"டேய் மைதிலிக்கு கல்யாணமாம்டா. உனக்குத்தான் மொதப்பத்திரக்கை வச்சிரிக்கா ஒழுங்கு மரியாதையா வந்து சேரு... அவளைக் கல்யாணம் தான் பண்ணிக்க மாட்டேன்னுட்ட, கல்யாணத்தை பார்க்கிறதுக்காகவாவது வந்துசேரு."
அம்மாவிற்கு பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற மூன்று விஷயங்களில் அடங்கிவிடும், என்னுடைய வேலையின் தீவிரம் புரிந்ததில்லை, உங்கக்காவிற்கு மாப்பிள்ளை பாத்திருக்கோம் வந்து சேரு, சித்திக்கு உடம்புக்கு சரியில்லையாம் வந்து சேரு, அவ்வளவுதான் அமேரிக்காவிலிருந்து நான் கிளம்பிவிட வேண்டும், பணம் என்பது இரண்டாவது பிரச்சனைதான். நான் அங்கில்லாத இரண்டொரு நாட்களில், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு தாவி, சில நாட்களில் சிகப்பில் படுத்துக்கொள்ளும் ப்ரொஜக்ட் தான் முதல் பிரச்சனை. இந்த முறை எக்காரணமாக இருந்தாலும் வந்துவிடுவேன் என்று அம்மாவிற்கு தெரிந்திருக்கும், ஆனாலும் உறுதி செய்து கொள்வதற்காகத்தான் சொல்லியிருப்பார்கள்.
மைதிலி இந்தப் பெயரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதிற்கு இயல்பாய் ஒரு மரியாதை வந்துவிடும். சாமி, பூதம், ஹிப்னாட்டிஸம், மனசைப் படிக்கிறது இதிலெல்லாம் எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கையிருந்ததில்லை. ஆனால் மைதிலியுடன் பழக ஆரம்பித்ததில் இருந்து இப்படிக்கூட ஒருவரால் மற்றவருடைய மனதை புரிந்து கொள்ள முடியுமா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
"டேய் அதோ வர்றாளே அந்த பச்சக் கலர் சுகிதார் அவக்கிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லுடா." ரேகிங் செய்வதாக சொல்லிக்கொண்டு சீனியர் ஸ்டுடண்ட் இப்படி செய்யச் சொன்னதும் திரும்பிப்பார்த்தவனுக்கு அங்கே வந்து கொண்டிருந்த பச்சைக் கலர் சுகிதாரைப் பார்த்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் இருந்தது. இன்னும் நான்காண்டுகள் இந்தக் கல்லூரியில் குப்பைக் கொட்ட வேண்டுமே என நினைத்தவனாய், பச்சையிடம் பச்சையாகச் சொல்லப் போக கொஞ்சமும் முகம் சுழிக்காதவளாய் என்னைச் சட்டை செய்யாமல் விலகிப்போனது முதலில் ஆச்சர்யப்படுத்தியது என்றாலும் பின்னர் அவளைப் பற்றி கொஞ்சம் தெரிந்ததுமே, அவளுடைய மனம் கணக்குப்போடும் வேகத்திற்கு அன்றைக்கு நான் என் சீனியர்களிடம் இருந்து அரக்க பறக்க வேகமாய் வந்தது, முகத்தில் மறைக்க நினைத்தாலும் முடியாமல் பெருகிவந்து கொண்டிருந்த வியர்வை, அதுவரை பார்த்திராத ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்னது இதையெல்லாம் வைத்து பிண்ணனியை அவள் ஊகித்திருக்காவிட்டால் தான் தவறு.
ரோட்டில் டுவீலர் ஓட்டும் சமயங்களில் எப்பொழுதுமே லைட்டை High Beam போடாமலிருக்கும் நான் சில சமயத்தில் மட்டும் போட்டு, பார்க்கும் அளவிற்கு சாதாரணமானவன் தான். திரிஷாவின் பிட்டு படம் வெளியாகியிருந்த சமயத்தில் அது திரிஷாவா இல்லையா என்பதைப்பற்றி பிஎச்டி செய்யும் அளவிற்கு ஆராய்ந்து விஷயத்தை சேகரித்து வைத்திருந்தவன். இதிலெல்லாம் தவறில்லை தான், ஆனால் இதையெல்லாம் வைத்துக் கொண்டும் நான் அசாதாரணமானவன் என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தான் போட்டு உடைத்தாள் மைதிலி.
நான் ஆங்கிலத்தில் ஜீரோவாக இருந்து வந்ததற்கு பெரும்பாலும் சொல்லும் காரணம் தமிழில் ஹீரோ என்பது, அதையும் போட்டுடைத்தாள் ஒருநாள், ரேகிங் தந்த உரிமையிலும் சாரி சொல்லும் சாக்கிலும் சென்ற என்னிடம் மிகச்சாதாரணமாக பேசத் தொடங்க, நான் என்னைப் பற்றி பெருமை பீற்றத் தொடங்கினேன், டிஸ்டிரிக்ட் பர்ஸ்ட், எல்லாவற்றிற்கும் வைரமுத்துவின் சிலவரிகளை எடுத்துவிடும் சாகஸம், ல, ள, ழ வில் காட்டும் வித்தியாசம், எல்லாவற்றையும் சிறிய புன்சிரிப்புடன் புறக்கணித்தவள். தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கேட்க நான், சுஜாதாவையும் பாலாவையும் பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் பற்றிச் சொல்ல, புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.
"அப்போ சுஜாதா எழுதறதெல்லாம் இலக்கியமே கிடையாதுங்கிறீங்களா?" என்று கேட்டு வந்த என்னை "ஏன் மைதிலி சுஜாதா இப்படியெல்லாம் எழுத மாட்டேங்கிறார்." என்று கேட்க வைத்தில் இருந்த சாமர்த்தியம் அத்துனையும் மைதிலியுடையதே, இந்த விஷயத்தை சாதாரணமாக தமிழ் இலக்கியத்தின் தடம் அறிந்த யாருமே செய்திருக்க முடியும் ஆனால் மைதிலியின் சிறப்பே, இதுபோல் நான் தமிழிலும் தெரிந்து கொண்டது மிகச்சாதாரணமானதே எனத்தெரிந்ததும் எனக்குள் வந்த தாழ்வுமனப்பான்மையை வந்த இடம் தெரியாமல் ஆக்கமுடிந்ததுதான். இது ஒரு பக்கமாகவே இருந்துவிடாமல் அவளைப்பற்றிய என் கருத்துக்களை மறைக்காமல் சொல்லும் உரிமையும் இருந்தது.
"மைதிலி இனிமேல் நீ என் கூட டுவீலரில் வரவேண்டாம்."
நான் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டே நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொண்டிருந்தாலும்,
"ஏன்?" என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்டது, நான் சொல்லவருவதை என் வாயால் கேட்கும்
"இல்லை எங்கே மேல பட்டுடுமோன்னு வண்டியின் பின்னாடி உட்கார்ந்திருக்கிறதும், சில நேரம் பட்டுவிடக்கூடிய சமயங்களில் முதுகில் கையை வைத்து தடுத்துற்றதும் கஷ்டமாயிருக்கு, நான் ஒன்னும் அவ்வளவு நல்ல பிள்ளைக் கிடையாதுதான் அதைப்பத்தி ஒன்னும் பேசவேண்டாம், இது சரியா படலை. நான் என்னமோ தப்பு செய்ற மாதிரி ஒரு ப்லீங் வருது தெரியுமா?"
பலமாகச் சிரித்தவள்,
"தெரியும் நீ இதைப் பத்தி பேசுவேன்னு நிச்சயமாத் தெரியும். என்னத்தைச் சொல்லச் சொல்ற, எனக்கென்னமோ உரசிக்கிட்டுப் போறது பிடிக்காதுன்னு வைச்சிக்கோயேன், நீ மட்டுமில்லை, கல்யாணம் ஆனதுக்குப்பிறகு என் புருஷன் கூட போனாலும் இப்படித்தான் போவேன். அதுமட்டும் நிச்சயம்."
சொல்லிவிட்டு நிறுத்தியவள்,
"அப்படியில்லாட்டி இப்படி வைச்சுக்கோயேன், வண்டியிலப் போறப்ப எங்கப் பட்டுற்ற மாதிரி இருந்தா, சின்னப் பையனாச்சே எதாவது கனாக் கண்டுக்கிட்டே வண்டியைக் குடை சாச்சிடுவான்னு பயப்படுறனோ என்னவோ?" கேட்டுவிட்டு பலமாகச் சிரித்தாள், நான் மெதுவாக,
"அப்படியே பட்டுட்டாலும்..." சொல்ல,
நான் எதைச் சொல்ல வர்றேன்னு தெரிந்ததால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டாள். இதே போன்றதொரு உரையாடல் இதற்கு முன்பொறுமுறை வந்திருக்கிறது,
"ஏய் உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் என்னைப் பத்தி தப்பா பேசுறாங்க."
"என்ன பேசுறாங்க."
"அயர்ன் பாக்ஸ் அப்படின்னு..."
நான் உண்மையில் மைதிலி என்னிடம் இதைப்பற்றிய பேச்சை எடுக்க மாட்டாள் என்றே நினைத்தேன், பல சமயங்களில் எங்கள் பேச்சு பல தளங்களில் பரவியிருக்கும் நேரங்களில் கூட தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கும் பொழுது சில நேரங்களில் முதலில் முற்றுப்புள்ளி வைப்பவள் மைதிலியாகத்தான் இருக்கும். அதெல்லாம் கொஞ்ச காலம் நாங்கள் பழக ஆரம்பித்த கொஞ்ச காலம் வரைதான் பின்னர் சிறிது பழக்கமான பிறகு, அதெல்லாம் போய் இருந்தது, நான் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு,
"என்னை என்ன பண்ணச் சொல்ற மைதிலி, பசங்கக் கிட்ட அப்படி பேசாதீங்கடான்னு சொல்லவா, இல்லை அவங்க ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணச் சொல்றியா இது இரண்டுமே என்னால முடியாதுன்னு உனக்குத் தெரியும். எல்லாரும் என்னை மாதிரி நல்லவங்களா இருப்பாங்கன்னு நீ எப்படி மைதிலி நினைக்கலாம். மற்றபடிக்கு நான் அதை எப்பவுமே ஒரு இஷ்யுவா பார்க்கலை..." என்று பிம்பத்தை உருவாக்க நினைத்து என்னென்னவோ பிதற்ற, கன்னத்தில் இடித்தவள்.
"ரொம்பத்தான், அப்ப அவங்க மேலெல்லாம் தப்பேயில்லேங்கிறியா?"
இதுபோல் பலசமயம் அவள் என்னிடம் கேட்ட விடையில்லா கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு விடைதர என்றுமே நினைத்ததில்லை, அப்படித்தான் கல்லூரியின் கடைசி வருடத்தில் ஒரு நாள் அவள் கேட்ட அந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தேன்.
"ஏண்டா உங்கம்மாக்கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே, மோகனா அக்கா சொன்னாங்க." நான் பதிலே சொல்லவில்லை. ஆனால் எங்கம்மாவிடம் நான் சொன்ன விளக்கம் அவள் காதிற்கு வந்திருக்கும் என்று தெரியும் எனக்கு,
சாதாரணமாக பின்னால் சுற்றிக் கொண்டிருந்த பெண்களைப்பற்றியே அம்மாவிடம் சொல்லிய எனக்கு மைதிலியைப் பற்றி வீட்டில் சொல்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அம்மாவிற்கும் மைதிலியை பிடித்திருந்தது, ஆரம்பத்திலிருந்தே என்னைப் பற்றிய பெரும்பாலான முடிவுகளை பெண்கள் தான் எடுத்துவந்தார்கள்.
"டேய், உன் ஹைட்டுக்கு உனக்கு பேஸ்கெட் பால் நல்லாயிருக்காது, வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்துக்கோயேன்." அம்மா சொல்ல, ஆசை ஆசையாய் பேஸ்கெட்பால் கோச்சிங்கில் சேர இருந்தவன், மைக்கேல் ஜோர்டன் மற்றும் இன்னபிற ஆட்களை புறந்தள்ளிவிட்டு வாலிபாலில் சேர்ந்தேன்.
"தம்பி மேக்ஸ் உனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் அதில பெரிய ஆளா வர்றதுக்கு நிறைய உழைக்கணும் அதை நீ பண்ணவே மாட்ட, அதனால சும்மா பீலா உட்டுக்கிட்டு அலையாம, கம்ப்யூட்டர்ஸ்ல சேர்ந்துறு. நல்ல பேக்ரவுண்டும் இருக்கு சாப்ட்வேர்ல பெரிய ஆளா சீக்கிரமே வந்திருவே." கணக்கில் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் வாங்கிய சென்டம் அதன் பேரில் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கப்பட்டு கம்ப்யூட்டர்ஸில் சேர்ந்தேன்.
"தாஸ் ஜாவாவில் எல்லாம் ப்ரொக்கிராம் எழுத ஆயிரம் பேர் வருவான், விண்டோஸ், லினக்ஸில் டிவைஸ் டிரைவர்ஸ் எழுதுறதுக்கு ஆளுங்களே கம்மியாத்தான் இருப்பாங்க, உனக்கு இருக்குற அறிவுக்கு நீ பெரிய ஆளா வருவ அந்த பீல்டில், நான் நினைத்தால் இப்ப படிக்க முடியுமா சொல்லு." மைதிலி சொல்ல, ஆசை ஆசையாய் திட்டம் போட்டு வைத்திருந்த ஜாவா ஜேடுஈ ப்ரோஜெக்ட்டை கைகழுவினேன்.
இதில் அம்மா அக்காவிற்கு சிறிது அதிர்ச்சியிருந்தாலும் சந்தோஷம் தான், எங்கள் குடும்பமும் மைதிலி குடும்பமும் பேமிலி பிரண்ட்ஸ்களா ஆனதில் இருந்து வாரக்கடைசி நாட்கள் பார்ட்டிதான். ஆனாலும் மைதிலியின் அம்மா, எங்க அம்மாக்கிட்ட கேட்டு அம்மா என்னிடம் கேட்டதும் நான் முற்றிலுமாக மறுத்துவிட்டேன்.
"அம்மா மைதிலியை என் பொண்டாட்டியா நினைத்துக் கூட பார்க்கமுடியலை. அவ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் அவ்வளவுதான். இப்ப நம்ம கிரி மாமா பெண்ணையே எடுத்துக்கோயேன். என் கூடவேத்தான் படித்து வளர்ந்தாள் அவளையும் என்னால பொண்டாட்டியா நினைத்து பார்க்க முடியவில்லை. அது ஏன்னு தெரியலை."
என்னை ஓட்டுவதற்கு மைதிலிக்கு இது ஒரு சாதகமா போய்விட்டது.
"உனக்கெல்லாம் கடலை போடுவதற்கு என்னை மாதிரி பொண்ணு வேணும், கல்யாணத்துக்கு வேண்டாம் அப்படித்தானே. தலையில கொட்டி, தப்பு பண்ணா தப்பை சுட்டிக்காட்டி இதெல்லாம் வேண்டாம், உனக்கும், உனக்கும் நீ சொல்றத கேட்கிற மாதிரி பொண்ணுதான் வேணும் அதானே..."
பின்னர் டிஷர்ட்டை இழுத்து விட்டுக்கொண்டே,
"இல்லை வேற எதாவது காரணம் இருக்கா?" சிரித்துக் கொண்டே கேட்க,
"அசிங்கமா பேசின பல்லை உடைச்சிருவேன்."
உண்மையிலேயே கோபமாக பதில் சொன்னேன்.
"சரி, விஜய் படம் ஏதோ வந்திருக்காம் கலையரங்கத்தில் வர்றியா?"
அழகாக பேச்சை மாற்றினாள், இருந்தாலும் நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதில்லை என்று தெரிந்திருந்தும் கேட்பவளைப்பார்த்தால் கோபமாக வந்தது,
"அந்தப் படத்தையெல்லாம் மனுஷன் பார்ப்பான்."
"ஆமாமாம், நீங்கல்லாம், கலைப்படம்னு சொல்லிக்கிட்டு பிட்டுப்படத்தைத் தானே பார்ப்பீங்க, அதுக்கு விஜய் படம் எவ்வளவோ தேவலாம்."
அவள், நான் நகிஸா ஒஷிமாவின், இன் த ரிஆல்ம் ஆப் சென்ஸஸ் படத்தின் டிவிடியை ஆயிரத்திற்கும் அதிகமான விலைகொடுத்து வரவழைத்துப் பார்த்ததைத்தான் அப்படிச் சொல்கிறாள் எனத் தெரிந்தாலும், அது போன்ற என்று சொல்ல முடியாவிட்டாலும் வெளிநாட்டு கலைப்படங்களை அறிமுகப்படுத்தியது மைதிலிதான். நான் சிரித்தபடியே,
"மைதிலி நீ அந்தப் படத்தை பாக்கலையே தரவா?" லேசாய் பயமாய் இருந்தாலும் கேட்க,
"உதைபடுவே படவா."
ஒருவழியாக நான் செய்திருந்த ப்ரொஜெக்டின் பயனாய் நல்ல அமேரிக்கக் கம்பெனியில் வேலை கிடைக்க, அமேரிக்கா வந்து இரண்டு வருடமாகிறது, மைதிலி ஏதோ ஒரு கல்லூரியில் லெக்சரரா இருக்கிறாள், இப்பக் கல்யாணமாம். சந்தோஷமாக இருந்தது என்றாலும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே மைதிலியை கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லையா என்று. எல்லா தடவையும் இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.
அமேரிக்காவிலிருந்து திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பி வந்திருந்தேன். நேராய் மைதிலியைப் பார்ப்பதற்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் பூசியதைப் போலிருந்தாள் மைதிலி, கல்யாணக் கலை முகத்தில் தெரிந்தது, என்னைப் பார்த்ததும் சிறிது வெட்கப்பட்டாள் எனக்கே கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
"என்னா மைதிலி மாப்பிள்ளை எப்படி போட்டோ எதுவும் வைச்சிருக்கியா?"
"ம்க்கும் அது ஒன்னுதான் குறைச்சல் இப்ப யாரு நான் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு வருத்தப்பட்டா, இதுக்காக நீ கூட வந்திருக்க பாரு அமேரிக்காவில் இருந்து.
அப்புறம் அந்தப் பையனைப் பத்திக் கேட்டல்ல, எங்கப்பாவோட தூரத்துச் சொந்தம். அப்பாவும் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும், என்கிட்ட இவனைக் கட்டிக்கிறியான்னு கேட்டாரு நான் மறுக்கலை ஆமாம்னும் சொல்லலை."
எனக்கு கொஞ்சம் ஆர்வமாய் இருந்தது மைதிலியின் மாப்பிள்ளையைப் பார்க்க, மனது இல்லை இல்லையென்று சொன்னாலும் அவனுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்சம் கல்யாண வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு வரவேண்டியது தான் பாக்கி, வந்ததும் மாப்பிள்ளை அழைப்பு பின்னர், இரவு நிச்சயத்தார்த்தம் பின்னர் காலையில் ஆறு பத்துக்கு கல்யாணம்.
ஏழுமணியிருக்கும், மைதிலியின் அப்பா என்னைப் பார்ப்பதற்கு வந்திருந்தார்,
"மோகன், மாப்பிள்ளை கடைசி நேரத்தில் பிரச்சனை பண்றார், யாரோ நம்ம மைதிலியைப் பத்தி தப்பா லெட்டர் போட்டுட்டாங்களாம். இப்ப கல்யாணத்தை நிறுத்தணும்ங்கிறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..."
நானும் என் பங்கிற்கு மாப்பிள்ளைக்கு போன் போட்டு பேச, அந்தப்பக்கம் மைதிலியைப் பற்றி ரொம்பவே கேவலமாப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விஷயம் தெரிந்து மைதிலியின் அம்மா அழத்தொடங்க, மைதிலியின் கண்களில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. நான் மெதுவாக என் அம்மாவின் சம்மதத்தை வாங்கிவிட்டு பின்னர் மைதிலியின் தந்தையிடம்,
"மாமா உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னா நான் மைதிலியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்." சொன்னதும் கையைப் பிடித்துக் கொண்டார்.
நான் ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கல்யாண மண்டபத்திலும் சரி, மற்றவர்களுடைய முகத்திலும் சரி அப்படியொரு சந்தோஷம், சற்று நேரத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை அனைவரும் நொடிப்பொழுதில் மறந்துவிட்டது ஆச்சர்யமாகயிருந்தது. நான் நேராய் அம்மாவிடம்,
"அம்மா இங்க நடந்ததில் எதுவும் அரசியல் இல்லையே?"
நான் கேட்க வந்ததை புரிந்து கொண்ட அம்மா, வந்து கன்னத்தில் குத்திவிட்டு,
"ஆமாம் உன்னை கட்டிக்கிறதுக்காகத்தான் மைதிலி செஞ்ச நாடகம் இதுன்னு நினைச்சியா? ஆனாலும் உனக்கு மிதப்பு ஜாஸ்திடா. ஆளைப்பாரு ஆளை, மைதிலியை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அந்தப் பையன் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். உன்னோட இந்த லூசுத்தனமான கேள்வியை அவக்கிட்ட கேட்டு வைச்சிறாதே." சொல்லிவிட்டு காதைத்திருகினார்.
முதலிரவின் பொழுது,
"மைதிலி, இங்கப்பாரு இது எப்படி நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. இதில் எதுவும் உள்குத்திருந்து அதுக்கு நீயோ, இல்லை எங்கம்மா அக்காவோ, இல்லை உங்க வீட்டில் இருப்பவர்களுக்கோ சம்மந்தம் இருந்தால் அது என் பார்வைக்கு வருவதை மட்டும் தவிர்த்துவிடு..." நான் சொன்னதும் மைதிலி சிரித்தாள் எப்பொழுதையும் போல என்னால் இந்தமுறையும் அவளின் சிரிப்பில் இருந்து ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
மைதிலி
பூனைக்குட்டி
Friday, May 15, 2009
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
கற்பனையான கதையா? நிஜ சம்பவமா? தழுவலா?
ReplyDeleteநல்லா வந்திருக்குங்க.
ஹரிஹரன் இது முழுவதும் கற்பனையே. நல்லாயிருந்ததுன்னா சரிதான். இல்லையா?
ReplyDelete//"தாஸ் ஜாவாவில் எல்லாம் ப்ரொக்கிராம் எழுத ஆயிரம் பேர் வருவான், விண்டோஸ், லினக்ஸில் டிவைஸ் டிரைவர்ஸ் எழுதுறதுக்கு ஆளுங்களே கம்மியாத்தான் இருப்பாங்க, உனக்கு இருக்குற அறிவுக்கு நீ பெரிய ஆளா வருவ அந்த பீல்டில், நான் நினைத்தால் இப்ப படிக்க முடியுமா சொல்லு." மைதிலி சொல்ல, ஆசை ஆசையாய் திட்டம் போட்டு வைத்திருந்த ஜாவா ஜேடுஈ ப்ரோஜெக்ட்டை கைகழுவினேன்.//
ReplyDeleteகதையானது தன் வரலாறு கூறுதல் அமைப்பில் சொல்லப்பட்டாலும் நாயகனின் பாத்திரத்துக்குப் பெயர் "தாஸ்" என இருப்பது எதையும் கோடி காட்டுகிறதோ என்பதலேயே கேள்வி எழுந்தது.
உள் குத்து, வெளிக்குத்துன்னு இணைய வலைப்பூக்களில் படித்ததைப் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க இயலவில்லை.
மேட்டரை எங்காணும் நைச்சியமாக வைப்பதில் கில்லாடிகளாச்சே நம்மவர்கள் :-))
தம்பி சூப்பர் :)
ReplyDeleteமீண்டும் மனதைத்தொட்ட ஒரு கதை படித்த திருப்தியப்பா , இந்த கதையை முத்தமிழிலும் பிரசுரித்திருக்கின்றேன்...உன் பெயரிலேயே, வாழ்த்துக்கள், பொங்கலுடன் இணைந்து....:)
ஸ்ரீஷிவ்..@சிவா..
ஹரிஹரன், நான் அந்தக் காலத்தில் இருந்து கதையெழுதும் பொழுது பெரும்பாலும் 'நான்' என்று தான் எழுதுவது வழக்கம்.
ReplyDeleteஇன்னமும் third person singularலில் கதையெழுத வராதது ஒரு காரணம்.
இதையெல்லாம் இல்லாமல் உண்மையை சொல்லவேண்டுமானல் சுஜாதாவின் ஒரு தாக்கம் என்று தான் சொல்லவேண்டும். என்னுடைய பல கதைகளில் 'ஸ்ரீரங்கத்து தேவதைகளில்' சுஜாதா பயன்படுத்தியிருக்கும். அவரது வாழ்க்கையைச் சார்ந்த அதே சமயத்தில் உண்மையான நானாக இல்லாமலும் இருக்கும் அம்சம் தான் அது.
சொல்லப்போனால் ஒட்டுமொத்த கான்செப்ட் காப்பி தான்.
PS: ஆனால் இன்று உண்மையில் நினைக்கிறேன், அந்த உள்குத்து வார்த்தையை உபயோகித்திருக்க வேண்டாமென்று. கதையில் அதுமட்டும் தனியாகத் தெரிகிறது.
பாக உண்டிதி நைனா.....
ReplyDeleteஆமா, என்ன ஆச்சு மத்த கதை, அது தொடர்கிறதா?....
மக்கள் சப்போர்ட் இருந்தாலே(நாலு பேரு படிக்கிறாங்கன்னாலே) நானெல்லாம் கண்டின்யுயஸா போடமாட்டேன். அதற்கு மொத்தமே நாலு வாசகர்கள் தானே அப்படின்னு மனசு அடிக்கடி சொல்றதால நான் கண்டியுன்யுவிட்டி குறைவா இருக்கும்.
ReplyDeleteஇதுவரைக்கும் வந்தது முன்பே எழுதி வைத்திருந்தது இதுக்கப்புறம் உடகார்ந்து எழுதணும்.
ஆனால் இது கொலைத் தொழில் வல்லவனாய் மட்டும் மாறாது என தெரிவுத்துக்கொள்கிறேன்.
ஷிவா நன்றி. ஆரம்பத்தில் இருந்து என் எழுத்திற்கு நீங்கள் கொடுத்துவரும் உற்சாகம் வார்த்தைகளில் அடக்கமுடியாதது.
ReplyDeleteதொடர்ந்து ஆதரவு அளிக்கவும்.
நன்றிகளுடன்
மோகன்தாஸ்
தாஸ்,
ReplyDeleteகதை நன்றாக உள்ளது. மற்ற கதைகள் எப்போது?
நல்ல கதை மோகன் தாஸ்...
ReplyDeleteநல்லா இருக்கு !!!!!!!!
ReplyDelete//மோகன்தாஸ் said...
ReplyDeleteஹரிஹரன் இது முழுவதும் கற்பனையே. நல்லாயிருந்ததுன்னா சரிதான். இல்லையா?
//
நல்லாயிருக்கு !
நிஜமாகவே இருந்தாலும் இன்னும் அழகாய் இருக்கும் :))
நல்லா இருக்கு மோகன்தாஸ்
ReplyDeleteதம்பி..
ReplyDeleteகற்பனைக் கதை என்று சொல்லிவிட்டாய்..
அதனால் நன்றாக இருக்கிறது..))))))))))))