அதன் பிறகு எங்கள் கல்லூரி வாழ்க்கை சாதாரணமாகப் போகத்தொடங்கியது. கௌசி, எங்களிடம் எதுவும் கேட்க வேண்டுமென்றால் சிவசங்கரியிடம் சொல்லிக் கேட்பாள். ஒரு நாள் இப்படித்தான், நியுமெரிக்கல் மெத்தட்ஸ் கணக்கு ஒன்றைப் போட வல்லரசு சார்(பட்டப்பெயர் தான்) சொல்லி கொடுத்தார். சில விநாடிகளில் நாங்கள் போட்டு அந்த சமன்பாட்டின் ரூட்டைச் சொன்னோம். ஆனால் என்ன காரணத்தினாலோ கௌசிக்கு அந்தக் கணக்கிற்கு விடைவரவில்லை. சிவசங்கரி என்னிடம் வந்தாள்.
"அண்ணா, அவளுக்கு அந்தக் கணக்கு வரலையாம்; உங்க நோட்டைக் கேட்டாள். கொடுத்துத் தொலைங்க. இது பெரிய தொல்லையா போச்சு உங்களால நேரா உங்ககிட்ட கேட்காம என்கிட்ட கேட்கிறது, நான் என்ன தரகரா?" அவளிடம் கோபமிருந்தது
ஆனால் என் நோட்டைக் கொடுப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. நோட்டில் கணக்கு கொஞ்சம்தான் இருக்கும் அவள்தான் நிறைய இருப்பாள். அதாவது பக்கம் பக்கமாய், அழகழகாய் அவள் பெயர், அவள் பற்றிய கவிதை இப்படி. அதனால் நான் பிரபுவிடம் சொல்லி அவன் நோட்டில் கணக்கை காப்பி பண்ணச் சொல்லிக்கொடுத்தேன். (எங்கள் மூன்று பேருக்கும் சேர்த்து ஒருவர் தான் கணக்கு எழுதவோம். அன்று அது நான்). சிறிது நேரம் ஆனதால் திரும்பிப் பார்த்தாள் கௌசி, பிரபு அவன் நோட்டில் என் நோட்டைப் பார்த்து காப்பி செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டாள்.
இப்படியே எங்கள் வாழ்க்கை எந்த சுவாரசியமுமில்லாமல் சென்றது. இடையில் ஒருமுறை நான் சொல்லாமலே சிவசங்கரி என்னைப்பற்றி கௌசியிடம் பேசியிருக்கிறாள். அதைக் கேட்டு அவள் திட்டிவிட்டதாகவும் இனிமேல் என்னைப்பற்றி பேசக்கூடாதென்று சிவசங்கரியிடம் கண்டிப்பாகச் சொன்னதாகவும் சொன்னாள். நான் இடைக்கால சந்தோஷங்கள் மறைந்து மீண்டும் சோகமாகிவிட்டேன்.
எங்கள் தேர்வுகள் வந்தன; முதலில் பிராக்டிகல்ஸ். கோபால் லேங்குவேஜ். ஒரு சிறு தவறு இருந்தாலும், அதாவது ஒரு புள்ளியை நீங்கள் விட்டு விட்டாலும், கோபால் நூறு எரர் கொடுக்கும். போன தலைமுறை மொழியாததால் உள்ளப் பிரச்சனை அது. கௌசல்யா, கனிமொழி, லிஜோ பாபு, மலர்விழி, அடுத்து நான் மோகன்தாஸ். அதாவது எனக்கும் அவளுக்கும் இடையில் மூன்று பேர் இருப்பார்கள் தேர்வில். அன்று அதிசயமாக கௌசி, தாவணி அணிந்து வந்திருந்தாள்.
அவள் டெஸ்ட் பேப்பரை மேஜையில் இருந்து எடுத்து கொண்டு போய் கம்ப்யூட்டரில் உட்கார்ந்தால், விதி, லேப் அட்டெண்டர் என்னை அவளுக்குப் பக்கத்து கம்ப்யூட்டரில் உட்கார வைத்தாள். நான் ஒரு நிமிடம் அவளைப் பார்த்தேன். பின்னர் தேர்வில் மும்முரமாகிவிட்டேன். அல்காரிதம், ஃப்ளோ சார்ட், புரோக்கிராம் எல்லாம் வேகமாக எழுதினேன். +2விலிருந்தே நான்தான் பிராக்டிகல் முதலாவதாக முடிப்பேன். இந்த விஷயத்தில் நான் ஒரு வெறியன். ஆனால் கௌசி எனக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டாள் என்ன இருந்தாலும் தொடர்ச்சியாய் இதைப் போல் எழுதிப்பார்ப்பவள் முன்னால் நிற்க முடியுமா? ஆனால் டைப்செய்து, எரர் கிளியர் செய்து, அவுட்புட் காட்ட வேண்டும். அதனால் விட்டுவிட்டேன்.
என்ன, எனக்கும் அவளுக்கும் இதில் ஒரு நிமிட வித்தியாசம், எக்ஸ்டர்னலிடம் காண்பித்துவிட்டு வந்து கணிணியில் எக்ஸாமிற்காகக் கொடுக்கப்பட லாகினில் நுழைந்து உட்கார்ந்தேன். நான் வேகமாக டைப் செய்வேன் என்பதால் இருநூறு லைன் புரோக்கிராமையும் சீக்கிரமே டைப் செய்துவிட்டேன். முப்பது எரர் வந்தது நான் கம்பைல் செய்யும் போது. பிறகு அதை சரிசெய்துவிட்டு பிரிண்ட்அவுட் எடுத்து, எக்ஸ்டெர்னலிடம் காண்பித்துவிட்டுத்தான் ஓய்ந்தேன். வந்து பார்த்தால் கௌசி அழுது கொண்டிருந்தாள் நான் வருத்தமாயிருந்தது அவளிடம் பேசவும் பயமாயும். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.
கொஞ்சம் நகர்ந்து பார்த்தால், அவள் ஸ்கிரீனில் ஒரு இருநூறு எரர் நின்று கொண்டிருந்தது, அளவுக்கு மிஞ்சினால் டாஸ் ப்ராம்டில் எல்லா எரரையும் ஒன்றாகப் பார்க்கக் கூட முடியாது. நான் இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தபொழுது அவளுக்கும் எனக்கும் ஒரே புரோக்கிராம் தான் வந்திருந்தது எனத்தெரிந்தது. இந்த மாதிரி எனக்கும் இதே புரோக்கிராம் தான் வந்திருக்கிறது, என் லாகினில் இருந்து காப்பி செய்து கொள் என்று எழுதித் தரலாமென்றால் கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியிருந்தது. ஆனாலும் பரவாயில்லையென்று நினைத்து, சிவசங்கரிக்கு, "எனக்கும் இந்த புரோக்கிராம் தான் வந்திருக்கிறது, என் லாகின் எக்ஸாம்0118; இதிலிருந்து காப்பி செய்து கொள்ளலாம். முறைகள்..." போட்டு காப்பிசெய்யும் முறைகளையும் எழுதி, அவள் பக்கத்தில் வைத்து விட்டு நேராக எக்ஸ்டர்னலிடம் வந்தேன். நான் என் வாழ்க்கையை ரிஸ்க் எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் அந்தப் பேப்பரை எக்ஸ்டர்னலிடமோ, இல்லை வேறு லெக்சரரிடமோ கொடுத்தாலோ, இல்லை அந்தப் பேப்பரை அங்கிருந்து எடுக்காமல் இருந்தாலோ நான் மாட்டிக்கொள்வேன். என்னை மூன்று ஆண்டுகள் படிக்கவிடாமல் செய்துவிடுவார்கள்.
நான் அவரிடம் சென்று நான் முடித்துவிட்டதாகவும் போகலமா என்றும் கேட்டேன், அவர் போகலாமென்று சொல்ல, திரும்பிய நான் அவள் அந்தப் பேப்பரை தன் ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைக்க, அதுவரை அமைதியில்லாமல் தவித்த என் மனசு ஒருவாறு மெதுவாகத் துடிக்கத் தொடங்கியது.
வெளியே வந்ததும்தான் ஞாபகம் வந்தது, என் எக்ஸாம் லாகினுக்கு பாஸ்வேர்ட் இருப்பதும் அதை நான் சொல்லாமல் வந்ததும். ஆனால் பாஸ்வேர்ட் அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பார்த்தாள் என்றால் கண்டுபிடித்திருப்பாள் என்பதால் சிறிது அமைதியானேன்.
அரை மணிநேரத்தில் வெளியே வந்தாள் கௌசி, என்னுடன் எங்கள் முதல் பேட்ச் முடிந்திருந்தது. மதியம், பிரபு, பிரதீப், பிரேம் குமார், ராஜகோபால், ராஜாமணி, அப்புறம் ராஜேஷ், அதுக்கு கொஞ்சம் அப்புறம் சிவசங்கரி. மதிய இடைவெளி முடிந்ததும் இரண்டாம் பேட்ச், லேப்பில் இருந்து கிளாசிற்கு வந்தவள் முதல் முறையாக என்னைப் பார்த்துச் சிரித்தாள், பிறகு நேராக சிவசங்கரியிடம் வந்து என்னவோ கையையும் காலையும் ஆட்டி ஆட்டி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். இதுதான் முதல் முறை அவள் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்தது.
சிறிது நேரத்தில் என்னிடம் வந்த சிவசங்கரி, "அண்ணே ரொம்ப ரொம்ப தேங்ஸ்னு சொல்லச் சொன்னா, ரொம்ப பயந்துட்டாளாம். கடைசியில் உங்க லாகினில் இருந்து காப்பி பண்ணிக் காமிச்சாளாம்; சொல்லச் சொன்னாள்." சிரித்தாள்.
"சிவா, அதில் பாஸ்வேர்ட் இருந்தது. நான் சொல்ல மறந்துட்டேன்." அவள் காண்பித்திருந்தாளேயானால் தெரிந்துதான் இருக்கும் என்றாலும் சும்மா கேட்டேன்.
"வேணும்னே தானே நீங்க சொல்லலை" சிரித்தாள் பிறகு, "அவள் முதலில் லாகின் பாஸ்வேர்ட் கேட்டதும் கொஞ்சம் பயந்தாளாம், பிறகு இரண்டாவது தடவையே பாஸ்வேர்ட் கண்டுபிடித்து உள்ளே போனதாகச் சொன்னாள். சரி அதெல்லாம் இருக்கட்டும் பாஸ்வேர்ட் என்னாது?" அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும் வெகுளியாய்க் கேட்டாள்.
எனக்கு மனசுக்குள் பட்டாப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின, வாழ்நாளிலேயே இன்றுதான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.
"அதெல்லாம் சின்னப்புள்ளங்கள் கேட்கக்கூடாது." சொன்ன நான் சிறிது நேரம் யோசித்துவிட்டு கௌசியை வம்பிழுக்க நினைத்தவனாய் "சிவா அவளுக்கு நான் ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தேன் அதை திரும்ப என்னிடம் கொடுக்கச் சொல்லு, ஏன்னா உன் பிரண்டை நம்பமுடியாது கொண்டுபோய் பிரின்ஸிபாலிடம் கொடுத்தாலும் கொடுத்துவிடுவாள். வாங்கிக் கொடுத்துடு!" வரவழைத்துக் கொண்ட கண்டிப்புடன் கேட்டேன்.
சிவசங்கரி நான் சொன்னதும் என்னையே பார்த்தாள். நான் சீரியஸாய் சொல்வதாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்ததால். கௌசியிடம் கேட்பதற்குக் கிளம்பினாள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டிருந்தேன், என் சிந்தனை முழுவதும் இப்பொழுது அவள் என்ன செய்வாள், என்ன பதில் சொல்வாள் என்றே யோசித்துக் கொண்டிருந்தது.
நேராக கௌசியிடம் சென்ற சிவசங்கரி என்னவோ கேட்க, அவள் திரும்பி என்னை கண்களைக் குறுக்கிப் பார்த்தாள். நான் தலையை குனிந்து கொள்ள, மீண்டும் அவள் பக்கம் திரும்பி என்னவோ பதில் சொன்னாள். சிவசங்கரி வேகமாய் என்னிடம் திரும்பி வந்து, நறுக்கென்று என் தலையில் கொட்டினாள். உண்மையிலேயே வலித்தது.
"கொழுப்புத்தான் உங்களுக்கு, என்னடா இன்னும் வேதாளம் முருங்க மரம் ஏறலையேன்னு பார்த்தேன். ஏறிருச்சு. இதைக் கேட்கிறதுக்கு நான்தான் கிடைச்சேனா, சீச்சீய்..." மீண்டும் என் தலையில் கொட்டினாள்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிரபு, "மாம்ஸ் என்ன பிரச்சனைன்னு சொன்னா நான் உதவுவேன்ல?"
"சரிதான் இதுங்கிட்ட சொல்லுங்க, பிரச்சனை தீர்ந்திடும்." அவன் தலையிலும் கொட்டினாள்.
நான் நடந்ததை அவனிடம் சொல்ல யத்தனிக்க என் வாயைப் பொத்தியவள், "அண்ணே தப்பா நினைக்கப் போறா, சொல்லாதீங்க."
"அப்பிடின்னா, வாங்கிட்டு வந்து கொடு அந்த லெட்டரை!" நான் சொல்ல, முறைத்தவள் நேராக கௌசியிடம் சென்று, "கொடுத்துத்தான் தொலையேண்டி, பிசுனாரி ஒரு பேப்பருக்கு அலையுது!" கொஞ்சம் சத்தமாக சொன்னாள். திரும்பி என்னைப் பார்த்த கௌசி, சிவசங்கரியிடம் ஏதோ சொன்னாள். கேட்டுவிட்டு என்னிடம் வந்தவள், "அதைக் கிழிச்சு, குப்பைத்தொட்டியில் போட்டுட்டாளாம், வேணும்னா போய் பொறுக்கிக்கோங்க." என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
மனசு லேசாக வலித்தாலும், நான் வேகமாக கிளாசைவிட்டு லேப்பிற்கு விரைந்தேன். அங்கிருந்த அத்துனை பாக்ஸிலும் பார்த்தேன், அந்தப் பேப்பர் மட்டும் இல்லை. நான் இன்னும் சோகமாகி வெறுங்கையுடன் கிளாசிற்குத் திரும்பினேன். முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவளும், சிவாவும் நான் திரும்ப வருவதைப் பார்த்து சிரித்தார்கள்.
"என்னணேன் குப்பைத்தொட்டியெல்லாம் கிளரியாச்சா, கிடைச்சுதா."
நான் அவளிடம் கோபமாய், "இப்ப கொடுக்க முடியுமா முடியாதான்னு கேட்டுச் சொல்லு".
அவள் சிவசங்கரியிடம், "கொடுக்க முடியாதுன்னு சொல்லு."
நான் திரும்பி அவளைப்பார்த்தேன். சிரித்துக்கொண்டிருந்தாள். மனசு முழுக்க திரும்பவும் மகிழ்சி திரும்பியிருந்தது, ஆனாலும் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு வந்து என் சீட்டில் உட்கார்ந்தேன்.
o
அன்று மதியம் இரண்டாம் பேட்ச் ப்ராக்டிகல் நடந்தது, அங்கு வந்த பழனிவேல் மொத்தம் முதல் பேட்சில் மூன்று பேர்தான் அவுட்புட் காண்பித்ததாகவும், எக்ஸ்டெர்னல் கொஞ்சம் கோபமாக இருப்பதாகவும் கூறிச்சென்றார். அவர் சென்றதும் கௌசி என்னை திரும்பிப் பார்த்தாள். நான் வேகமாக நோட்டில் கவிதை எழுத தொடங்கியிருந்தேன்.
===
பூக்களே,
சென்று என் காதலை
அவளிடம் சொல்லுங்கள்.
ஒரு பைத்தியக்காரன்,
உனக்காக
உனக்காக மட்டும்
உயிர் வாழ்கிறான்
என்று சொல்லுங்கள்.
பிறகு கூட
காதலிக்கலாம், முதலில்
பேச சொல்லுங்கள்,
இறந்து கொண்டிருக்கிறேன்
நான்
ஒரு வார்த்தை பேசி
உயிர்ப்பிக்கச் சொல்லுங்கள்.
===
அதற்குப் பிறகு நாங்கள் குரூப் ஸ்டடி ஆரம்பித்திருந்தோம், நான், பிரபு, ராஜேஷ் மூவரும்.நாங்கள் கல்லூரி நாள்களில் ஒழுங்காகப் படிக்க மாட்டோம் என்பதால் கொஞ்சம் சீரியஸாகப் படிக்கவேண்டி, சிவசங்கரியிடம் கூடச் சொல்லவில்லை. ஒவ்வொரு சப்ஜெக்டாக படித்து முடித்துக்கொண்டிருந்தோம். ஸ்டடி ஹாலிடேஸ் ஆதலால், காலையிலேயே கல்லூரிக்கு வந்து பிறகு அந்த ஸப்ஜெக்ட் முடித்ததும் தான் கிளம்புவோம்.
ஒரு நாள், நாங்கள் படித்துக்கொண்டு தீவிரமாக ஆர்க்கியு செய்துகொண்டிருந்த பொழுது, கௌசியும், சிவசங்கரியும் அங்கே வந்தார்கள்.
"ஹலோ அண்ணே இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?"
"பார்த்தா தெரியலை படிக்கிறோம், குரூப் ஸ்டடி. ஆமா நீங்க எங்க இங்க?"
"இல்லை, பாடத்தில் கொஞ்சம் சந்தேகம் அதான் லெக்சரர்ஸ் கிட்ட கேட்கலாம்னு வந்தோம். நீங்க என்கிட்ட சொல்லவேயில்லை இங்கே காலேஜில் படிப்பீங்ன்னு."
"பிரபுதான் சொல்லவேணாம்னு சொன்னான்." நான் சொன்னதும் அவள் பிரபுவை முறைத்தாள். அந்த நாள் தொடங்கி அவர்களும் காலையில் வந்து எங்களுடன் படிக்கத் தொடங்கினார்கள். ஆனால் கௌசி என்னுடன் பேசமாட்டாள். கேள்வி கேட்பதாய் இருந்தாலும் சிவாவிடமோ, இல்லை மற்றவர்களிடமோதான் கேட்பாள்.
எங்கள் எக்ஸாம் எல்லாம் முடிந்தது, நான் என்னுடைய கவனத்தை கௌசியிடம் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு திருப்பி எழுதியிருந்தேன். விடுமுறை முழுக்க அவள் ஞாபகமாகவேயிருந்தது. என்னுடைய சோகம் முழுவதையும் என் நோட்தான் இப்போது சுமந்துகொண்டிருந்தது. மீண்டும் எங்கள் கல்லூரி தொடங்கியது. இரண்டாம் செமஸ்டரின் முதல்நாள். நான் என் கல்லூரியின் முதல் நாளை நினைத்துக் கொள்ளத் தொடங்கினேன். மனசு கொஞ்சம் சரியில்லாததால், பிரபுவிடம் என் நோட்டைக் கொடுத்து கிளாசிற்கு எடுத்துக்கொண்டு போகும்படியாகவும், நான் கொஞ்சம் கல்லூரி வளாகத்தில் இருந்த கோயிலில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வருவதாகவும் சொன்னேன். பிரபுவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் திரும்பவும் வகுப்பிற்கு வந்த பொழுது என் நோட் சிவசங்கரியிடம் இருந்தது.
நான் நேராக பிரபுவிடம் போய், "ஏண்டா அவகிட்ட கொடுத்த?"
"மாம்ஸ் புடுங்கிட்டாடா, நான் என்ன சொல்லியும் கேட்காமல் எடுத்துக்கிட்டு போய்ட்டா." இப்பொழுதெல்லாம் சிவசங்கரி பிரபுவிடம் உரிமையாக நடந்துக் கொள்ள தொடங்கியிருந்தாள். நான் நேராக அவளிடமே சென்றேன்.
"சிவா கொடுத்துறு அதை, ப்ளீஸ்"
"நான் படிச்சிட்டு கொடுத்துருறேன், நான் படிக்கிறதுல என்ன தப்பு?"
"நீ படிக்கிறதுல தப்பொன்னும் கிடையாது, கௌசி பார்த்தா? ம்ஹூம் நான் திரும்பவும் பிரின்ஸிபால் ரூமிற்கு போக முடியாது, கொடுத்துரு, ப்ளீஸ்"
"நான் அவகிட்ட கொடுக்க மாட்டேன். ப்ளீஸ், ப்ளீஸ் நீங்க சூப்பரா கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்க. நான் படிச்சிட்டு தரேன்..." அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கௌசி வந்ததால், அந்த விஷயத்தை பற்றி பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்.
மதியம் லஞ்ச் இடைவெளியின் போது என்னிடம் வந்தவள், "அண்ணே இவ்வளவு சீரியஸா காதலிக்கிறீங்களா? நான் சும்மா விளையாடுறீங்கன்னு நினைச்சேன்."
நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துவிட்டேன்.
அன்று மாலை என்னிடம் திரும்பி வந்தவள், "அண்ணே நான் அவகிட்ட உங்க விஷயமா பேசினேன், முன்னமாதிரி இப்ப கோபமா பேசலை. ஆனா கொஞ்சம் விலாவரியா பேசினா..." சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள்.
"என்ன சொன்னாள்?"
"அவங்க வீட்டில் அவளோட அக்கா, காதலிச்சு அவங்க காதலன் ஏமாத்திட்டு போனதால தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்." சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
நானும் எதுவும் பேசாமல் இருக்க, தொடர்ந்தாள்.
"அதனாலதான் அவளுக்கு காதலை பார்த்தாலே வெறுப்பாவும், காதலிக்கிறவங்களையே பிடிக்கலைன்னும் சொன்னாள். ஆனால் நீங்க நல்லா படிப்பீங்கன்னு கனவிலையும் நினைக்கலைன்னு சொன்னாள். நல்லா படிக்கிற யாராலையும் இப்படி காதலிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு சுத்த முடியாது, லவ் லெட்டர் கொடுக்க முடியாதுன்னு; அதுதான் ஆச்சர்யமாய் இருக்குதுன்னு சொன்னவ, இப்ப உங்கமேல கோபம் இல்லையாம். ஆனா உங்ககிட்ட சாதாரணமா பேசினா நீங்க திரும்பவும் காதலைப்பத்தி பேசுவீங்கன்னு தான் பயப்படறதா சொல்றா, கடைசியா..."
"ம்ம்ம், சொல்லு கடைசியா..."
"இன்னொரு சாவை அவங்க வீடு தாங்காதுன்னு சொல்லிட்டு அழுதுட்டா!"
தொடரும்...
தேவதையின் காதலன் - 3
Mohandoss
Tuesday, November 02, 2010
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
Hi..your story was recommended as being in the same league as writer Sujatha. I stopped reading Tamil stories that voraciously (after Sujatha era i.e., after he switched to movies and after I tried some others like Pattukkottai Prabhakar)..liked your language style.
ReplyDeleteValliappan K Dr Coimbatore