In Sci-fic சிறுகதை சினிமா சினிமா விமர்சனம்

தனித்தீவு - Science Fiction




ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் வரவழைத்தது. ஒரே மாதிரியான உணவு, உடற்பயிற்சி, இருபத்திநாலு மணிநேரமும் சக்திவாய்ந்த கேமிராக்களின் கண்காணிப்பு, கடந்த சில நாட்களாகவே அவனுக்கான அழைப்பு எப்பொழுது வருமென்ற ஏக்கம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.

சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.

இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.

ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.

உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”

“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.

“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,

“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”

அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.

சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களில் தீவிற்கு சென்றுவிடமுடியும்.

ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.

அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த தூக்கமாத்திரைகள் ஒழுங்காக வேலைசெய்யாததால் விழித்துக்கொண்ட ரவிவர்மன், பக்கத்து அறைகளுக்கு சென்று பார்த்த பொழுதுதான் இதுவரை தீவிற்குச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ராமசாமித்தாத்தா மயக்கமான நிலையில் ஒரு அறையில் இருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று பார்த்தபொழுதுதான் அவருக்கு ஆப்ரரேஷன் செய்யப்பட்டிருப்பதும் அதன் காரணமாய் அவர் இறந்துவிட்டிருந்ததும். இப்படியாக அடுத்தடுத்த அறைகளில் தீவிற்குச்செல்ல தேரந்தெடுக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட அனைவரும் இறந்துபோன நிலையில் அறைகளில் இருப்பது தெரிந்தது. அவனுக்கு விவரம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத்தெரிந்தது, அது அங்கிருந்து யாரும் தீவிற்குச்செல்லவில்லை. ஏதோஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்தது. ஒன்றையும் காணாதவனாக வந்து படுக்கையில் படுத்துக்கொண்டான். அடுத்தநாள் அவனை மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே மாற்றினார்கள். அங்கே சென்றதும் முதல் காரியமாய் ரவிவர்மன் உஷாவிடம் தான் பார்த்ததைச் சொன்னான்.

“ரவி உண்மையைத்தான் சொல்றீங்களா? நம்பவேமுடியலை. நம்மை கொலை செய்யவேண்டிய அவசியம்தான் என்ன இந்த விஞ்ஞானிகளுக்கு. அதுதான் புரியவில்லை.” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் அதிகமாய் பயந்துபோனாள்.

“அதுதான் எனக்கும் புரியவில்லை உஷா, இந்த விஷயமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை.” சிறிது யோசித்தவன் “உஷா இப்படி செய்தால் என்ன? நிச்சயமாய் அந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கேட்டால் என்ன.”

உஷாவிற்கும் ரவிவர்மன் சொன்ன திட்டம் சரியாகத்தோன்றியது. இருவரும் திட்டமிட்டு, கேமிராக்கண்கள் படாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார்கள். பின்னர் விஞ்ஞானிகளிலே கொஞ்சம் வயதான விஞ்ஞானியாய்ப் பார்த்து அந்த இடத்திற்கு சாமர்த்தியமாய் அழைத்துவந்தனர். அவர்கள் முன்பே பார்த்துவைத்த அந்த இடத்திற்கு வந்ததும் ரவி தன் வசம் இருந்த கத்தியை எடுத்து அந்த விஞ்ஞானியின் கழுத்தில் வைத்தான் பிறகு,

“இங்கப்பாருங்க இன்ன என்ன நடக்குதுன்னு மரியாதையா சொல்லீறுங்க இல்லைன்னா உங்களை நான் கொலை பண்ணீறுவேன்.” ரவிவர்மன் மிரட்ட முதலில் ஒன்றுமே தெரியாதவர் போல் நடித்த அந்த விஞ்ஞானி பின்னர் ரவிவர்மன் அவர் கழுத்தில் அந்தக் கத்தியால் மெலிதாய்க் கீறவும்.

“சொல்லீற்றேன், உங்கக்கிட்ட சொன்னமாதிரி பூமி அணுஆயுதப்போரால் அழியவில்லை, இருபத்திரண்டாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியாக, குளோனிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களைப் போன்றே ஒரு குளோனிங் மனிதனை இந்த தொழிற்கூடத்தில் உருவாக்க எங்கள் உதவியை நாடினர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் உறுப்புக்களில் பிரச்சனை வந்தால் உதாரணத்திற்கு, கிட்னியிலோ, இருதயத்திலோ, நுரையீரலிலோ, இல்லை கல்லீரலிலோ வந்தால் உங்களிடமிருந்து அதை எடுத்து அவர்ளுக்கு பொருத்தி சரிசெய்து கொள்வார்கள்.”

கொஞ்சம் இடைவெளிவிட்டு,

“இது போன்ற பணக்காரர்களின் ஜீன்களின் மாதிரி எங்களிடம் முன்பே உள்ளதால் அவர்களுக்கு இந்த வயதில் இந்த நோய் வரும் என்றுகூட முன்பே கணித்திருப்போம் பின்னர் உங்களை தீவிற்கு அனுப்புவதாய்ச் சொல்லி உங்களிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இதுதான் இங்கே நடந்துவருகிறது ஒரு வகையான ஆரம்பக்கட்ட முயற்சிதான் இது. பின்காலங்களில் உங்களை உருவாக்கி வளர்த்துவரும் செலவைக் குறைத்து இந்த திட்டத்தை அனைத்து மனிதர்களுக்கும் பயன்படச்செய்யும் முயற்சியின் முதல் கட்டம்தான் இது.”

“நாங்கலெல்லாம் மனிதர்கள் கிடையாதா? எங்களைக் கொல்வது குற்றமாகாதா?” ரவியின் கேள்வியில் வேகம் இருந்தது.

“இல்லை, நீங்கள் குளோனிங் மனிதர்கள், இன்னும் சொல்லப்போனால் பொருட்கள். அவ்வளவே உங்களை உருவாக்கி நாங்கள் விலைக்கு விற்கிறோம். இதில் தவறொன்றுமில்லை.” அந்த விஞ்ஞானி சொல்ல ரவிக்கு ஆத்திரமாய் வந்தது.

“உங்களுக்கெல்லாம் வீடு எங்கிருக்கிறது. இங்கிருந்து எப்படி வெளியே செல்வது.” ரவி கேட்க,

ஆரம்பத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல மறுக்க, ரவி அந்தக்கத்தியை சற்று ஆழமாக அவர் கழுத்தில் செலுத்துவதைப்போல் பாவனை செய்ய,

“இருக்கு, இது ஒரு ஆஸ்பிடல் மாதிரிதான், எங்களுக்கெல்லாம் வீடு தனியா இருக்கு. இங்கேர்ந்து எங்களுக்குரிய வேலை முடிந்ததும் வீட்டிற்கு போய்விடுவோம்.”

பின்னர் அந்த விஞ்ஞானியைப் பயன்படுத்தி ரவி, அந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற முயன்றான். அவரை அடித்து மயக்கமாக்கிவிட்டு அவருடைய பயனாளர் அட்டையை பயன்படுத்தி, அவர் குறிப்பிட்டிருந்த வழியில் வெளியேறினான். கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் அவன் கண்டுபிடிக்கப்படும் நிலையிருந்தும் சாமர்த்தியமாக வெளியேறினான். வெளியில் அவனுக்கான புது உலகம் ஆச்சர்யங்களுடன் காத்திருந்தது. அந்த மருத்துவமனையில் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்த ரவிவர்மனுக்கு பிறகுதான் தெரியவந்தது அவன் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனுடைய குளோனிங் என்பது அதனால் அவனை பேட்டியெடுக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் இந்த உண்மையைச் சொல்ல, இந்த குளோனிங் பிரச்சனை அந்த நாடாளுமன்றம் வரை சென்றது. பின்னர் ஒரு அவசர சட்டம் இயற்றி இனிமேல் இதுபோன்ற குளோனிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது அந்த நாட்டு நீதிமன்றம். அதே தயாரித்து வைக்கப்பட்டிருந்த குளோனிங்க மனிதர்களையும் உடனே அவர்களுக்கான ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவரச் செய்து வெளியில் விடச்சொல்லி உத்தரவிட்டது.
-------------------------------------

Related Articles

3 comments:

  1. உங்களுடைய பதிப்புக்கள் (கதைகள், படங்கள்) நன்றாக ரசிக்க கூடியதாக இருக்கின்றது. தமிழ் மிகவும் அழகாக வருகின்றது.

    ReplyDelete
  2. இந்த கதை நான் ஏற்கனவே எங்கேயோ படிச்சிரிக்கேன்... உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete

Popular Posts