ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தைப் பற்றியதும் பின்னர் வரப்போகும் பெண்ணைப் பற்றிய எண்ணங்களும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கின்றன. எப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி சிந்திக்காத நாட்களே, நான் வயசுக்கு வந்த பிறகு இருக்காதென்று நினைக்கின்றேன். அந்தப் பெண் அழகாய் இருக்கலாமா? என்னைவிட அதிகம் படித்தவளாய் இருக்கலாமா? ஆங்கில மீடியத்தில் படித்தவளாக இருக்கலாமா ஏனென்றால் நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். கட்டாயமாய் இந்த விஷயங்கள் எதிலுமே என்னைவிட அதிக சம்பளம் வாங்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்வி வரவில்லை, ஏனென்றால், என்னைவிட குறைவாய்ப் படித்த, தமிழ் மீடியத்தில் படித்தப் பெண் அதிக சம்பளம் வாங்கும் வாய்ப்பிருக்காது என்பதல்ல அதற்கு காரணம். அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பப்போவதில்லை என்பதுதான். ஆப்பியஸ்லி வேலைக்குப் போகாத பெண் என்னைவிட அதிக சம்பளம் வாங்க முடியாதில்லையா?
இதெல்லாம் சொல்லப்போனால் ரொம்பவும் சராசரியானவை. பின்நாட்களில் என் நண்பர்களுடைய திருமண விபத்திற்கு பிறகு இந்த பட்டியல் நீண்டது தான் ஆச்சர்யம், அதுவும் முந்தயதைவிடவும் நீளமாய். பொண்ணோட பேமிலி எங்க பேமிலியைவிட வசதியானதாய் இருக்கக்கூடாது. பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருக்க வேண்டும். நிச்சயமாய் ஒற்றைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதே என்பது அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட அத்தனை நண்பர்களின் ஒட்டுமொத்த அறிவுரையாக இருந்தது. அதைப் போலவே பெண்ணிற்கு கலை, இலக்கியம் போன்ற விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும் டீபால்டாக சொல்லப்பட்டது. அப்படி ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு நிச்சயமாய் பெண்ணியம் பற்றி தெரிந்திருக்கும் என்றும் எதற்கெடுத்தாலும் பிறகு சண்டை வருமென்றும் சொல்லித்தரப்பட்டது. இப்படியாக பேச்சுப்போட்டியில் அந்தப் பெண் ஒருமுறை கலந்துகொண்டிருந்தால் கூட நிராகரிக்கும் படியாகக் ஒரு தண்ணீர்ப்பார்ட்டியில் அப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்ட நண்பர் அழுதுகொண்டே கூற, சிறிது நேரத்தில்தான் தெரிந்தது. நண்பருடைய மனைவி சண்டை வந்துவிட்டால் நேரடியாக பாரதி, பாரதிதாசன் போன்ற இன்னபிற ஆட்களின் கவிதை வரிகளைப் பாடிக் காண்பித்து கடைசியில் நீங்களெல்லாம் எப்பத்தான் உருப்புடுவீங்களோ என்றுதான் முடிப்பார் என்பது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல், பெண்ணுடைய சகோதரகள், பொண்ணுடைய சகோதரியுடைய கணவர்கள் இவர்களை விட நீ சம்பளம் அதிகம் வாங்கினால் மட்டும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள் என்றுகூட அட்வைஸ் வழங்கப்பட்டது.
அதென்னமோ கல்யாணம் ஆகிவிட்ட அத்தனை நண்பர்களுக்கும் என்னுடன் தண்ணியடிப்பதில் ஒரு அலாதி திருப்தி, தங்களின் சோகங்களைச் சொல்லி விரைவில் திருமணம் ஆக இருக்கும் ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய வீரர்கள் போன்ற ஒரு உணர்வு வரும்போலிருக்கிறது அவர்களுக்கு. ஆனால் இதற்கெல்லாம் வழியில்லாமல் அப்பாவிற்கு தெரிந்தவர் மகள் என்ற பெயரில் நான் அகிலாவைக் கல்யாணம் செய்து கொண்டேன். பொண்ணு பிராமணப் பொண்ணுன்னு தெரிஞ்சதும் எப்படியாவது இந்தக் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திவிட நான் செய்த அத்தனையும் தவிடுபொடியானது. இன்று பிற்பகல் நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாய் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியெங்கும் இதெல்லாம் நினைவில் வர. நான்கு ஆட்கள் தலைக்கு மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் போன்ற தலைவலி தானாய் வந்தது.
தலைவலியுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் தெரிந்தது, ஆராம்ஸேயாய் கையில் காபித் தம்ளருடன் சோபாவில் உட்கார்ந்து, எதிரில் தேடித்தேடி கஷ்டப்பட்டு வாங்கிய டீப்பாயின் மீது வைத்துக்கொண்டிருந்த, அகிலாவின் கால்கள். அம்மா இன்னொரு பக்கம் உட்கார்ந்திருக்க டீவியில் ஓடிக்கொண்டிருந்த சீரியலைப் பார்த்ததும் அதுவரை கஷ்டப்பட்டு பொத்திக்கொண்டிருந்த கோபம் வார்த்தைகளாய் சீறியது.
"யேய் எனக்கு இப்ப உடனேயே காப்பி வந்தாகணும்."
"ஏண்டா புள்ளத்தாச்சிப் பொம்பளைக்கிட்ட உன் ராங்கித்தனத்தைக் காட்டுற. ஒரு நிமிஷம் இரு போட்டுத் தர்றேன்." அம்மா எழுந்திருக்க, அந்த நொடியே அதுவரை டீப்பாயில் இருந்த ரிமோட் வேகவேகமாக அவள் முதுகிற்கும் அவள் உட்கார்ந்திருந்த சோபாவிற்கும் இடையில் சென்றது.
"அகிலா சொன்னா மரியாதையா கேளு. இப்ப ரிமோட் என்கிட்ட வந்தாகணும்."
அவளிடமிருந்து பதிலேதும் வராமல் உதட்டைச் சுழித்து பழிப்பு மட்டும்தான் வந்தது. எங்க வீட்டுப் பொண்ணுங்க இப்படிச் செய்து பார்த்ததேயில்லை. இதை ஒருநாள் இருவரும் சந்தோஷமாக இருந்த நாள் ஒன்றில் சொல்லிக்காட்ட, உங்க வீட்டுப் பொண்ணுங்களெல்லாம் பொண்ணுங்களே இல்லை என்று அவள் விளையாட்டாகச் சொன்னாலும் நான் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்து பிறகு அக்காவிடம் சொல்லி சமாதானம் ஆனது நினைவில் வந்தது. அவளுக்கு நன்றாகவேத் தெரியும் இந்தச் சமயத்தில் நான் அவளின் பக்கத்தில் கூட வரமாட்டேன் என்று. ஏனென்றால் அவள் எங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள்.
மனதிற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருக்க, கண்களால் நான் கைகளால் செய்ய முடியாததை செய்துகொண்டிருக்க, கண்ணெதிரில் காபித் தம்ளர் நீட்டப்பட்டது, கூடவே தலையில் ஒரு கொட்டுடன்.
"வந்ததும் வராததுமா அவகிட்ட ஏண்டா வம்பு பண்ற? அவ ஒன்னும் சீரியல் பார்க்கலை, நான் தான் பார்த்துக்கிட்டிருந்தேன். போதுமா?"
இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது கடந்த நான்கைந்து மாதங்களாய், நாங்கள் மணாலியில் இருந்து திரும்பியதிலிருந்து அம்மாவின் புல் சப்போர்ட் அவளுக்குத்தான். இது என் கோபத்தை மேலும் தூண்டியது. அதற்கு ஏற்றார்போல் அவள் திரும்பவும் பழிப்புக் காட்ட. அம்மா,
"ஏய் சும்மா இருடீ. நீயும் அவனுக்குச் சமமா வம்பிழுத்துக்கிட்டு." எனக்குச் சாதகமாய் பேசினாலும் கோபம் தலைக்கேற.
"இனிமேல் நான் வேலைக்குப் போக மாட்டேன். இவ குட்டிப் போட்டதும் வேலைக்குப் போய் சம்பாரிச்சுட்டு வரட்டும் நான் வீட்டைப் பார்த்துக்கிறேன்."
"குட்டிப்போடுறன் அது இதுன்னு பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன். என்ன வேலைக்குப் போகணும் அவ்வளவு தானே போனாப்போகுது. என்ன பெரிய விஷயம்? புள்ளப் பெத்துக்கிறத விட பெரிய விஷயம்."
அம்மாவிற்கு இந்தச் சண்டை சின்னப்பிள்ளைத்தனமாய்த் தெரிந்திருக்க வேண்டும். ஷோபாவில் இருந்து எழுந்தவர்.
"நான் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போகப்போறேன். வர்றதுக்கு எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதுதான் நான் உங்க ரெண்டுபேருக்கும் கொடுக்குற டைம். அதுக்குள்ள சண்டபோடுவீங்களோ, இல்லை கத்தியை எடுத்து மாத்திமாத்திக் குத்திப்பீங்களோ தெரியாது ஆனா நான் வந்தப்புறம் வீடு அமைதியாகிடணும். அவ்வளவுதான்."
அம்மா அந்தப் பக்கம் சென்று ஒன்றிரண்டு நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். என்னையே கண்ணிமைக்காமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் மெதுவாய் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அருகில் வந்தாள். அவள் அப்படிப் பார்த்ததற்கான அர்த்தம் எனக்கு நன்றாய்த் தெரியும். என்னை கணக்கிடும் கால்குலேட்டராய் கண்களை மாற்றிக்கொண்டு, வரப்போகும் பொய் மலையில் இருந்து அன்னமாய் உண்மையை கறக்கும் ஒரு நிலைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிதான் அது.
"என்னாச்சு என் செல்லத்துக்கு ஏன் இப்படியொரு கோபம். ஆபிஸில் கோகிலா ஆண்ட்டி ஏதாவது வஞ்சாங்களா?"
இதுதான் எனக்கு அகிலாவிடம் அடியோடு பிடிக்காதது. நான் நடந்த பிரச்சனைய அடியோடு மறந்து வேறொரு பிரச்சனையை காரணம் காட்டி உண்மையான பிரச்சனையில் தெரிந்துவிட்டிருந்த என்னுடைய கையாலாகாத்தனத்தைக் கோபமாக வெளியிட்டுக் மறைக்கலாம் என்றால் அது என் செல்லப் பெண்டாட்டியிடம் நடக்காது. அதுவும் நிறைய பொய்களைச் சொல்லி அடுக்குவதற்கு முன்பே உண்மையான பிரச்சனை கண்டுபிடிக்கப்படும். என்னுடைய பொய்கள் செல்லுபடியாகாத ஒரே ஆள் அகிலாதான். சின்னவயதிலிருந்தே நம்பும்படியாய் பொய் சொல்லி வளர்ந்தவன் ஆதலால் அநாயாசமாய் வெளிப்படும் மூட்டையை அதைவிட அநாயாசமாய் புறந்தள்ளிவிடும் சாம்ர்த்தியம் அகிலாவிடம் நான் எப்போதும் மலைக்கும் ஒரு குணம்.
ஒரு விஷயம் ஒரு நபருக்கு தெரிந்துவிடக்கூடாது என்று அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த விஷயத்தை எந்தவித பிரச்சனையுமில்லாமல் அந்த நபர் கண்டுபிடித்துவிடும் நேரத்தில் ஏற்படும் வாழ்க்கையின் மீதான விரக்தி எனக்கும் ஏற்பட்டது அவளுடைய அந்தக் கேள்வியால். அப்படியிருந்தும் உண்மைவெளிப்பட்டுவிடக்கூடாது என நினைத்து,
"எதுக்குத் தேவையில்லாம அவளை இழுக்குற இங்கே. என் கம்பெனிக்கும் இந்த முடிவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தெரியுமா நான் வேலை செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கு வயசு இருபது. இப்ப முப்பத்தி மூணாகுது. அக்காவிற்கு கல்யாணம் செய்து வச்சு, அம்மா அப்பாவிற்கு வீடு கட்டிக்கொடுத்து. உன்னைக் கல்யாணம் பண்ணி இப்ப குழந்தை பெத்துக்குற வரைக்கும் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.
ஏதாவது கேட்டா உடனே வீட்டைப் பார்த்துக்கிறதும் கஷ்டம் தான்னு ஒரே அலப்பற. அதனாலதான் இப்படி ஒரு முடிவு. இனிமேல் நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சுட்டு வா. நான் உட்கார்ந்து சாப்பிடுறேன். வேணுனா நீ பெத்துப்போடுற குட்டிப்பிசாச பார்த்துக்குறேன்.
நீயே சொல்லு என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம். நிம்மதியா உட்கார்ந்து ஒரு சீரியல் பார்க்கமுடியுதா, மனசவிட்டு ஒரு சீரியல் கேரக்டருக்காக அழ முடியுதா. என்ன வாழ்க்கை அதான் இப்படி ஒரு முடிவு. நீயும்தான் படிச்சிருக்கயில்லை, வேலைசெய்தா என்னவாம்."
நான் சொல்லிமுடிக்க அவள் நினைத்திருக்க வேண்டும், இப்ப பேசி தீர்க்கிற பிரச்சனையில்லை இது என்று அவளாய் நகர்ந்துபோய் பழைய இடத்தில் உட்கார்ந்துகொண்டு பக்கதில் கிடந்த கல்கியை புரட்டத் தொடங்கினாள். நானும் ஒருவாறு அவளை சமாளித்ததாய் மனதிற்குள் நினைத்துக் கொண்டு கை, கால் அலம்பிக் கொண்டுவந்திருப்பேன் அம்மா கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். வந்ததும் வராததுமாய் புதுப்பிரச்சனை.
"டேய் இங்கப்பாரு எனக்கு காலெல்லாம் ஒரே வலியாயிருக்கு. இன்னிக்கு நீ அகிலாவை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போய்ட்டு வந்துரு."
என்னுடைய வேலை காரணமாக ஒரு சமச்சீரான அலுவலக நேரங்கள் எனக்குக் கிடையாது. அதன் காரணத்தால் பொதுவாகவே நான் நடுஇரவில் ஆந்தை போல் உலாவிக் கொண்டிருந்ததால் அகிலாவை டாக்டரிடம் அழைத்துச் செல்வது, வாக்கிங் கொண்டு செல்வது என எல்லாச் சமாச்சாரங்களையும் அம்மாதான் செய்து வந்தார்கள். இதுவரை கடந்த நான்கைந்து மாதங்களில் இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே அவள் என்னுடன் வந்திருப்பாள். இதில் இடையில் ஒரு மாதம் ஆன்சைட் வேறு. அம்மா என்னிடம் நேற்று அகிலாவிற்குத் தெரியாமல் கேட்டுக்கொண்டதற்காக மறுபேச்சுப் பேசாமல் அவளுடம் கிளம்பினேன். அகிலாவிற்கு ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும் என்னுடைய செயல்.
சாதாரணமாகவே வேகமாக நடக்கும் எனக்கு அவள் மெதுவாய் நடந்துவந்ததுதான் காரணமா தெரியாது ரொம்பவே மெதுவாய் நடப்பதாய்ப் பட்டது. பெங்களூர் பசுமையான ஊர், 100 மீட்டருக்குள் ஒரு பூங்காவைப் பார்த்துவிடலாம். அதுவும் நவம்பர் டிசம்பர் மாதத் தொடக்கம் என்பதால் பூங்காவெங்கும் விதவிதமான ரோஜாப்பூக்களைப் பார்க்கலாம். எனக்கும் ரோஜாப் பூக்கள் ரொம்பவும் பிடிக்கும் ஆனால் சாப்ட்வேர் என்னில் ஏற்படுத்திய மாற்றத்தில் மறைந்து போன ஒரு விஷயம் ரோஜாக்களுடன் நேரத்தை செலவிடுவது.
மௌனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் நடை, பக்கத்தில் இருந்த ஒரு பூங்காவில் பெஞ்சில் முடிவடைந்ததைப் போலவே எங்கள் மௌனமும் ஒரு முடிவிற்கு வந்தது. பூங்காவிற்குள் நுழையும் பொழுதே என்னுடைய கைகளை இருகப் பிடித்துக்கொண்டாள் அகிலா. அந்தத் தொடுதல் டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் இருந்தது.
"மோகன் நம்ம பையன் உதைக்குறான் பாருங்க." என்று சொல்லி அவள் கையோடு சேர்த்திருந்த என் கையை அவள் வயிற்றுப் பகுதிகுள் கொண்டுசெல்ல, அநிச்சையாய் என் கைகளை வெளியே உருவினேன். முதலில் நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் செய்தாலும் பிறகு செய்தது அவளுக்கு எவ்வளவு வருத்தம் தரும் எனத் தெரிந்ததால் சமாதனப்படுத்தும் எண்ணத்தில் அவளைப் பார்க்க, அவளோ சப்தமாய்ச் சிரித்தாள்.
"இத்தனை வருஷத்தில் நீங்க இன்னமும் மாறவேயில்லை. தாஸ்."
உண்மைதான், அந்த அந்நிச்சை செயல் அவள் மனதில் எந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தியிருக்கும் என்று எனக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியை நினைத்ததும் எனக்கும் அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. எங்கள் திருமணம் முடிந்து அதாவது தாலி கட்டிமுடித்த பிறகு ஏதேதோ பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் என்னிடம், அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல நான் விழித்தேன்.
அதற்கு அவர் இது சாந்திமுகூர்த்த பூஜைக்காக, கல்யாணம் முடிந்ததும் ஐயர் அவர் வீட்டிற்கும் நாங்கள் எங்கள் வீட்டிற்கும் செல்வதாய் ப்ளான் அதனால் சாந்திமுகூர்த்தத்திற்கு முன்னர் செய்யவேண்டிய சடங்கை இங்கேயே செய்துவிடலாம் என்றே சொல்வதாகவும், சீக்கிரமாக அகிலாவின் தொப்புளில் கைவைக்கச் சொல்ல, அப்படியொரு சடங்கு எங்கள் பழக்கத்தில் கிடையாது என்பதால் என் துணைக்கு அக்காவையோ அம்மாவையோ தேட, பக்கத்தில் இருந்த ஒரே ஆள் அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ தான்.
நான் ஐயர் சொன்னதை மட்டும் செய்யாமல் இந்தப் பக்கம் அந்தப்பக்கம் பார்த்து திருதிருவென முழிக்க, ஐயர் 'ஓய் உம்ம அகமுடையாள் தப்பா நினைச்சுக்க மாட்ட. சும்மா தொடுங்க ஓய்' என்று சொல்ல. நடப்பதையெல்லாம் பார்த்து ஜெயஸ்ரீ சிரிக்க அகிலா என்னுடைய கையை எடுத்து அவள் வயிற்றுப்பக்கத்தில் கொண்டு சென்றாள். அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் இதைச் சொல்லியே ஜெயஸ்ரீ என்னை ஒட்டிக்கொண்டிருந்தாள் 'தொடைநடுங்கி அத்திம்பேர்' என்று. அந்த நினைவுகள் பசுமையாக எழவும். வேகமாய் விலக்கிக் கொண்ட கையை நானாகவே அவள் வயிற்றுப்பக்கம் கொண்டு செல்ல, என் கைகளுக்குக் கீழ் எதுவோ ஒன்று அழகாய் புரள்வதாய்த் தோன்றியது, தொடர்ச்சியாய் அகிலா லேசாய் முனகினாள்.
நான், "நம்ம பொண்ணுக்கு அதுக்காட்டியும் அவசரம் பாரு..." சொல்ல அகிலா,
"வேண்டவே வேண்டாம், உங்களுக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காது. அப்புறம் பொறக்குறது பொண்ணா பொறந்துத் தொலைக்க என்னென்ன பிரச்சனை பண்ணுவீங்களோ." என்று சொல்லி அழகாய்ச் சிரிக்க, நான்.
"இங்கப்பாரு எதுக்கூட எதை கம்பேர் செய்யற. எனக்கு பொண்ணுங்களைப் பிடிக்காதுன்னு யார் சொன்னா. சொல்லப்போனா என்னை நான் பெண்ணியவாதின்னு கூட சொல்லிக்குவேன். ஒரு பெண்ணியவாதிக்கான கடமைகள் எதுஎதுன்னு யாருமே இதுவரை வரையறுத்துச் சொல்லலை. இதுவரைக்கும் நீ எதாவது சொல்லி நான் இல்லைன்னு சொல்லியிருக்கேனா? இப்பக்கூட பாரு உன்னை வேலைக்கு அனுப்பிட்டு வீட்டில் இருக்கேன்னு சொல்றேன். இதைவிட என்ன செய்துவிடமுடியும் ஒரு பெண்ணியவாதியாக. சொல்லப்போனால் இதுமட்டுமே போதும் என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்க." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.
"பெண்ணியவாதியாம் பெண்ணியவாதி, புடலங்காய் பெண்ணியவாதி. எனக்குத் தெரியாது உங்க லட்சணம். இன்னிக்கு கோகிலா எதுவும் வேலை கொடுத்திருக்கும். நீங்களும் செய்திருப்பீங்க, பார்த்துட்டு இதை இப்படி செய்றத விட இன்னொருமாதிரி செஞ்சா நல்லாவும் வேகமாகவும் வேலை செய்யும்னு சொல்லியிருக்கும். அங்க சரி சரின்னு சொல்லிட்டு வந்து உங்க கோபத்தை இங்க காட்டூறீங்க. சரிதானே?"
அவள் சொன்னதன் ஒரு பாதி சரிதான், கோகிலாவிற்கும் எனக்கும் இந்த மாதிரியான ஒரு பிரச்சனை இன்று நடந்தது உண்மைதான். ஆனால் அதுமட்டுமே காரணம் கிடையாது. நான் வேலைக்குப் போகமாட்டென் என்று சொல்லியதற்கு அகிலாவும் ஒரு காரணம்.
நேற்று அம்மா வெளியில் ஒரு வேலை இருப்பதாகச் சொல்லி காரில் இறக்கிவிடச் சொன்ன பொழுது நான் ஒன்றும் யோசிக்கவேயில்லை, சாதாரண நிகழ்வுதானேயென்று. ஆனால் அம்மா வண்டியில் உட்கார்ந்து வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் சொன்னது தான் நான் வேலையை சிறிது நாட்கள் விட்டுவிட நினைத்ததற்கு முக்கியக்காரணம்.
"தம்பி அகிலா ரொம்ப பயப்படறாடா! முதல் பிரசவம் வேற, அம்மா இருந்து பார்த்துகிற அளவுக்கு வசதி பத்தாது அப்படின்னு நிறைய பிரச்சனை. முதல் பிரசவம் என்பது பெண்களுக்கு செத்துப் பிழைக்கிறது மாதிரிடா. உனக்குப் புரியாது. கவலையேப்படாமல் நார்மலாகப் பெத்துப் போடுற பொண்ணுங்க இருக்கலாம். ஆனால் எல்லோரும் அப்படியிருக்க முடியாது.
உன்னை ஏன் இப்படி வளர்த்தேன்னு இப்ப வருத்தப்படுறேன். உங்க தாத்தா பாட்டிய ஏன் என்னைய உங்கப்பாவை கூட எப்படியிருக்கீங்க, உடம்பு நல்லாயிருக்கான்னு கேட்க மாட்ட நீ. நானும் அதை ஒரு பிரச்சனையா பார்க்கவேயில்லை. ஆனால் இதையே அகிலா இப்படி இருக்கிற நேரத்தில் அவள்கிட்ட செய்யக்கூடாதும்மா.
அவ கூட உட்கார்ந்திரு, உடம்பு எப்படியிருக்கு எதுவும் கஷ்டமாயிருக்கான்னு கேளு. அவ இத நேரா உன்கிட்ட சொல்லாட்டியும் நிச்சயமா இத உன்கிட்டேர்ந்து எதிர்பார்ப்பா. உன்னைய பார்க்கிறதே கஷ்டமாயிருக்கு. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டேன்னா கொஞ்ச நாளைக்கு லீவைப் போட்டுட்டு அவக்கூட இரு.
உனக்கும் அவளுக்கும் முந்தி இருந்த பிரச்சனையை நீ முழுசா மறந்திட்டேன்னு எனக்குத் தெரியும் ஏன் அவளுக்கேக் கூடத் தெரியும். ஆனால் இந்த முழுகாம இருக்கிற நேரம் இருக்குப் பாரு எல்லாத்தையும் தப்பாவே நினைக்கச் சொல்லும், நான் சொன்னா நம்ப மாட்ட இதை எப்படி சொல்றதுன்னு கூட நான் நினைச்சேன் ஆனால் பிரச்சனையோட சீரியஸ்னஸ் உனக்குப் புரியணும்னா சொல்லித்தான் ஆகணும்னு சொல்றேன். இந்த ஐந்து மாசத்தில் அவளை தொட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீ இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கன்னு அவ நினைக்கிறா! அதுமட்டுமில்லாமல் நீ ஏதோ தப்பு பண்ணுறீயோன்னு பயப்படுறா, வேற பொண்ணொட தொடர்பு எதுவும் இருக்கும்னு நினைச்சு தினம் அழுகைதான். அதனால் தான் சொல்றேன். கொஞ்ச நாளைக்கு லீவைப் போடு அது முடியாதுன்னு வேலையை விட்டுறு கொஞ்ச நாளைக்கு."
எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது அம்மா சொன்னது, அப்படியுமிருக்குமான்னு. என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவ அப்படின்னு தான் நான் அகிலாவை நினைத்தேன். வார்த்தைகளால் மட்டும் காண்பிக்கப்படுவதில்லை அன்புங்கிறது அவளுக்கு தெரியும் என்றும் நினைத்தேன். ஆனால் அம்மா சொன்னது ஆச்சர்யத்தை அளிப்பதாகயிருந்தாலும் என் செல்ல மனைவிக்காக இதைக்கூட செய்யாம எப்படியென்று தான் வேலையைவிட முடிவெடுத்தேன். அதைச் சொன்னால் ஒருவேளை ஏதாவது காம்ப்ளக்ஸ் வரலாம் என்பதால் கோகிலா மேட்டரையே வைத்துக் கொள்ளலாம் என நினைத்து அகிலா கேட்டதற்கு உண்மை என்பதைப் போல் சிரித்து வைத்தேன்.
In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை பெண்ணியம்
பெண்ணியமும் சில புடலங்காய்களும்
Posted on Saturday, May 02, 2015
பெண்ணியமும் சில புடலங்காய்களும்
பூனைக்குட்டி
Saturday, May 02, 2015
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
இதெப்படி கதையெழுதிட்டு பேர் வைக்கிறதா? இல்லை பேர் வைச்சிட்டு கதையெழுதுறதா?
ReplyDeleteஅருமையான கதை. ஆண்களின தர்மசங்கடங்களை தொட்டு செல்லும் உங்கள் வார்த்தைகளில் உண்மைகள் இழையோடுவதை காண்கிறேன். மாற்றங்களில் பெண்கள் எங்கோ சென்று விட அதிக சுமைகளால் ஆண்கள் விழி பிதுங்கித்தான் நிற்கிறார்கள்.
ReplyDeleteசும்மா ஒரு பின்னூட்ட கயமை, நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்,...
ReplyDeleteரொம்ப குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வி இது அனானிமஸ். பல சமயங்களில் கதையின் தலைப்பைத்தான் முதலில் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
ReplyDeleteகதையின் கரு(அப்படின்னு ஒன்னு இருந்துச்சா)முடிவானதும் முதலில் கதையின் தலைப்பிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் இப்பொழுது.
ஏன் இப்பொழுது என்றால் ஒரு காலத்தில், ஒரு காதல் கதை, மீண்டும் ஒரு காதல் கதை, சற்றே பெரிய சிறுகதை போன்ற தலைப்புக்கலை அநாயாசமகாக வைத்திருக்கிறேன் அதனால் தான்.
அரை பிளேடு நன்றி.
ReplyDeleteஉண்மையில் என்வரையில் இன்றுவரை பொறுப்புக்கள் அதிகமாக ஆண்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது.
சும்மா விளையாட்டுகுச் சொல்லலாம், "ஆண்பிள்ளையோ சாகும்வரை பெண்பிள்ளையோ போகும்வரை" என்று நாம் இந்தநூற்றாண்டிலும் பாட்டெழுதித் திரையில் வருவதை சும்மா கதையென்று. என்வரையில் அதுதான் உண்மை.
இதில் கொடுமை என்னவென்றால் வெளியில் போகவும் போனபிறகும் போய்விட்ட பெண்களுக்கு செய்வதும் தலையில் கட்டப்படுகிறது.
ஏன் இதுவும் கூட ஒரு வகையில் மூடப்பழக்கம்வழக்கம் தானே. நம்ம வீட்டுப் பெண்ணுக்குச் செய்யாட்டி நாம் நல்லாயிருக்க முடியாதுங்கிறது. இதை என் தாய் தந்தையரிடம் கூட சொல்லமுடியாத பொழுது...
என்னவோ போங்கள்.
ரவி என்ன சொல்றதுன்னே தெரியலை. போங்க.
ReplyDeleteஹா ஹா ரவி,கடமையா கயமையா? ;) சரியா பார்த்து போடுங்க, தம்பி வழக்கம் போல் அசத்திவிட்டாய்
ReplyDeleteஅன்பு அண்ணன் :)
தொடர்ந்து வாசிக்க ஈர்க்கும் விஷயம், நடை - அருமை.
ReplyDeleteஆனால், இந்தப் பதிவின் இறுதியில்தான் இது தொடரின் இறுதி என்று கண்டேன். முந்தைய பகுதிகள் வாசிக்கவில்லை - இதுவரை.
சும்மா தமாஷுக்கு:
இது எழுத்துப்பிழையா அல்லது தெரியாம (உண்மையை) சொல்லிட்டீங்களா:)
அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் இதைச் சொல்லியே ஜெயஸ்ரீ என்னை ஒட்டிக்கொண்டிருந்தாள் 'தொடைநடுங்கி அத்திம்பேர்' என்று.
Hai Mohan,
ReplyDeleteI am C.AMBIKADEVI, ERODE. I am finished B.COM(CA). I am working in a office. I am browse tamil blogs by google search. "பெண்ணியமும் சில புடலங்காய்களும்" padichen. Super pa. eppdi ippdiyellam kuda elutha mudiuthu. ennaku inga tamil la type panna yaravathu solikudungalen. pls.
Ithu imaginary story nu comments la irruku. nejamava ?
pls ennaku reply pannunga.
அம்பிகா,
ReplyDeleteநீங்கள் சொன்னதை வைத்து தமிழ் படிக்க முடிகிறதென்று நினைக்கிறேன்.
இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்
http://www.thenkoodu.com/blog/readwrite-in-tamil/
இதில் கூறியுள்ள முறையை தொடர்ந்தால் உங்களாலும் தமிழில் எழுத முடியும்.
அண்ணா நான் ப்ளாக் எழுதுவதைப் பற்றிக் கற்றுக் கொண்டதற்கு நீங்கள் ஒரு காரணம் என்றாலும்.
ReplyDeleteநீங்கள் தற்சமயம் தொடர்ச்சியாக பதிவிடாததாலும் மேலும் சில காரணங்களாலும் உங்களுக்கு செந்தழல் ரவி உபயோகித்த வார்த்தையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
அது கயமை தான். இன்னொரு நாள் விரிவாக விளக்குகிறேன்.
அன்பு என்ன இது விளையாட்டு, அது ஓட்டிக்கொண்டிருந்தாள் தான்.
ReplyDeleteஆஹா இப்படிக் கிளம்புறீங்களே.
என்னவோ போங்க தாஸ் இது கதை என்று நம்ப முடியவில்லை. அடுத்த கதைக்காக வெய்ட்டிங் ...........
ReplyDeleteமதுரா, உங்கள் பின்னூட்டம் என்னை இன்னும் நிறைய எழுதும் படி தூண்டுகிறது. நன்றிகள்.
ReplyDeleteசுப்பு தொடர்ந்து படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன், காத்திருங்கள் இதே தொடரில் இன்னுமொறு சம்பவத்தைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.
அம்பிகாதேவி, இந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால். உங்களின் தமிழில் டைப் செய்யும் ஆசை நிறைவேறியதா, அப்படியில்லையென்றால் என்ன பிரச்சனை என்று சொல்லவும்.
ReplyDeleteமற்றபடிக்கு கதை பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள்.