In கட்ட பொம்மு கட்டபொம்மன் தொண்டைமான் புதுக்கோட்டை வரலாறு

தொண்டைமான் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தாரா?

முன்னமே கூட ஒரு முறை கட்டபொம்முவும் உண்மையும்என்ற தலைப்பில் ஒரு விவாதம் ஓடியது. அதற்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தம் பெரிய அளவில் இல்லையென்றாலும் லிங்க் கொடுக்கிறென்.

  
நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம்.
என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும் என்று. இதை விவாதத்தின் பொழுது சொன்னால் உடனேயே நாளைக்கு அறிவியல் இன்றைக்கு உள்ளது என்று சொல்வதை நாளை இல்லை என்று சொல்லும் என்பார்கள். அப்பொழுது சொல்வேன் இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட விஷயத்தை வைத்து தான் பேசமுடியும் நாளைக்கு நிரூபிக்கப்படக்கூடிய விஷயத்தை கணக்கில் கொண்டு பேசமுடியாதென்றும். சரி என் ஜல்லியை இத்துடன் முடித்துக் கொண்டு பதிவின் விஷயத்திற்கு வரலாம்.

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி புதுக்கோட்டைக்கு வந்து தங்கி இருந்ததாகவும், அவரை ராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் நயவஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

புதுக்கோட்டைக்கு "காட்டிக்கொடுத்த ஊர்" என்று பாமர மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். நாடங்களிலும் கதைகளிலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் "காட்டிக்கொடுத்தான் தொண்டைமான்" என்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கிறோம்.

'காட்டிக்கொடுத்தான்' என்னும் சொல் வரலாற்று ஏடுகளில் சமீபகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லாகும்! கட்டபொம்மன் பிடிபட்டது புதுகோட்டையில்தான் என்பதையும் அவரை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த விவரங்களையும் எள்ளளவும் மறுப்பதற்கில்லல. ஆனால் கட்டபொம்மனை தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது சரிதானா? காட்டிக் கொடுத்தல் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் 'Betrayal' என்பதாகும். இச்சொல்லுக்கு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் தருகிறது. 'To deliver into the hands of an enemy by treachery in violation of trust' அதாவது "அடைக்கலம் என்று அண்டிவந்தவரை" தனது லாப நோக்கங்களுக்காக நயவஞ்சகமாக அவரது எதிரியிடம் ஒப்படைக்கும் செயல் எனப் பொருள் கொள்ளலாம். 

கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்டு வரவில்லை. அப்படி நிகழ்ந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பும் இல்லை. தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட அவர்களின் ஆதரவாளர் என்பது அப்போது நாடறிந்த செய்தி. இது கட்டபொம்மனுக்கு தெரிந்திருக்குமல்லவா? இந்நிலையில் அவர் எப்படித் தொண்டைமானிடம் பாதுகாப்பை நாடியிருக்க முடியும்? தொண்டைமானிடம் கட்டபொம்மன் அடைக்கலம் கேட்டுவந்தார் என்று சிலர் எழுதியிருப்பது அவர்களுடைய கற்பனைக் கதை!
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிரி. ஆங்கிலேயர் தொண்டைமானுக்கு நண்பர்கள். எதிரிக்கு எதிரி நண்பன். நண்பனுக்கு எதிரி எதிரி என்பது காலம் காலமாக நாம் கண்டுவரும் அரசியல் ராஜதந்திர சித்தாந்தம் அல்லவா? முடியுடைய மூவேந்தர் காலந்தொட்டு இன்றைய நாள் அரசியல் வரை, அரசியல்-பதவிப் போட்டிகள் காரணமாக தந்தையும் மகனும் சகோதரனும் சகோதரனும், உறவினரும் உறவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அழித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர். கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லையில் ஒளிந்திருப்பது, கலெக்டர் லூசிங்க்டன் கடிதம் எழுதிய பிறகே தொண்டைமானுக்குத் தெரியவருகிறது. (ஆங்கிலேயரின் கடிதங்கள் கூட கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்திருந்தான் என்று குறிப்பிடவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது) மேலாண்மை வகிப்பவருக்கு கட்டுப்பட்டு கட்டபொம்மனைக் கண்டுபிடித்து(ஆங்கிலேயரிடம்) ஒப்படைத்தது எப்படிக் காட்டிக் கொடுத்ததாகும் ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அப்போதைய அரசியலில் சர்வ சாதாரணமானவை!
இதற்குப் பிறகும் ஒரு கேள்வி எழக்கூடும், கோரிக்கை விடுத்தவன் அந்நிய நாட்டான், நம்மவனை - கட்டபொம்மனைத் தொண்டைமான் பிடித்துக் கொடுக்கலாமா?

இதுபற்றி விருப்பு வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும்! அக்கால அரசியல் சூழ்நிலை, வரலாற்றுப் பின்னணி தமிழகத்தை ஆண்டுவந்த சிற்றரசர்கள் மற்றும் பாளையக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகள், அவர்களுக்குள் இருந்த உறவு மக்களுக்கும் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் இருந்த உறவு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபின்பே இந்தச் செயலின் தன்மையை எடை போட முடியும்.
புதுக்கோட்டை ஒரு சுதந்திரமான அரசு அல்ல, ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஒரு சிற்றரசு. மேலாண்மைக்கு கட்டுண்டு கிடப்பதுதானே அரசியல் சித்தாந்தம்! ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானின் அப்போதைய நிலையும், அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழ்நிலையையும் பார்க்கிற போது கட்டபொம்மன் விஷயத்தில் அவர் செயல்பட்டவிதத்தில் எவ்விதத் தவறும் இருப்பதாக கூற முடியாது என்று ஒரு ஆய்வாளர்  கூறூகிறார்.(சிரஞ்சீவி - புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு 1980. பக்கம் 105)

தற்போதைய அரசியல் விழிப்புணர்ச்சிகளை வைத்து இன்றைக்க்கு 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டு கூறுவது ஏற்புடையதாகாது. சுதந்திரம் தேசியம் நம்நாடு நம்மவர் போன்ற உணர்வுகளெல்லாம் அறியாத காலம் அது. கட்டபொம்மன் காலத்தில் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தென்னாட்டில் இருந்த பெரும்பாலான சுதேச மன்னர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். ஆங்கிலேயரைக் பிடிக்கவில்லை என்றால் டச்சுக்காரரையோ பிரெஞ்சுக் காரரையோ அண்டி உதவி வேண்டிய பரிதாபமான சூழ்நிலையுந்தான் அக்கால சுதேச மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் காண்கிறோம். ஆகவே ஐரோப்பிய நாட்டினரின் தலைமையில் கீழேயே நமது நாட்டு மன்னர்களும் சிற்றரர்களும் அணி திரண்டு நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பூலித்தேவருக்கும் கூட ஆங்கிலேயரை எதிர்க்க டச்சுக்காரர்களின் உதவியை நாடினர் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன(yusufhkhan letter to Madras Council 15.6.1760 MCC. Vol 8. P 194 - 195, 205 - 218) பேயை விரட்ட பிசாசை துணைக்கு அழைத்த கதையல்ல இது? இருப்பினும் இது போன்ற அரசியல் சூழல் அப்போது தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.

சில உண்மை நிகழ்ச்சிகளையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையை அடுத்துள்ள தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களும் ஆங்கிலேயருக்கும் நிலவிய அரசியல் மேலாண்மைத் தொடர்பை சற்று காண்போம். கட்டபொம்மன் பிடிபட்டபிறகு, கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு கடிதம் எழுதி தமக்கு ஆதரவளிக்கும் படி கோருகிறார். சிவத்தையாவின் கடிதத்தைக் கொண்டுவந்த தூதுவன் அந்தக் கடிதத்தை சரபோஜியின் மந்திரியான தத்தாஜியிடம் கொடுக்க, தத்தாஜி கடிதம் கொண்டு வந்தவனை சிறையில் தள்ளிவிட்டு அக்கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பி வைக்கிறார். "ஆங்கிலேயருடன் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் பல ஒப்பந்தகளை செய்துகொண்டனர். ஒவ்வொரு ஒப்பந்தத்தாலும் மராட்டிய மன்னர்கள் சுய உரிமையை இழத்தல், படைக்குறைப்பு, ஆங்கிலேயப் படைகளை தஞ்சாவூரில் இருக்கச்செய்து அவற்றின் பராமரிப்பிற்குப் பெருந்தொகை அளித்தல், நவாபுடன் தொடர்புகொள்ளுங்கால் ஆங்கிலேயரின் வழியே தொடர்பு கொள்ளுதல், வெளிநாட்டுக் கொள்கையை ஆங்கிலேயரின் சொற்படியே அமைத்துக் கொள்ளுதல் ஆங்கிலேயரின் நண்பர்க்கும் பகைவர்கட்கும் இவர்களும் நண்பரும் பகைவருமாதல் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு இடையே அகப்படலாயினர். நேரிடையாகவொ மறைமுகமாகவோ இங்ஙனம் ஆங்கிலேயருக்கு அடங்கி அவர் வழி ஒழுகவேண்டி வந்தது(கே. எம் வெங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 1984 பக்கம் 59). இப்படி ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற சுதேச மன்னர்கள் தங்களுக்குள் போட்டியிடக் கொண்டு செயல்பட நிகழ்ச்சிகள் பலவாகும்.

மருது சகோதர்கள் ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்ப்பதாகக் கூறி திருச்சி பேரறிக்கையை (16.6.1801) வெளியிட்ட பின்னும்(Revenue Sundries Vol. 26/16.6.1801. pp 441 - 70) 24.7.1801ல் கவர்னர் கிளைவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் (Revenue Consultation Vol. 110 p. 1861 - 1869) தாங்கள் ஆங்கிலேயருக்கு கட்டூப்பட்டு கிஸ்தி செலுத்திவந்த வரலாற்றையெல்லாம் நினைவுகூர்ந்து, ஆங்கிலேயரின் நட்பை நடும் பாணியில் எழுதி இருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களையும் குறைகூறி எழுதியுள்ளனர். அவர்களது ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கத்தில் ஏன் இந்த முரண்பாடு என்பதை ஆராய வேண்டாமா?

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மனைப் பிடிக்க எட்டயபுரம் பாளையக்காரரின் படைகள் பின் தொடர்ந்து சென்றதாகவும் முதலில் கட்டபொம்மன் சிவகங்கைக்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்து புதுக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது(Radhakrishna Iyer S. - A General History of Pudukkottai State- P.304) இச்செய்தி ஆராயப்பட வேண்டியதாகும். புரட்சிப் பாளையக் காரர்களின் கூட்டணியில் கட்டபொம்மனும் இருந்தார். ஆகவே அவர் மருது சகோதரர்களின் ஆதரவைத் தேடி சிவகங்கை சென்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் முதலில் சிவகங்கை சென்று பின் அங்கிருந்து புதுக்கோட்டைக் காட்டு பகுதிக்கு வந்து ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் அப்படியானால் அவருக்கு அங்கு (சிவகங்கையில்) ஆதரவு கிடைக்கவில்லையா?

அக்கால இந்திய அரசியலில் ஐரோப்பிய நாட்டினரின் ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயர் தங்களது சக்தியை நிலைநாட்டி, நாட்டையே தங்களது ஏகபோக சொத்தாக பிரகடனப் படுத்திக் கொண்ட நிலையில், நமது நாட்டு(சுதேச) மன்னர்களும் சிற்றரசர்களும் பாளைக்காரர்களும் தங்களது பாதுகாப்பிற்கும் தங்களது குடிகளின் நலன் பாதுகாக்கப்படவும் நிலையானதொரு நேச சக்தியை நாடுவது இயற்கையே இந்த வகையில் புதுக்கோட்டை ஆங்கிலேயரை தனது நட்புக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில்(1799) தொடர்பு ஏற்படவில்லை என்பதும், அதற்கு முன்பே அதாவது 1755லேயே இவர்களுக்கிடையே ஒரு அரசியல் உடன்படிக்கை அடிப்படையில் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அது. 

கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுப்பதற்காக, புதிதாக ஆங்கிலேயர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்ததினாலேயே தொண்டைமானுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன என்று கூறுவது வரலாற்றை சரியாக படிக்காதவர்களின் கூற்றாக அமைகிறது. இதற்கு முன்பே இந்தியாவில் வேறெந்த சமஸ்தானங்களும், சிற்றரசுகளும் இல்லாத பல சலுகைகள் தொண்டைமானுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 1755ம் ஆண்டுக்கு முன்பே ஆற்காடு நவாபின் மேலாண்மையை ஏற்று ஆட்சி செலுத்திய தொண்டைமான் மன்னர்கள் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் பக்கம் சேர்ந்து கொண்டபோது, தொண்டைமானும் ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்தார் என்பது தெரியவருகிறது. இந்நிலையில்(அக்கால அரசியல் சூழ்நிலையில்) மேலாதிக்கம் வகித்த ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தது அரசியல் ரீதியாக ஏற்புடையதுதான் என்பது விளங்கும்.

ஆகவே புதுக்கோட்டை தொண்டைமான் - கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளை அக்காலச் சூழலையும் அரசியல் ஆதிக்க போராட்டங்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் 'காட்டிக்கொடுத்தான்' தொண்டைமான் என்பது வரலாற்ற்றுச் சான்றுகளுக்கு முரணானது என்பது அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும். கட்டபொம்மனை மிகைப்பட உயர்த்திக் காட்டுவதற்க்காக கதை, நாடகங்கள் எழுதப்போந்த சில புத்தக ஆசிரியர்கள் அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் "தொண்டைமான் காட்டிக் கொடுத்தான்" என்றும் புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்றும் எழுதிவருவது நல்ல வரலாற்றுச் செய்தியாகுமா? இது போன்ற ஆதாரமற்ற வாசகங்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக இருக்க முடியும்.

PS: மேற்சொன்ன பத்தியை எழுதியவர் 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' புத்தகத்தை எழுதிய டாக்டர் ஜெ. ராஜாமுகமது. பதிவை முழுவதுமாகப் படித்துவிட்டு அவர் சொல்லும் விஷயத்தை எதிர்த்து பின்னூட்டம் போடலாம். அந்தப் புத்தகம் படித்திருக்கிறியா இதில் இப்படி எழுதியிருக்கிறது என்று சொல்லாதீர்கள். எடுத்துப் போட்டு எழுதி லிங்க் கொடுத்தால் நன்றாகயிருக்கும், சும்மா அங்க இங்க என்று சொல்லவேண்டாம்.

Related Articles

37 comments:

  1. விரிவான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தொடர்புடைய புத்தகங்கள்

    1. The corporation that changed the world by Nick Robins

    2. பொன்அந்தி by எஸ்.பாலசுப்ரமணியன்

    ReplyDelete
  3. மோஹன்,
    //எடுத்துப் போட்டு எழுதி லிங்க் கொடுத்தால் நன்றாகயிருக்கும், சும்மா அங்க இங்க என்று சொல்லவேண்டாம்.//

    ஆக மொத்தம் பின்னூட்டம் எழுதும் போது ஒரு லின்க் கொடுக்கணும் இல்லைனா போடக்கூடாது, சரி நீங்கள் எழுதிய பின் அந்த புத்தகத்தின் லின்க் கொடுத்திங்களா?

    இது பற்றி மாற்றுக்கருத்து இருக்கிறது பின்னர் சொல்கிறேன்.

    ஆனால் ஆங்கிலேயர்களை அண்டி வாழும் நிலை அக்கால சுதேச மன்னர்களுக்கு இருந்தது என்பது மறுக்க முடியாதது அதே சமயம் அது கட்டாயமும் அல்ல, அவர்கள் சொகுசாக வாழ பணம் வேண்டும், ஆங்கிலேயர்கள் அதை ஆரம்பத்தில் அள்ளிவிட்டு மடக்கினார்கள். கிட்ட தட்ட லேவா தேவி , கந்து வட்டி போலத்தான் ஆங்கிலேயர்கள் செய்தார்கள். பணம் திருப்பி தர முடியவில்லை எனில் ஆட்சியை வரி வசூலிப்பை எழுதி வாங்கிக்கொண்டார்கள்.

    ReplyDelete
  4. வவ்வால்,

    நான் லிங்க் என்று சொன்னது புத்தகத்தின் லிங்க் இல்லை. புத்தகத்தில் இருந்து எடுத்து பதிவில் போட்டு அந்தப் பதிவின் லிங்க் கேட்டிருந்தேன்.

    athentic விஷயங்களுடன் பேசுவதாகவாவது இருக்குமே அப்படியிருந்தால் அதற்காகத்தான்.

    நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் கொடுத்திருக்கிறேன் இல்லையா?

    ReplyDelete
  5. வாய்ஸ் ஆன் விங்க்ஸ், நன்றிகள்.

    ReplyDelete
  6. அனானிமஸ்,

    எதற்காக இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறீர். எதையும் சொல்ல வருகிறீரா?

    ReplyDelete
  7. மோஹன்,
    //ணீtலீமீஸீtவீநீ விஷயங்களுடன் பேசுவதாகவாவது இருக்குமே அப்படியிருந்தால் அதற்காகத்தான்.
    //

    நீங்கள் சொல்வது புரிகிறது,படிக்கும் எல்லாப்புத்தகங்களும் நம்பத்தகுந்தவை என்று எடுத்துக்கொள்ள முடியாது, எனவே புத்தகத்தில் இருந்து சொல்லிவிட்டதாலேயே அது சான்றும் ஆகாது.

    மேலும் படித்ததை நம் பார்வையில் அலசி முன் வைப்பது நன்று.

    அப்படி நான் படித்ததை கொஞ்சம் என்பார்வையில் வைத்து சொல்கிறேன்,

    தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை , பிடித்துக்கொடுத்தான் என்றே வைத்துக்கொண்டாலும், அதை செய்யாமலும் இருந்திருக்கலாம், ஏன் செய்யவில்லை என்று கண்டிப்பாக தண்டித்து இருக்க மாட்டார்கள்.

    ஆனால் பிடித்துக்கொடுத்தார், ஏன், வெள்ளையர்களிடம் நல்லப்பெயர் வாங்க வேண்டும் என்று மட்டும் அல்ல , கொஞ்சம் இனப்பற்று, சாதிப்பற்றும் காரணம்.

    முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் தான் புதுக்கோட்டை தொண்டைமான் ,ராமநாதபுரம் சமஸ்தானம், சிவகங்கை சமச்தானம் எல்லாம்.

    பூலித்தேவன் வெள்ளையர்களுக்கு எதிராக போர் இட்டக்காலத்தில் , வீரபாண்டியனின் தந்தை வெள்ளையர் பக்கம் இருந்து பூலித்தேவனை தேடுவதில் உதவி புரிந்தார். மேலும் படைகளும் கொடுத்தார். களக்காட்டில் பூலித்தேவன் பதுங்கி இருந்த போது பிடிபட ஒரு காரணமாக இருந்ததும் அவர் தான்.

    ஏன் அப்படி செய்தார், அதாவது தெலுங்கு நாயக்கர் பாளையத்திற்கும், தமிழ் முக்குலத்தோர் வழி வந்த பாளையம் , சமஸ்தானங்களும் ஆரம்பத்தில் நட்புறவாக இருந்தன பின்னர் அவர்களுக்குள் பகைமை வந்து,நட்புறவு அவ்வளவாக இல்லை(ராணி மங்கம்மாவுடன் ராமநாதபுரம் சமஸ்தான கிழவன் சேதுபதி பல முறைப்போர் தொடுத்துள்ளார்) அதனை பிரித்தாலும் சூழ்ச்சி மூலம் வெள்ளையர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.முக்குலத்தோர் வசம் இருக்கும் பாளையம் மீது படை எடுக்க நாயக்கர்களை கூட்டு சேர்த்துக்கொள்வார்கள், நாயக்கர்களை அடக்க அந்த பக்கம் கூட்டு சேர்ந்துக்கொள்வார்கள்.

    அப்போது வெள்ளையருக்கு உதவி செய்ததைக்கணக்கில் கொண்டே பின்னர் கட்டப்பொம்மனை பிடிக்கவும் உதவியுள்ளார் தொண்டைமான், மேலும் , பரம்பரையாக நாயக்கர்கள் பாளையத்திற்கும், அவர்களுக்கும் இருக்கும் சிறு பூசல்களும் ஒரு காரணம்.

    அவுரங்க சீப் காலத்தில் சிவாஜிக்கு உதவி செய்து அவுரங்க சீப்பை அழிக்கவும் முயன்றது வெள்ளையர்கள், போர்ச்சுகீசியர்கள்.

    அவுரங்க சீப் வெற்றிப்பெற்றால் உடனே அவரிடம் போய் சமாதானம் பேசி விடுவார்கள்.

    அதே போல பல இடங்களிலும் இந்து மன்னரை வீழ்த்த முகலாய மன்னரை துணைக்கு வைத்துக்கொள்வார்கள், முகலாய மன்னரை வீழ்த்த இந்து மன்னரை வைத்துக்கொள்வார்கள்.

    திப்பு சுல்தான், ஹைதர் அலியை எல்லாம் இப்படி செய்து தான் பலவீனப்படுத்தி கடைசியில் வென்றார்கள்.

    ReplyDelete
  8. //அனானிமஸ்,

    எதற்காக இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறீர். எதையும் சொல்ல வருகிறீரா?//

    Well, the first book gives a perspective of how East India Company conducted it's business in UK as well as documents how they overpowered the several territories in Indian subcontinent between circa 1700 and 1850 AD. It also highlights some the events of how they anchored and penetrated southern part of India.

    My awe and fascination about E.I.C is because how a mere 'corporation' (a la a multinational like Coke, Microsoft, Reliance or Tata in today's world) changed the course of history in one part of this world. The E.I.C also had links the history of United States, India and China which is not very well documented.

    The second book is a fiction based on the life of Yusuf Khan (Kamal's Maruthanayagam for the uninitiated) with supporting historic facts. It deals about the events connecting Robert Clive, Yusuf Khan, Nawab of Arcot, Madurai Nayaks and The palayam rebels of south. According to this book, the kattabommus are no greater than thugs or bandits who influenced certain regions in the south.

    Both of these books provide different perspectives of history on Tamilnadu (or India in particular) which is not available in the popular forums or textbooks.

    It is alleged that the glorification of Kattabommus started only around 40s or 50s by the likes of Ma.Po.Sivagnanam and reached its cresendo when Sivaji Ganesan immortalised it with his acting in the movie Kattabomman.

    ReplyDelete
  9. //நீங்கள் சொல்வது புரிகிறது,படிக்கும் எல்லாப்புத்தகங்களும் நம்பத்தகுந்தவை என்று எடுத்துக்கொள்ள முடியாது, எனவே புத்தகத்தில் இருந்து சொல்லிவிட்டதாலேயே அது சான்றும் ஆகாது.//

    அப்படி 100% சொல்லமுடியாது இல்லையா! தொடர்ச்சியாய் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர் மேற்கூரிய நூலாசிரியர். நம் கையில் இருக்கும் தரவுகளை வைத்து ஒரு முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது என்றால் யாருடையது authentic என்று தான் பார்க்க முடியும் இல்லையா?

    நான் சொல்ல வருவது புதுக்கோட்டை தொல்பொருள் துறை காப்பாட்சியராகவும் "புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று ஆவணுக்குழு"வின் பகுதியாகவும் வேலை செய்தவர் என்ற முறையில் இவர் சொல்லும் விஷயத்தில் athenticity இருக்க வேண்டும் என்றும் அரசு அரங்காட்சியம் சார்பில் வெளிவிட்டிருக்கும் புத்தகத்தில் இருக்கும் விவரம் தவறானதாக இருக்க முடியாது என்றும் தான்.

    பிற்காலத்தில் இப்படியில்லை என்று கண்டுபிடிக்கலாம் ஆனால் அதை இப்பொழுது கன்ஸிடர் செய்யமுடியாது.

    ஏன் இதை எடுத்துப் போடவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் என்னைப் பொறுத்தவரை கட்டபொம்மனோ தொண்டமானோ புனித பிம்பங்கள் அல்ல! அவ்வளவே :)

    ReplyDelete
  10. //தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை , பிடித்துக்கொடுத்தான் என்றே வைத்துக்கொண்டாலும், அதை செய்யாமலும் இருந்திருக்கலாம், ஏன் செய்யவில்லை என்று கண்டிப்பாக தண்டித்து இருக்க மாட்டார்கள்.

    ஆனால் பிடித்துக்கொடுத்தார், ஏன், வெள்ளையர்களிடம் நல்லப்பெயர் வாங்க வேண்டும் என்று மட்டும் அல்ல , கொஞ்சம் இனப்பற்று, சாதிப்பற்றும் காரணம்.
    //

    ரொம்ப ஆபியஸான விஷயம் நீங்கள் சொல்வது இன்றுவரை என் அப்பாவிற்கு அந்த பற்று உண்டு. சொல்லப்போனால் நான் இல்லை இல்லை என்றாலும் எனக்குள்ளும் எங்கேயோ ஒரு மூளையில் இருப்பதாகவே வெகுசில சமயங்களில் உணர்கிறேன். அந்தக் காலத்தில் இல்லாமல் இருந்திருக்காது.

    ஆசிரியர் சொல்வது எல்லாம் 'காட்டிக்கொடுத்தான்' என்று சொல்வது சரியல்ல என்பதுதானே!

    ஆங்கிலேயர்கள் தோற்று டச்சுக்காரர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் வரலாறு மாற்றிப் பேசிக்கொண்டிருக்குமாயிருக்கும். தொண்டைமானை வரலாற்று வீரனாகவும் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவனாகவும். வலுத்தவன் எழுதுவது வரலாறு ஒப்புக்கொள்கிறேன்.

    ஹிட்லர் இரண்டாம் உலகப்போரை வென்றிருந்தால் நீங்கள் தற்பொழுது உலகம் எப்படியிருந்திருக்கும் என்றும் வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் நினைத்துப்பாருங்கள்.

    ------------------

    பதிவிற்கு சம்மந்தமில்லாதது என்றாலும் ஒரு விஷயம் இரண்டாம் உலகப்போரின் ஒரு சமயத்தில் என்று நினைக்கிறேன் இங்கிலாந்து ஹிட்லரிடம் நாமிருவரும் சேர்ந்து ரஷ்யாவை போட்டுத்தள்ளிவிடலாமா என்று கேட்டதாகப் படித்திருக்கிறேன்! இதைப் பற்றி உங்களுக்கு எதுவும் விவரம் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  11. மோஹன்,
    நேர்ப்பட பேசுகிறீர்கள்,பாராட்டுக்கள்!

    //கட்டபொம்மனோ தொண்டமானோ புனித பிம்பங்கள் அல்ல! அவ்வளவே :)//

    சரிதான், அதனால் தான் தொண்டை மானுக்கும் நாயக்கர்களுக்கும் இருந்த பகை அதனால் கட்டபொம்மனைப்பிடித்துக்கொடுப்பதில் அவருக்கு சங்கடம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினேன், இது அவரைப்பொருத்த வரைக்கும் நியாயம்.

    நியாயம் என்பது ஆளுக்கு ஆள் மாறும் தானே!

    //ஆசிரியர் சொல்வது எல்லாம் 'காட்டிக்கொடுத்தான்' என்று சொல்வது சரியல்ல என்பதுதானே!
    //

    ஆசிரியர் சொல்ல விரும்புவதும் சரி தான், ஆனால் பின்னாளில் திட்டமிட்டே இந்த காட்டிக்கொடுத்தல் என்பது எட்டையப்பருக்கு மட்டுமே ஒதுக்கிவிடப்பட்டதும் நடந்தது. இருவரும் தான் அப்போது கட்டபொம்மனுக்கு எதிராக இருந்தார்கள்.

    எட்டையப்பன் செய்தது கோட்டையில் இருந்த ஒரு பிளவை சுட்டிக்காட்டியது, மேலும் வெள்ளையருக்கு ஆதரவாக தளவாடம் , உணவு, வீரர்கள் எல்லாம் அளித்து ஆதரித்தது.

    இதனை அப்போது வெள்ளையருக்கு ஆதரவாக இருந்த அனைவரும் செய்தார்கள்.

    பூலித்தேவனுக்கு எதிராக கட்டபொம்மனின் தந்தை செயல்ப்பட்டது சரித்திரத்தில் அவ்வளவாக பேசப்படவில்லை, காரணம் பூலித்தேவன் சில காலம் போராடி பெரிதாக போராட்டம் இல்லாமல் சீக்கிரம் மாட்டிக்கொண்டு ,பின்னர் தப்பி சென்று மர்மமான முறையில் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வதோடு சரி அவர் இறந்தாரா , இல்லை இருந்தாரா என்பது குறித்து தெளிவான முடிவே அப்போது எட்டவில்லை.

    ஆனால் கட்டபொம்மன் , போராடி கைதாகி, விசாரணைக்குட்படுத்தப்பட்டு , தூக்கை சந்தித்தார். பிரிட்டீஷார் தூக்கில் ஏற்றிய முதல் இந்திய கலகக்காரார் அவர்.இதனால் அவர் மீது அதிக கவனம், மேலும் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, நாட்டுப்புற கதைகள் பாடல்கள் அதிகம்!

    பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் அப்போதைய போராட்டத்தை ஏனோ விடுதலைபோராகவே எடுத்துக்கொள்வதில்லை, அவர்களைப்பொறுத்த வரை சிப்பாய் கலகம் தான் முதல் போணி!

    ----------
    அந்த உலகப்போர் குறித்தான கதைகள் நானும் பலவும் கேள்விப்பட்டு இருக்கிறேன். பிரிட்டீஷ்க்கு அப்போது ரஷ்யா மீது வெறுப்பு இருந்தது அது அழியட்டும் என்று ஆசைப்பட்டதும் கேள்விப்பட்டது உண்டு. அதனால் தான் ஹிட்லர் ரஷ்யா மீது படை எடுத்த போது இங்கிலாந்து கொஞ்சம் அடக்கி வாசித்தது.

    நீங்கள் சொன்னது புதிய தகவல் தான்.

    ReplyDelete
  12. அனானிமஸ் உங்களுக்கு நான் போட்ட ரிப்ளையை காக்கா சாப்டிடுச்சி. இன்னொரு முறை அடிக்கிறேன்,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. பல சமயங்களில் வரலாற்றில் இப்படி நடந்துவிடுவதுண்டு. நம்மால் வரலாற்றைத் திருத்த முடியாவிட்டாலும் ஒரு மாற்றுப் பார்வையையாவது தரலாமே என்று தான் எடுத்து போட்டேன்!

    ReplyDelete
  13. எங்க ஊரைப் பத்தி நல்ல விதமா எழுதியிருக்கீங்க. நன்றி.

    எங்க வரலாற்று ஆசிரியர் கூட சொல்வார்
    காட்டிக்கொடுத்த ஊர் என்று சொல்வது தவறுஎன்று.

    எப்படி வந்ததோ, அதுஒரு அவப் பெயராக நிலைத்து விட்டது.

    நாகமலைபுதுக்கோட்டை என்று இன்னொரு ஊர் உண்டு, அதை வேறுபடுத்தி காட்ட இப்படி அழைத்தார்கள் என்று ஒரு ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

    எது நிஜமோ. ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. மோகன் தாஸ் 3 நாளைக்கு முன்னாடியே இதைப் பார்த்தேன். இருந்தாலும் எப்படியும் பின்னூட்டங்களில் நல்ல கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் அதற்கு பின்பு பின்னூட்டமிடலாம் என்று நினைத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே நடந்திருக்கின்றது.

    ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இந்திய வரலாறு என்பது, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர்கள் அல்லது கப்பம் கட்ட மறுத்தவர்கள அல்லது அட்லீஸ்ட் ஒரே ஒரு வீர வசனமாவது பேசியவர்கள் என்ற ஒற்றை தட்டையான பார்வையில் மட்டும் அணுகப்பட்டு அவர்களை வீர புருஷர்களாகவும், உன்னத தலைவர்களாகவும் நிறுவ முயற்சி செய்த, இன்னும் பன்முகத் தன்மையில், பல்கூறுகளுடன் ஆராய்ந்து, திருத்தி எழுதப்பட வேண்டிய ஆவணங்களாகவே எனக்கு பல முறை தோன்றி இருக்கிறது. ஏறக்குறைய அதே பொன்ற ஒரு முயற்சியுடன் தொடங்கப்பட்ட உங்களின் இந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பூலித்தேவனைப் பற்றியும் நடுவில் பேசிக் கொண்டிருந்ததால் இதைச் சொல்கிறேன். பூலித்தேவன் போர் அறிவிப்பு செய்த அதே காலகட்டத்தில் சிவகங்கையை ஆண்டவர்கள்தான் முத்து வடுக நாதரும், ராணி வேலு நாச்சியாரும். பின்னாளில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி என்று வேலு நாச்சியாரும், வெள்ளையரை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த முதல் பாளையக்காரர் என்ற பெருமையை முத்துவடுக நாதரும் பெற்றாலும், பூலித்தேவனின் வெள்ளையருக்கெதிரான போராட்டத்தில் இவர்கள் ஆதரவளிக்க வில்லை என்பது உண்மை. இதற்கு நிச்சயமாக அப்போதய அரசியல் சூழ்நிலைகள் காரணமாய் இருந்திருக்கலாம். முத்துவடுக நாதர் இறக்காமல், வேலு நாச்சியாரும் ஆங்கிலேயருக்கெதிராய் போராடாமல் இருந்திருந்தால், சரியான சமயத்தில் பக்கத்து பாளையக்காரனை காக்க மறந்திட்ட துரோகிகளாய் இவர்களை வரலாறு உருவகப் படுத்தி இருந்திருக்கலாம். அதை செய்ய இந்த ஒற்றை காரணம் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்கும்.

    நான் சொல்ல வருவது ஆங்கிலேயர் எதிர்ப்பு, ஆதரவு என்ற இந்த ஒற்றைக் காரணத்தைத் தாண்டி, வீரம், ஆட்சிமுறை, வரி வசூல் அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதையே.

    முதலில் வேலு நாச்சியார் அவர்களைப் பற்றியே தனியாக ஒரு பதிவு போட வேண்டும். அந்தளவிற்கு இவர் எனக்குள் ஆச்சர்யங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

    அப்புறம், நான் படித்த பல புத்தகங்களில்,(எஸ்.பா வின் பொன் அந்தி, ரா.கி.ரங்கராஜனின் காஞ்சிபுரத்தான், சேது நாட்டு வேங்கை ....இன்னும் பல) பாளயக்காரர்களை பற்றி பலவிதமாக கூறப்பட்டு இருக்கின்றது. இதைப் பற்றி இன்னும் நன்றாக தெளிவாக அறிய உருப்படியான புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்..

    ஏன்னா பல புத்தகங்களில் பாளையக்காரர்களை பலி வாங்குவதற்கென்றே ஒரு வீரன் அடர் இருளில், வாலிப வயதில், வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் தனியாக தன் பயணத்தைத் துவக்குகின்றான். அவன் பின்னாளில் யூசுஃப்கானாகவோ (மருதனாயகம்), காஞ்சிபுரத்தானாகவோ உருவெடுக்கின்றான். இது போன்ற வீரர்களின் பயணத்திற்கு காரணமாய் அமைந்த சம்பவங்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் குகுறுப்பு அடங்க மறுக்கிறது..

    ReplyDelete
  15. நந்தா எனக்கு புனைவுகளின் மீது நம்பிக்கையில்லை.

    நான் சொல்லிக்கொண்டிருக்கும் 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர் ஜெ ராஜா முகமது' பாளையக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் ஓரளவிற்கு.

    என்னால் முடிந்தால் தட்டி போடுகிறேன், நீங்களும் இந்தப் புத்தகத்தைத் தேடிப் பார்க்கலாம். புதுக்கோட்டை மன்னர்களுடன் ஒப்பிட்டு சில பாளையக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது அந்தப் புத்தகத்தில். ஆனால் தொடர்ச்சியாய் இப்பதிவுகளையே போட்டால் படிப்பவர்கள் அடையும் பீதி காரணமாகவே இன்னும் இரண்டு மூன்று ஜல்லிப் பதிவுகள் போடலாம் என்று வைத்திருக்கிறேன். பார்ப்போம்.

    ReplyDelete
  16. //நான் சொல்லிக்கொண்டிருக்கும் 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர் ஜெ ராஜா முகமது' பாளையக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் ஓரளவிற்கு.//

    அப்படியே அந்த புக்கை ஒரு பார்சல் அனுப்பறது. போனா போகுது கூரியர் செலவை வேணா நான் தந்துடறேன். :)

    ReplyDelete
  17. அனுப்பி வைப்பதைப் பற்றி எந்த பிரச்சனையும் இல்லை நந்தா. விக்கிபீடியாவிற்கு புதுக்கோட்டை பற்றி ஒரு ஆர்டிகிள் எழுத இருக்கிறேன்.

    எழுதியதும் அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  18. வித்தியாசமான பார்வை. பல புதிய (எனக்கு!) செய்திகள்.
    நன்றி, மோகன் தாஸ்!

    ReplyDelete
  19. Just Curious!
    What is the role of ettappan?
    I have been to the thirumayam fort, near pudukottai the place where they hung oomaidurai, brother of
    kattabomman. Do not remember the history!
    different anony

    ReplyDelete
  20. கட்டபொம்மன் பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று.

    அந்த காலகட்டத்தில் கட்டபொம்மன் ஒரு அரசன். தொண்டைமான் ஒரு அரசன். இருவரும் ஆங்கிலேயருக்கு வரி செலுத்துபவர்கள்.

    எனவே ஆங்கிலேயர்கள் கூறுவதை கேட்பதை தவிர தொண்டைமானுக்கு வேறு வழி இருந்திருக்காது.

    ஆங்கிலேயரால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கட்டபொம்மனுக்கு தொண்டைமான் உதவ முடியாது.

    தொண்டைமான் கட்டபொம்மனை கைது செய்ய உதவினார் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். Betrayal என்பது ஒரு கடுமையான வார்த்தை என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. நடு நிலையான கருத்து.

      Delete
  21. அருண்மொழி,

    நன்றி.

    ReplyDelete
  22. எட்டப்பன் வீரபாண்டியன் விவகாரத்தில் நடந்துகொணட முறை சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    கல்லணைக் கால்வாய் வெட்டியபோது ஆங்கிலேயர்கள் புதுக்கோட்டைக்கும் சேர்த்து பாசன வசதி செய்து தருவதாகக் கேட்டதாகவும் புதுக்கோட்டையை ஆண்டவர்கள் மறுத்துவிடாதாகவும் ஒரு செய்தி உள்ளது. உண்மையா?

    உண்மையெனில், மக்கள் நலனைவிட சுய நலமிக்க கூட்டம்தான் புதுக்கோட்டையை ஆண்டது என்பது நிரூபனம் ஆகிறது.

    --------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - அக்'2011)

    ReplyDelete
  23. "கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுப்பதற்காக, புதிதாக ஆங்கிலேயர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்ததினாலேயே தொண்டைமானுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன"
    சலுகைகாகவே இன்றும் தொடர்கின்றன

    ReplyDelete
  24. தறுதலை,

    பதிவிலேயே சொல்லியிருப்பதைப் போல் நீங்கள் சொன்னதற்கு எதுவும் லிங்க் இருந்தால் அடிக்கவும்.

    ReplyDelete
  25. viyukam,

    அதிலென்ன பிரச்சனை.

    ReplyDelete
  26. மோஹன்,

    ஆஹா இது மீளவிட்டான்ப்பதிவா? எது எப்படியோ இன்னமும் மோஹன் அசராமல் மட்டையடித்துக்கொண்டிருப்பதைக் காண்கையில் மகிழ்ச்சியே!

    மசால்வடை தேடி ஓடி வரும் எலி போல பதிப்பின் தலைப்பு என்னை இழுத்து விட்டது. அப்போதே சில பின்னூட்டங்கள் போட்டு இருக்கிறேன். நிறைய சொல்ல நினைத்து தொடர முடியாமல் போச்சு அப்போ.

    இப்பவும் உமக்கு ஆட்சேபம் இல்லையெனில் ஸ்டார்ட் தெ மியுஜிக் என்று ஒரு செகண்ட் இன்னிங்ஸ் ஆடலாமா?

    ReplyDelete
  27. போடுங்களேன் வவ்வால். உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.

    ReplyDelete
  28. மோஹன்,

    நன்றி! சரி மீண்டும் தோண்டுவோம்,

    //மருது சகோதர்கள் ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்ப்பதாகக் கூறி திருச்சி பேரறிக்கையை (16.6.1801) வெளியிட்ட பின்னும்(Revenue Sundries Vol. 26/16.6.1801. pp 441 - 70) 24.7.1801ல் கவர்னர் கிளைவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் (Revenue Consultation Vol. 110 p. 1861 - 1869) தாங்கள் ஆங்கிலேயருக்கு கட்டூப்பட்டு கிஸ்தி செலுத்திவந்த வரலாற்றையெல்லாம் நினைவுகூர்ந்து, ஆங்கிலேயரின் நட்பை நடும் பாணியில் எழுதி இருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களையும் குறைகூறி எழுதியுள்ளனர். அவர்களது ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கத்தில் ஏன் இந்த முரண்பாடு என்பதை ஆராய வேண்டாமா?

    பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மனைப் பிடிக்க எட்டயபுரம் பாளையக்காரரின் படைகள் பின் தொடர்ந்து சென்றதாகவும் முதலில் கட்டபொம்மன் சிவகங்கைக்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்து புதுக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது(Radhakrishna Iyer S. - A General History of Pudukkottai State- P.304) இச்செய்தி ஆராயப்பட வேண்டியதாகும். புரட்சிப் பாளையக் காரர்களின் கூட்டணியில் கட்டபொம்மனும் இருந்தார். ஆகவே அவர் மருது சகோதரர்களின் ஆதரவைத் தேடி சிவகங்கை சென்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் முதலில் சிவகங்கை சென்று பின் அங்கிருந்து புதுக்கோட்டைக் காட்டு பகுதிக்கு வந்து ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் அப்படியானால் அவருக்கு அங்கு (சிவகங்கையில்) ஆதரவு கிடைக்கவில்லையா?//

    ஏன் சிவ கங்காவில் கெட்டிபொம்முவிற்கு ஆதரவுக்கிடைக்கவில்லை என்பதனை பார்ப்போம்,

    அதற்கு சிவகங்கா சமஸ்தானத்தின் அப்போதைய நிலை என்ன என்பதை தெரிந்தது கொள்ள வேண்டும்,

    முத்துவடுகநாதர் இறப்பிற்கு பின் மருது சகோதரர்கள் உதவியுடன் வேலுநாச்சியார் தப்பி திண்டுக்கல்லுக்கு சென்று அங்கு முகாமிட்டிருந்த ஹைதர் அலியை ராக்கி கட்டி சகோதரராக ஏற்று போர் உதவி கேட்கிறார், அவரும் உதவுவதாக முதலில் சொல்கிறார், ஆனால் மைசூரில் உடையார்கள் ஹைதருக்கு எதிராக வெள்ளையருடன் ஒப்பந்த்அம் செய்து கொண்டு போர் தயாரிப்புகளில் இறங்கும் செய்தி கிடைக்கவே ஹைதர் மைசூரின் மீது கவானம் செலுத்த போய் விடுகிறார்.

    சில மாதங்கள் திண்டுக்கல்லில் இருந்தும் எவ்வித உதவியும் கிடைக்காததால் விரக்தியடையும் வேலு நாச்சியார் வெள்ளையருடன் சமாதானமாக போக முடிவு செய்கிறார்.

    இதனிடையே பெரிய மருதுவை வேலு நாச்சியார் மறுமணம் செய்து கொள்கிறார்.பெரிய மருதுவையே ராஜாவாக நியமிக்கும் படியும் முன்னர் நடந்த்அ போருக்கான இழப்பீடு , மேலும் கட்ட வேண்டிய வரி பாக்கி அனைத்தும் கட்டி விடுவதாகவும் வெள்ளையருக்கு கடிதம் எழுதுகிறார்.

    வெள்ளையர்களும் ஏற்றுக்கொள்வதுடன் , கூடுதலாக சில நிபந்தனைகள், மேலும் இரண்டு மடங்கு வரி எல்லாம் போட்டு ஏற்றுக்கொண்டால் சமாதானம் இல்லை சண்டை என்கிறார்கள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டு மருது, வேலுநாச்சியார் சிவகங்கா திரும்புகிறார்கள். ஆரம்பத்தில் கேட்ட வரியை எப்படியோ மருது செலுத்தினாலும் ,பின்னர் நிதி சுமை காரணமாக பாக்கி வைத்து தவனை கேட்டுக்கொண்டிருந்தார்கள். மேலும் நிபந்தனைப்படி படை, கோட்டை இவற்றை மேம்படுத்தக்கூடாது. ஆனால் மருது காளையார் கோவிலில் புதியக்கோட்டை, படை பலம் எல்லாம் மேம்படுத்தினார்கள்.

    இதனால் வெள்ளையர் கோபம் அடைந்து எச்சரித்துக்கொண்டிருந்த காலத்தில் தான் கெட்டி பொம்மு உதவிக்கேட்டு போனார், ஏற்கனவே கோவத்தில் இருக்கும் வெள்ளையர்களை மேலும் கோவப்படுத்த வேண்டாம் என்றே மருது தட்டிக்கழிப்பார்.

    மேலும் இதில் ஒரு இனவாதமும் இருக்கு. மருது சகோதரர்கள் அரசாலும் பரம்பரை இல்லை, அவர்கள் அரசால்வதை முத்துவடுகநாதர் சகோதரர்கள், மற்றும் சக மறவர் பாளையத்தார் ஏற்றுக்கொள்ளாமல் மருதுவினை ஆட்சியிலிருந்து தூக்க உள்குத்து அரசியல் செய்துக்கொண்டிருந்த காலம், மேலும் வெள்ளையருக்கும் கடிதம் போட்டு மருதினை பதவியில் இருந்து நீக்க வேன்டும், அதற்கு படை உதவி செய்ய கோரியிருந்தார்கள்.

    இந்நிலையில் தெலுங்கு பாளையத்தாரான கெட்டிபொம்முவிற்கு உதவினால் பிற மறவர் பாளையத்தார் எக்காலத்திலும் நம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், மேலும் வெள்ளையருடன் எப்போது சண்டை வரும் என தெரியாத நிலையில் அனைவரையும் பகைத்துக்கொள்ள நேரிடும் எனவே தான் சிவகங்காவில் இருந்து வெறும் கையுடன் கெட்டிபொம்மு திரும்பினார்.

    மீதி அடுத்தப்பின்னூட்டத்தில் தொடரும்

    ReplyDelete
  29. தொடர்ச்சி....
    கெட்டி பொம்முவின் தாத்தா ஜெகவீரப்பாண்டியர் ஒரு காலத்தில் வெள்ளையருடன் கூட்டு வைத்து பூழித்தேவனை தோற்கடிக்க உதவி இருப்பார், எனவே அப்போது தெலுங்கு பாளையத்தார் மீது மறவர் பாளையத்தார் பகை கொண்டிருந்தனர் , கூடவே எல்லை பிரச்சினையில் எட்டப்பனுட்டன் கெட்டி பொம்முவிற்கு விரோதம் உண்டு, மேலும் கெட்டிபொம்மு பாளையத்தை சேர்ந்த கள்ளர்கள் மற்றப்பாளையன்களில் அதிகம் அட்டகாசம் செய்திருந்தனர் அதனை கெட்டி பொம்மு அடக்கவில்லை என கோபம் வேறு உண்டு.இதனாலேயே வெள்ளையர் அப்போது கெட்டிபொம்மு கொள்ளையர் என்ற குற்றமும் சாட்டினார். தானாதிபதி சுப்பிரமணியம் வேறு அப்போது நெற்களகஞ்சியத்தை கொள்ளை அடித்திருப்பார்.

    இப்படி பல முனையிலும் சிக்கலை வாங்கி வைத்திருந்த காரணத்தினாலேயே வீரபாண்டிய கெட்டிபொம்மு என்கிற கருத்தப்பாண்டி தோற்றுப்போனார்.

    தற்சமயம் கைவசம் எந்த நூலும் இல்லை நினைவில் இருந்தே எழுதினேன் பிழைகள் இருந்தால் பொருத்தருள்க!

    ReplyDelete
  30. மோஹன்,

    சிவகங்கா சென்று ஆதரவு கிடைக்காமல் ஏன் கெட்டி பொம்மு புதுக்கோட்டைப்பகுதிக்கு வந்தார் என்பதிலும் ஒரு காரணம் இருக்கு. அதற்கு புதுக்கோட்டை சமஸ்தானம் எப்படி உருவானது எனப்பார்க்கவேண்டும்.

    இது கிட்டத்தட்ட கணபதி அய்யர் பேக்கரி கதை தான்.

    ஆரம்பத்தில் புதுக்கோட்டை தனி சமஸ்தானம் கிடையாது சிவகங்காவின் ஒரு பகுதியே, அதனை ஆண்டவர் கிழவன் சேதுபதி ஆவார்(கிழவன்= தலைவன்) அவருக்கு ஒரு ஆசை நாயகி உண்டு, அவர் மீது தீராத மையல் கொண்டிருந்தார், கிழவன் சேது, அதனைப்பயன்படுத்திக்கொண்டு சஎன் தம்பி சும்மா ஊரை சுத்தி வரான் அவனுக்கும் கொஞ்சம் பிரிச்சுக்கொடுத்தா பொழைச்சுப்பான், என்று நச்சரிக்கவே காதல் மயக்கத்தில் அவரும் புதுக்கோட்டை என்ற பகுதியை பிரித்து ரகுநாதன் என்ற தம்பிக்கு கொடுத்தார் அவராகவே தொண்டைமான் பட்டம் போட்டுக்கொண்டு ஆள ஆரம்பித்தார். இதனால் அப்போது கிழவன் சேதுபதி வாரிசுகளுக்கும் அவர்களுக்கும் பகை உண்டு. மேலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தை அப்போதைய பாளையத்தார் சம அந்தஸ்தில் வைத்து மதிப்பதும் இல்லை, இதனால் எப்போதும் உறவா, பகையா என தெரியாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தார் புதுக்கோட்டை ராஜா.

    புதுக்கோட்டை எப்போதும் ஒரு பஃபர் ஸ்டேட் ஆகவே இருந்தது எப்போது யாருடன் வேண்டுமானாலும் அணி சேர்வார்கள். எனவே நாம் போனால் ஒரு வேளை உதவிக்கிடைக்கலாம் என்றே கெட்டி பொம்மு அந்தப்பக்கம் போனார். ஆனால் கெட்டிபொம்மு சினேகத்தை விட வெள்ளையர் சினேகமே சிறப்பானது என விஜயரகுநாத தொண்டைமான் முடிவெடுத்து பிடித்துக்கொடுத்து விடுவார்.

    why word verification, moderation also there?plz remove wordverification!

    ReplyDelete
  31. இல்லை நான் பதிவுலகில் இல்லாமல் இருந்த பொழுது, வேர்ட் வெரிபிகேஷன் போட்டு வைத்தேன்.

    இல்லாவிட்டால் நிறைய பின்னூட்டங்கள் - அனாமத்து - வ்ந்து மெயிலில் விழும்.

    இப்ப எடுத்துவிடுகிறேன்.

    ReplyDelete
  32. Read this book , written by a British
    commander during kattabomman and maruthu brothers period.

    http://archive.org/details/militaryreminisc01wels

    ReplyDelete
  33. எக்ஸலன்ட் போஸ்ட் பிரதர்...

    வவ்வால் நிறைய பின்னூட்டம் போடிருக்கிறார்.. இன்னும் படிக்கவில்லை... நாளை முடிந்தால் வருகிறேன்...


    பட் எதிரிக்கு எதிரி கான்செப்ட் சூப்பர்... தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்கும் அள்வுக்கு கட்டபொம்மனும் ஒன்றும் அறியாதவர் அல்ல... நல்ல கோணத்தில், நேர்மயாய் அணுகி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. New information I was always fascinated by Katta Bomman bcos of Sivaji Ganesan' flamboyant acting. Do we have any published book on Katta bomman some body even had commented him as Ketti bommu
    Kindly clarify

    ReplyDelete
  35. மோகன்தாஸ் இளங்கோவன் அவர்களது கட்டுரை புதிய கோணத்தில் உள்ளது .

    சிந்திக்க வேண்டிய ஒன்றுதான் .

    இம்மாதிரி பல்வேறு வரலாறுகள் உண்டு.

    எழுத்தாளரின் பயணம் தொடரட்டும் .


    அன்புடன்

    எல்.தருமன்
    18. பட்டி.

    ReplyDelete

Popular Posts