பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே -
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது - மோசிகீரன் - குறுந்தொகை 84 பாலை
பொருள்:
விளக்கம்:
தலைவி, உடன்போக்கில் சென்றவழி, செவிலித்தாய், தலைவி தன்னிடம் வெறுப்பைப் புலப்படுத்தியது தலைவன் மேல் உள்ள விருப்பினால் தான் என்பதை முன்னரே, தான் அறியாமை எண்ணி வருந்துவாளாயினாள். செவிலியர், தலைவியை தன் அருகில் துயிலச் செய்தல் வழக்கம். ‘வியர்த்தனென்’ என்ற தலைவியின் உரை ‘நீ முயங்கற்க’ என்ற குறிப்பை உணர்த்திற்று. அப்பொழுதே அறிந்திருந்தால் தலைவி விரும்பியதைச் செய்திருக்கலாம் என்ற செவிலியின் இரக்கம் இப்பாடலில் புலப்படுகின்றது. தலைவனைத் தழுவிய மார்பிற்கு தாயின் அணைப்பு வெறுப்பைத் தருவதாயிற்று. தலைவியின் இவ்வுணர்வு, ‘பயில்வு’ எனப்படும். “தலைவி, செவிலி முலையிடத்து துயில் வேண்டாது, வேறோர் இடத்தில் பயிறல்”, என இதனை நச்சினார்க்கினயர் விளக்குவர். (தொல்காப்பியம், கலவியல், 23) வேங்கை, காந்தள் ஆகிய மலர்கள், பகற்குறியில் தலைவன் சுட்டிய மலர்கள் என்றும், தலைவி இயல்பாகவே அம்மலர்களின் மணம் உடையவள் என்றும் இருவகையாகவும் பொருள் கொள்ளப்படும். தலைவி, ஆம்பள் மலரை விட தண்ணியளாய் இருந்த போதிலும், இரவு பொழுதில், அவன் நினைவினாள் ஏற்பட்ட உடல் வெப்பம் காரணத்தால் ‘வியர்த்தனென்’ எனக்கூறியதாகவும் கொள்ளலாம். தன்னைப் பிரிவதற்காகவே, தலைவி விலகிச்சென்றனள் என்பதை அப்பொழுது உணரவில்லையே எனச் செவிலி ஆற்றாலாயினாள்.
ஆஅய் வேல் என்பவன், கடையேழு வள்ளல்களில் ஒருவன் பொதியில் மலைத்தலைவன். இரவலற்கு வரையாது ஈபவன், அவன் நல்லாட்சியால் அவன் நாட்டில் பருவமழை பொய்யாது பெய்யும் என்பது ‘மழை தவழ் பொதியில்’ என்ற தொடரால் குறிக்கப்பட்டது.
ஆம்பல் மலரினும் தண்ணியள், கொடிய பாலையில் செல்ல நேர்ந்ததே எனச் செவிலி வருந்தினள் தன்னுடைய முதுகுப்புறம் படுத்துறங்கிக்கிடந்த தலைவியைப் பெயர்த்து, மார்புப் பகுதியால் முன்புறம் தழுவி உறங்கச் செய்த பொழுது, தலைவி அவ்வணப்பைப் பொறாது ‘வியர்த்தனன்’ எனக்கூறியதாகவும் பொருள் கொள்ளப்படும்.
சொற்பொருள்
முயங்குதல் - தழுவுதல்
பெயர்த்தனன் - மீண்டும்; அவளை தன் முகத்தை நோக்கி திரும்பி
துனி - வெறுப்பு
மழை - மேகம்
நாறி - மணம் வீசி
மேற்கோள்
“பிற்றை ஞான்று, தலைமகளது போக்கு உணர்ந்து
செவிலி மயங்கிப் பெரியதோர் கவலையளாய்
நெருநலை இவை செய்தது இது கருதிப் போலும்”
என்ரு கூறியது - இறையனார் களவியல் உரை, 23
“உடன் போக்கிய செவிலி கவன்று உரைத்தத” தொல்காப்பியம், அகத்திணையியல், 39 இளம்பூரணர்.
”குறுக வ்ந்து, குவவு நுதல் நீவி
மெல் எனத் தழீஇயினேன் ஆக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்பப்
பல்கால் முயங்கினள் மன்னே” அகநானூறு 49
”பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே” ஐங்குறுநூறு, 97
”நறுந் தண்ணீரல்” குறுந்தொகை, 70
”ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி” குறுந்தொகை, 62
“பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்கத் துயில் இன்னாதே” குறுந்தொகை 353
பொருள் முடிவு:
தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள், அது, துனி ஆகுதல், இனி அறிந்தேன்.
முனைவர் வி. நாகராசன் உரை
அவனுடன் போய்விட்டாள்
தழுவியபோது
வியர்த்தாள்.
ஏன் என்று அப்போது தெரியவில்லை!
இனி அறிந்தேன்,
ஆய் அரசனின்
மழை தவழும் பொதிய மலையின்
வேங்கை, காந்தள் மலர்களின்
மணம் கொண்டவள்
ஆம்பல் மலரின் குளிர்ச்சியுள்ளவள்.
சுஜாதா
பின்குறிப்பு - என் மச்சான் வாங்கிவந்த சங்கப்பாடல்களை படித்தமாதிரியும் இருக்கும் என்று நினைத்து எடுத்த குறுந்தொகைப் பாடல்களை முடிந்தவரை உரையுடன் தொகுக்க நினைத்தேன் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment