Showing posts with label குறுந்தொகை. Show all posts
Showing posts with label குறுந்தொகை. Show all posts

In குறுந்தொகை

குறுந்தொகை - இளமையின் அழகு உச்சத்தில் மயங்கினான்

கணைக் கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு
துணர்ந் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பௌவம் அணங்குக - தோழி!
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

காதற் பரத்தை தலைமட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.

- மாங்குடி மருதனார்.

நான் புரிந்து கொண்டது:

தன்னைப் பிரிந்த சென்ற தலைவனை நினைத்து வருந்திய தலைவி, தலைவனை தன்னிடம் இருந்து பிரித்த பரத்தையைப் பற்றித் தவறாகப் பேசினாள். இதைக் கேள்விப்பட்ட பரத்தை, வாளைமீன் ஒன்று நிறை மாதமாய் சூள் கொண்டிருக்கும் பொழுது துள்ளித் தாவி சாப்பிட இயலாமல் தானாய் வளைந்து கிடைக்கும் மாமரக் கிளையில் பழுத்து நீரில் கிடக்கும் மாங்கனியை உண்பதைப் போல இளமையில் அழகின் உச்சத்தில் இருக்கும் என்னை நானாய்ச் சென்று தலைவனை மயக்காமல் என் அழகில் மயங்கி அவனாய் வந்து தான் சேர்ந்து கொண்டான். அது தெரியாமல் நான் தலைவனை மயக்கினேன் என்று தலைவி நினைத்தது உண்மையானால் கடல் தெய்வம் என்னை பழிதீர்த்துக் கொள்ளட்டும் என்றாள்.



பொருள்:

தோழி, திரண்ட கொம்பினையுடைய வாளைமீனின், நிறைந்த சூலினைக் கொண்ட இளைய பெட்டை, கொத்தாக உள்ள தேமாவின் இனிய கனிகளைப் பற்றிக் கொள்ளும். மனையாட்டி, அறியாமையால் புலத்தற்குக் காரணமாகும் அத்தன்மையுடையேமாகத் தலைவன் திறந்து யாங்கள் ஆயினோம் என்றால், இத்தகைய வளம் பொருந்திய பழமையாய், அறிவுச் சுற்றத்தால் முதிர்ந்த வேலிர் குலத்திற்கு உரியவர்களின் குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள குளிர்ந்த பெரிய கடல் எம்மை வருத்துக.

விளக்கம்:

குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள கடல், கீழ்க்கடலைக் குறிப்பதாகும் தேமாவின் கனி, நீர் நிலையில் உதிர்ந்த கனியன்று, நீரில் படியும் கிளைகளில் பழுத்த கனி ஈண்டு குறிக்கப்பட்டது.

வாளை மீனின் தலையீற்றுப் பெடை ஆதலின், நீரில் பல இடங்களிலும் விரைந்து சென்று, இரை தேட இயலாமை உணர்த்தப்பட்டது. இருக்கும் இடத்திலேயே வளமான, இனிய, கொத்தோடு விளங்கும் மாங்கனி, வாளையின் மடநாகு முயற்சி ஏதுமின்றிப் பற்றிக் கொள்வதற்கு ஏற்ப, நீரில் தோய்வதாய்க் கிடந்தது. தலைவனும், தானே வலியச் சென்ற தங்களை நுகர்ந்தானேயன்றி, தாங்கள் அவனை மனையாட்டியிடமிருந்து, அவள் கூறுவதுபோல் நயப்பித்துப் புறம் போகாதவாறு பிரித்திலம் என்றாள். மனையாட்டி, உண்மை அறியாமல் தம்மீது குறை கூறிப் புலந்தனள் என்றும், யாம் அத்தகையேம் ஆயின், அத்தவற்றிற்குத் தண்டமாகக் கடல் தெய்வத்தால் ஒறுக்கப்படுவேம் ஆகுக என்றும் பரத்தை சூள் உரைத்தனள்.

மனையோள் என்ற சொல், பரத்தை தலைவனின் மனைக்குரியளாம் பேறு பெறாமை குறித்தது. ‘வாளை மடநாகு’ எனப் பரத்தை குறிப்பிடுதல், தலைவன் நுகர்தற்கு ஏற்ற இளமை நலம் வாய்க்கப்பெற்றமை கருதியாகும். இல்லறக் கடமைகளுக்கு மட்டும் உரியளாம் தன்மை பெற்ற தலைவி, ’மனையோள்’ எனப் பரத்தையால் இகழ்ந்துரைக்கப்பட்டனள். மனையோள் என்ற சொல், புறத்தில் நிகழ்வது அறியும் வாய்ப்பு இல்லாதவள் மனைவி எனக்குறிப்பதாகும். தீது நீங்கக் கடலாடும் மரபு ஈண்டுக் குறிக்கப்பட்டது.

சொற்பொருள்:

நாகு : இளைமை குறித்த சொல்
கணைக்கோடு - திரண்ட கொம்பு, செதிலைக் குறித்தது.
கமஞ்சூல் - நிறைந்த சூல், முதற் சூல்
தேக்கொக்கு - இனிய மா; மாவினுள் ஒரு சாதி - தேமா
துணர் - கொத்து
பவ்வம் - கடல்
அனையேம் - அத்தகையேம் - நெஞ்சறி கட்டு
அணங்குக - வருத்துக

மேற்கோள்:

1. “நீடிய மரத்த கொடுநோய் மலிர் நிறை” குறுந்தொகை 99
2. “பைந்துணர், நெடு மரக் கொக்கின் நறுவடி” பெரும்பாணாற்றுப்படை 308-309
3. “தொன்று முதிர் வேளிர் குன்றூர்” நற்றிணை 280
4. “அணங்குடை முந்நீர்” அகநானூறு 207
4. “உருகெழு தெய்வம், புனை இருங்கதுப்பின் நீ வெய்யோள் வயின் அனையேன் ஆயின் அணங்குக என் என” அகநானூறு 166
6. “அவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம்பாடு ஆதல் அதனினும் அரிதே” நற்றிணை 330
7. “கழனி மாஅத்து விளைந்து உகுதீம்பழம் பழன வாளை கதூஉம்” குறுந்தொகை 6

பொருள் முடிவு:

தோழி மனையோள் புலக்கும், மகிழ்நற்கு அனையேம் ஆயினம் எனின் பவ்வம் அணங்குக. 

முனைவர் வி. நாகராசன் உரை

நானா காரணம்?

தோழி!
வாளைமீன்கள் பழங்களைக் கவ்வும்
வேளிர்குன்றத்தின்
கிழக்கே உள்ள கடல்
என்னைக் கொள்ளட்டும்.
அறியாமையால் அவர் மனைவிக்கு
என்னால் புலம்பல்
ஏற்பட்டதென்றால்.

சுஜாதா - மருதம் _ காதற் பரத்தை கூற்று

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In குறுந்தொகை சுஜாதா

பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்




பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே -
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது - மோசிகீரன் - குறுந்தொகை 84 பாலை

பொருள்:

கழலுமாறு அணிந்துள்ள தோள் வலையினை உடையவன், ஆய் என்ற வள்ளலாவான். அவனுடைய மலை மேகங்கள் தவழும் பொதியில் மலையாகும். ஆண்டு வளர்ந்துள்ள வேங்கையின் மலர் காந்தளின் மலர் ஆகியவற்றின் மணத்தை உடையவளாய், ஆம்பல் மலரைவிட குளிர்ச்சியுடையவளாய் விளங்குபவள் தலைவி, அவளை யான் ஒருமுறை தழுவியதோடு அமையாமல், மீட்டும் தழுவும் போது, அதற்கு உடன்படாது, அவள் ‘யான் வியர்த்தேன்’ என்றாள். யான் அங்ஙனம் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாவதற்கு காரணமாயிற்று என்பதை, அவள் உரைத்த பொழுது உணர்ந்திலேன் ஆனால், அவள் உடன் போக்கில் சென்ற இப்பொழுது அறிந்தேன்.

விளக்கம்:
தலைவி, உடன்போக்கில் சென்றவழி, செவிலித்தாய், தலைவி தன்னிடம் வெறுப்பைப் புலப்படுத்தியது தலைவன் மேல் உள்ள விருப்பினால் தான் என்பதை முன்னரே, தான் அறியாமை எண்ணி வருந்துவாளாயினாள். செவிலியர், தலைவியை தன் அருகில் துயிலச் செய்தல் வழக்கம். ‘வியர்த்தனென்’ என்ற தலைவியின் உரை ‘நீ முயங்கற்க’ என்ற குறிப்பை உணர்த்திற்று. அப்பொழுதே அறிந்திருந்தால் தலைவி விரும்பியதைச் செய்திருக்கலாம் என்ற செவிலியின் இரக்கம் இப்பாடலில் புலப்படுகின்றது. தலைவனைத் தழுவிய மார்பிற்கு தாயின் அணைப்பு வெறுப்பைத் தருவதாயிற்று. தலைவியின் இவ்வுணர்வு, ‘பயில்வு’ எனப்படும். “தலைவி, செவிலி முலையிடத்து துயில் வேண்டாது, வேறோர் இடத்தில் பயிறல்”, என இதனை நச்சினார்க்கினயர் விளக்குவர். (தொல்காப்பியம், கலவியல், 23) வேங்கை, காந்தள் ஆகிய மலர்கள், பகற்குறியில் தலைவன் சுட்டிய மலர்கள் என்றும், தலைவி இயல்பாகவே அம்மலர்களின் மணம் உடையவள் என்றும் இருவகையாகவும் பொருள் கொள்ளப்படும். தலைவி, ஆம்பள் மலரை விட தண்ணியளாய் இருந்த போதிலும், இரவு பொழுதில், அவன் நினைவினாள் ஏற்பட்ட உடல் வெப்பம் காரணத்தால் ‘வியர்த்தனென்’ எனக்கூறியதாகவும் கொள்ளலாம். தன்னைப் பிரிவதற்காகவே, தலைவி விலகிச்சென்றனள் என்பதை அப்பொழுது உணரவில்லையே எனச் செவிலி ஆற்றாலாயினாள்.

ஆஅய் வேல் என்பவன், கடையேழு வள்ளல்களில் ஒருவன் பொதியில் மலைத்தலைவன். இரவலற்கு வரையாது ஈபவன், அவன் நல்லாட்சியால் அவன் நாட்டில் பருவமழை பொய்யாது பெய்யும் என்பது ‘மழை தவழ் பொதியில்’ என்ற தொடரால் குறிக்கப்பட்டது.

ஆம்பல் மலரினும் தண்ணியள், கொடிய பாலையில் செல்ல நேர்ந்ததே எனச் செவிலி வருந்தினள் தன்னுடைய முதுகுப்புறம் படுத்துறங்கிக்கிடந்த தலைவியைப் பெயர்த்து, மார்புப் பகுதியால் முன்புறம் தழுவி உறங்கச் செய்த பொழுது, தலைவி அவ்வணப்பைப் பொறாது ‘வியர்த்தனன்’ எனக்கூறியதாகவும் பொருள் கொள்ளப்படும்.

சொற்பொருள்

முயங்குதல் - தழுவுதல்
பெயர்த்தனன் - மீண்டும்; அவளை தன் முகத்தை நோக்கி திரும்பி
துனி - வெறுப்பு
மழை - மேகம்
நாறி - மணம் வீசி

மேற்கோள்

“பிற்றை ஞான்று, தலைமகளது போக்கு உணர்ந்து
செவிலி மயங்கிப் பெரியதோர் கவலையளாய்
நெருநலை இவை செய்தது இது கருதிப் போலும்”
என்ரு கூறியது - இறையனார் களவியல் உரை, 23

“உடன் போக்கிய செவிலி கவன்று உரைத்தத” தொல்காப்பியம், அகத்திணையியல், 39 இளம்பூரணர்.

”குறுக வ்ந்து, குவவு நுதல் நீவி
மெல் எனத் தழீஇயினேன் ஆக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்பப்
பல்கால் முயங்கினள் மன்னே” அகநானூறு 49

”பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே” ஐங்குறுநூறு, 97

”நறுந் தண்ணீரல்” குறுந்தொகை, 70

”ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி” குறுந்தொகை, 62

“பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்கத் துயில் இன்னாதே” குறுந்தொகை 353

பொருள் முடிவு:

தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள், அது, துனி ஆகுதல், இனி அறிந்தேன்.

முனைவர் வி. நாகராசன் உரை

அவனுடன் போய்விட்டாள்

தழுவியபோது
வியர்த்தாள்.
ஏன் என்று அப்போது தெரியவில்லை!
இனி அறிந்தேன்,
ஆய் அரசனின்
மழை தவழும் பொதிய மலையின்
வேங்கை, காந்தள் மலர்களின்
மணம் கொண்டவள்
ஆம்பல் மலரின் குளிர்ச்சியுள்ளவள்.

சுஜாதா

பின்குறிப்பு - என் மச்சான் வாங்கிவந்த சங்கப்பாடல்களை படித்தமாதிரியும் இருக்கும் என்று நினைத்து எடுத்த குறுந்தொகைப் பாடல்களை முடிந்தவரை உரையுடன் தொகுக்க நினைத்தேன் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts