In Only ஜல்லிஸ்

கயிறு பட்டம் மற்றும் என் ஜல்லி

கிழிந்துகொண்டே போகும்
பிரபஞ்சத்தைக் கட்டிப்போட
கயிறுகள் இல்லை

இல்லாமல் போன கயிறு
வலுவேறியதாய்
நிறமேறியதாய்
கற்பனையில்
கழுத்தை நெறிக்கிறது

கற்பனைகள் தொலைந்து போன
நாளொன்றின் கடைசியில்
விட்டு விடுதலையாகி விடியலைநோக்கிய
பயணம், நிச்சயமாய்த் தனிமையில்...

பட்டம் விடுதல்...



எங்கள் BHEL Quarter's பெரிய ஸ்டெடியம் ஒன்று உண்டு. எப்பொழுதோ ஒரு சமயம் இந்திய கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் பங்குபெற்ற 'சும்மா' போட்டியொன்று அங்கு நடந்திருக்கிறது. சொல்லப்போனால் மே மாதம் விடுமுறை நாட்களில் பட்டம் விடுவதென்பது ஒரு பொழுதுபோக்கு அந்தக் காலத்தில். மாஞ்சா போட்டு டீல் விடுவதும் கூட உண்டு.

பட்டத்தையும் நூலையும் இணைக்கும் "சூச்சா" அப்படின்னு ஒரு அய்ட்டம் இருக்கும், எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதைச் சரியாப் போடுவதென்பது ஒரு கலை, நாலு விரக்கடை விட்டுப் பிடிச்சு கீழே மேலேன்னு சரிபார்த்து சூச்சா போடுவது எல்லோராலும் எளிதாக ஆவதில்லை, அதைப் போடுவதற்கென்று சிலர் இருப்பார்கள்.

காசில்லாமல் கடையில் விற்கும் பட்டம் வாங்காமல், ஈர்க்குச்சி, நியூஸ் பேப்பர் என்று என்னுடைய பட்டங்கள் பெரும்பாலும் Economy பட்டங்களாகவேயிருக்கும். பட்டத்திற்கு ஆகும் நூல் தான் என்னை மாதிரி பட்டம் விடுபவர்களுக்குப் பிரச்சனை. நூற்கண்டு வாங்குவதற்கு பைசா கிடையாது. ஸ்டேடியம் முழுக்க அலைஞ்சு அலைஞ்சு கொஞ்ச கொஞ்சமா நூல் சேர்த்து அதற்கு முடிச்சு எல்லாம் போட்டு கொஞ்ச தூரம் பறக்கும் அளவிற்கு ரெடி செய்வோம், பிரச்சனை முடிச்சுகள் அவிழ்ந்து பட்டங்கள் சுதந்திரமாகப் பறந்துவிடுவதுண்டு.

சில புள்ளைங்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பின்னாடியே ஓடி மரம் மேலெல்லாம் ஏறி பட்டத்தை திரும்ப எடுத்துவருவதுண்டு, சில சமயங்களில் பட்டங்கள் முற்களில் சிக்கி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு கிழிந்துவிடுவதும் உண்டு. ஆனால் கடைகளில் வாங்கியப் பட்டங்கள் என்றால் விலையைப் பற்றி கவலைப்பட்டு தேடிப்போவதுண்டு. ஆனால் சொந்தமாக செய்த பட்டம் என்பதால் பெரும்பாலும் பட்டம் போனாப் பரவாயில்லை, என்று நூலை மட்டும் பத்திரமாக எடுத்துவருவோம். அடுத்தப் பட்டம் விடவேண்டுமல்லவா.

அம்மாவும் அக்காவும் திட்டுவார்கள், பட்டத்தையெல்லாம் இப்படியே பறக்க விட்டுட்டு, வீட்டில் இருக்கும் நியூஸ் பேப்பரையெல்லாம் வீணாக்குறேன் என்று. அவர்களுக்கு அந்த நியூஸ் பேப்பரை மாசக்கடைசியில் போட்டால் கிடைக்கும் ஐந்து ரூபாயில் சீனி வாங்கலாமா, துவரம் பருப்பு வாங்கலாமா என்ற கவலை. செஞ்ச பட்டத்தைக் காப்பாத்த முடியலை இன்னொரு பட்டம் எதுக்குடா செய்ற என்ற கேள்வி எழாத நாளில்லை.

ஆனால் பட்டம் மீதான என் காதல் ஒவ்வொரு முறையும் புதுப்பட்டத்தில் தான் சென்று சேர்கிறது. நியூஸ் பேப்பர் இருக்கும் வரை இந்தப் பழக்கம் நீளும் என்று சொல்லி அம்மா நியூஸ் பேப்பரை நிறுத்தாத வரை இது தொடர்ந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் டூம் கட்டி பறக்கவிடுவதென்பது பெரிய விஷயம், சில சமயம் டூமில் மெழுகுவர்த்தியெல்லாம் ஏற்றி பறக்கவிடுவதைப் பார்த்து ஏற்பட்ட ஆச்சர்யம் இன்றும் தொடர்கிறது.

Related Articles

1 comments:

  1. இப்பத்தான் பார்த்தேன் கவுஜ நல்லாருக்கு ;)

    ReplyDelete

Popular Posts