ஐஸ்வர்யா ராயைப் போல் ஸ்ரீதேவி மீதும் ஒரு ஏதோ ஒரு காரணமாய் நெருங்க இயலாத தன்மை இருந்திருக்கிறது. காந்தியைப் போல் ஐஸ்வர்யா ராயும், பிடித்து பிடிக்காமல் போய், திரும்பவும் பிடித்து என்று ஒரு சுழற்சி ஸ்ரீதேவிக்கும் உண்டு. ரஜினி ரசிகனா கமல் ரசிகனா என்கிற பிரச்சனை இருந்ததுண்டு. ஆனால் விஜய் - அஜித் விஷயத்தில் அப்படியில்லை. தீர்மானமாய் பிடித்தது அஜித் என்கிற வரை அறிவேன். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பு என்பது இல்லை. இங்கிருந்து கவுண்டமணி ரசிகன் என்கிற நிலையை அடைந்தது ஜென் நிலையே ஒழிய வேறில்லை.
முதலில் ஸ்ரீதேவி மீதான ஈடுபாடு உண்டானது என்றால் அதற்கு ஒரு படம் காரணம், தெலுங்கு படம், நான் தமிழில் பார்த்தேன். சிரஞ்சீவி - ஸ்ரீதேவி நடித்தது ஸ்ரீதேவி தேவதையாக வருவார் என்று ஊகிக்கிறேன். மனதில் பச்சென்று பதிந்த நிகழ்வு, பின்னர் சீண்டிப் பார்த்தது ஜானி. ஜானியின் ஸ்ரீதேவியைப் பிடிக்காத ஆணாதிக்க எண்ணங்கொண்டவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும். திரையில் நடக்கும் கதையை எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாத - இன்னமும் கூட - ஒருவன் என்கிற முறையில், மூன்றாம் பிறை படத்தை இன்னமும் முழுமையாக பார்த்திராவதவன் நான். அந்த முடிவு தெரிந்ததால் அதைப் பார்க்கும் மனமற்றவனாய் இன்னமும் நீடிக்கிறேன். அப்படி தள்ளிவைத்த இன்னொரு படம் பருத்திவீரன் - இன்னமும் - க்ளைமாக்ஸ் பார்த்ததில்லை.
Jennifer Ehleயுடன் காதல் கொள்ள முடிந்த என்னால் ஸ்ரீதேவியுடன் காதல் கொள்ள முடிந்திருக்கவில்லை, என்னவோ என்னை விட வயதில் மூத்தவர் என்கிற உணர்வு. ஆனால் இது பொதுவாய் எல்லோருக்குமானது இல்லை. காஞ்சனாவின் மீது கூட காதல் கொள்ள முடிந்திருக்கிறது, காதலிக்க நேரமில்லை காஞ்சனா இல்லை சாந்தி நிலையம் காஞ்சனா. இது ஒரு வியப்பான மனநிலை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் மனநிலை.
ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆறாண்டு கால அமெரிக்க வாழ்க்கையால் கைவந்திருக்கும் மனநிலை ஆச்சர்யமளிக்கிறது. மது அருந்தி பாத்-டப்பில் மயங்கி விழுந்து இறந்தார் என்பது ஒரு இம்மியளவு கூட ஸ்ரீதேவி மீதான மதிப்பில் குறை வரவில்லை. இங்கே பெண்களின் உடம்பின் மீதான உரிமையை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் நம்பிக்கை அதிகம். அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், பொடாக்ஸ் இஞ்சக்ஷன் போட்டுக்கொண்டார் என்பதில் எல்லாம் நம் கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆதித்த கரிகாலனின் பாற்பட்டு, சின்ன வயதிலேயே இறந்துவிட வேண்டும் என்கிற ஒரு ஈர்ப்பு இருந்தது உண்டு. இப்பொழுதும் அறுபது வயது போதும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை அவ்வப்பொழுது வருவது உண்டு, ஆனால் மனைவி குழந்தைகள் என்று அமைந்த பிறகு நாம் நம்முடைய வாழ்வை நமக்கானதாய் மட்டும் நினைத்துக் கொள்ள முடியாததாய் நீள்கிறது வாழ்க்கை. யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் ஒரு நீண்ட துயிலில் மரணித்துவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் இப்பொழுது இருக்கிறது. நானே நினைத்தாலும் முழு அமெரிக்கன்களாய் என் மகளையும் மகனையும் வளர்த்துவிட முடியாது என்று தெரிந்தே இருக்கிறேன். அன்பும் பாசமும் மட்டுமே தெரிந்த மனைவியிடம் வளரும் குழந்தைகளிடம் அன்பையும் பாசத்தையும் கூட ரேஷனலாக நினைக்க முடியும் என்பதை எப்படி உணரவைப்பது. இந்த மனம் என்பது சூழ்நிலையையும் கூட்டிக் கொண்டே சுழலும் உருவாகும் ஒன்று, பூமி அட்மாஸ்பியரையும் சேர்த்துக் கொண்டே சுற்றுவதைப் போல். மகனும் மகளும் என் வழிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அது என் மனைவிக்கு தரப்போகும் மனவலியைப் புரிந்தே நோகிறேன். மனதிற்கு நெருக்கமானவர்கள் மறையும் தருணம் மனம் தனக்குத் தானே செய்து கொள்ளும் பரிசோதனை தீர்க்கமானதாய் இருக்கிறது.
நான் தீர்க்கமாய் மனதில் ஓடும் சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றே ஊகிக்கிறேன், அல்லது எழுதுவதன் மூலமாய் மனதை சிந்திக்க வைக்க முடிகிறது என்பதை அல்லது எழுதுவதைக் கொண்டு மனதை ஆராய முடிகிறது என்பதை. பிரபாகரன் மரணத்தை ஒட்டி இப்படி யோசிக்க முடிந்திருக்கவில்லை, மனம் யோசனையை மறந்திருந்த காலம் அது. இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் அப்படி முடிந்திருக்கூடாது என்று ஏங்கிய மனநிலை. இன்னமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராய் பிரபாகரனை நிறுத்தவில்லை ஆனால் விமர்சனம் வைப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அல்லது நான் நடுநிலையாளர்கள் என்று ஒப்புக்கொண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் விஷயத்தை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது. அவ்வளவே.
என்னை மானசீகமாக கமலஹாசனாக உணர்ந்த விந்தை பொழுதுகளில் கதாநாயகியாக ஸ்ரீதேவியை உணர்ந்திருக்கிறேன், பதின்மங்களில். ஸ்ரீதேவி என் அம்மாக்களின் சித்திகளின் கதாநாயகி என்கிற பிம்பம் அகலவில்லை. ஸ்ரீதேவியை கமலஹாசன் மணம் புரிந்திருக்கவேண்டும் என்று வேடிக்கையாய் மனம் வாடியிருக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்பு ஸ்ரீதேவி, மென்சோகம் வழியும் பேரழகு தான் அவருடைய பிம்பமாக மனதில் பதிந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை கொள்ளை கொண்டு போன பிரிட்டிஷாரின் மீதான கோபம், போனி கபூரின் மீதும் இருந்திருக்கிறது. பதின்மத்தில் மனது பட்ட பாடு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இன்று உட்கார்ந்து யோசிக்கும் பொழுது. இப்படி பல பதின்ம நாட்களை இரவுகளை கனவுகளை வண்ணமயமாக்கியவர் ஸ்ரீதேவி.
------------------------------------------------------------------------
Google+ல் முன்பு எழுதியது
இவைகளில் ஏதோ ஒன்று தான். தற்சமயம் இல்லாததால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் tiara அணிந்த இதை ஒத்த அல்லது 95% இந்தப் படம் தான்.
+இளவஞ்சி iLaVAnJi
மலையை மயிரைக்கட்டி இழுக்கும் சாகஸம் தான். இந்தப் படத்தை ஓவியமாக வரைந்தும் இருக்கிறேன். தேடினா வீட்டில் கிடைக்குமாயிருக்கும்.
அவர் இறந்த பொழுது மன உயரங்களில் இருந்து கீழிறங்கியிருந்தார் தான் - பதின்மம் செய்யும் வேலை. விவாகரத்து, அல் பயிது போன்ற காரணங்களால். இன்று அப்படியில்லை. தேவதையும் இல்லை வெறுப்பும் இல்லை.
இறந்த பொழுது அத்தனையையும் தாண்டி கண்கள் கலங்கியது, கமல் ஆர்சி சக்தி பற்றி சொல்வதைப்போலில்லா விட்டாலும் உணர்ச்சிவசப்பட்டவன் தான். அய்யோ நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று. வெட்கமில்லாமல் கூட சொல்வேன், டயானாவையும் ஒரு காலத்தில் மனதார காதலித்தேன் என்று.
ஒரு படம்னா இதைத்தான் சொல்லணும். #myheartopener