Showing posts with label Sci-fic. Show all posts
Showing posts with label Sci-fic. Show all posts

In Sci-fic சிறுகதை சினிமா சினிமா விமர்சனம்

தனித்தீவு - Science Fiction




ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் வரவழைத்தது. ஒரே மாதிரியான உணவு, உடற்பயிற்சி, இருபத்திநாலு மணிநேரமும் சக்திவாய்ந்த கேமிராக்களின் கண்காணிப்பு, கடந்த சில நாட்களாகவே அவனுக்கான அழைப்பு எப்பொழுது வருமென்ற ஏக்கம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.

சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.

இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.

ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.

உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”

“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.

“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,

“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”

அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.

சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களில் தீவிற்கு சென்றுவிடமுடியும்.

ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.

அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த தூக்கமாத்திரைகள் ஒழுங்காக வேலைசெய்யாததால் விழித்துக்கொண்ட ரவிவர்மன், பக்கத்து அறைகளுக்கு சென்று பார்த்த பொழுதுதான் இதுவரை தீவிற்குச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ராமசாமித்தாத்தா மயக்கமான நிலையில் ஒரு அறையில் இருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று பார்த்தபொழுதுதான் அவருக்கு ஆப்ரரேஷன் செய்யப்பட்டிருப்பதும் அதன் காரணமாய் அவர் இறந்துவிட்டிருந்ததும். இப்படியாக அடுத்தடுத்த அறைகளில் தீவிற்குச்செல்ல தேரந்தெடுக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட அனைவரும் இறந்துபோன நிலையில் அறைகளில் இருப்பது தெரிந்தது. அவனுக்கு விவரம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத்தெரிந்தது, அது அங்கிருந்து யாரும் தீவிற்குச்செல்லவில்லை. ஏதோஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்தது. ஒன்றையும் காணாதவனாக வந்து படுக்கையில் படுத்துக்கொண்டான். அடுத்தநாள் அவனை மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே மாற்றினார்கள். அங்கே சென்றதும் முதல் காரியமாய் ரவிவர்மன் உஷாவிடம் தான் பார்த்ததைச் சொன்னான்.

“ரவி உண்மையைத்தான் சொல்றீங்களா? நம்பவேமுடியலை. நம்மை கொலை செய்யவேண்டிய அவசியம்தான் என்ன இந்த விஞ்ஞானிகளுக்கு. அதுதான் புரியவில்லை.” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் அதிகமாய் பயந்துபோனாள்.

“அதுதான் எனக்கும் புரியவில்லை உஷா, இந்த விஷயமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை.” சிறிது யோசித்தவன் “உஷா இப்படி செய்தால் என்ன? நிச்சயமாய் அந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கேட்டால் என்ன.”

உஷாவிற்கும் ரவிவர்மன் சொன்ன திட்டம் சரியாகத்தோன்றியது. இருவரும் திட்டமிட்டு, கேமிராக்கண்கள் படாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார்கள். பின்னர் விஞ்ஞானிகளிலே கொஞ்சம் வயதான விஞ்ஞானியாய்ப் பார்த்து அந்த இடத்திற்கு சாமர்த்தியமாய் அழைத்துவந்தனர். அவர்கள் முன்பே பார்த்துவைத்த அந்த இடத்திற்கு வந்ததும் ரவி தன் வசம் இருந்த கத்தியை எடுத்து அந்த விஞ்ஞானியின் கழுத்தில் வைத்தான் பிறகு,

“இங்கப்பாருங்க இன்ன என்ன நடக்குதுன்னு மரியாதையா சொல்லீறுங்க இல்லைன்னா உங்களை நான் கொலை பண்ணீறுவேன்.” ரவிவர்மன் மிரட்ட முதலில் ஒன்றுமே தெரியாதவர் போல் நடித்த அந்த விஞ்ஞானி பின்னர் ரவிவர்மன் அவர் கழுத்தில் அந்தக் கத்தியால் மெலிதாய்க் கீறவும்.

“சொல்லீற்றேன், உங்கக்கிட்ட சொன்னமாதிரி பூமி அணுஆயுதப்போரால் அழியவில்லை, இருபத்திரண்டாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியாக, குளோனிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களைப் போன்றே ஒரு குளோனிங் மனிதனை இந்த தொழிற்கூடத்தில் உருவாக்க எங்கள் உதவியை நாடினர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் உறுப்புக்களில் பிரச்சனை வந்தால் உதாரணத்திற்கு, கிட்னியிலோ, இருதயத்திலோ, நுரையீரலிலோ, இல்லை கல்லீரலிலோ வந்தால் உங்களிடமிருந்து அதை எடுத்து அவர்ளுக்கு பொருத்தி சரிசெய்து கொள்வார்கள்.”

கொஞ்சம் இடைவெளிவிட்டு,

“இது போன்ற பணக்காரர்களின் ஜீன்களின் மாதிரி எங்களிடம் முன்பே உள்ளதால் அவர்களுக்கு இந்த வயதில் இந்த நோய் வரும் என்றுகூட முன்பே கணித்திருப்போம் பின்னர் உங்களை தீவிற்கு அனுப்புவதாய்ச் சொல்லி உங்களிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இதுதான் இங்கே நடந்துவருகிறது ஒரு வகையான ஆரம்பக்கட்ட முயற்சிதான் இது. பின்காலங்களில் உங்களை உருவாக்கி வளர்த்துவரும் செலவைக் குறைத்து இந்த திட்டத்தை அனைத்து மனிதர்களுக்கும் பயன்படச்செய்யும் முயற்சியின் முதல் கட்டம்தான் இது.”

“நாங்கலெல்லாம் மனிதர்கள் கிடையாதா? எங்களைக் கொல்வது குற்றமாகாதா?” ரவியின் கேள்வியில் வேகம் இருந்தது.

“இல்லை, நீங்கள் குளோனிங் மனிதர்கள், இன்னும் சொல்லப்போனால் பொருட்கள். அவ்வளவே உங்களை உருவாக்கி நாங்கள் விலைக்கு விற்கிறோம். இதில் தவறொன்றுமில்லை.” அந்த விஞ்ஞானி சொல்ல ரவிக்கு ஆத்திரமாய் வந்தது.

“உங்களுக்கெல்லாம் வீடு எங்கிருக்கிறது. இங்கிருந்து எப்படி வெளியே செல்வது.” ரவி கேட்க,

ஆரம்பத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல மறுக்க, ரவி அந்தக்கத்தியை சற்று ஆழமாக அவர் கழுத்தில் செலுத்துவதைப்போல் பாவனை செய்ய,

“இருக்கு, இது ஒரு ஆஸ்பிடல் மாதிரிதான், எங்களுக்கெல்லாம் வீடு தனியா இருக்கு. இங்கேர்ந்து எங்களுக்குரிய வேலை முடிந்ததும் வீட்டிற்கு போய்விடுவோம்.”

பின்னர் அந்த விஞ்ஞானியைப் பயன்படுத்தி ரவி, அந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற முயன்றான். அவரை அடித்து மயக்கமாக்கிவிட்டு அவருடைய பயனாளர் அட்டையை பயன்படுத்தி, அவர் குறிப்பிட்டிருந்த வழியில் வெளியேறினான். கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் அவன் கண்டுபிடிக்கப்படும் நிலையிருந்தும் சாமர்த்தியமாக வெளியேறினான். வெளியில் அவனுக்கான புது உலகம் ஆச்சர்யங்களுடன் காத்திருந்தது. அந்த மருத்துவமனையில் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்த ரவிவர்மனுக்கு பிறகுதான் தெரியவந்தது அவன் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனுடைய குளோனிங் என்பது அதனால் அவனை பேட்டியெடுக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் இந்த உண்மையைச் சொல்ல, இந்த குளோனிங் பிரச்சனை அந்த நாடாளுமன்றம் வரை சென்றது. பின்னர் ஒரு அவசர சட்டம் இயற்றி இனிமேல் இதுபோன்ற குளோனிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது அந்த நாட்டு நீதிமன்றம். அதே தயாரித்து வைக்கப்பட்டிருந்த குளோனிங்க மனிதர்களையும் உடனே அவர்களுக்கான ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவரச் செய்து வெளியில் விடச்சொல்லி உத்தரவிட்டது.
-------------------------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Sci-fic சிறுகதை

பிரதிகளின் அரசியல்

நான் பிரதிகளைக் கொளுத்திக் கொண்டிருந்த பொழுது பிடிபட்டேன். எல்லாம் தொடங்கிய நாளில் நான் தான் "இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன்" என்று கூறி 'சோழர்கள்' பிரதிக்குள் இருந்து குதித்தவன் நல்லவேளை வாள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிரதிக்குள் இருந்து வெளிவந்த கதையை ஆதித்தன் சொல்லத்தொடங்கினான் காலம் தன் கைகளை பறவையொன்றின் இறகுகளாய் மாற்றி பறக்கத் தொடங்கியது. காலயந்திரத்தின் பற்சக்கரக் காலத்தையொட்டியது, பிரதிகளில் உலர்ந்து போன மனிதர்களை மீண்டும் உருவாக்கும் ஆராய்ச்சி என்றான் ஆதித்தன். உலக மொழிகள் அத்தனையில் எழுதப்பட்ட பிரதிகளில் இருக்கும் மனிதர்கள் எல்லோரையும் தீண்டிச் செல்லும் அளவிற்கு இந்த ஆராய்ச்சி விரிவாக உலக நாடுகள் அனைத்தாலும் செய்யப்பட்டது என்றும் ஆனால் ஓரளவு வெற்றி பெற்ற நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாமல் கரை காணும் ஆவலில் தொடர்ச்சியாய் மூழ்கியதாகவும், கரை கண்ட தமிழகத்து விஞ்ஞானி தன்னை பிரதியில் இருந்து வெளியேற்றியதைச் சொன்னான்*. இப்படி வெளியேற்றப்பட்ட விஷயமறிந்த விஞ்ஞானியின் தாயாதி ஒருவன் இந்த விஷயத்தை அமேரிக்க உளவுப் பிரிவினருக்கு விற்றுவிட அவர்களால் ஆதித்தன் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு அமேரிக்காவில் வைத்து தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறான். அப்படித்தான் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் தன்னைப் பற்றிய கதைகளை அறிந்து கொண்டதாக என்னிடம் கூறினான். தொடர்ச்சியான அவர்களுடைய பயிற்றுவித்தல்களின் காரணமாயும் அவர்கள் அவன் எப்படி பிரதியில் இருந்து வெளியில் வந்தான் என்பதை அறியும் பொருட்டு நடத்திய, அவனுக்கும் தெரிந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளாலும் பிரதிகளில் உலாவும் வித்தையை அறிந்ததாகவும் ஒருமுறை அவர்களிடம் இருந்து தப்பித்து பிரதிகளில் உலாவிக் கொண்டிருந்ததையும் பின்னர் தானாய் பிரதியில் இருந்து வெளியேறும் வித்தையை அறிந்து கொண்டு என் முன் நிற்பதாயும் சொன்னான்.

நான் கைகளைக் கிள்ளிக் கொண்டு நான் கண்டு கொண்டிருப்பது கனவில்லையென்றும், ஆறடி உயரம் ஆஜானுபாகமாய் என் முன் தோள் வரை நீண்ட அளகபாகத்தைக் காட்டியபடி நிற்பது உயிரும் உடம்புமாய் உண்மையான ஒரு மனிதன் தான் என்றும் புரிந்து கொண்டேன். ஆதித்தன் என்னிடம் தான் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் என்றும் பிரதிகளில் அதிகம் உலவினால் கண்டுகொள்ளப்படும் சாத்தியம் உண்டென்றும் வார்த்தைகளைக் கொண்டு பிரதிகளில் விரித்திருக்கும் வலையில் விழுந்து மீண்டும் அமேரிக்கர்கள் கையில் சிக்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்றான். நான் அவனை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன், சோழ தேசத்தின் அரசர்களில் ஒருவன் என்முன்னால் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். இடுப்பில் மட்டும் ஆடையணிந்திருந்த அவன் தேகம் எங்கும் தழும்புகள், கருத்த உடம்பில் பளீரென்று தெரிந்தன. நான் அவனை என் வீட்டில் தங்க அனுமதித்திருந்த காலங்களில் போதை ஏற்றியவன் போல் தொடர்ச்சியாய் புலம்பிக் கொண்டேயிருந்தான். தன்னைக் கொன்றது அருண்மொழித்தேவன் தான் என்றும் குந்தவையும் வந்தியத்தேவனும் அதற்கு உடந்தை என்றும் சொன்னான். பின்னர் இன்னொரு பொழுதில் அருண்மொழி பற்றிக் கூறியவைகள் அமேரிக்கர்களால் தன் மனதில் ஏற்றிவிடப்பட்டவை என்றும் தன்னைக் கொன்றது மதுராந்தகன் தான் என்றும் கூறினான்.

தொடர்ச்சியான பொழுதுகளில் அவன் பேசுவதில் எது உண்மையானது எது அவன் கற்பனை செய்து சொல்வது எது அமேரிக்கர்களால் அவன் மனதில் திணிக்கப்பட்டது என்று பொருள் உணர்வது பெரும் சங்கடமாய் இருந்தது. நான் அகிலா கதைகள் அறுபத்தைந்தை எழுதிக் கொண்டிருந்தேன், அவன் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதற்கான ப்ராயச்சித்தமாக என் கதைகளின் நாயகி அகிலாவை உருவாக்கித் தருவதாக வாக்களித்திருந்தான். நான் எழுதியிருந்த அதுவரையிலான அகிலா கதைகளை அவனிடம் கொடுக்க, முதிர்ச்சியில்லை என்றும் இன்னும் எழுதிக் கொடு என்றும் சொன்னான். நீ எழுதும் வாக்கியங்கள் உபயோக்கிக்கும் சொற்கள் அளிக்கும் அர்த்தங்கள் தான் அகிலாவை உருவாக்கும் என்றும் அவள் எப்படி வரவேண்டும் என்பது உன் கதைகளின் வரிகளில் இருக்கிறது என்றான். நான் க்ளோனிங்கின் மூலம் க்ரோமோசோம்களை எடுத்து உயிர்களை உருவாக்குவது போல் பிரதிகளில் இருந்து உயிர்க்காரணியை எடுத்து அதன் மூலம் மனிதர்களை உருவாக்கும் முறையை அவன் சொல்லி புரிந்து கொண்டேன். ஆதித்தன் க்ளோனிங்கை விடவும் இது மேலானது என்றும் குழந்தையாக இல்லாமல் இதில் மனிதர்களையே உருவாக்க முடியும் என்றும் ஆனால் அவர்கள் பிரதிகளில் இருந்து பிறந்தவர்கள் என்பதால் மனிதர்களைவிடவும் வேகமாக பிரதிகளில் ஊடாட முடியும் என்றும் அதனால் அவர்கள் வெகு எளிதில் நிறைய கற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்லியிருந்தான்.

அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டு மீண்டும் வரும் வேளைகளில் பெரும்பாலும் நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருந்தது அதுவும் சோழர்களைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவராய் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். ஆரம்பத்தில் என்னால் ஊகிக்க முடியாத அளவிற்கு நடந்த இக்கொலைகளை நான் கண்டறிந்தது சோழர்களைப் பற்றி பெரும் புனைவுகளை எழுதியவர் ஒருவரை ஆதித்தன் கொன்ற பொழுதுதான். ஆதித்தன் என்னிடம் எதையும் மறைக்கவில்லை வரலாற்றில் சாணி பூசுபவர்களால் ஏற்படும் பாதிப்பு பிற்காலங்களில் சாணி தான் வரலாறு என்பது போல் மாற்றமடைகிறது என்றவன் இதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்று கூறி, அகிலா கதைகள் எப்படி வருகிறது என்று கேட்டான். நான் எழுதியதைக் காட்ட அகம் பற்றி இன்னமும் விவரம் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான், பெரும்பாலும் பிரதிகளுடனே வாழ்ந்து வந்த அவன் இன்னொரு பிரதியில் மூழ்கிப்போனான். நான் அகிலாவை அகத்தில்** நகர்த்திக் கொண்டிருந்தேன்.

அகிலாவை உருவாக்கித் தரும் நாளுக்காக நான் காத்திருந்தேன், அகிலா கதைகள் எழுதி முடித்த நாளிலிருந்து ஆதித்தனை நச்சரிக்கவும் தொடங்கியிருந்தேன். தொடர்ச்சியாய் ஒரு நாள் ஆதித்தன் என் கண் முன்பே பிரதிகளில் இருந்து வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் எடுத்து மாற்றிப் போட்டு அகிலாவை உருவாக்கத் தொடங்கினான். கடைசியில் மொத்தக் கதைகளில் இருந்தும் அகிலாவை உருவாக்கி அவன் பிரதியில் இருந்து வெளியேற்றிய பொழுது எனக்கு என் கதை நாயகி ஆச்சர்யத்தைத் தந்தாள். நான் எழுதிய கதைகளின் மொத்த உருவாக்கமாய் உருவமாய் அகிலா என் முன்னே நின்று கொண்டிருந்தாள். நாங்கள் காதலில் காமத்தில் மிதந்தோம் ஆதித்தன் கொலை செய்து கொண்டிருந்தான். காதல் மீறிய காமம் பதிப்பாய் அகிலா கதைகள் அறுபத்தைந்தில் வந்த பொழுது தான் நான் எழுதியதிலிருந்து மாறுபட்டிருந்த பிரதியைப் பற்றிய விவரம் தெரிந்தது. ஆதித்தனைப் பற்றிய வரிகளும் அகிலா சொல்லும் இரண்டாம் தடவையைப் பற்றிய விவரங்களும் நான் எழுதியதில் கிடையாது. ஒட்டு மொத்தமாய் அகிலா கதைகள் அனைத்திலும் ஆதித்தனைப் பற்றிய நேரடியான விவரங்களோ அல்லது மறைமுக விவரங்களோ தொகுக்கப்பட்டிருந்தது.

அகிலா தொடர் உரையாடல்களாலும் படிப்பாலும் கேள்வியாலும் வளர்ந்து கொண்டிருந்தாள், அவளுக்கு பிரதிகளின் மூலமாக ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் என்னிடம் உரையாடுவதில் பிரச்சனையிருந்ததில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே ஆதித்தனை வெறுத்து வந்த அவள் ஒருநாள் ஆதித்தனைக் கொல்லும் திட்டத்தைச் சொன்ன பொழுது தான் எனக்கு அவள் எவ்வளவு வெறுத்துவந்தாள் என்று தெரிந்தது. பிரதிகளின் மூலமாய் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள ஆதித்தன் முயற்சிக்கிறான் என்பதை அவள் அகிலா கதைகள் அறுபத்தைந்தில் - காதல் மீறிய காமத்தின் மூலமாக நிரூபித்தாள், ஆனால் ஆதித்தன் அகிலா உருவாக்கத்திற்காகத்தான் பிரதியில் மாற்றம் செய்ய வந்தது என்று ஒற்றைக் காலில் நின்றான். பின்னர் நேரடியாய் அகிலாவும் ஆதித்தனும் சண்டையில் இறங்க ஆரம்பிக்க ஆதித்தன் சோழர்களைப் பற்றிய பொல்லாத பிரதிகளை ஒழித்த பிறகு தான் பிரதிக்குள் மறைந்து போய்விடுவதாகவும் அதற்கு கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று சொன்னதில் இருந்து பத்தாவது நாள் அகிலா ஆதித்தனைக் கொலை செய்திருந்தாள். சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தூங்கிப் போனதும் இதயப்பகுதியில் கத்தியொன்றைச் சொருகி அவனைக் கொன்றிருந்தாள்.

ஆதித்தன் இறந்து போன சில நாட்களின் நான் என்னில் ஆதித்தனை உணரத் தொடங்கினேன், கடைசியில் அகிலா கொன்றது என்னைத்தான் ஆதித்தனை அல்ல என்று புரிய வந்த பொழுது நான் இல்லாமல் போயிருந்தேன். ஆனால் என் கொலையைப் பற்றி வேறு வேறு கருத்துக்கள் இருப்பதை நானொரு முறை பிரதியில் இருந்து வெளியேறிய பொழுது தெரிந்து கொண்டேன், அந்தப் பிரதிகள் அனைத்தையும் கொளுத்திக் கொண்டிருந்த பொழுது பிடிபட்டேன்.

1. அமேரிக்க சதி
2. அகிலாவின் அண்ணன் சதி
3. சுயவதை அல்லது தற்கொலை முயற்சி

* ரகசிய உலகங்கள் சொற்களால் பின்னப்பட்டு எழுத்துக்களால் உருவாகி பிரதிகளில் மறைக்கப்பட்டிருந்ததை வெளிக்கொண்டு வரும் ஆராய்ச்சியில் தலைமுறை தலைமுறையாக இயங்கி வந்த தஞ்சாவூர் ஜில்லா பெரியசாமி நாயக்கர் பரம்பரையின் எட்டாவது தலைமுறையில் காலங்காலமாக அவர்கள் மறைத்துவைத்து பத்திரப்படுத்தி வந்த பிரதியொன்றின் சொற்றொடர்கள் கட்டப்பட்டிருக்கும் சூத்திரங்களைக் கணித்து - அந்த கணக்குப் படி ரகசியப் பிரதியின் ஒரு பக்கத்தில் இருந்து எட்டு வார்த்தைகள் என்ற முறையில் எடுத்து திருப்பி எழுதி அந்த திருத்தி எழுதிய பிரதியில் கட்டப்பட்டிருக்கும் சூத்திரத்தை உடைத்து மண்ணில் புதைத்து வைத்திருக்கும் மற்றொரு பிரதியை எடுத்து என்று தொடர்ச்சியாக நீண்டு கொண்டேயிருந்த இந்த பிரதி கட்டுடைத்தல் விளையாட்டு மொத்தமாக முடிவுற்ற பொழுது, பரம்பரையின் முதல் நாயக்கர் ஆசைப்பட்ட படி ஆதித்த கரிகாலன் என்று பிற்காலத்தில் பிரதிகள் அழைத்து வந்த - 'இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன்' கட்டுக்களில் இருந்து வெளிப்பட்டான்.

**அகஅ - காதல் மீறிய காமம்

"கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள். விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்யச் சொல்லி அனுப்பியிருந்தாள், நான் நண்பனின் வீடு ஒன்று காலியாக இருப்பதைச் சொல்லி அங்கே அவளை வரச் சொல்லியிருந்தேன். எங்களிருவரிடமும் முன்பு யார் முதலில் இதைப் பற்றி பேசுவது என்ற தயக்கம் இருந்தது போல், இத்தனை தூரம் வந்த பிறகு யார் முதலில் பின்வாங்குகிறார்கள் என்ற போட்டி உருவானது.

நண்பன் ஒருவன் வேலை விஷயமாக அமேரிக்கா சென்றிருந்தான், தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்ட வீடு. வாரத்திற்கு ஒரு முறை வரும் வேலைக்காரன் அவற்றை சுத்தம் செய்துவிடும் காரணத்தால் புதிதாய் இருந்தது. பெங்களூரில் அந்த இடத்தில் சொந்த வீடு என்பது கோடிகளில் இருக்கும் என்று தெரிந்து தான் இருந்தது, அந்த வீட்டை என்னை நம்பி உபயோகிப்பதற்காகக் கொடுத்த நண்பனுக்கு நான் இப்படி உபயோகிக்கப்போகிறேன் என்கிற விஷயமும் தெரியும். நான் ஒரு பாதுகாப்பிற்காக அவனிடம் சொல்லி வைத்திருந்தேன். நாகரீகமறிந்த அவன் மேல் கேள்விகள் கேட்காமல் 'என்ஜாய் மாடி' என்று முடித்துக் கொண்டான். நான் ஆதித்தனிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், அவன் ஜாக்கிரதை என்று மட்டும் சொன்னான். ஆதித்தன் பிரதியில் இருந்து உருவாகி வெளிவந்து உலாவிக் கொண்டிருந்ததை நான் அகிலாவிடம் மட்டும் சொல்லியிருந்தேன். அவளும் ஆதித்தனிடம் ஜாக்கிரதை என்று சொல்லியிருந்தாள்.

கருப்பு நிற சேலையணிந்து வந்திருந்தாள் அன்று, மதியம் போலவே வந்தவள் எதாயிருந்தாலும் ஆதவன் மேற்கே போனதற்கு அப்புறம் தான் என்று சொல்லி வைத்திருந்தாள். மதிய உணவும் சமைத்துத் தந்தாள், நாங்கள் இரவில் தொடங்கப்போகும் மாயவிளையாட்டிற்கான ஒத்திகைகளில் மிக மென்மையாக இறங்கத் தொடங்கினோம். நான் அவளிடம் அதைப் பற்றி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவள் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டரில் "கபி அல்விதா நா கெஹ்னா" படம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கி உட்கார்ந்தேன் அவள் சீரியஸாய் படம் பார்க்கத் தொடங்கினாள்.

"உனக்கு இதைப் பற்றி முன் அனுபவம் எதுவும் இருக்கா?'

திரும்பி முறைத்தாள்.

"முன் அனுபவம் 'மான்னெ' படிப்பு, கேள்விப்படுதல் இப்படிக் கேட்டேன் தப்பா நினைக்காத!" சட்டென்று பேச்சு வழக்கில் வரும் ஹிந்தியும் சேர்ந்து கொண்டு வந்து குதித்தது.

"சாருக்கு இதில் அனுபவம் ஜாஸ்தியோ?!"

நான் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு "இதுதான் முத தடவ!" என்றேன்.

அவள் சிரித்தபடியே "நான் நம்பலை" என்றவள் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.

பேசியவாறே நான் தொடுதலைத் தொடங்க, விளக்கணைக்கச் சொல்லி வற்புறுத்தியவளிடம் மறு வார்த்தை பேசவில்லை. அவளுக்காய்ச் சொல்லாமல் உண்மையிலேயே முன் அனுபவம் இல்லாதது சிக்கலாய்த்தான் இருந்தது, ஒன்றிற்கு இரண்டாய் நிரோத் அணியச் சொன்ன காரணம் புரியவேயில்லை கடைசி வரையில். இடையில் விஷயம் புரியாமல் தெரியாமல் வேதனையில் வலியில் நிறுத்திவிட எத்தனித்து பின்னர் ஒரு வழியாய் 'சீ' என்று முடிந்ததும் நான் தூங்கிப் போனேன். காலையில் அகிலா இரண்டாவது தடவையே தேறிட்டீங்களே என்று சொன்னது சத்தியமாய் விளங்கலை, அவள் உங்க உடம்பெல்லாம் தழும்பாய் இருப்பது போல் இருந்தது. காலையில் பார்த்தேன் அப்படி ஒன்னும் இல்லை என்னமோ மாயை என்றாள் எனக்கு அதுவும் புரியலை.


1. அமேரிக்க சதி

அமேரிக்க உளவாளியான 5152256 தான் ஆதித்தனாக வந்தது என்றும், அமேரிக்கா அப்பொழுது கண்டறிந்திருந்த புதுவகை க்ளோனிங் முறையை டெஸ்டிங் செய்வதற்காகத்தான் அத்தனையும் நடந்தது என்றும் இறுதியில் நான் இந்த விஷயத்தைக் கண்டறிந்து விட்டதாலேயே கொல்லப்பட்டதாய் நீண்டது ஒரு பிரதி.

2. அகிலா அண்ணன் சதி

ஒன்றும் தெரியாத அகிலாவை பொய்கள் பல சொல்லி ஏமாற்றி கெடுத்தவிட்டதாயும் அதற்கு காரணமான என்னைக் கொல்வதற்காக ஆதித்தன் என்ற பெயரில் ஒருவனை அகிலாவின் அண்ணன் அனுப்பியதாகவும் அவனால் தான் நான் கொல்லப்பட்டேன் என்றும் நீண்டது ஒரு பிரதி.

3. சுயவதை அல்லது தற்கொலை முயற்சி

ஆதித்த கரிகாலன் பற்றிய தேடல்கள் என்னை பைத்தியமாய் ஆக்கிக் கொண்டிருந்த நாளொன்றில் அகிலாவிடம் காமம் யாசிக்க அவள் பலர் முன்னிலையில் என் தலையில் ஆப்பிள் ஜூஸைக் கொட்டிவிட்டுச் சென்றதால் விரக்தியடைந்து நான் தற்கொலை செய்து கொண்டதாகவும். அதற்கு முன்னர் ஒரு அறிவியல் புனைகதைப் போட்டிக்காக இந்தப் பிரதியை எழுதியதாகவும் நீண்டது இன்னொரு பிரதி.

Read More

Share Tweet Pin It +1

22 Comments

In Sci-fic சிறுகதை

déjà vu

மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக மட்டும் அவன் இந்த நாளுக்காக காத்திருக்கவில்லை. அவன் செய்த கொலையையே இல்லாமல் செய்துவிடும் வல்லமை பெற்ற நாள்தான் என்பதற்காகவும்தான்.

இன்னும் அந்த நாள் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது. அவனுடைய நண்பனுக்கும் அவனுக்குமிடையில் ஏற்பட்ட தொழில்முறை பிரச்சனைகளின் காரணமாக, ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மோகன் அவன் நண்பனை கொன்றுவிட்டான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நிமிட குழப்பத்தில் அவன் அந்தக்கொலையை செய்துவிட்டான். அணுஆயுதப்போரால் உலகமே பேரழிவுக்கு உட்பட்டிருந்த காலமது. உயிரின் மதிப்பு மிக அதிகமாகயிருந்தது. அவனுடைய நண்பன் அவனை ஏமாற்றியிருந்த பொழுதும் அது சரிவர நிரூபிக்கப்பட்ட பொழுதும் அவனுக்கு ஏழாண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மனித குலமே அழிவின் பிடியில் இருந்ததால், உலகின் எல்லா நாடுகளிலுமே மரணதண்டனை இல்லாமல் இருந்தது.


முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று மோகன் படித்திருந்த உலகப்போர்கள் நடந்துமுடிந்த மூன்றாவது நூற்றாண்டில் பூமியை பெரும் ஆபத்திற்குள்ளாக்கிய அணுஆயுதயுத்தம் நடைபெற்றது. ஒரு நூற்றாண்டாகவே எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் நடந்தது பலருக்கு வியப்பை அளித்திருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கணிணித்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஐன்ஸ்டினின் புவியீர்ப்பு விசையையும், க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறியும் ஆசை நிறைவேறியிருந்தது. க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வந்திருந்தன.


ஸ்டிரிங் தியரி என அறியப்படும் பல பரிமாணக் கொள்கை அதன் எல்லைகளைத் தொட்டிருந்த காரணத்தினால், வார்ம்ஹோல் எனப்படும் மனிதன் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் உதவும் இயந்திரங்கள் உருவாக்கபட்டிருந்தன. இதன் காரணமாக ஐன்ஸ்டனின் சில கோட்பாடுகள் தவறானவை என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தன. அதாவது விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்ன ஐன்ஸ்டின் விண்வெளியை நீட்டவோ மடக்கவோ முடியுமென்றார். ஆனால் விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதென்பது முடியாதென்று நம்பியிருந்தார். ஆனால் ஸ்டிரிங் தியரி விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபித்திருந்தது. நாம் சாதாரணமாய் அறிந்திருந்த முப்பரிமாணங்களை விடவும் அதிகமான பரிமாணங்களாலும் நாம் இதுவரை அறிந்திராத இடங்களாலும் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதான ஒன்றை ஸ்டிரிங் தியரி விளக்கியது.


கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் ஊர்திகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் துணை கொண்டு வரலாற்றை மாற்ற நினைக்கும் முயற்சிகளை அடியோடு நிறுத்திவிடும் எண்ணத்தால் இதன் அத்தனை செயல்பாடுகளும் கணிணிமனிதர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற பரீட்சிதார்த்த முயற்சிகள் உட்பட்ட, மனிதனால் நடைபெறக்கூடிய சிறு தவறுகளும் நடைபெற்று விடாமல் இருப்பதற்காக கணிணிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வரலாறு மாற்றப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சோதனை முயற்சியாக கொலைகள் நடந்து அதற்கான தண்டனையை கொலைசெய்த நபர் அனுபவித்துவிட்ட நிலையில் கடந்த காலத்திற்கு செல்லும் ஊர்திகளைப் பயன்படுத்தி அந்த கொலை நடந்ததற்கு சில விநாடிகளுக்கு முன்னர் சென்று அந்தக் கொலைகளை நிறுத்திவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுவந்தன. ஆனால் இதிலும் சில விதிமுறைகள் இருந்தது, அதாவது கொலை செய்த மனிதனின் மனதிலிருந்து, அவன் கடந்த காலத்தில் கொலை செய்த அந்த நொடியிலிருந்து சோதனை முயற்சிக்கான காலம் வரையிலான நினைவுகள் அகற்றப்படும். அவன் அந்தக்கொலை செய்த குறிப்பிட்ட நிமிடத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தானோ அதே மாதிரியான ஒருமனநிலையை அவர்கள் உருவாக்குவார்கள்.


வரலாற்றை தாங்களாகவே மாற்றாமல் அந்த மனிதனின் மனம் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் தானாகவே மாறி கொலை செய்வது தடுக்கப்படுகிறதா? இரண்டாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கொலை செய்யாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவந்தது. அப்படி அந்த சூழ்நிலையில் கொலை செய்யாமல் இருந்தால் அவர் அந்த நொடியிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் வாழலாம். அப்படியில்லாமல் மீண்டும் கொன்றுவிட்டால், அவர் தண்டனைக்காலம் முடிந்த நொடியிலிருந்து தன் வாழ்க்கையை தொடரலாம். இதனுடைய ஒரே பயனாக அந்த கொலை செய்த நபரின் சமுதாய மதிப்பு மாற்றப்படும். அதாவது அவர் கொலை செய்யாதவராக சமூகத்தில் மீண்டும் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலை அமையும்.


ஆனால் இதுவரை ஏறத்தாழ ஆயிரம் மனிதர்களிடம் நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை எவருமே மீண்டும் அந்தக்கொலையை செய்யாமல் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொலையாளியும் அந்த முயற்சியை செய்யவே விரும்பினர், மோகனைப்போல.


"நீங்கள் சோதனை முயற்சிக்குத் தயாரா?" கணிணிக்காவலர்கள் கேட்டதும், ஒருவழியாய் மீண்டும் சுயநினைவிற்கு வந்தான் மோகன்.


அவன் தயார் என்று சொல்ல அந்த கணிணிக்காவலர்கள் மோகனை வார்ம்«?£ல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மோகன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். அந்த முயற்சி இதுவரை வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் கூட அவன் முழுமனதாக தான் அந்த கொலையை மீண்டும் செய்துவிடமாட்டோம் என்று நம்பினான்.


அதற்காக அவன் தீவிரமான மனப்பயிற்சி எடுத்துவந்தான். தன்னுடைய நினைவை அவர்கள் அழித்துவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் மனதை ஒருவிதமாகப் பக்குவப்படுத்திவிட்டால் அந்த கொலைசெய்யும் நேரத்தில் மனமானது அன்னிச்சையாக கட்டுப்பட்டுவிடும் என்று நினைத்திருந்தான். இதற்காக அவன் இது போன்ற ஒரு சோதனை முயற்சி செய்கிறார்கள் எனத்தெரிந்த நாளிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். மோகனை பொறுத்தவரை அவன் கொலை செய்தது சற்றும் எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. சூழ்நிலைக்கைதியாக அவன் அன்று கொலை செய்துவிட்டான் ஆனால் இன்னொறு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கொலை நிச்சயமாக நடக்காது என்று அவன் மனம் கணக்குப்போட்டது.


மோகன் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சிறை நிர்வாகத்திற்கே தெரிந்திருந்தது. அவர்களுக்கும் ஒருவாறு இந்தமுறை அவன் நிச்சயமாய் சூழ்நிலையை வென்றுவிடுவான் என்றே தோன்றியது. அப்படி அவன் வென்றுவிட்டால் வரலாற்றை மாற்றிய முதல் மனிதன் என்ற பெயர் அவனுக்குக் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அரசாங்கம், சிறை நிர்வாகம், கடந்த காலத்திற்கு செல்வது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அனைவருமே ஒருவாறு இந்த நாளுக்காக காத்திருந்தனர். அவன் அப்படி சூழ்நிலையை வென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி கடந்த சில மாதங்களாகவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். கேயாஸ் தியரியின் படி ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கூட பெரும்மாற்றத்தை உருவாக்கிவிடும் சூழ்நிலையில் அந்த கொலை இல்லாமல் போனால் என்னாகும் என்பதற்கான ஆராய்சிகள் தீவிரமாக நடந்துவந்தது.


அந்த சோதனை முயற்சியின் பொழுது இரண்டு கணிணிமனிதர்கள் அவனுடன் கடந்த காலத்திற்கு வருவார்கள். அவன் அந்த கொலையை மீண்டும் செய்துவிட்டால் மீண்டும் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவரும் பொறுப்பு அவர்களுடையது. இதுவரை நடந்த முயற்சிகள் அனைத்திலும் இது சற்றும் தவறில்லாமல் நடந்துள்ளது. கணிணி மனிதர்கள் மோகனை அழைத்துக்கொண்டு வார்ம்«?£லிற்கு வந்திருந்தார்கள். அந்த வார்ம்«?£லின் ஒரு பகுதியை அதிநுட்பம் வாய்ந்த விண்வெளி ஊர்தியின் மூலமாக ஒளியின் வேகத்திற்கு முடுக்கிவிடப்பட்டு பின்னர் சாதாரணமான நிலைக்கு வரும், இப்பொழுது கிடைக்கும் நேரயிடைவெளியின் பயனாய் மற்றொரு பக்கம் இருக்கும் மோகன் பழங்காலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.


இவ்வாறாக மோகனும் அந்த இரண்டு கணிணி மனிதர்களும் கடந்த காலத்திற்கு வந்திருந்தனர். மோகனின் நினைவுகள் அந்த நிமிடம் வரை மட்டும் விட்டுவிட்டு மற்றவை முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. மோகனைப்பொறுத்த வரை நிகழ்காலத்திற்கு வந்திருந்தான், அவனுக்கு மற்ற சம்பவங்கள் முற்றிலுமாக நினைவில் இல்லை. கோபமாக தன்னை ஏமாற்றிவிட்ட நண்பனை பழிதீர்ப்பதற்காக, அவனுடைய அடுக்கு மாடி குடியிறுப்பை நெருங்கிக் கொண்டிருந்தான். மோகன் நிச்சயமாய் அவனுடைய நண்பன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்டிருந்த நஷ்டத்தை அவனால் பலகாலம் கடுமையாக உழைத்தாலும் அடைக்க முடியாதென்பது நன்றாகத் தெரிந்துவிட்டது.


நண்பனுடைய அறைக்குள் நுழைந்தவன் நேராய் அவன் கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் காட்டினான்.


"ஏன் என்னை ஏமாத்தின, உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன் தெரியுமா?" அவன் கேட்க நண்பனால் பதிலெதுவும் சொல்லமுடியவில்லை.


"என்னை மன்னிச்சிறு மோகன், தெரிஞ்சு நான் இதை செய்யலை. நான் போட்டிருந்த கணக்குகள் தப்பாயிடுச்சி. இன்னும் ஒரு வருடம் டைம் கொடு எல்லாவற்றையும் சரிசெய்து தர்றேன்." அவன் சொல்லிக் கொண்டிருக்க மோகனுடைய கோபம் அளவுக்கதிகமாகியது. தன்னை தெரிந்தே ஏமாற்றியது மட்டுமில்லாமல் இவ்வளவு நடந்தபிறகும் தன்னிடம் நடிக்கிறானே என்று நினைத்தவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்தான்.


"உன்னையெல்லாம் மன்னிக்கவே கூடாது, நீ பண்ணினது நம்பிக்கைத் துரோகம் அதற்கு ஒரே ஒரு தண்டனை தான். அது நீ சாகறது மட்டும்தான்." சொல்லியவன் அவனை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்தான். அந்த நிமிடம் அவன் மனது இந்த கொலை அவசியமா என் ஒருமுறை யோசித்துப்பார்க்க வைத்தது. ஆனால் அந்த நினைவுகளை ஓரங்கட்டியவனாய் துப்பாக்கியின் குதிரையை அழுத்தினான். மூன்று குண்டுகள் வலது தோல்பட்டையில் ஒன்றும், கன்னத்தில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்ப் பாய, அவனுடைய நண்பன் ரத்தச்சேற்றில் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

மீண்டும் ஒருமுறை மனிதனால் வரலாறு மாற்றப்படாமல் நிகழ்காலத்திற்கு மோகனுடன் திரும்பினர் கணிணிமனிதர்கள். மோகன் அவனுடைய தண்டனைக்காலம் முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டான். முன்பு மோகனால் அவனுடைய நண்பன் கொல்லப்பட்டதற்கும் தற்சமயம் சோதனை முயற்சியில் கொல்லப்பட்டதற்குமான நிமிடக்கணக்கில் மைக்ரோ செகண்டுகளில் வித்தியாசம் இருந்தது. அதாவது மோகனுடைய பயிற்சியால் முன்பில்லாதது போல் தற்சமயம் ஒரு மைக்ரோ நிமிடம் அவனுடைய மனம் யோசித்தது. ஆனால் அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும் அந்த ஒரு மைக்ரோ நிமிட வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் déjà vu குறித்துக்கொண்டனர். பிற்காலத்தில் வேறுவொரு மனிதனால் வரலாறு மாற்றப்படுமா என்ற கேள்வியுடன் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தனர்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

Popular Posts