பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து மோகன் தன் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டிவிட்டு பின்னர் கோபமாய் "மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு" என்று சொல்லி வேகமாக அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அன்றைய பொழுதின் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து அவன் கழுத்தை நெரித்து இரவு தூக்கம் வராமல் செய்யத்தொடங்கியது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களின் பொழுது பேச்சுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவன் அன்றைய தலைப்பில் மிக அருமையாகப் பேசி, காந்தி, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் இவர்களின் கருத்துக்களையும் இடையிடையே இட்டு, 'என் சிறுநீரைக் குடித்தால் உனக்கு விடுதலை தருகிறேன்' என்று சொன்ன அமெரிக்க சார்பு பொலிவிய அரசிடம், 'என் தலை மயிறு கூட அந்த சுதந்திரத்தை ஏற்காது' என்று சொல்லி இறந்து போன செகுவாராவின் கருத்துக்களைச் சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் கரவொலி.
பின்னால் வந்து பேசிய அவளை அதற்கு முன்பு மோகன் திருச்சியில் பார்த்ததில்லை, பெரும்பாலும் கல்லூரிக்கிடையிலான பள்ளிகளுக்கிடையிலான பேச்சுப்போட்டிகளில் மிகவும் தெரிந்த நண்பர்களே பங்குகொள்வார்கள். ஆனால் இந்தப் பேச்சுப்போட்டி வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்குமானது - யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். அவன் பேசி முடித்தபின் மேடையேறிய அவள், முதல் வரியிலேயே "முன்னால் பேசிட்டு போனாரே, அவரை நேற்று ஒரு பெட்டிக்கடையருகில் கையில் சிகரெட்டுடன் பார்த்தேன், இவரும் இவர் நண்பர்களும் சேர்ந்து அங்கு போகும் பெண்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள், இப்படிப்பட்ட இவருக்கு செகுவாராவைப் பற்றி பேச அருகதையே இல்லை!" என்று சொல்ல, போட்டி நடந்த இடம் ஒரு பெண்கள் கல்லூரி என்பதால் பலத்த கரகோஷம், அதன் பின்பு அவளுக்கு கொடுத்திருந்த தலைப்பிலும் பேசினாள். அவள் பேசிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பெண்களை மதிக்கும் மோகன், அப்படி நடந்து கொண்டது அவனுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
இதெல்லாம் நடந்து முடிந்திருந்த ஒரு காலையில் மத்தியப் பேருந்து நிலையத்தில் கல்லூரிப் பேருந்திற்காக மோகன் காத்துக்கொண்டிருந்தான், திருவெறும்பூருக்கு அவன் கல்லூரிப் பேருந்து வராதென்பதால் எப்பொழுதையும் போல் இன்னொரு பேருந்து மாறிவந்திருந்தான். விராலிமலை செல்லும் பேருந்துகள் நிற்கும் நிழற்குடை அருகில் நண்பர்கள் ஆசிரியர்களுடன் நின்றுகொண்டிருந்தான். தூரத்தில் வருவது அவனைத் திட்டியவளைப் போல் தோன்றியதால் தூணிற்குப் பின்னால் சென்று மறைந்து கொள்ள உத்தேசித்தான் ஆனால் அவளும் அவர்களுடைய நிழற்குடை அருகில் வந்ததால், இதை இங்கேயே இன்றே முடித்துக் கொள்ள நல்ல வேளையாய்ப் போய்விட்டதே என்று நினைத்தவனாய் நேராய் அவளிடம் சென்று,
"உன்கிட்ட கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்." அவன் சொன்னதும், கொஞ்சம் விலகி வந்தவள், "ம்ம்ம் சொல்லுங்கள்."
"என்னை மன்னிச்சிருங்க, நேத்து கோபத்திலே திட்டிட்டேன், அந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்க கூடாதுதான், ஆனால் சொல்லிட்டேன், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!" சொல்லிவிட்டு அவள் கண்களையே உறுத்துப் பார்த்தான், அவனிடம் கபடமில்லை.
"நேத்திக்கு நீங்க என்னவோ திட்டினீங்கன்னு தெரியும், ஆனா சத்தத்துல என்ன சொன்னீங்கன்னு கேட்கலை, பரவாயில்லை, எம்மேலையும் தப்பிருக்கே, நீங்க சாதாரணமா எடுத்துப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க கோபமாய்ட்டீங்க ஆமா உங்களுக்குத்தான் முதல் பரிசு கொடுத்தாங்க, ஆனா வாங்க நீங்க வரலையே?" கேட்டாள்.
"இல்லை மனசு சரியில்லை, அதான் வாங்கலை, அது ஒன்னும் பிரச்சனையில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க!" என்று சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்துவந்து நின்றான்.
சிறிது நேரத்தில் கல்லூரிப்பேருந்து வந்து நின்றது, அவனும் நண்பர்களும் ஏறி உட்கார்ந்து கொண்ட சிறிது நேரத்தில் அவளும் வந்து உட்கார்ந்தாள். மோகனால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை, உடனே சார்லஸிடம், 'டேய் யார்ரா அவ? நம்ம காலேஜா?' என்று கேட்டான்.
“யாருக்குத் தெரியும், ஃபர்ஸ்ட் இயரா இருக்கும், நம்ம பஸ்ல ஏற்றான்னா நம்ம காலேஜாத்தான் இருக்கும்.” இது சார்லஸ்.
அய்யோ இந்த விஷயம் இதோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் முடியாது போலிருக்கிறதே, இன்னும் ஒரு வருஷம் இவளோட குப்பை கொட்ட வேண்டும் போலிருக்கிறதே என்று அவன் நினைத்தான். ஆனால் வாழ்க்கை வேறு விதமாக நினைத்திருந்தது.
அன்று கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக மாணவர்கள் வரும் நாள், நிர்வாகம் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது அவர்கள் கல்லூரி நிர்வாகம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் நடத்தும் பொறுப்பு மோகனுக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும். எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்திருந்தது, சில கடைசி நேர விஷயங்கள் மட்டும் மீதமிருந்ததன. இரண்டு மணிநேரக் கலைநிகழ்ச்சிகள், 90 சதவீத பொறுப்புகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நடத்துவதை மட்டும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா நிகழ்சிகளையும் ரிகர்ஸல் பார்த்தாகிவிட்டது. மேடையும், நிகழ்ச்சியை நடத்துவதும் மோகன் பொறுப்பில் இருந்தது.
காலையில் கல்லூரிக்குள் நிழைந்ததுமே பிரின்ஸிபால் மோகனிடம், "தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!".
"இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க," என்றான்.
நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள், அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும். இது தெரிந்துதான் மோகன் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகச் சொல்லியிருந்தான், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் நன்றாக நடந்தது.
வாழ்த்துரை கூறவந்த சேர்மன், மிகவும் உற்சாகமாகி மேடையில் நின்று கொண்டிருந்த அவனை அருகில் அழைத்து, “இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்” என்று ஒரே பாராட்டு மழை.
பிறகு "உங்கள்ளேர்ந்து - புதிய மாணவர்களிடம் - ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!" என்று சொல்லி உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். அவனும் அப்போழுதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தான். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான்.
கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் அவன் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.
நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த அவன் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு - அவளுக்கும் சேர்த்து - 'நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக'க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தான்.
நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் அவனிடம் வந்து அப்படி ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் அவன் நினைத்திருக்கவில்லை.
(தொடரும்...)
உள்ளம் உடைக்கும் காதல் 1
Mohandoss
Wednesday, September 21, 2016
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
Mohan,
ReplyDeletei have been expecting a story from you for a long time. Glad you started one. keep writing.
-Ramesh.
boss en palaiya kathaigalaiyae tirumpavum poduringa....
ReplyDeleteonnum puthusa illaya???
எபினேஸர்,
ReplyDeleteஇல்லை வேலைக் காலத்தில் காலாட்டும் விஷயம் இது.
இப்ப கதையை first personல் இருந்து third person மாற்றி வருகிறேன். இன்னும் நீட்டி அகட்டி நாவலாக எழுதித் தள்ளணும்.
முடிவை மாத்தி இன்னும் கொஞ்சம் கதை வளர்க்கலாம். வாய்ப்பிருக்கு.