In இந்து இப்படியும் ஒரு தொடர்கதை சிஐஏ சிறுகதை

இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்

ஒரு வருடம் போல் நாங்கள் பிரிந்திருந்துவிட்டு, காலம் எங்களைச் சேர்த்ததும் முதன் முதலில் இருவர் குடும்பத்தில் இருந்தும் எங்களுக்கு வந்த ஆலோசனை, 'குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்பதுதான். இவ்வளவு அன்யோன்யமான தம்பதிகள் பிரிந்திருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக எங்கள் குடும்பங்கள் பார்த்தது நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததைத்தான். ஆனாளப்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களே தங்கள் திருமண உறவு பிரிந்து போகாமல் இருக்க திருமணம் செய்து கொண்டு ஒன்றிரண்டு வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொழுது, நாங்கள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி தள்ளிப் போட்டிருந்தது அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியிருந்தது.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரும்மா, நாங்க அப்பவே முடிவெடுத்துட்டோம், மூணு நாலு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்குறதுன்னு. அதுமட்டுமில்லாம குழந்தையை சுமக்கப்போறது அவ. அதனால இதப்பத்தி அவதான் முதலில் முடிவெடுக்கணும்." அப்பொழுது தான் இருவரும் சேர்ந்திருந்ததால், மீண்டும் ஒரு பிரச்சனையை என்னிடம் உருவாக்கவேண்டாம் என்று நினைத்திருக்க வேண்டும் அம்மா, ஆனால் அகிலாவிடம் என்ன சொன்னார்களென்றெல்லாம் தெரியாது. அந்த வாரக்கடைசியில் எங்களுக்கிடையில் இதைப்பற்றிய பேச்சு எழுந்தது.

"மோகன் நாம ஒரு விஷயத்தைப் பத்தி இப்பவே பேசி முடிவெடுத்துக்கணும்."

"எதைப்பத்தி?"

"நம்ம குழந்தையைப்பற்றி..." அவள் சொன்னதும்,

"அகிலா அம்மா எதுவும் சொன்னாங்களா?"

"அதை விடுங்க, அது இல்ல இப்ப முக்கியம். நம்ம குழந்தையைப் பற்றி நாம சில விஷயங்களை இப்பவே பேசிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

எனக்கு எங்கம்மாவின் மீது கோபம் வந்தாலும், இவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்று புரியாததால்,

"என்ன விஷயம்?"

"இல்லை நாம இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டாலும், நம்மிடையே ஆரம்பித்தில் இருந்து கடைசி வரை நிறைய வேறுபாடுகள் உண்டு, நம்ம குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம். என்னென்ன கற்றுக்கொடுக்க போகிறோம் இதையெல்லாம் முன்னாடியே தீர்மானிச்சிற்றது பெட்டர். ஏன்னா நம்ம இரண்டு குடும்பங்களோட பழக்க வழக்கங்கள் கூட முழுவதும் வித்தியாசமானது. நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்க, நான் சாப்பிட மாட்டேன் இப்படி நிறைய விஷயங்கள். முட்டாள்தனமா ஒன்னுமே யோசிக்காம இந்த குளத்தில் விழ நான் விரும்பவில்லை..."

அவள் சொன்னதும், "இங்கப்பாரு அகிலா குழந்தை பெத்துக்கிறதைப் பத்தி தீர்மானிக்கிற மொத்த உரிமையையும் நான் உன்கிட்ட கொடுக்குறேன். ஆனால் நீதான் குழந்தை பெற்றாய் என்பதற்காக உன் பாணியிலோ, அல்லது குழந்தையில் வளர்ச்சியில் முழுபங்கையோ உனக்கு மட்டுமே விட்டுத்தர்றது என்னால முடியாது. இதுவரைக்கும் நான் உன்னை நான்வெஜ் சாப்பிடவோ இல்லை சமைக்கவோ கூட நான் வற்புறுத்தியதில்லை. சரியா?"

"மோகன் நானும் உங்கக்கிட்டேர்ந்து முழுஉரிமையை எதிர்பார்க்கவில்லை, ஏன் சொல்றேன்னா, நாளைக்கே அவனுக்கு பூணுல் போடணும்னு நினைத்தால், நான்வெஜ் சாப்பிட்டுக்கிட்டு பூணுல் போடறுதுங்கிறது தப்பு அதனால் தான். முதலில் நாம அவனுக்கு பூணுல் போடப்போறமா இல்லை உங்க வழக்கப்படி வளர்க்கப்போறமா அது தெரியணும்."

"அகிலா நான் ஒன்னு சொல்லட்டுமா. இதெல்லாம் இப்ப தீர்மானிச்சாலும் சரிவராதுங்கிறது என்னோட பாலிஸி. நம்மளோட வழக்கத்துக்கு குழந்தையை வளர்க்கிறதுக்கு பதிலா, குழந்தையை வளர்க்கும் பொழுது எது நல்ல வழக்கமா படுதோ அதை தேர்ந்தெடுப்போம். அவள் சங்கீதம் கத்துக்கப்போறேன்னா கத்துக்கட்டும், டான்ஸ் ஆடப்போறேன்னா செய்யட்டும், கம்ப்யூட்டரில் வாழ்வேன்னா வாழட்டும்..."

"எல்லா விஷயங்களும் அப்படி முடியாதுங்க, குழந்தைக்கு ஆரம்பத்தில் சிலவிஷயங்களை கத்துத்தரணும். அந்த அடிப்படை விஷயங்கள் பெரும்பாலும் கடைசிகாலம் வரை மாறாமல் இருக்கும். குறிப்பா கடவுளைப்பற்றியது. பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஒரு வழக்கம் இருக்கும். நம்ம வீட்டிலோ இரண்டு விஷயம். நீங்கள் கடவுளை நம்பமாட்டீங்க உங்களைத் தவிர்த்த அனைவரும் வீட்டில் கடவுளை நம்புவோம். ஆனால் உங்களுக்கு சரின்னு பட்ட சில விஷயங்ளை உங்கப் பிள்ளைக்கு சொல்லித்தர நான் எப்படி தடுக்க முடியும். ஒரே வீட்டில் இருந்துக்கிட்டு, நான் கடவுளை நம்புண்ணும் நீங்க நம்பாதேன்னும் சொன்னீங்கன்னா சரியா வராது இல்லையா."

எனக்கு இதைக் கேட்டதும் முதலில் சிரிப்புத்தான் வந்தது, இந்த விஷயத்தை பேசத்தான் அவள் இவ்வளவு இழுத்திருக்கிறாள். அதுவரை எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தவளை பக்கத்தில் இருந்த சேரில் வந்து உட்காரச்சொன்னேன் பிறகு,

"இங்கப்பாரு அகிலா இதுதான் உன்னோட பிரச்சனையா? அப்படின்னு நீ நினைச்சா இதுக்கான முழு உரிமையை நான் உனக்குத் தர்றேன். இது நீதான் பத்து மாசம் சுமந்து குழந்தையை பெத்த என்பதற்காக இல்லை. நம்ம குழந்தையை நீ கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவே வளர்த்துக்கோ நான் ஒன்னும் சொல்லலை.

உனக்கே தெரியும் எங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவங்கன்னு, ஆனால் நான் ஏன் இப்படி, பிறந்ததிலிருந்தே கடவுள் நம்பிக்கை எனக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது. அப்பெல்லாம் எங்கப்பா வருஷத்துக்கு இரண்டு முறை சபரிமலைக்கு வேற போய்க்கிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையின்மை மட்டும், தானே உணர்ந்துதான் வரணும். அவன் சொன்னான் இவன் சொன்னான் வந்துச்சுன்னா நாளைக்கு இன்னொருத்தன் சொன்னான்னு கருத்து மாறும். அது தேவையில்லை.

அவள் நம்பிக்கையோடவே வளரட்டும், படிச்சு பிற்காலத்தில் புரிஞ்சிப்பான் ஆனா நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னுதான் கேட்பேன். பிற்காலத்தில் அவள் கடவுள் மறுப்பை செய்தான்னா நீ ஒத்துக்கணும்." சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தி..."இதுதானே நீ முக்கியமா என்கிட்ட கேட்க நினைச்சது." சிரித்தேன். அவளும் சிரித்தவள்.

"அவ்வளவு முக்கியம் இல்லைன்னாலும் முக்கியம் தான், நீங்க பாட்டுக்கு இந்துங்கிறது ஒரு மதமேயில்லை, அப்படி இப்படின்னு சின்ன வயதிலேர்ந்தே அவனுக்கு சொல்லித்தந்து வளர்க்கணும் நினைக்கிறப்ப நான், வேதம் அது இதுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்னா பிள்ளைக்கு கஷ்டமாப்போய்டும் இல்லையா அதான்." அவள் சொல்ல இன்னுமொறு தொடர்கதையை இழுத்தாள்.

"அகிலா அப்ப நீ என்ன சொல்ற, நாம இதப் பத்தி எவ்வளவு பேசினோம். வெள்ளக்காரன் தான் இதையெல்லாம் கொண்டுவந்தான். இந்துங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்த ஒரு விஷயம் கிடையாது இப்படியெல்லாம்..."

"அட நீங்க வேற, வெள்ளைக்காரன் கிறிஸ்துவன், முஸ்லீம் இடமிருந்து தனியே பிரித்துப்பார்க்குறதுக்காகத்தான் இந்தியாவில் இருந்த மற்ற மதத்தினரையெல்லாம் இந்துன்னு சொன்னான்னு நீங்க சொல்றீங்க. ஆனா எனக்கு அது சரியாப் படலைங்க.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தப்பையே பிரிச்சு பிரிச்சு, காஷ்மீருக்கு தனியா, ஹைதராபாத்துக்கு தனியா, செகந்திராபாத்துக்கு தனியான்னு சுதந்திரம் கொடுத்தவன் அவன்.

எப்பிடிடா இந்த நாட்டை துண்டாடலாம்னு நினைத்துக் கொண்டிருந்தவன். ஏற்கனவே பல பிரிவுகளால் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களை ஒரே கூட்டமா சாரி மதமா மாத்தணும்னு நினைச்சிருப்பானா அதெல்லாம் நடந்திருக்காதுங்க. லாஜிக் உதைக்கிறது உங்களுக்கே தெரியலை. இந்துயிஸம் அப்படிங்கிறது ஆரம்பக்காலத்தில் இருந்து வந்திருக்கும். இடையில விட்டுப்போயிருக்கும், அதை நான்தான் கண்டுபிடிச்சேன்னு வெள்ளக்காரன் சொல்வதில் அவனுக்கு வேண்டுமானால் பெருமையா இருக்கலாம் ஆனால் உண்மையாயிருக்காது.

அதுமட்டுமில்லாம இதெல்லாமே அமேரிக்காவோட சிஐஏவின் சதி அப்படின்னு நேத்திக்கு ஆபிஸிற்கு ஒரு மெயில் ஃபார்வேடா வந்தது. உங்களுக்கு கூட சிசி இருந்ததே படிக்கலையா?"

அகிலா கேட்க, நான் "தேவுடா தேவடா" பாட்டை பாடிக்கொண்டு வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.

Related Articles

6 comments:

  1. நிஜமாகவே உங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் முதலில் என் வாழ்த்துக்கள் குழந்தை பிறக்க. அல்லது இது கதை என்றால் மிக நன்றாக வந்திருக்கிறது. அதற்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கீதா, எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. :-(

    நன்றி.

    ReplyDelete
  3. Ammani ketta logic correct than paduthungo... Pathi solla theriyaliyakkum.... He he heeee

    ReplyDelete
  4. சரி சரி, ரொம்ப சிரிக்காதீங்க அப்புறம் நாலாம் நம்பர் இன்னிக்கே வந்திரும். :-)

    ReplyDelete
  5. வித்யாசமான சிந்தனை.

    மதுரையில், எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு குடும்பம் வீட்டில் 2 பெண் குழந்தைகள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு தான் பேசுவர்(முதல் குழந்தை பேச கற்றவுடன் இரண்டாவது குழந்தை பிறந்தது).

    முதல் குழந்தை எல்லோரிடமும் தமிழில் பேச ஆரம்பித்தது. அதேவேளை இரண்டாவது குழந்தை பேச ஆரம்பிக்கும் சமயமாக இருந்தது. இரண்டாவது குழந்தை தான் எந்த மொழியில் பேசுவது என்று 'குழம்பி' 3 ஆண்டுகள் வரை பேசாமலே இருந்து விட்டது பிறகு பல வைத்தியம் செய்தும் பலனில்லை. தற்செயலாக நான் சொன்ன ஆலோசனை படி முதல் குழந்தையையும் தெலுங்கில் பேச ஆரம்பித்தவுடன் இரண்டாவது வாண்டும் பேச ஆரம்பித்தது.

    நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. //மோகன்தாஸ் said...
    கீதா, எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. :-(
    //

    எவ்வளவு மகிழ்ச்சியான விசயம், இதுக்கு போய் வருத்தம் காட்டுறீங்க :(

    ReplyDelete

Popular Posts