்தது வாத்தியாரோட பிரம்மாஸ்திரம், ஜல்லியடிக்கிறதுங்கிறதை. கொஞ்ச நாள் நானும் நல்லாத்தான் ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியா இவ்வளவு நாளா நான் புரொஜெக்டில் என்னத்த கிழிக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்ட கம்பெனி, ஒட்டுமொத்தமா ப்ளாக்கரையே பேண்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் மூடிக்கிட்டிருந்த நான் இப்பல்லாம் அதிகமா பொலம்பாம அப்பப்ப புலம்பிக்கிட்டிருக்கேன்.

நானும் கதையெழுதுகிறேன் பேர்வழியென்று எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் கூட என் கல்லூரியை மையமாக வைத்து ஒரு நாவல் மாதிரி எழுதுகிற ஐடியாவெல்லாம் உண்டு. (பைவ் பாய்ண்ட் சம்திங்கின் தாக்கம்) ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தது போல் கிடைக்கும் நேரம் குறைவாக இருப்பதால் அதை மறந்து விட்டேன். (எழுதினாலும் அச்சில் எல்லாம் இப்போதைக்கு கொண்டுவரமாட்டேன் பயப்படாதீர்கள். கல்யாணத்திற்கு வாங்கும் வரதட்சணையை வைத்து தமிழுக்கு என்னாலான உதவியை(அச்சில் கொண்டுவருவது) செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல எங்கம்மாவும் அக்காவும் இதற்கு உடன்பட வேண்டும் (கேவிஆர் - இங்கேயும் இழுத்துட்டேன்)) மற்றபடிக்கு தற்சமயம் நிறைய விஷயங்களை படித்துக்கொண்டும், சில விஷயங்களை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

நான் எழுதியவைகளில் தேவதையின் காதலன் என்ற சிறிய தொடர்கதை எனக்கு பிடித்தமானது. நான் பைவ் பாய்ண்ட் சம்திங் போல் ஒன்று எழுதினால் அது இந்தக் கதையின் விரிவாகத்தான் இருக்கும்.

Thanks: Tamiloviam.com

PS: நான் பிகேஎஸ் பதிவைப்பற்றி எழுதியிருந்ததற்கு பிகேஎஸ் தமிழோவியத்தில் பதிலளித்திருந்தார். பார்க்கவேண்டுமானால் மேலேயுள்ள லிங்கை கிளிக்கவும்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts