In காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்

மதுமிதா - 1

மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

o

அந்த இரவு பதினொரு மணியிருக்கும், என் வீட்டு போர்ட்டபிள் டிவியில், கேபிள் சேனலின் கீழ் ஒரு அவசர அறிவிப்பு; AB-ve வகை இரத்தம் உடனடியாக தேவையென்று. நான் வேக வேகமாய், டிவியை அணைத்துவிட்டு, வீட்டையும் பூட்டி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு, ஆஸ்பிடலை நோக்கி விரைந்தேன். அங்குதான் நான் அவளை முதன்முதலில் பார்த்தேன். சுடிதார் போட்டிருந்தாள், அநாயாசமாய் அவள் உடலில் துப்பட்டா பரவியிருந்தது, நீண்ட தலைமுடி.

நான் வருவதைப் பார்த்தும் என்னிடம் வந்தவள், "சார், ஒரு ஆக்ஸிடண்ட் ஆயிருச்சு, நீங்க உதவ முடியுமா? உங்களுக்கு AB-ve வகை இரத்தமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள். சாதாரணமாக என்னைப் பார்த்தால், சௌத் இண்டியன் போல் இருக்காது. என்னைப் பலரும் நார்த் இண்டியன் என்றே நினைப்பார்கள். அதற்கேற்றது போல் நானும் குர்தா பைஜாமாதான் போடுவேன். அதனால் அவள் ஆங்கிலத்தில் பேசியது எனக்கு வியப்பளிக்கவில்லை. அவள் வேறு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தாள்.

நான் பதில் சொல்வதற்குள் அங்கு வந்த நர்ஸ், "வாங்க ரவி, உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கேன். பிடிக்கவே முடியலை. கம்பௌண்டரை வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தேன். டிவியில் ஃபிளாஷ் நீயூஸ் பார்த்துட்டு வந்திருவீங்கன்னு தெரியும். அதனால வெயிட் பண்ணினேன். கொஞ்சம் சீரியஸ். போகலாமா?"

நான் அந்த சுடிதார் பெண்ணிடம் எதுவும் பதில் சொல்லாமலே நர்ஸ் உடன் வந்துவிட்டேன். எனக்குப் பழக்கமான விஷயம் தான் இரத்தம் கொடுப்பது. அதனால் நானாகப் போய் கட்டிலில் படுத்துக்கொண்டு என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். ஐந்து நிமிடங்களில் எல்லாம் ஏற்பாடுகள் முடிந்து, என் இரத்தம் அந்த ப்ளாஸ்டிக் பையினுள் சென்றுகொண்டிருந்தது. மெஷினுடன் இணைக்கப்பட்ட அந்தப் பை மேலும் கீழுமாய் ஆடத்தொடங்கியது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுதும் அந்த அரைமணி நேரத்தில், நான் என் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பேன். ஆனால் இன்று அந்தச் சுடிதார் பெண்ணைப் பற்றிய எண்ணம் வந்துகொண்டிருந்தது.

நான் நர்ஸிடம், "நர்ஸ், யாருக்கு ஆக்ஸிடெண்ட்?"

"சின்னப் பொண்ணுங்க ரவி, எட்டு வயசுதான் இருக்கும். வெளியில் நிற்குதே அந்தப் பொண்ணுதான் பார்த்துட்டு இங்க எடுத்துட்டு வந்துச்சு. கேக்க மறந்திட்டேன் சாப்பிட்டுட்டீங்கள்ல?"

"ம்ம்ம், சாப்டுட்டேன்." நான் மெதுவாய் அவளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். யாராய் இருக்கும். இதுதான் முதல் முறை ஒரு பெண் என் கவனத்தை திசை திருப்பியது.

"ரவி முடிஞ்சிருச்சு போலிருக்கே, ஒரு நிமிஷம் இருங்க மேங்கோ ஜூஸ் கொண்டு வந்திர்றேன்."

கையில் ஊசிக்காயம் மறையப் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டருடன் வெளியே வந்தேன். வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் அவள் நடந்து கொண்ருந்தாள்.

என்னை பார்த்ததும் அருகில் வந்தவள், "சார் ரொம்ப நன்றி, நீங்க தமிழா, பார்க்கத் தெரியவேயில்லை. அதனால் தான் ஆங்கிலத்தில் பேசிவிட்டேன். மன்னிக்கவும்." சொல்லிவிட்டு எதையோ மறந்தவள் போல் முகத்தை மாற்றிக் கொண்டு "மறந்துட்டேன், என் பெயர் மதுமிதா," சொல்லி கையை நீட்டினாள்.
ஆச்சர்யமாய் இருந்தது தமிழகத்துப் பெண்கள் பொதுவாய் ஆண்களுடன் கை குலுக்குவதில்லை. ஆச்சர்யத்தைக் காட்டாமல் நானும் கைகுலுக்கிவிட்டு, "என் பெயர் ரவிவர்மன், ரவின்னு கூப்பிடுவாங்க." என்றேன்.


"ரவிவர்மன்னா ஓவியமெல்லாம் வரைவீங்களா?" சொல்லிவிட்டுச் சிரித்தாள். அந்தக் சூழ்நிலையிலும் கூட அவளால் சிரிக்க முடிந்தது, ஆச்சர்யமாயிருந்தது. அது ஒரு நிமிடம்தான் நீடித்தது பின்னர் பழைய நிலைக்கே வந்துவிட்டாள். அப்பொழுதுதான் பார்த்தேன் அவள் சுடிதாரில் இரத்தக்கறைகள் இருந்ததை.

நான் அவளிடம், "நீங்கள் வீட்டிற்குப் போய் உடை மாற்றிவிட்டு வருவதாய் இருந்தால் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்"

"நர்ஸ் என்னை இங்கே இருக்கச் சொன்னார்கள்."

"பரவாயில்லை நான் நர்ஸிடம் பேசிக் கொள்கிறேன். நீங்கள் போய் மாற்றிவிட்டு வாருங்கள்." அவள் சென்று சிறிது நேரத்தில் வேறு சுடிதார் போட்டுக்கொண்டு வந்திருந்தாள். அவள் முடியை பார்த்ததும் இந்த இரவிலும் குளித்துவிட்டு வந்திருக்கிறாள் எனத் தெரிந்தது. இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும் அவள் திரும்பிவர, அவள் வந்த சிறிது நேரத்தில் எல்லாம் அந்தக் பெண் குழந்தையின் பெற்றோர் வந்து, அவளிடம் நன்றிசொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் விடை பெற்றுக்கொண்டு திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவளைப்பற்றி மறந்தும்விட்டேன், அதுதான் என் வழக்கமும் கூட.

அடுத்த வாரம் லைப்பரரியில், யாரோ கூப்பிட்டதைப் போலிருக்கவும் திரும்பினேன். அந்தச் சுடிதார் பெண்தான் நின்று கொண்டிருந்தாள். பெயர் என்னவோ சொல்லியிருந்தாள், ஞாபகம் வரவில்லை.

"மறந்துட்டீங்களா ரவி, நான் மதுமிதா."

"ஆமாம் சாரி, என் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே?"

"நான் சாதாரணமாகவே பெயர்களை மறப்பதில்லை, அதுவும் அந்த ராத்திரியில் தேவதை போல் கூந்தல் பறக்க வந்து ரத்தம் கொடுத்துவிட்டு, எனக்காக இரண்டு மணிநேரம் காத்திருந்த உங்கள் பெயரை மறக்க முடியுமா? சொல்லப்போனால் உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நீங்கள் இங்கேதான் வேலை பார்க்கிறீர்களா?"

என்னுடைய போனிடைலை அவள் அழகாக விமர்சித்ததை ரசித்தேன். அன்றிரவு அவசரம் ஆதலால் ரப்பர் பேண்ட் போடாமல் வந்திருந்தேன்.

"இல்லீங்க நான் இங்கே வேலை பார்க்கவில்லை, ஏன் கேட்கிறீர்கள்?"

"இல்லை, நான் லைப்பரரியன் கிட்ட ஒரு புத்தகத்தைப் பற்றிக் கேட்டேன். அவங்க உங்களைக் காட்டி உங்களிடம் கேட்கச் சொன்னார்கள். குர்தா பைஜாமா, போனிடைல் பார்த்ததும் நீங்களா இருக்குமோன்னு நினைச்சேன். கடைசியில் நீங்களேதான்."

"என்ன புத்தகம்?"

"சில நேரங்களில் சில மனிதர்கள், ஜெயகாந்தனுடையது."

"அப்பிடியா, அதுதான் என்னிடம் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் புத்தகம் என்னிடம் தான் இருக்கிறது. நாளை வாங்கிக் கொள்ளுங்கள்."

அவள், நான் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

"லைப்ரரியன் கொஞ்சம் வயசானவங்க, அதனால தினமும் அரைமணிநேரம் அவங்களுக்கு உதவ இங்கே வருவேன். புத்தகங்களையெல்லாம் அடுக்கிக் கொடுத்துவிட்டுப் போவேன்." நான் சொல்லிவிட்டு கையில் இருக்கும் புத்தகங்களை ரேக்கில் அடுக்கத் தொடங்கியிருந்தேன்.

"சரிங்க ரவி, அப்ப இன்னொரு நாள் பார்ப்போம்!" அவள் சொல்லிவிட்டுப் போனாள். இப்படித்தான் நாங்கள் முதன்முதலில் பார்த்துக் கொண்டது.

(தொடரும்...)

Related Articles

1 comments:

  1. //இப்படித்தான் நாங்கள் முதன்முதலில் பார்த்துக் கொண்டது.//

    முதன்முதலில் மருத்துவமனையில் இல்லையா... ;)

    என்ன தாஸ் செம் பார்மில் இருக்கீங்க போல்..... பறக்குதே பதிவுகளா....

    ReplyDelete

Popular Posts