பதினைந்து நாட்களுக்கான ஒரு பயணத்திட்டத்தை எத்தனை நேர்த்தியுடன் செய்ய முடியுமோ அத்தனை நேர்த்தியுடன் செய்யப்பட்ட பயணம் நான் லதாக் சென்று வந்த பயணம். மூன்று நபர்கள் சூப்பர் பைக்கில்(பிரபு, சுமித், சுனில்), ஒரு ஆள் பல்ஸரில்(சேத்தன்) மற்றும் நான் என மொத்தம் ஐந்து பேர். பைக்குகள் நான்கையும் நாங்கள் கிளம்புவதற்கு முன்பே சண்டிகர் அனுப்பிவிட்டு நாங்கள் அங்கே சென்று பிக்கப் செய்து கொள்வதாக ப்ளான். வண்டிக்குத் தேவையான சாமான்களையும் அந்தப் பார்சலிலேயே அனுப்பிவிட்டு, நாங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலை பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பினோம். முன்பே இந்த மக்களுடன் xBhp வழியாய் பயணங்கள் சென்றிருந்தேன் அதுமட்டுமில்லாமல் ஒருவர் என்னுடன் தற்சமயம் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் மற்றவர் வேலை பார்த்தவர் என்பதால் மிகச்சுலபமாக எங்களால் உரையாட முடிந்திருந்தது. முன்னிரவே கிளம்பிப்போய் விமானநிலையத்தில் பௌர்னமி நிலவை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.
டெல்லியில் இறங்கிய பொழுது தான் அந்தச் செய்தி காதிற்கு வந்தது, பைக்குகள் இன்னும் சண்டிகர் சென்றடையவில்லை என்றும், டெல்லியில் இருந்து அனுப்பிவிட்டதாகவுமான ஒன்று. மற்றவர்களைப் பற்றித் தெரியாது, ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த பதினைந்து நாள் லதாக் பயணம் முழுக்க மொக்கையாக இருக்கப்போகிறது என்று பயந்து கொண்டே இருந்தேன், ஏனென்றால் சூப்பர் பைக்குகள் ஆகட்டும் சாதாரண பைக் ஆகட்டும் பிரச்சனை என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஏதாவது ஒரு பைக்கிற்கு பிரச்சனை வந்தால், அஷ்டே முடிந்தது; ஒரு நாள் பிளான் அவுட். பின்னர் லதாக் பயணத்தை எப்படித் திட்டமிட்டிருந்தோம் என்று சொல்லும் பொழுது ஒரு நாள் ஊற்றிக் கொண்டால் நடக்கும் பிரச்சனை புரியும். எனவே நான் அவர்கள் பைக்குகள் சண்டிகர் சென்றிருக்கும் என்று நினைக்கவேயில்லை பெங்களூரில் இருந்து கிளம்பும் பொழுது, அது அப்படியே நடந்தது. டெல்லியில் இருந்து ஒரு இண்டிகா பிடித்துக் கொண்டு சண்டிகர் கிளம்பினோம், வழியெல்லாம் சுனில் பைக்குகளைப் பற்றி பார்சல் அலுவலகத்தில் விசாரித்தபடி வந்தார்.
ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லையே, பைக் சென்று சேராவிட்டால் அன்றிரவு மணாலி சென்று சேரும் எண்ணம் பாழ் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பைக்களை கொண்டு வந்த குட்டி 404 சின்ன ஆக்ஸிடெண்டில் சிக்கிக் கொண்டாதாகக் கேள்விப்பட்டதும் இவர்கள் தலைகீழாக நடக்கத் தொடங்கியிருந்தார்கள், சும்மா கிடையாது எல்லா வண்டிகளும், வண்டிக் காசுக்கு மட்டுமே லட்சங்களை அழுது வாங்கியவை. இருக்காதா பின்ன. சண்டிகரில் ஒரு ஹோட்டல் எடுத்துக் கொண்டு தங்கினோம், பார்சல் அனுப்பி வைத்த கம்பெனியின் தொலைபேசி அலைப்பிற்காகக் காத்திருந்த படி. டெல்லி - சண்டிகர் அதிக தொலைவு கிடையாது நாங்கள் மதிய சாப்பாடிற்கெல்லாம் சண்டிகர் வந்திருந்தோம். மதிய சாப்பாட்டை முடித்ததும், மேற்படி பைக் நண்பர்கள் தங்களுடைய பைக்குகளைத் தேடிச் சென்று வருவதாகச் சொல்லிக் கிளம்பினர். நான் ஹோட்டல் அறையில் சுகவாசியாக தூங்கிக் கொண்டிருந்தேன்.
திங்கட் கிழமை மாலை பைக்குகள் வந்து சேர்ந்திருந்தன, 404 கீழே விழுந்ததாலோ என்னவோ இவர்கள் வண்டியில் அத்தனை ஸ்க்ராட்ச், சுனிலின் லைட் ஒன்று உடைந்துவிட்டிருந்தது, இப்படி சின்னச் சின்ன பிரச்சனைகள். அந்த பார்சல் சர்வீஸ்காரனை நன்றாகத் திட்டித் தீர்த்துவிட்டு வண்டியை எடுத்து வந்திருந்தனர். யார் முகத்திலும் சந்தோஷமேயில்லை, பிரபு அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்பதால் அவன் மட்டும் சோகமாக இல்லாமல் இருக்க நாங்கள் இருவர் மட்டும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம், எனக்கு உள்ளூற ஆஹா மொத்த டிரிப்பும் இப்படி ஆப்பாவே ஆய்டப்போகுது என்ற கவலை அதிகமாயிருந்தது. அடுத்த நாள் காலை கிளம்பலாம் என்று முடிவானது அதாவது சனிக்கிழமை. இப்பொழுது லக்கேஜ்கள், பெட்ரோல், டெண்ட் வகையறாக்கள் மற்றும் எனக்காக ஒரு டாடா இண்டிகா புக் செய்து கொண்டோம் மணாலி வரைக்கும்.
இண்டிகா டிரைவர் குண்டா செகப்பா பழம் மாதிரி, அருமையா ஓட்டினார். எனக்கு எப்பொழுது டிரைவர்களுடன் ஒரு வேவ் லெந்த் அருமையாக செட் ஆகிவிடும் அந்து இந்த ட்ரிப் முழுவதுமே நடந்தது. சண்டிகரில் இருந்து பிலாஸ்பூர் செல்ல இரண்டு வழிகள் உண்டு, பஞ்சாப் வழியாக ஒன்று ஹரியானாவில் நுழைந்து பின்னர் வரும் வழி ஒன்று. நான் வந்த டாக்ஸிக்கு பஞ்சாப்பில் பர்மிட் இல்லாததால் பைக்காரர்களும் எங்கள் வண்டியும் இரண்டு வெவ்வேறு வழியாகச் செல்வதென்றும் பிலாஸ்பூரில் சேர்ந்து கொள்வதென்றும் முடிவெடுத்திருந்தோம். பைக் ஓட்டுபவர்களுக்கு காட்டு வழி பிடிக்கும் என்பதால் அவர்கள் அந்த வழியில் செல்லத் தீர்மானிக்க நாங்கள் தனியாகப் புறப்பட்டோம், சண்டிகரில் நாய்க்குட்டியொன்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த பிகர் ஒன்றை புகைப்படம் எடுத்ததைத் தவிர்த்து இதுவரை நான் படம் எதுவும் எடுத்திருக்கவில்லை. இந்த வழியில் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தாலும், நமக்காக காத்திருக்க வைக்க கூடாது என்று முன்னமே முடிவு செய்து வைத்திருந்ததால் அதிகம் நிறுத்தி புகைப்படம் எடுக்கவில்லை. டிரைவருடன் பேசியபடியே, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நாங்கள் பிலாஸ்பூர் சென்று சேர்ந்த பொழுது இவர்கள் முன்னவே வந்து சேர்ந்திருந்தார்கள், இடையில் ஒரு இடத்தில் புதிதாய்க் கட்டிய பாலம் இடிந்து விழுந்திருந்ததால், வண்டியை தண்ணிக்குள் ஓட்டி வேறு வந்து சேர்ந்திருந்தோம்.
இங்கே டிரைவர் ஹிமாச்சலில் இருந்து எதிர் திசையில் கீழிறங்கும் வண்டியிடம் சைகையிலே என்னவோ கேட்டபடியும் பதில் சொன்ன படியும் வந்து கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது RTO யாரும் வழியில் நிற்கிறார்களா என்பதையே கேட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார், பின்னர் எப்படி எல்லாம் காசு புடுங்குவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிலாஸ்பூருக்கு பக்கத்தில், சாகர் வியூ என்ற பெயரைப் பார்த்ததும் தோசை கிடைக்கும் என்று நினைத்து சுனில் அங்கேயே டின்னர் முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தோசை தவிர்த்து எல்லாம் கிடைத்தது. பிலாஸ்பூரில் தங்கிவிட்டு விடியற்காலை கிளம்பலாமா இல்லை இரவு பயணம் செய்யலாமா என்ற கேள்வி எழுந்தது, இந்தப் பயணத்திற்கு கிளம்பும் முன்னமே இரவு பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம் என்றாலும் வண்டி வராததால் தாமதமான ஒருநாளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரவே கிளம்பி மணாலி போய்ச்சேருவது என்று முடிவெடுத்தோம்.
எட்டு இல்லை ஒன்பது மணியிருக்கும் நாங்கள் பிலாஸ்பூரில் இருந்து கிளம்பிய பொழுது டிரைவர் எங்களுடன் சாப்பிடவில்லை என்பதால் நாங்கள் அதுவரை பைக்குகளுக்கு பின்னாலேயே வந்ததால் அவர் தன்னுடைய இன்ஜினையும் ஓட்டுநர் திறமையையும் நிரூபிக்க நினைத்து அடித்துக் கொண்டு பறந்தார். பெரும்பாலும் நான் என்பக்கத்து கண்ணாடியை ஏற்றி வைத்திருக்க மாட்டேன் அதனால் அந்த இரவில் ஹிமாச்சல் காற்று உடம்பில் பட்டுப் பரவி அதுவரை எங்கோ அடைந்து போயிருந்த பயண உற்சாகம் நிரம்பி வழியத் தொடங்கியிருந்தது என்னிடம். அவருக்குத் தெரிந்த ஒரு ஹோட்டல் அருகில் நிறுத்திவிட்டு அவர் சாப்பிட நான் ஒரு சாயா அடிக்க நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள் அவர்கள் இடையில் ஒரு அணையில் நிறுத்திப் புகைப்படம் எடுத்துவிட்டு பின்னால் வந்தார்கள் தானென்றாலும் இண்டிகாவை இவர் ஓட்டி வந்தது வேகமாய், எப்பொழுது டிரைவர் வேகமாய் வண்டி ஓட்டினால் நான் மெதுவாய் ஓட்டுங்கள் என்று சொல்லவே மாட்டேன் அதை அவர் முழுவதுமாக அனுபவித்தார்.
சுந்தர் நகர், மாண்டி, பாண்டூ வழியாக குல்லு வரும் வரை பைக்களுக்கும் இண்டிகா டிரைவருக்கும் நல்ல காம்படிஷன் சென்று கொண்டிருந்தது. நானாய் எதுவும் சொல்லாமல் மௌனமாய் அதை ரசித்துக் கொண்டிருந்தேன். சில இடங்களில் வேறு வழி எடுக்க வேண்டிய இடங்களில் மாற்றிச் சென்றுவிடாமல் இருக்கும் பொருட்டு அவர்கள் முந்திக் கொண்டு செல்வது என்று அந்த மொத்த இரவும் இப்படியே சென்றது. குல்லுவில் தங்குவதா மணாலி சென்றுவிடலாமா என்ற கேள்வி வந்தது. சண்டிகரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஏறத்தொடங்கிய குளிர் நாங்கள் குல்லு வரும் பொழுதெல்லாம் கொஞ்சம் தாங்க முடியாததாய் ஆகியிருந்தது குல்லுவை அடைந்த பொழுது பதினொன்று மணியிருக்கும். பின்னர் மணாலியே போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்து ஒரு புஷ். நாங்கள் இடம் கிடைக்கும் என்று நினைத்துச் சென்ற இடத்தில் அறைகள் கிடைக்காமல் பின்னல் Hotel Piccadillyல் தங்கினோம்.
ஒரேயடியாய் சண்டிகரில் இருந்து மணாலி வந்ததால் கொஞ்சம் போல் உடம்பில் எல்லாம் வலியிருந்தது என்றாலும் அதுவரை எடுத்தப் புகைப்படங்களை சுனிலின் லாப்டாபிற்கும் என்னுடைய எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கிற்கும் மாற்றிவிட்டு உறங்கச் சென்றோம்.
பயணத்தில் எடுத்த புகைப்படங்கள் கொஞ்சம்.
தொடரும்...
லாமாக்களின் தேசம்
Mohandoss
Tuesday, June 16, 2009
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
பதிவு படிக்கல!
ReplyDeleteபோட்டோஸ்லயே கண்ணு நிக்கிது
செம சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஸ்டில்ஸ் :)))
படங்கள் அத்தனையும் அருமை
ReplyDelete//இடையில் ஒரு இடத்தில் புதிதாய்க் கட்டிய பாலம் இடிந்து விழுந்திருந்ததால், வண்டியை தண்ணிக்குள் ஓட்டி வேறு வந்து சேர்ந்திருந்தோம்.///
ReplyDeleteஅதை போட்டோ எடுத்திருந்தால் வலையேற்றவும்! புதிதாய் கட்டிய பாலம் இடிந்த செய்தியில் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்புத்தான் இந்த ஆர்வம்!
குந்தவையை வெச்சு ஒரு போட்டோ கேலரியே வெக்கலாம்...
ReplyDeleteவெறும் நல்ல கேமரா மட்டும் இரூந்தால் இப்படி எடுக்கமுடியுமா அல்லது நேச்சுரல் க்ரியேட்டிவிட்டி வேனுமா ?
எப்படித்தான் திட்டமிட்டாலும் பயணங்கள் பெரும்பாலும் மாற்றங்கள் இல்லாம்ல் முடிவதேயில்லை.
ReplyDeleteஉங்கள் புகைப்படங்களைப்பற்றி புதிதாக என்ன சொல்ல அழகு..!
அருமையான புகைப்படங்கள்.
ReplyDeleteம்ம் தொடருங்கள்
ReplyDeleteபடங்கள் எல்லாமே ரொம்ப அழகா வந்திருக்குங்க தாஸ்
புகைப்படங்களுக்கு ஏதும் P.P செஞ்சீங்களா? மிகவும் அருமையாக இருக்கு! கட்டுரையும் அருமை!
ReplyDelete