In கங்கை கொண்ட சோழபுரம் சோழர்கள்

இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு

சில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.

இந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.

முதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்(தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது. :(


மாளிகைமேடு தற்போது




சுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்


கிடைத்த கல்வெட்டு ஒன்று - காலம் கிபி 1100


மாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான(ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம்! இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.

மாளிகைமேடு(மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழுது கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்(!!!) கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

இனி இராஜேந்திர சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் என்று நான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவற்றை கீழே தொகுக்கிறேன். இராஜேந்திர சோழன் பற்றி எழுத உதவியது ஆங்கில விக்கிபீடியா; கங்கைகொண்ட சோழபுரம் சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி துணை கொண்டு எழுதியது. இறுதியில் நான் சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

இணை அரசனாக நிர்வகித்தல்

இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்

இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

படையெடுப்பு - தொடக்க காலம்
சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் '''மஹிந்தா V''' பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு

ஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கிய படையெடுப்பு

இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு
மேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புக்கள்

இராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.

ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.

மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.

விமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.

இது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

தேவிக்கு தனிக்கோயில்

இது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.

சோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது 'திருகாமக் கோட்டம்' என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.

கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.

முதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.

பிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.

அது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் 'சுற்றாலை வளைவும்' செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.

























Related Articles

37 comments:

  1. படங்களும், பதிவும் அருமை நண்பர் மோகன்தாஸ்!

    ReplyDelete
  2. படங்கள் பெரிதாய் தெரிய படங்களின் மேல் கிளிக்கிப் பார்க்கலாம்.

    ReplyDelete
  3. //இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை.//

    ஏன்?

    விக்கிபீடியாவில் தொகுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. //கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. // இதப்பத்தி மேல் விவரம் ஒன்னுமே சொல்லலையே? சொன்னாத் தெரிஞ்சுக்குவோம் இல்ல?

    ReplyDelete
  5. யப்பா மோகன்தாஸ்.. உனக்கு கோயில் கட்டி கும்பிடணும்ப்பா.. இப்படியெல்லாம் பதிவு போடுறதை விட்டுட்டு எதுக்கு அப்பப்ப வீக்எண்ட் பதிவு போட்டு தாய்க்குலங்கள்ட்ட போய் மாட்டுற.. வேணாம் விட்டுரு..

    இதைப் படிக்கவே நல்லாயிருக்கு.. அபாரம்.. உன்னுடைய கடின உழைப்பு இதில் தெளிவாகத் தெரிகிறது.. பேசுவதைக் குறைத்துக் கொண்டு கும்மியடிப்பதையும் குறைத்துக் கொண்டு அனைவருமே இப்படி ழுத ஆரம்பித்தால் வலைப்பதிவுக்குள் நுழைவதற்கும் கொஞ்சம் ஆர்வமும், முனைப்பும் முன்னோடி வரும்.

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  6. // சில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.
    //

    Thanks for opening up your blog again for UN-invited readers :-)

    Whats the relevance of North Korea, Pakistan etc (the matters u discussed in the first para) to this article? :-))

    - PK Sivakumar

    ReplyDelete
  7. சரி வரிசையா வர்றேன்...

    நன்றிகள் திரு.

    தீவு அய்யா,

    ஒரு உறைக்குள்ள இரண்டு கத்தி இருக்கமுடியாதில்லையா? ஆனால் மிகப்பெரிய வாள்கள் இரண்டு ஒரேசமயத்தில் ஒரு உறைக்குள் இருந்திருக்கின்றன அதனால் ஏற்பட்ட வருத்தங்களாய் இருக்கலாம். இராஜராஜரையும் இராஜேந்திரரையும் தான் சொல்கிறேன்.

    பெரிய கோயிலுக்கு உழைத்துக் கொண்டிருந்த சிற்பிகளை இராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்திற்காக அழைத்துக்கொண்டான் என்றும் இதன் காரணமாகவே பெரியகோயில் பாதியில் நிற்கிறது என்றும் படித்திருக்கிறேன்.

    உண்மையில் வரலாற்றுப்பூர்வமாய் எந்த உட்பூசலுக்கும் ஆதாரம் இல்லையென்றாலும் இராஜேந்திரன் பதிவியேற்றது ரொம்பவும் காலம் பிந்தி என்று நினைக்கிறேன்.

    காரணம் வரலாற்று ஆதாரங்களுடன் தெரியவில்லை என்றாலும், விவரம் வரலாற்று ஆதாரம் வாய்ந்தது. ராஜராஜனுக்குப் பிறகான சோழ மன்னர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை.

    ReplyDelete
  8. லக்ஷ்மி அக்கா,

    பெரிய கோயிலைப் போலில்லாமல் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வெகுவிமரிசையாக கட்டி முடிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்(ஊகமே) ஏனென்றால் இராஜேந்திரனுக்குப் பிறகு 250 ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள்.

    மூன்றாம் இராஜராஜனுக்குப் பிறகான சோழர் வீழ்ச்சியின் பொழுது ஏரிக்கரை உடைந்து தண்ணீர் தலைநகருக்குள் வந்ததால் பெரும்பான்மையான தலைநகரம் அழிந்துபட்டுப்போய்விட்டது(கோயில் அல்ல).

    ஆனால் பின் காலங்களில் அணைகள்(ஜெயங்கொண்டத்திலோ அல்லது அருகில் உள்ள ஊர்களிலோ)கட்டப்படவேண்டி இக்கோயிலின் கற்களைப் பெயர்த்துக் கொண்டு போனதாக செவிவழிச் செய்தி நிலவுகிறது ஊரில். நீலகண்ட சாஸ்திரி இதைச் சொல்ல வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    எனக்கு இந்தச் செய்தியைச் சொன்னது அந்த ஊரில் வாழும் என் நண்பனின் தந்தை மற்றும் கோயில் நிர்வாகிகள்.

    ReplyDelete
  9. உண்மைத்தமிழன் அண்ணாச்சி,

    நான் இப்படி எழுதிக்கொண்டிருந்தவன் தான்(முழுசா ஜல்லியாய் அடிக்காமல்) ஆனால் நேரில் பார்க்கிறவர்கள் எல்லாம் உன்வயது இவ்வளவு தானா என்பது போல் எல்லா சமயங்களிலும் கேட்க, (நான் ஏற்கனவே பார்க்க அப்படித்தான் இருப்பேன் என்று - என் வயதை விட வயதானவனாக - உங்களுக்குத் தெரியும்). நான் ஜல்லியடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன்.

    ஆனால் அதற்குப் பிறகுதான் பிரிட்னி ஸ்பியர்ஸ், பாரீஸ் ஹில்டன் போன்றவர்களின் மீது ஆர்வம் என்றில்லை. ஆனால் அதை எழுதத்தொடங்கியதன் ஒரு காரணம் இதுதான்.

    இனியும் இந்தப் பதிவுகளில் ஜல்லியும் - வீக் எண்ட் ஜொள்ளுக்களும் இடம்பெறும் என்றாலும். இப்ப சுத்தமா நேரமில்லை. பின்னால் எழுதுவேன்.

    ReplyDelete
  10. பிகேஎஸ் அண்ணாச்சி, அது invited readers என்று சொல்லும் தான் நீங்கள் தவறாய் சொல்லவில்லை. ஆனால் உண்மையில் நான் permission' ல் Only Blog Author என்று தேர்ந்தெடுத்திருந்தேன். நீங்களும் உங்கள் பதிவில் முயற்சி செய்யலாம்.

    இந்தப் பதிவை ஒரு வாரமாய் எழுதிவருகிறேன் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களை உபயோகித்து. அதனால் என் சௌகரியத்திற்காக அப்படிச் செய்திருந்தேன். வேறொன்றுமில்லை.

    அப்புறம் அந்த நார்த் கொரியா மேட்டர் - நான் சமீபத்தில் யோசித்துக் கொண்டிருந்த பொழுது இராஜேந்திரன் சிங்கை மலேசியா நாடுகளை வென்றது பெருமையான விஷயமாக நினைத்தால்; வெள்ளைக்காரன் நம்மை ஜெயித்ததும் பெருமையான விஷயமாகிவிடுமே என்று. ஏறக்குறைய இராஜேந்திரன் வெள்ளைக்காரர்களுக்குக் குறையாமல் இந்த நாடுகளில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்திருக்கிறான். அப்புறம் மாலிக்காபூர் செய்ததையும் கஜினிமுகம்மது செய்ததையும் நான் சரியென்று ஒப்புக்கொள்ள வேண்டி வரும் இல்லையா?

    அதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன், டோண்டுவின் சமீபத்திய இடுகை படிக்க நேர்ந்தது - நானும் சங்க காலத்திற்கு முன்னான வரலாற்று ஆதாரங்களைப் பற்றி பேசவில்லையென்றாலும் வரலாறே இல்லை என்பது வெறும் ஜல்லி.

    இன்னும் கூட நம் நாட்டில் அகழ்வாராய்ச்சி பெரிதும் செய்யவில்லை அதற்கு ஆயிரம் காரணங்கள் காரணங்களைத் தோண்டினால் பிணவாடை அடிக்கிறது அண்ணாச்சி. பிணவாடைக்கு பயந்து வாயை மூடிக்கொள்கிறேன் ;).

    இன்னும் கங்கை கொண்ட சோழபுரத்தில் நிறைய ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அவ்வளவே...

    ReplyDelete
  11. superrrrrrrrrrrrrrrrrrrrrr


    Halasuru Ravi

    ReplyDelete
  12. சோழர்கள் மோகந்தாஸை மீட்டு வந்ததில் மகிழ்ச்சி.

    ஒரே பிழை ( for my naked eyes ;) ) அவர்கள் தமிழ் மன்னர்கள். இந்திய மன்னர் என்று எவனும் கிடையாது இங்கு.

    ReplyDelete
  13. மிக நல்ல பதிவு. அற்புதமான படங்கள். மிக்க நன்றி, மொகன்தாஸ்.

    லக்ஷ்மி,

    பாண்டியர்கள் சோழர்களை வென்றபோது சோழநாட்டின் சோழர்களை நினைவுறுத்தும் எல்லா அடையாளங்களையும் நிர்மூலமாக்கியதோடு அவற்றை ஏர் பூட்டி உழுதுவிட்டதாக செய்திகள் உண்டு. ஆனால் பாண்டியர்கள் சோனாட்டுக் கோயில்கள் எதற்கும் எவ்வித சேதமும் விளைவிக்கவில்லை என்பது இப்போதும் அப்பகுதியில் இருக்கும் ஏராளமான கோயில்களைப் பார்த்தாலே புரியும். கங்கைகொண்ட சோழபுரத்தின் கோயிலின் தற்போதைய சிதில நிலைமைக்கு மொகன்தாஸ் சொல்வது போல பிற்கால காரணங்களே இருக்க வேண்டும். இப்பகுதியில் இக்கோயில்;உக்கு அருகில் இருக்கும் அனைக்கரையில் கொள்ளிடம் ஆற்றுக்குமேல் கட்டப்பட்ட அணையில் இக்கோயிலின் மதில் சுவர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

    ReplyDelete
  14. வரவனையான் - நீங்க சொன்னது சரிதான் 100% அதை மறுப்பதற்கு இல்லை.

    ஆனால் நான் சொல்ல வந்ததில் ஒரு விஷயம் இருந்தது தற்போதைய இந்தியா என்று நாம் வழங்கிவரும் ப்குதியைக் கணக்கெடுத்தால் கூட; இராஜேந்திரன் தான் முதன் முதலில் அன்னிய நாட்டு படையெடுத்த அரசன். அதுமட்டுமில்லாமல் இன்றைய இந்தியாவை விடவும் பரப்பளவு அதிகம் உள்ள நாட்டை ஆண்டவன்.

    அதனால் சொன்னது தான். திருத்தியதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. ஓகை அய்யா,

    அக்கோயிலைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு பெருமிதம் மனதில் தங்கிவிடுகிறது. பார்க்கும் யாரையும் சுண்டி இழுக்கும் கலையம்சம் நிரம்பியது.

    நீங்கள் சொன்ன தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. படங்கள் அருமை

    ReplyDelete
  17. மோகன்தாஸ்,
    தகவல் சேகரிக்க எடுத்த உங்களின் கடின உழைப்பு தெரிகிறது.

    வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

    ***

    தமிழனுக்கு (அதாவது தமிழுக்கு) வரலாறு இல்லை என்று சொல்லும் பேய்மாந்தர்கள் இதைப் படிக்கட்டும்.

    ReplyDelete
  18. இன்னும் படிக்கல. ஆனா, படங்கள் அருமை.

    வீக்.எண்ட் படிச்சுட்டு சொல்றேன்:)

    ReplyDelete
  19. பலூன்மாமா, நல்லாயிருக்கீங்களா?

    இங்கே வரலாறு என்னான்னே தெரியாமலோ இல்லை அந்த விஷயத்தில் அப்டேட் என்ன நடக்குதுன்னு தெரியாமலோ நிறைய பேர் ஜல்லியடிக்கிறார்கள். இது ஏதோ என்னால் ஆன ஒரு முயற்சி.

    இராஜேந்திரனுக்கு முன்னர் விஜயாலயன் தொடங்கி ஆரம்பித்து சோழ பேரரசுக்கு arguably வரலாற்று ஆதாரங்கள் உண்டு. ஏற்கனவே சோழர் வரலாறு பற்றி எழுதியிருக்கிறேன். இன்னும் தொடர்வேன்.

    ReplyDelete
  20. சர்வேசன் -

    நீங்கள் எல்லாம் படங்கள் நன்றாகயிருக்கு என்று சொல்லும் பொழுது சந்தோஷமாய் இருக்கிறது ;).

    நன்றிகள் படிச்சிட்டு சொல்லுங்க...

    ReplyDelete
  21. MD,

    The effort you have put, really shows in the details !

    Very interesting reading and great images, Thanks !

    enRenRum anbudan
    BALA

    ReplyDelete
  22. Arumai & nandri.

    ReplyDelete
  23. நான் அறியாத பல புதிய தகவல்களை இன்று அறிந்து கொண்டேன் மோகன் தாஸ். மிக்க நன்றி. நன்கு எழுதியிருக்கிறீர்கள்.

    சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கின்றன. தெளிவாக படமும் எடுத்திருக்கிறீர்கள். படத்தின் பிரதியை எடுத்து வைத்துக் கொள்ளலாமா? அனுமதி உண்டா? எல்லா படங்களிலும் குந்தவை என்று எழுதியிருக்கிறதே?! என்ன அது?

    ReplyDelete
  24. பாலா, enbee, குமரன் - நன்றிகள்

    குமரன் - இணைய உலகிற்கு வந்தபிறகு பிரதி வைத்துக்கொள்வதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை மற்றவர் புகைப்படங்களுக்கு. அதே விதத்தை இங்கேயும் கடைபிடிக்கிறேன். வைத்துக்கொள்ளுங்கள்.

    நான் மரத்தடியில் எழுத ஆரம்பித்த பொழுது குந்தவை வந்தியத்தேவன் என்ற பெயரில் எழுதினேன் அப்படியே இன்றும் தொடர்கிறேன் என் பதிவுகள் தவிர்த்து மற்ற இடங்களில்.

    என் பெயரை போட்டோவில் போட்டுக்கொள்ள எனக்கு கூச்சமாக இருக்கிறது. அதனால் படத்தில் போட நினைத்த பொழுது குந்தவை வந்தியத்தேவன் பெரிதாக இருந்ததால் குந்தவை என்று போட்டேன்.(நான் உபயோகிக்கும் டூலில் தமிழில் எழுத முடியாது :()

    மற்ற படிக்கு நீங்கள் குந்தவை என்ற பெயரை எடுத்து விட்டு உபயோகித்தாலும் எனக்குப் பிரச்சனையில்லை.

    நேரம் கிடைக்கும் பொழுது அனைத்து படங்களையும் பெயரில்லாமல் - தமிழ்விக்கிக்கு அப்லோட் செய்ய உள்ளேன் அதனால் உபயோகித்துக் கொள்ளுங்கள். ;)

    ReplyDelete
  25. கடுமையாக உழைத்து பதிவிட்டிருக்கிறீர்கள் மோகன் தாஸ். நன்றி!

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் மோகன்தாஸ் நன்றாக இருக்கின்றது. உங்கள் தேடலை எங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு நன்றி

    ReplyDelete
  27. லக்கிலுக், யாரோ, முரளி கண்ணன் - நன்றிகள்.

    ReplyDelete
  28. நன்று மோகன்தாஸ். உழைப்புக்கும் செய்திகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  29. சிறப்பான உழைப்பு.

    நன்றி!

    ReplyDelete
  30. செப்புப் பட்டயம் மீண்டு வந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  31. அருமையான பதிவு... நிறைய தெரிந்து கொண்டேன்... இதை போல் நிறைய எழுதவும்...

    மேலும் சோழர்களின் வீழ்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள ஆசை. லிங் இருந்தால் தரவும்.

    ReplyDelete
  32. மோகனா,

    எப்பிடி இப்பிடியெல்லாம்???? உழைப்புக்கும் அருமையான செய்திகளுக்கும் ரொம்பவே நன்றி.

    ReplyDelete
  33. அழகான படங்களுடன் கூடிய அருமையான வரலாற்றுக் கட்டுரை. நீண்டதொரு கட்டுரையைப் பொறுமையாகப் படித்தது பெருமையாக இருக்கிறது.
    தெரியாத பல தகவல்களாஇத் தெரிந்துகொள்ள வைத்த நண்பருக்கு நன்றி

    ReplyDelete
  34. மோகன்தாஸ்,

    அற்புதமான பதிவு. சுவாரசியமாகவும் எளிமையாகவும் எழுதியிருக்கிறீர்கள். சோழர்களைப் பற்றிய அனைத்துப் பதிவுகளுமே அருமை.

    க.கொ.சோ.புரம் பற்றி மேலும் சில தகவல்கள்.

    இக்கோயில் விமானத்தைப் பெண்மைத்தன்மை கொண்டதாக காட்டும் வளைவுக்குக் காரணம், விமானம் தரைத்தளத்தில் சதுரமாக ஆரம்பித்து, இடையில் எண்பட்டை, பதினாறு பட்டையாகி, மேல் மூன்று தளங்கள் வட்டமாக முடிவதுதான். நாகரம் (சதுரம்), திராவிடம் (எண்/பதினாறு பட்டை), வேசரம் (வட்டம்) ஆகிய மூன்று விமான அமைப்புக்களையும் கொண்ட ஒரே கோயில் இதுதான். நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆய்வுக்காகச் சிகரம் வரை ஏறிப் பார்த்தபோது கட்டடக்கலை அமைப்பைக் கண்டு ஆடிப்போய்விட்டோம். ஈடு இணையற்ற கலைப்படைப்பு.

    சென்ற ஆண்டு திருவலஞ்சுழியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்று இராஜராஜரும் இராஜேந்திரரும் மூன்று ஆண்டுகள் ஒன்றாக ஆட்சி செய்த தகவலைத் தருகிறது.

    நந்தியணுக்கருக்கும் சண்டேசுவர அனுக்கிரஹமூர்த்திக்கும் இடையிலிருப்பவர் யார் என்று கூறமுடியுமா? கங்காளர்தானா என்று உறுதியாகத் தெரியவில்லை.

    நன்றி
    கமல்

    ReplyDelete
  35. காசி, பொட்டீக்கடை சத்யா, சிந்தாநதி, வெட்டிப்பயல், ராம், சீனா, கமல்(வரலாறு.காம்) - நன்றிகள்.

    கமல் - நீங்கள் எல்லாம் சிகரம் வரைக்கும் ஏறியிருக்கிறீர்கள் நான் கீழிருப்பதை மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நிச்சயமாக மிக உன்னதமான கலைப்படைப்பு கங்கை கொண்ட சோழபுரம்.

    இந்த முறை மொத்தம் இரண்டு நாட்கள் அங்கே தான் இருந்தேன். ஜெயங்கொண்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்தேன்(நண்பனின் அழைப்பையும் மறுத்து).

    முந்தைய முறையைப் போலில்லாமல் ஆற அமர உட்கார்ந்து ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக்கொண்டு வந்தேன். ம்ம்ம் ஆனால் இதனுடன் முடித்துவிடப்போவதில்லை கங்கை கொண்ட சோழபுரத்திற்கான என் பயணத்தை.

    உங்களின் இந்தப் பின்னூட்டத்தால் மேலிருக்கும் கோபுரம் வரைக்கும் பார்க்கவேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ஏறி பார்க்கமுடியாவிட்டாலும் அடுத்த முறை பக்காவான லென்ஸ் வசதிகளுடனும் பைனாக்குலர்களுடன் போக முடிவெடுத்திருக்கிறேன்.

    நேரம் செலவிட்டு பின்னூட்டம் அளித்ததற்கு நன்றிகள் கமல்.

    ReplyDelete
  36. தாஸ், பதிவும் அதன் பின்னுட்டங்களும் சொல்லும் செய்திகள் சுவையாய் இருக்கின்றன. நன்றி. இதை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு உள்ளேன். மீண்டும் வந்து உருப்படியாய் எழுத தொடங்கியதற்கு நன்றி. இன்னும் கங்கை கொண்ட சோழ புரம் பார்த்ததில்லை.

    ReplyDelete
  37. Dear Mohan, I got a chance to read this blog just now. Very nice compilation and hats off to your great effort. If I understand correctly Rajendra Chola and Mahmud of Ghazni were ruling at the same time. Also both were powerful and had thirst for wars, Is there any reference in history that they had any kind of link between them? Please share with us if you come across any such thing in your valuable research.
    Regards
    Karthik

    ReplyDelete

Popular Posts