In தொடர்கதை

தேவதையின் காதலன் - 5

அடுத்த இரண்டு வருடமும் இப்படித்தான் போனது. ஆனால் எங்கள் இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய பயம் வரத்தொடங்யிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனக்கும் காதலிக்கிறோம் என்று சொல்லிக்கொள்வது நன்றாக இருந்தது. ஆனால் கல்யாணத்தைப் பற்றி நினைத்தபொழுது யாரோ மனதைப் பிழிவது போலிருந்தது. ஆறாம் செமஸ்டர் அதாவது கடைசி செமஸ்டரில் மிகவும் பயந்து போயிருந்தோம். இப்பொழுதெல்லாம் லெட்டருடன் சாயங்காலம் கொஞ்சநேரம் என்னிடம் பேசிக்கொண்டிருப்பாள்.



பெரும்பாலும் அவளுடைய அப்பா அம்மாவைப்பற்றி- அவள் குடும்பத்தைப் பற்றி, சொல்லிக் கொண்டிருப்பாள். அந்தச் சமயங்களில் எங்கள் இருவருக்கும் இடையில் சிவசங்கரி பெரும்பாலும் இருப்பாள். ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நாங்கள் கடைசி செமஸ்டர் ப்ரோஜக்ட் வாங்கியிருந்தோம், ஆளுக்கு ஒன்றாய். ஏற்கனவே இருக்கும் மொத்த புரோஜக்டையும் நாங்கள் படித்து முடித்து, கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

இடையில் சிவசங்கரி, கௌசியின் வீட்டிற்குப் போய் இரண்டு நாள் தங்கியிருந்தாள். என்ன பேசினார்களோ, அதை கௌசியின் அம்மா எப்படிக் கேட்டார்களோ தெரியாது, கௌசியை அழைத்து மெதுவாய் பேசியிருக்கிறார்கள். அந்த நாளில் இருந்து கௌசி என்னிடம் பேசமாட்டாள்; லெட்டர் வருவதும் நின்றது. என்னுடைய பயம் அதிகமானது. ஆனால் எங்கள் கடைசி செமஸ்டர் தேர்வுகளும், புரோஜக்ட் பற்றிய எண்ணங்களும்தான் அதிகமாக வந்தது. சங்கரிதான் அண்ணே அவங்க வீட்டில் என்னமோ சொல்லியிருப்பாங்க போலிருக்கு. ஆனா நீங்க பயப்படாதீங்கன்னு சொல்லி என்னைத் தேற்றிக்கொண்டிருந்தாள்.

ப்ரோஜக்ட் சப்மிட் செய்தாகிவிட்டது, வைவாவும் முடிந்திருந்தது. அவள் சிவசங்கரியிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள். நான் பக்கத்தில் வருவதைப் பார்த்தால் விலகிச் சென்றுவிடுவாள். நானும் சரி இப்பொழுது பேசவேண்டாம்மென்று விட்டுவிட்டேன். நாட்கள் குறைந்துவிட்டது, தேர்வுகள் நெருங்கின. கடைசி ஸ்டெடி ஹாலிடேக்களில் நான் அவளைப் பார்க்கவேயில்லை. அடுத்தநாள் எக்ஸாம் தொடங்குகிறது. அவள் நாங்கள் படிக்குமிடத்திற்கு வந்தாள். சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகு என்னைப் பார்க்க வந்திருந்தாள்.

"தாஸ் எங்கம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு! முதலில் அழுதாங்க பிறகு, நீ அந்தப் பையன்கிட்ட இனிமே பேசினா நம்ம வீட்டில இன்னொரு சாவு விழும்னு சொன்னாங்க. நான் ரொம்ப பயந்து போயிருக்கிறேன். இந்த காலேஜ் படிப்பை வைச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது தாஸ். அதனால நீங்க என்னை மறந்திடுங்க, நீங்க ரொம்ப நல்லவரு; நானா உங்ககிட்ட பேசாதவரைக்கும் நீங்களா வந்து பேசாம இருந்தீங்கள்ள, இதுபோலவே இருந்திடலாம். எங்கவீட்டில் இன்னொரு சாவு விழுவதைவிட நாம பிரிஞ்சி இருக்கிறதுதான் நல்லாயிருக்கும். அம்மாகிட்ட நான் உங்களைப் பத்தி பேசவேயில்லை, இன்னமும் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதை நினைச்சாலே மனசு படபடன்னு அடிச்சுக்குது. எனக்கு சுத்தமா தைரியம் கிடையாது. உங்களை என்னால மறக்க முடியுமான்னு கேட்டா தெரியாது. ஆனா கடவுள் அருள் இருந்தா, நாம மீண்டும் சந்திக்கலாம். நான் அப்பவே இப்படித்தான் நினைத்தேன் அதனால்தான் உங்களை காதலிக்கிறேன்னு கூட நான் சொல்லலை. என்னை மன்னிச்சிருங்க தாஸ், எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட நான் இதைச் சொல்லியிருப்பேன். ஆனா அடுத்தநாளே ஊருக்கு போறோம், நீங்க இதை எப்பிடி எடுத்துக்கிறீங்கன்னு எனக்கு தெரியணும் அதான் இப்ப சொன்னேன். நல்லா படிங்க, நல்லா எக்ஸாம் எழுதுங்க, நல்ல வேலைல சேருங்க, பார்ப்போம் கடவுள் நம்மளை சேர்த்து வைக்கிறாராருன்னு. 90 சதவீதம் நடக்க வாய்ப்பேயில்லை, நம்மக்கிட்ட இருந்தது சாதாரணமான நட்பா நினைச்சு மறந்திருங்க தாஸ். உங்களுக்கு என்னைவிட நல்ல பொண்ணு கிடைப்பாள்..." சொன்னவள் நெருங்கி வந்து உதட்டில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நான் சுதாரிப்பதற்குள் மறைந்து போனாள்.

இது நான் ஒருவாறு யோசித்திருந்ததுதான் ஆனால் நேரில் அவள் சொன்னதும் என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. அடுத்த ஐந்து நாள்கள் என்னிடம் கண்ணாமூச்சி ஆடினாள். நாங்கள் எக்ஸாம் ஹாலிற்குள் நுழைந்ததும் உள்ளே வருவது, நான் வெளியே வருவதற்குள் திரும்பிவிடுவது என்று. அவளுக்கு நன்றாகத் தெரியும், நான் எக்காரணம் கொண்டும் எக்ஸாமோடு விளையாடமாட்டேன் என்று. ஆனால் கடைசி எக்ஸாம் வேகமா எழுதிவிட்டு வந்து பார்த்தேன், அப்பொழுதுதான் வெளியே வந்து கொண்டிருந்தாள். நான் அவள் அருகில் போக நினைத்தேன். அங்கிருந்தே கைகூப்பி அழுது வராதீங்கன்னு சைகைகாட்டினாள். பிறகு பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். நான் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

o

வாழவே பிடிக்கலை, அவளைப் போய் வீட்டில் பார்ப்போம் என்று நினைத்தேன் அதற்கும் மனது இடமளிக்கவில்லை. நான் இப்படி பைத்தியமாய் அலைவதால் வீட்டில் பயந்துபோய், என்னை டெல்லி சித்தப்பா வீட்டிற்கு பேக் செய்தார்கள். மனசு முழுக்க திருச்சியில் இருக்க, நான் மட்டும் டெல்லிக்குப் போனேன். சித்தப்பா வீட்டிற்கு போய் சில காலம் சிம்லா, குல்லு, மணாலியென்று ஊரைச் சுற்றிவிட்டு அவர்கள் ஆசைக்காய், பிறகு வேலையில் சேர்ந்தேன். அதன் பிறகு வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்ததால், வார நாட்களில் அவள் ஞாபகம் வராது. வாரக் கடைசியில் வாழ்க்கை கொடுமையாக இருக்கும்.

நான் முனிர்க்காவில் இருந்து கிளம்பி, கனாட்பிளேசிற்குப் போய்விடுவேன். அந்த பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தை பார்த்துக்கொண்டே நிற்பேன். இல்லையென்றால் இந்தியா கேட்டில் உட்கார்ந்து பிள்ளைகள் விளையாடுவதைப் பார்ப்பேன். அந்த இரண்டு நாள்கள் ஓடுவதற்குள் நான் பலமுறை செத்துப் பிழைத்துவிடுவேன். டெல்லியில் சிலசமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வேலையிருக்கும்; கலீக்குகள் வெறுப்புடன் வர நான் மட்டும் சிறிது சந்தோஷமாய் வருவேன். அவளை சிறிது மறந்திருக்கலாமே. எனக்கு நம்பிக்கை சுத்தமாய் போயிருந்தது. இனிமேல் அவளை சந்திப்பதாவது; கல்யாணம் செய்துகொள்வதாவது. ம்ஹூம்; முடியாது என்ற முடிவிற்கு வந்தேன்.

காலேஜ் கான்வொக்கேஷனுக்குக் கூட போகவில்லை நான். அப்பா அம்மாவும் போகவில்லை, பிறகு டிகிரியை ஆஃபிஸ்ரூமிலிருந்து வாங்கினார்கள். எப்பொழுதாவது பிரபுவோ ராஜேஷோ மெய்ல் அனுப்புவார்கள். நான் கான்வொகேஷன் சமயத்தில் வந்த மெயிலில் கேட்டிருந்தேன், கௌசி வந்திருந்தாளா என்று. அதற்கு அவன், அவள் வரவில்லையென்றும் அதன் பிறகு ஒரு செய்தியும் அவளைப்பற்றி இல்லையென்றும் சொல்லியிருந்தான். சிவசங்கரியும் வரவில்லையென்றும் அவளுக்கு வேறொரு இடத்தில் அவள் மாமனுடன் கல்யாணம் ஆகிவிட்டதென்றும், கௌசியைப் போலவே சங்கரியும் பிரபுவிடம் வந்து அழுது, மறந்துடுங்கன்னு சொன்னதாகவும் சொன்னான். ஆனால் உண்மையில் பிரபு சங்கரியை மறந்துதான் போயிருந்தான். விஜியென்றொரு அவன் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான்.

வருத்தமாக இருந்தது, நான் கௌசிக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் அவள் இல்லாத ஒரு கல்யாண வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த மெயிலுக்கு பிறகு நான் தாடியை ஷேவ் செய்துகொள்ளவில்லை, அது வளரத்தொடங்கியது. நான் என் சோகத்தை வெளியில் காட்டியது இப்படி மட்டும் தான். ஆபிஸில் கூட சிலமுறை சொல்லிப் பார்த்தார்கள், நான் செய்ய மாட்டேன் என்று மறுக்கவே விட்டுவிட்டார்கள்.

ஒரு வருடம் இப்படியே டெல்லியில் ஓடியது. ஆனால் அவள் முகமும் அந்தக் காதலும் என் மனதை விட்டு அகலவேயில்லை. ஆனால் நம்பிக்கை போயிருந்தது. நல்லகாலம் எங்கள் குடும்ப வழக்கப்படி 28,29ல் தான் கல்யாணம் செய்வார்கள். அதற்கு இன்னும் 7,8 ஆண்டுகள் இருந்தது. நான் நினைத்தேன் அதற்குள் இந்த ஞாபகம் மறந்துவிடுமென்று. ஆண்டுகள்தான் ஓடியது. ம்ஹூம் முதல் காதல் மறந்துபோகவேயில்லை.

o

வேலை மாறி நான் பெங்களூர் வந்தேன்; இங்கே கொஞ்சம் அதிக சம்பளம். இரண்டாம் வருடம் இங்கே கழிந்தது, அற்புதமான ஊர், அழகான மக்கள், சுமாரான சேலரி என அத்துனையும் வரப்பெற்றேன். காதல், கௌசி, தாடி மட்டும் மாறவேயில்லை. இப்பொழுது முடியும் வளர்க்கத் தொடங்கியிருந்தேன்; போனிடைல். இடையில் ஊருக்குப் போயிருந்த பொழுது கொஞ்சம் கூட மறைக்காமல் பிச்சைக்காரனைப்போல் இருக்கிறாய்னு அம்மா சொன்னார்கள்.

இங்கே ஒரு வருடம் பெங்களுரில் ராஜேஷ் மற்றும் பிரபு பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்தார்கள். சிலசமயம் எப்படி வேலை வாங்குவது எனக் கேட்டு சில மெய்ல்கள் வரும்; அவ்வளவே. நான் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியில் நல்லவிதமாய் வேலைசெய்து நிறைய கற்றுக்கொண்டிருந்தேன். பெங்களுர் ஒரு சௌத்இண்டியன் சிட்டி கிடையாது என்றுதான் சொல்லுவேன். எல்லா ஊரிலுமிருந்து மக்கள் வந்து குடியேறிக்கொண்டிருந்தார்கள். நான் வேலை செய்த மகாத்மா காந்தி ரோடு, மிகப் பிரசித்தம். அத்துனை ஊர் மக்களையும் குறிப்பாக, நிறைய பெண்களை குறைந்த ஆடைகளுடன் பார்க்கலாம்.

குறைந்த ஆடை பெண்களைப்பற்றிச் சொல்லியதால் இதைப்பற்றியும் சொல்ல வேண்டும், நான் வேலை செய்த கம்பெனியில் நிறைய முழு ஆடை அணிந்த பெண்கள் இருந்தார்கள். இதற்கு என் கம்பெனியைத் தவிர பெங்களூரில் குறைவான ஆடை அணிந்த பெண்களே இருந்தார்கள் என்ற பொருள் ஆகாது. நான் கம்பெனியில் சாமியார் என்று பெயர் எடுத்திருந்தேன். பதினெட்டு மணிநேரம் கம்பெனியில்தான் இருப்பேன், வேலைசெய்து கொண்டு. மீதி நேரம் கம்பெனியிலேயே தூங்கிக்கொண்டு இருப்பேன். எங்கள் கம்பெனி அதற்கு அனுமதி கொடுத்திருந்தது.

நான் வேலை செய்துகொண்டே பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதேசமயம் என்னுடைய வேலை சம்மந்தமான சில சர்டிபிகேஷன்களும் செய்து கொண்டிருந்தேன். அதன் காரணமாக ஒரு நல்ல சம்பளத்துக்கான வேலை புனேவில் கிடைத்தது. ஆனால் இடம் ஒரு பெரும் காடு. நான் டெல்லியில் கனாட்ப்ளேசிலும், பெங்களுரில் மகாத்மா காந்தி ரோடிலும் வேலை பார்த்து, புனேவில் காட்டில் வேலைபார்ப்பதை போன்ற உணர்வே அதிகமாக ஏற்ப்பட்டது. ம்ம்ம் இப்படியே புனேவிலும் ஒரு வருடம் ஓடியிருந்தது. இடையில் நான் ப்ரோஜக்ட் சம்மந்தமாய் சிலமுறை ஐரோப்பாவும் சென்றுவர, மூன்று ஆண்டு முடிவில் என் கையில் பட்ட மேற்படிப்பும் மூன்றாண்டு வேலைசெய்த எக்ஸ்பீரியன்சும் இருந்தது.

எனக்குச் சுலபமாய் இப்பொழுதெல்லாம் கௌசியின் நினைப்பு வராது. நான் நிச்சயமாய் சாமியார் கிடையாது. பார்த்த சில மணிநேரத்தில் லவ்லெட்டர் கொடுத்த நான் சாமியாராக இருக்க முடியாது. கம்பெனியில் சிலசமயம், சில பெண்களைப் பார்க்கும் பொழுது கௌசியின் ஞாபகம் வந்துவிடும். நான் நினைப்பேன் அவளுக்கு கல்யாணமாகி இந்நேரம் ஒன்று இரண்டு குழந்தையிருக்கும் என்று. இப்பொழுது தாடியும் நன்றாக வளர்ந்து முடியும் நீளமாக போனிடைல் போட்டு, பார்க்க சாமி யார் மாதிரியே இருந்தேன்.

அம்மாவிடம் சின்னவயதில் விவேகானந்தரைப் பற்றி கேட்டு, அவரைப் போலவே ஆகவேண்டும் என நினைத்ததுண்டு, சில சமயம் அம்மாவை பயமுறுத்தியிருக்கிறேன், சாமியாராய் போகிறேன் என்று. அம்மா கூலாய் சொல்லுவார்கள், நீ இந்த உலகத்தில் கஷ்டப்படுவதை விட விவேகானந்தரைப் போலவோ, இல்லை மிலிட்டிரியில் சேர்ந்து தாய்நாட்டுக்காக உயிரை விட்டாலோ சந்தோஷம்தான் என்று. அப்பொழுது விளையாட்டாய் சொன்னது இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஞாபகம் வரத் தொடங்கியிருந்தது.

அன்றைக்கு ஒரு நாள், என்னிடம் வந்த புரோஜக்ட் மேனேஜர், "தாஸ், புரோஜக்ட் லீடர் வரவில்லை, புரோஜக்ட் பெஞ்சில் இருந்து ஒரு டெவலப்பர் எடுக்க வேண்டும். இன்டர்வியூ பண்ண வர்றியா?"

இது பல சமயம் நடக்காது; இதுவரை நடந்ததேயில்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் வெறும் பிஎஸ்ஸி என்பதால் பலசமயம் கூப்பிடமாட்டார்கள். ஏனென்றால் நிச்சயம் நான் இன்டர்வியூ பண்ண இருப்பவர்கள் பிஈ படித்தவர்களாகவோ இல்லை, அதற்கு மேல் படித்தவர்களாகவோத்தான் இருப்பார்கள்.

"கிரீஷ், ப்ராப்ளம் வராதுன்னா பரவாயில்லை. வேணும்னா நீ நம்ம கிருஷ்ணகுமாரை கூப்பிட்டுக்கோயேன்." வயதில் மிக மூத்தவன்தான் என்றாலும் கம்பெனி பழக்கம் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதுதான்.

"அதுவும் இல்லாமல் பையன் என்னைப் பார்த்து பயந்திரப்போறான்." நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

"அவன் பயப்படுகிறானோ இல்லையோ, நான் உன்னை முதலில் பார்த்ததும் பயந்திட்டேன்." சொல்லிச் சிரித்தான்.

"சரி கிரீஷ், நீ ஆரம்பிச்சிறு; நான் வந்து கலந்துக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம்!" சொன்னதும் அவன் கிளம்பினான். நான் ஒரு பத்து நிமிஷம் கழித்து உள்ளே போனேன்.

அங்கே சோபாவில் ஒரு பெண் உட்கார்ந்து என்னவோ குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். கொஞ்சம் குண்டாய் இருந்தாள். அவளை கிரீஷ் அவளுடைய பழைய புரோஜக்ட் ஆர்க்கிடெக்சர் வரையச் சொல்லியிருக்கணும். கருத்தாய் வரைந்து கொண்டிருந்தாள்.

நான் நேராய் அவனிடம் போய், "கிரீஷ் பையன்னு சொன்னே, பெண்ணு இருக்கு?"

"இந்த ரெக்ருட்மெண்ட் டிபார்ட்மெண்ட் எப்பவுமே இப்படித்தான். நாம ஏதாவது ஒன்னு சொன்னா அதுக்கு நேர்மாறா எது இருக்கோ அதைத்தான் செய்வாங்க. ஃபிரஷ்ஷர் அனுப்புங்கடான்னா எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களை அனுப்புவாங்க. இன்னிக்கும் பார் பையன்னு சொல்லிட்டு பெண்ணை அனுப்பிட்டாங்க. உன் கொஸ்டின்ஸ் கிளயர் பண்ணி இந்தப் பெண்ணு ப்ரோஜக்ட்ல வந்து, ம்ம்ம் இன்னும் பத்து மெயில் அனுப்புனும் நான் இன்னொரு ஆள் பிடிக்க." எப்பொழுதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் கிரீஷ் இந்தியில் சொன்னான் இதை அதுவும் அந்தப் பெண் இருக்கும்போதே. மிகவும் நல்ல மனிதன் கிரீஷ்; இப்படிச் செய்யவே மாட்டான். நான் ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தேன். அவன் ஆங்கிலத்தில், "இது தமிழ்நாட்டுப் பெண்ணாம், இந்தி தெரியாதாம். பேர் என்னவோ சொன்னிச்சே?" சொல்லி யோசிக்க, அந்தப் பெண் தலைநிமிர்ந்து, "என் பெயர் கௌசல்யா ரங்கனாதன்." என்றாள்.

o

அவளே தான், ஆனால் நன்றாய் குண்டடித்திருந்தாள். என்னை அடையாளம் தெரிந்ததா இல்லையா தெரியவில்லை, ஒருவேளை இன்டர்வியூ பயமாய் இருக்கலாம். நானும் கரடிபோல் இருந்தேன். சுடிதார் போட்டு, ஷால் போட்டிருந்ததால், தாலி இருக்கிறதா பார்க்க முடியவில்லை, கால்களை டீப்பாய்க்குக் கீழே வைத்திருந்ததால், மெட்டி போட்டிருந்தாளா தெரியவில்லை. அப்பா பெயரும் ஞாபகமில்லை, ரங்கனாதனா... அந்த சமயத்தில் உண்மையிலேயே என் மூளை வேலை செய்யவில்லை; நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்; அவளும் தான்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த கிரீஷ், "தாஸ் இவங்களை உனக்கு முன்பே தெரியுமா?" நான் அவன் கேட்டது புரியாதது போல் முழிக்க, அவன் திரும்ப ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான். நான் தெரியும்னு தலையாட்டியதும், "சரி பேசிக்கிட்டு இருங்க, நான் வந்திருறேன்." சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான். நான் சொன்னேனல்லவா கிரீஷ் நல்ல மனிதன்னு அந்தப் பண்புதான்.

நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க, அவள்தான் ஆரம்பித்தாள்,

"உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?"

"இல்லை..."

"யாரையாவது காதலிக்கிறீங்களா? காதலிச்சீங்களா எனக்கப்புறம்?"

"இல்லை... ஆமாம் ஏன் கேக்குற இதையெல்லாம். என்ன இவ்வளவு குண்டாயிட்ட?"

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் அதான்."

"அப்பிடியா ரொம்ப சந்தோஷம். உனக்கு எத்தனை குழந்தைங்க, புருஷன் என்ன வேலை பார்க்கிறார்?" கேட்டதும் சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தவள்.

"உதை வாங்குவீங்க, நீங்கத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தை கொடுக்கணும்." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

"என்னடி சொல்ற?" நான் பதற்றமடைந்தேன்.


"பின்ன நான் உங்கள காதலிச்சனா? ஊர்ல இருக்கிறவனையெல்லாம் காதலிச்சனா? உங்ககூட தானே நான் சினிமாவுக்கு, கோயிலுக்கெல்லாம் வந்தேன். அதுசரி இதென்ன கோலம் சாமியார் மாதிரி, ஆனா முன்னவிட இப்பத்தான் நீங்க அழகா இருக்குறீங்க." நான் இப்ப அந்த இன்டர்வியூ ரூமிற்குள் இருப்பதாக நினைக்கிறீங்களா. ம்ஹூம் நான் எங்கேயே பறந்து போய்க்கிட்டிருந்தேன். பறந்து.......

யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு திரும்பிய என்முன்னால் கிரீஷ் நின்றிருந்தான்.

"கூல்டிரிங்ஸ் வரச்சொல்லவான்னு கேட்கவந்தேன்."

அவனை திரும்பிப் பார்த்து, "சாப்பாடே எடுத்துட்டு வரச்சொல்லுங்க கிரீஷ்!"

நான் சொன்னதும் நம்பாததைப் போல் பார்த்தவன், பிறகு என்ன நினைத்தானோ சிரித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டான். நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் பழைய கௌசியில்லை; சிறிது சதை போட்டிருந்தாள். முடியின் நீளம் அதிகமாகியிருந்தது. மற்றபடிக்கு அதே முகம், அதே கண், அதே..., என்னால் என் கண்களை நம்பவேமுடியவில்லை. நான் அவளை இப்படி பலமுறை கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். பார்வை கொஞ்சம் ஏடாகூடமாய் ஆனதும் ஒன்று என்னைத் தலையில் கொட்டித் திருத்துவாள், இல்லை அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவாள். ஆனால் இன்று இரண்டும் இல்லை. அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"சரி என்ன நடந்துச்சு இந்த மூணுவருஷமா சொல்லு?"

நான் மெதுவாய் எங்கள் பக்க சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தேன், அவள் என் எதிரில் இருந்த சோபாவில் இருந்து எழுந்து வந்து என்னருகில் உட்கார்ந்தாள் பிறகு, "அம்மாகிட்ட வந்து நடந்ததச் சொன்னேன், இனிமே உங்களை பார்க்க மாட்டேன்னு சொன்னேன். நான் வீட்டுக்கு வராதீங்கன்னு சொன்னாலும் மீறி நீங்க வருவீங்கன்னு நினைச்சேன், ஒரு நாள் சங்கரி கல்யாணம்னு ஃபோன் பண்ணின பொழுதுதான் தெரிந்தது, நீங்க டெல்லிக்குப் போய்ட்டீங்கன்னு. என்னதான் பாக்க வராதீங்கன்னு சொன்னாலும் மனசு கேக்கலை, இரண்டு நாள் அழுதுக்கிட்டேயிருந்தேன், என்னன்னு கேட்ட அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன், நீங்க டெல்லி போய்ட்டதா. அம்மாவால நம்பவே முடியலை. அவங்க நினைச்சாங்க, நீங்க வீட்டுக்கு முன்னாடி ஆளுங்களை கூட்டிக்கிட்டு வந்து ரகளை பண்ணுவீங்கன்னு. இப்படியே நானும் அம்மாவும் ரகசியமா இதைப்பத்தி பேசுறதை பார்த்த அப்பா என்கிட்ட வந்து, என்ன விஷயம்னு கேட்டார். நான் அம்மாகிட்டு கேளுங்கன்னு சொன்னேன். அன்னிக்கு நைட்டு அவங்க ரூமில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது." சொல்லிவிட்டு நிறுத்தியவள் பிறகு, என் ஒரு கையை எடுத்து அவள் கையில் வைத்துக் கொண்டாள்.

"அடுத்த நாள் என்கிட்ட வந்த அப்பா, ’கௌசி, ஏற்கனவே ஒரு சாவு விழுந்ததால உங்க அம்மா ரொம்ப பயப்படுறா, ஆனா நான் இன்னொரு சாவு விழுந்துடக்கூடாதுன்னு பயப்படுறேன். உங்கக்காவும் இதே தப்பைதான் பண்ணினாள். உனக்கு ஒரு இருபது வயசு இருக்குமா. அதுக்குள்ள காதல்னுட்டு..., சரி அது போகட்டும் நீ உங்க அக்கா மாதிரி கிடையாதுன்னு எனக்குத் தெரியும். சொல்லு அந்த பையன் யாரு, நல்ல பையனா, படிப்பானா, குடும்பம் எப்படி, உன்னையும் கொன்னு, எரிச்சு, சாம்பலை ஆத்தில கரைக்கிற அளவுக்கு திடம் இப்ப இல்லை. நான் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுறேன்..' அப்பா சொன்னதும் நமக்குள்ள நடந்த அனைத்தையும் அப்பாகிட்ட சொன்னேன்.

நீங்க டெல்லியில இப்ப இருக்கிறதாகவும், ஏதோ வேலை பார்ப்பதாகவும் சொன்னேன். நீங்க பிரச்சனையெதுவும் பண்ணாமல் நான் சொன்னதும் போனீங்க பாருங்க அதில் தான் எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷமே. நானும் சொல்லிட்டேன், "அப்பா நான் தாஸ்கிட்ட சொல்லிட்டேன் என்னை மறந்துடுங்கன்னு; அவனும் சோகத்தையெல்லாம் மனசில வைச்சுக்கிட்டு என்னைத் தனியா விட்டுட்டுபோய்ட்டான். ஆனா நிச்சயமா ஒரு நாள் திரும்பி வருவான். நீங்க அதுவரைக்கும் ஒன்னும் பண்ணவேண்டாம். வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் நானும் மேல்படிப்பு எதாச்சும் படிக்கிறேன்"னு சொன்னேன். அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கப்புறம் என்ன, பிரபுகிட்ட கேட்பேன் நீங்க எங்க இருக்கிறீங்க, என்ன பண்ணுறீங்கன்னு.

ஆனா என்னைப்பத்தி சொல்லவேணாம்னு சொல்லியிருந்தேன். உங்களுக்கும் என்ன சின்ன வயசுதானே, இன்னும் கொஞ்சநாள் போகட்டும்னுதான் விட்டுவைச்சேன். ஒரு விஷயம்தான் உறுத்திக்கிட்டேயிருந்தது, என்னடா இது நாம ஒன்னும் அவ்வளவு அழகில்லை நம்மளுக்கே முதல்நாள் லவ்லெட்டர் கொடுத்தவராச்சே, டெல்லியில் ஃபிகருங்களெல்லாம் சூப்பரா இருக்குமே. எங்க கவுந்திடப் போறீங்களோன்னு தான் ஒரே பயம். ஆனா நான் உங்களை நம்பினேன். நீங்க எனக்கு பத்திரமா திரும்பக் கிடைப்பீங்கன்னு முழுசா நம்பினேன். அதே சமயம் நீங்க நல்ல வேலையில் இருந்து வந்தீங்கன்னா நம்ம கல்யாணம் சீக்கிரம் ஆகிடும்னுதான் அப்படிச் செய்தேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு மட்டும் தான் தெரியும். ஏன்னா எனக்கும் பிரபுக்குமே தொடர்பு அவ்வளவா கிடையாது."

"அப்ப இந்தக் கம்பெனி?"

"இல்லை தெரியாது, நீங்க புனேவில் இருக்கிறதா தெரியும் அவ்வளவுதான், நானும் மூணு வருஷம் காத்துக்கிட்டிருந்தாச்சு, இனிமேலாவது உங்களை பார்க்கலாம்னுதான், இந்தக் கம்பெனியில் இன்டர்வியூ கிளியர் பண்ணி சேர்ந்தேன். இங்க வந்து தேடிக்கலாம்னு. நீங்க இந்தக் கம்பெனியில் இருப்பீங்கன்னு தெரியாது."

அவள் சொல்வதை நம்பமுடியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும், ரொம்ப நேரம் அழுகழுகையா வரும். என்னடா உங்கக்கிட்ட இப்படி பண்ணுறமேன்னு, என்கிட்டயாவது நீங்க எழுதின லவ்லெட்டர், புரோக்கிராம் பத்தி எழுதின லெட்டர், கவிதைகள், நான் எழுதி, நீங்க படிச்ச லெட்டர்ன்னு இருந்துச்சு, உங்ககிட்ட என் நி னைவா ஒன்னுமே கிடையாது, அந்தக் கடைசி முத்தத்தை தவிர; இப்படி பண்ணிட்டமேன்னு சில நாள் ராத்திரி முழுக்க அழுதிருக்கேன். சில சமயம் முடியாம மெய்ல் அனுப்பிரலாம்னு நினைப்பேன். ஆனா கட்டுப்படுத்திக்கிட்டேன். சோகமா இருக்கிறப்பல்லாம் உங்க லவ் லெட்டரை படிச்சால் சிரிக்கத் தொடங்கிவிடுவேன்.

எப்படி ஒருத்தனால் முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கு லவ்லெட்டர் தரமுடியும், அதுவும் முதல் நாளே; இதை யோசிக்காத நாளே கிடையாது. நானே நினைச்சு நினைச்சு சிரிச்சிக்கிட்டு இருப்பேன், அம்மா பார்த்துட்டு பயந்திருவாங்க. ஆமாம் தாஸ் நீங்க எனக்குப் பிறகு அழகான பொண்ணுங்களை பார்க்கவேயில்லையா?"

"நீ ஒன்னு! சூப்பரானா பெண்ணுங்களையெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா உன்னை மறக்க முடியலை. என்ன சொன்ன? உன் நினைவா ஒன்னுமேயில்லைன்னா; இருக்கு; நீ போட்டு என்கிட்ட கொடுத்த செயின்!" கையில் ப்ரேஸ்லெட் மாதிரி போட்டுக்கொண்டிருந்ததைக் காண்பித்தேன்.

"சில சமயம் எனக்கு உன்மேல் ரொம்பக் கோபமா வரும். அதுவும் யாராவது ஒரு பொண்ணும் பையனும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு பைக்ல போறதைப் பார்த்தா அப்பிடியே பத்திக்கிட்டு எரியும். அப்புறம் இந்த செயினைக் கழட்டி என் லாப்டாப் மேல போட்டு, அதை நீயா நினைச்சுக்கிட்டு கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டி, என் மனசை சமாதானப்படுத்துக்குவேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

"ஆனா ஒன்னு இப்ப உன்னைப் பார்த்த பிறகு சொல்றேன், உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எங்க சித்தப்பா சொல்லியிருக்காரு, சந்தோஷத்துக்கும் குண்டாயிருக்குறதுக்கும் சம்மந்தமே கிடையாதுன்னு. நீ நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி, இப்ப குண்டா அசிங்கமா இருக்க, இதைவிட இங்க புனாவில ஃபிகருங்க எல்லாம் சூப்பரா இருக்குங்க, அதில ஒரு குஜராத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பண்ணிப்பேன். ம்ஹூம் உன்னைப் பண்ணிக்க மாட்டேன்." நான் சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தேன்.

"தாஸ் வேணும்னா சொல்லுங்க இரண்டு மாசம் சாப்பிடாம இருந்து, ஒல்லியாயிருறேன். நீங்க விளையாட்டுக்குத்தான் சொல்றீங்கன்னு தெரியும், ஆனால் இனிமேல் விளையாட்டுக்குக் கூட அப்பிடி சொல்லாதீங்க. ஆளையும் பார்க்காம, உங்களை பத்தி முழுவிவரமும் தெரியாம, நீங்க யாரையும் காதலிச்சிருக்க மாட்டீங்க, கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்க மாட்டீங்கன்னு வெறும் உங்க மேல வெச்ச நம்பிக்கைலதான் வாழ்ந்துக்கிட்டிருந்தேன். ஆனா அதைத்தவிர வேற ஒரு பிரச்சனையே கிடையாது இந்த மூணு வருஷத்துல; அதான் கொஞ்சம் குண்டாயிட்டேன்."

நான் அவளை இன்னும் வம்பிழுக்க எண்ணி, "இல்லை கௌசி, இந்த மூணு வருஷத்துல, சில சமயம் சாமியாரா போயிடலாமான்னு நினைச்சதுண்டு. அப்பல்லாம், "சாமி நான் சாமியாரா ஆகாம, கௌசியை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவளை திருப்பதி கூட்டிக்கிட்டு வந்து மொட்டை போடுறேன்"னு வேண்டிக்கிட்டேன், அதனால நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா மொட்டை போடவேண்டியிருக்குமே?" கேட்டுவிட்டுச் சிரித்தேன்.

சிறிது நேரம் என்னையே பார்த்தவள், "தாஸ் உங்களுக்காக ஆ·ப்டரால் இந்தத் தலைமுடிய இழக்க மாட்டேனா? நீங்க விளையாட்டுக்கு சொன்னீங்களோ, இல்லை உண்மையா சொன்னீங்களான்னு தெரியாது. நான் சாமிக்கிட்ட இப்படி வேண்டிக்க மட்டும்தான் இல்லை, ஆனா தினம் தினம் சாமிக்கிட்ட சொல்லிக்கிட்டேயிருப்பேன், தாஸை என்கூட சேர்த்துரு, சேர்த்துருன்னு. இப்ப நீங்க சொன்னதை சாமியே என்கிட்ட கேக்கிற மாதிரி எடுத்துக்கிறேன். சாமி அப்பிடியே அழகா உங்களை என்கிட்ட சேர்த்துருச்சு; இனிமேல் நீங்களே மறுத்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் மொட்டைதான்; அதுவும் திருப்பதியில." சொல்லிவிட்டு என்னைக் கட்டிக்கொண்டாள்.

இரண்டு வருடம் கழித்து அவளுக்கும், எங்களுக்கு பிறந்த பெண்ணிற்கும் சேர்த்து திருப்பதியில் மொட்டை போட்டோம்.

முற்றும்.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts