In நாட்குறிப்பு

நாட்குறிப்பு - Layoff & Appraisal

இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரியான வேலையிருந்தது, போனவாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கூட நான் அலுவகத்திற்கு வந்திருந்தேன். இரண்டு முக்கியக் காரணங்கள் ஒன்று ரிலீஸ், இரண்டாவது அப்ரைஸல். ரிலீஸ் என்றால் கூட அசையாமல் இருக்கும் என் மனதை ஆட்டிப்பார்க்கும் திறமை வாய்ந்தது அப்ரைஸல். செய்து கொண்டிருந்த வேலை வளவளவென்று அதிகரித்துக்கொண்டே செல்ல, பெருந்தலை ஒன்று முடிச்சதும் அப்ரைஸல் வைத்துக்கொள்ளலாம் நகைத்தபடியே விளையாட்டுக்காய்ச் சொல்ல வேற வழியேயில்லாமல் வேலை - முடிக்கவேண்டிய ஒன்றாகியது. நானும் பருப்பு மாதிரி அப்ரைஸல் டாக்குமென்ட்டில் எழுதியது எல்லாமே தற்பொழுது செய்துகொண்டிருக்கும் வேலையைப்பற்றி மட்டுமே. அதுகூட ஒரு காரணம் என் அப்ரைஸல் நாள் தள்ளிக்கொண்டு போவதற்கு.

நாளையும் மறுநாளும் கம்பெனி கிறிஸ்மஸ் பார்ட்டி என்பதால் எங்களுடன் சேர்ந்து கொண்டாட வந்திருந்ததாக நினைத்த கம்பெனியின் CTO மீட்டிங் ஒன்றில் சட்டென்று Product Developmentல் யூரோப்பிலும் அமேரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் Lay off செய்யப்போகும் விஷயத்தைச் சொல்ல, நிசப்தம் - இருநூறு பேர் முகத்திலும் பயம் தாண்டவமாடியது. ஆனால் தொடர்ந்த ஸ்டேட்மென்ட்டிலேயே பெங்களூர் டெவலப்மென்ட் சென்டரில் எந்த மாற்றமும் கிடையாது. அடுத்த 24 - 36 மாதங்களுக்கான ப்ளான் இருக்கிறது என்று சொன்ன பின்னரும் யார் முகத்திலுமே உயிரேயில்லை.

Insurenceல் செய்து முடிக்கவேண்டிய ஒரு காம்பனென்ட் பல்வேறு காரணங்களூக்காக செய்துமுடிக்கப்படாமல்/கிடைக்காமல் போக இந்த முடிவை எடுக்கவேண்டியதாய் அவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெரிந்து பெங்களூர் டெவலப்மென் ட் சென் ட்டரின் பிரம்மாதமான வெற்றி, அவர்களை டப்ளினில் இன்னொரு டெவலப்மென் ட் சென் ட்டரை நடத்துவதைப் பற்றி தீவிரமாக யோசிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். உண்மைதானே, ரூபாய்க்கும் யூரோ - டாலர் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் எல்லோருக்குமே புரிந்தது தான். Oracle, SAP போன்ற ஜாம்பவான்கள் சண்டை போடும் ஒரு ஏரியாவில் தொடர்ச்சியாக Leaderஆக இருப்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம் தான்.

CTO பேசும் பொழுது முன் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததோ வேறு விஷயமோ தெரியாது, எனக்கு பிரகாசமாகப் புரிந்த இந்த Layoff விஷயம் நண்பர்களுக்கும் மற்ற கம்பெனி மக்களுக்கும் புரியவில்லை. மேபி Layoff என்றதைக் கேட்டதுமே நின்று கொண்டிருக்கும் தரை நழுவுவதாக உணர்ந்திருக்க வேண்டும். CTO தனித்தனியாக, குழு குழுவாகச் சென்று பெங்களூர் சென்ட்டரில் மாற்றம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் ஒரு Product ஆக நினைத்து செய்யாத ஒரு விஷயத்தை சட்டென்று கடைசி சமயத்தில் இறுக்கிப்பிடித்து Productஆக மாற்றியதால் எங்கள் Teamன் மீது ஏகக் காதலாக இருந்தவரை எங்க head அதை பொதுவாக வெளியில் சொல்லவைத்தது அவருடைய சாமர்த்தியமே! ஒரு வழியாக வெள்ளைக்காரர்களின் வேலையைப் பறித்தாகிவிட்டது இனிமேல் நிச்சயமாய் இன்னும் அதிக மக்களை PDக்கு வேலைக்கு எடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். தெரியவில்லை.

நான் செய்து கொண்டிருக்கும் வேலை பற்றியும், கம்பெனி பற்றியும், நாங்கள் உபயோகிக்கும் Architecture பற்றியும் எழுத வேண்டும் என்று முன்னமே நினைத்திருந்தேன். ஆனால் என்னமோ இழுத்துக்கொண்டே போகிறது. சுவாரசியமான ஒன்றாகக்கூடயிருக்கும். ம்ம்ம் அப்ரைசல் அதைவிட்டுட்டேன் இடையில் நான் என் வேலையைச் செய்து காட்டியபிறகும் பெருந்தலை அப்ரைசலை அடுத்தவாரம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். ரிலீஸ், CTOவின் இந்தியா வருகை என்று அவரும் பிஸிதான் எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு எந்த நாளில் அப்ரைஸல் மீட்டிங்க் நடந்தாலும் நாள்கணக்கு தவறாமல் கிடைக்க வேண்டிய கூடுதல் பணம் arrear ஆகக்கிடைத்துவிடும். இந்த தலை தான் என்னைத் தனிப்பட்ட முறையில் interview வைத்து எடுத்தது, என்ன காரணத்தினாலோ HR மக்கள் வெளியில் சென்றிருக்க, முதல் ரவுண்ட் இன்டர்வியூ எடுக்கும் ஆளும் வெளியில் சென்றிருந்த பொழுதில் நான் ஹோட்டலுக்குச் சென்றிருந்ததால் இவர் தான் என்னை தனிப்பட்ட முறையில் எடுத்திருந்தார்.

ஒரு முக்கால் மணிநேர இன்டர்வியூ முடியும் பொழுதே நீங்க பேப்பர் போட்டுவிட்டு காத்திருங்கள் நீங்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கமுடியும் என்று சொல்லியனுப்பினார். அன்று நினைத்தேன் சரியான மாங்காயாயிருப்பான் போலிருக்கு என்று ஆனால் ஆள் சரியான டெக்னிகல் மனுஷன், அங்க உதைக்குது இங்க உதைக்குது என்றால் தானே உட்கார்ந்து debug பண்ணி சரிசெய்யும் அளவிற்கு எங்கள் architectureன் in and out தெரிந்தவன். சரியான ஞாபகசக்தி, சென்ற முறை கம்பெனி அளவில் நடந்த Quiz போட்டியில் தன்விடை மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய விடைகளையெல்லாம் சொல்லி ஆச்சர்யப்படுத்தியவர். ம்ம்ம் பல சமயங்களில் நம்முடைய First impression படுதோல்வியடைகிறது. எனக்கு என் தலை விஷயத்தில் அப்படியே! இன்னும் அப்ரைஸால் முடியவில்லை பார்ட்டி முடிந்து வந்ததும் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த முறை அப்ரைஸல் பற்றிய பெருங்கனவுகள் இல்லை, நான் என்ன செய்தேன் என்ன செய்யலை என்று எல்லாவிஷயங்களும் பெரியவருக்கு தெரியுமாதலால் அப்ரைஸல் இந்த முறை பிரச்சனையில்லாமல் செல்லும் என்று தான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

கம்பெனி வழக்கப்படி டிசம்பரில் கிறிஸ்மசுடன் சேர்த்து பதினைந்து நாள் விடுமுறை கொடுப்பது வழக்கம். இந்த முறையும் உண்டு, டிசம்பர் 19ல் இருந்து ஜனவரி 2 வரை விடுமுறை ஏற்கனவே இந்த விடுமுறையைக் கணக்கிட்டு டூர் ப்ளான் ஒன்று போட்டு டிக்கெட் எல்லாம் புக்செய்தாகிவிட்டது. என்ன உயிருக்கு ஆபத்து இல்லாமல் திரும்பி வரவேண்டும் அவ்வளவே! தூங்கி எழுந்து வேலை செய்து திரும்பவும் தூங்கத்தான் நேரம் கிடைக்கிறது எதுவும் எழுதியே ஆகவேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

Related Articles

3 comments:

  1. HP ல வேலையோ! ஆமா இப்படி எல்லோருக்கும் தெரியற மாதிரி உங்க கம்பெனி ரகசியங்கள சொல்லலாமா?

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே, உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்து முடித்தேன். மிகவும் பயனாக இருக்கிறது.
    சோழரின் வரலாற்றை படித்தேன், அருமை நண்பரே. சோழருக்கும் சிறீ விஜயா பேரரசுக்கும் நடந்த போர், கடாரம் மற்றும் மலாயாவின் கடல் ஆதிக்கத்தால் ஏற்பட்டது. அதாவது சிறீ விஜயா மற்றும் சோழ அரசும் நல்லுரவில் இருந்தார்கள். சில காலத்திற்கு பின் சிறீ விஜயா, சோழ அரசின் கடல் போக்கு வரவிற்கு அதிக வரி விதித்தது. இதனால் தான் சோழ அரசு சிறீ விஜயா மீது படை எடுத்து வியாபார மையமான கடாரத்தை பிடித்தது.
    கோபித்து கொள்ள வேண்டாம். நான் படித்த தகவலை கொடுக்கிறேன்.
    http://vaazkaipayanam.wordpress.com/

    நன்றி

    ReplyDelete

Popular Posts