In உண்மைக்கதை மாதிரி

கல்யாணம்

கல்யாணம் பற்றிய கனவுகள் இல்லாத யாராவது இருக்க முடியுமா தெரியவில்லை, எனக்கு ஏகப்பட்ட கனவுகள். என்னுடைய பெரும்பான்மையான கனவுகளை நான் மொழிப்பெயர்த்திருக்கிறேன் எழுத்தாக. ஆனால் கனவுகள் தீர்வதாகத் தெரியவில்லை, இதற்கான ஒரே தீர்வு கல்யாணம் செய்து கொள்வதாகத்தான் இருக்க முடியும். கல்யாணத்தையும் பாத்ரூம் செல்வதையும் ஒப்பிட்டு சொல்லப்பட்ட விஷயம் கொஞ்சம் வேடிக்கையானது தான் என்றாலும் யோசிக்கப்பட வேண்டியது. ஏனென்றால் தண்ணியடித்துவிட்டு புலம்பும் எல்லா ஆண்களும் கல்யாணம் ஆனவர்களாகவே இருக்கிறார்கள். என்ன செய்ய?

பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நிறைய யோசித்து வைத்திருந்தேன், எட்டாவது படிக்க ஆரம்பித்ததிலிருந்து. ஆனால் என்ன கொடுமை எல்லாமே மாறிவிட்டிருக்கிறது, அன்று நான் ஆசைப்பட்டது போன்ற பெண்ணை நான் இன்று நினைத்துக் கூட பார்க்கமுடியாது. எல்லாம் எறக்குறைய எல்லாமே மாறிவிட்டிருக்கிறது, நான் கடைசிவரை மாறவே மாறாது என்று நினைத்தது கூட. அதாவது வேலை செய்யும் பெண்ணை அதுவும் குறிப்பாக சாஃப்ட்வேரில் வேலை செய்யும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள மாட்டென் என்றே நினைத்து வந்திருக்கிறேன். ஆனால் அம்மாவிடம் கடைசியில் ஒரே ஒரு கண்டிஷன் போட்டுவிட்டு வேண்டுமென்றால் சாஃப்ட்வேர் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன நினைவு. கடைசியாய் ஒரே ஒரு கண்டிஷன் தான் வைத்திருந்தேன். ஆனால் கொடுமையென்ன என்றால் அந்த ஒரேயொரு கண்டிஷன் போதும் எனக்கு கல்யாணமே ஆகாமல் போக. அம்மாவிற்கு ஒரு பக்கம் பெருமைதான் என்றாலும் ஒரு பக்கம் வருத்தம். எனக்கு என் கண்டிஷன் எஸ்.வி. சேகருடையதாய்ப் போய்விடக்கூடாதென இன்னமும் கூட எண்ணம் இருக்கிறது, ஆனால் எஸ்வி சேகருடையதைப் போல் மொக்கையானதில்லை என் கண்டிஷன் என்றே நினைக்கிறேன்.

காதலித்து மணமுடிக்க எனக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இருந்ததில்லை, அம்மா அப்பா பார்த்து வைக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்று சின்ன வயதில் இருந்தே நினைத்து வந்திருக்கிறேன். இன்று வரை அது அப்படியே இருப்பதில் கொஞ்சம் பெருமையும் கூட, அதே போல் ஒரேயொரு பெண்ணைப் பார்ப்பது அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்வது என்பதும் என்னுடைய ஒரு எண்ணமாக இருந்தது. அதுவும் கூட அப்படியே நிறைவேறிவிடும் என்று நான் நினைக்கவில்லை, இன்றைக்கு இருக்கும் நிலையில் அதுவும் நிறைவேறிவிட்டது என்றே சொல்லலாம்.

கல்யாணத்தின் மேல் நான் நிறைய டிபெண்ட் ஆகியிருந்தேன் சில விஷயங்களில், என் வாழ்நாளில் நான் ருசி பார்ப்பதற்காகக் கூட பியர் அருந்தியதில்லை. நான் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கத் தொடங்கியதில் இருந்து என் நண்பர்கள் பெரும்பாலும் மது அருந்துபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்னை இந்த விஷயத்தில் கட்டிப் போட பெரிய கயிறொன்றும் தேவையிருந்திருக்கவில்லை. நான் என்னையும் என் அம்மாவையும் இணைக்கும் ஒரு மாயக்கயிறொன்று இருப்பதாகவே இதுவரை நினைத்து வந்திருக்கிறேன். ஒரு பாண்டிங். அந்தக் கயிறு என்வரையில் நீளும் வரை என்னால் மது அருந்துவது என்பதை விளையாட்டுக்குக் கூட செய்ய முடியாது. இன்று வரையிலும் அப்படியே. என்னிடம் என் நண்பர்கள் வற்புறுத்தலாகவும் சாதாரணமாகவும் இன்னும் பல வகையிலும் மது அருந்தக் கேட்டுக் கொண்டிருந்த பொழுதெல்லாம், ஒரு பழக்கமாக இல்லாவிட்டாலும் ஒரு மூடியளவாவது அருந்திப் பார்க்க வற்புறுத்திய பொழுதெல்லாம் ஒரு புன்னகையில் மறுத்திருக்கிறேன்.

தற்சமயங்களில் மிகவும் நெருக்கமான நண்பர்கள் கேட்கும் பொழுது கல்யாணத்திற்குப் பிறகு மனைவியின் அனுமதியுடன் செய்வேன் அதனால் வெய்ட்டீஸ் என்று விளையாட்டாகச் சொல்லி வந்தாலும். அம்மாவுடைய என் மீதான அந்த லாஜிக்கல் பாண்டிங் கல்யாணத்திற்குப் பிறகு மனைவியுடன் நீளும் என்றே நினைக்கிறேன். ஆனாலும் கூட திருமணத்திற்குப் பிறகு சட்டென்று இது மாறிவிடும் என்று நான் நினைக்கவில்லை, என் அம்மா முன்னால், என்னால், ஒரு முறை மது அருந்திவிட்டு நிற்க முடியாது என்றே நினைத்து வந்திருக்கிறேன். அம்மா வருத்தப் படுவார்களா மாட்டார்களா என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, என் வாழ்நாளில் ஒரு முறை கூட அம்மா நீ தண்ணியடிக்கக்கூடாதென்று சத்தியம் எதையும் வாங்கவில்லை ஆனால் அதுவும் கூட ஒரு கண்ணுக்குத் தெரியாத உணர்ச்சிகளால் ஆனது.

என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் சின்னப் பெண்ணின் மீது நான் எத்தனை பெரிய ரெஸ்பான்ஸிபிலிட்டியை வைக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரிந்து தான் இருக்கிறது. என் மனதை நானே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை, அம்மாவிடமிருந்த அந்த மாயக்கயிறு மனைவியிடன் வந்ததாகவும் மனைவியை சம்மதிக்க வைத்து வேண்டியதை செய்து கொள்ளலாம் என்றும் நான் நினைப்பது கூட ஒரு வகையில் என்னை நானே ஏமாற்றிக் கொள்வது தான். ஆனால் தண்ணியடிப்பவர்களின் மீதான எண்ணம் இப்பொழுது அத்தனை மோசமில்லை, இதைப்பற்றி நிறைய பேசியாகிவிட்டது, நிறைய யோசித்தாகிவிட்டது. காலத்தின் மீது பாரத்தைப் போட்டு நகர்கிறேன் என்று சொல்வதில் கூட இன்றளவில் நான் என்னை நானே மாற்றிக் கொள்ள முயல்கிறேன் என்ற எண்ணமே அதிகமாகிறது.

நான் போட்ட கண்டிஷன் பற்றி பேச நினைத்து எங்கெங்கோ சென்றுவிட்டேன், முன்பே கூட கொஞ்சம் பர்ஸனலாய் பேசும் நண்பர்களிடம் இதைப்பற்றி பேசியிருப்பேன். இளவஞ்சி என்னிடம் இதைப்பற்றி சண்டை போட்டது நினைவில் இருக்கிறது. நான் போட்ட கண்டிஷன் “தாலி கட்டமாட்டேன்” “ரெஜிஸ்டர் கல்யாணம்” என்பது தான், அம்மா தேடிப்பிடித்து அவர்களின் சொந்தத்தில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார். என் வருத்தமெல்லாம் அந்தப் பெண்ணின் திருமணம் பற்றிய எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல் என் எண்ணத்தை இந்தக் கல்யாணத்தின் மீது திணிப்பது தான். நான் இளவஞ்சியிடம் சொல்லியிருந்தேன் 95% இந்தக் கல்யாணம் நான் நினைப்பது போல் நடக்கத்தான் வாய்ப்பிருக்கிறது ஆனால் நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் மனநிலையைப் பொறுத்து 5% மாற வாய்ப்பிருக்கிறது.

Survival of the fittest என்பது தான் இதைப்பற்றி நினைத்ததும் நினைவுக்கு வருகிறது. நான் என்னுடைய சம்பளம், நல்ல பிள்ளைத்தனம், குடும்பம் இவற்றை வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் குடும்பத்தை என்பக்கம் இழுக்கப்பார்க்கிறேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. என் சொந்தத்தில் என் போன்ற மாப்பிள்ளைகள் கிடைப்பது கஷ்டமாகயிருந்தாலுமே கூட தாலி கட்டாத திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வி இருந்தது. இன்னமுமே கூட என் அப்பா இந்த விஷயத்தில் என் பெயரில் கோபமாகவும், என்னை காம்ரமைஸ் செய்துவிடும் எண்ணத்தோடும் இருந்தாலும். செய்தால் இப்படிச் செய்து கொள்வது இல்லை சும்மா இருப்பது என்ற முடிவில் இருக்கும் என்னை அத்தனை சீக்கிரம் அவரால் மாற்றிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

எனக்கு அந்தப் பெண்ணை உட்காரவைத்து நான் ஏன் இப்படிச் சொல்கிறேன், இப்படி ஒரு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று விளக்க ஆசை. என்னால் அந்தப் பெண்ணை என் காரணங்கள் சொல்லி கன்வின்ஸ் செய்துவிட முடியும் என்று நினைக்காவிட்டாலும். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவாவது வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அம்மாவிடம் பேசியதிலிருந்து அதற்கான தேவை கொஞ்சம் கம்மியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா அப்பாவிற்குப் பெண்ணைப் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் பெண்ணைப் பார்த்தேன், விளையாட்டிற்காக என்று இல்லாவிட்டாலும் வரும் பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும் கவலையில்லை என்ற எண்ணம் தான் இருக்கிறது இப்பொழுது வரையில். நான் என்னுடைய அனுபவத்தை வைத்து தப்புக் கணக்கு போடுகிறேனாகக்கூட இருக்கலாம். ஆனால் இன்று நான் எதை நம்புகிறேனோ அதன் படி வாழவே விரும்புகிறேன், நாளை நான் மாறலாம் என்றாலும் அதற்காக என்னை இப்பொழுது மாற்றிக் கொள்ள விருப்பமில்லை.

நான் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து என்று நினைக்கிறேன் அம்மாவிடம் சொல்லி வந்திருக்கிறேன் என் கல்யாணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று. விடலைத்தனத்தில் தோன்றிய இந்தத் தேடல் நான் சம்பாதிக்கத் தொடங்கியதும், நண்பர்களுடைய விமரிசிகையான கல்யாணங்களைப் பார்த்ததும் கூட மாறிவிடவில்லை, சொல்லப்போனால் இன்னமும் கூட அதிகரித்தது. மூன்று விஷயங்கள் “நான் சில வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு கல்யாணம்” “என் அக்காவின் கல்யாணம்” “ஒரு quote" இவை தான் நான் இன்றளவும் நான் இவ்வளவு தீவிரமாய் இதைப் பற்றிக் கொள்ள என்று நினைக்கிறேன். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் இந்த விஷயத்தில் இத்தனை தீவிரமாய் இருப்பது கூட ஆச்சர்யமாகயிருக்கும். நான் வாழ்க்கையை அதன் போக்கில் ரசிப்பவன், அதிகமாக அதை என் போக்கில் மாற்றிக் கொள்ள விரும்பாதவன். என் வரையில் செய்யப்படக்கூடிய சிறிய மாற்றங்களை மட்டும் செய்து அதன் போக்கில் ஆனால் மனதளவில் சந்தோஷமாக வாழ்பவன். நான் இந்த விஷயத்தை புஷ் செய்வதால் இந்த வகையில் கூட எனக்குப் பிரச்சனை தான் என்றாலும் அப்படியே தொடர்வதற்கு முக்கியக் காரணம் காந்தி.

ஜெயமோகன் தற்சமயம் எழுதிவரும் இடுகைகளை அதன் ஒரு பாரா படித்துப் பின்னர் பிடித்திருந்தால் தொடர்பவன் என்கிற வகையில் அவருடைய காந்தி பற்றி இடுகைகளை கவனமாகப் படித்து வருகிறேன். ஜெயமோகனின் இடுகைகளை நீங்கள் ஒரு மனநிலையில் இருந்தால் படிக்கலாம்; அதாவது அவர் எழுதுவதைத் தவிர்த்தும் உண்மை இருக்கும் என்றும் அவர் எழுதுவது ஒரு பக்கம் தான் என்றும் தெளிவிருப்பவர்கள் அப்படிச் செய்யலாம். நான் அப்படித்தான் ஜெயமோகனைப் படிப்பது, அவரைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே காந்தி பற்றிய படித்த கேட்ட உணர்ந்த விஷயங்கள் எனக்காய் உண்டு அதனால் ஜெமோவின் மோடி மஸ்தான் வேலை என்னிடம் அத்தனை பலிக்காது. காந்தி தான் உண்மையென்று நம்பியதை எத்தனை பாடுபட்டாவது நிறைவேற்றுவதில் குறியாக இருந்தார் என்பது எனக்குத் தெரியும் அந்த மாதிரி ஆட்களால் தான் தான் இப்படிப்பட்ட quotationஐ சொல்லவோ இல்லை செயல்படுத்தியிருக்கவோ முடியும். believe in something, and not to live it, is dishonest. எவ்வளவு பெரிய உண்மை.

நான் என் வாழ்க்கையில் சுயமுன்னேற்ற புத்தகங்கள் படித்தது கிடையாது, எனக்கு அதில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் இந்தக் கோட் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த சமயத்தில் நான் பார்க்க நடந்த நண்பர் ஒருவரின் திருமணமும் என் அக்காவின் திருமணமும் என்னை இதில் என் நம்பிக்கையில் இன்னமும் உறுதியாக இருக்க வைத்தது. அக்காவின் திருமணம் வீட்டில் சிறிய முறையில் தாலி கட்டப்பட்டு பின்னர் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து ரிஷப்ஷன் மட்டும் வைக்கப்பட்டது. வீட்டில் தாலி கட்டும் விஷயம் கூட கடைசியில் மாப்பிள்ளையை கட்டாயப்படுத்தி செய்தது. மாப்பிள்ளைக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்பது என்னை எவ்வளவு சந்தோஷப்படுத்தியிருக்கும் என்பது சொல்லி நம்ப முடியாதது. ஆனால் இதில் காதல் திருமணத்திற்கான ஒரு எட்ஜ் இருந்தது, அக்காவின் புரிதல்கள் என்னை ஒத்தவை என்பதால் இதில் சம்மதம் பெற வேண்டியிருந்தது என் அப்பா அம்மாவிடம் தான் என்பதால் சுலபமாக நடந்துவிட்டாலும் அதுவும் ஒரு முக்கியக் காரணம் நான் என் வழியில் இன்னமும் கூட விடாப்பிடியாக இருப்பதில்.

நான் பார்த்து நடந்த அந்த இன்னொரு திருமணம் நண்பர் ஒருவருக்கும் அவருடைய சொந்தக்காரப் பெண்ணுக்கும் நடந்தது. நண்பர் முழு அளவில் நாத்தீகர் என்று நினைக்கிறேன் அப்படியே நம்புகிறேன், ஆனால் சொந்தக்களுக்காக திருமணம் செய்து கொண்டார். என்னால் அந்தத் தர்மசங்கட நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் நான் நினைத்தேன் என்னளவில் அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதில்லை என்று. ஆயிரம் ஆனாலும் நான் இஷ்டப்படுவது போல் தான் திருமணம் இருக்க வேண்டும் என்று, நாம் என்ன தான் மறுத்துச் சொன்னாலும் தமிழகம் இன்னமுமே கூட ஒரு male dominated society தான். ஆனால் என் வரையில் நான் இதை தவறாக உபயோகப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். தாலி கட்டுவது என்பது பெண்ணை அடிமைப்படுத்துவது என்றே இன்னமும் நினைக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு இன்று புரியாதாயிருக்கும் அம்மா சொல்கிறார்கள் சித்தப்பா சித்தி சொல்கிறார்கள் என்று செய்து கொள்ளலாம், அப்படி செய்விப்பதில் எனக்கு வருத்தமே என்றாலும் இது நான் நம்புவது; முழு மனதாய் என் மன ஆழத்திற்கு நம்புவது என்னால் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கவே முடியாது.

திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம் தான் நான் மறுக்கவில்லை, இரண்டு பக்கத்து குடும்பங்களும் கலந்து கொண்டு நடக்கும் கொண்டாட்டம் ஆனால் என் வரையில் என் குடும்பத்தில் நான் பார்த்து நடந்த எந்த திருமணமும் அப்படியில்லை, விதியே என்று வந்து விட்டு நகர்வதும் அதற்கான செலவுகளும் நிச்சயம் தேவையற்றதே என்று நினைக்கிறேன். வாழ்க்கையையே கொண்டாட்டமாக வாழ நினைக்கும் எனக்கு ஒரு நாள் கொண்டாட்டம் அவசியமில்லாதது எனக்கு நாட்களின் மீதிருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை, பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை நான் கடந்துவிட்டதாக நினைத்தாலும் இன்னமும் ஒரு சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது. நான் நினைத்துப் பார்க்கிறேன் எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட நாத்தீகவாத இமேஜோ இல்லை பார் நான் எப்படி என் இஷ்டம் போல் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிற ஈகோவோ இதன் பின்னால் இல்லை என்பதை. நான் இல்லை என்று சொன்னாலும் அது இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் ஆனாலும் நாம் அனைவரும் முகமூடிகளுக்காகத்தான் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்தமானதாய் நாத்தீகவாதியாய், கடவுள் மறுப்பாளனாய், ஆணாத்திக்க வாதியாய் அழகான முகமூடியை நான் அணிந்து கொள்கிறேன். முகமூடிகளுக்கான தேவை எனக்கு இல்லை என்பது எத்தனை பெரிய பொய்யாக மட்டும் இருக்க முடியும் என்று நினைத்தபடி.

Related Articles

21 comments:

  1. ஓரளவுக்கு ஆண்களின் பார்வையை பிரதிபலிக்கும் பதிவு மோகன்தாஸ் :-) நல்லா இருக்கு

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. அய்யா சாமி புண்ணியமா போகும். முதல்ல தீமை மாத்துங்க.

    கறுப்பு கலர்ல 5 வரி படிக்கிறதுக்குள்ளே கண்ணு அவிஞ்சிடுச்சு.

    காபி பண்ணி வேர்ட்பேடுல போட்டு படிக்க வேண்டியதா இருக்கு.

    ReplyDelete
  3. பைத்தியக்காரன்,

    நான் அந்தப் பெண் எப்படி நினைப்பாள் என்று நினைத்து எழுதும் ஒவ்வொரு வாக்கியமும் போலியாக இருக்கும் என்று நம்பி தான் இப்படி எழுதினேன்.

    அந்த வகையில் பைத்தியக்காரன் பாராட்டியிருப்பதில் சந்தோஷமே!

    ReplyDelete
  4. நந்தா,

    இந்தக் கொடுமை புரிந்தாலும் நான் துக்கம் கொண்டாடுகிறேன். இப்பொழுது மாற்றும் எண்ணம் இல்லை :(

    ReplyDelete
  5. //அய்யா சாமி புண்ணியமா போகும். முதல்ல தீமை மாத்துங்க.

    கறுப்பு கலர்ல 5 வரி படிக்கிறதுக்குள்ளே கண்ணு அவிஞ்சிடுச்சு.
    //

    இந்த வாரம் முழுக்க இப்படித்தானா?

    ReplyDelete
  6. படிச்சு முடிச்சவுடனேயே ரெண்டு விஷயம் சொல்லலாம்னு நினைச்சேன்.

    ஆனா பின்னூட்டத்துல நான் நினைச்ச இரண்டையுமே பைத்தியக்காரனும், நந்தாவும் சொல்லிட்டாங்க..

    அதுக்கு பதிலும் சுடச்சுட வந்திருச்சா..

    ஸோ, அதுனால நான் என்னத்த எழுதறது..?

    ReplyDelete
  7. அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

    உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

    அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

    ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

    ReplyDelete
  8. //என் அம்மா முன்னால், என்னால், ஒரு முறை மது அருந்திவிட்டு நிற்க முடியாது என்றே நினைத்து வந்திருக்கிறேன். அம்மா வருத்தப் படுவார்களா மாட்டார்களா என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, ///

    இந்த கருத்து 100% என் வாழ்விலும்...! (ஒரு கர்வம் கொள்ளும் பெருமிதமும் கூட இருக்கிறது!)

    /என் வாழ்நாளில் ஒரு முறை கூட அம்மா நீ தண்ணியடிக்கக்கூடாதென்று சத்தியம் எதையும் வாங்கவில்லை ஆனால் அதுவும் கூட ஒரு கண்ணுக்குத் தெரியாத உணர்ச்சிகளால் ஆனது.//

    உண்மை!
    உண்மை!
    உண்மை!!!

    ReplyDelete
  9. /நாளை நான் மாறலாம் என்றாலும் அதற்காக என்னை இப்பொழுது மாற்றிக் கொள்ள விருப்பமில்லை.///

    மாற்றம் மற்றவர்களுக்கு சிறிது மகிழ்ச்சியளிக்கும் என்ற சூழலில் மாறிக்கொள்ளுங்களேன்!
    தவறில்லை ! :)

    ReplyDelete
  10. //கறுப்பு கலர்ல 5 வரி படிக்கிறதுக்குள்ளே கண்ணு அவிஞ்சிடுச்சு.

    காபி பண்ணி வேர்ட்பேடுல போட்டு படிக்க வேண்டியதா இருக்கு.///
    Just repeating..Plz consider

    ReplyDelete
  11. //அய்யா சாமி புண்ணியமா போகும். முதல்ல தீமை மாத்துங்க.

    கறுப்பு கலர்ல 5 வரி படிக்கிறதுக்குள்ளே கண்ணு அவிஞ்சிடுச்சு. //

    இந்தத் தொல்லைக்குத்தான் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் செஞ்சு வச்சு அங்க பதிவை படிக்குறேன் நான்..

    என்ன சோகமோ புள்ளைக்கு.. நம்மளை சாகடிக்க பாக்குது :)

    ReplyDelete
  12. இப்பத்தான் பொறுமையா வாசிச்சேன். மீண்டுமொரு கலக்கல் பதிவு தாஸ்..

    //முகமூடிகளுக்கான தேவை எனக்கு இல்லை என்பது எத்தனை பெரிய பொய்யாக மட்டும் இருக்க முடியும் என்று நினைத்தபடி.//

    இதையெல்லாம் எத்தனை பேரால புரிஞ்சுக்க முடியும். இல்ல ஜீரணிக்க முடியும்ன்னு தெரியல.. இருந்தாலும் வாழ்த்துக்கள் சொல்லிக்க முடியும் :)

    ReplyDelete
  13. /
    Labels: உண்மைக்கதை மாதிரி
    /

    ரைட்டு

    ReplyDelete
  14. லடாக் போறதுக்கு லட்ச ரூவா செலவு செய்வாராம் கல்யாணத்துக்கு செய்யறது வேஸ்ட்டாம்

    ங்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யால

    :)

    ReplyDelete
  15. ஹஹா ஹாஹா ஹாஹாஹா -
    பெரிசு ஆசிப்மீரான்

    அய் உனக்கெல்லாம் இருக்கு மவனே

    இளவட்டச் சிங்கம் இளவஞ்சி ரசிகர் மன்றம்

    ReplyDelete
  16. உலகம் கோயிஞ்சாமிகளால் ஆனது - இ.நாத்தனார்கள் இயக்கம்

    ReplyDelete
  17. வாழ்துக்கள் தாஸ்

    ReplyDelete
  18. \\
    முகமூடிகளுக்கான தேவை எனக்கு இல்லை என்பது எத்தனை பெரிய பொய்யாக மட்டும் இருக்க முடியும் என்று நினைத்தபடி
    \\
    முகமூடி இல்லாம முடியாது...

    ReplyDelete
  19. கறுப்பு கலர் நல்லா தானே இருக்கு..

    ReplyDelete
  20. // லடாக் போறதுக்கு லட்ச ரூவா செலவு செய்வாராம் கல்யாணத்துக்கு செய்யறது வேஸ்ட்டாம் //

    :)

    ReplyDelete
  21. இந்தப் பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தாஸ். அந்த தண்ணி அடிக்கிறது தொடர்பான வரிகள் அபப்டியே ஒத்துப் போகிறது எனக்கும். :) என்ன செய்தும் என்னை ஒரு மூடி அளவுக்கும் யாராலும் குடிக்க வைக்க இயலவில்லை. என்னிடமும் யாரும் சத்தியம் வாங்கவில்லை. :)

    ReplyDelete

Popular Posts