இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் ‘அடல்ஸ் ஒன்லி' விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.
ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.
மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு “எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.” சீரங்கத்தம்மா போல், “அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.
புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.
“... தினசரியில் ‘சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் ‘சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது...” புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.
முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.
“...எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி...”
பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,
“...இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், 'இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், ‘சரிதான் உட்காருடா’ என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்...”
எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், ‘புலிநகக்கொன்றை’ போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் ‘நாவல்’களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் ‘புளியமரத்தின் கதை’யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் ‘இருள்வ மௌத்திகம்’ ரமேஷ் - ப்ரேமின் ‘சொல் என்றொரு சொல்’ முதலானவற்றோடு ஒப்பிட்டே.
இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் ‘கிரேஸி’ மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக ‘கிழக்கு’ இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது ‘கிழக்கு’ உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா ‘ரெட்டைத் தெரு’ என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்
எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.
இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு
Mohandoss
Tuesday, October 28, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
தாஸு,
ReplyDeleteபடங்களையும் புத்தகங்களையும் அனுபவித்து பிறகு பதிவிடுவது ( விமர்சனம் அல்ல! ) உமக்கு அல்வா திம்பது போல! :)
ஒரு எழுத்தாளரின் இரண்டு படைப்புகளை ”அதோட லெவலுக்கு இது இல்லை”ன்ற மாதிரியான ஒப்பீடுகள் செய்வது சரியா? இரண்டுக்குமான இடைவெளியில் எத்தனையோ எவ்வளவோ மாற்றங்களோ?! சரியோ தவறோ மாற்றங்கள் மாறுதல்கள் படைப்புகளில் பிரதிபளிக்கப்பட்டால் அது எழுதாளரின் சுயத்தை பிரதிபளிப்பதென எடுத்துக்கொள்ள முடியாதா?! அது என்ன எழவு பொலிட்டிகலி கரெக்டெட் மாற்றங்களாக இருந்தாலும் கூட...
நீர் அரசூரை தூக்கிவைக்காமல் ரெட்டைத்தெருவினை மட்டுமே அலசியிருந்தால் கிழித்திருந்தால் கூட படிக்கிற எனக்கு திருப்தியாக இருந்திருக்குமென்பதை ஒரு வாசகர் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்! அதுமாதிரி இது இல்லை எனும்போது உமது முன்முடிவுகளும் எதிர்பார்ப்புகளும் இப்புத்தகம் பற்றிய உமது கருத்துக்களை மழுங்கடித்துவிடுகின்றன. ”இது பிளாகுய்யா.. எந்திருப்திதான் முக்கியம்”னாலும் ஒன்றும் பழுதில்லை! :)
நானுங்கூட ஒரு காலத்தில பாலகுமாரன் எதை எழுதினாலும் அது மெ.பூ, இ.கு மாதிரி இல்லைன்னு சொல்லினிருந்தேன்! இருந்தாலும்,
// இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், // இதுக்காக ஜகா வாங்கிக்கறேன்!!!! :)
அன்புள்ள இளவஞ்சி,
ReplyDeleteநீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது. நான் அரசூர் வம்சம் தவிர்த்தும் இரா.மு வின் ரெட்டைத் தெருவை விமர்சித்திருக்கிறேன்.(என்ன கொஞ்சமாய்)
நீங்கள் ஒரு முறை இந்தப் புத்தகம் படித்துப்பாருங்கள் என் பிரச்சனை புரியும்.
புத்தகம் முழுவதும் நிஜமான மனிதர்களை உலவவிட்டிருக்கிறார். மூன்று பக்கங்களில் அவர்கள் பதிய வைத்துவிடுகிறார் என்கிற எல்லா விஷயங்களிலும் அதைச் சொன்ன நேர்த்தியிலும் எனக்கு அவருடைய இந்த எழுத்து பிடித்திருக்கிறது. நான் மறுக்கவேயில்லை. ஆக தனிப்பட்ட முறையில் ரெட்டைத் தெரு அதன் ‘பொலிடிகலி கரெக்ட்’ பத்திகளைத் தாண்டியும் எனக்கு பிடித்துத்தான் இருக்கிறது.
ஆனால் இரா.மு. விடமிருந்து, அரசூர் வம்சத்தைத் தொடர்ந்த ஒரு நாவலாக என்னால் ரெட்டைத் தெருவை உணர முடியவில்லை; நெருங்க முடியவில்லை.
நான் பொலிடிகலி கரெக்ட்னெஸ் பற்றி பேசியதற்கு இன்னொரு காரணம் உண்டு, ‘கிழக்கு’ன் ‘விடுதலைப் புலிகள்’ புத்தகம் படித்து காண்டாகி இனி ‘கிழக்கு’ன் புத்தகங்களை வாங்குவதற்கு சும்மாயிருக்கலாம் என்ற மனநிலையில் இருந்த பொழுது தான்; ரெட்டைத் தெரு கிழக்கின் வழி வெளியாகிறது.
தொலையுது என்று இரா.மு விற்காக வாங்கிய புத்தகம் இது, கடைசியில் படித்து முடித்து நிமிர்ந்து பார்த்தால் இரா.மு வை விடுத்தும் எனக்கு ‘கிழக்கு’ன் புதிய டெம்ப்ளேட் தான் மனதில் நிற்கிறது வேறொன்றும் இல்லை. :(
‘டெம்ப்ளேட்’ற்கு பலியாகி விட்டாரோ இரா.மு என்ற வேதனையின் வெளிப்பாடு தான் இந்தப் பதிவின் கடைசி இரண்டு பத்திகள்.
கம்பேரிஸனே கூடாது எங்கப் பார்த்தாலும் சண்டை போடுற நான் இங்கே கம்பேர் செய்திருக்கிறேன் புரிகிறது. கோபத்தில் தான் ‘பொலிடிகலி கரெக்ட்னெஸ்’ என்னை விட்டுப் போகிறது தல :)
ஏதோ இரண்டு இலக்கியவாதிகள் பேசிக்கிட்டு இருக்கிற இடத்தில் எனக்கென்ன வேலை?
ReplyDeleteதருமி சார்,
ReplyDeleteஎன்னா வெள்ளாட்டு இது?! இது ஒரு இலக்க்கியவாதிக்கு வாசகர் கேட்ட கேள்வி! :)
ஏற்கனவே ”சும்மா தமிழ்ல டைப்படிக்க தெரிஞ்சவனெல்லாம் எழுத்தாளரா?”ன்னு எழுத்தாளுக கேள்விய போடறாங்க! இதுல நமக்கு நாமே இலக்கியவாதின்னு என்ன தான் தமாசுக்கு சொல்லிக்கிட்டாலும் அவிங்க அடையப்போவது கொலைவெறிதான்! :)
சரி சரி கூல் !திண்ணையில "விஸ்பரூபம் படிக்கிறீயா? எனக்கு பிடிச்சியிருக்கு
ReplyDelete