அப்படியொரு சம்பவம் நடக்குமென்று யாரும் அதற்கு முன்னர் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் நடந்தது. நன்றாக நினைவில் இருக்கிறது அந்த ஒன்றிரண்டு மாதங்கள், ஒவ்வொன்றும் பசுமையாக இன்று நினைத்துப்பார்க்கும் பொழுது சிரிப்பாக வந்தாலும் அன்றைய என்னுடைய நிலைமை எனக்குத் தெரிந்துதான் இருந்தது.
இனிமேல் முடியாது என்பதான ஒரு நிலைக்கு நானும் வந்திருந்தேன், அகிலாவும் வந்திருந்தாள். நாங்கள் நடத்திக்கொண்டிருந்த நாடகத்திற்கும் ஒரு முடிவு வேண்டுமே. அந்த நாளும் வந்தது.
"மோகன் உங்கக்கிட்ட ஒரு விஷயம் தனியா பேசணும்."
யார் முதலில் இந்தப் பிரச்சனையை ஆரம்பிப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த நிலையில் என்றைக்கும் போல் அவள்தான் ஆரம்பித்து வைத்தாள். அவள் ஒரு இரவு பீடிகை போட எனக்கும் அவளிடம் கொஞ்சம் பேசவேண்டியிருந்ததால்,
"ம்ம்ம் சொல்லு."
"இங்கப்பாருங்க இதுக்கு மேல என்னால முடியாது, வாழ்க்கையில ஒரு தப்பு பண்ணிட்டேன். அதென்ன அவ்வளவு பெரிய தப்பா, நீங்க யாரையாவது இதுக்கு முன்னாடி காதலிச்சிருக்கிறியான்னு கேட்டப்ப, ஆமாம்னு சொல்லாம இல்லைன்னு சொல்லிட்டேன் அவ்வளவுதான் நான் செய்தது. அன்னிக்கே ஆமாம்னு சொல்லித் தொலைத்திருக்கணும். உங்களைப் பத்தி கொஞ்சம் தெரியும். ஆனா இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமாத்தான் தெரியும்.
உங்களுக்கு என்ன தெரியணும் நான் யாரையாவது காதலிச்சேனான்னு தானே, ஆமா ஒரு மடையனை காதலிச்சேன் வேற யாரும் இல்லை என் மாமா பையன்தான் அது. அதுவும் நானா ஆரம்பிச்சது கிடையாது. அவனை தான் எனக்கு கட்டுறதா இருந்தாங்க அதனால கொஞ்சம் பழக்கம் அவ்வளவுதான். அது காதலான்னு கேட்டீங்கன்னா தெரியலை. ஏன்னா எனக்கு காதலோட அளவுகோள்கள் தெரியாது. ஆனா அவனைப் பார்க்கணும்னா ரொம்ப பிடிக்கும். அவன்கிட்ட பேசகிட்டிருக்கணும்னு தோணும். அதுக்காகவே அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவ்வளவுதான். வேற எந்த மாதிரியான தொடர்பும் எனக்கும் அவனுக்கும் கிடையாது. அது பத்திய சந்தேகம் உங்களுக்கு இருக்காதுன்னு தெரியும். உங்களைப் பொறுத்தவரை நான் பொய் சொன்னது தான பெரிய பிரச்சனை.
இப்ப சொல்றேன் ஆமாம் அவனை காதலிச்சேன். ஆனா அதுக்காக இப்ப வருத்தப்படலை. அன்னிக்கு நடந்தது நடந்தது தான். இன்னிக்கு அவன் மேல ஒரு துளி கூட ஆசையே வேற எந்த எழவுமோ இல்லை.
வரதட்சணை கம்மியாக் கொடுப்பாங்கன்ற ஒரே காரணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் போனவன் அவன், உங்க அம்மா சொன்னாங்கங்கிறதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவர் நீங்க, அதுவும் ஒரு பைசா வாங்காமல், அவனைப் பற்றிய நினைப்பையெல்லாம் தூக்கியெறிந்து பலவருஷம் ஆச்சு, முதல் காதல் கடைசி வரைக்கும் அழியாது அது இதுன்னு சும்மா சொல்லுவாங்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என் விஷயத்தில். உங்கக்கூட அவனை கம்ப்பேர் பண்றதைக் கூட தப்பா நினைக்கிறேன் நான். "
கொஞ்சம் நிறுத்து முச்சு விட்டுக் கொண்டவள்,
"ஆனால் இந்த ஒரு மாசமா நீங்க பண்ணது இருக்கே, அப்பப்பா என்னால் தாங்க முடியலை சாமி. உங்க பொண்டாட்டி தானே நான் இரண்டு வருஷம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை ஏண்டி அப்படியா உன் மாமாப் பையனை காதலிச்சியான்னு நேரடியா கேட்டிருக்கலாம்ல. அதுக்குள்ள என்னென்ன பிரச்சனை, ஒரே நாள்ல பேசுறது முழுசா நிறுத்திக்கிட்டு, நான் ஏதாவது பேசினால் பதிலும் பேசாமல், எவ்வளவு கொடுமை. சரி எப்பவாவது இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருந்தா கூட பரவாயில்லை, முந்தானையை பிடிச்சிக்கிட்டு பின்னாடியே அலையற புருஷன் ஒரே நாளில் பேசுறதை முழுசா நிறுத்திட்டா பயம் வராதா? நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா, உங்களுக்கு உடல்நிலையில ஏதாச்சும் பிரச்சனையா இல்லை.
அத்தம்மாக்கு ஏதாச்சும் உடம்புக்கு சரியில்லையா ஒன்னுமே புரியலை. இதில நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல் பெரிய பார்வை வேறு, உங்க அம்மாக்கிட்ட சொல்லும் சில வார்த்தைகளிலும் பொடிவைத்து பேசி, நான் சாதாரணமா சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் வேற அர்த்தத்துல தப்பா புரிஞ்சிக்கிட்டு, பெரிய கொடுமை பண்ணீங்க நீங்க, ஆபிஸில் வேலையே செய்யலை நான், எப்பப்பாரு அழுதுக்கிட்டேயிருக்கிறதப் பார்த்து பக்கத்தில் வேலை செய்றவங்கெல்லாம் விசாரணை வேற, இந்த கடைசி ஒரு மாசம் தூங்கியிருப்பேன்னு நினைக்கிறீங்க. ஒரு மணிநேரம் கூட தூக்கம் வரலை. நான் உண்மையிலேயே உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது ஆயிருச்சுன்னே நினைச்சேன்.
நேத்திக்கு எதேச்சையா நீங்க எங்க சொந்தக்காரர் ஒருவரை பார்த்ததாகச் சொல்ல, நான் அவருக்கு போன்போட்டு கேட்டதும் தான் விஷயமே புரிஞ்சிச்சு, அவரு பாவம் பயந்திட்டார் நாம ரொம்ப அன்னியோன்யமா இருக்கிறதப் பார்த்துட்டு நான் முன்னமே இதைப்பத்தி பேசியிருப்பேன்னு நினைச்சி சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் வந்துச்சே கோபம் உங்கமேல, இந்த சின்ன விஷயத்தக்கா இப்படி ஒரு டிராமா பண்ணீங்கன்னு பளார் பளார்னு கன்னத்துல அறையணும்னு நினைச்சேன். ஆனா முடியலை. என்னால புரிஞ்சிக்க முடியுது உங்களுடைய எந்த விஷயத்தையும் என்கிட்டேர்ந்து நீங்க மறைச்சதில்லை, இது நான் மறைச்சிட்டேங்கிறதால வந்த கோபம், புரியுது. ஆனாலும் நீங்க பண்ணது ரொம்ப அதிகம்.
இப்ப உங்களைப் பார்த்தால் அந்த பழைய முகம் ஞாபகம் வரவேமாட்டேங்குது. என்னை முறைக்கிற எதையும் சந்தேகமாப் பார்க்கிற, இப்ப இருக்குற இந்த புதிய முகம்தான் ஞாபகத்துக்கு வருது. அதனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன், நான் கொஞ்ச நாளுக்கு எங்க அம்மா வீட்டுக்கு போறேன். நீங்க பண்ணதுக்கும் நான் பண்ணதுக்கும் சேர்த்து நான் கொடுத்துக்குற, கொடுக்குற தண்டனை இதுதான். உங்களை பிரிஞ்சி உங்கக்கூட பேசாம இருக்குறதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு நான் கொடுக்கும் அதிகபட்ச தண்டனை, அப்படியே உங்களுக்கும் இந்த பிரிவு நம்ம இரண்டு பேரையும் பத்திய நல்ல விஷயங்களை நினைவுக்கு கொண்டுவர உதவும் உதவணும். நான் வர்றேன்."
அவள் வெளியே சென்று கொண்டிருக்க எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் முடிந்திருக்குமென்று நினைக்கிறேன், எதிர் எதிரான கருத்துக்கள் கொண்டிருந்தாலும். ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் நானோ இல்லை அகிலாவோ சுலபமாக விட்டுத்தந்து விடுவோம் என்பதால் எப்பொழுதுமே பிரச்சனைகள் பெரிதாக ஆனதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை கொஞ்சம் சிக்கலானது, என்னைப் பொறுத்தவரை என் மனைவியிடம் இருந்து நான் எதை எதிர்பார்க்கவில்லையோ அது நடந்திருந்ததால்; என்னால் இந்தப் பிரச்சனையில் விட்டுத்தர முடியவில்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பே நான் அவளிடம், நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று கேட்டிருந்தேன்.
அவள் இல்லையென்று சொன்னதை முழுமனதோடு நம்பியிருந்த காரணத்தால், ஒரு முறை எதேச்சையாக பார்த்த என் தூரத்து உறவினர், அகலாவிற்கும் அவள் மாமா பையனுக்கும் நிச்சயம் செய்வதாய் இருந்ததாகவும், இருவரும் கொஞ்சம் அன்யோன்யமானவர்கள் என்றும் பின்னர் ஏதோ ஒரு பிரச்சனையால் அந்த நிச்சயமும் திருமணமும் நடக்கவில்லையென்றும் சொல்ல எனக்கு இந்த விஷயம் தெரியாமல் இருந்தது
மனதிற்கு கொஞ்சம் கனமாகத்தான் இருந்தது.
எவ்வளவுதான் மறக்க நினைத்தாலும் அந்த விஷயத்தை சுத்தமாக மறக்கவே முடியாமல் அவளிடம் கேட்கவும் முடியாமல் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் இதுவரை அவளிடம் எதையுமே மறைத்ததில்லை அதைத்தான் நானும் அவளிடம் எதிர்பார்த்தேன். அவள் இந்த விஷயத்தில் பொய் சொல்லியிருந்தது என்னில் அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவள் வீட்டைவிட்டு போய்விடுவாள் என்பதையெல்லாம் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் அவள் சொன்னதைப் போல எங்களிடம் ஏற்பட்டிருந்த இந்த ஒன்றிரண்டு மாத வித்தியாசங்களை இந்த பிரிவு சரிசெய்துவிடுமென்றால் சரிதான் என்றே நானும் நினைத்தேன்.
முதலில் சில மாதங்களுக்கு அகிலாவை நான் பார்க்கவேயில்லை, எனக்கே கூட ஆச்சர்யம் தான் ஆனால் அவள் வேண்டுமென்றே என்னை சந்திப்பதைத் தவிர்த்துவந்தாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. சிலசமயம் அவள் வீட்டிற்கே கூட சென்றிருந்தேன். அவங்கம்மாவும் தங்கை ஜெயஸ்ரீயுமே பேசி திருப்பி அனுப்பிவைத்தார்கள். அலுவலகத்திற்கு தொலைபேசினாலும் பேசாமல் தவிர்த்துவந்தாள். பின்னர் நானும் அவளாய் வழிக்கு வரட்டும் என்று விட்டுவிட்டேன். பின்னர் சாயங்கால வேளைகளில் அவளாகவே வீட்டிற்கு வரத்தொடங்கியிருந்தாள். வந்தாளும் என்னுடன் பேசமாட்டாள் அம்மாவிடம் சென்று பேசிக்கொண்டிருப்பாள், அம்மாவிற்கு அவள் மீது கோபமிருந்தாலும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் பேசிவந்தார்கள். அந்த சமயங்களில் மாலை நேரங்களில் காப்பி கொண்டுவந்து கொடுப்பாள், அதுதான் எனக்கும் அவளுக்குமான தொடர்பாக இருந்தது. எனக்கு இந்தப் பிரச்சனையின் ஆரம்பத்திலேயே முழுப்பிரச்சனை என்னுடையது தான் என்று தெரிந்தாலும் என்னால் அவள் பக்கத்தில் இருந்த தவறை ஒப்புக்கொள்ள முடியவேயில்லை,
ஆனால் இப்பொழுது அவள் என்னிடம் செய்து கொண்டிருந்தது கொஞ்சம் கொடுமையான விஷயம். கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் வரை வந்திராத ஒரு விரக்தி, சில மாதங்களாக என்னில் வரத்தொடங்கியிருந்தது, அது என் அலுவலக வேலையை பெரிதாக பாதிக்கத்தொடங்கியிருந்தது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலேயே வந்துவிடுவாள், அம்மாவுடன் கோயிலுக்கு செல்வது இன்னபிற விஷயங்களில் உதவுவது என்று இருந்தாலும் பெரும்பாலும் என்னுடன் பேசமாட்டாள் என்றால் முழுவதுமாக என்று சொல்லமுடியாது. ஏதாவது இரண்டொறு வார்த்தைகள் வரும் அவ்வளவுதான். ஆனால் எக்காரணம் கொண்டும் வீட்டில் தங்கமாட்டாள், இரவு வீட்டிற்கு சென்றுவிடுவாள், பலசமயங்களில் என்னையே கொண்டுவந்து விடவும் சொல்வாள். இதெல்லாம் அந்த ஒன்றிரண்டு மாதங்கள் நான் செய்ததற்கான தண்டனையாக நான் முழுமனதாக ஏற்றுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் சாதாரணமாக பேசத்தொடங்கியிருந்தோம்.
அதன் பிறகு நடந்தது தான் எங்கள் வாழ்க்கையின் பொற்காலங்கள். திருமணம் செய்துகொண்டு இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் காதலிக்கத் தொடங்கியிருந்தோம். எங்கள் வாழ்க்கையில் ஒருமுறை நடந்த இந்த சம்வத்தால் நாங்கள் இன்னும் இன்னும் அன்யோன்யமாகியிருந்தோம். நானும் அவளும் மாற்றி கடிதம் எழுதியது, ஐஸ்கீரிம் பாரில் ஐந்து மணிநேரம் சாப்பிட்டது. அலுவலகத்தை கட்டடித்துவிட்டு, சினிமாவிற்குப் போனது. கொழுத்தும் பன்னிரெண்டு மணிவெய்யலில் கடற்கரை மணலில் உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருந்தது. இப்படி காதலர்களாக இருந்து செய்ய முடியாததை கல்யாணத்திற்கு பிறகு செய்துகொண்டிருந்தோம். ஒரு வருடம் போல் தாம்பத்யம் இல்லாததை இப்படி சில சில சில்மிஷங்கள் செய்து சரிசெய்து கொண்டிருந்தோம்.
பின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆகி வீட்டிற்கு வந்ததும், இருவீட்டாரின் கண்டிப்பான உத்தரவின் பேரில், இங்கே கட்டடித்துவிட்டு செய்து வந்ததை, லீவெடுத்து மணாலியில் செய்யச் சென்றோம், குழந்தைக்காக வேண்டி. கழுதை வயதான பிறகு காதல் செய்ய ஆரம்பித்தாலும் நீண்ட யோசனைகளுடன், முழுவதும் தீர்மானிக்கப்பட்டபடி, எங்கள் இரண்டாவது தேனிலவு மணாலியில் முடிந்த பத்தாவது மாதத்தில் அகிலா எதிர்பார்த்தபடி, நான் எதிர்பாரதபடி பிறந்த ஆண்குழந்தைக்கு ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்த பவானி என்ற பெயரையும் வைத்தோம்.
பிரிவென்னும் மருந்து
பூனைக்குட்டி
Sunday, April 16, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்...
0 comments:
Post a Comment