In சொந்தக் கதை புத்தகங்கள்

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் முதல் வாய்ப்பு என்பதால் விட மனசில்லாமல், சென்றிருந்தேன். மனதிலே சில புத்தகக் கணக்குகளுடன்.

பன்சங்கரியில் இருந்து பேலஸ் கார்டனுக்கே முதலில் ஆட்டோவே கிடைக்காமல் அரைமணிநேரத்திற்கு பிறகு கிடைத்தது.

வந்து சேர்ந்ததும் மூன்று கடைகளைத் தேடினேன். முதலாவது காலச்சுவடு, இரண்டாவது உயிர்மை, மூன்றாவது பத்ரியின் கிழக்கு.

முதலாவதும் மூன்றாவதும் வந்திருந்தன.

காலச்சுவடு கடைக்குள் நுழைந்ததுமே, தெரிந்துவிட்டது, தமிழ்க்கடைகளில் காற்றடிக்கும் நிலை, நன்றாக நினைவில் இருக்கிறது. டெல்லியில் நானிருந்த பொழுது நடந்த புத்தகக்கண்காட்சி.

அப்பொழுதெல்லாம் இலக்கியம் என்றால் எனக்கு சுஜாதாவும் பொன்னியின் செல்வனும் தான். அதனால் வந்திருந்த காலச்சுவடு கடைக்குள் நுழைந்து சுஜாதாவின் புத்தகங்களைக் கேட்க அவர்கள் என்னை புழுவைப்போல பார்த்தது அப்பொழுது புரியவில்லை.

ரொம்ப சண்டை போட்டேன் அன்று, சுஜாதா பாலகுமாரன் புக்கெல்லாம் எடுக்காமல் ஏன் வருகிறீர்கள் என்று.

அந்த நினைவுகள் பசுமையாக ஓட, காலச்சுவடு கடைக்குள் நுழைந்து நான் சில புத்தகங்களைக் கேட்டதும். அந்தப் புத்தகக் கடைக்காரரின் முகம் பிரகாசமானதை உணரமுடிந்தது. ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த ஜேபி சாணக்கியாவின், என் வீட்டின் வரைபடம் மற்றும் கனவுப் புத்தகம் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அப்புறம் ஒரு படுபாவி வீட்டில் இருந்து ஏற்கனவே இருந்த ஜேஜே, வை சுட்டுக்கொண்டு போய்விட்டதால் அதையும் ஒருமுறை வாங்கினேன்.(இன்னொருமுறை).

என்னவோ இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாங்கியதாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சில புத்தகங்களை வெறும் பத்து எண்ணிக்கை போடுவது பற்றி வருத்தப்பட்டார்.

அடுத்து நுழைந்தது, கிழக்கு. ஒரு ஓரமாய் திங்க்பேடும் கையுமாக பத்ரி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ஒரு மனநிலைக்கு தயார் செய்து போகாததால் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.

ஆதவனின் சிறுகதைகள் இவர்கள் கொண்டுவந்த ஞாபகம் இருந்தது. அதனால் நுழைந்ததுமே அந்தப் புத்தகத்தைக் கேட்டேன் ஆனால் வந்ததோ வேறொரு புத்தகம். ஆத்தர் நேமும் ஆதவன் இல்லை புத்தகத்தின் பெயரும் ஆதவன் இல்லை. ஆனால் இந்தப் புத்தகமும் நல்லப் புத்தகம் என்ற விளக்கம் வேறு கிடைத்தது.

சரி போனால் போகிறதென்று வேறு ஒருவர் எங்கேயோ போய் எடுத்துக்கொண்டு வந்தார்(ஷாயித் நிவேதா - இந்த விஷயத்துக்கு பிறகு வருகிறேன்). அந்தப் புத்தகம் கிடைத்தது. அப்புறம் நம்ம ஊர்க் கதையான அரசூர் வம்சம் வாங்கினே. முன்பே கொஞ்சம் நிறைய படித்திருக்கிறேன் திண்ணையில்.

ஆனால் புத்தகமாக இருப்பதில் கிடைக்கும் சுகத்தால் அதையும் வாங்கினேன்.

அந்தச் சமயத்தில் தான் இராகவன்(அவருதான்னு நினைக்கிறேன்!) அந்தப் பக்கம் வந்தார். கையில் ஹெல்மெட் பின்னால் பேக் என்று. ஆனால் நிச்சயமாகத் தெரியாததாலும் என்னுடைய அன்றைய மனநிலை காரணமாகவும் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

இடையில் தான் நினைவில் வந்தது, ஆதவனின் இன்னொரு நாவல். ஆனால் பெயர் நினைவில் வரவில்லை. கிழக்கின் மத்த நபர்களைக் கேட்பதைவிட பத்ரியையே கேட்டுவிடலாம் என்று கேட்டேன். என் பெயர் ராமசேஷன் இல்லாமல் மற்ற நாவல் என்று. என் மனதில் கண்ணீர்ப் பூக்கள் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு உண்மையான பெயர் வரவேயில்லை. ஆனால் பத்ரி சரியாகச் சொன்னார்.

பின்னர் ராம்கியின் முகவையும், ரஜினி பற்றிய புத்தகதையும் எடுத்துக்கொண்டு முன்னுரையைப் படிக்கத்தொடங்கியிருப்பேன். சார் இந்த கிமு கிபி புத்தகத்தை எடுத்துக்கோங்க என்று பிஸினஸ் ஸ்டிரேடஜி மூஞ்சில் வீசப்பட்டது. பின்னர் இன்னும் இரண்டு மதனின் புத்தகங்களும் அதே கொள்கையுடன் முகத்தில் வீசப்பட, ஹெல்மட் இல்லாமல் ஆம்ப்ரோஸின் பந்தை விளையாடச் சென்ற ஒரு உணர்வு தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் பொறுக்கமுடியாமல் "மதன் புக் படிக்கிற அளவுக்கு இப்போ மூடில்லை" என்று பின்நவீனத்துவ மூஞ்சியை திருப்பிக் காட்டினேன். பின்னர் ஆரம்பித்தது இட்லிப் பிரச்சனை.

ஜினடின் ஜிடேனை "மொட்டை" என்று சொல்லியதால் தான், அவர் மற்ற அணிவீரரை முட்டித்தள்ளினார் என்ற செய்தி புதிகாகக் கிடைத்தது "இட்லி..." பற்றிய புத்தகத்தின் கேன்வாஸாக. அறிமுகமே சரியில்லாததால்( ;-)).

வாங்கின இரண்டு புத்தகங்களுக்கு பில் போடுங்க என்று கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அங்கேயும் பிரச்சனை. ரொம்ப வேகமாக கார்ட் நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். நான் சட்டப்படி அது குற்றம் என்று இந்தியில்(!) ஆர்க்யூ பண்ண(அந்த பையன் கன்னடிக்கா - இது சிக்கன் டிக்கா இல்லை) ஒன்றும் பேசமுடியாமல் ஹாட்கேஷ் இல்லாத பர்ஸும் வாங்கிய புத்தகத்தை திரும்பக் கொடுக்க மனம் வராமலும் நானும் எழுதிவைத்து வந்தேன்.

திரும்ப வரும்பொழுது ராகவனும் பத்ரியும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள், ஒருவாரு அவர்தான் என்று உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விகடனுக்குள் நுழைந்தேன்.

அங்கே சின்ன பையனுங்களெல்லாம் காசுக்கொடுத்து தங்கள் விளம்பரங்களை வருபவர்களுக்கு கொடுக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக உணர்வு பெருக்கெடுத்து குழந்தைத் தொழிலாளர் வைச்சுக்கக்கூடாது தெரியுமில்லை. என்று தெரியாதவருக்கு சொல்வதாகச் சொன்னேன். அதைக் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை. நான் இதை எழுதி அனுப்புவேன்னு சொன்னதற்கு செய்யுங்களேன் என்று சொன்னதும் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டு வெளியேறினேன்.

கிழக்கிற்கும் உயிர்மைக்கும் என்ன காண்டு என்று தெரியாது. சாதாரணமாகத்தான் கிழக்கில் உயிர்மை வரலையே யாரவது அவங்க புத்தகம் எடுத்துக்கிட்டு வந்திருக்காங்களான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டாங்க சரி நானும் அப்படித்தான்னு போய்ட்டேன். திரும்ப மிளகாய் பஜ்ஜி வாங்க வெளிய வரும் பொழுது காலச்சுவட்டைக் கடந்தேன்.

மனுஷ்யபுத்திரனுக்கும், காலச்சுவடிற்கும் பிரச்சனை இருப்பதாக நான் நினைத்து இவரிடம் எப்படிக் கேட்கலாம் என நினைத்து பிறகு, சில இலக்கிய புக் வாங்கிய நல் மதிப்புடன் கேட்டேன், முழு விளக்கங்களுடன் சொல்லிவிட்டு நிவேதாவில் கிடைக்கும் போய்ப்பாருங்க என்று சொன்னார்.

அங்கே வந்து நண்பர் ஒருவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டு போன ஜீரோ டிகிரியையும். வாங்கிவிட்டுப் பார்த்தால் முகவும், ரஜினியும் கிழக்கு அட்டைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

PS: எழுதியதற்கு அப்பால் தான் பார்த்தேன், கிரெடிட் கார்ட் பற்றி எழுதியிருந்தது கொஞ்சம் போல கிழக்கு நேரடியாக கிரெடிட் கார்ட் எண்ணை வாங்கி எழுதியது போன்ற பிம்பம் என்னால் உருவாக்கப்பட்டிருந்ததை. ஆனால் உண்மையில் கார்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் செய்தது புத்தகக்கண்காட்சி நடத்தியவர்கள் தான். இது வேண்டுமென்று நடந்த தவறு அன்று. எழுதும் பொழுது சொற்கள் தவறிவிழுந்து வரிகள் வேறு அர்த்ததத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.

தனிப்பட்ட விளக்கங்களுக்கு நன்றி பத்ரி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா விமர்சனம் சொந்தக் கதை

The Departed

அவன் கண்விடல், கதைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக வலைபதிவிற்காக எதையும் எழுதவில்லை, இடையில் முன்பொருமுறை வந்த விஷயத்தை மீள்பதிவு செய்ததை தவிர. அது செய்துமே ஒரு மாதம் ஆகிறது. இது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சில பல நாட்கள் தமிழ்மணம் பக்கம் கூட வராமல் இருந்திருக்கிறேன். தீபாவளிக்காக திருச்சி சென்று வந்தேன். மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருவதாக சந்திப்பின் முந்தைய நாள் தொலைபேசிய தருமியிடம் வாக்களித்தும் வரமுடியாமல் சேய்த இடியாப்பச் சிக்கல்கள்.

வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது, நிற்காமல். அதே போல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கண்ணதாசனின், "மாற்றம் என்பது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்" என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

பில்டப் போதும் என்று நினைக்கிறேன், அம்மாவிடம் நான் "கேன்பே" வை விட்டு வேறு கம்பெனியில் சேரும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொன்னபொழுது அம்மா என்னிடம் கேட்டதுதான் நினைவில் வருகிறது. "எப்பிடிடா இவ்ளோ பிடிச்ச கம்பெனியை விட்டு போக மனசுவருது. கஷ்டமாயிருக்காதா?" என்று, அம்மா ஆசிரியை, பெரும்பாலும் ஆசிரியர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு பள்ளியில் இருந்து முடித்து விடுவார்கள். (அம்மா கொஞ்சம் வித்தியாசம் இரண்டு பள்ளிகள், அது கொஞ்சம் உள்ளூர் பாலிடிக்ஸ்.)

நான் சொன்னேன், "அந்தக் காதல் இல்லாமல் எந்தக் கம்பெனி சேர்ந்தாலும் வேலை செய்ய முடியாது என்னால்" என்று. என்னை நன்கறிந்த நண்பர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள் நான் வேலை மாறி பெங்களூர் செல்கிறேன் என்று சொன்னதும். எக்ஸிட் கிளியரிங்கில் கேட்கப்பட்ட, திரும்பவும் கேன்பே வரவிரும்புவீர்களா, போகும் கம்பெனியில் நண்பர்களுடன் கேன்பே அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்களா போன்ற கேள்விகளுக்கு முழுமனதுடனேயே ஆமாம் என்று எழுதினேன்.

பேப்பர் போட்டாச்சுன்னாலே அடுத்த விஷயம் பார்ட்டி தானே, அதுவும் தொடங்கியது. புனேவில் புகழ்பெற்ற ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸில் படம் பார்க்கவும் அப்படியே சிட்டியில் டின்னர் சாப்பிடவும் திட்டமிட்டோம். நல்ல நேரம் "த டிபார்டட்" படத்திற்கான டிக்கெட் நாங்கள் நினைத்த நேரத்திற்கே கிடைத்தது. அப்படியே பக்கத்தில் இருந்த "ஃப்லேக்"(Flag) ரெஸ்டாரென்டில் தண்ணி பார்ட்டி, சென்றிருந்தவர்களில் நான் மட்டும் தான் கெட்டபையன் அதாவது தண்ணி அடிக்காத பார்ட்டி. சிக்கன் கபாப்களும், தம்ஸ் அப், மேங்கோ ஜஸ் என்று அவர்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தேன். அந்தப் பக்கம் பூரா ஷிவாஸ் ரீகல், வழிந்தோடியது. ஷார்ட் ஸ்கர்ட் போட்ட அமேரிக்க பிகர்களை நோட்டம் விட்டபடி ஒரு வழியாக பில் செட்டில் செய்து தியேட்டரில் உட்கார்ந்தோம்.

கேங்ஸ் ஆப் நியூயார்க், தி ஏவியேட்டர் போன்ற படங்களின் இயக்குநர் என்பதாலும், ஜாக் நிக்கல்ஸன், லியனார்டோ டிகாப்ரியோ, மாட் டேமன், மார்க் வால்பர்க், போன்ற தகுதியான நடிகர்களாலும் நல்ல எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தோம். படம் பூராவும் அமேரிக்கன் எஃப் வேர்ட் தான் ஆக்கிரமித்திருந்தது. எப்படி சென்னை ரவுடிகளைப்பற்றிய படம் எடுக்கும் பொழுதும் "கோத்தா"க்களும் "தே" வேர்டும் நெஸஸரியோ அப்படி. (ரவுடி என்ன ரவுடி "தே" வேர்ட் தவிர்த்த அனைத்து கெட்ட வார்த்தைகளும் அனாயாசமாய் கல்லு\ரிக் காலங்களில் நானே பேசியிருக்கிறேன். ஒரு சென்ட்டென்ஸ் முடியும் பொழுது ஒரு கெட்டவார்த்தை இருப்பதென்பது அப்பொழுதெல்லாம் வழக்கம். ஒரு முறை சென்னையில் தங்கியிருந்த பொழுது சிஃபியில் ப்ரௌசிங் செய்ய போயிருந்தேன். "எஃப்" வேர்ட் ரொம்ப சகஜமாக சர்வசாதாரணமாக சென்டரெங்கும் நிரம்பிவழிந்தது. அது விளையாடும் இடம் என்று நினைவு.)






"அ ப்யூ குட் மேன்" படத்தில் பார்த்த ஜாக் நிக்கல்ஸனா அது. கொஞ்சம் தளர்ந்தது போல் இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் அடிச்சி ஆடுறார். மார்க் வால்பெர்க், ஆரம்பத்தில் புதிதாக ஸ்டேட் போலீஸில் சேரும், மாட் டேமனையும், டிகாப்ரியோவையும் இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் அசால்டாக படம் காண்பிக்கிறார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது. "த பிக் ஹிட்" படம் பார்த்துதான் நினைவில் வருகிறது. அவரா இவர் என்று யோசிக்க வைக்கிறது. குண்டா, Eஹுர்ஸ்டைல் மாற்றி, "த பிரெசிலியன் ஜாப்" இரண்டாம் பாகம் 2008ல் வரத் தயாராகிவருகிறது. பார்க்கலாம் அப்பொழுது எப்படி இருக்கிறார் என்று.

ஜாக் நிக்கல்ஸன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மாட் டேமென், டிகாப்ரியோ நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறிப்பாக தன்னுடைய சக அதிகாரியை போட்டுத்தள்ளும் இடத்திலும், தொடர்ச்சியான மனவழுத்தத்தில் தடுமாறும் பொழுதும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது. மாட் டேமென் இயல்பாய் செய்திருக்கிறார். பார்ன் ஐடென்டிடி, பார்ன் சுப்ரிமஸிக்குப் பிறகு நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நடிகர்களில் ஒருவர்.

ஒரே ரத்தம், துப்பாக்கிச்சூடு, கெட்டவார்த்தைகள் தான் இந்தப் படம். கிளைமாக்ஸ் ஒரிஜினல் வாழ்க்கையை காண்பித்தாலும், தியேட்டரை விட்டு வெளிவரும் பொழுது ஒத்துக்கொள்ள முடியவில்லைதான். ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான். நடிகர்களின் பிரமாதமான நடிப்பிற்கும், இயக்குநரின் திறமைக்கும், வேகமாக கொண்டு செல்லும் எடிட்டிங்கிற்காகவும் நிச்சயாமய் ஒரு முறை பார்க்கலாம்.

ராத்திரி படம் பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு மேல், புனேவில் (கொஞ்சமாக இருக்கும்)அற்புதமான ரோட்டில், தடையில்லாமல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நினைவில் இருக்கும் நிச்சயமாய்.


Directed by Martin Scorsese; written by William Monahan, based on the screenplay for the film "Infernal Affairs"; director of photography, Michael Ballhaus; edited by Thelma Schoonmaker; music by Howard Shore; production designer, Kristi Zea; produced by Brad Pitt, Brad Grey and Graham King; released by Warner Brothers Pictures. Running time: 150 minutes.

WITH: Leonardo DiCaprio (Billy Costigan), Matt Damon (Colin Sullivan), Jack Nicholson (Frank Costello), Mark Wahlberg (Dignam), Martin Sheen (Queenan), Ray Winstone (Mr. French), Vera Farmiga (Madolyn), Alec Baldwin (Ellerby) and Anthony Anderson (Brown).

Read More

Share Tweet Pin It +1

13 Comments

Popular Posts