In நாத்தீகம்

நாகார்ஜுனனின் அரசியல்

ஒரு நபர் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் நேரடி அனுபவத்தை விடவும் எழுத்தின் வழி தீர்க்கமாக பதிந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன். எனக்கு நாகார்ஜுனன் அறிமுகமானது அத்தனை நல்லவிதமாய் இல்லைஜெயமோகனின் இந்த கோணங்கியைப் பற்றிய பதிவில் தான் எனக்கு நாகார்ஜுனனின் அறிமுகம் கிடைத்தது. 'பின் தொடரும் நிழலின் குரல்' பற்றிப் பேசும் பொழுதெல்லாம் சொல்லும் 'ரஷ்ய வரலாறு' அப்படிங்கிற ஒரு ஐட்டத்தை தனிப்பட்ட முறையில் எங்கையாவது படிச்சிட்டு பின்னாடி இந்தப் புத்தகத்தை கையில் எடுங்க என்ற அறிவுரையை எனக்கு நானே திட்டத்தில் செய்து கொள்ளாததன் பிரச்சனை நாகார்ஜுனனைப் பற்றி மனதில் பதிந்து போன இமேஜ். இதில் கொடுமை என்னான்னா, இவரை விடவும் 'அசிங்கப் படுத்தியிருக்கும்' கோணங்கியைப் பற்றி ஜெ.மோவின் பதிவு படிப்பதற்கு முன்னமே கொஞ்சம் தெரியுமென்பதால் ஜெமோவின் கோணங்கி இமேஜ் அத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தலை; ஜெயமோகனின் வயித்தெரிச்சலை பற்றி ஏற்கனவே மனதில் உருவாகியிருக்கும் கோட்டோவியத்தில் இன்னொரு கோடொன்று அதிகமானதைத் தவிர்த்து. நல்ல வேளை 'நவீன தமிழ் இலக்கியம்' எனக்கு ஜெயமோகனின் அறிமுகத்தில் இருந்து தொடங்கவில்லை என்று எப்பொழுதும் நினைத்துக் கொள்வதுண்டு.

என் அரசியலுடன் 95% பொருந்தக்கூடிய அரசியல் கொண்டவராயிருந்தாலும், 'கடவுள் நம்பிக்கை' என்கிற விஷயம் தான் என்னை அந்த நபரின் பேரில் ஈர்க்கவோ விலக்கவோ செய்கிறது. பாலாவினைப் போல ஜெயமோகனும் என் வயதில் ஒரு பகுதியை காவு வாங்காமல் போனதற்கு ஒரே காரணம் அதே பாலகுமாரன் தான், அங்கே பட்டது ஜெயமோகன் விஷயத்தில் கவனமாக இருக்க வைத்தது. இல்லையென்றால் எனக்கு ஜெயமோகனின் எழுத்து பிடித்திருந்த வேகத்திற்கு 'தோ கிடைச்சிட்டார் நம்ம குரு' என்று தான் ஆகியிருப்பேன், தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் தான். இன்றைக்கும் ஜெயமோகனின் எழுத்தின் மீது அதீத பிரியம் உண்டு ஆனால் அவர் சொல்லும் எல்லாவற்றிற்கும் மற்றொரு பக்கம் (நிச்சயமாக) இருக்கும் என்ற நம்பிக்கையுடன். வாழைப் பழத்தின் மேல் ஊசியேற்றுவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஜெமோ அதைச் செய்வதில் வெகு சாமர்த்தியசாலி, என்னிடம் இருந்த நாகார்ஜுனனின் பிம்பம் அதற்கு மிக நிச்சயமான உதாரணம்.

என் ignoranceன் விளிம்பிற்குள் மாட்டிக் கொண்டிருந்த நாகார்ஜுனனுடைய பதிவுகளை எப்படியோ(விழிகளின் கதை வழி?!) படிக்கத் தொடங்க, என் இயல்பான பழக்கமான தொடர்ச்சியான மேய்தலில் இரண்டொரு பதிவிலேயே வேறு ஒரு இமேஜை கொண்டு வந்திருந்தார். தொடர்ச்சியான பதிவு வாசிப்பின் வழி, நான் தேடிக் கொண்டிருக்கும் கொண்டிருந்த அறிமுகம் எனக்கு கிடைக்கத் தொடங்கியது. அவருடைய பதிவில் ஒரு மறுமொழி போட்டிருப்பேனாயிருக்கும், நிறைய பதிவுகள் படித்திருந்தேன். ஒரு இரவு 10 மணி போல் அவர் பதிவில் நுழைந்து காலை நான்கு நான்கரை மணிக்கு வெளியேறிய நினைவெல்லாம் உண்டு. நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டிய பதிவுகள், light reading வகையைச் சார்ந்தவை அல்ல. தொடர்ச்சியான அவர் பதிவு மேயல்களின் வழி, அவருடைய அரசியலானது நான் இப்பொழுது என்னுடையது என்று நம்பிக்கொண்டிருக்கும் அரசியலை ஒத்ததாகவே இருக்கிறது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் காலம் வரையிலும்.

ஃபூக்கோ பற்றிய, அல்துஸ்ஸார் பற்றிய பதிவுகள் வேண்டுமானால் உதாரணத்திற்குச் சொல்லலாம். ஒரு நிறைவான பணியை அவர் தமிழிணையத்திற்குச் செய்து கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அவர் சில சமயம் வாசகர் எண்ணிக்கை பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் பின்னூட்டம் போடலாம் என்று கைகள் அரிப்பதுண்டு இதுவரை பொறுத்துக் கொண்டேயிருந்திருக்கிறேன். தமிழிணையத்தில் நிறைய நன்றாய் எழுதும் மக்கள் இந்த வாசகர் எண்ணிக்கை, பின்னூட்டம் போன்ற அரசியல்களில் தலை கால்களை இட்டு நகர்ந்திருப்பதை அறிவேன். வளர்மதியிடம் நான் எதிர்பார்த்த விஷயங்களை நாகார்ஜுனன் செய்துவருகிறார், வலையுலக மொக்கை அரசியல்களைத் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்துவிடுங்கள் என்று வளர்மதியிடம் சொல்லாத நாளில்லை, நாகார்ஜுனன் செய்து வருகிறார். இதையெல்லாம் விட பெரிய அரசியலைச் சந்தித்தவர் என்பதால் இது சாத்தியமாகியிருக்கலாம். இணையத்தில் படிக்கத் தொடங்கிய பின்னர் என் கொள்கைகள் என்று வைத்திருந்தவைகளில் பல சுக்கு நூறாகி நொறுங்கியிருக்கிறது, சிலவற்றின் கனம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. நொறுங்கியதில் முக்கியமானவை இந்திய தேசம், இந்து மதம், ஜாதி வித்தியாசம் சம்மந்தப்பட்டவை இன்று முற்றிலும் காணாமல் போய்விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் முன்பிருந்த அளவுகளில் நிச்சயம் இல்லை என்று சொல்வேன்.

அதற்கு முக்கியக் காரணம் கடவுள் நம்பிக்கையின்மை என்பது தான். அதுதான் தொடக்கப்புள்ளி, அங்கிருந்து தான் உடையத் தொடங்கின மேற்சொன்னவை அனைத்தும். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் உடன் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் என்னால் கொள்கை அளவில் அவர்கள் சொல்லும் அனைத்திலும் கடவுள் நம்பிக்கை என்ற கடைசி இழை தொங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணர முடிகிறது. கடைசி வரை சுந்தர ராமசாமி கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தார் என்று படிக்க நேரும் பொழுது அவருடைய அரசியல் தாண்டியும் அவரை தொடர முடிகிறது. ஒரு பழக்கத்தைக் கொண்டு ஒருவரை அறியும் முயற்சி படு தோல்வியில் முடியலாம், உதாரணம் ஹிட்லர்; தீவிரமான வெஜிடேரியன். ஆனால் கடவுள் நம்பிக்கையின்மை என்பது அப்படியல்ல என்றே நினைக்கிறேன், நீங்கள் வெளிக்காக நடிக்காமல் உண்மையில் நாத்தீகவாதியாக இருந்தால் நீங்கள் வைத்திருக்கும் எந்தக் கொள்கையையும் கேள்வி கேட்க முடியும். கடவுள் நம்பிக்கையின்மை முதற்கொண்டு, அதனால் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் தவறுகளை உணர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

இதைப்பற்றி என் நண்பர்களுடன் பேசும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் என் பெண்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளும் பின்னூட்டங்களும் சண்டைகளும் நினைவுபடுத்தப்படும். உன் கடவுள் நம்பிக்கையின்மை, பெண்கள் எழுதுவதை எல்லாம்(பெண்ணியத்தை அல்ல) எதிர்ப்பதை தவறென்று சொல்லவில்லையா என்று கேட்கப்படும். நான் கடைசி வரை இதைத்தான் சொல்லி வந்திருக்கிறேன், பெண்ணியம் என்கிற பெயரில் இங்கே பதிவில் அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு பதில் சொல்வது தவறென்று எனக்கு இன்னமும் படவில்லை. பெண் சுதந்திரம் பெண்ணியம் என்பது என் அளவில் வித்தியாசமானவையாக இன்று இருக்கின்றன, நாளை தொடர்ச்சியான என் வாசிப்பினால் அது மாற்றமடையலாம். அன்று நான் முன்பு எழுதியவை எதுவும் தவறானவை என்ற எண்ணம் எனக்கு வருமென்றால் அதை வெளிச்சொல்வதில் இருக்கும் தயக்கத்தை கடவுள் நம்பிக்கையின்மை போக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

Related Articles

1 comments:

  1. பதிவை மீள்பார்வை செய்துவிட்டு கோணங்கி பற்றியும் தெரிந்துவிட்டு வருகிறேன்.ஆளாளுக்கு ஒவ்வொரு பிம்பத்தைக் காட்டினால் எதனை உறுதிப் படுத்துவதெனத் தெரியவில்லை.

    ReplyDelete

Popular Posts