In BHEL கதை சிறுகதை திருச்சி

காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை



"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன்னு நினைப்பு, படிக்கிறது பன்னிரெண்டாவது. அப்பா BHEL எம்ப்ளாய், அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரே ஒரு தங்கச்சி பேரு ரமா பத்தாவது படிக்கிறாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

இது நம்ம ஹீரொயின், பேர் ரேஷ்மா. ரெண்டு வருஷத்துக்கு முன்னால் பார்க்கச் சகிக்காது, இப்ப என்னடான்னா 'B' செக்டர் பசங்கள்ள பாதி பேரு இவ பின்னாடி தான் சுத்தராங்ய, மீதி பாதி நம்ம ஹீரோவின் தங்கச்சி ரமா பின்னாடி. படிப்பில பூஜ்யம், வருஷாவருஷம் அவங்கப்பா சிபாரிசில மேலத்தூக்கிப் போட்டே பத்தாவது வந்துட்டா. சரி இப்ப மேற்சொன்ன சிச்சுவேஷனுக்கு.

பேக்ரவுண்ட் என்னான்னா, இப்படிப்பட்ட நம்ம ஹீரோயினி ரேஷ்மா பத்தாவது வந்துட்டாலும், பாஸாக அப்பா சிபாரிசு உதவாதுன்னு டியூஷன் படிக்கப்போக. 'B' செக்டரின் ரவுடி வேறயாரு நம்ம ஹீரோ, ஒரு கிரிக்கெட் மேட்சில் கிடைத்த கேப்பில், ஸ்டம்ப்பை உருவி, ரேஷ்மாவை ரூட்டுக் கட்டிக் கொண்டிருந்த சங்கரையும், பிரசன்னாவையும் அடித்து ரத்தம் பார்த்துவிட்டு, ரேஷ்மாவை பின் தொடரும் முழு உரிமையையும் நிலைநாட்டிய பிறகுவந்த ஒரு வெள்ளிக்கிழமை தான் மேற்சொன்ன சம்பவம் நடந்தது.

அதாவது 'B' செக்டர் ஹீரோயினி 'C' செக்டர் டியூஷன் மாஸ்டரிடம் பாடம் படிக்க, நம்ம ஹீரோவுக்கு காவல்காரன் பொறுப்பு தானா வந்திருச்சு, 'C' செக்டர் மன்மதன்களிடமிருந்து ரதி தேவதையை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். சிகப்பு கலர் BSA SLR லேடீஸ் ஸ்பெஷல், பச்சை கலர் யூனிபாரம், வெள்ளை ரிப்பன் தேவதை 'B'யையும் 'C'யையும் ரெட்டைச் சடை பட்டாம்பூச்சியாய்க் கடக்க பாவம் நம்ம ஹீரோ; அவனிடம் இருந்ததோ இன்னொரு BSA SLR, வெய்ட் அ மினிட் அது பொண்ணுங்க வண்டியாச்சே. ஆமாம் உண்மைதான் பொண்ணுங்க வண்டிதான் அது, நம்ம ஹீரோவோட அப்பா சார், பரிட்சையில் பாஸானாத்தான் 'அட்லஸ்' வண்டின்னு சொல்லிட்டார். பொம்பளை புள்ள வண்டியேதுன்னு கேக்குறீங்களா? நான் ரமா பரிட்சையில் பெயிலாகும்னு சொல்லையே?

இதனால் தனக்கு ஆமாம் சாமி போடும் இரண்டு பச்சை பிள்ளைகளில் ஒருநாள் மாற்றி ஒரு அட்லஸ் இரவல். பரிகாரமாய் ஒருத்தனுக்கு கிரிக்கெட் மேட்சில் ஓப்பனிங்கும் இன்னொருத்தனுக்கு பத்து ஓவர் மேட்சில் கிடைக்கிற ஒரே ஒரு மூணு ஓவர் போடும் வாய்ப்பும் கொடுங்க வேண்டும். காதலுக்குத்தான் கண்ணில்லையே கிரிக்கெட்டும் மறைக்கலை. இதனால் நம்ம ஹீரோவோட கேப்டன்ஷிப்பை மாத்தணும்னு ஏற்கனவே ரத்த அடிப்பட்ட, பிரசன்னாவும் சங்கரும் எட்டப்பனாகியிருந்தார்கள் 'B' செக்டர் கிரிக்கெட் டீமிற்கு.


ஒருவாரமாய் நன்றாக சிச்சுவேஷனை அனலைஸ் பண்ணி வந்த நம்ம ஹீரோ வெள்ளிக்கிழமை, முன்னாடியே ப்ளான் செய்திருந்தது போல டியூஷன் மாஸ்டர் வீட்டின் முன் நிறுத்தியிருக்கும் நாற்பத்தம்பது ஐம்பது சைக்கிள்களில் சரியாய் நம்ம ஹீரோயின் சைக்கிள் முன்னால் நிறுத்தி யாரும் பார்க்காத ஒரு நிமிஷத்தில் அவளுடைய சைக்கிளின் வால்டியூபை பிடிங்கிவிட்டான். பிறகென்ன தன்னோட ப்ளான் படி காக்கா'பீ' ரோட்டிற்கு கொஞ்ச தூரம் முன்னாடி வண்டியை நிறுத்திவிட்டு தேவதைக்காகக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல், ரேஷ்மா வண்டியைத் தள்ளிக்கொண்டே காக்கா'பீ' ரோட்டில் நுழைந்ததும், வேறெங்கிருந்தோ வருவதைப் போல் வந்தவன் அவளருகில் வண்டியை நிறுத்தினான்.
இப்ப இன்னொரு பேக்ரவுண்ட், இந்த காக்கா'பீ' ரோடு என்பது இந்த மாதிரி காதல் வயப்பட்டவர்களின் சொர்க்கபுரி. ஒரு பக்கம் அவள் படிக்கும் RSK ஸ்கூல், இன்னொரு பக்கம் அவன் YWCA ஸ்கூல். இரண்டு ஸ்கூலுக்குமான பொதுவான ரோடு. ரோட்டோரத்தில் அடர்த்தியான மரங்களுடன் சாதாரணமாக பத்தடிக்கு ஒரு ஸ்ட்ரீட் லைட் இருக்கும் BHELல் இந்த ரோட்டில் மட்டும் இருபத்தைந்தடிக்கு ஒரு லைட் போஸ்ட் வீதத்தில் நான்கு. இயற்கை வெளிச்சம் சுத்தமாயிருக்காத ஒரு ரோடு.

அந்த மாதிரியான மரங்களில் காக்காய்களின் கூடுகள், எவ்வளவு வேகமாக வண்டியில் போனாலும் மாலை வேளைகளில் அவைகள் போடும் எச்சத்திலிருந்து தப்பவேமுடியாது. காதலர்களின் சொர்க்கபுரியாக காக்கா'பீ' ரோடு பேமஸானதற்கு இதுவும் ஒரு காரணம். நைட் நேரத்தில் குளிக்க விரும்பாதவர்கள் அந்தப் பக்கம் வருவதில்லை. அதுமட்டுமில்லாமல் மரங்களில் இருந்து காக்கைகள் போடும் எச்சம் 10% மக்கள் மீது விழுந்தாலும் 90% ரோட்டில் விழுவதால் வரும் ஒருவித நாற்றம் காரணமாயும் அந்த ரோட்டை உபயோகிப்பது குறைவு. ஆனால் காக்கா'பீ' ரோட்டை உபயோக்கிக்காமல் போக வேண்டுமானால், ரொம்பவும் சுற்றிக் கொண்டு போகவேண்டும். பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக மற்ற ரோட்டை உபயோகிக்க மாட்டாள் என்றும்; அந்த ரோட்டில் தான் தள்ளிக் கொண்டு வருவாள் என ஹீரோ நினைத்தது அப்படியே நடந்தது.

"என்ன ரேஷ்மா பஞ்சராயிடுச்சா?"

ஹீரோவின் தங்கச்சியும் ஹீரோயினும் ஒரே கிளாசில் படித்ததால் கொஞ்சம் பழக்கம் உண்டு, அதுமட்டுமில்லாமல் ரேஷ்மாவிற்கு கோக்குமாக்காக அவன் அவள் பின்னால் சுற்றுவது தெரியும்.

"ஆமாம். நீ எங்க இங்க?"

"இல்லை சும்மா கிரிக்கெட் விளையாட வந்தேன்..." சற்று நிறுத்தியவன், "...நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா எப்படி சொல்லறதுன்னே தெரியலை!"

மனசென்னமோ ரேஷ்மாவிடமும் அவன் சொல்லப்போகும் விஷயத்திலும் இருந்தாலும் காக்கா அசிங்கம் செய்திடுமோ என்ற பயம் இருந்தது. 'ஏன் அந்த ரோட்டில் போனே?' என்ற கேள்வி மிகச் சுலபமாய் வீட்டில் கேட்கப்படலாம்.

"அப்பச் சொல்லாத!" சொல்லிவிட்டு வேகமாய் நடையைக் கட்டினாள் நம்ம ஹீரோயின்.

சுதாரித்தவனாய், தானும் வேகமாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்தவனாய் முன்னேறியவன். அவள் வண்டிக்கெதிராய் இவன் வண்டியை நிறுத்தி, சைக்கிள் ஹேண்டில்பாரில் இருந்த அவள் கையைத் தொட்டு,

"I Love You!!!" சொல்ல,

அந்தக் இருட்டு ரோட்டிலும் கூட ரேஷ்மாவின் கன்னமெல்லாம் சிவந்து அழத் தயாரானது தெரிந்தது.

"செருப்பால அடிவாங்கப்போற. வழிய விடுடா" அவனுடைய வண்டியைத் தள்ளிவிட்டு வேகமாக நடந்தாள்.

பின்னாலிருந்து,

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

அவன் கத்த, அவளும் கத்தினாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

மேகத்திலிருந்து ததாஸ்து தேவதைகள் "ததாஸ்து" சொல்லியிருக்க வேண்டும். தொப்பையை தள்ளிக்கொண்டு பத்தடி தூரத்தில் போலீஸ் மாமா இருவருக்கும் எதிர் திசையில் வந்துகொண்டிருந்தார்.


ஆனால் அந்த இருட்டில் வந்த போலீஸ்காரருக்கு ஹீரோவின் முகத்தில் படர்ந்த பயரேகைகள் தெரிந்திருக்க நியாயமில்லை தான். ஆனால் காக்கா'பீ' ரோட்டில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆணைப் பார்த்தால் BHELல் எல்லா போலீஸ்காரர்களுக்கும் வரும் டவுட் அவருக்கும் வந்தது.

"என்னாம்மா வண்டியைத் தள்ளிக்கிட்டு வர்ற இந்தப் பய ஏதாவது பிரச்சனை பண்றானா?"

நம்ம ஹீரோ அதான் சுந்தரப் பாண்டியன் இதயத்திலிருந்து வந்த இதயத்துடிப்பொலியை 'பீட்'டா வைத்து எமினெம் ராப் பாடலொன்றே கூட பாடிவிடலாம், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று இரண்டு காதுகளையும் தீட்டிக் கொண்டிருப்பது அவனுடைய சிவக்கும் காதுகளைப் பார்த்தாலே நன்றாகத் தெரிந்தது.

"இல்லை மாமா! இது எனக்கு தெரிந்த பையன் தான், இப்படி கிராஸ் பண்ணிப் போய்க்கிட்டிருந்தான். நான் தான் இந்த ரோட்டை கிராஸ் பண்ண பயந்துக்கிட்டு என்கூட கூட்டிக்கிட்டு போறேன்."

ஹீரோவுக்கு முதலில் ஹீரோயின் இவ்வளவு பேசுவாள் என்றே தெரியாது. அவள் அப்படிப் பேசியதும், அவன் வயிற்றுக்குள் பட்டாப்பூச்சி பறக்கத்தொடங்கியது அவன் கண்களின் கிறக்கத்திலேயே தெரிந்தது. ஜொள்ளு வழிய அவன் ஹீரோயினை கண்களாலேயே சாப்பிட்டு விடுபவனைப்போல் பார்த்துகொண்டிருந்தான், பெருமிதம் வழிந்தோடியது அவன் கண்களில். அவள் தன்னைப் போட்டுக்கொடுக்கவில்லை அந்தப் போலீஸ்காரரிடம் என்னதான் தன்னிடம் அதட்டி, திட்டிப் பேசினாலும் அவள் தன்னைக் காதலிக்கிறாள் அதனால் தான் அப்படி நடந்துகொள்கிறாள் என்று தனக்குத்தானே கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தான்.

இத்தனையிலும் போலீஸ்காரர் அவனைக் கவனிப்பதைக் கூட இவன் உணரவில்லை, அவருக்கு நம்ம ஹீரோவிடம் ஏதோ தப்பிருப்பதைப் போல் பட்டிருக்க வேண்டும்,

"வேணும்னா நான் உன் வீடுவரைக்கும் வரட்டுமா பாப்பா?" கேட்க நம்ம ஹீரோயினி, "இல்ல மாமா ஒன்னும் பிரச்சனையில்லை நீங்க போய்ட்டுவாங்க."

அவருக்கும் நம்ம ஹீரோ மேல சுத்தமா நம்பிக்கையில்லாவிட்டாலு, நம்ம ஹீரோயின் ரொம்பவும் தெளிவா பேசினதால மனது எதோ தப்பு நடக்குதுன்னு சொன்னாலும் தேத்திக்கிட்டு நடையைக் கட்டியதும்தான் தாமதம். ஹீரோயினி,

"இங்கப்பாருடா, நான் மட்டும் அந்தப் போலீஸ்கிட்ட சொல்லியிருந்தேன்னா, உங்க குடும்பத்துக்கே ரொம்ப அவமானமாப் போயிருக்கும். இத நான் உனக்காக செஞ்சேன்னு நினைக்காத, அங்கிள் ஆண்ட்டிக்காகத் தான் அப்படி சொன்னேன்.

மரியாதையா சைக்கிளை ஓட்டிக்கிட்டுப் போயிரு அவ்வளவுதான் சொல்வேன்." கத்தியது.

போய்க் கொண்டிருக்கும் போலீஸ் காதில் விழுந்திடுமோ என்று பயந்தவனைப் போல் வேகமாக சைக்கிளில் ஏறிப் பறந்தேவிட்டான் நம்ம ஹீரோ. கதை இதோட முடிஞ்சிருந்தா தான் பரவாயில்லையே, கதையை நேரில் பார்த்தவன்ங்கிற முறையில் இந்தக் கதையை இங்கயே நிறுத்திறலாம்னு தோன்றினாலும். உண்மையை மறைப்பதில்லை என வாக்குறுதி கொடுத்துள்ளதால் தொடர்கிறேன்.

அடுத்த நாள் நம்ம ஹீரோவோட அப்பா எழுப்ப எழுந்தவனுக்கு தன்னைச் சுற்றிலும் நின்று எதோ எக்ஸிபிஷனைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் தங்கையையும் பார்த்து ஒன்றும் புரியாதது நியாயம் தான் இல்லையா? அவன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது ரேஷ்மாவின் அப்பா வந்து நேற்று காக்கா'பீ' ரோட்டில் நடந்ததையெல்லாம் சொல்லி கண்டித்து வைக்குமாறு சொல்லியதும். அவங்கப்பா தர்மசங்கடமா கையைக் பிசைந்து கொண்டு நின்றதையும்.

"யேய் இங்கப் பாரு, இன்னிக்கு சாயந்திரம் உன்னை தபோவனத்தில் சேர்த்துவிடப் போறேன். உன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாய்டே போகுது. இனிமேல் பொறுக்க முடியாது. ஒரு வருஷமாவது நீ அங்கப் படிச்சாத்தான் திருந்துவ." சொல்லிவிட்டு ஹீரோவின் அப்பா நகர, அம்மா தங்கை கண்களில் கண்ணீர். ஆனால் யாருடைய கண்ணீரும் அவருடைய முடிவை மாற்றமுடியாது என்று தெரிந்துதான் இருந்திருக்க வேண்டும் ஹீரோவிற்கு.

உண்மையில் நம்ம ஹீரோவிற்கு அந்தச் சமயத்தில் தபோவனம் போய் படிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை, அவனால் ரேஷ்மா அவன் விரும்பாமல் போனதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் திருப்பராய்த்துரை தபோவனத்தில் போய்ப் படிப்பதைப் பற்றி எந்த அபிப்பிராயபேதமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கே சேர்ந்த முதல் வாரத்திலேயே தான் அனுபவித்துவந்த சவுகரியங்கள், தான் செய்துவந்த மூடத்தனங்கள் எல்லாம் பிரகாசமாப் புரிந்துவிட்டது என்றாலும்...

நான் பார்த்தவன் என்பதால் நிச்சயமாய்ச் சொல்லலாம்,

அப்பா, அம்மா, தங்கச்சியைப் பார்க்காமல், படு ஸ்டிரிக்ட்டான ஒரு இடத்தில் இருப்பது அவனுக்கு ஆறுமாதங்கள் வரை பெரும் பிரச்சனையாகத்தான் இருந்தது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை அம்மா அப்பா வரலாம் என்றாலும் அவனை பார்க்காமல் இருந்தால் தான் திருந்துவான் என்று ஹீரோவின் அப்பா அவனைப் பார்க்கவே வராமல் இருக்க. ஐந்துமணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பஜனைகள் முடித்துவிட்டு, வீட்டுப்பாடம் படித்து, மணிக்கு சாப்பிடப்போய், மாதத்திற்கு ஒரு முறை சாப்பாடு பரிமாறி என ஒழுக்கமே வாழ்க்கையாய் இருக்கும் ஒரு இடம் அவனுக்கு முதலில் பிரச்சனையாய் இருந்தது ஆச்சர்யமே கிடையாது. ஆனால் தன்னையெல்லாம் விடவும் மோசமானவர்களும், பணக்காரர்களும் அந்த இடத்தில் அப்படி படித்துவந்ததையும் பார்த்தவனுக்கு, கிடைத்த நல்ல சாமியார் ஆசிரியர்கள் நிறைய நல்ல விஷயங்கள் நல்ல விதமாய்ச் சொல்லித் தந்ததையும் வைத்து அவன் அடுத்த ஆறுமாதத்தில் நல்லவனாய் மாறியதைத்தான் நம்பவேமுடியவில்லை.

சொல்லப்போனால் ஹீரோவின் அப்பாவாலும் தான், எப்படியிருந்தாலும் அந்த வருஷம் +2 வில் கோட்டடிச்சிருவான் என பயந்துகொண்டிந்தவர். அவன் மீது ரேஷ்மாவின் அப்பா கம்ப்ளெய்ன்ட் செய்ததும் இதுதான் சாக்கு, ஒருவருஷம் தபோவனத்தில் போட்டால் ஒழுக்கம்னா என்னான்னாவது கற்றுக்கொண்டுவருவான் என மனதைத் தேற்றிக் கொண்டு போட்டவருக்கு. பிள்ளை பன்னிரெண்டாவதில் அந்த பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாவது இடமும், அவங்கப்பா நினைக்கவே நினைக்காத மார்க்கும் வாங்கிவிட இன்னொரு பிரச்சனை தோன்றியது.

சாமியார் கால்களிலெல்லாம் விழுந்து பவ்யமாய் தன்னுடன் வீட்டிற்குக் கிளம்பிய பையனை பார்த்தால் பாதிச் சாமியார் போலத்தான் இருந்தது. நெற்றி முழுக்க வைக்கப் பட்டிருந்த திருநீரும் புருவங்களுக்கிடையில் சாந்தமாய் இடப்பட்டிருந்த சந்தன குங்குமமும். அழுக்கிலாமல் துவைக்கப்பட்டு அயர்ன் செய்யப்பட்டிருந்த காக்கி பேண்ட் வெள்ளைச் சட்டையில் அவன் முகம் தேஜஸ் கிளம்பும் ஒன்றாய் ஹீரோவின் தந்தைக்குப் பட்டது சரிதான் என்பதைப் போலிருந்தது அவனுடைய சைகைகள். வீட்டிற்கு வந்த பிறகும் ஐந்து மணிக்கு எழுவது யாரையும் தொந்தரவு செய்யாமல் குளித்துமுடித்து பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு நேரங்கழித்து வருவது. அவசியம் இருந்தால் மட்டும் பேசுவது என ஹீரோ வீட்டில் அவர்கள் எதிர்பார்த்ததற்கெல்லாம் நல்லவனாய் இருந்தது ஒரு வித பீதியையே ஏற்படுத்தியது. அதைவிட அவன் அடுத்துச் சொன்னது,

அதே சாமியார் மேனேஜ்மெண்ட் நடத்தும் கல்லூரியில் படிக்கப்போவதாய்ச் சொன்னதும் ஹீரோவினுடைய அப்பாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது வாஸ்தவம்தானே.

"ஒன்னு முழுக்க ஒழுங்கீனமாயிரு இல்லைன்னா இப்படியிரு. சாதாரணமா ஏண்டா இருக்க மாட்டேங்கிற, நீ மாறிட்ட உன்னைய அன்னைக்கு தபோவனத்துக்கு அனுப்பியிருக்க கூடாது தான். தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுக்கோ. அதை விட்டுட்டு இனிமேலும் அங்கத்தான் படிப்பேன்னா என்ன. சரியில்லை, நீ பேசாமயிரு உனக்கு நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு பீஇ கம்ப்யூட்டர் சைன்ஸ் ஸீட் நான் வாங்கித்தர்றேன்.

அதை விட்டுட்டு பிஎஸ்ஸி படிப்பேன், அதுவும் சாமியார்க் காலேஜில் தான் படிப்பேன்னு நிக்காத அவ்வளவுதான் சொல்லிட்டேன்."

நம்ம ஹீரோ அம்மா, அப்பா வெளியில் போயிருந்த ஒரு நேரத்தில் தன்னுடைய பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு நகர்ந்ததை மட்டுமல்ல, அதன் பிறகு அவன் அப்பா ஊரே தேடியதையும் பின்னர் என்னமோ நினைத்துக் கொண்டவராய் தபோவனத்திற்கு வர அங்கே இருந்துகொண்டு அவர் என்ன சொல்லியும் வரமாட்டேன் என்று திடமாய்ச் சொன்னதையும் பார்த்தவன் என்ற முறையில் அன்று அவன் மீது எனக்கு கொஞ்சம் கோபம் கூட வந்தது.

ஹீரோவின் அப்பாவிற்கு தெரிந்திருக்க வேண்டும், அப்படியே பிடிவாதத்தில் தன்னை உரித்துக்கொண்டு பிறந்தான் என்பது மனைவியையும் பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போனவர் சரியாய் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என அடுத்த மூன்றாண்டுகள் 18 முறை அவனை பார்க்க வந்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவன் அவர்களை விட்டு வெளியே போய்க் கொண்டிருப்பதாகவே உணர்ந்தார் என அவருடனே பயணித்த அந்த பஸ் பயணங்கள் உணர்ந்திருக்கிறேன். 36 மாதங்கள் மெழுகுவர்த்தியாய்க் கரைய ஹீரோ வாழ்க்கையென்ற பயணத்திற்கு பிரம்மாதமாய்த் தயாராகியிருந்தான்.

இங்கேயும் முடித்துவிட வேண்டும் எனதான் நினைக்கிறேன், மீண்டும் உண்மையை மறைப்பதில்லை என்பதால் தொடர்கிறேன்.

அவனுடைய வாத்தியார்கள் சாமியார்களாகயிருந்த போதிலும், அவனை இன்னொரு சாமியாராக ஆக்கிவிடாமல் இருந்ததற்காக ஹீரோவின் அப்பா உடைத்த தேங்காய்கள் சிதறியதை பார்த்து சிரித்த எனக்குக்கூட ஹீரோவின் மனநிலை புரியவில்லை, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று. ஆனால் அவன் ஆசிரியர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக மாற்றிவிட்டதாகவும், நல்ல மனிதர்கள் ஒரு நல்ல சமூகத்தை ஏற்படுத்தவேண்டுமே ஒழிய சமூகத்தைப் புறக்கணித்து சாமியாராவது சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் என்று சொல்லி அனுப்பிவைத்த நாள் மழை பெய்யவில்லை.

அவனாய் திரும்பவும் வீட்டிற்கு வந்தவனைப் பார்த்து BHEL முழுக்கவே வியந்தது என்றால் அது மிகையல்ல, வேலை வாங்கித் தருவதாய்ச் சொன்ன தந்தையை தடுத்து நிறுத்தி தானாய் சுயமாய் வாங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் முதலில் கிடைக்காவிட்டால் உங்களிடம் சொல்கிறேன் என்றவனை இன்று நீங்கள் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள் நான்கு வருடத்திற்கு முன்பு இவன் தான் ஒரு பெண்ணிடம் அவள் சைக்கிளை நிறுத்து தன்னுடைய காதலைச் சொன்னவன் என்றால். திரும்ப ஹீரோ ஹீரோயினைப் பார்க்கவேயில்லையா என்றால் பார்த்தார்கள் ஏறக்குறைய அதே காக்கா'பீ' ரோட்டில்.

காலாற நடந்துவரக் கிளம்பியவனின் கால்கள் தானாக காக்கா'பீ' ரோட்டில் தடம்பதிக்க, நான்காண்டு நினைவுகள் கரையும் பனிமலையால் உருகி ஓடத்தொடங்கியது. அதன் பின் நடந்ததை என்னவென்று சொல்வது, அவனருகில் சைக்கிள் வந்து 'சலீரென்று' பிரேக் போட்டு நிற்க நினைவு திரும்பியவனாய் நிமிர்ந்து பார்த்தவனுக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை தான். வேறயார் நம்ம ஹீரோயினி ரேஷ்மா தான்.

"ஹேய் நீங்க சுந்தர் தானே. என்னைய ஞாபகம் இருக்கா? இதே ரோட்டில் வச்சு என்கிட்ட I Love You சொன்னீங்களே! ஏதும் ஞாபகம் இருக்கா?"

அவள் பேச அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனி உதடுகளில் அசைவில்லை.

"அன்னைக்கு எங்கப்பாக் கிட்ட சொன்னப்ப, உங்கப்பா இவ்வளவு சீரியஸாய் எல்லாம் எடுத்துப்பார்னு நினைக்கலை. ஏதோ உங்களை திட்டுவிடுவார், நீங்க என் பின்னாடி சுத்த மாட்டீங்கன்னு தான் நினைச்சேன். பச், என்னென்னமோ நடந்திருச்சு. உங்கம்மாவையும், உங்கத் தங்கச்சியையும் பார்த்தாத்தான் பாவமாயிருக்கும். என்னாலத்தானே இவங்க பையனையும், அண்ணனையும் விட்டுட்டு இருக்காங்கன்னு.

ம்ம்ம் என்ன நினைச்சு என்ன ப்ரயோஜனம். நடந்தத மாத்த முடியுமா என்ன?

சரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டேயிருக்கேன். நீங்க ஒன்னுமே சொல்லலை. என்ன நான் பேசுறது காதில் கேக்குதா?"

நான்காண்டுகளுக்கு முன் இந்தக் குரல் கேட்டால் பாலாறும் தேனாறும் பாய்ந்த காதுகளில் அந்தச் சமயத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லையென்று அவன் கண்கள் சொன்னது, கண்கள் சொல்வதை மட்டும் நம்பும் நான் முழுதாய் நம்பினேன்.

"ம்ம்ம் என்ன கேட்டீங்க..."

"என்னது கேட்டீங்களா? சரியாப் போச்சு. ஹலோ நான் உங்களை விட சின்னப் பொண்ணு. சரிதான் ரமா சொல்லிக்கிட்டிருந்தா எங்க அண்ணன் பாதி சாமியாரா ஆய்ட்டான்னு. அவ சொன்னப்ப நான் நம்பலை இப்ப நம்பித்தான் ஆகணும் போலிருக்கு. " நிறுத்தியவள்

"வாங்களேன் நடந்துக்கிட்டே பேசுவோம்..."

இப்படி மீண்டும் ஆரம்பித்த இன்னொரு பக்க காதல், கொஞ்சம் கொஞ்சமாய் சாமியாராய்ப் போய்க்கொண்டிருந்தவனை சாதாரணமானவனாய் மாற்றத் தொடங்கியது. ரேஷ்மாவின் வீட்டிலும் தங்களால் தான் ஹீரோவின் குடும்பம் ஹீரோவை பிரிந்திருந்ததாக ஒரு மனநிலை நிலவியதால், ரேஷ்மாவிற்கு பிடித்திருந்தால் சரியென்று விட்டுவிட்டார்கள்.

இது இப்படியே போய் இரண்டாவது வருடத்தில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டவரை நான் அவர்களுடனேயே இருந்தேன் ஆனால் அவர்களுக்கு கலியாணம் ஆன பின்னால் இருவரின் வாழ்க்கையில் எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று அவர்களின் காதலுடன், காதலித்த நாட்களின் நினைவுகளுடன், காக்கா'பீ' ரோட்டுடன் மட்டும் இப்பொழுது நிற்கிறேன். இன்னொரு முறை வேறொரு ஹீரோ, ஹீரோயினியிடம்.

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

என்று சொல்லமாட்டானா என்ற ஏக்கத்துடன்.

Related Articles

3 comments:

  1. நல்ல கதை மோகன்தாஸ், நன்றாக வந்திருக்கிறது. ஆனால், முதல் பாகத்தில் யாருடைய கதையையோ கதை ஆசிரியர் சொல்லப் படிப்பது போன்ற உணர்வு இருந்தது.
    இரண்டாம் பாகத்தில், ஆசிரியர் தன் கதையையே மூன்றாம் மனிதனாக உருவகித்துக்கொண்டு சொல்வதைப்போன்ற உணர்வு ஏற்பட்டது. ஏன் என்று தெரியவில்லை :-)

    ReplyDelete
  2. இருக்கலாங்க, இரண்டு பகுதியும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டதில்லை.

    அதனால் அப்படி தோன்றலாம் தான். ஆனால்ல் நான் இந்தக் கதையை எழுதத் தொடங்கியதிலிருந்து "காலம்" கதையைச் சொல்வதாகத்தான் நினைத்துச் சொன்னேன்.

    மகாபாரதத்தில் வருவதைப் போல்.

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு உங்க காக்கா பீ ரோட்டு காதல் கதை ;)

    ReplyDelete

Popular Posts