மில்லியன் டாலர் பேபி, கிளின்ட் ஈஸ்ட்வுட்டின்(Clint Eastwood) படங்கள் முன்பே பார்த்திருந்ததால், இந்தப்படம் வெளியானதுமே பார்க்கவேண்டும் என்ற என் ஆர்வத்தை கிளப்பிய படம். ஒன்றிரண்டு அல்ல நான்கு ஆஸ்கர்களை வென்ற படம், அதுவும் ஏவியேட்டர், ரே, சைட்வேஸ் போன்ற மிகச்சிறப்பான படங்கள் போட்டியிட்ட பொழுதும் வெற்றி பெற்றதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் சிறந்த படம், சிறந்த இயக்குநர்(Clint Eastwood), சிறந்த நடிகை(Hillary Swank), சிறந்த துணைநடிகர்(Morgan Freeman) என மிகமுக்கியமான நான்கு ஆஸ்கார்கள்.
சிலரிடம் எனக்கு சிலவிஷயங்கள் பிடிக்கும் சுராவிடமும், ராமகிருஷ்ணனிடமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர்கள் கதைசொல்லும் பாங்கு, அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கதைசொல்லியை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள் அதைப்போல இந்தப்படமும் ஒரு அற்புதமான கதைசொல்லியை தன்னகத்தே கொண்டது.
தன்னுடைய பெண்ணை இழந்த(பிரிந்த), லாஸ் ஏஞ்சல்ஸில் பாக்ஸிங் டிரெய்னிங் கொடுக்கும் ஒருவர், அந்த நபரால் பயிற்சியளிக்கப்பட்டு பல வெற்றிகளைப்பெற்று கடைசியில் ஒரு போட்டியில் ஒரு கண்ணை இழந்த அவருடைய மானேஜர், ஹோட்டலில் வேலைசெய்யும், வாழ்க்கையில் தன்னுடைய இடத்தை நிரூபிக்க நினைக்கும் 32 வயதான ஒரு பெண். இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் மில்லியன்டாலர் பேபி, படம் ஹாலிவுட்டிற்கே உரிய எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாதது.
பிராங்கி டன்(Frankie Dunn - Clint Eastwood)), ஸால் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு குறுகலான சந்தில் இருக்கும் ஜிம்மிற்கு சொந்தக்காரர், யீட்ஸின்(William Butler Yeats)கவிதைகளைப்படிப்பவர், கேலிக்(Gaelic) எனப்படும் ஒரு அழிந்து கொண்டிருக்கும் மூன்று மொழிகளைப்பற்றி சிந்திப்பவர், தினமும் சர்ச்சிற்கு செல்பவர் குறிப்பாக அங்கிருக்கும் இளவயது சாமியாரிடம் தேவையற்ற சர்ச்சகைகளை செய்வதற்காக. அதுமட்டுமில்லாமல் ஒரு அற்புதமான பாக்ஸிங் பயிற்சியாளர். ஆனால் அவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற காமன்சென்ஸ் என்கிற, அவருடைய நெர்வஸ்னஸ் அவரை முழுமையான பயிற்சியாளராக செயலாற்றவிடமால் செய்திருக்கும்.
எட்டி டியூப்ரிஸ்(Eddie Dupris - Morgan Freeman), பிராங்கியின் ஜிம்மில் வேலைசெய்து வரும் முன்னால் பாக்ஸர். ஒரு காலத்தில் பிராங்கிதான் எட்டியின் பயிற்சியாளர். கடைசி போட்டியில் ஒரு கண்ணையிழந்து பிராங்கியிடம் வேலைசெய்து வருவார். பிராங்கிக்கும் எட்டிக்கும் இடையில் நடக்கும் சின்னச்சின்ன நகைச்சுவை நிகழ்ச்சிகள் படத்தில் மிக அற்புதமாக வந்திருக்கும். அங்கு இளம் வீரர்களுக்கு பயற்சியளித்து வரும் எட்டி, பிராங்கியின் பெண்ணிற்கு அவள் தகப்பனின் உண்மையான அன்பைக்காட்ட சொல்வதாக, படத்தின் கதைசொல்லியாக இருந்திருப்பார் எட்டி, (மார்கன் பிரீமனின் குரல்வளம் தத்ரூபமாகயிருக்கும்.)
மேகி பிட்ஸ்ஜெரால்ட்(Maggi Fitzjerald - Hillary Swank), 32 வயதான வாழ்க்கையில் எதையாவது சாதிக்க துடிக்கும் பெண்ணாக, ஹில்லாரி ஸ்வாங்க் முதலில் தனக்கு பாக்ஸிங் பயிற்சியளிக்க பிராங்கியிடம் கேட்பதில் தொடங்கும் படத்தில், பிராங்கி, எட்டி, மேகி மூவர் மட்டுமே படத்தின் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருப்பார்கள். இந்த மூவரைச் சுற்றி சூழழும் கதையில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட் பற்றி. தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் ஒரு அற்புதமான படத்தை இயக்கியிருப்பார், ஒரு பாக்ஸிங் சம்மந்தப்பட்ட படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளில் கட்டுப்படாமல் புகுந்துவிளையாடியிருப்பார் மனுஷன்.
முதன் முதலில் மேகி, பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்கும் பொழுது இந்த வயதிற்கு மேல் மேகிக்கு பயிற்சியளித்து அவளை அந்தவிளையாட்டில் தலைசிறந்த வீராங்கனையாக மாற்றமுடியாது என நினைக்கும் பிராங்கி அதை அவளிடம் நேரடியாகவே சொல்லிவிடுவார் ஆனால் பின்னர் அவளின் தொடர்ச்சியான வற்புறுத்துதாலும், தன் நண்பர் எட்டியின் வேண்டுகோளுக்காகவும் பயிற்சியளிக்கத்தொடங்கும் பிராங்கிக்கு, மேகியின் உத்வேகமும், மனப்பான்மையும் அவளின் இடைவிடாத பயிற்சியும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தும். பின்னர் பிராங்கியின் பாக்ஸிங் ஆட்டத்தைப்பற்றிய அழகான அணுகுமுறையால் அவள் தொடர்ச்சியாக பரிசுகளை வென்றுகொண்டே இருப்பாள்.
கடைசியில் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, பிராங்கி, லாஸ்வேகாஸில் நடைபெறும் ஒரு போட்டியில் பங்கேற்க மேகியுடன் செல்வார். எதிராளியின் தவறாக ஆட்டத்தால் பயங்கரமாக தாக்கப்பட்டு, கழுத்திற்கு கீழ் எதுவும் வேலைசெய்யாமல் போகும் அளவிற்கு பாதிக்கப்படுவார். பின்னர் மருத்தின் மூலம் தீர்க்கப்படமுடியாது என்ற நிலைக்கு வந்துவிடும். இடையில் மேகியின் குடும்பத்தைப்பற்றியும் வரும், காசிற்காக அலையும் குடும்பமாக, அவளின் முடியாத நிலையில் கூட அவள் சொத்தை கைப்பற்ற நினைப்பவர்களாக அவளஇடம் கையெழுத்து வாங்க நினைக்கும் சில காட்சிகள். இது போன்ற காரணங்களால் மேகி, பிராங்கியிடம் தன்னை கருணைக்கொலை செய்யச்சொல்லி வற்புறுத்துவார். ஆனால் முதலில் முடியாதென மறுத்துவிடும் பிராங்கி, மேகி தன் நாக்கை தானே கடித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் இறுக்கம் தாங்க முடியாமல் கடைசியில் அவளை கருணைக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து மட்டுமல்ல மொத்தமாக மறைந்துவிடுவதாக முடியும் இந்தப்படம்.
இயக்குநராக ஈஸ்ட்வுட், தனக்கே உரிய அவருடைய உலகத்தின் சாயல்களை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார், வெறித்தனமான பழிவாங்கத்துடிக்கும் கதாப்பாத்திரங்களையே தன்படங்களில் பயன்படுத்தும் ஈஸ்ட்வுட் தன் படங்களில் இதிலிருந்து பார்ப்பவர்களை விலகிச்செல்ல சில உத்திகளையும் பெரும்பாலும் மிக அழகாக பயன்படுத்துவார். இந்தப்படத்தில் பாக்ஸிங் பற்றிய அவருடைய அழகான விஷயஞானத்தால் அதை மறைத்திருப்பார். மற்ற அமேரிக்க இயக்குநர்களிடமிருந்து வேறுபடும் ஈஸ்ட்வுட் தன்படங்களில் காதலை ஒரு கருவியாக பயன்படுத்தி தன் படத்தை வோட்டச்செய்யும் உத்தியை பயன்படுத்தவேமாட்டார். இந்தப்படத்திலும் மேகிக்கும், பிராங்கிக்கும் இருக்கும் அந்த அற்புதமான உறவில், செக்ஸ் என்ற ஒரு விஷயத்தைப் புகுத்தும் காட்சியமைப்புக்களோ சம்பவங்களோ இருக்காது.
படத்தில் யீட்ஸின் கவிதைவிரும்பியாக வரும் பிராங்கியின் மூலமாக தன் படக்கதையை சில கவிதைகளை முன்வைத்து சொல்லியிருப்பார் கிளின்ட் ஈஸ்ட்வுட். கடைசிக்காட்சிகளில் பிராங்கி, மேகிக்கு படித்துக்காட்டும் பாடல்களில் அவளைப்பற்றிய தன்னுடைய அனுமானத்தை விளக்கியிருப்பார். முதலில் சின்ன வயது யீட்ஸின் கவிதைவரிகள் ("The Lake Isle of Innisfree")சொல்வது, பின்னர் வயதான யீட்ஸின் கவிதைவரிகள்(From "The Apparitions")சொல்வது என தன்னுடைய படம் இயக்கும் திறமையை மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
"When a man grows old his joy grows more deep day after day,
His empty heart is full at length,
But he has need of all that strength
Because of the increasing Night
That opens her mystery and fright."
படத்தின் அனைத்துக் காட்சிகளுமே அற்புதமாகயிருக்கும் குறிப்பாக, முதன்முதலில் மேகிக்கு பயிற்சியளிக்க பிராங்கி ஒப்புக்கொள்ளும் காட்சி, பின்னர் மேகி உடல்நலமில்லாமல் இருக்கும் பொழுது அவருடைய முகத்தில் தெரியும் புன்னகையும் என்னை மிகவும் கவர்ந்தது. ஹில்லாரி ஸ்வாங்கைப்பற்றியும் நிச்சயமாக சொல்லவேண்டும், அவர் மேகியாக வாழ்ந்திருப்பார், ஆரம்பத்தில் பிராங்கியிடம் தனக்கு பயிற்சியளிக்க கேட்பதிலாகட்டும், பின்னர் அவர் அனுமதியில்லாமலே அவர் ஜிம்மில் பயிற்சியெடுப்பதிலாகட்டும், ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருப்பார். குறிப்பாக கடைசிக்காட்சிகளில் வெறும் முகபாவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட்டுக்காட்டியிருப்பார் ஹில்லாரி ஸ்வாங்க். அதைப்போலவே மார்கன் ப்ரீமனும் படத்தின் தொடர்சிக்கும் அழகாக தன் நடிப்பால் உதவியிருப்பார். ஆகமொத்தத்தில் ஒரு மிகஅற்புதமான படம் பார்த்த திருப்தி ஏற்படுத்திய படங்களில் மில்லியன் டாலர் பேபியும் ஒன்று.
Million Dollar Baby - Clint Eastwood
பூனைக்குட்டி
Wednesday, November 23, 2005
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேற...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
வணக்கம் மோகன்
ReplyDeleteஇந்த படத்தை நான் பார்த்து பல நாட்கள் ஆகி இருந்தாலும்
உங்களுடைய இந்த விரிவான விமர்சனம் அருமை. நிச்சயம் இந்தப் படம்
பாராட்ட படவேண்டிய படம். இதுப் போல் தமிழில் எடுக்க முடியுமா? என்பது
என் மனதில் எப்பொழுதும் எழும் கேள்வி.
எப்படி நம் தமிழ் மக்கள் ரசனையை மதுர, கில்லி, திருபாச்சி, ஆஞ்சனேயா, மஜா, சிவகாசி
இவற்றில் இருந்து மாறி இதுப் போல் படங்களை பார்க்க வைப்பது?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சிவா இந்தப்படம் மட்டுமல்ல நான் பார்த்த பெரும்பான்மையான ஆங்கிலப்படங்களை தமிழில் சிறிது மசாலா கலந்தோ இல்லை கலக்காமலோ நிச்சயமாய் தரமுடியும் ஆனால் இவர்கள் மக்களின் மீது பாரத்தைப்போட்டுவிட்டு மீண்டும் மீண்டும் சிவகாசி போன்ற படங்களை எடுத்துவருகிறார்கள். இது கண்டனத்திற்குரியதே.
ReplyDelete