“இதில் பேசவேண்டாமே, பத்து நிமிடத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.”
ஒரு சில வார்த்தைகளில் அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட, இந்திரஜித் என்ற அவள் தந்தையின் நண்பர், சொன்னது போல் பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தார். நன்கு வாட்ட சாட்டமாக இருந்தாலும் அவர் நடை உடை பாவனைகளில் ஒரு உளவாளியைப் போன்ற சிறு அறிகுறிக்கூட அவரிடம் தெரியவில்லை அவளுக்கு.
“உங்களுக்கே தெரிந்திருக்கும் என் அப்பா இறந்துபோன விஷயம். அவர் இறக்கும் முன் எனக்கு அனுப்பிய கடைசிக் கடிதத்தில் என்னுடைய உயிருக்கும் ஆபத்திருப்பதாகவும். உங்களிடம் உதவி கேட்குமாறும், சுவிட்சர்லாந்திற்கு போய்விடுமாறும் சொல்லியிருந்தார்.”
தீபிகா மெதுவாய்ச் சொல்லிவிட்டு, அந்த மனிதரிடம் ஏதாவது முகமாற்றம் ஏற்படுகிறதா எனக் கவனித்தாள், கண்களுக்கு ஏற்கனவே கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததால், அவர் முகபாவாத்தைக் கொண்டு ஒன்றும் உறுதிசெய்ய முடியவில்லை.
“உங்கக்கிட்ட ஏற்கனவே பாஸ்போர்ட் இருக்கா?” கேட்ட இந்திரஜித் சிறிது யோசித்துவிட்டு, “சரி வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சுவிஸ் செல்வதற்கு தயாராக இருங்கள்.” சொல்லிவிட்டு போயேவிட்டார்.
அவளுக்கும் தெரியும் தந்தை தன்னிடம் சொல்லியதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவரால் தன்னிடம் கேட்கமுடியாதென்பது, அவர்கள் வழக்கப்படி, வார்த்தை தான் முக்கியம். ஆனால் அதே நேரத்தில் அப்படி தன்னையும் தன் வார்த்தையையும் நம்பும் ஒருவரை ஏமாற்ற வேண்டியிருக்கிறதே என நினைக்கும் பொழுதே தீபிகாவிற்கு கண்களில் நீர் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. ஆனாலும் தன் மனஉறுதியை குலைக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்காமல் எல்லாம் நன்மைக்கே என்று இந்திரஜித்திற்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
.
செய்தி,
உள்துறை அமைச்சர் சந்தகோஷ் முகோபாத்யாய் ராஜினாமா.
சொந்தக்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தனக்கும் பிரதமர் அவர்களுக்கும் சிண்டுமுடிக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதை முற்றிலும் தவிர்க்கும் நோக்கமாக தன்னுடைய உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் அந்த கடிதத்தை பிரதமமந்திரிக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிகிறது.
பிரதமர் உள்துறை அமைச்சரின் ராஜினாவை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்று, மத்திய மந்திரிகள் பலர் பிரதமரின் இல்லத்தின் முன்னர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.
.
ஸ்யூரிச் விமானநிலையத்தில் வந்திறங்கிய தீபிகாவை வரவேற்க, இந்திரஜித் சொல்லியிருந்ததைப் போன்றே சற்று நடுத்தர வயதுள்ள ஒரு மனிதர் கையில் பெயர்ப்பலகையுடன் காத்திருந்தார். அவரிடம் எந்தெந்த விஷயங்ளை சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாதென்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. அந்த நபர் சுவிட்சர்லாந்தில் ஒரு உணவகம் நடத்துபவர் என்பது மட்டும் அவளுக்கு தெரியும். அதிலும் அந்த நபர் ஒரு தமிழ் தெரிந்தவர் என்பது தீபிகாவிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளுக்கு, விமானநிலையத்திலிருந்து அவர் வீடு செல்லும் வரை, தான் கடைசியாக இந்திரஜித்துடன் பேசியது தான் நினைவில் வந்துகொண்டேயிருந்தது.
.
“தீபிகா, உங்க அப்பா ஏன் அப்படிச் சொன்னார் என்பது தெரியாது எனக்கு. உங்களுக்கும் ஜகதாவிற்கும் இருக்கும் தொடர்பு என்னைத்தவிர யாருக்குமே தெரியாது.
ஆனால் எங்கள் பழக்கவழக்த்தில் சிலதடவை மனம் சொல்லும் விஷயத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதேபோல் உங்கள் தந்தையும் ஏதோ அவர் மனதில் பட்டதால் இப்படி சொல்லியிருக்க வேண்டும் அதனால் எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடமுடியுமோ சென்றுவிடுங்கள். உங்களுக்கான பணம் ஏற்கனவே வங்கியில் இருக்கும். என்னிடம் கேட்பதற்கும் தயக்கம் வேண்டாம்.
நீங்கள் சுவிட்சர்லாந்தில் என் தூரத்து சொந்தக்காரர் ஒருவரின் வீட்டில் தங்கலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் அவருடைய உணவகத்தில் வேலைக்கூட செய்யலாம். அவர்கள் உங்களைப்பற்றிய விவரங்களை கேட்க மாட்டார்கள். நீங்கள் சொல்லவேண்டாம். மற்றபடிக்கு சிறிது காலத்திற்கு பிறகு நீங்கள் மறுபடியும் இங்கே வருவதற்கு விருப்பப்பட்டால் அதுவும் நிறைவேற்றப்படும்.”
ஆனால் கடைசிவரை ஆந்தனியைப்பற்றிக் கேட்க நினைத்த தீபிகாவால் அந்த விஷயத்தைக் கேட்க முடியவில்லை, அசாதாரணமான அறிவுடைய உளவாளிகள், மற்றவர்கள் பேசும் ஒவ்வொருவார்த்தையையும். கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என நன்கறிந்த தீபிகாவிற்கு அவள் இந்த சமயத்தில் ஆந்தனியைப் பற்றிக் கேட்பதில் இருக்கும் சிக்கல் தெரிந்துதான் இருந்தது.
.
ஆந்தனிக்கு கியூபாவில் இருக்கும் ஒரு அமேரிக்க எதிரியைக் கொல்வதற்கான அசைன்மெண்ட் வந்திருந்தது. கியூபாவின் பொருளாதாரத்தில் இருக்கும் நிலையால், உளவாளிகளின் வேலைகள் வெகுசாதாரணமாக நடக்கும் ஒரு நாடுதான் என்ற பொழுதும். அவனுக்கு அசைன்மெண்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கும் நபர். கியூபாவில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இருப்பவன், பயங்கரமான சாமர்த்தியசாலியான அவனை, அமேரிக்காவில் இருக்கும் பொழுதே போட்டுத்தள்ளிவிட நினைத்த அமேரிக்காவின் சிஐஏவை ஏமாற்றி விட்டு தற்பொழுது கியூபாவில் அடைக்கலம் புகுந்திருக்கிறான்.
அவனைப்பற்றிய விவரங்கள் அடங்கிய சிடி ஆந்தனிக்கு வந்து சேர்ந்த பத்தாவது நாளை ஆந்தனி, தன்னுடைய டார்கெட்டாக் வைத்திருந்தான். அவனுடைய திட்டத்தின் படி சரியாக எட்டாவது நாளே ஹவானா விமானநிலையத்தில் வந்திறங்கிய அவன். தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மாறப்போகும், அந்த பத்தாவது நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.
.
வந்ததில் இருந்தே அங்கிருக்கும் ஆட்களிடம் அதிகமாக பேச்சுக் கொடுக்காமல் தீபிகா இருக்க, உணவகத்தின் முதலாளி கண்ணன், முதலில் வலியச்சென்று பேச்சுக்கொடுத்த பொழுதும். இவள் மௌனம் கடைபிடிக்க அவரும் அவர் குடும்பத்தினரும் சரி, புது இடம் பழகினால் சரியாய்ப் போகும் என நினைத்து விட்டிருந்தனர்.
ஆனால் தீபிகாவிற்கு அவள் சுவிட்சர்லாந்து வந்ததின் அர்த்தமே தான் ஆந்தனியை சந்திப்பதில் இருக்கிறது என்பது சரியாகத் தெரிந்திருந்ததால். அவளின் எண்ணம் முழுக்க அதைப்பற்றியே சுற்றிவந்தது. தன்னால் அவனை தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ளவே முடியாதென்பது அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் தீவிர யோசிப்பில் மீண்டும் அவளுக்கு ஏதோ ஒரு யோசனைத் தட்டுப்பட்டதைப் போலிருக்க, மீண்டும் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.
அந்த எண்ணுக்குத் தொலைபேசினாள்,
“ஹுலோ இந்திரஜித், எனக்கு பயமாயிருக்கிறது. என்னைத் தொடர்ந்து இங்கேயும் கொல்வதற்கு ஆட்கள் வந்திருப்பதாய்ப்படுகிறது. ஒரு ஆள் என்னையே சுற்றிச்சுற்றி வருவதாய்ப் படுகிறது. நீங்கள் தான் உதவவேண்டும்.”
முந்தைய அந்தியாயங்கள்
கொலைத்தொழில் வல்லவன் 1 & 2
கொலைத்தொழில் வல்லவன் - 3(New)
பூனைக்குட்டி
Tuesday, May 02, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
பார்த்தி, இடைவெளி விடவேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும் இந்தக்கதை இடைவெளி அதிகம் எடுக்கத்தான் செய்கிறது. குறைக்கப்பார்க்கிறேன்.
ReplyDelete