In இந்தி சொந்தக் கதை டெல்லி

ஹாஞ்ஜி அச்சாஜி டீக்கேஜி

//அவசியத்தை உணர்ந்து ஒரு மீள்பதிவு, இது மொத்தம் இரண்டு பாகமா நான் எழுதியது. நாளை மற்ற பாகத்தை மீள்பதிவிடுகிறேன். அவசரமென்றால் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்.

தலைப்பு இந்தி இந்தியாவின் தேசிய மொழியா?//

கொஞ்சம் இந்தியாவிற்கு மேல்புறமாய் வேலை செய்திருப்பவருக்கு இந்த மூன்றும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அச்சாஜியும் டீக்கேஜியும் கொஞ்சம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருந்தாலும் ஹாஞ்சி பெரும்பாலும் தெரியாது. இது வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் அதிகமாய்ப் பயன்படுத்தப்படும் ஒரு இந்தி வார்த்தை.

நான் முதன் முதலில் டெல்லியில் போய் இறங்கியதும் எனக்கு சொல்லித்தரப்பட்டவை இந்த வார்த்தைகள் தான். இதற்கு பெரும் முன் உதாரணங்கள் எல்லாம் சொன்னார்கள். எப்படியென்றால், இந்த மூணே மூணு வார்த்தைகளை மட்டும் வைச்சிக்கிட்டு டெல்லியை சமாளிச்சிடலாம். பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு நாங்கள் இதைத்தான் முதலில் சொல்லித்தருவோம் என்று பெரும் பீடிகையெல்லாம் வேறு.

நான் ஒன்றும் இந்தி தெரியாதவன் அல்ல, எனது மாமாக்கள் டெல்லியில் முன்பே இருந்ததாலும் நான் கம்ப்யூட்டர் தான் படிக்கப்போகிறேன் என்பது நான் எட்டாவது படிக்கும் பொழுதே முடிவு செய்யப்பட்டதாலும், இந்தி படிக்கும் படி திணிக்கப்பட்டேன். ஏன்னா நமக்குத்தான் செகண்ட் லேங்குவேஜ் தேர்ட் லேங்குவேஜ் ஒரு இழவும் கிடையாதே. படிச்சதோ தமிழ்மீடியம், மேடைக்கு மேடை 'தமிழ் பழித்தானை தாய் தடுத்தாலும் விடேன்' 'பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் நன்னாள்' இவைகளை சொல்லாமல் விட்டவன் இல்லையாகையால். எனக்கு முதலில் இந்தி என்மீது திணிப்பதாகவேப் பட்டது.

அதுவும் கிரிக்கெட்டின் மீதான கவர்ச்சி அதன் உச்சத்தில் இருந்த நேரம் எட்டாவது ஒன்பதாவது படிக்கும் நாட்கள். கொஞ்சம் விவரம் தெரிந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் நாட்கள் அவை, அந்த சமயத்தில் சாயந்திரம் ஆறு டூ எட்டு இந்தி கிளாஸ்னு சொல்லப்போக, எதிர்கால, டெல்லி அதனைத்தொடர்ந்த அமேரிக்க வாழ்க்கையின் மோகத்தில் கொண்டு செல்லப்பட்டேன்.

அப்படி இப்படின்னு நானும் படிச்சேன் அதுக்கு பாடம் எடுத்த இந்தி டீச்சரும் ஒரு காரணம். அங்கேயும் ஒரு நல்ல ஆசிரியை. ஆனாலும் நான் பிராத்மிக் கூட முடிக்கலை.(அது இந்தியில் ஒன்னாம் வகுப்பு மாதிரி.) இருந்தாலும் எனக்கு எழுத படிக்க வரும். பேச மட்டும் தான் ஆரம்பகாலத்தில் டெல்லி போயிருந்தப்ப வராது.

அப்புறம் மறந்துட்டேனே அந்த மூன்று ஜீக்கள். இவங்க அஜித்தோட அண்ணா தம்பிகள் கிடையாது, (இதை சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ) இந்த மூன்று ஜீக்களுமே ஒருவாறு சுத்திவளைச்சு மையமா ஒரே மீனிங்தான் வரும்னு வச்சுக்கொங்களேன். யாரவது உங்கக்கிட்ட வந்து ஏதாவது கேட்டா இந்த மூன்று ஜீக்களில் எதையாவது ஒன்னை சொல்லணும் இப்படித்தான் முதலில் சொல்லித்தந்தாங்க. எப்படின்னா,

"ஆப் கஹான்சே ஆரஹேஹே?"("நீங்க எங்கிருந்து வரீங்க?")
ஹாஞ்ஜி. (ஒரு மாதிரி தமிழில் சரிங்க.... இல்லை ஆமாம்...)

"ஆப்கோ இந்தி ஆத்தா ஹேக்கி நஹி ஹே??"
டீக்கேஜி (ஒரு மாதிரி பார்த்தால் சரிங்க இல்லை ஆமாம்...)

து பாகால் ஹேக்க்யா( நீ பைத்தியமா....)
ஹாஞ்ஜி... (ஒரு மாதிரி தமிழில் சரிங்க இல்லை ஆமாம்.)

இப்படித்தான் ஆரம்பிக்கும் நீங்கள் மேற்சொன்ன வழியை பாலோ பண்ணினால், இந்திக்காரன் சாலே மதராஸி அப்படின்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பார்க்காம ஒட்டம் எடுத்துறுவான். ஆனால் சில சமயம் நீங்க நல்லா இந்தி பேசுறவறாக் கூட இந்த மூன்று வார்த்தைகளை மாற்றி பேசுவதால் சூழ்நிலை உருவாக்கிவிடும். அப்படித்தான் நிகழ்ந்தது நண்பர் ஒருவருக்கும் அதாவது, அவரும் அப்பொழுதுதான் படித்து முடித்துவிட்டு வேலை தேடி டெல்லி வந்திருந்தவர். ஆனால் பக்கா தமிழன் (நானெல்லாம் அரைவேக்காடு) அதாவது இந்தின்னா அப்படின்னான்னு கேக்குறவரு.

எங்க ஆளுங்க அவருக்கும் இதே மூணுவார்த்தையை சொல்லிக்கொடுத்திருக்க, ஒருநாள் முனிர்க்காவிலிருந்து கனாட்ப்ளேஸ் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த நண்பரின் அருகில் ஒரு பஞ்சாபி உட்கார்ந்திருக்கிறார். நம்மாளோ பார்க்கிறது கொஞ்சம் மாநிறமா பீகார்க்காரங்க போல இருப்பாரு. அவனும் முதலில் ஏதோ கேட்கப்போய் இவரும் ஹாஞ்ஜின்னு சொல்லியிருக்காரு, இப்படி வைச்சுக்கோங்களேன்

ஆப் கனாட் ப்ளேஸ் ஜாரேக் கியா? (நீங்க கனாட் ப்ளேஸ் போறீங்களா?)
இவரு ஹாஞ்ஜீன்னு சொல்ல அப்ப ஆரம்பிச்ச கூத்து, சுமார் ஒரு மணிநேரம் பஞ்சாபி தன்னோட குடும்பக்கஷ்டத்தையெல்லாம் சொல்லப் போக இவரும் இந்த மூணு வார்த்தைகளை திருப்பி திருப்பி போட்டு பேசியிருக்காரு. அதுவும் சந்தர்ப்பம் ஒருமாதிரி ஒத்துப்போக போய்க்கிட்டிருக்கிறது. கடைசியில் கனாட்ப்ளேஸில் இறங்குவதற்கு முன்னர் பஞ்சாபிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விசாரிக்க நம்ம ஆளு இந்தி தெரியாதுன்னு ஒரு மாதிரி சொல்ல பஞ்சாபிக்கு பலமா கோபம் வந்து கீழே இறக்கிவிட்டு ஒரு அரைமணிநேரம் கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டியிருக்காரு. நம்ம ஆளுக்குத்தான் அந்த மேற்சொன்ன மூணைத்தவிர வேறொன்னும் தெரியாதா இவரும் தேமேன்னு முழிக்க கொஞ்ச நேரம் திட்டிய பஞ்சாபி இது ஒன்னுக்கும் தேறாதுன்னு நினைச்சுக்கிட்டே போய்ட்டாராம்.

இதை நண்பர் எங்களிடம் சொல்லப்போய் பின்னர் ரொம்ப நாளைக்கு அந்த நபரை வம்பிழுத்துருக்கிறோம் இதைச்சொல்லி.

டெல்லியில் பெங்களூரில் புனேயில் என்று இந்தி பேசிக்கொண்டு மூன்றாண்டுகள் ஓடிவிட்டதால், எனக்கேற்ப்பட்ட சில இந்தி சார்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்துள்ளேன் ஆரம்பத்தில் காமடி பின்னர் மேட்டர். அடுத்த பதிவு காமடியாவா இல்லை மேட்டரான்னு முடிவு செஞ்சுட்டு அப்புறம் போடுறேன். அதுக்கு முன்னாடி கீழ்க்கண்ட பதிவுகளை படித்துக்கொள்ளுங்கள்.

holyox.blogspot.com/2006/01/blog-post_31.html
muthuvintamil.blogspot.com/2005/10/blog-post_28.html
kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html

Related Articles

3 comments:

  1. http://penathal.blogspot.com/2005/03/bore.html

    Konjam pazasu.

    ReplyDelete
  2. வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. //நான் கம்ப்யூட்டர் தான் படிக்கப்போகிறேன் என்பது நான் எட்டாவது படிக்கும் பொழுதே முடிவு செய்யப்பட்டதாலும், இந்தி படிக்கும் படி திணிக்கப்பட்டேன்//

    கம்ப்யூட்டர் படிப்பதுக்கும் இந்தி படிப்பதுக்கும் என்ன சம்பந்தம் ?

    //அந்த சமயத்தில் சாயந்திரம் ஆறு டூ எட்டு இந்தி கிளாஸ்னு சொல்லப்போக, எதிர்கால, டெல்லி அதனைத்தொடர்ந்த அமேரிக்க வாழ்க்கையின் மோகத்தில் கொண்டு செல்லப்பட்டேன். //

    அமெரிக்காவுக்கு டெல்லி வழியேதான் போகமுடியுமா என்ன?

    எது எப்படியோ, நம்மூரில் எப்படியெல்லாம் brainwash செய்து வருகிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணங்கள்..

    ReplyDelete

Popular Posts