வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்ப்போச்சு, உங்களை முன்னாடியே ஒருதரம் இங்க பார்த்த மாதிரியிருக்கே? ம்ம்ம் ஞாபகம் வந்திருச்சு போனதடவையும் இந்த வீடு அமைதியா இருந்த ஒரு நாள் நீங்க வந்திருந்தீங்கள்ள, ஞாபகம் வந்திருச்சு. சரி, சரி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருக்கேனே உள்ள வாங்க.
மறந்திடாம காலில் போட்டிருக்கிறதை வெளியக் கழட்டிப்போட்டுட்டு வந்திருங்க, இந்த வீட்டம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது, சூடா ஆவிபறக்கிற அந்தம்மாவோட மணமான காபியை எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா சாரி, அம்மா நேத்திலேர்ந்து காபி போடுவதை நிறுத்திட்டாங்க. இன்னும் என்னவெல்லாம் எங்க பழக்கவழக்கத்தில் இருந்து மறையப்போகுதோ? ஆண்டவா அய்யோ ஆண்டவனைக் கூப்பிடுறேனே நான் நாத்தீகவரியில்லையா? ஒரு வேளை மறந்திட்டனோ…
என்னங்க அதிசயமா சுத்திச்சுத்தி பார்க்கிறீங்க, ஓஹோ நீங்க அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் இப்பத்தான் வர்றீங்கல்ல, அம்மாதான் வால்பேப்பர், காந்தி படம், கன்னியாகுமரியிலேர்ந்து வாங்கிவந்த சிப்பி மாலையெல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டாங்களே. ம்ஹும் உங்களுக்குத்தான் தெரியுமே அம்மாவோட கோபத்தின் செறிவு.
"எதப்பாத்தாலும் அவமூஞ்சே தெரியுது."
கோடையின் வெம்மை சுவற்றில் தங்கியிறங்கிய ஒரு இரவில் வியர்வை வாசத்துடன் புரண்டுபடுக்க கூழாங்கற்கள் தான் நகர்ந்ததோயென்னவோ வெளிப்பட்ட சப்தத்தில் அம்மா என் காதில் சொன்ன இந்த விஷயம் இப்ப நான் சொல்லி உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. என்ன என் குரல் கம்முதேன்னு பார்க்கிறீங்களா இன்னிக்கு அந்தம்மா சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் உறுத்திக்கிட்டேயிருக்கு…
"என்னங்க வீட்டை மாத்திரலாம் இனிமே என்னால முடியாது."
அழுது ஓஞ்சிருந்த அய்யாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படியாய்ச் சொன்னது என் காதுகளுக்கு எப்படி கேட்டிச்சுன்னு கேக்குறீங்களா எனக்குத்தான் ஆயிரம் காதுகளாச்சே. ஆனால் இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. என் சகோதரர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோருக்கும் மரணம் உண்டென்று. ஆனால் எனக்கு மரணம் வராதென்றே நினைத்திருந்தேன். இல்லையா பின்ன மூணு தலைமுறையா உயிரோடயிருக்கேன்ல அதில் வந்த திமிர்தான்.
எத்தனை குழந்தைகள் பிறந்ததையும் வயதானவர்கள் சாவதையும் பார்த்திருக்கிறேன். ஏன் அந்த பொண்ணு பேரென்ன, ஆஹா நான் சாவப்போறேன் எனக்குத் தெரிய ஆரம்பிச்சிறுச்சு. மூணு தலைமுறை பெயர்களைக்கூட ஞாபகம் வச்சிருந்த எனக்கு போன வருஷம் இருந்த அந்தப் பொண்ணு பேரு நியாபகத்தில் வரமாட்டேங்குதுன்னா சரிதான் நீங்கவேற வந்துட்டீங்கள்ள அதையே மறந்திட்டேன். போனதடவை வந்தப்ப உங்களை ஓட ஓட விரட்டினது ஞாபகத்தில் வருது. அப்ப சோகத்தில் கூட எவ்வளவு சந்தோஷமா இருந்தது. சாவையே ஜெயிச்சிட்டேன்னு.
எல்லாம் அந்தச் சனியனால, அய்யய்யோ நான் சொன்னது உங்களுக்கு கேட்டிருச்சா அந்தம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க, வருத்தப்படுவாங்க. ம்ம்ம் நியாபகம் வந்திருச்சு வந்தனா, வாயில் சக்கரைத்தண்ணியைத் தொட்டுவைச்சி அவக்காதில் வந்தனா வந்தனா வந்தனா ன்னு சொன்னதை நீங்க பார்த்திருக்கீங்களா நான் பார்த்திருக்கேன். அதைமட்டுமாப் பார்த்தேன் ஒரு நாள் அந்தப் பொண்ணு பொட்டியைத் தூக்கிக்கிட்டு யாரும் முழிச்சுப் பார்த்திருவாங்களோன்னு திரும்பித்திரும்பிப் பார்த்துக்கிட்டே வெளியே போனதையும் பார்த்துத் தொலைத்திருந்தேன். ஆயிரம் காதுன்னு சொன்னேன்ல ஆனால் ஒரு வாய் இல்லைன்னு வருத்தப்பட்டது அன்னைக்குத்தான். இருந்திருந்தால் அந்த அம்மாவை உஷார் பண்ணியிருக்கலாம் இல்லைன்னா அய்யாவை இரண்டுமே முடியலைன்னா அந்தச் சோம்பேறி மோகனையாவது.
நான் உருவான பொழுது பக்கத்தில் சகோதரர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். பெண்கள் யாருக்கும் கேட்காத அளவிற்கு பேசக்கூடியவர்களென்று உண்மைதான் அந்தம்மா மனசில என்ன நினைக்குதுன்னோ இல்லை தூக்கத்திலேயோக்கூட அவள் மனதில் இருக்கும் விஷயம் நான் அறிய முடிந்ததில்லை, அதுபோலில்லை ஆண்கள் அவர்கள் புலம்புவது மட்டுமல்லாமல் அவர்கள் மனதில் நினைக்கும் விஷயங்கள் கூட எளிதாகக் கேட்டிருக்கிறது. அப்படித்தான் வந்தனா ஓடிப்போன அன்றவன் எவனோ ஒருவன் அந்த அழகுதேவதையை அனுபவித்துக் கொண்ருப்பான் நினைத்ததும் தெளிவாகவேக் கேட்டது. என்னையும் அறியாமல் நான் ஆமாம் என்று சொல்லியதை நினைத்து சிரித்தேன். உண்மைதான் என்னதான் அவன் தம்பிக்காரனாயிருந்தாலும் நான் பார்த்த அளவிற்கு அவன் பார்த்திருக்க வாய்ப்பில்லையில்லையா. இதை ஒருமுறை சகோரனிடம் சொல்லும் பொழுது அவன் எதையோ புரிந்துகொண்டவனைப் போல் சிரித்தான் முதலில் பின்னர், என்னவோ உனக்கு சாவில்லைன்னு சொன்னியே உனக்கும் சாவு உண்டு, உன் சாவு என் கண்ணில் தெரியுதுன்னு சொன்னதை கொஞ்சம் கொஞ்சமாய் யோசித்துப் புரிந்து கொண்டேன்.
ஆமாம் எனக்கும் சாவு உண்டென்பதை நான் புரிந்து கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும் ஆனாலும் மூன்று தலைமுறையாய் உயிர்வாழ்ந்தது அதை மறக்கடிக்கும் வித்தைதான் ஆச்சர்யமே. மூன்று தலைமுறை மக்களுடனான பழக்கம் இருந்தாலும் யாருடனும் ஒட்டாமலே இருந்து வந்திருக்கிறேன். எல்லாம் ஒரு நிமிடத்தில் மாற்றப்பட்டது, இந்த அம்மா அய்யாவிற்கிடையேயான உறவினைக்கூட விலகியிருந்து பார்க்கமுடிந்திருக்கிறது, இதுவரையிலும் இவர்களிடத்தில் அந்த ஒட்டுதல் இல்லைதான், சகோதர்கள் அவரவர் வீட்டு அய்யா அம்மாவின் இரவு விளையாட்டுக்களைப் பற்றி பேசும் பொழுது தலையில் அடித்தக்கொண்டு நகர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு மரணம் வேண்டும், தங்களை அவர்களாக பாவித்து ஒரு தலைமுறை வாழ்ந்து மடிவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம், அவர்களின் சோகங்களுக்கு அழுது, சந்தோஷத்தில் சிரித்து, மரணத்தில் தங்கள் நினைவுகளை அழித்து மீண்டும் நினைவில்லாமல் பிறப்பதில் சுகம் காண்பவர்கள்.
அந்தக் கிராமத்தில் சுவர்களுக்கு வெள்ளைப் பூச்சே அரிதாகயிருந்த காலக்கட்டத்தில், அய்யாவிடம் கெஞ்சிக்கூத்தாடி டிஸ்டம்பர் அடித்து, அழகழகான குழந்தைப் படங்களை வால்பேப்பர்களாக வாங்கிவந்து ஒட்டி, சோழிகள், சிப்பிகளால் ஆன மாலைகளால் அலங்கரித்து ஒரு சூரியன் மேற்கேசாயும் அந்திவேளையில் என்மேல் காதைவைத்து இப்ப நீ எவ்வளவு அழகாயிருக்கத் தெரியுமா அந்தப் பெண் கேட்ட ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறிப்போனது. காதலா அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை போதைதரும் வல்லமை. பின்னர் என் கண்கள் எல்லாம் ஒடுங்கிப்போய்விட்டன இரண்டேயிரண்டைத்தவிர்த்து, காதுகளும் கூட. அவளுக்காக மட்டும் இயங்குபவையாக, இப்படி ஒருவருடத்திற்கு முன்பே அவள் வீட்டை விட்டு ஓடிப்போன பொழுதே அழிந்திருக்க வேண்டிய நினைவுகள் இன்னமிருப்பதற்கு காரணம் அதோ அந்தச் சோபாவில் தூங்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து தோற்றுப்போனவனாய் விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறு படுத்திருக்கானே அந்தச் சோம்பேறி மோகன் தான் காரணம்.
அடாத மழையில் விடாமல் காஜி அடித்து ஜுரத்தினால் படுத்திருந்த ஒரு நாளில் அவன் மேல் ஆரம்பித்தது இந்தப் பொறாமையுணர்ச்சி, காய்ச்சல் 106க்கும் மேல் போய்விட, வந்தனா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து அழுதபடியே கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது. இப்படி ஆரம்பித்ததுதான் அவன் மீதான ஒட்டுதல், அக்காவைப் போலவே அவனுக்கும் என்மேல் காதல் உண்டு, எத்தனைப் படங்கள் எத்தனைப் படங்கள், அவன் எதிர்த்தவீட்டு இரட்டைச்சடைப் பெண், ஒரு கையில்லாத அய்யர் வீட்டு ஆன்ட்டி என அவன் பொருந்தாக் காதலெல்லாம் படங்களாக என் மேனியெங்கும் பரவியிருந்தது அவனது திறமை உண்மையில் ஆச்சர்யமானதுதான். ஆனால் ஆச்சர்யமூட்டும் அந்த ஓவியங்களை அதிர்ச்சிக்குரியவையாக்கிய அவனை நினைத்து இன்னமும் துடைத்துக் கொண்டேயிருக்கிறேன் உதடுகளை. என்னை ஆணாக வரித்து அவன் அக்காவை நான் காதலிக்க அவன் என்னைக் காதலுடன் முத்தமிட்டதைக் கூட பொறுத்துக் கொண்டிருந்தேன் வந்தனாவிற்காக, ஆனால் அவன் ஒருநாள் கொண்டுவந்தானே ஒரு சனியன் பேரைப்பாரு பாரு ஜிம்மியாம் ஜிம்மி.
கைகளுக்குள் அடங்கிவிடும் சைஸில் கொண்டுவந்த அந்த ஜீவனை அம்மாதான் காப்பாற்றினாள், நூழிலையில் பால்விட்டு, கொஞ்சமாய் வெட்டிய கம்பளிக்குள் வெதுவெதுப்பை உண்டாக்கி, அவனுக்கு தற்பெருமை அதிகம் அவன்தான் ஜிம்மியின் மீது பாசம் அதிகம் வைத்திருப்பதாய், ஆனால் எனக்குத் தெரியும் அம்மாவிற்கு வந்தனாவையும் மோகனையும் விட ஜிம்மியை அதிகம் பிடிக்கும்.
ஆனால் எனக்கு பிடிக்கவேப்பிடிக்காது, அம்மாவிற்கும் அய்யாவிற்கும் தெய்வமாய், வந்தனாவிற்கும் மோகனுக்கும் காதலன் காதலியாயும் இருந்த என்னை காலைத்தூக்கி அசிங்கம் செய்யும் பொருளாகப் பார்த்த ஜிம்மியை எனக்கு பிடிக்கவேயில்லை, உண்மையில் இது கூட ஒருவகையில் ஒட்டுதல் தான். பிரியமோ இல்லை கோபமோ இருக்கக்கூடாது சாவு வேண்டாமென்றால். ஆனால் எனக்கு பிரியம் பொறாமை கோபம் மூன்றும் வந்தது மூன்றாம் தலைமுறையில். ஆனால் ஜிம்மி வந்த பிறகு அந்த வீடு அமைதியாய் இருந்து நான் உணர்ந்ததேயில்லை, ஒருவர் மாற்றி ஒருவர் அவனைக் கொஞ்சிக் கொண்டும் கோபித்துக் கொண்டும் விளையாடிக்கொண்டும் ம்ஹும் அந்த நாட்கள் மகிழ்ச்சியானவை. சோம்பேறி மோகன் ஆரம்பக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு போனதற்கு பிறகும் பிற்பாடு காலேஜுக்கு போனதிற்கு பிறகும் அய்யாதான் ஜிம்மிக்கு எல்லாமே, எனக்கென்னமோ மோகன் கண்முன்னால் அய்யா ஜிம்மியை பிடிக்காதது போல் நடிக்கிறாரோ என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது.
பின்னர் ஒருநாள் தான் காதலித்த வேற்று மத பையனைக் கல்யாணம் செய்துகொள்வதற்காய் சொல்லாமல் கொள்ளாமல் லெட்டர் மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தனா போன நாள் ஜிம்மி மட்டும் கொஞ்ச நேரம் பசியில் கத்திக்கொண்டிருந்தான். ஊரே இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க வீட்டில் நிசப்தம். நான் வந்தனா காதலித்த பையனைப் பார்த்ததில்லை அதனால் தான் மோகன் எவனோ ஒருவனைப் பற்றி நினைத்ததும் ஒத்து ஊதத் தோன்றியது. என்னயிருந்தாலும் எனக்குக் கூட காண்பிக்கமாட்டேனெற்று உடை உடுத்துபவளாயிற்றே வந்தனா, இன்னொருவனுடன் உடையில்லாமல்…
அப்படியிப்படியென்று ஒருவருஷம் ஆகியிருந்தது. காலையில் அம்மா படிச்சிப் படிச்சி சொன்னாங்க, டேய் கதவை மூடிட்டு போ ஜிம்மி வெளியப் போயிறப்போறான்னு இந்தச் சோம்பேறிதான் மூடாமல், எதிர்த்தவீட்டு ஏஞ்சலை சைட் அடிச்சிக்கிட்டே போய்விட்டான் அப்படியே ஜிம்மியும், இது இரண்டாவது முறை நான் வாய் இல்லாமல் போனதற்காக வருந்தியது, என்னதான் நான் பொறாமைப்படும் விஷயம் என்றாலும் ஜிம்மி கூழாவதைப் பார்க்கும் நிலையில் நான் இல்லை, வந்தனா ஓடிப்போன அன்றுகூட கண்ணை திறந்து வைத்திருந்தவன் வாழ்க்கையில் முதல் முறையாய் கண்களை மூடினேன். விஷயம் தெரிந்து அய்யா ரோட்டிலேயே கூழைக்கையில் எடுத்து முகத்திலறைந்து அழுததும் அவர் வந்தனா வீட்டை விட்டு ஓடிப்போனதின் பிறகு வந்த முதல் சனிக்கிழமை முதல் வார்த்தையாக சொன்னது ஞாபகத்தில் வந்தது,
"ஒருவார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்."
எல்லாம் போச்சு, அய்யாவிற்கு அழுகையுடன், மோகனுக்கு கழிவிரக்கத்துடன் ஆனால் அம்மாதான் சொல்லிவிட்டாள் என் சாவிற்கான நாளை இந்த வீட்டை விட்டு போவதான ஒரு வார்த்தையுடன். நான் அழிந்து போவதற்காக வருந்தியதெல்லாம் உண்டுதான், எனக்கென்னவோ வந்தனா போனதிலிருந்தே நான் பாதி இறந்துவிட்டவனாயும், எல்லாவற்றையும் கடந்துவிட்டவனாகவும் ஆனாலும், மோகன் மீதும், ஜிம்மியின் மீது மட்டும் பாசம் உரியவனாயும் இருப்பதாய் உணர்ந்தேன். வந்தனா ஓடிப்போய்விட்ட நாட்களின் ஆரம்பக்காலத்தின் இரவுகளில் யாருக்கும் கேட்காமல் அம்மா அழுதது தெரியும்.
இன்று எதற்கும் கவலைப்படாதது போல், அம்மா சமையற்கட்டை வெறித்து வெறித்துப் பார்த்து வெடித்து அழுது கொண்டிருந்தாள், இது போதும் இது நிச்சயமாகப் போதும். நான் சந்தோஷமாய் இறந்து போவேன். பின்நாட்களில் என்றைக்காவது இவர்கள் திரும்பவும் வந்து தெருமுனையில் இருந்து பார்க்கலாம். ஆனால் நான் அப்போது இருக்கப்போவதில்லை. என்னுடைய மூன்று தலைமுறை நினைவுகள் இழந்தவனாய் புதிதாய் பிறந்து ம்ஹூம் இன்னும் நிறைய தலைமுறைகளைப் பார்க்கப்போகிறேன். அம்மா சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டுத்தானே வந்திருக்கீங்க நீங்க, இருங்க அந்த லாரி தெருமுனையை கடந்ததும் அழிச்சிறுங்க என் நினைவுகளை.
------------------------
இது இரண்டு கவிதைகளைப் படித்ததின் விளைவு
எழுதியவர் இளவஞ்சி.
ஓடிப்போனவளின் வீடு
ஜிம்மியும் சில நிகழ்வுகளும்…
நன்றி இளவஞ்சி.
0 comments:
Post a Comment