"நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா"
பவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான் திருவிளையாடல் வசனத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்னும் சுலபமாய் எழுதப் படிக்க வராததால் நான் சொல்லச் சொல்ல திரும்பிச் சொல்லி மனப்பாடம் செய்வித்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த எடக்குக் கேள்வி வந்து விழுந்தது.
"டேய் சொன்னத சொல்றான்னா கேள்வி கேக்குற!" தோளில் உட்கார்ந்திருந்த மகனைக் மிரட்டினேன்.
"'பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்...' சொல்றா" மேலேயிருந்து சப்தமேவரவில்லை. பவானிக்கு பிடிவாதம் அதிகம் இன்றைக்கு முழுக்க எவ்வளவு கெஞ்சினாலும் கதறினாலும் இதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லமாட்டான். அவனைக் கீழே இறக்கிவிட்டு, "போய் உங்கம்மா கிட்ட கேளு அவ சொல்வா!" என்றதும் நழுவிக் கொண்டிருந்த ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே உள்ளறைக்கு ஓட்டம் பிடித்தான்.
ஆச்சர்யமாய் இருந்தது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் உன் குழந்தை என்று சொல்லி இவனைக் கைகளில் கொடுத்த பொழுது கீழே போட்டுவிடுவேன் என்று பயந்து நான் தூக்க மறுத்தது. பின்னர் அம்மா சிறிது வற்புறுத்திவிட்டு நான் தொடர்ச்சியாய் மறுக்க, தூக்கிக் கொண்டு நகர்ந்துவிட, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து குட்டி குட்டி விரல்களை நிமிண்டிக் கொண்டிருந்தது. அகிலா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் நிறைய செய்து கொண்டிருந்தாலும் கடைசி சமயத்தில் சிசேரியன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் ஆச்சர்யமாக பவானி நார்மல் டெலிவரியிலேயே பிறந்தது. சராசரியான எடை, அம்மா அவன் என்னைப் போலவே இருப்பதாகச் சொல்ல, கூடயிருந்தவர்கள், மூக்கு இவங்கள மாதிரி, கண் இவங்கள மாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்க எனக்கென்னமோ அப்படி எதுவுமே தெரியவில்லை. நான் எல்லோருக்கும் தலையாட்டிக்கொண்டிருந்தது.
அகிலா எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளில் பவானியைத் திணித்துவிட்டுச் செல்லும் பொழுது அவன், பிறந்த ஒரு வாரக் குழந்தை. அம்மா கூட "ஏண்டி அவன்கிட்ட கொடுக்கிற கீழே போட்டிடப்போறான்..." என்று பயப்பட,
"நீங்க சும்மாயிருங்க அத்தம்மா, அவருக்கு மேல இருக்கீங்க நீங்க. குழந்தைய பொறுப்பா தூக்க கூட முடியலைன்னா என்ன சொல்றது?" அவள் தான் குழந்தை பெற்றுக் கொண்டதால் எங்கள் மீது அதிகாரத்தை திணிக்க முயல்வதாக எனக்குப் பட்டாலும். அவள் செய்ததில் தவறொன்றும் இருப்பதாகப் படாததால் விட்டுவிட்டேன். பவானியிடம் இருந்து விநோதமான வாசனை வந்துகொண்டிருந்தது, குழந்தை பிறந்ததில் இருந்து அகிலாவிடம் வரும் அதே வாசனை. அவன் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்ததால் வந்த வாசமாயிருக்கும் என்று நினைத்தேன் நான்.
தொடர்ந்த இரவொன்றில், இரவில் விழித்துக் கொண்ட பவானி "ஞைய்ய்ய்ய்ய்ய்" என்று அழத்தொடங்க எனக்கும் தூக்கம் கெட்டது. அந்த அறைக்குள் என்னையும் அகிலாவையும் தவிர்த்து யாரும் இல்லாததால் அவள் சட்டென்று நைட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வாயில் மார்பைத் திணிக்க, நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். க்ளுக்கென்ற சிரிப்பொலி பரவி அடங்கியது. எனக்கு அவள் ஏன் சிரித்தாள் என்று புரிந்தாலும் நானாய் எதுவும் பேசாமல் இன்னொரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.
"ம்ம்ம் பொறாமை..." என்று சிரித்தபடி சொன்னாள், நான் அவளிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் என் தொப்பையைக் கிண்டலடிக்கும் பொழுதெல்லாம் அவளிடம் சொல்வேன் 'உனக்குப் பொறாமை' என்று இன்று அதையே என்னை நோக்கி பிரயோகிக்கிறாள், அவள் பின்னால் இருந்த படியே கைகளால் சீண்டியபடி வம்பிழுக்க திரும்பி அவளைப் பார்த்தவன்.
"எனக்கு என்னாடி பொறாமை என் பையன் மேல..." என்று முகத்தில் வழிந்த அசடைத் துடைத்தபடி இவளை இன்று திரும்ப வம்பிழுக்காமல் விடக்கூடாது என்று நினைத்தவனுக்கு சட்டென்று அந்த ஜோக் நினைவில் வந்தது.
"சோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா?" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், "சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை!" நான் அதற்கு மேலும் அவளை வம்பிழுக்க விரும்பாதவனாய் ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.
"ச்சீய் ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க நீங்க. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு இது சரியில்லை சொல்லிட்டேன்." அவளுக்கு கோபம் குறையவேயில்லை பக்கத்தில் இருந்த இன்னொரு தலையணையையும் எடுத்து விசிறினாள். சப்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து அம்மா கதவைத்திறந்துகொண்டு வெளியில் வருவது தெரிந்ததும். குழந்தையை மெத்தையில் கிடத்தி மீண்டும் நைட்டியை அணிந்து கொண்டவள் மீண்டும் பவானியை தூக்கிக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தாள். அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்ப வந்தவளைப் பார்த்து நான் வழிய. "நிம்மதியா தூங்குறதுக்காகத்தான் அத்தம்மா பவானியை எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க." என்று எனக்குத் தேவையில்லாத எதோ ஒரு விஷயத்தை பற்றிச் சொல்ல, நான் கண்டுகொள்ளாதவனாக அவளைப் பார்த்து வழிய, "பக்கத்தில் வந்தீங்கன்னா உதை படுவீங்க சொல்லிட்டேன்!" நான் அவள் பக்கத்தில் போகாமல் 'ஏ'கப்பட்ட ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருந்தேன். காதுகளை தலையணைக்குள் புதைத்துக் கொண்டு அவள் தூங்கத் தொடங்கியது மனதில் ஓடியது.
எப்பொழுதும் கண்களை மூடியபடி தூங்கியவாறு இருப்பதும் எழுந்துகொண்டால் வீறிட்டு அழுவதுமாக பவானியைப் பார்த்தாலே எனக்கு பயமாய் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வரை தோளில் சுமந்தபடியிருப்பேன் அழத்தொடங்கினால் அகிலாவிடம் கொடுத்துவிடுவேன் ஆரம்பத்தில். பின்னர் அவள் சொல்லிக் கொடுக்க, பவானிக்கு ஹக்கீஸ் மாட்டுவது, அழுதால் உடம்பில் ஏதாவது பூச்சி கடித்ததா என்று பார்ப்பது என ஆரம்ப விஷயங்களைச் செய்வேன். சிலசமயம் குழந்தைகள் எதற்காக அழறாங்கன்னே கண்டுபிடிக்க முடியாத பொழுதுகளில் என்னிடம் இருந்து அகிலாவிடம் சென்று அகிலாவிடம் இருந்து அம்மாவிடம் சென்றுவிடுவான் பவானி.
"என்னாடி உன் பையன் எப்பப்பார்த்தாலும் என்னைப் பார்த்து 'ஞ்ஞா' 'ஞ்ஞா' ன்னே சொல்றான் இவன் எப்ப நைனான்னு சொல்றது அதை நான் எப்பக் கேட்பது!" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. "நைனா அது என்ன? நைனா இது என்ன? நைனா இது ஏன் நடக்குது? நைனா இதுக்கு பேர் என்ன?" ஒரு சமயத்தில் கோபம் கூட வந்தது 'டேய் சந்தேகம் கேட்பதை கொஞ்சம் நிறுத்திக்கடா என்று நாலு போடு போடலாம் என்று'. கைக்குள் அடங்கும் உருவத்தில் இருந்து இப்போதைய உருவம் வரை பவானியின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்களுக்குள் ஒளிப்படங்களின் தொகுப்பாய் ஒரு நிமிடம் மின்னிச் சென்றது.
"... தலைவன், தலைவியின் காதலின் மெய்மறந்து ச்சீ அவளது கூந்தலில் வரும் நறுமணத்தைப் புகழ்ந்து ச்சீ..." பவானி சமையற்கட்டில் கிரைண்டரின் மீது உட்கார்ந்து கொண்டு அவளிடம் கைகளை நீட்டி நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டிருந்தான். ஒன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்தே பழக்கப்படுத்தி வரும் வசனம் என்றாலும் இன்னமும் அவனால் ச்சீ சொல்லாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை சுலபமாகச் சரியாகிவிடும் என்று தெரியுமாதலால் அப்படியே விட்டிருந்தேன்.
"ம்ம்ம் சொல்லு '...சந்தம் இயக்கிப் பாடுவதாய் செய்யுள் அமைத்திருந்தேன்...'" பின்பாட்டு பாடியவன்.
'...உமது செய்யுளின் பொருள்...' என்று தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.
அகிலாவிற்கு அவனை இந்தச் சின்ன வயதில் மேடையேற்றுவதில் விருப்பம் இல்லை, அவள் அதற்கென்று சில காரணங்கள் வைத்திருந்தாள். அவன் அந்தச் சமயத்தில் நன்றாய்ச் செய்ய முடியாமல் போகும் பொழுது அது அவனது தொடர்ச்சியை பாதிக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், எனக்கு பவானியின் மீது நம்பிக்கையிருந்தது. என்ன மேடையில் ச்சீ போடாமல் பேசினால் மட்டும் போதும். பவானியோ நின்றயிடத்தில் இருந்து பேசாமல் தருமி - சிவன் வசனத்தை துள்ளிக்குதித்து பேசும் வசனம் அப்படியே நாகேஷ் போல் பேசிக்காட்டியது அகிலாவை ஆச்சர்யப்பட வைத்தது.
"எனக்குத் தெரியாம இதெல்லாம் வேற நடக்குதா?"
அவன் திருவிளையாடல் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தெரியும் அவளுக்கு. ஒருநாள் நானும் அவனும் மொட்டை மாடியில் வைத்து அந்தப் பகுதியை ரிகர்ஸல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வந்தவள் கேட்க, ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டவன் தான், வெட்கப்பட்டுக் கொண்டு அன்றைக்கு அவளிடம் திரும்பவும் செய்துகாட்டவேயில்லை.
அன்றிரவு, "... என்னாடி உன் பையன் உன்னைப் பார்த்தே வெட்கப்படுறான் நாளைக்கு மேடையில் வெட்கப்படாமல் பேசிவிடுவானா?" நான் புலம்ப, அவள் ஆரம்பத்தில் இருந்தே இதே கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தாலும்,
"ச்ச அப்படியெல்லாம் இல்லைங்க சூப்பரா செஞ்சிருவான் பாருங்க!"
நான் பவானியிடம் சொல்லி வைத்திருந்தேன், அவன் நன்றாகப் பேசி பரிசு வாங்கினான் என்றால் அவனுக்கு குட்டி சைக்கிள் வாங்கித்தருவதாக, இது அகிலாவிற்குத் தெரியாது இல்லாவிட்டால் அதற்கும் எதுவும் லாஜிக் பேசுவாள் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் பவானி அகிலாவிடம் உளறியிருப்பான் என்று தெரிந்தது.
"ஏங்க இப்படி செய்றீங்க!" கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். அவள் பக்கத்திலும் அர்த்தம் இருந்தது அவன் அந்தப் போட்டியை அதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தான். இப்பொழுது அவனது ஒரே குறி சைக்கிள் மீதிருந்தது, என் தவறு ஒருவாறு எனக்கும் புரிந்தது.
"ம்ம்ம் என்ன செய்றது சொல்லு! இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு! அதான் பாவம் அவனுக்காவது ஏதாவது கிடைக்கட்டுமேனுட்டு" பேச்சை மாற்றுவதற்காக அப்படியொன்றை கொளுத்திப் போட்டேன். பவானி என்னிடம் வரத்தொடங்கி அழாமல் இருக்கத்தொடங்கியதில் இருந்தே அவனிடம் ஏதாவது திருவிளையாடல் வசனம் போல் பேசிக்கொண்டே வந்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்று வீட்டிற்கு வரும் யாரிடமும் பவானி இதைச் செய் அதைச் செய் என்று சொல்லமுடியாதவாறு அகிலா தடுத்து வைத்திருந்தாள். அவன் தோல்வியடைக் கூடாதென்றும் அவனுடைய தோல்வி அவனை பாதித்துவிடக் கூடாதென்றும் அகிலா ரொம்பவும் ஜாக்கிரதையாகயிருந்தாள். சிறு வயதில் இருந்தே நான் அவனை இதற்காக தயார்ப்படுத்தி வந்தது தெரிந்தவளுக்கு, அவன் சரியாகச் செய்யாமல் போனால் நானடையப்போகும் பாதிப்பும் புரிந்திருக்க வேண்டும்.
"உங்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பாடு உண்டு... பவானி நல்லா பண்ணினா!" சொன்னவளது கன்னங்கள் சட்டென்று சிவந்து போனது.
"என்னாடி இது புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி கன்னமெல்லாம் சிவக்குது! இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது!" அவளைச் சீண்டினேன். இப்பொழுதெல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி மீல்ஸ் கூட கொடுப்பது கிடையாது எல்லாம் மினி மீல்ஸ் தான் இதில் ஃபுல் மீல்ஸ் எல்லாம் நினைத்துப் பார்த்தால் கருப்பு வெள்ளை சிவாஜி எம்ஜிஆர் படங்கள் மாதிரி எப்பவோ நடந்து மாதிரி ஒரு ஃபீலிங்.
தாவாங்கட்டையில் இடித்தபடி"...நினைப்புத்தான் அதையிதப் பேசி வாரத்துக்கொருதரம் நச்சு பண்ணிக்கிட்டுத்தானயிருக்கீங்க!".
பவானி படிக்கும் பள்ளியில் மாறுவேடப்போட்டி பற்றி அறிவிப்பு வந்ததில் இருந்தே வீடு அமர்க்களப்படத் தொடங்கியது. போட்டிக்கு முதல் நாள் அவனை வைத்து ட்ரஸ்ட் ரிகர்ஸல் எல்லாம் பார்த்து அம்மா, அகிலா, என் கண்களே பட்டுவிடும் படி அற்புதமாய் குதித்து குதித்து, முதுகை வளைத்து பிரம்மாதமாய் நடித்தான் பவானி. ஆச்சர்யப்படும் விதமாய் ச்சீ வரவேயில்லை.
போட்டி அன்று அவனை ஃப்ரீயாய் விட்டிருந்தோம். முந்தைய நாள் போட்டுப் பார்த்திருந்த அதே வேடம் தருமியின் கதாப்பாத்திரத்தில் இருந்து தான் தொடங்கும் என்பதால் தருமியின் வேஷம் தான் அவனுக்கு ஏழைப் பாவலன் வேடம். விக் எல்லாம் வைத்து லேசாய் ரோஸ் பவுடர் போட்டு முடித்து அவனை அழைத்து கொண்டு வந்து உட்கார வைத்திருந்தோம். லாட் எடுத்திருந்ததில் இரண்டாவது வந்திருந்தது, நான் அகிலாவிடம் சொல்லியிருந்தேன் இது பவானிக்கு நல்லது என்று. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, முதலாவதாக வந்தவன் ஏழாவது படிக்கும் பையன் ஏதோ ஒரு படத்திலிருந்து நின்றுகொண்டே பேசும் வீரவசனம் அது. நான் மடியில் உட்கார்ந்திருக்கும் பவானியின் முகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன், அந்தப் பெரிய பையனைப் பார்த்து பயப்படுகிறான என்று. அப்படியொன்றும் தெரியவில்லை என்றாலும் அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தான். ஓரளவு அந்த ஏழாம் வகுப்பு பையன் நல்ல விதமாகச் செய்தான், ஆனால் பவானி அவன் நேற்று செய்ததைப் போலச் செய்தால் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தெரிந்தது. அடுத்த லாட் நம்பரை அழைத்தார்கள்.
அவன் காதில் மெதுவாய், "பயப்படாம போய்ச் செய்!" என்று சொல்லி மேடையேற்றினேன்.
பாண்டியனின் பரிசு பற்றிய தண்டாரோ மட்டும் ஆடியோவில் இருந்து வரும் அதைத்தொடர்ந்து பவானி நடிக்கத் தொடங்க வேண்டும். ஆடியோ முடிந்தது பவானி பேசத் தொடங்கினான் ஆனால் அவனிடம் மூவ்மென்ட் இல்லை நின்ற இடத்தில் இருந்தே பேசினான், கைகளின் மூவ்மென்ட் கூட குறைவாகவேயிருந்தது. எனக்கு காரணம் புரியவில்லை, எந்த திக்குதல் திணறுதல் இல்லாமல் ச்சீ சொல்லாமல் அழகாகப் பேசினான் ஆனால் நின்ற இடத்தில் இருந்தே. அகிலா என் கைகளைப் பற்றிக் கொள்வது தெரிந்தது. அவன் "...வாழ்க நின் தமிழ்ப்புகழ் வளர்க நின் தமிழ்த் தொண்டு..." என்று சொல்லி சிவன் நக்கீரரை வாழ்த்துவதுடன் முடித்துக் கொள்ள அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல் எழுந்தது.
அத்தனை நேரம் சிறு சப்தம் கூட இல்லாமல் இருந்த அரங்கம் முழுவதும் கைதட்டல் தொடர மழங்க மழங்க விழித்தபடி அவன் மேடையில் இருந்து இறங்கிவந்தான். நான் நினைத்தேன் இதே அவன் நாகேஷ் செய்வது போல் ஆடிக்குதித்து நடித்திருந்தானேயென்றால் என்ன பேர் வாங்கியிருப்பான் என்று, எனக்கு சட்டென்று உறைத்தது முன்னர் செய்த அந்த பையனைக் காப்பி செய்து அவனைப் போலவே நின்றவாறு பேசியிருக்கிறான். எனக்கு சமாதானம் சொல்வது போல் தட்டிக் கொடுத்தாள் அகிலா, அந்த டயலாக் டெலிவரிக்கே எல்லாரும் வந்து பாராட்டினார்கள். எனக்கும் அகிலாவிற்கும் தான் வருத்தமேயிருந்தது.
மற்றவர்கள் வெகு சுமாராய்ச் செய்ய, அந்த ஏழாம் வகுப்பு பையனுக்கு முதல் பரிசும் பவானிக்கு இரண்டாம் பரிசும் கொடுத்தார்கள். பவானி செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்கவேண்டும் மௌனமாகவேயிருந்தான். அகிலாதான் வற்புறுத்தி அவன்கிட்ட பேசுங்க பேசுங்க என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்,
"தம்பி நீ சூப்பரா செய்தடா, பார்த்தியா எல்லாரும் எப்படி கைத்தட்டினாங்கன்னு. அந்தப் பையன் உன்னைவிட பெரியவன் இல்லையா அதான் உனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் தரல! அதனாலென்ன உனக்கு நாளைக்கே சைக்கிள் வாங்கப் போறோம்." அந்த வயசிற்கு அவன் செய்தது ரொம்பவும் அதிகம் தருமி - சிவன், தருமி - பாண்டிய மன்னன் - நக்கீரர், நக்கீரர் - சிவன் என பெரிய உரையாடலை மனப்பாடம் செய்யவேண்டும். அவன் அதைச் செய்ததோடு இல்லாமல் வெளிப்படித்தியும் விட்டான் என்ன அந்த நடிப்பு மிஸ்ஸிங். அதுவும் செய்யத் தெரியாமலில்லையே வேறு ஒருவன் செய்ததைப் பார்த்து இவனும் அப்படியே செய்துவிட்டான் அவ்வளவு தானே. அகிலா திரும்பத்திரும்ப காதில் ஓதியது மனதில் ஓடியது, உண்மைதான். பள்ளிக்கூடத்தின் எதிரில் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கித்தந்து என்னுடைய வருத்தத்தை காண்பிக்காமல் இருந்தேன். ஒருவாரமாக ஐஸ்கிரீம் வாங்கித்தராததால் எப்பொழுதும் சண்டைக்கு வரும் அகிலாவே அவனுக்கு வாங்கித் தர சாப்பிட்டவன் களைப்பில் காரில் உட்கார்ந்ததுமே தூங்கிப் போனான்.
அகிலாவின் மடியில் பவானி தூங்கிக் கொண்டிருக்க, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்
"என்ன ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா?"
நான் ஜாக்கிரதையாய் அவள் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டில் கவனம் செலுத்தினேன்.
"அகிலா நான் என்ன பவானியா? சின்னப்பையன் மனசொடைஞ்சிருவான் என்று சைக்கிள் வாங்கிக் கொடுக்க, அவன் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்காததுக்கு நான் தான் காரணம்..." என்னால் தொடரமுடியவில்லை.
அருகில் நகர்ந்து வந்து அணைத்துக் கொண்டவள்,
"என்ன பாவா இது! நானென்னமோ பெரிய கொடுமைக்காரி மாதிரியும் ஃபுல் மீல்ஸ் சாப்பாடே காரணத்துக்காகத்தான் போடுவேங்கிற மாதிரியும் பேசுறீங்க, காரணமேயில்லாம இன்னிக்கு சாப்பிடுறதா நினைச்சிக்கோங்க என்ன?"
'...குற்றஞ்சாட்டப்பட்டு உங்கள் முன்னால் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜாலி! அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, "நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா!" என்று கேட்க நொந்து போய் பேசாமல் பவானியை இசைத்துறையில் ஈடுபடுத்தினால் என்ன என்று நினைத்தேன்.
-------------------
Credits - Thinnai.com
நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்
Posted on Wednesday, June 28, 2017
நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்
Mohandoss
Wednesday, June 28, 2017
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
//ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.
ReplyDelete//
அதென்னங்க ஒற்றுமை தனியா என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க....
நல்லா இருக்கு கதை என் ஒண்ணாங்கிளாஸ் யானை ரிகர்சல் எல்லாம் தூண்டிவிட்டுச்சி
திருவிளையாடளுக்கு
ReplyDeleteஈடுபடுத்தினாள் என்ன
தமிளு தமிளு
%%
ReplyDeleteசோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா
%%
ச்சீய் ரொம்ப மோசம் நீங்க..
தாய்க்குப் பின் தாரம்தான் அதுக்காக இப்படியா ஜோக் அடிப்பாங்க.
நல்லவேளை. ராகுல் காந்திக்கும் ராஜீவ் காந்திக்கும் ஒரு ஒத்துமை - அது என்னான்னு கேக்காம வுட்டிங்களே
சூப்பர் கதை தாஸ் :)
ReplyDeletehi mohandass,
ReplyDeleteI was about to sleep at 10.30 pm. but your stories made me to sleep at 2.00 am. read ur post about bookfair, and surfed few other posts to know u are married, just curiosity to know whether the stories are real. i am adding you to my favorites (abiappa, kappi).
குழலி தனிமெயிலில் சொல்றேன் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதுன்னா!
ReplyDeleteஅனானிமஸ்களா
ReplyDeleteநன்றிகள், அடுத்த முறை இன்னும் தெளிவாய் எழுத முயல்கிறேன்.
இரண்டும் ஒன்னுதானுங்களே!
கோபிநாத், செந்தில் நன்றிகள்.
ReplyDeleteசெந்தில்,
எல்லா விஷயங்களும் கற்பனைகளாய் இருக்க முடியாதில்லையா! கற்பனையும் உண்மையும் சேர்ந்தது தான் என் கதைகள் கலப்படம் செய்ய சொல்லித்தந்தது சுஜாதா ஐயா!