"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற? நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா?" வெடித்துச் சிதறிய வார்த்தைகளில் அகிலா கொஞ்சம் நொறுங்கியிருக்க வேண்டும். ஒரு மாதமாகவே ஜாலி மூடில் இருக்கும் பொழுதெல்லாம் "நீங்க குறட்டை விடுறீங்க" என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். நான் "நீ சும்மா புருடா விடுற, நானாவது குறட்டை விடுறதாவது. அதெல்லாம் எங்க பரம்பரைக்கே கிடையாது." என்று சொல்லி தட்டிக் கழித்துவந்தேன். இன்று அவளுடைய மொபைலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்து, பழித்துக் காட்டியதும் கோபம் தலைக்கேறியவனாய் வார்த்தைகளைக் கொட்டியிருந்தேன்.
"நான் அப்பவே நினைச்சேன் இன்னிக்கு என்னமோ பிரச்சனை பண்ணப்போறீங்கன்னு" அகிலா நேரடியாய் விஷயத்தில் இறங்கினாள்.
நான் அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் ஒரு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக் கொண்டு பவானியின் அறைக்குள் போக எத்தனித்தேன். படுக்கையறையை விட்டு வெளியில் வந்தவள்.
"எங்கப் போனாலும் இங்கத்தான் வந்தாகணும் தெரியுமில்ல?" என்று சொல்ல
"நினைப்புத்தான் போடி. உனக்கு என்ன வயசாகுதுன்னு ஞாபகத்தில் இருக்கா? அரைகிழவி வயசாகுது நினைப்பைப் பாரு."
அந்த ரூமில் அம்மா ஒரு கட்டிலில் படுத்திருக்க, பவானி இன்னொரு கட்டிலில் படுத்திருந்தான். நான் போய் பவானியின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன். காலையில் எழுந்த பொழுது அகிலா பவானியை அம்மாவின் படுக்கையில் போட்டுவிட்டு இவள் தான் என்னருகில் படுத்திருந்தாள். அம்மா நான் எழுந்த பொழுது பக்கத்தில் இருந்த கோவிலுக்கு போயிருந்திருக்க வேண்டும் ஆள் படுக்கையில் இல்லை. சப்தம் போடாமல் எழுந்து பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பொழுது யாரோ கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது.
"சீக்கிரமா வாங்க. என்ன ஒரு மணிநேரம் வேலை உள்ள?" ஏகச் சப்தமாய் அகிலா கேட்க, முதலில் எனக்கு கோபம் வந்தது. அவள் எதை மனதில் வைத்துக்கொண்டு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று தெரிந்ததும் இன்னும் சப்தமாய்ப் பாட்டு பாடினேன். வெளியில் வந்த பொழுது வாசலிலேயே அவள் நின்று கொண்டிருந்தது தெரிந்தது; நான் மனதுக்குள் சந்தோஷமாய் இருந்ததை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நேராய் கபோர்டிற்கு வந்து அன்றைக்கான டிரெஸ்ஸை போட்டுக்கொள்ளத் தொடங்கினேன்.
"இன்னிக்கென்ன அய்யா இத்தனை சீக்கிரம் கிளம்பியாவது?" அன்று உண்மையிலேயே கொஞ்சம் அதிகமாய் வேலையிருந்ததாலும், சொல்லாமல் போனால் அரைமணிக்கொருதரம் தொலைபேசி உயிரை எடுத்துவிடுவாள் என்று நினைத்தவனாய்.
"இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு. நான் கேன்டீனில் சாப்டுக்கிறேன்."
சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் என்ன யோசிக்கிறாள் என தெரிந்துகொள்ள விரும்பியவனாய். அவள் சரி இன்றைக்கொன்றும் பிரச்சனை செய்யவேண்டாம்; சாயங்காலம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைப்பவளைப் போலிருந்ததது. சரி குறட்டை பிரச்சனையை சாயங்காலம் பார்த்துக்குவோம் என்று நினைத்தவனாய் நானும் உடனேயே ஆபீஸிற்கு கிளம்பினேன்.
வாசலில் பிரச்சனை பெட்டியோடு வந்திருந்தது. அகிலாவின் தங்கை ஜெயஸ்ரீ பெட்டியோடு வந்து கொண்டிருந்தாள் கூடவே அவள் கணவன் கார்த்திக்கும். அவள் கொண்டுவந்திருக்கும் பெட்டியை நோக்கித் தாவும் என்னுடைய கண்களை கட்டுப்படுத்தியவனாய்.
"வாம்மா!" என்றேன். பின்னால் வந்துகொண்டிருந்த கார்த்திக்கிடம் "வாடா!" என்றும் சொல்லிமுடிக்கவில்லை அகிலா வந்துவிட்டிருந்தாள். ஜெயஸ்ரீ வீட்டிற்கு வந்தால் எப்பொழுது எடுத்துக்கொள்ளும் அறைக்குள் பதிலொன்றும் சொல்லாமல் சென்றுவிட கார்த்திக்கும் கண்களாலேயே ஒரு ஆச்சர்யக்குறியை மட்டும் காண்பித்துவிட்டு பின்னாடியே சென்று விட்டான். தொப்பென்று ஹாலில் இருந்த சோபாவில் நான் உட்கார பக்கத்தில் வந்து உட்கார்ந்த அகிலாவிடம்.
"போடீ போய் என்னா விஷயம்னு கேளு. பெட்டியோட வேற வந்திருக்கா?"
"ஏன் நீங்கப் போய் கேக்குறது, உங்களுக்கும் மச்சினி தான அவ. அதுமட்டுமில்லாம என்னமோ என்னோட முத பொண்ணு நீதான் அதுஇதுன்னு சொல்லிதான கல்யாணம் பண்ணிவச்சீங்க. நீங்க போய் கேளுங்க!"
நான் திரும்பி முறைக்க, "என்னங்க இது உங்களுக்கு தெரியாததா ஜெயஸ்ரீ பத்தி, நான் வேற தனியா சொல்லணுமா? அவளா சொல்லாத வரைக்கும் என்ன பிரச்சனைன்னு நான் கேட்டேன் என்னைக் கிழிச்சிறுவா."
நான் இறங்கிவந்தவனாய் "அதில்லம்மா பெண் பிள்ளையில்லையா, என்கிட்ட சொல்றமாதிரியா பிரச்சனையா இல்லாம இருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லாம ஏதோ பிரச்சனையில் வர்ற மாதிரி தெரியறப்ப கேள்வி கேட்காம உட்கார்ந்திருந்தா தப்பா நினைச்சிக்க போறா! சம்பிரதாயமாவாவது ஒரு கேள்வி கேட்டிரு. போ!"
கண்களை நன்றாய் பெரிதாக்கி என்னை மிரட்டியவள், அவர்கள் இருக்கும் அறைக்கு கிளம்பிப் போனாள். அவள் உள்ளே நுழைவதற்கும் கார்த்திக் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது, அகிலா கண்களால் அவனிடம் என்னவென்று கேட்டிருக்க வேண்டும், அவன் முகத்தைச் சுழித்து தனக்குத்தெரியாது என்று தோள்களைக் குலுக்கிக் காட்டியது மட்டும் எனக்குத் தெரிந்தது.
என் பக்கம் வந்தவனை எழுந்து நிறுத்தினேன்,
"என்னடா பிரச்சனை?"
சிரித்துக்கொண்டே "அதை உங்க பொண்ணு சொல்லுவா! நான் கிளம்புறேன்" சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். நானும் உள்ளறைக்குள் நுழைந்தேன். அதுவரை அகிலாவை முறைத்துக் கொண்டிருந்தவள் நேராய் என்னிடம் பாய்ந்தாள்,
"என்ன அத்திம்பேர் நான் இந்த வீட்டிற்கு வரக்கூடாதா?"
"அய்யய்யோ யார் சொன்னா? உங்கக்காவா? நீ தாராளமா வரலாம். இஷ்டம்போல தங்கலாம் இது உன் வீடு மாதிரி ஜெயா. யாரும் எதுவும் கேட்க மாட்டோம். சரியா?" அவளிடம் சொல்லிவிட்டு; அகிலாவை காப்பாற்றும் முகமாய்.
"அகிம்மா பசிக்குது சாப்பாடு எடுத்து வையேன்."
அவள் என் பின்னால் வந்த வேகமே ஜெயஸ்ரீயிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பாள் என்பதை தெளிவாக்கியது. சமையற்கட்டிற்குள் வந்ததுமே,
"யோவ்..." என்றாள்.
நான் திடுக்கிட்டவனாய்,
"என்னாடி இது மரியாதை கொறையுது."
"பின்ன என்னாங்க நான் சொன்னேன்ல அவளையா சொல்லவிடுங்கன்னு. நீங்கதான் சம்ப்ரதாயம் அது இதுன்னு சொன்னீங்க. கடைசில அவகிட்ட ப்ளேட்ட மாத்தி போட்டு என்னைய கெட்டவளா ஆக்கிட்டீங்க. அவளும் சுத்தமா மரியாதை தெரியாதவளா இன்னொரு தடவை கேட்டா பெட்டியை தூக்கிக்கிட்டு போய்டுவேன்னு மிரட்டுறா! உங்க எல்லாத்துக்கும் நான் தான் ஆளா.
ஏன் வந்துட்டு போனானே கார்த்தி அவன் கிட்ட கேக்குறதுக்கு என்ன? நீங்க கேட்டாலாவது அவன் பதில் சொல்வான். என் கூட பொறந்தது அந்த மரியாதையைக் கூட எனக்கு தராது."
அவள் சொன்ன விஷயமும், கையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதமும் எனக்கு சிரிப்பைத் தர.
"சிரிப்பீங்கங்க சிரிப்பீங்க இனிமே இந்தப் பிரச்சனைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியாது. நீங்களாச்சு உங்க மூத்த பொண்ணாச்சு. என்னவோ பண்ணிக்கோங்க."
வேகவேகமாய் அவள் சுட்டுக்கொடுத்த நான்கு தோசைகளை கொட்டிக்கொண்டவனாய், அகிலாவிடமும் இன்னொரு ரூமிற்கு சென்று ஜெயஸ்ரீயிடமும் சொல்லிவிட்டு கம்பெனிக்கு கிளம்பினேன்.
அன்று முழுவதும் வேலை எதுவும் ஓடவில்லை, என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வியே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. நானும் கார்த்திக்கும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தாலும் காலையிலிருந்தே அவனைப் பிடிக்க முடியவில்லை. விண்டோ மெஸெஞ்சரை ஆப் செய்து வைத்திருந்தவன். இரண்டு முறை அவனுடைய இடத்திற்குப் போன பொழுதெல்லாம் ஆள் சீட்டில் இல்லாததால் கேள்விகள் இன்னும் அதிகமாகியது.
சாயங்காலம் நான் வீட்டிற்கு போவதற்கு முன்பே அவன் வீட்டில் இருந்தான். ரொம்பவும் சாதாரணமாக புருஷன் பொண்டாட்டியும் பேசிக்கொண்டிருக்க அகிலாவும் உடன் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
நான் நுழைந்ததும்,
"என்னைய்யா மாப்பிள்ளை இன்னிக்கெல்லாம் ரொம்ப பிஸி போலிருக்கு ஆளை பிடிக்கவே முடியலையே."
"ஆமாண்ணே ஒரு வீடியோ கான்ப்ரன்ஸ் இருந்தது. சாயங்காலம் தான் விட்டாங்க்ய. சீட்டுக்கு வந்ததும் ராஜீவ் திவாரி சொன்னான் நீங்க வந்திருந்தீங்கன்னு. சரி வீட்டுக்குத்தானே போறோம் அங்க பேசிப்பம்னு வந்துட்டேன்." கொஞ்சம் சீரியஸாய் சொன்னான்.
"சரி இருங்க ட்ரெஸ் மாத்திட்டு வந்திட்றேன்." சொல்லிவிட்டு நான் எங்கள் ரூமிற்குள் நகர, அகிலாவும் உடன் வந்தாள்.
"என்னடி சொல்றா உன் தங்கச்சி." அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன்.
"உங்கத்தம்பி ஏகமா செலவு பண்றாராம், இவ கணக்கு கேட்டா சொல்லகூட மாட்டேங்குறாராம். எவ்வளவு சம்பளம் வாங்குறார்னு கூட தெரியாதுன்னு சொல்றா ஜெயா."
அகிலா சொல்லிக்கொண்டிருக்க ஒரு விஷயம் எனக்கு பிரகாசமாய்ப் புரிந்தது. ஜெயா அகிலாவிடம் ஏதோ கதை சொல்லியிருக்கிறாள் என்று. ஏனென்றால் ஜெயஸ்ரீ தான் கார்த்திக் வீட்டின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பதும், அவன் செலவுக்கு கூட அவளிடம் காசு வாங்கிக்கொண்டு வருவதையும் நானே நேரில் பார்த்திருக்கிறேன். அகிலா இன்னமும் என்னன்னமோ சொல்லிக்கொண்டிருந்தாள் ஆனால் ஒன்றும் காதில் ஓடவில்லை, எதற்காக ஜெயஸ்ரீ அகிலாவிடம் மறைக்கிறாள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.
"என்னங்க நான் சொல்லிக்கிட்டிருக்கேன் நீங்க என்னமோ கனவு கண்டுக்கிட்டிருக்கீங்களே!" வெகுசிலசமயங்களில் அகிலாவால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமயம் அன்று.
"சரிம்மா நான் அவன கேக்குறேன். இங்கத்தான தங்கப்போறாங்க."
"ஆமா!" சொல்லியவள், கண்களால் அவங்க அங்க இருக்காங்க நான் போறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். என் யோசிப்பின் எல்லைகளைத் தாண்டி கேள்வி நீண்டது, எனக்குத் தெரிந்து என்னையும் அகிலாவையும் போல் புரிந்துணர்வு கொண்ட நல்ல கப்புள் தான் கார்த்திக்கும் ஜெயஸ்ரீயும். நானாவது அகிலாவை வம்பிழுப்பேன் எனக்குத் தெரிந்து கார்த்திக் அதைக்கூட செய்யமாட்டான். உண்மையில் என்ன பிரச்சனையாயிருக்கும் என்ற கேள்வி ரொம்பவும் பெரியதாய் இருந்தது என்னிடம், அதேசமயம் அதைச் சரியாய் தீர்த்து வைக்க வேண்டுமே என்ற கவலையும். நைட் டிரெஸ் போட்டுக்கொண்டவனாய் வந்து சோபாவில் உட்கார்ந்தேன், உட்கார்ந்ததுமே அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பவானி வந்து மேலே விழுந்தான்.
நாங்கள் சீரியஸ் மேட்டர் பேசப்போகிறோம் என்று அம்மாவிற்கு பட்டிருக்கவேண்டும், நைச்சியமாய் பவானியை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்றார்கள். அம்மா பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவதில்லை; பெரிய பிரச்சனையாயிருந்தால் நானே கொண்டுவருவேன் என்று அவருக்கே தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு பலமான அமைதி நிலவியது எங்களிடையே, பெங்களூர் MG Road போன்ற ரோட்டில் இரவு இரண்டு மூன்று மணிக்கு என் வேலை காரணமாக பயணம் செய்யும் பொழுது புலப்படும் அமைதியை ஒத்திருந்தது. அதைக் கிழித்துக் கொண்டு செல்லும் வண்டியின் சப்தத்தை ஒத்த ஒரு விசயம் அப்பொழுது தேவைப்பட்டது.
"அகிம்மா இன்னிக்கு என்ன சாப்பாடு செய்யப்போற! விருந்தாளிங்கல்லாம் வேற வந்திருக்காங்க எதுவும் ஸ்பெஷலா செய்யேன்."
விருந்தாளிங்க என்று சொன்ன பொழுது ஜெயா திரும்பிப் பார்த்தாள் நான் ஏதோ பூகம்பம் வெடிக்கப்போகிறது என்றே நினைத்தேன். ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்.
"சரி வாங்க போய் காய் கொஞ்சம் வாங்கிக்கிட்டு அப்படியே கொஞ்சம் சாமானும் வாங்கிட்டு வந்திரலாம்." நான் பதில் சொல்லும் முன்பே முந்திக்கொண்டு கார்த்திக், "அண்ணே நான் அண்ணியக் கூட்டிக்கிட்டு போய்ட்டு வர்றேன்." என்று சொல்ல சரி எல்லாரும் ப்ளான் பண்ணி ஏதோ செய்கிறார்கள் என்று நினைத்தவனாய்.
"போய்ட்டுவாயேன். ஏன் ஜெயா நீ போறீயா?" கேட்க, அவர்கள் மூன்று பேரின் முகமும் கேள்விக்குறியாய் மாறியது. அவள் இல்லையென்று சொல்ல கார்த்திக், அகிலாவையும் பவானியையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தான், அம்மா கோவிலுக்கு போய்வருவதாகச் சொல்லி புறப்பட, வீட்டில் நானும் ஜெயஸ்ரீயும் மட்டும்.
"சொல்லும்மா என்ன பிரச்சனை."
நேரடியாய் களத்தில் குதித்தேன். அவளும் ரொம்பவும் கதை சொல்லி சொல்லி களைத்திருக்க வேண்டும் நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.
"அத்திம்பேர் அகிலா உண்டாயிருக்கிறதா சொன்னப்ப நீங்க என்ன செஞ்சீங்க?" ரொம்பவும் சீரியஸாய் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்தக் கேள்வி நிறைய விஷயங்களைச் சொல்வதாய் இருந்தது.
"ஜெயா நீ ஏன் கேக்குறன்னு தெரியாது. நானும் உங்கக்காவும் சண்டை போட்டு ஒரு வருஷம் பிரிஞ்சதும் மொத்த குடும்பவும் சேர்த்து கொடுத்த அட்வைஸ், குழந்த பெத்துக்கோங்கிறதுதான். அது உனக்கும் தெரியும், அதனால் ஒரு மாதிரி கணக்கெல்லாம் போட்டு இருந்ததால எனக்கும் சரி அவளுக்கும் சரி நல்லாவே தெரியும் அந்த மாசம் அவள் கர்ப்பமாய்டுவான்னு. அதனால அவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் இல்லாட்டியும்; ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் ஒரு சாதாரணமான கணவன் தன் பொண்டாட்டி கர்ப்பமாயிருக்கிறதா சொன்னா எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி சந்தோஷப்பட்டேன்.
இதையெல்லாம் ஏன் கேக்குற! நீ முழுகாமயிருக்கியா?"
ஜெயாவுடன் அவ்வளவு பர்ஸனலாக பேசியிருக்காவிட்டாலும், நான் கொண்டிருந்த சுவர் மட்டும் தான் அங்கிருந்தது என்று தெரியும் அவள் பக்கத்துச்சுவர் போய் நிறைய வருடங்கள் ஆகியிருந்தது. அவள் ஆரம்பத்தில் இருந்தே அக்கா புருஷனிடம் எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். அதுவரை தலையைக் குனிந்து தீவிரமாய் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படி ஒரு கேள்வி வந்ததும் நிமிர்ந்து பார்த்தாள்.
"ஆமாம்! எங்க நீங்க கடைசி வரைக்கும் இந்தக் கேள்வியை கேட்காமலே போயிருவீங்களோன்னு நினைச்சேன். பரவாயில்லை மச்சினிகிட்ட இப்படி ஒரு கேள்வியை கேக்குற தைரியம் வந்துச்சே..." நிறுத்தியவள் முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.
"ஆனா பிரச்சனை கார்த்திக் தான், இப்ப குழந்தை வேண்டாங்கிறார். தான் மென்டலாகவும் பைனான்ஷிலாகவும் இன்னும் தயாராகவில்லைன்னு ஒரே பிரச்சனை. உங்களைப் பார்த்தோ என்னமோ மூணு நாலு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு தான் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால் என்னமோ தவறுதலா உண்டாயிருச்சு; கார்த்திக் நம்ப மாட்டேங்குறார் நான் ப்ளான் பண்ணி செஞ்சிட்டேன்னு நினைக்கிறார்..."
"என்ன சொல்றான்?" சொல்லிவிட்டு எதோ தவறு செய்துவிட்டதாய் உணர்ந்தவனாய், "சாரி..." என்றேன்.
"அத்திம்பேர் நீங்க அவரை நேரில் வாடா போடா போட்டுதானே கூப்பிடுறீங்க, அப்புறம் ஏன் என்கிட்ட பேசுறப்ப மட்டும் மரியாதை தரணும்னு நினைக்கிறீங்க. இந்த வெட்டி ஜம்பங்களில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்க என்னையும் வாடி போடின்னு சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன்."
அவள் பேசியதற்கு நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்ததால்.
"சரி நீங்க பேசமாட்டீங்க, அவரு அபார்ஷன் பண்ணிக்கச் சொல்றார். இப்ப இதுதான் பிரச்சனை."
சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், அப்படியே அகிலாவின் பழக்கம். என் வாயிலிருந்து வரும் சொற்களையோ வாக்கியங்களையோ அவள் நம்பவே மாட்டாள். கண்களையே பார்த்துக்கொண்டிருந்து நான் மனதிற்குள் என்ன நினைக்கிறேன் என்பதை கண்டறியும் அதே சாமர்த்தியத்தை ஜெயாவும் காட்டினாள்.
எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது ஏன் என்னால் இப்படி ஒரு பிரச்சனையிருக்க முடியும் என்று யோசிக்கமுடியவில்லை என்று. ஒரு ஆப்பியஸான பிரச்சனை கார்த்திக்கைப் பொறுத்தவரை இப்படி சொல்லியிருக்கக்கூடியவன் தான் ஒரு வகையில் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதென்பதும் அவனுக்கு பிரச்சனைதான், கார்த்திக்கிற்கும் ஜெயாவிற்கும் சின்ன வயது தான். இன்னும் ஒன்றிரண்டு வருடம் நிச்சயமாய் காத்திருக்கலாம் தான். ஆனால் இது ப்ளான் பண்ணி செய்யவேண்டியது, அதுவும் நானும் அகிலாவும் செய்ததுதான். அந்தச் சமயம் நான் யோசித்ததெல்லாம், எனக்கும் அகிலாவிற்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று தான். குழப்பமாகயிருந்தது.
"சரி நீ என்னம்மா சொல்ற இதைப்பத்தி?"
"நிச்சயமா முடியாது அத்திம்பேர், அவர் சொன்னதற்காகத்தான் அத்தனை முன்னேற்பாடும் செய்தது. அப்படியும் இல்லாம வந்ததுக்கப்புறம்... என்னால முடியலை..." அவளுடைய வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை.
"சரி கார்த்திக் அவங்க வீட்டிற்கு தெரியுமா?" கேட்டதும் சிரித்தாள் முதலில்.
"உங்களைத் தவிர யார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாள் அவருக்குச் சாதகமா யோசிக்கக்கூட மாட்டாங்கன்னு அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதனாலத்தான் அக்காகிட்ட கூட சொல்லலை. என்னால அபார்ஷன் பத்தி யோசிக்க முடியலைன்னாலும் கார்த்திக்கோட ப்ளான் நல்லா தெரியுங்கிறதாலத்தான் உங்ககிட்ட சொல்றேன்.
ஏன்னா இதில இருக்கும் சாதக பாதகங்கள் கூட தெரியாம கார்த்திக்கை மாட்டிவிட என்னால முடியலை, இன்னமும் சொல்றேன் இப்ப உண்டாகலைன்னா இரண்டு வருஷம் நிச்சயமா பொறுத்திருப்பேன். ஏன்னா நீங்க பவானிய எப்படி வளர்க்குறீங்கன்னு பக்கத்தில் இருந்து பார்க்குறேங்கிறதால பிள்ளையைப் பெக்குறதை விட வளர்க்குறது கஷ்டம்னும் முக்கியம்னும் நல்லா தெரியுது. ஆனாலும் அத்திம்பேர் என்னால அபார்ஷனை ஒத்துக்க முடியாது."
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, இது நிச்சயமாய் கார்த்திக்கும் ஜெயாவும் முடிவு செய்யவேண்டிய ஒரு விஷயம். இன்னும் சொல்லப்போனால் ஜெயாவிற்குத் தான் அதிக உரிமை உண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் கலைப்பதற்கும்.
"நான் வேணும்னா கார்த்திக்கிட்ட பேசிப்பார்க்குறேனே? சரியா?"
பதிலெதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.
"சரி இதனால பிரச்சனை எதுவும் செய்றானா?" திரும்பவும் கொஞ்ச நேரத்தில் "சாரி!" என்றேன். அவள் என்னை திருத்த முடியாது என்று நினைத்திருக்கலாம்.
"நீங்க வேற இப்ப அவருக்குத்தான் நிறைய பிரச்சனை. உண்டாயிருக்கிற பெண்ணை வேற பார்த்துக்கணும் அதே சமயம் அதுக்கு எதிராவும் யோசிக்கணும்." சோகமாய்ச் சிரித்தவள் "முன்னை விட இப்ப டபுள் கேர். அவரைப் பார்த்தாலும் கஷ்டமாயிருக்கு!"
நானும் கொஞ்சம் சோகமாயிருந்தேன், என்னால் அவர்கள் இருவரின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.
"சரி உன்பக்கத்து முடிவு தான் என்ன சொல்லும்மா!"
மூச்சை இழுத்துவிட்டவள்,
"என்ன சொல்லச் சொல்றீங்க, எனக்கு அபார்ஷன் பண்ணிக்கிறது பிடிக்கலை. ஆனா கார்த்திக்கிற்குப் பிடிக்காமல் குழந்தையைப் பெத்துக்கிறதும் சரியாப் படலை. கடைசி வரைக்கும் ஒத்தைக்காலில் நின்னார்னா பண்ணிக்க வேண்டியதுதான்..." சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்கள் கலங்கியிருந்தது.
"என்னம்மா இது நாங்கல்லாம் இருக்கோமில்ல இப்படி கண் கலங்கினா கஷ்டமாயிருக்குல்ல. கண்ணைத் தொடைச்சிக்கோ அகிலா வர்ற சமயமாய்டுச்சு. நான் அவன்கிட்ட பேசுறேன்"
சொல்லிமுடிக்கவில்லை, கண்களைத் துடைத்தபடியே, "சாரி..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள். நானும் சிரிக்க கார்த்திக், அகிலா, பவானி உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது. இருவருக்குமே ஜெயா சந்தோஷமாகயிருந்தது ஆச்சர்யமாகவும் அதேசமயம் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படியே பவானிக்கும் சித்தி வந்ததில் இருந்தே ஒரு மாதிரியே இருந்ததால் பக்கத்திலே கூட போகாதவன் ஜெயா சிரித்து கொண்டிருக்க அவளிடம் பாய்ந்தான். நானும் கார்த்திக்கும் பதற, ஜெயா ஒன்றுமில்லை என்று கண்களால் சமாதானப்படுத்தினாள்.
பவானியுடன் கொஞ்சம் நேரம் விளையாடிக்கொண்டிருந்தால் கொஞ்சம் மாறுதலாக இருக்குமென்று நானும் ஒன்றும் சொல்லாமல் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதாய் பாவலா காட்டிவிட்டு எங்கள் ரூமிற்குள் நுழைந்தேன்; அகிலாவும் உள்ளே நுழைந்தாள்.
"என்னங்க எதுவும் சொன்னாளா? எனக்குத் தெரியும் என்கிட்ட அவ பொய் சொல்றான்னு."
"அகிலா ஒன்னும் கண்டுக்காத நான் ராத்திரி சொல்றேன். இப்ப போய் வேலையைப் பாரு."
சாப்பாடு முடிந்து எங்கள் ரூமிற்குள் வந்ததுமே ஆரம்பித்தாள்.
"சொல்லுங்க என்ன பிரச்சனை?" நான் அவளையே பார்த்தேன் சிறிது நேரம். பிறகு
"சொல்றேன் ஆனா உடனே பிரச்சனையை கிளப்ப மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணிக்கொடு." கேட்டு கையை நீட்டினேன்.
அவளுக்கு ஈகோவை கிளப்பியிருக்க வேண்டும், ஏற்கனவே தங்கை தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் என்னிடம் சொன்னதில் புகைந்து கொண்டிருக்கிறவள் அவளிடம் இப்படி கேட்டதும்.
"நீங்கதான் சத்தியம் பண்ணுறதையெல்லாம் நம்பமாட்டீங்களே அப்புறம் என்ன?"
"நான் தான நம்பமாட்டேன் நீ நம்புவல்ல, பண்ணு!" கையில் அடித்தவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னேன், முடித்ததும் தான் தாமதம்.
"எனக்கு அப்பவே தெரியும் இப்படி ஏதாவதுயிருக்கும்னு சொல்லாம கொள்ளாம நீங்களும் அந்த கல்லுளிமங்கனும் என் தங்கச்சிக்கு அபார்ஷன் செஞ்சிருந்தாலும் இருப்பீங்க. இருங்க இப்பவே உங்கம்மாகிட்ட சொல்றேன்." என்று ஆரம்பித்தவளை பிடித்து அமிக்கினேன்.
"இங்கப்பாரு இதை உன் தங்கச்சிச் செய்யத் தெரியாதா? இல்லை நாங்க ரெண்டு பேரும் அபார்ஷன் செஞ்சு வைக்கிறோம்னாலும் ஒன்னும் தெரியாம செஞ்சிக்க உன் தங்கச்சி என்ன பப்பாவா? கொஞ்சம் சும்மாயிரு இந்தப் பிரச்சனையை பொறுமையாத்தான் தீர்க்கணும்." நிறுத்தியவன் "நீ இந்தப் பிரச்சனை தெரிஞ்சதாவே கூட காட்டிக்காத, ஜெயாவுக்கு ஈகோ பிரச்சனையாயிரும். தன்னோட இஷ்டத்துக்கு ஒரு குழந்தை பெத்துக்க முடியலைன்னு. அதனால் இத உணர்ச்சிப்பூர்வமாயில்லாம அறிவுப்பூர்வமாத்தான் தீர்க்கணும் சரியா. ஏன்னா நீ பண்ணப்போற பிரச்சனையால புருஷன் பொண்டாட்டி கிட்ட பிரச்சனை வரக்கூடாதில்லையா?"
நான் என்னன்னோ சொல்லிக்கொண்டிருக்க அவள் வேறெதுவோ நினைத்துக்கொண்டிருந்தாள் நான் நிறுத்திவிட்டதை உணர்ந்ததும்.
"மாசமாயிருக்கிற பெண்ணை இப்படில்லாம் இன்னொரு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரக்கூடாது. அதுக்குன்னு எவ்வளவு சம்ப்ரதாயம் இருக்கு, தடிப்பயல்களுக்கு எங்கப் புரியும் இதெல்லாம். பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு கலைச்சிடுன்னு சத்தமில்லாமச் சொல்றது; இருக்கு அவனுக்கு ஒருநாள்."
அவள் பேசியதையெல்லாம் பார்த்தால் இவள் பிரச்சனையை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்று தோன்றினாலும், என்னை மீறி ஒரு கேள்வி கேட்கமாட்டாள் என்ற நம்பிக்கையிருந்ததால் ஒன்றும் பேசாமல் தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுக்க யத்தனிக்க.
"எங்க கிளம்புறீங்க?"
"இல்லை உன்னை எதுக்கு கஷ்டப்படுத்திக்கிட்டு நான் தூங்குறப்ப குறட்டை விடுவேன். உனக்கு கஷ்டமாயிருக்கும் நான் வெளியில் போய் படுத்துக்கிறேன்." நான் சீரியஸாய் பேசிக்கொண்டே வாசலை நோக்கி நகர்ந்தேன்.
"இன்னும் ஒரடி எடுத்து வைச்சீங்கன்னா நான் கடுப்பாய்டுவேன் தெரியுமா?" இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கண்களை உருட்டி மிரட்டினாள். நான் திரும்பி அவளைப் பார்க்க,
"ஒரு வருஷமாவே குறட்டை தான் விடுறீங்க, நான் எதுவும் சொன்னேனா. என்னமோ ஒரு நாள் வீடியோ எடுப்போமே அழகை அப்படின்னு எடுத்தா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. அவங்க இருக்கிற வரைக்குமாவது ஒழுங்கு மரியாதையா இங்கப் படுத்துக்கோங்க. அதுக்கப்புறம் என்ன எழவையோ பண்ணுங்க நான் கேட்டனா?"
கோபமாய் ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது அவள் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திருக்க வேண்டும் சிரிக்கத்தொடங்கினாள். நான் தலையணையையும் பெட்ஷீட்டையும் திரும்பவும் படுக்கையில் போட்டபடி,
"அப்ப பவானிக்கு ஒரு தங்கச்சி பாப்பா ஏற்பாடு பண்ணுவோமா?" கேட்க, திரும்பவும் தலையணையை எடுத்தவள், "இல்லல்ல நீங்க வெளியிலேயே படுத்துக்கோங்க!" சொல்லிவிட்டு வேகவேகமாய் அவள் போர்வைக்குள் புகுந்தாள்.
காலையில் எழுந்ததும் கார்த்திக்கை அழைத்து, "வா கொஞ்ச தூரம் நடந்துட்டு வருவோம்!" என்று சொல்லி அழைத்துச் சென்றென்.
"ஜெயா எல்லாம் சொன்னா நீ முடிவா என்ன தான் சொல்ற!"
"அண்ணே ஜெயா உங்கக்கிட்ட எதிர்பாராம நடந்துருச்சின்னு தானே சொன்னா ஆனால் அவ வேணும்னே செஞ்சிட்டான்னே!" கொஞ்சம் கோபப்பட்டவனாய்ப் பேசினான்.
"சரி இருந்துட்டு போகட்டும் கார்த்தி அதுக்கு என்ன பண்ண முடியுங்கிற, அவ இல்லவே இல்லைங்கிற தெரியாமத்தான் நடந்துருச்சுங்கிறா? இப்ப என்னடா பிரச்சனை சரி உனக்கு இன்னும் வயசு அதிகம் ஆகலைங்கிறது ஒரு விஷயம்தான்னாலும் இது சரியான வயதுதாண்டா குழந்தை பெத்துக்கிறக்கு. இங்கப்பாரு இப்ப நான் இருக்கேன், அகிலா இருக்கா உங்க வீட்டில் எல்லாரும் இருக்காங்க எங்க வீட்டிலேயும் ஆள் இருக்காங்க. அப்படி ஒன்னும் விட்டிட மாட்டோமில்லையா?" நான் கேட்க,
"என்னண்ணே இது அதுவா பிரச்சனை? இன்னும் நான் மென்டலா தயாராகவேயில்லைண்ணே! நான் ஒன்னும் குழந்தை வேணாம்னு சொல்லலையே, கொஞ்சம் பொறுத்து செய்துக்கலாம்னு தானே சொல்றேன். இதிலென்ன தப்புயிருக்கு சொல்லுங்க நீங்களும் அண்ணியும் பண்ணலை?" திரும்பவும் பழைய நிலைக்கே வந்தான்.
"என்ன கண்ணா இது தயாராகலை அது இதுன்னு சொல்லிக்கிட்டு கல்யாணம் ஆனாலே இதுக்கெல்லாம் தயாராகிட்டேன்னு தான் அர்த்தம்." சிரித்தேன், அவனும் கலந்து கொண்டான். "Jokes apart, இங்கப்பாரு எனக்கும் அகிலாவுக்கும் சண்டை வரும்னு நீ நினைச்சிருப்பியா? ஆனா டைவொர்ஸ் பண்ணிக்கிற அளவிற்கு சண்டை போட்டோம் ஒரு வருஷம் தெரியுமா? நான் உனக்கும் ஜெயாவுக்கும் அப்படி ஆகும்னு சொல்ல வரலை. ஆனால் இதை நல்ல மாதிரியா எடுத்துக்கோ கார்த்தி, உன் நிலைமை எனக்குப் புரியுது. ஆனால் நீ ஜெயாவைப் பத்தியும் யோசிக்கணும் இல்லையா? அவ ரொம்ப பயப்படுறா இப்ப வயத்தில இருக்கும் குழந்தைக்கு எதுவும் செய்திட்டா நாளைக்கு குழந்தையே பிறக்காமப் போய்டும் அப்படின்னு..." நான் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சோகமாய்ச் சிரித்தான்.
"அண்ணே அதெல்லாம் சுத்த ஹம்பக்னே எல்லா இடத்திலையும் எத்தனை அபார்ஷன் நடக்குது தெரியுமா? நாம என்ன திருட்டுத்தனமாவா பண்ணப்போறோம் நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க அவங்கக் கிட்ட சொல்லி செய்வோம்னே. நீங்களும் சும்மா இந்தக் கதையை சொல்றது வருத்தமாயிருக்குண்ணே!"
"டேய் என்னைய என்னத்தாண்டா பண்ணச் சொல்ற, அவளை அபார்ஷன் பண்ணிக்கோன்னு சொல்ற தைரியம் என்கிட்ட இல்லை. உங்க வீட்டுக்கோ இல்லை என் வீட்டுக்கோ தெரிஞ்சா பெரிய பிரச்சனையாய்டும். நானும் சரி ஜெயாவும் சரி பிரச்சனையை சரியா புரிஞ்க்கிட்டிருக்கிறதாலத்தான் உன்கிட்ட பேசிக்கிட்டிருக்கோம் இல்லைன்னா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருப்போம்ல. கண்ணா ஆனா ஒரு விஷயம் முழுமனசோட நீ சம்மதிச்சா மட்டும் ஜெயாவை குழந்தை பெத்துக்கச் சொல்வேன். ஏன்னா ஒரு குழந்தை வளர்க்கிறதில் அம்மாவோட பங்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அப்பாவோடதும். அதனால் உனக்குப் பிடிக்காம இதைச் செய்யமுடியாது கண்ணா என்ன சொல்றது. யோசிச்சு ஒரு முடிவு சொல்லு, அபார்ஷன் தான் செய்யணும்னு நீ சொன்னா வேறவழியில்லை அதுவும் கன்ஸர்னில் இருக்குங்கிறத மறந்திடாத.
இன்னொரு விஷயம் இன்னிக்கு நீ அவள் குழந்தை பெத்துக்கிறதுக்கு சம்மதிச்சா நீ ஜெயிச்சிட்டதாதாத்தான் அர்த்தம் அதை மட்டும் புரிஞ்சிக்க. உன்னோட கொள்கை எல்லாத்தையும் விட்டுட்டு ஜெயா மனசாலும் உடலாலும் கஷ்டப்படுவான்னு விட்டுட்டன்னு வை. அவ மனிசில உன்னைப் பத்திய பிம்பம் ரொம்ப உயர்வா பதிக்கப்படும். இதே அபார்ஷன் அவ செஞ்சான்னு வை பின்னாடி அவளோட டாமினேஷன் அதிகம் இருக்கத்தான் செய்யும் அதையும் நினைச்சிக்க. இப்பவே கொஞ்சம் போல உன் வீட்டுல மதுர ஆட்சி தான்னு நினைக்கிறேன். அதைச் சிதம்பரமாக்க வேண்டியது உன்கையில் தான் இருக்கும்.
உனக்கு இருக்கிற திறமைக்கு நீ நல்ல ஆளா வருவ அதைப் பத்தி யோசிக்காத, முதல்ல கொஞ்ச நாள் கடியாத்தான் இருக்கும் அப்புறம் எல்லாம் சரியாய்டும் என்ன?"
முன்பே கார்த்திக்கும் இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்திருக்க வேண்டும்.
"அண்ணே என்னண்ணே இது நீங்க மட்டும் குழந்தை பெத்துக்காம மூணு வருஷம் ஜாலியா இருந்துட்டு என்னைய மட்டும் இப்படி மாட்டி விடுறீங்களே!" சிரித்தபடி சொன்னான் ஆனால் அவனுக்குள் துக்கம் இருந்திருக்க வேண்டும்.
"டேய் நான் ஒன்னு சொல்றேன் நினைவில் வைச்சுக்க, குழந்தை பெத்துக்கிறதால ஜாலியா இருக்க முடியாதுங்கிறதெல்லாம் சும்மா பக்வாஸ். ஜாலியா இருக்கிறதுக்கும் குழந்தைக்கும் சம்மந்தம் கிடையாது கண்ணா உன் பெண்டாட்டிக்கு ஓக்கேன்னா அப்புறம் குழந்தை அம்மா அப்பா எல்லாம் அப்புறம் தான்." சொல்லி கண்ணடித்தேன்.
"ஆனால் ஒத்துக்குறதுன்னாலும் உடனே ஒத்துக்காத கொஞ்சம் போல பிகு பண்ணிட்டு அப்புறமா ஒத்துக்க, அப்புறமென்னா குழந்தை மேல உனக்குத்தான் அதிக உரிமை கிடைக்கும். என்ன புரிஞ்சுதா!"
கார்த்திக் ஒருவழியாய் வழிக்கு வந்தவனாய்த் தெரிந்தான். ஒரு வாரம் கார்த்திக் பிகு பண்ணிக் கொண்டிருக்க என்ன நடந்ததோ இல்லையோ குறட்டை பிரச்சனை தலையெடுக்கவேயில்லை. மணாலிக்குப் போகாமலேயே பவானிக்கு தங்கச்சிப் பாப்பா ரெடியாகிக் கொண்டிருந்தாள்.
"ஒரு விஷயம் தெரியுமாங்க, இந்த ஒரு வாரமா நீங்க குறட்டையே விடுறதில்லை" சிரித்தாள். இருக்கலாம் பிரச்சனைகள் அதிகம் தலைக்குள் போய்க்கொண்டிருந்ததால் தூக்கமே வராமல் கண்களை மூடி படுத்திருந்ததால் எப்பொழுதும் இருக்கும் நிம்மதியுணர்வு இல்லாமல் குறட்டை வராமல் இருந்திருக்கலாம்தான். சயின் டிபிக்கா இதெல்லாம் சரியாவருமான்னா அதைக் கடவுள் கிட்டத்தான் கேட்கணும்.
"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா! எப்பவுமே நான் குறட்டை விடுறதில்லை நீ அன்னிக்கு ஏதோ டப்பிங் பண்ணியிருக்க. நான் வாயே அசைச்ச மாதிரி தெரியலை, ஆனா "கொர்ர்ர்ர்"ன்னு சப்தம் மட்டும் வருது. எனக்கு அப்பவே சந்தேகம் தான். இப்ப உன் வாயாலேயே உண்மை வந்துடுச்சு பார்த்தியா" என்று சொல்ல செல்லமாய் அடித்தவள்.
"தங்கச்சிப் பாப்பாவுக்கு மணாலிக்கு போகலாம்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே" என சீண்டினாள்.
"நீயும் உன் தங்கச்சியும் புள்ள பெத்துட்டு வாங்க ஒரேயடியாய் போய்ட்டு வந்திடுவோம் என்ன சொல்ற" வாய்தான் சொல்லிக்கொண்டிருந்தது மனம் முழுவதும் தலைக்கு மேல் வந்த பிரச்சனையை சுலபமாய்த் தீர்த்துவிட்டோம் என்ற எண்ணத்திலேயே சிறகில்லாமல் பறந்தது.
மச்சினிச்சி வந்த நேரம்
பூனைக்குட்டி
Saturday, May 02, 2015
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
நல்ல கதை தொழரே..... மேலும் சிறப்பான கதைகளை வழங்க என் வாழ்த்துக்கள்......
ReplyDeleteநன்றி தோழரே.
ReplyDeleteநல்லா இருக்கு மோகன். ரசிச்சு படிச்சேன்.
ReplyDelete//உள்ளே நுழைவதற்கும் சரியாகயிருந்தது//
அது 'சரியாத்தான்' இருக்கனுமா? :-))
இந்த மாதிரி cliche கொஞ்சம தவிர்த்தீங்கன்னா கொஞ்சம் fresh-ஆ இருக்கும்னு தோனுது. :-)
//கொஞ்சம் fresh-ஆ இருக்கும்னு தோனுது.//
ReplyDeleteகொஞ்சம் freshஆ இருக்க கிளிஷே தவிர்க்கணுமா? ஹிஹி.
அதுசும்மா நிச்சயம் அடுத்தக் கதையில் முயற்சிக்கிறேன்.
இது கதையா இருந்தா பாராட்டுக்கள். எனக்கென்னமோ நடந்த சம்பவமாட்டத் தோணுது. எதுவா இருந்தாலும் வாழ்த்துக்கள். கலக்குறே மோகந்தாஸூ
ReplyDeleteநடந்த சம்பவமா தோணுதுன்னா அதுதான் எனக்கு கிடைச்ச வெற்றின்னு சொல்வேன். ;)
ReplyDeleteநல்லா இருக்கு மச்சி..
ReplyDeleteபழைய ஸ்டைல் இல்லையே ???
ReplyDeleteஇதுவே பழசு தானுங்க. 2007/07 பதிவின் url பாருங்க. ;)
ReplyDelete