
சூரியன் தன்னுடைய ஆளுமையை வெம்மையாக வெளிப்படுத்தி, மனிதர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்றுமே உணர்ந்திராததும் மாற்றமுடியாதுமாகிய ஒரு முகமூடியை மாட்டிவிடுவதாயும் பின்னர் அவர்கள் தாங்கள் உண்மையென நம்பும் புனைவுகளை மட்டுமே பேசுபவர்களாகி விடுபவதாகவும், தன்னுடைய வல்லமையை பூமியின் இன்னொருபக்கத்தில் செலுத்த தன் பரிவாரங்களுடன் நகர்ந்துவிட்ட நேரத்திலும் கூட தன்னுடைய பகல் நேர மாயாஜால மகிமையால் மக்கள் சோர்வடைந்து உறக்கத்தில் மூழ்கிவிடுவதாயும் ஆயிரம் பக்கங்களில் விவரித்திருந்த ஆராய்ச்சிக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை தேடிப்படித்த நாள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. சனிக்கிழமையின் பின்னிரவு நேரம், பெரும்பாலும் காற்றும் நானும் உறவாடும் அலுவலக முக்கோணக்கூம்புகளின் கூட்டில் சற்றும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் பார்த்துவிட்ட இருவரின் வெற்றுடம்புகளின் களியாட்டம் என்னை அந்த ஆராய்ச்சிக்கட்டுரையை நோக்கி இன்னொரு முறை நகர்த்தியது.
ஒளிப்படமாய் அந்தக் கணம் மனதில் பதிந்து விட்டிருந்தது, புதிதாய் பூசிய சுவரில் வேண்டுமென்றே கீறியதைப் போல் அழிக்கமுடியாததாய் அப்படியே தேவையில்லாத ஒன்றாய். வாழ்க்கையின் எத்தனையோ கணங்களை கடற்கரை காற்சுவடுகளில் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டேயிருக்க, இப்படியும் சில விஷயங்கள் இமைகளின் இன்னொரு பக்கத்தில் இருக்கின்றனவோ என்ற சந்தேகிக்கும் வண்ணம் கண்களை மூடியதும் வந்து கண் சிமிட்டுகின்றன தொடர்ச்சியாய். ஒன்றிரண்டு நிமிடங்களின் சேகரிப்பில் கற்பனையின் கள்ளத்தனம் நீச்சல்குளத்தில் தவறவிட்ட நிறக்குடுவையின் லாவகத்துடன் வாய்ப்புக்கள் அனைத்தையும் அபகரித்து விரிவாக்கி எல்லைகளின் இயலாமையை புன்னைகையால் புறக்கணித்து எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கிய ஒலி ஒளிப்படமாகத் உருவாகி எப்பொழுதும் மனதின் திரையில் நகர்ந்து கொண்டிருந்ததை இல்லாமல் போகச்செய்ய வேண்டிய அவசியம் புரிந்தவனுக்கு அந்த ரகசியம் புலப்படவேயில்லை.
மனம் தன் நிலையைக் குவிக்கயியலாமல் போன அச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்து நகர்வதே உசிதம் என்று, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வெளியேறி ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு அவர்கள் இருவரைப் பற்றிய நினைவுகளைப் புறந்தள்ள போராடிக் கொண்டிருந்தேன். நெருப்பு கேட்டுக் கொண்டு வந்த அலுவலக காவலாளியைப் பார்த்ததும் முகமூடிகளைப் பற்றிய ஆராய்ச்சி மீண்டும் நினைவில் வந்தது. பகற்பொழுதுகளில் இல்லாத எங்களிடையேயான நெருக்கம் இரவில் வருவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் மட்டுமல்ல, மரங்கள், சாலைகள், சுவர்கள், உணவகங்கள் என எல்லாவற்றுடனுமே இரவில் சுலபமாகப் பழகமுடிவதையும் பகலில் அவைகள் நம்மிடமிருந்து விலகி நிற்பதைப் போலவும் நான் அந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்னரே உணர்ந்திருந்ததால் என்னால் அந்தக் கட்டுரையில் இயல்பாய் மூழ்கமுடிந்தது.
மார்கழி மாத முன்பனிக்காலம், ஸ்வெட்டரின் நெருக்கமான பின்னல்கள் உண்டாக்கும் கதகதப்பைத் தாண்டியும் மீறியும் குளிர் உடலைத் தீண்டி, தன் ஆளுமையை நிரூபித்துக் கொண்டிருந்தது. சிகரெட் கொடுத்துக் கொண்டிருந்த கதகதப்பு விரல்களின் இடையில் முடிவடைய அதைத் தொடர்வதைப் பற்றிய கேள்விகளுக்கான பதில் தீர்மானிக்க இயலாததாய் சோம்பேறித்தனத்தின் கதவுகளின் பின்னால் ஒழிந்துகொண்டிருந்தது. கடும் பனியும், ஊதல் காற்றும், இன்னும் தன் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்த காவலாளியும் எல்லாவற்றையும் கடந்து நிர்வாணத்தில் மூழ்கி தட்டுப்படாத தரையை நோக்கி விழுந்துகொண்டிருந்தவனுக்கு வேறொன்றை சிந்திப்பதில் இருந்த மூளைப்பற்றாக்குறையும் சேர்த்து முடிவெடுக்கயியலாமல் பாக்கெட்டைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தேன். எங்கள் இருவரின் உரையாடலை ஸ்வைப்பிங் டோரின் ஒலி துண்டிக்க, அந்த இணையில் ஆண் மட்டும் வெளியில் வர, காவலாளி அவரை வணங்கி தன் விசுவாசத்தை நிரூபித்தவாரு நகர்ந்துவிட. எங்கள் இருவரிடையேயும் மௌனம் புகுந்து கொண்டது.
மௌனத்தின் வலிமையான கரங்களில் இருந்து விடுபட நினைத்த எங்களின் முயற்சி சிறுகுழந்தையின் நிலவைப் கையில் பிடிக்கும் பிரயாசையாய் நிறைவேறாமலே போனது. எனக்கு அந்த நபரைத் தெரியும், அப்படியே அந்த இணையின் மற்ற பெண்ணையும் இருவரும் ஏற்கனவே வேறுவேறு நபர்களுடன் மணமானவர்கள். மணத்திற்கு வெளியிலான உறவைப் பற்றிய பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லாததால் எனக்கு நான் பார்க்க நேர்ந்த விஷயத்தைப் பற்றி இயல்பாய் சில கேள்விகள் இல்லை, ஆனால் உறவு நடந்த இடத்தைப் பற்றிய கேள்விகள் உண்டு. ஆனால் என் மன உளைச்சலைவிடவும் அவர்களுடையது அதிகம் இருக்கும் என்பதால் மன்னிப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பக்கத்தில் இருந்து திறந்து வைத்தேன்.
"சாரி..." நான் முடித்திருக்கவில்லை, அவர் என்னைப் பார்த்து "இது இப்படி நடந்திருக்கக்கூடாது! சாரி!" அவ்வளவுதான் சொன்னார். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், இது இப்படி நடந்திருக்கவேகூடாது. அது அவர்களுடைய உறவாக மட்டுமல்லாமல் அதை நான் பார்த்ததையும் சேர்த்துத்தான். அதன் பிறகு தொடர்ந்த உரையாடல் பொதுவானதாக அலுவலகம் வேலை தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருந்தது. அந்த விஷயத்தை அவரால் ஒதுக்கிவிட்டு தன் உரையாடலைத் தொடர முடிந்திருந்தது, அவருடைய மனித மனங்களைக் கணக்கிடும் வலிமை ஆச்சர்யப்படத்தக்க வகையில் இருந்தது. அவர் அளவிற்கு முடியாமலிருந்தாலும் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.
வழமை போல் இரவின் தொடர்ச்சியாக இல்லாமல் பகல் தனக்கான முகமூடியுடன் வெளிப்பட, ஆராய்ச்சியின் முடிவாகக் கட்டுரை சொல்லியிருந்த "தங்களுக்கான முகமூடிகளைப் பற்றியெழும் கேலிகளைப் பொருட்படுத்தாமல், அதே சமயம் நிராகரிக்கவும் முடியாமல் இருத்தலுக்கான சமரசமாக நகர்தலையும், நகர்தலின் சாத்தியமின்மை புன்னகையையும் தோற்றுவிக்கிறது" என்பது என்வரையில் உண்மையானது. இணையில் ஆண் தன் நகர்தலில் வெற்றிபெற, பெண் புன்னகையில் தன்னைப் புதைத்துக் கொண்டாள். வாழ்க்கை எங்கள் சந்திப்பின் சாத்தியக்கூறுகளை மறுத்தலித்தபடி சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அசந்தர்ப்பங்களை சந்தர்ப்பங்களாக்கும் வேடிக்கையான விளையாட்டை காலம் தொடங்க, விளையாட்டிற்கான விதிமுறைகள் வகுக்கப்படாமலேயே களத்தில் எங்களை இறங்கிவிட்டு காலம் நகர்ந்து கொண்டது.
கொண்டாட்டத்திற்கான நாளொன்றில் உள் அறையின் சுவரெங்கும் எதிரொலித்து இசை தன் பரிமாணத்தை மீறி நடனத்திற்கான வெளியை உருவாக்கிக் கொண்டிருந்தது. இசையை அதன் பரிமாணத்திலேயே ரசிக்கத்துடிக்கும் என்னை அது இயல்பாய் அறையில் இருந்து வெளியில் தள்ளியது. கோப்பையில் மார்ட்டினி தத்தளிக்க இடது கையில் இருந்த சிகரெட்டை வலது கைக்கு மாற்றியபடி கதவைத் திறந்து வெளியில் வர இன்னொரு கோப்பையுடன் அவள் நின்று கொண்டிருந்தாள். வழமையான புன்னகையுடன் என் பொருட்டு திறந்த கதவின் வழி வழிந்த இசையின் இரைச்சல் காதை அடைக்க கதவு தானாக உள்ளும் புறமும் அசைந்து அதற்கேற்ப இசையை கொடுத்து மறுத்து அடங்கும் வரை ஒரு கையால் காதை அடைத்துக் கொண்டிருந்தவள், கைகளை நீட்டினாள் குலுக்களுக்காக.
"கொடுமையா இருக்கு இல்லையா!" அவளுடைய கேள்வியை ஆமோதித்தவனாய் நிசப்தம் கொடுத்த நிறைவு மனமெங்கும் வழிய, "ஆனால் வெளியில் ஏகமாய் குளிர்கிறது" என்னுடையதை ஆமோதித்தவளுக்கும் கூட தொடர்ச்சியாய் என்ன பேச என்று தெரியாததால் சாத்தப்பட்ட கதவுகளினூடாக நுழைந்துவரும் இசையை ரசித்த வண்ணம் எங்களிடையே மௌனம் இடம்பெயற, மௌனத்தின் வலியை உணர்ந்தவளைப் போல் எக்காரணம் கொண்டு அதை அனுமதிக்க மறுத்தவளாய், "எமினெம் இல்லையா?" கேட்க, "ம்ம்ம் ஆமாம், எமினெமும் ஸ்னூப்பி டாகும்..." சிரித்து வைத்தேன்.
தனிமைக்கான பொழுதில்லை அது நிச்சயமாய் கொண்டாட்டத்தின் உச்சமாய் தங்களை மறந்து ஒரு கூட்டம் உள்ளே ஆடிக்கொண்டிருந்தது. மனமொருமித்த நடனம் அல்ல மனம் அலைபாயும் பறக்கும் ஆட்டம், மற்றதைப் போலில்லாமல் என்னை இயல்பாகவே கவரும் வகைதான் என்றாலும் அன்றைய பொழுதை மார்ட்டினியுடன் தனியே கழிக்க விரும்பி வெளியில் வந்தவனுக்கு அமைந்துவிட்ட அவளுடைய அருகாமை ஆச்சர்யமே! இதுநாள் வரை என்னை நானும் அவளை அவளும் ஒருவரிடம் ஒருவர் மற்றவரை மறைத்துக் கொண்டிருந்தோம். இன்றுமே கூட எங்களின் சுயம் தன்னாதிகத்தில் இருந்திருந்தால் இந்தச் சந்திப்பு புன்னகையுடனோ முகமன்களுடனோ முடிந்திருக்கவேண்டிய ஒன்றுதான். ஆனால் உற்சாகபானம் எங்களிடையே கட்டமைக்கப்பட்ட இயல்புகளைத் தகர்த்தெறிந்து உற்சாகத்தை அள்ளித் தெறித்தப்படியிருந்தது. இரவின் இயல்புகளில் ஒன்றாய் ஆராய்ச்சிக் கட்டுரை குறித்திருந்த விஷயம் தான் இது. கட்டுரையின் 136ம் பக்கத்தில் இரண்டாவது பத்தியில் இதைப்பற்றிய வரிகள் நினைவில் வந்தது, "சுயம் கட்டமைக்கும் கோட்பாடுகள் தகர்க்கக்கூடியதாய் இருப்பதில்லை, பகலின் பிரம்மாண்டம் சுயத்தை மறைத்து கோட்பாடுகளை இறுக்கங்களுடன் வெளிப்படுத்துகிறது. இரவின் தனித்த நெருக்கமான பொழுதுகள் கோட்பாடுகளைக் கடந்தும் சுயத்தின் இருப்பை உணர்த்தினாலும் சுயத்தை இழப்பது, இழக்க வைப்பது இரவின் தன்மைகளில் ஒன்றாகயில்லை. ஆனால் சுயம் தானாய் அல்லாமல் வேறுபல காரணிகளால் இழந்து போய்விடூம் இரவில் அது இன்னமும் இயல்பாய் அமையும்."
அந்தப் புத்தகம் மனிதர்களைப் பற்றி வீசியெறிந்த அத்தனை ரகசியங்களும் முகத்தில் பட்டு அதன் துள்ளியமான அவதானிப்பை ஆச்சர்யத்துடன் அணுக வைத்தது. பக்கங்களும் பத்திகளும் வரிகளும் சொற்களும் எழுத்துக்களும் தொடர்ச்சியான வாசிப்பினால் மனனமாகி சுற்றத்தின் செயல்களை வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த ஒவ்வொரு கணமும் புன்னகையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அந்தப் பிரதியின் மூல ஆசிரியர் பற்றிய குறிப்புகளில் முக்கியமானது இந்தப் பிரதி எழுதி முடித்ததும் அவர் செய்து கொண்ட தற்கொலை பற்றிய இரண்டு வரிகள், காரணங்கள் என்று எதையும் குறித்திருக்காவிட்டாலும் மனப்பிறழ்வு என்ற ஒரு வார்த்தை அவரைப் பற்றிய தேடலைத் தூண்டியது. ஆனால் அந்தப் பிரதியைத் தவிர்த்து அவரைப் பற்றிப் பேச எதுவுமே இல்லை, பிரதியுமே கூட எதையும் சுய அனுபவமாக முன்வைக்கவில்லை.
சிலீரென்று உரசிய குளிர்காற்று நினைவுகளைப் புரட்டிப்போட கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த உற்சாகப்பானத்தை ரசித்து அருந்தியபடி இருந்த அவளைப்பற்றிய எண்ணம் படரத்தொடங்கியது. சேலைத்தலைப்பை அவள் உடலைச் சுற்றி மூடியிருந்ததாலோ என்னவோ அவளுடைய ஆடையில்லாத உடல் மனதெங்கும் பரவி கொஞ்சம் சூழ்நிலையை அந்நியப்படுத்தியது. கற்பனை தன் கரங்களில் பகடைகளை உருட்டி விளையாடத்தொடங்கிய பொழுதில்,
"அவர் இப்ப இந்தியா ஆபிஸில் இல்லை! தெரியுமா?"
அவள் எப்படி அத்தனை விரைவில் உடுத்திக்கொண்டாள் என்ற ஆச்சர்யத்துடன் அவளுடைய கேள்வியை அணுகினேன்.
"தெரியும்!" அன்றைக்கென்னமோ மார்ட்டினி என்றையும் விட போதையை அதிகம் தருவதைப்போல் உணர்ந்தேன்.
சிரிக்கத் தொடங்கினாள், மழை மேகத்தைப் போல் சிறிதாய்த் தொடங்கியவள், குபீரென்று புயல்மழையைப் போல் தன் சிரிப்பைத் தீவிரமாக்கினாள். அவளுடன் இணைந்து கொள்வதற்கான இடைவெளி தேடியவன் கிடைக்காததால் சட்டென்று இடித்து மின்னும் இடி மின்னலாய் புன்னகையொன்றை மட்டும் அவிழ்த்து விட்டு மீண்டும் உதடுகளை மார்ட்டினியில் முக்கினேன்.
"அவருக்கு உங்களைப் பார்த்து பயம்." இடையில் நிறுத்தி சொல்லிவிட்டு தொடங்கியவள். அன்றைக்குப் பின்னான நிகழ்ச்சிகளை கோர்க்கத் தொடங்கினாள் பூக்களாக, அழகுக்காகவும் வேறுபாட்டுக்காகவும் இடையில் சேர்க்கும் வேறு நிறப்பூவாய் என் சொற்கள் அங்கங்கே இணைக்கப்பட்டு, அரைமணிநேரத்தில் பூமாலை தொடுத்திருந்தாள். காதலுடன் போதையாய் என் கழுத்தில் அனுமதியை புறந்தள்ளி அணிவித்தவளின் வேகம் என்னை பிச்சைக்காரனின் தட்டில் தூரத்தில் இருந்து வீசியெறிப்பட்ட காசாய் தடுமாற வைத்தது. ஆனால் தடுமாற்றம் கிளப்பிய உற்சாகம் அவள் அழைப்பைத் தொடர்ந்து ரிசார்ட்டில் அவளுக்காய் ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி எங்களை நகரவைக்கும் வல்லமை கொண்டதாயிருந்தது.
அந்த நிலையிலும் கூட எனக்கான வரிகளை மனம் அந்தக் கட்டுரையில் தேடிக்கொண்டிருந்தது, தேடுதலின் வேகம் கொண்டுவந்த சொற்கள் மனதில் கூட்டப்படும் முன்னர், அந்த அறையில் உறங்கிக்கொண்டிருந்த அவள் குழந்தையின் கன்னத்தில் உளறியபடி வைத்த அவள் முத்தத்தின் சத்தம் ஸ்தம்பிக்க வைத்தது. இரக்கமற்ற முறையில் என் கழுத்து அறுக்கப்பட்டு நிலை தடுமாறி நான் விழுந்துகொண்டிருந்தேன். எங்கிருந்தோ சட்டென்று விழித்துக்கொண்ட சுயம், பொய்களின் மீது கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் நகர்ந்து விளையாடி பிரம்மிக்க வைத்து என் அறைக்கு கொண்டு வந்து தள்ளி தன்னை நிரூபித்துக் கொண்டது.
பலூன் ஒன்றின் மீதான குழந்தையின் ஆவலுடன் ஆராய்ச்சிக்கட்டுரையின் பிரதியைப் புரட்டிப் பார்க்க நினைத்து துலாவியவனின் கையில் சிக்கியது மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் மூல மொழி பதிப்பு. எதோ நினைவாய் புரட்டிய ஒரு எண்ணின் பக்கத்தில் இருந்த பத்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதறிப்போய் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் அதே பக்கங்களைப் சரிபார்க்க, அந்தப் பத்தி மொழிபெயர்க்கப்படாமல் விடப்பட்டிருந்தது புரிந்தது. பத்திகளில் சொல்லப்பட்டிருந்த, பகலில் மாட்டப்பட்டு இரவில் சற்றே இளகும் முகமூடிகளைப் போலில்லாமல் இரவிலும் இளக முடியாத முகமூடிகளுடன் அலையும் மனிதர்களைப் பற்றிய வரிகள் என்னை சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி தொட்டியில் சிதறும் தண்ணீர்த்துளிகளைக் கவனித்தபடியே உள்ளங்கைகளின் மத்தியில் அடங்கமறுக்கும் தேவையாய், பிசுபிசுப்புடன் கைமாற அதிர்ச்சியின் ஆச்சர்யக் கலவையில் அவள் முகம் அந்த அறையின் வெளிச்சத்தில் பிரகாசித்தது. மனித உணர்வுகளை அப்பட்டமாய் எழுதப்பட்ட அச்சிடப்பட்ட காகிதத்தின் வரிகளாய் அல்லாமல் அப்படியே உணர்வுகளாய் உள்வாங்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு பிரதி எழுப்பும் அகங்காரச்சிரிப்பு தாங்கமுடியாததாய் நீள, உறிஞ்சித் துப்பிய சக்கையாய் அங்கே மௌனம் கவிழ, பிரதியை எரித்து குளிர்காய்ந்தவாறு முகமூடிகளற்ற நிர்வாணம் எகிறிக்குதித்தது.
இரவின் தொடர்ச்சியாக எப்பொழுதும் அறியப்படாத பகல்
Mohandoss
Monday, April 20, 2020


Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
//மனித உணர்வுகளை அப்பட்டமாய் எழுதப்பட்ட அச்சிடப்பட்ட காகிதத்தின் வரிகளாய் அல்லாமல் அப்படியே உணர்வுகளாய் உள்வாங்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு பிரதி எழுப்பும் அகங்காரச்சிரிப்பு தாங்கமுடியாததாய் நீள, உறிஞ்சித் துப்பிய சக்கையாய் அங்கே மௌனம் கவிழ, பிரதியை எரித்து குளிர்காய்ந்தவாறு முகமூடிகளற்ற நிர்வாணம் எகிறிக்குதித்தது.//
ReplyDeleteகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்ய
என்ன பிராண்ட் சரக்கு அடிச்சிங்க :-))
ReplyDeleteஇப்படிலாம் எழுதனும்னு முன் தீர்மானிப்பு இல்லாமல் முடியாது(அர்த்தமற்ற பிதற்றல்கள் என்பதை அப்படி சொல்லும் படி ஆச்சு)
ஒரு கலவையான குழப்பத்தில் இருந்தால் இப்படிலாம் சிந்தனை ஓடக்கூடும், அப்படி இருக்க உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
நான் கூட அதிக மப்பில் ஏற்படும் தெளிவில்!!??(அப்போ நல்ல தெளிவா சிந்தனை பிறக்கும், ஆனால் மக்கள் தான் ஒத்துக்க மாட்டேன்கிறாங்க) மின்னொளி விளக்கின் கதிர்வீச்சில் இருந்து நான் நூற்ற உன் ஆடைகளின் விளிம்பில் என் நினைவின் படிமானம் ஊசலாடி உன்னை தொடர்ந்தது என்று இப்படி ஏதாவது ஆரம்பிப்பேன் , உனக்கு ரொம்ப மப்பு ஏறிப்போச்சு என்று ஒரு வாழ்த்து வரும் :-))
இதுக்கு மேல எதுவும் பேசினா அதுக்கு மதிப்பு இருக்காதுனு ... மாமு அஞ்சாதே படம் ரொம்ப அட்டு படமாம் என்று கதையை மாற்றிவிடுவேன் :-))
வவ்வால்,
ReplyDeleteஏற்கனவே கவிதை எழுதுவதற்காக காதலித்தவன் என்ற பெயர் பெற்றிருக்கிறேன்(யாரும் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால காசு கொடுத்து நாங்களே வாங்கிக்கிட்டது) இப்பொழுது இலக்கியம்(so called இலக்கியவாலிகள் மன்னிக்கவும் :)) படைப்பதற்காக தண்ணியடித்தான் மோகன்தாசு என்ற பெயர் வாங்கித் தரப்போகிறீர்கள் நீங்க என்று நினைக்கிறேன்.
அப்படியெல்லாம் உற்சாகபானம் ஒன்றுமில்லை இந்தக் கதைகளின் பின்னால், ஆனால் ஒரு நபர் இருக்கிறார். கோணங்கி என்ற பெயரை வடக்கு பார்க்க உட்கார்ந்து கொண்டு மூன்று முறை உச்சரித்து பின்னர் உங்கள் கைகளை கீபோர்டின் மீது வைக்க வேண்டும் பின்னர் அதுவாக டைப் செய்து ட்ராஃபிட்ல் வைத்துவிடும். ஆனால் மேட்டர் என்னான்னா பத்து பதினைந்து நிமிடங்கள் தான் ஒரு நாளைக்கு எழுதமுடியும் இந்த விதமாக.
மேற்கண்ட பதிவு இவ்விதமாக சுமார் மாதக் கணக்கில் எழுதப்பட்டது. ஒரு குழுமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் போடப்பட்டது. அதற்கு முன்பே வேர்ட்ப்ரஸில் தூங்கிக் கொண்டிருந்தது.
நீங்களும் நான் சொன்ன வழியை முயற்சி செய்து பார்க்கலாம் பலன் கிடைத்தால் அந்தப் பதிவில் மோகனதாசுக்கு கிரடிட் போடவும்.
இந்த கதையை எப்ப 'மொழிபெயர்த்து' போடுவீங்க? :)
ReplyDeleteஇதுக்கெல்லாம் ஒரு இது வேணும். இப்படியும் எழுதுகிறார்களா என மலைப்பை உருவாக்கியது. இருத்தலிய நவீனமா இது?
பொறுமையுடன் வாசித்தேன் என்பதால் என்னையே நான் பாராட்டிக்கொள்ளவும் விரும்புகிறேன்.
பிச்சைக்காரன் தட்டில் விழுந்த சில்லறை கொஞ்சம் சாதாரண உவமையாயிருக்குது மற்றவற்றை ஒப்பிடும்போது.
கலக்குங்க.
//மேற்கண்ட பதிவு இவ்விதமாக சுமார் மாதக் கணக்கில் எழுதப்பட்டது. //
ReplyDeleteபதிவில் கடின உழைப்பு தெரிகிறது :)
மோஹன்,
ReplyDelete//, ஆனால் ஒரு நபர் இருக்கிறார். கோணங்கி என்ற பெயரை வடக்கு பார்க்க உட்கார்ந்து கொண்டு மூன்று முறை உச்சரித்து பின்னர் உங்கள் கைகளை கீபோர்டின் மீது வைக்க வேண்டும்//
//நீங்களும் நான் சொன்ன வழியை முயற்சி செய்து பார்க்கலாம் பலன் கிடைத்தால் அந்தப் பதிவில் மோகனதாசுக்கு கிரடிட் போடவும்.//
என்னை என்ன ஆக்கம் கெட்ட கூவை என்றா நினைத்தீர்கள், என் பேரை நான் ஒரு தடவை சொல்லிக்கிட்டு கீ போர்டில் கை வைத்தாலே ஆயிரம் எலக்கியம் கக்குமே! அப்படி இருக்க கோணங்கிலாம் என்னாத்துக்கு!கோணங்கி தொண எல்லாம் கற்பனை செத்துப்போனவங்களுக்கு தான் வேணும்!
நான் எல்லாம் எலக்கியம் எழுத ஆரம்பிக்கலை, ஆரம்பிச்சா அவன் அவன் ரத்தம் கக்கி செத்துடுவான் :-))
"நல்ல பதிவு மோஹன், புலம்பல் இல்லாத சுய அலசல்கள் இரசிக்கவும் சிந்தக்கவும் தூண்டும், தூண்டியது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅது சரி படத்துக்கும் புனைவுக்கும் சம்பந்தம் இல்லையா.. மசாலா சேர்க்கவா????
ஒவ்வொரு பத்தியிலும் வாக்கியத்தை முடிக்க விரும்பாமல் வெவ்வேறு தளத்துக்கு கடத்தியது மாதிரியான பல பத்திகள். இதுதான் வாசிக்க நினைப்பதை சலிப்படைய வைக்கிறது. முக்கியமாக எல்லா வரிகளிலும் கம்மா புள்ளி நீக்கமற நிறைந்திருக்கிறது. நான்கு வரிக்கும் மேலாக செல்லும் வாக்கியங்கள் யாவும் பராசக்தியின் வசனங்களையே எனக்கு ஞாபகபடுத்துவதால் சொல்கிறேன். இது நல்லாதான் இருக்கு. அடுத்த இத விட நல்லா எழுதுவிங்க.
ReplyDeleteசிறில் அலெக்ஸ்,
ReplyDeleteஎன் கம்பெனியில் ஏற்கனவே எப்ப உன் ப்ளாக்க மொழிப்பெயர்வு செய்து தரப்போற என்று பிரண்டுறாங்க! எல்லாம் கன்னடா மக்கள், இந்தி காரனுங்க. இப்ப தமிழங்களுமா! என்ன கொடுமைங்க இது சரவணன்.
நான் எனக்காக கண்டுபிடிச்சு(அந்தக் கண்டுபிடிச்சி இல்லை இது தேடிக் கண்டுபிடிச்சி) வைச்சிக்கிட்டது இருத்தலிய நவீனம் என்பது. நான் பின்நவீனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதற்காக நவீனம் மட்டும். கொஞ்ச காலம் கழித்து இருந்தலித்தின்பின்நவீனம் என்று மாறலாம் :) எல்லாம் கான்செப்ட் தானே எதைப் பற்றி எப்படி எழுதுறீங்க என்பதில் தானே இருக்கு.
மற்றபடிக்கு நன்றி
அரைபிளேடு,
ReplyDeleteவவ்வாலுக்கு சொல்லும் பொழுது ஒரு ப்ளோவில் இரண்டு மாசம்னு வந்திட்டது. அவ்வளவு நாள் எடுத்திருக்க மாட்டேன், இரண்டு வாரத்தில் எழுதிட்டு கொஞ்ச நாள் திருத்திக்கிட்டிருந்தேன்.
உழைப்பென்று எல்லாம் சொல்வது நக்கலடிப்பது போல் இருக்கிறது :) ஹாஹா
வவ்வால்,
ReplyDeleteஉங்களிடம் இருந்து அப்படிப்பட்ட எலக்கியங்கள் பிறக்க வேண்டும் என்பது எனக்கு ஆசையா இருக்கு. மாற்றுப்பார்வையில் பின்நவீனம் இருந்தா நவீனமாயிருக்குமா இல்லை பின்பின்நவீனமா இருக்குமா என்று பார்க்கணும்.
//என் பேரை நான் ஒரு தடவை சொல்லிக்கிட்டு கீ போர்டில் கை வைத்தாலே ஆயிரம் எலக்கியம் கக்குமே! //
Gifted Person என்று சொல்வதில்லையா அது போல் எல்லோரும் அப்படி இருந்துவிடுவதில்லை என்று வைத்துக்கொள்ளுங்களேன் :)
கிருத்திகா,
ReplyDeleteஎனக்கு மிரண்டா கெர் ரொம்பவும் பிடிக்கும் இதற்கு முன் எழுதிய ஒரு கதையிலும் படமென்று போட்டிருந்தது மிரண்டாவினுடையது தான். கொஞ்சம் தேடிக்கொண்டிருந்தேன் இன்னும் கதைக்கு சூட் ஆகிற மாதிரியான மிரண்டாவின் படத்தை. ம்ஹூம் கிடைக்கலை கடைசியில் ஓரளவு சமாதானத்துடன் ஒப்புக்கொண்டது இந்தப்படம்.
என் வரையில் படம் கொஞ்சம் கதை கொஞ்சம் மசாலா கலவை.
மற்றபடிக்கு நன்றிகள்.
தம்பி,
ReplyDelete//இது நல்லாதான் இருக்கு. அடுத்த இத விட நல்லா எழுதுவிங்க.//
ஏறக்குறைய எல்லோரும் இதை நோக்கி நகர்பவர்கள் தான் என்று நினைக்கிறேன். நன்றிகள்.
:-)))
ReplyDelete(அது ஏன் இலக்கியவாதிங்க பதிவுல மாத்திரம் அறிவுஜீவிங்க ஸ்மைலி போட மாட்டேங்குறாங்க...!! நானே கட்டுடைப்பு செஞ்சுட்டு போறேன்)
சுத்தம்
ReplyDelete