In Only ஜல்லிஸ் கவிதைகள் புகைப்படம்

கிணற்றுத் தவளைகளின் கதறலைப் புறக்கணியுங்கள்

ரம்யமான முன்பனிக்கால மாலைப்பொழுதின்
கலைந்து செல்லும் மேகங்கள்
இழைத்துக் கோர்த்த வண்ணங்களுக்காகவாவது
நீ அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்
உன் புறக்கணிப்பை விடவும்
வண்ணக் குழப்பங்களுக்கான என் வருத்தம்
உன் வேதனையை புரியவைக்கிறது

மொஸார்ட் இசைத்துக் களைத்த
பியானோவின் காதலைப் போல்
உனக்கான என் காத்திருத்தல்
புறக்கணித்தல்களுக்கு அப்பாற்பட்டது
உன் கோபம்
கிழித்தெறிந்த கவிதை, நாட்குறிப்புக்களோடு
எனக்கும் சம்மதமே
நாவலொன்றின் குறிப்புக்களோடு
உன் காதல்
சிறுகதைகளை நானும் புறக்கணிக்கின்றேன்

-------------------------------

இருத்தலியத்தின் பெயரைச் சொல்லி அடிக்கும் ஜல்லியாகட்டும், பொழுது போகாமல் எழுதும் சினிமா விமர்சனமாகட்டும் என் பதிவின் தொடர்ச்சி எனக்குப் பிடித்தேயிருக்கிறது. பக்கத்தில் சந்தித்த நண்பரொவர் சொன்ன 'உங்கள் பதிவின் தொடர்ச்சி உங்களை அடுத்த தளத்திற்கு நகர்த்தும்' என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கையில்லை. என்னைப் பொறுத்தவரை அடுத்த தளம் என்பது தொடர்ச்சியான ஒன்று, மாற்றம் என்கிற வார்த்தையைப் போல, ஒரே தளத்தில் யாராலும் நிற்க முடியாது. நின்றாலும் கூடவே நிற்பதனாலேயே அது அடுத்த தளமாகிவிடுகிறது. பதிவின் தொடர்ச்சியை அடுத்த தளத்திற்கான முயற்சியாக இல்லாமல் இயல்பாகவே செய்து வர நினைக்கிறேன் அது அடுத்த தளத்திற்கான முயற்சியாகவே இருந்தாலும். விகடன் குமுதம் கல்கி மீதிருந்த காதலைப் போல் காலச்சுவடு மீதும் உயிர்மை மீதும் காதல் இருந்திருக்கிறது இருக்கிறது. அடுத்த தளமாக தேர்ந்தெடுத்த அத்தனையும் ஒரு சமயம் நகர்ந்துவிட/அவிழ்ந்து விட தளத்திற்கான தேடல் மட்டும் இருக்கிறது. என்றாலும் ambition என்கிற வார்த்தை கிளிஷே மட்டுமல்லாமல் ரொம்பவும் பக்வாஸானது என்று மட்டும் இப்போது நினைக்கிறேன்.

-----------------------------------

காவிரிக் கரையிலிருந்து ஸ்ரீரங்கக் கோபுரத்தையும், மலைக்கோட்டையையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சமீபத்தில் திருச்சி சென்றிருந்த பொழுது இதற்காகவே ட்ரைபாட் வேறு எடுத்துக் கொண்டு போயிருந்தேன். KPN Travels காரைக்குடி ஸ்லீப்பர் 4.00 மணிக்கெல்லாம் கெத்தா மத்தியப் பேருந்து நிலையத்தில் நிறுத்தினது, டீ மட்டும் ஒன்றைக் குடித்துவிட்டு மனசு முழுவதும் பறக்க, பஸ்ஸில் காவிரி பாலம் வந்து சேர்ந்தேன். அன்று சமயபுரம் தேர் என்பதால் சாரி சாரியாக மக்கள் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள் வெளியூரில் இருந்து வந்த சிலர் பாலத்தில் பாய் விரித்துப் படுத்தும் கொண்டிருந்தார்கள்.

நான் சரி எடுத்து பார்ப்போமே என்று சொல்லிவிட்டு, Avயில் படம் எடுத்தால் ஷேக் ஆகியிருந்தது, தெரிந்தது தானே என்று Tvயில் போட்டு Tripodல் வைத்து படம் எடுத்தால் கைகளில் வைத்து எடுத்ததை விடவும் அதிகம் ஷேக் ஆகியிருந்தது பின்னர் தான் புரிந்தது - பேருந்து ஒன்று கடந்தாலோ இரண்டு ஆட்டோக்கள் அல்லது ஒரு ஆட்டோ நான்கு மனிதர்கள் கடந்தாலோ பாலமே ஆடுவதை. பின்னர் புகைப்படம் எடுக்கும் ஆசையை விட்டுவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் நிரப்புவதற்காக வண்டியை நிறுத்திய இடத்தில் இருந்து எடுத்தப் படம் தான் கீழிருக்கும் மலைக்கோட்டை படம்.

Malaikottai

---------------------------------

அய்யனார் திருமணத்திற்காக திருவண்ணாமலை சென்றிருந்தது தான் முதல் முறை திருவண்ணாமலைக்குச் செல்வது. அதற்கு போட்டத் திட்டத்தில் நடந்த ஒரு சின்ன குளறுபடியால், பெரும்புரட்சியாளர்கள் நான்கு பேருடன் தீவிர பின்நவீனத்துவம் பேச/உரையாட/கேட்க முடியாமல் போனது.

திருமணம் நல்லபடியாக நடந்து முடிய கல்யாண சாப்பாடு சாப்பிட்டு விட்டு நான் போட்ட ஐந்து/பத்து நிமிட பிட்டில் பயந்து போய், பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி தெரித்துவிட(சும்மா விளையாட்டுக்கு கண்டுக்காதீங்க...) இந்தப் பிரச்சனையை முன்னமே எப்படியோ உணர்ந்த நந்தா அதற்கு முன்னமே தெரித்துவிட, அவசர பிரச்சனை ஒன்றை சமாளிக்க வேண்டி நானும் உடனே பேருந்து பிடித்தேன் பெங்களுக்கு.

Ayyanar Marriage

வளர்மதி மிகவும் அமைதியாக இருந்தார், ஆச்சர்யமான ஒருவிஷயம் என்று நினைக்கிறேன். நான் நிச்சயமாய் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

VaLarmathi

---------------------------------

குமுதம் வலைபதிவர்களைப் பற்றி எழுதியதும், வெ.சா திண்ணையில் புலம்பியதும் புதிய விஷயம் இல்லை, தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்த ஒன்றுதான். வலைபதிவுகள் பலருக்கு இனிப்பான விஷயம் கிடையாது, குழுமங்களில் இயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதனுடைய மாடரேஷன் உடன் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மாடரேஷன் இல்லாத எந்த விஷயமும் உகந்ததல்ல என்பது பெரிய ஆச்சர்யத்திற்குரிய விஷயம் இல்லை தான். என்னைப் போல் மாடரேஷன் பிடிக்காமலேயே பதிவெழுதத் தொடங்கியவர்களுக்கு பதிவுகள் விரித்துக் கொடுத்த எல்லை விசாலமானது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் கத்தும் தவளைகள் கிணற்றுக்குள்ளேயே ராஜாங்கம் நடத்த வேண்டியது தான்.

Related Articles

3 comments:

  1. சும்மா கம்பீரமா பேருக்கு ஏத்த மாதிரி பாக்குறாருய்யா அய்யனார்.

    ReplyDelete
  2. பிளாக் & ஒயிட்டில் வளர்மதி அசத்தலாக இருக்கிறார். நந்தா கருப்புச்சட்டை போட்டு வந்திருந்தாரா என்ற ரகசியத்தை மட்டும் என் காதில் சொல்லவும்!

    ReplyDelete
  3. பிரேம்குமார் - ஆமாம்

    லக்கி - நந்தா வேறு வகையில் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் :) ஹாஹா. கருப்புச் சட்டை மூலமாய் இல்லை.

    ReplyDelete

Popular Posts