ஆனாலும் ஒருதுளி
துளியெனும் ஒரு சொல்லில்
அடங்காதெத் துளியும்
கடலெனும் ஒரு சொல்லில்
கண் விழிப்பதுண்டு பெருங்கடல்
இடைவெளிவிட்டே எழும் சிறு ஓசையில்
என்னைப் பிடியெனச் சொல்லித் தப்பிக்கும்
காந்தமுள்ளில் அலைவுறும் திசைகள்
நடுவில் இருளையும் விளிம்பில் ஒளியையும்
வைத்து விளையாடும் சோதியின் மோனம்
படிகத்துள் சிக்கிய பசும்புல் நுனியில்
உறைந்த ஒரு வெற்றிடம்
பனியோ நிறம்மாறும் சூரியனோ என
யூகிக்க நீளும் இத்தவம்
என்றாலும் ஒற்றைத் துளியை
உச்சரித்துவிட முடியாமல்
ஒவ்வொரு துளியாய் வீணில் கழிகிறது
உடல்கலம் எங்கும் சேமிக்கப்பட்ட
உயிர்த் தளும்பும் மொழி.
மழை பற்றிய செய்தி
மழை பற்றிய செய்தியைக் கேட்டுக் காத்திருந்தோம்
மழை வருகிறதென்ற செய்தி தாமதமாக
வந்த ஒரு நாளின் பின்
மழை வந்தது தாமதமாக
மழை பொழிந்ததின் வரலாறு
மரங்களில் உச்சிக் கிளைகளில்
செடி கொடிகளின் இலைகளில்
கிளைகளில் சற்றே கீழிறங்கி
வேர்களில் மண்ணில் என் உள்ளோடி
வளர்ந்தது வரலாற்றுப் பிரதிகளின் பக்கங்கள்
நீரான எழுத்துக்களால்
மழையைப்பற்றிய செய்திகள்
இவ்வளவுதான்
காரணம் வரலாறு என்பது என்றைக்கும்
தாமதமாக வந்துசேரும்
அறிவுதானே.
பாவனை
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
அசைவற்று மிதந்துகொண்டிருக்கும் நிலாவை
பொத்துக்கொண்டுத் துள்ளியது மீன்
நீருக்கு மேலே ஒரு கண வெட்டவெளி
கலங்கிய நிலா அதிர்வுகளடங்கி
தன்னைச் சரிசெய்து தணிவுகொண்ட
கால அளவில் தன்னை நீந்தி நிரம்பிய மீன்
ஐம்பது மீட்டர் நீளம் கொண்டதாய் மாறி
எனது தூண்டில் முள்ளில் சிக்கிப் புரண்டது
முள் தைத்த நீரின் பரப்போ ஒரு துளி ஆறு
இளம் விடியலில்தான் தெரிந்தது
மணலடர்ந்த ஆற்றில் மிதந்து அமிழ்ந்தது
நிலாவல்ல சிறு கூழாங்கல் என்பது
ஆனால் எனது ஐம்பது மீட்டர் நீள மீனை
ஊர்க்கூடி அதிசயித்ததே
அதுபோதும் எனக்கு.
இவைகள் ரமேஷ்-பிரேமின் பேரழகிகளின் தேசம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள். வெளியீடு மருதா. எனக்கென்னமோ இன்று படித்த இந்த நிலா கவிதை 'நீலவான ஆடைக்குள் முகமறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை' என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் நினைவில் வந்தது.
அந்தக் கவிதை முழுவதுமே பாரதிதாசன் உவமைகளின் பின்னியிருப்பார்.
"வானச்சோலையிலே பூத்த தனிப்பூவோ"
"சொக்கவெள்ளிப் பாற்க்குடமோ"
"அமுத ஊற்றோ"
"காலை வந்த செம்பருதி கடலில் மூழ்கி கனல் மாறி குளிரடைந்த ஒளிப்பிழம்போ."
கல்லூரி படிக்கும் பொழுது எனக்கு தமிழாசிரியர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாரதிதாசனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. கவிதை வரிகள் உரியவர்களுக்கே சொந்தமானவை. நன்றிகள் ரமேஷ்-பிரேம், மருதா.
In
தாமதமாக வந்துசேரும் அறிவு
Posted on Tuesday, July 25, 2006
தாமதமாக வந்துசேரும் அறிவு
பூனைக்குட்டி
Tuesday, July 25, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
0 comments:
Post a Comment