அன்றைக்கு மனசு சுத்தமாய் நொறுங்கிப் போயிருந்தது எனக்கு. நான் அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, காதலால் சாவு விழுந்த வீட்டின் ஒருபெண், லவ்லெட்டர் கொடுத்தால் அப்படித்தான் நடந்துகொள்வாள் என்பதை. என் மீதே எனக்கு கோபமாக இருந்தது. பிரபுவும் ராஜேஷம்தான் சிறிதளவு சமாதானப்படுத்தினார்கள். ஏதோ ஞாபகமாய் மாலை நோட்டை சிவசங்கரியிடம் வாங்காமலே சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலையில் வந்ததில் இருந்து, கௌசி என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்ருந்தாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அன்று மாலை எல்லோரும் சென்றவுடன், சிவாவும் கௌசியும் எங்கள் அருகில் வந்து நின்றார்கள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிவசங்கரி தான் தொடங்கினாள்.
"கௌசி உங்ககிட்ட என்னவோ பேசணுமாம்." சிவசங்கரி தான் சொன்னாள் அதையும்.
"சொல்லச் சொல்லு." அந்த விளையாட்டு போரடிக்கத் தொடங்கினாலும் சொன்னேன்.
பிரபுவும், ராஜேஷம் அங்கிருந்து நகரத்தொடங்க, "நீங்களும் இருங்க!" என்று கௌசி சொல்லிவிட்டு, இருவரும் நின்றதும், "இங்க பாரு சங்கரி, எனக்கு இப்ப இவர் மேல கோபம் இல்லை, நான் என் குடும்பத்தில் நடந்ததை மனசில் வைச்சிக்கிட்டு, அவரு சாதாரணமா லவ்லெட்டர் கொடுத்ததை பெரிய அளவில் கொண்டுவந்திட்டேன். ஆனா அவர் பண்ணியதும் தப்புத்தான். பரவாயில்லை, காதல்ங்றதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது, அவரோட நோட்டை படிச்சேன் நான் மனசால அவரை பாதிச்சிட்டேன்னு நினைக்கிறேன். இவரைப் பார்த்தா எனக்கு பாவமாயிருக்கு, இன்னும் சொல்லப்போனா எனக்கு அவரைக் கொஞ்சம் பிடிச்சிருக்கு, இதுக்கு நிச்சயமா நான் அவரை காதலி க்கிறேன்னு அர்த்தம் இல்லை. எங்க அப்பா அம்மா சம்மதத்தோடத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன், அது யாராயிருந்தாலும் சரி; அவராயிருந்தாலும். அவ்வளவுதான். இனிமேலும் நான் அவர்கிட்டையும் அவர் என்கிட்டையும் பேசாம இருக்க வேணாம். ஆனா சில கண்டிஷன்ஸ். உங்கள்ல யாராவது கூடயிருக்கிறப்ப அவர் பேசலாம், இதுகூட ஆரம்பிக்கிறதுக்காத்தான். ஆனா எக்காரணம் கொண்டும் காதலை பத்தி மட்டும் பேசக்கூடாது. பேசுறது கல்லூரிக்குள்ல மட்டும்தான். வெளியே நான் அவரை இதுவரைக்கும் என்னைப் பின்தொடர்ந்து பார்த்ததில்லை, அதுவே போதும். கல்லூரிக்கு வெளிய பேசக்கூடாது. என்னை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இதுக்கெல்லாம் சம்மதம்னா பேசலாம்!" சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.
நான் அவள் சொன்ன விஷயம் அளித்த மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டவனாய், "என் நோட்டைக் கொடு!" நேராக அவளிடம் கோபமாகக் கேட்டேன்.
"மறந்திட்டேன், அதையும் சொல்லணும்னு நினைச்சேன். என் பேரை இனிமே நீங்க நோட்டில எல்லாம் எழுதாதீங்க. ப்ளீஸ். அப்புறம் உங்க நோட்டில் இருந்த பாட சம்மந்தப்பட்ட பேப்பர்களை தவிர மற்றவற்றையெல்லாம், எரித்துவிட்டேன். அதுக்காக மன்னிச்சுக்கோங்க." சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள்.
நான் கோபமாக பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டேன்.
அதிலிருந்து எங்களுக்குள் சிறிது பேச்சுவார்த்தை ஆரம்பமானது. சிலமுறைதான் அவள் என்னுடன் நேரடியாகப் பேசுவாள். பல சமயங்களில் முன்புபோல் யாராவது ஒருவரிடம் சொல்லித்தான் பேசிக்கொண்டிருந்தாள். நான் பெரும்பாலான சமயங்களில் அவள் பேசும்போது அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் இதை கவனித்துவிட்டு அவள் பேச்சை முறித்து கிளம்பிப்போய்விடுவாள். சிறிது நாள்களிலேயே அவள் வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரத்தொடங்கியது. ஆனால் அவள் என்னிடம் வாங்கிச் சாப்பிட மாட்டாள். அவள் சிவசங்கரியின் டிபனைச் சாப்பிட, சிவாதான் குஸ்கா சாப்பிட்டு வந்தாள்.
எங்கள் லெக்சரர் எல்லோருக்கும் ஒரு அசைன்மெண்ட் கொடுத்து எழுதி வரச் சொன்னார். எழுதினால் தான் இன்டர்னல் மார்க் என்று சொல்லிவிட்டதால், நான் சிவசங்கரியிடம் என்னுடையதையும் எழுத சொன்னேன். அவளுக்கு கோபம்.
"அண்ணே நான் ஏற்கனவே பிரபுவோடதையும் எழுதணும். இருந்தாலும் பரவாயில்லை எழுதிக் கொடுக்கிறேன். நீங்களும்தான் பார்த்து பார்த்து லவ் பண்ணுணீங்களே ஒருத்திய. அய்யோ..." தலையிலடித்துக் கொண்டாள். கௌசி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் இதை. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த வாரம் திங்கட்கிழமை காலேஜ் வந்ததும் என்னிடம் வந்து அசைன்மெண்டை சிவசங்கரி கொடுத்துச் சென்றாள்.
பார்த்ததுமே புரிந்துவிட்டது எழுதியது கௌசிதான் என்று.
லெக்சரர் வந்தார், வந்தததுமே ஞாபகமாய், "அசைன்மெண்ட் கொடுத்திருந்தேன். எழுதாதவங்க மட்டும் எழுந்து நின்று காரணத்தைச் சொல்லிவிட்டு, உட்காரலாம். மத்தவங்க லேப்பில் அட்டண்டரிடம் கொடுத்துவிடுங்கள். ம்ம்ம் சொல்லுங்கள் யார் யார் எழுதலை?"
நான் எழுந்து நின்றேன். நான் மட்டும் தான் எழுந்து நின்றேன். கிளாஸே என்னைத் திரும்பிப் பார்த்தது. எங்கள் கூட்டம் ஆச்சர்யத்தில் பார்த்தது.
o
அந்த லெட்டர் சிவசங்கரிக்கு இல்லை, நேராகவே என்னிடம் தான் வந்தது. நான் படித்ததும் சிவாவிடம் கொடுத்தேன் படித்தவள். சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் கேரியரில் ஒரு அடுக்கை எடுத்துக் கொண்டு எனக்கு ஒரு அடுக்கை கொடுத்தாள். சாயங்காலம் கௌசி என்னிடம் வந்து நின்றாள்.
"என்ன?"
"அந்த லெட்டரை திரும்பக் கொடுங்கள்."
நான் பதில் சொல்லாமல் சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு,
"இன்னும் நீ என்னை நம்பலைல்ல?" நான் கேட்டதும், அமைதியாக இருந்தாள்.
மீண்டும், "ப்ளீஸ் அந்த லெட்டரைக் கொடுத்துடுங்க."
நான் லெட்டரை திரும்பக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவள், "இப்பத்தான் நல்லபிள்ளை!"ன்னு சொல்லிவிட்டு நகர்ந்தாள். இப்படி அடுத்த ஒரு மாதத்தில் நாள்தவறாமல் கடிதம் வருமெனக்கு; எதையாவது எழுதியிருப்பாள். ஆனால் காதலைப்பற்றி ஒரு வார்த்தைகூட இருக்காது, எப்பப் பார்த்தாலும் நல்லா படிங்க, அப்பத்தான் நல்ல வேலை கிடைக்கும் இப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லா லெட்டரிலும் ஒரு விஷயம் மட்டும் மாறாமல் இருக்கும்; அது சி வசங்கரிக்கு என்ற தலைப்பு. முதல் சிலநாள்கள், சாயங்காலம் வந்து லெட்டருக்காக நிற்பாள். பிறகு நானே படித்துவிட்டு அவளிடம் திரும்பக் கொடுத்துவிடுவேன்.
எங்கள் செமஸ்டர் மார்க் வந்தது, நான் எப்பொழுதும் போல மார்க் வாசிக்கும் பொழுது வெளியே கிளம்பிப் போய்விட்டேன், அது என்னுடைய ஒரு சூப்பர்ஸ்டிஷன். மொத்தமும் படித்துவிட்டு, லெக்சரர்கள் வெளியே போனதும் தான் திரும்பவும் கிளாசிற்கு வந்தேன். நாங்கள் நினைத்தது தான். நாங்கள் மூன்று பேரும்தான் முதல் மூன்று இடங்களில் வந்திருந்தோம். மொத்தம் அரியர் இல்லாமல் பாஸானவர்கள் ஏழுபேர் தான். எங்களுக்குள் சில மார்க் வித்தியாசங்களே இருந்தன. எல்லா பேப்பர்களிலும் எங்கள் மூன்று பேரில் ஒருவர்தான் முதலிடம் வாங்கியிருந்தோம், ஆனால் பிராக்டிகலில் நாங்கள் மூன்று பேருமே நாற்பத்தைந்து மதிப்பெண்தான் ஐம்பதுக்கு. கௌசிமட்டும் ஐம்பதுக்கு ஐம்பது.
அவள் அழுது கொண்டிருந்தாள், நான் பக்கத்தில் சென்று, "என்ன ஆச்சு, ஏதாச்சும் பேப்பர் ஊத்திக்கிச்சா?"
"இல்லை, இதுவரை நான் படித்த பள்ளிகளில், நான்தான் முதல் மார்க் வாங்குவேன், இரண்டாம் இடம் கூட வந்ததில்லை, இங்கே நாலாவதோ, ஐந்தாவதோ தான் வந்திருக்கிறேன். அதுதான் பொறுக்கவில்லை."
ஆனால் இதைக்கேட்டு சிவசங்கரி கோபமானாள். "எனக்கு ஒரு பேப்பர் அரியர் வந்திருக்கு, நானே அழுவலை; நிறைய மார்க் வரலைன்னு அழறாளாம். இதெல்லாம் ரொம்ப ஓவர். உங்காள கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள் ஆமாம்." சொல்லிவிட்டு சிரித்தாள் சங்கரி.
இதைக்கேட்ட கௌசி மெதுவாக அவளை அடித்தாள். அன்றும் ஒரு லெட்டர் வந்தது, எல்லாவற்றையும் போல்தான் ஆனால் இந்த முறை ஒரு கூடுதல் வரி, இன்னும் நிறைய மார்க் வாங்கணும், அப்படியென்று. அன்று உண்மையிலேயே எனக்குக் கோபம் வந்தது. நான் நேராக அவளிடம் வந்து, "யேய், உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா, இல்லை என் மார்க்கையா? எப்பப் பார்த்தாலும் மார்க் வாங்குங்க, இன்னும் நிறைய, இன்னும் நிறையன்னா எப்படி?"
"நான் உங்ககிட்ட எப்பயாவது உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கேனா?" சொல்லிவிட்டுச் சிரித்தாள். பிறகு, "ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, நீங்க மட்டும் கிளாசில் முதல் மார்க் வாங்காத பையனா இருந்திருந்தீங்கன்னா உங்களைத் திரும்பிக் கூட பார்த்திருக்காமாட்டேன். அதுவும் நீங்க பண்ணிணதுக்கு!" மூஞ்சை குரங்காட்டம் வைத்துக் காட்டினாள். பிறகு, "ஏதோ நல்லா படிக்கிற பையன்கிறதாலதான் உங்கக்கிட்ட பேசுறதே. அதனால ஒழுங்கா போய்ப் படிங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள். அன்று மதியம் கல்லூரி விடுமுறை விட்டார்கள். நாங்களெல்லாம் ஒரு படத்துக்கு போவது என்று முடிவானது. வழக்கம்போல் ஏகப்பட்ட கன்டிஷன் போட்டாள்.
நானும் சங்கரியும் தனியா வருவோம், நீங்க தனியா வரணும். நாங்க தனியா உட்கார்ந்து பார்ப்போம், வெளியில என்கிட்டையோ சங்கரிகிட்டையோ நீங்க யாரும் பேசக்கூடாது, இதுக்கு ஓக்கேன்னா வரேன்னு சொன்னா. எங்களுக்கு ரொம்ப கோபம் ஆனால் சங்கரிதான் கண்ணடித்தாள். தியேட்டர் போய் பார்த்துக்கலாம்னு சொன்னாள். நாங்கள் சோனா மீனா தியேட்டர் வந்தோம். 'உன்னைத்தேடி' அஜித்தோட படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். நாங்கள் அதிகம் படம் பார்க்க மாட்டோம். பக்கத்து பக்கத்து சீட்டு ஐந்து கொடுத்திருந்தார்கள்.
கௌசிக்கும் லேசாய் பயம் இருந்தது, அந்த தியேட்டரிலேயே மொத்தம் சில பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே காலேஜ் பெண்கள் தான். எனக்கும் கௌசிக்கும் இடையியில் சங்கரியை உட்கார வைத்தாள். நான் படம் பார்க்காமல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கௌசியையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதனால் கோபமான சங்கரி, என்னை எழுப்பி கௌசியின் பக்கத்தில் உட்கார வைத்து, இங்கேயிருந்து பார்த்தா இன்னும் கிளியரா தெரியும்' சொல்லிவிட்டுச் சிரித்தாள். இதற்கு கௌசியும் ஒன்றும் சொல்லவில்லை.
அரைமணிநேரம் படம் ஓடியிருக்கும், நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கௌசியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு அஜித்தை ரொம்பப் பிடிக்கும் ஆதலால் ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சிலசமயம் திரும்பி என்னைப் பார்ப்பாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாள். சிறிது நேரம் ஆனதும் நான் என் கையை அவள் கையின் மீது வைத்தேன். அந்த ஏசி அறையிலும் எனக்கு வேர்த்துக்கொட்டிக் கொண்டிருந்தது.
ஐந்து நிமிடம் ஒன்றும் சொல்லிவில்லை; பிறகு திரும்பி என்னைப்பார்த்தவள், "எழுந்திருங்க...!" சொல்லிவிட்டு, அவளும் எழுந்தாள். கூடவே எழுந்த மற்றவர்களை உட்காரச் சொல்லிவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தோம். நேராக அங்கு வந்த சத்திரம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள். நானும் ஏறி உட்கார்ந்தேன். நேரே மெயின்கார்ட்கேட் வந்தவள். உள்ளே நுழைந்து உச்சி பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்தாள். எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியவள். என்னை கேட்ககூட இல்லை; நேரே சிவன் கோயிலுக்குள் நுழைந்தாள். பலருக்கு அங்கே ஒரு சிவன்கோயில் இருப்பதே தெரியாது. எல்லோரும் உச்சி பிள்ளையார் கோயிலுக்குத்தான் வருவார்கள்.
மதிய நேரமாதலால் யாருமே இல்லை, சாமியைத் தவிர. சாமிக்கு எதிரில் நின்றவள். என் எதிரில் கையை நீட்டினாள்.
"சத்தியம் பண்ணுங்க, இனிமே எங்க அப்பா, அம்மா சம்மதத்தோட நமக்கு கல்யாணம் ஆகிறவரை என்னை தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. அதுமட்டுமில்லாம வேற எதுக்காகவும் என்னை வற்புறுத்த மாட்டேன்னும் சத்தியம் பண்ணுங்க!" சொல்லிவிட்டு நின்றாள்.
நான் மெதுவாய், "ஏன் என்மேல் நம்பிக்கையில்லையா, இதை கோயிலில் வைத்துதான் கேட்கணுமா, தியேட்டரிலேயே கேட்டிருக்கலாமே?"
"இல்லை வரவர என்மேலையே எனக்கு நம்பிக்கை போய்க்கிட்டிருக்கு, இன்னும் சொல்லப்போனால் என்னைவிட உங்கமேல் தான் நம்பிக்கை அதிகம்; சத்தியம் பண்ணுங்க." இதற்கு மேல் என்ன செய்ய? நான் அவள் கையில் அடித்து சத்தியம் செய்தேன். பிறகு அவள் பிரகாரத்தில் உட்கார்ந்து சத்தமாக சாமி பாடல்கள் பாடத்தொடங்கினாள். அவள் குரல் மிக அருமையாக இருந்தது. ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு எழுந்தவள். வீட்டிற்குக் கிளம்பினாள். நான் அவளிடம், "நீ போறதுன்னா போ! நான் போய் தலைவரை (வேற யாரு, உச்சிப் பிள்ளையார்தான்) பார்த்துட்டு வரேன்." அவள் வரவில்லையென்று சொல்லி வீட்டுக்குக் கிளம்பினாள். நான் அவளை அனுப்பிவிட்டு, மேலே வந்தேன். அந்தச் சூட்டில் மலைமேல் லவ்வர்ஸ் உட்கார்ந்து கடலை வறுத்துக் கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன், கௌசி மேலே வந்தாலும் பிள்ளையார் பாட்டைத்தான் பாடிக்கொண்டிருப்பாள். அதற்கு வராமல் இருப்பதே மேல். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அன்று அவள் பேசியது.
அடுத்த நாள் வந்ததுமே சங்கரி, "எண்னண்னா அதுக்காட்டியுமே பூரிக்கட்டையா. செம அடியாமே நேத்திக்கு, கேள்விப்பட்டேன்." கேட்டுவிட்டுச் சிரித்தாள். நான் தியேட்டரைவிட்டு வெளியே வந்ததும் நடந்ததைச் சொன்னேன். கேட்டுவிட்டுச் சிரித்தாள்; அவ்வளவுதான்.
அதற்கு பிறகு நான் அவளைத் தொட்டது கிடையாது, முன்புபோல் கிளாசிலும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். வெறும் லெட்டர் தான் எங்களுக்குள் கருத்துப்பரிமாற. அதுவும் ஒருபக்கம்தான். அவள்தான் எழுதித் தருவாள். பிப்பிரவரி 14 வந்தது, நாங்கள் படித்தபொழுதெல்லாம் எங்கள் கல்லூரியில் ஒரு பழக்கம்; பெண் பிள்ளைகள் பெரும்பாலும் சுடிதாரில் வரும், இல்லையென்றால் எப்போதாவது சேலையில் வரும். தாவணியில் வரமாட்டார்கள். அதுவும் பிப்பிரவரி 14 நிச்சயம் வரமாட்டார்கள். ஏனென்றால் அன்றைக்கு தாவணிபோட்டிருந்தால் யாரையோ காதலிக்கிறார்கள் என்று அர்த்தம்.
நான் அடிக்கிற நீலத்தில் பேண்ட் சட்டை போட்டு வந்திருந்தேன், அதுதான் ஆண்களுக்கு காதலிக்கிறார்கள் என்பதைக் காட்ட. ஆச்சர்யம் அன்று கௌசி தாவணியில் வந்திருந்தாள், சங்கரியும் தான். நான் நினைத்தேன் தெரியாமல் போட்டுவந்திருப்பாள் என்று. இதற்கு முன்பும் ஒரு நாள் பரிட்சையில் போட்டு வந்தவள்தான் அவள். ஆனால் சங்கரி தான் வந்து, "அண்ணே தெரியுதா உங்க ஆளு தாவணியில வந்திருக்கு இன்னிக்கு."
"தெரியாம வந்திருப்பாம்மா அவ, உன்னை மாதிரி விவரமெல்லாம் தெரியாது அவளுக்கு."
"நீங்கத்தான் மெச்சிக்கணும், நான் நேத்தி சொல்லித்தான் அனுப்பினேன். இந்த விஷயத்தை நாளைக்கு தாவணி போட்டுட்டு வந்தா இந்த அர்த்தம் தான் என்று. தெரிஞ்சிதான் போட்டுட்டு வந்திருக்கா."
அவள் முன்பே எங்கள் கல்யாணத்தை பற்றியெல்லாம் பேசியதால் இதை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆனாலும் அவளை அன்று வம்பிழுக்க வேண்டுமென்று ஆசையாய் இருந்தது. அதனால் கடைசி பெஞ்சில் இருந்து வந்து முதல் பெஞ்சில் அவளுக்கு இடதுபுறமாக உட்கார்ந்தேன். பிறகென்ன அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் செய்வதுதான் என்பதால் அவள் முதலில் ஒன்றும் நினைக்கவில்லை. சிறிது நேரத்தில் சிவசங்கரி அவள் காதில் ஏதோ ஓதினாள். அவ்வளவுதான்.
கோபமாகிவிட்டாள், நேராக என் பக்கத்தில் வந்தவள். என் தலையில் வேகமாக கொட்டிவிட்டு, "அப்பவே நினைச்சேன் சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு, போங்க போய் ஒழுங்கா பின்னாடி உட்காருங்க!"
ரொம்ப நாள் கழித்து வகுப்பில் என்னிடம் பேசினாள், நான் அவள் பேசுவதையே கவனிக்காமல், அவள் கண்களையும் பார்க்காமல் வேறெங்கையோ பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் வேகமாக தலையில் கொட்டியவள், "தாஸ் ஒரு மாதிரி இருக்கு ப்ளீஸ் போங்க. போய் பின்னாடி உட்காருங்க" நான் வந்து பின்னாடி உட்கார்ந்துகொண்டேன். ஆனால் அவள் திரும்பும் போதெல்லாம் பயங்கரமாக சிரித்து வம்பிழுத்தேன். அடுத்த செமஸ்டர் எக்ஸாம் வந்தது; கௌசி எங்களிடம் பெட் கட்டியிருந்தாள். இந்த முறை எங்களை விட மார்க் அதிகம் வாங்குவதாய். ராஜேஷும் பிரபுவும் இதைக் கேட்டுச் சிரித்தார்கள். ராஜேஷுடைய கேர்ள்ஃபிரண்ட் அவனை விட்டுப் போய்விட்டாள். அதனால் அவன் சில நாள்களாகவே மிகவும் அமைதியாக இருந்தான். நாங்கள் மீண்டும் குரூப்ஸ்டடி ஆரம்பித்திருந்தோம். நாங்கள் மூன்று பேரும் இந்தமுறை யூனிவர்ஸிட்டி ரேங்க் வாங்க முயற்ச்சித்தோம்.
எக்ஸாம் அருமையாக நடந்து முடிந்தது, நாங்கள் எப்பொழுதும் போல் மிகவும் நன்றாய் எழுதியிருந்தோம். ஆனால் கௌசி ஒரு பேப்பர் ஒழுங்காய் எழுதவில்லையென்று சொல்லியிருந்தாள். சிவசங்கரி, எக்ஸாமில் பிரபுவின் பேப்பரை வாங்கி எழுதியிருந்தாள். நான் கௌசியிடம், "ஏன் ஒரு பேப்பர் ஒழுங்கா எழுதலை?"
"அன்னிக்கு கொஞ்சம் மனசு சரியில்லை, உங்கக்கிட்ட பேசலாம்னு பார்த்தேன். ஆனா உங்க மூட கெடுக்க விரும்பலை. அன்னிக்கு அக்காவுக்கு நினைவுநாள். அதான். எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு தாஸ். இப்பல்லாம் ஒழுங்கா தூக்கமே வரமாட்டேங்குது. படிக்கவே முடியலை. நீங்கள்லாம் எப்பிடித்தான் படிக்கிறீங்கன்னே தெரியலை. தேதியை பார்த்ததுமே அம்மா அழ ஆரம்பிச்சிடாங்க. அப்பாதான் வந்து சமாதானம் பண்ணினார். நாளைக்கு நான் ஊருக்கு போறேன்; லீவெல்லாம் முடிஞ்சிதான் திரும்பவருவேன்." சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
ஒரு மாதம் கழித்துத்தான் நான் மீண்டும் அவளைப் பார்த்தேன். முதல் நாள் காலேஜ், இந்த வருடம் நாங்கள் சீனியர்கள்.
புதுவகுப்பிற்கு வந்திருந்தோம். கௌசி வந்து உட்கார்ந்ததுமே, அவளிடம் சென்ற நான் ஒரு தங்கச் சங்கலியைக் கொடுத்தேன்.
"என்னாயிது?"
"உனக்குத்தான், நான் லீவெல்லாம் ஒரு புரௌசிங் சென்டரில் வேலை பார்த்து வாங்கினேன், போட்டுக்கோ!"
"போய் உங்கம்மாகிட்ட கொடுங்க, சந்தோஷப்படுவாங்க, நான் போட்டுக்க மாட்டேன் எடுத்துட்டுபோங்க!" அவள் திரும்பி அந்தச் செயினை மேஜையில் வைத்தாள். நான் அதை எடுத்துக்கொள்ளாமல் திரும்பவந்து பெஞ்சில் உட்கார்ந்து, தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். தலை நிமிர்ந்து பார்த்தபொழுது அந்தச் சங்கிலி அவள் கழுத்தில் இருந்தது. சாயங்காலம் திரும்ப என்னிடம் வந்தது,
"இங்கப் பாருங்க, உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் இதை இவ்வளவுநேரம் போட்டுக்கிட்டு இருந்தேன். இதை ஒன்னு உங்க அம்மாகிட்ட கொடுங்க, இல்லை திரும்ப வாங்கிய இடத்திலேயே கொடுத்திடுங்க." சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
இரண்டாம் வருடம், தமிழ் ஆங்கிலம் பேப்பர்கள் கிடையாது. அதனால் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. முந்திய செமஸ்டர் மார்க்குகளிலும் நாங்கள் தான் முதன்மையாக வந்திருந்தோம். கௌசி அந்தப் பேப்பரில் பார்டரில் பாஸ் பண்ணியிருந்தாள். முன்பை விட இந்த வருடம் நாங்கள் பேசிக்கொள்வது குறைந்தது. ஆனால் அவள் லெட்டர்களின் நீளம் அதிகரித்தது. கிளாசிற்கு வந்ததில் இருந்து எழுதத் தொடங்குவாள். மதியம் என்னிடம் வரும். நான் படித்ததும் சாயந்திரம் அவளிடம் கொடுத்துவிடுவேன்.
எங்கள் வகுப்பில் படித்த பலருக்கு நாங்கள் பழகுவது தெரியாது, எங்களுக்குள் சண்டை என்று தான் நினைப்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் நாங்கள் வகுப்பில் பேசினால் அது எதையாவது பற்றிய வாக்குவாதமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த விஷயங்கள் எதுவுமே எங்கள் கடிதத்தொடர்பை பாதிக்கவில்லை. ஒரு முறை கௌசியை செமினார் எடுக்கச் சொன்னார் லெக்சரர். எங்களிடம் கேட்டதுக்கு மாட்டோம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் செமினாருக்கு டாபிக் எழுதி தந்தது நான்தான்.
ஆங்கிலம் அவ்வளவு நன்றாக பேசமாட்டாள் அவள். செமினார் எடுக்க ஆரம்பித்ததும் நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்து கொண்டு வந்திருந்தவள் தடுமாற ஆரம்பித்தாள். பிரபுவும் ராஜேஷும் என்னைத் தடுத்தார்கள். இருந்தும் நான் கேட்டுக்கொண்டேயிருந்தேன். சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தவள். மற்ற கேள்விகளுக்கு விழித்தாள். லெக்சரர் என்னை அழைத்து லாப்-இல் போய் உட்காரச் சொன்னார். நான் போனதும், நன்றாக செமினார் எடுத்ததாக கௌசி லெட்டர் எழுதினாள்.
தொடரும்...
தேவதையின் காதலன் - 4
Mohandoss
Monday, November 08, 2010
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
நியூட்டனின் 3ம் விதி படத்திற்குச் சென்றிருந்தேன் எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே' என்ற புலம்பலைப் ...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
-
தமிழ்மணத்தில் அவ்வப்பொழுது ஒரு ட்ரென்ட் பிடித்து கொண்டு ஆட்டும் தமிழ் சினிமா போல், இப்ப விருது கொடுக்கும் ட்ரென்ட் போலிருக்கு. வர்றவன் போறவன...
0 comments:
Post a Comment