
முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை
தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய்
வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதான
மற்றவர்களின் கோபம்
அடர்கானகத்தின் வழியேயான
முடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின்
இடையில் இயக்கத்தை நிறுத்த முயலும்
அத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்
கடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்தி
சிறிதும் பெரிதுமாய்
வண்ணக்குழப்பங்களுடன் கூடியதாய்
பல சமயங்களில்
பொருந்தாததாயுமான முகமூடிகள்
பயணத்தின் நடுவே கழன்று விழுகின்றன
பெருஞ்சிரிப்புகளைப் புறக்கணித்தவனாய்
நான்
நண்பர்கள் பகைவர்களாய்
நீலமேகம் நொடியில் நெருப்பு மழை பொழியும்
இருண்மையாய் மாறி பயமுறுத்தும் மாற்றங்கள்
காலைவாறிவிடவே காத்திருப்பவை போல்
எகிறிக்குத்தோ அடியில் குனிந்தோ எப்படியோ
இருப்பை மட்டும் நிச்சயப்படுத்தி
நீளும் என்னுடைய பயணத்தின் முடிவான
பெருவெளியைப் பற்றிய பயமெப்போதும் இருந்ததில்லை
செய்துகொண்டிருக்கும் பயணமே
பெருங்கனவாய் அகலும் சாத்தியக்கூறுகள்
புரிவதால்.
0 comments:
Post a Comment