நான் வாலிபால் விளையாட மனதளவில் தயாரான பொழுது இன்னமும் நினைவில் இருக்கிறது பசுமையாய். ஒன்பது முடித்து பத்தாவது சேர்வதற்கு முன்னான வருடப்பரிட்சை விடுமுறை காலம். BHELல் கோச்சிங் கேம்ப்கள் நிறைய நடைபெறும், உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கலாம், ஓவியம், நீச்சல், டென்னிஸ், ஷட்டில் இப்படி. என் வாழ்க்கையில் விடுமுறைக்கென்றோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ என் வீட்டை விட்டு வெளியில் தங்கியதில்லை. அதேபோல் வேறு மனிதர்கள் யாரும் எங்கள் வீட்டிலும் தங்கியதில்லை நான் அக்கா அம்மா அப்பா எல்லாம் ஒரு தனித்தீவு போலத்தான் அந்தக் காலத்தில். இப்பவும் ஒன்னும் என்னைத் தவிர்த்த மற்றவர்களின் வட்டம் அவ்வளவு பெரியது இல்லை என்றே நினைக்கிறேன்.
BHELல் ஒரு அருமையான பாஸ்கெட்பால் கிளப் ஒன்று உண்டு, கலைச்செல்வன் என்பவர் நடுத்துகிற கிளப் அது. அப்பா PET என்பதால் கலை அண்ணாவுடன் நல்ல பழக்கம் அதுமட்டுமல்லாமல், அப்பாவின் நெருங்கிய நண்பரான இன்னொரு PETயின் அண்ணா பையன் என்கிற முறையில் அப்பா சிலதடவைகள் பாஸ்கெட்பால் காம்படிஷனுக்கு முன்னால் பிஸிகல் டிஸ்ப்ளே செய்து கொடுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் நான் அப்பாவிடம் அவ்வளவாகப் பேசமாட்டேன், அம்மாவிடம் நச்சரித்து என்னை அங்கே சேர்த்துவிடுமாறு சொல்லிக்கொண்டிருந்தேன். அது அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை தான்; என்ன காரணமோ அப்பா கலை அண்ணாவிடம் பேசி என்னைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்.
நான் சின்ன வயதில் இருந்தே பாஸ்கெட்பால் விளையாடுவதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தேன். ஒரு அழகான விளையாட்டு, கலை அண்ணா நடத்தின அத்தனை டோர்னமென்ட்டும் பார்த்திருக்கிறேன். அப்பா PET என்றாலும் கோ-கோ, கபடிக்கு ஊதுவார் தெரியும் - ஆனால் பாஸ்கெட்பால் எல்லாம் ரெஃப்ரி பண்ணமாட்டார். அவர் மற்றவர்களைப் போல் PETக்கு படித்து வந்தவர் இல்லை, நல்ல உடற்பயிற்சியும் உடல்திறனும் சேர்த்து அவரை உடற்பயிற்சி ஆசிரியராக்கியிருக்கிறது. அவரைப் பற்றி இன்னொருமுறை எழுதுகிறேன். எனக்கு ரொம்பவும் வருத்தமாகயிருக்கும் அப்பா ஏன் பாஸ்கெட்பால் ரெஃப்ரி பண்ண மாட்டேங்கிறார் என்று. அப்படி எனக்கு விருப்பமான விளையாட்டு.
அம்மா காலையில் எழுப்பிவிட வீட்டிலிருந்து நடந்தே ஸ்டேடியம் வந்து பேஸ்கட்பால் காலரியில் உட்கார்ந்திருந்தேன். கலை அண்ணாவுக்கு என்னை நன்றாகத் தெரியும் அப்பாவுடன் வைத்து நிறைய முறை என்னைப் பார்த்திருக்கிறார், என்னுடன் நன்றாகப் பேசவும் செய்வார். அந்தக் காலத்தில் ஸ்கூலுக்கெல்லாமுமே ட்ரௌஸர் என்பதால் ட்ரௌஸரும் டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு சென்றிருந்தேன். இது போன்ற கோச்சிங்-கேம்ப்களுக்கு பணம் கட்டித்தான் சேரமுடியும், ஆனால் அப்பா PET என்பதாலும் கலை அண்ணாவின் நண்பர் என்பதாலும் காசு எதுவும் கட்டவில்லை என்று எனக்குத் தெரியும்.
நான் தான் முதல் ஆள், அன்று தான் பாஸ்கெட்பால் கோச்சிங் முதல் நாள், நேரம் ஆக ஆக புதிதாய் கோச்சிங்கில் சேரவந்தவர்கள் ஒன்றிரண்டாக வரத்தொடங்கினர். ஏற்கனவே அங்கே பயிற்சி பெற்று வருடம் முழுவதும் ஆடும் மற்றவர்களும் சிறிது நேரத்தில் வர பழைய ஆட்கள் களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினர். புதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள், நமது inferiority complex யாருடனும் என்னைப் பேச விடாமல் செய்தது அதுமட்டுமில்லாமல் அவர்கள் எல்லோரும் அழகான ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு ஜெர்ஸியில் வந்திருந்தார்கள். நான் ஒருவன் தான் ட்ரௌஸர் மற்றும் டீஷர்ட். எனக்கு சாதாரணமாக எழுந்த தாழ்வு மனப்பான்மையால் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் அன்று. பக்கத்தில் வாலிபால் கோச்சிங் நடந்து கொண்டிருந்தது. அன்று அங்கும் சேரவில்லை, அம்மாவிடம் அழுது நான் பாஸ்கெட்பால் சேரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்தேன்.
இன்று என்னால் சொல்லமுடியவில்லை நான் வாழ்க்கையில் பாஸ்கெட்பாலை இழந்துவிட்டேனா என ஏனென்றால் எனக்கு வாலிபால் கிடைத்திருக்கிறதே. பாஸ்கெட்பால் க்ரவுண்டுக்கு அருகில் தான் வாலிபால் க்ரவுண்ட், கலை அண்ணா நான் பாஸ்கெட்பால் கோச்சிங் வராமல் வாலிபால் கோச்சிங்கில் இருப்பதைப் பார்த்து அப்பாவிடம் வருத்தப்பட்டதாக அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணன் என்னையும் சிலசமயம் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விடுவார். நிறைய பேருக்கு நான் ஏன் அன்று அப்படியொரு முடிவெடுத்தேன் என்று தீர்மானிக்க கஷ்டமாகயிருக்குமாயிருக்கும். பள்ளிக்கூடத்தில் இருந்து அப்பாவின் ஆதிக்கம் செல்லுபடியாகும் எல்லா இடங்களிலும் சலுகை, பணம் கட்டி பெரிதாக எதையுமே செய்ததில்லை. டியூஷனாகட்டும், டைப்ரைட்டிங்க், ஷார்ட் ஹாண்ட் ஆகட்டும் எல்லாமே ஃப்ரீ. ஆனால் அப்பாவின் முன் காசுகேட்க விரும்பாதவர்கள் என்னிடம் காசு கொடுத்து படிப்பவர்களிடம் காட்டும் அக்கறையைக் காட்டவில்லை என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. நான் எதையுமே சரியாய் முடித்ததில்லை, டியூஷனாகட்டும் டைப்ரைட்டிங் கிளாஸாகட்டும் இரண்டு மாதங்கள் பணம் தராமல் இருப்பதை ஒத்துக்கொள்ளும் அவர்களால் தொடர்ச்சியாக அப்படியிருக்க முடிந்திருக்கவில்லை அதனால் பெரும்பாலும் நானே நின்றுகொண்டுவிடுவேன். அப்பாவுக்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் கண்டுகொள்ளமாட்டார்.
வாலிபால் கோச்சிங் வந்தவர்கள் என்னைப் போலவேயிருப்பதாகப் பட்டது எனக்கு. ஒரு மாத கோச்சிங் முடியும் பொழுது நான் சர்வீஸ் போட, பூஸ்டிங் செய்ய, அன்டர் ஆம் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தேன். கோச்சிங் முடித்ததும் எல்லோருக்கும் கொடுத்த பனியன் எனக்குக் கொடுக்கப்படவில்லை முதலில் ஏனென்றால் அதெல்லாம் காசுகட்டி பயின்றவர்களுக்குத் தான். ஆனால் என் கோச் ராஜமாணிக்கம் எனக்கும் வாங்கித் தந்தார். மற்றவர்களைப் போல ஒரு மாதப் பயிற்சிக்குப் பின் நான் வாலிபால் விளையாடுவதை நிறுத்திவிடவில்லை அதற்கு முக்கியக் காரணம் என் கோச் ராஜமாணிக்கம் என்னைத் தொடர்ந்து வந்து விளையாடச் சொன்னார்.
நானும் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்குச் சென்று காபி குடித்துவிட்டு கிளம்பி வாலிபால் விளையாட வந்துவிடுவேன், Community Center என்று சொல்லப்படும் ஒரு கிளப்பைச் சார்ந்தது தான் அந்த வாலிபால் கிரௌண்ட். BHELக்கு இருக்கும் வாலிபால் டீம் அங்கே தான் விளையாடுவார்கள், அவர்கள் ஏழு மணிக்குத்தான் வருவார்கள், எங்கள் வாலிபால் க்ரவுண்டும் சரி பாஸ்கெட்பால் க்ரவுண்டும் சர்ரி Fled Light வசதியுள்ளவை. அதனால் இரவு ஒன்பது மணிவரை விளையாடிவிட்டுத்தான் செல்வார்கள். கம்யூனிட்டி செண்டருக்குச் சென்று வாலிபால் பந்துகளை எடுத்துக்கொண்டு க்ரவுண்டுக்கு வருவது எனக்கு வழக்கம். வந்து மற்ற எல்லா பந்துகளையும் வைத்துவிட்டு ஒரு பந்தை எடுத்து பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.
என்னை எல்லாம் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், நான் ரொம்பவும் சின்னப்பையன் ஃபிங்கரிங் போடும் பொழுது பந்து கைக்குள் நிற்காத காலங்கள் அவை. ஆனால் இடைவிடாதப் பயிற்சி, பந்து பொறுக்கிப்போடுவது தான் வேலை ஒரு பக்கம் நெட்கட்டியிருப்பார்கள் இன்னொரு பக்கம் ஓப்பன் ஸ்பேஸ். கையில் வைத்து ஃபிங்கரிங், அண்ட்ர் ஆம் போட்டுக்கொண்டே அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். பந்து என்னைத் தாண்டிச் சென்றால் என் கையில் இருக்கும் பந்தைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற பந்தை எடுத்து பயிற்சி செய்வேன். இரண்டு மூன்று மாதங்கள் இப்படி பயிற்சி செய்திருக்கிறேன்.
என்ன ஆனதோ தெரியாது ஒரு நாள் community centerல் வேலை பார்க்கும் நபர் எனக்கு பந்து தரமுடியாது என்று சொல்லிவிட, அன்று நான் க்ரவுண்டில் பந்து இல்லாமல் உட்கார்ந்திருக்க வந்த BHEL ப்ளேயர்கள் இனிமேல் என்னிடம் அப்படிச் சொல்லக்கூடாது என்று சொல்லி அந்த நபரைத் திட்டினார்கள். அதில் விளையாடும் எல்லோருக்கும் என் தாத்தாவைத் தெரிந்திருக்கும், எங்க அம்மா வழித்தாத்தா வாலிபால் ப்ளேயர், National referee. இன்றுவரை அவரை மாதிரி சர்வீஸ் போடமுடியாதென்று நிறையபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ரயில்வேஸ்காக விளையாடியவர் அவர். சொல்லப்போனால் எங்கள் குடும்பத்திலேயே வாலிபால் விளையாடத்தெரியாத(proper) ஆள் எங்கக்கா தான். சித்தி, அம்மா, மாமா இருவரும், அப்பா, தாத்தா எல்லோரும் விளையாடுவார்கள் அவரவர்களின் பள்ளி கல்லூரிக்காக விளையாடியவர்கள்.
பின்னர் BHEL அணியினரின் பயிற்சி நிறைவு பெற, அதில் விளையாடிக் கொண்டிருக்கும் வேறு அண்ணன்கள் மட்டும் விளையாடுவார்கள் அப்பொழுது என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். அப்படித் தொடங்கியது தான் நான் க்ரவுண்டிற்குள் மேட்சிற்காக இறங்கியது என்றால் அதற்குப் பிறகு பள்ளிக்காக, கல்லூரிக்காக, கம்பெனிக்காக(Kanbay) விளையாடியிருக்கிறேன். இன்று ஏதேதோ காரணங்களுக்காக பேஸ்கெட்பால் கிடைக்காததால் தான் வாலிபால் விளையாடினேன் என்று நான் நினைக்கவில்லை, என் உயரத்திற்கு என்னைச் சாதிக்க வைத்தது வாலிபால், நான் என்னுடைய உழைப்பை போட்டேன் பலன் கிடைத்தது. அவ்வளவே பெரிய அளவில் வெற்றிகள் பெற்றதில்லை தான், மறுக்கவில்லை. ஆனால் நல்ல ஸ்டெமினாவைக் கொடுத்தது வாலிபால் தான், சொல்லப்போனால் எங்கள் வீட்டிலேயே ஸ்டெமினா குறைவாக இருப்பது நானாகத்தானிருக்கும்.
டைரிக் குறிப்புகள் - வாலிபால் அனுபவங்கள்
பூனைக்குட்டி
Friday, November 16, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
அடுத்த நாள் வீட்டில் நான் பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்த பொழுது வீட்டு ஓனர் வந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மதுமிதா என்ற பொண்ணுக்கு ஆக்...
பாஸ்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்..... இப்படி வாலிபால் பற்றி பதிவெழுதி பீலிங்ஸை கிளப்பி விட்டீங்களே! வருடத்திற்கு ஒன்று என்று வாங்கிய பரிசுகள் அலமாரியில் பத்திரமாக உறங்கிக்கொண்டிருக்கின்றன :-)
ReplyDeleteஅப்பாவி,
ReplyDeleteநீங்கள் நிறைய கோப்பையெல்லாம் வாங்கியிருப்பீர்கள் போலிருக்கிறது. நான் வெகுசிலவே வாங்கியிருப்பேன். Kanbayவிற்காக விளையாடிய டோர்னமெண்ட்டில் Satyam இடம் தோற்று இரண்டாம் இடம் வந்தோம். பிறகு Inter Kanbayவில் ஜெயித்து வாங்கியது நினைவில் உண்டு.
பள்ளி கல்லூரிகளில் விளையாடியிருக்கிறேனே தவிர கோப்பையெல்லாம் கிடையாது!