இப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு கையால் செய்யக்கூடிய வேலைகளை அவளே செய்யத் தொடங்கியிருந்தாள் இன்னும் கட்டுகள் பிரிக்கப்படவில்லை. தினமும், ஹார்லிக்ஸ், ஃபுரூட் ஜூஸ் குடித்து உடம்பு சிறிதளவு தேறியிருந்தது. என்னிடம் இருந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி, முன்னேறிக் கொண்டிருந்தாள். ஆனால் முன்னர் பேசுவது போல் இப்போது பேசுவது இல்லை; சொல்லப்போனால் மிகவும் குறைந்திருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவாள்.
ஒரு நாள் இரவு, திடீரென சத்தம் கேட்டு எழுந்தேன். மதுதான் சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் என்னுடைய பெயிண்ட் எல்லாம் கொட்டிக்கிடந்தது.
"என்னம்மா?"
"இல்லை, பாத்ரூம் வந்தது. அதான் மெதுவா சுவற்றை பிடிச்சுட்டு போயிரலாம்னு பார்த்தேன். முடியலை..." இழுத்தாள்
"ஏம்மா இப்பிடியெல்லாம் பண்ணுற, என்னை எழுப்ப வேண்டியதுதானே?" நான் உண்மையில் சங்கடமாய்க் கேட்டேன்.
"இல்லை ரவி, இப்பத்தான் கண்மூடினீங்க, எழுப்ப கஷ்டமாயிருந்தது."
"இங்கப்பாரு, இப்ப நீ கீழே விழுந்திருந்தா கஷ்டமாயிருக்காது. இனிமே இப்படியெல்லாம் பண்ணாதே. எதையெல்லாமோ கற்பனை பண்ணிக்கிட்டே இருக்கன்னு நினைக்கிறேன். நான் பிறந்ததிலேர்ந்தே அதிகம் பேசமாட்டேன். ஆனா நீ அப்பிடி கிடையாது. அதிகம் பேசுவ. இப்ப பேசாம அதையெல்லாம் மனசில வச்சிக்கிட்டு எதையாவது யோசிட்டுருந்தா இப்படித்தான். என்ன இன்னும் இரண்டு மாசத்துக்கு தானே, கஷ்டப்படப்போறேன். பரவாயில்லை எழுப்பு. என்ன?"
"சரி..."
திரும்ப வந்து படுக்கையில் படுத்தவுடன், "ரவி சும்மாவாவது என் பக்கத்தில் படுத்துக்கோங்க, நான் உங்க கட்டிலில் படுத்துட்டு நீங்க தரையில் படுக்கிறதை பார்த்தா கஷ்டமாயிருக்கு."
"படுக்கிறதபத்தி ஒரு பிரச்சனையும் இல்லை, சின்ன கட்டில், திரும்பி படுக்கும் போது மேல பட்டுட்டா கஷ்டமாயிரும். அதானால பரவாயில்லை, படுத்துக்கோ"
அடுத்த ஒரு மாதத்தில் கட்டுகள் எல்லாம் பிரிக்கப்பட்டிருந்தன. இன்னும் சிறிது காயம் ஆறவேண்டியிருந்தது. இப்பொழுதெல்லாம் அவளுடைய முக்கால்வாசி வேலைகளை அவள்தான் பார்த்துக்கொள்கிறாள். கொஞ்சம் சரியானதிலிருந்தே, பக்கத்தில் வர விடமாட்டாள்.
"பொம்பள உடம்ப இவ்வளவு பக்கத்தில் பார்க்கக்கூடாது, ஒரு மாதிரி இருக்கும். அதனால நானே கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பார்த்துக்கிறேன். ப்ளீஸ் எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு, ஏற்கனவே நீங்கள் என்னோட ட்ரெஸ்ஸையெல்லாம் தோக்கிறீங்க. அதனால இனிமே என்னை நானே பார்த்துக்கிறேன்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள் பிறகு "கோபமெல்லாம் ஒன்னுமில்லையே, நான் சொல்றது புரியுதா?"
"புரியரதெல்லாம் சரி, ஆனா ஏற்கனவே பார்த்ததுதானே அதனால என்ன? சரி, டாக்டர் இன்னும் ஒன்னு இல்லை இரண்டு வாரத்தில் முழுசா சரியாயிடும்னு சொன்னார். இப்பத்தான் பார்க்குறதுக்கு பொம்பள புள்ள மாதிரி இருக்கியாம். சொல்லச்சொன்னார், இப்பிடியே இன்னும் இரண்டு மாசத்துக்கு சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் குண்டாகுவியாம்."
உந்தி உந்தி நடந்து கண்ணாடியருகில் வந்தவள்,
"கொஞ்சம் குண்டாயிட்டேன்ல?"
"நான் பார்க்க மாட்டேன், பொம்பள உடம்ப பக்கத்தில் பார்க்குறது தப்பு..." சொல்லிவிட்டுச் சிரித்தேன். கொஞ்சம் சதை போட்டிருந்தாள் தான். அதாவது உடலளவில் கொஞ்சம் தேறியிருந்தாள். ஆனால் மனதளவில் மிகவும் தளர்வாக இருந்ததாகபட்டது எனக்கு, பெண்ணியம் எல்லாம் இப்பொழுது பேசுவதில்லை; எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் சரி போகட்டும் இன்னும் ஒரு மாதத்தில் திரும்பவும் எல்லாம் சரியாயிரும்னு நினைச்சிக்கிட்டேன்.
அடுத்த ஒரு வாரத்தில் முழுவதுமாக சரியாகியிருந்தது, ஆனால் இன்னமும் கொஞ்சம் உந்தித்தான் நடக்கிறாள். அது சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். அன்றைக்கு நாங்கள் கணபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். பிறகு நேராக ஹோட்டலுக்கு வந்து இரண்டு பேரும் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டோம். பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வர பத்தரை ஆகிவிட்டிருந்தது. அன்றிரவு அவள் என்னைத் தூங்கவிடவேயில்லை.
காலை ஒரு ஐந்தரைமணியிருக்கும், யாரோ அழுவதுபோல் சத்தம் கேட்டதால் நான் எழுந்து பார்த்தேன். மதுதான் அழுது கொண்டிருந்தாள். என் வாழ்வில் நான் கனவில் கூட நினைத்து பார்த்திராத விஷயம். நான் விழித்துக்கொண்டதைப் பார்த்தும் இன்னும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்; ஆக்ஸிடண்ட் ஆகி பாதி செத்துப்போய் வந்த பிறகு கூட நான் அவள் அழுது பார்த்ததில்லை. எவ்வளவோ கஷ்டம்; தானாய் பாத்ரூம் போகமுடியாமல், தானாய் துணிமாற்ற முடியாமல், தானாய் தான் நினைத்ததைச் செய்ய முடியாமல் இருந்த பொழுதெல்லாம் கூட அழுதவளில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.
"நான் அப்பவே நினைச்சேன், நீ ராத்திரி அழுச்சாட்டியம் பண்ணும்போதே? என்னம்மா இது ரொம்ப வலிக்குதா?" நான் மெதுவாக அவள் அருகில் சென்று உட்கார்ந்தேன்.
"உடம்புவலின்னு நினைச்சீங்களா ரவி, ம்ஹூம் மனசுவலிக்குது ரவி, ரொம்ப பயமாயிருக்கு, எனக்கு அப்பா அம்மா கிடையாது ரவி, கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சதும் அதுக்காக நான் கவலைபட்டது கிடையாது. கடவுள் நல்ல அறிவை கொடுத்திருந்தான். படிப்புக்கு வேண்டிய செலவெல்லாம் நானே பார்த்துக்கொண்டேன். அப்பெல்லாம் நான் பயப்பட்டதில்லை. சர்ச்சில் எனக்குக் கொஞ்சம் கெட்டபெயர் கூட உண்டு, நான் யாருக்கும் பயப்படுவதில்லையென்று. அவசியம் இருந்ததில்லை, அப்பொழுதெல்லாம். படித்து முடித்தபின் கூட சீக்கிரமே வேலை கிடைத்தது. இந்தச் சமுதாயத்தைப் பற்றி ஒரு விரக்தி இருந்ததே தவிர பயம் இருந்தது கிடையாது. ஆக்ஸிடெண்ட் ஆனதுக்கு முன்னாடி நாள் உங்ககிட்ட சொன்னேனே, ஒரு ஆறு மாதம் இருந்து பார்ப்போம் புடிச்சிருந்ததுன்னா இருக்கலாம் இல்லைன்னா நான் ஹாஸ்டல் திரும்ப போயிடுறேன்னு, அத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு ரவி, இனிமே நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியலை. நீங்க என்ன வேணும்னா நினைச்சுக்குங்கோ; முதல்ல உங்க வீட்டுக்கு குடிமாறி வந்தப்ப உங்ககிட்ட இவ்வளவு ஒட்டுதல் இல்லை; அநாதைப்பொண்ணு; ஒரு பாதுகாப்பு தேவையாயிருந்தது. நீங்க வேற ஒன்னும் பண்ணிட மாட்டீங்கன்னு நான் கணிச்சேன், என்ன இதுக்கு விலை கொஞ்சம் தடவை உங்ககூட படுத்து எந்திருக்க வேண்டியிருக்கும் பரவாயில்லைனு தான் நினைச்சேன். நீங்களே சொல்லுங்க ரவி, என்னை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா, இல்லை நான் தான் மறைக்க முடியுமா நான் அப்பா அம்மா பெயரே தெரியாதவள்னு. நீங்களும் ஏதோ தனியாளா இருக்கீங்க, உங்ககூட வந்து இருந்துட்டேன். அம்மா அப்பா உங்களுக்கு இருந்திருந்தா இப்பிடியிருக்க முடியுமா சொல்லுங்க? உடம்பளவில் ஒரு பத்து கிலோ கூடியிருப்பேனா, ஆனா மனசளவில் ஒன்னுமே இல்லாம போய்ட்டேன். எங்கப்பாவை பத்தி நினைச்சு நினைச்சு ஆம்பளைங்க எல்லோரையும் தப்பா நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு கல்யாணம்னா ஒரு விளையாட்டாத்தான் இருந்தது. ஆனா இப்ப முடியலை, ரொம்ப பயமாயிருக்கு, என்னை கைவிட்டுறாதீங்க ரவி; நீங்க என்ன வேணும்னா நினைச்சுக்கோங்க, ப்ளீஸ் என்னை
கல்யாணம் பண்ணிக்கோங்க; நீங்க உங்க பழைய வாழ்கையிலே என்ன தப்பு பண்ணியிருந்தாலும் பரவாயில்லை. நினைச்சுப்பார்க்கவே முடியலை, நான் ஹாஸ்டலில் இருந்து ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்தால், யாரு எனக்காக செலவு செய்வா, பாதி செத்துப் போனவளை கூடவே இருந்து யாரு திரும்பக் கூட்டிட்டு வருவா?" சொல்லிவிட்டு தோளில் சாய்ந்து மேலும் அழத் தொடங்கினாள்.
நான் சிறிது நேரம் அவள் பேசியதையே யோசித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவளிடம் பதில் எதுவும் சொல்லாமல், சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு, வெளியே கிளம்பிபோனேன். மதியம் தான் திரும்பவும் வந்தேன்.
அவள் அப்பிடியே அந்த இடத்திலேயேதான் உட்கார்ந்திருந்தாள்; கண்கள் இரண்டும் சிவந்து பெரிதாகியிருந்தன. இன்னும் அழுது கொண்டிந்தாள்.
"சாப்டுட்டியா?"
"இல்லை, சப்பாத்தி சுட்டு வைச்சிருக்கேன், நீங்க சாப்டுட்டீங்களா?"
"நான் சாப்டுட்டேன் சரி, நீ சீக்கிரம் சாப்பிடு, நாம ஒரு இடத்துக்கு போகணும், எங்கப் போறோம்னு மட்டும் கேட்காதே, ம்ம்ம் சீக்கிரம். வண்டி வந்திரும்."
அடுத்த அரைமணிநேரத்தில் நாங்கள் டொயோட்டா குவாலிஸில் கேரளா நோக்கி போய்க்கொண்டிருந்தோம். வண்டியில் என்மேல் ஈஷிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், நான் மெதுவாக சிரிக்கத் தொடங்கினேன்.
"ரவி, ஏன் சிரிக்கிறீங்க?"
"இல்லை சும்மாத்தான். சரி உங்கிட்ட ஒரு கேள்வி. நீ இன்னிக்கு காலையிலே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்டவுடனே பதில் சொல்லாமல் வெளியே போய்ட்டேனே, நீ என்ன நினைச்ச? நான் யாரு? நாம இப்ப எங்க போறோம்னு சொல்லு பார்க்கலாம், உனக்கு ஒரு பரிட்சை," சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
என் முகத்தைப் பார்த்தவள், "நான் நினைச்சேன், நீங்க வெளியே போய், தாலியோ, இல்லை மோதிரமோ வாங்கிட்டு ஃபாதரைக் கூட்டிக்கிட்டு வருவீங்கன்னு; வீட்டில் வைத்து கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு; ஆனா அது நடக்கலை." அவள் சொன்னவுடன் நான் சிரித்தேன் பிறகு, "நானும், நீ அப்பிடித்தான் நினைப்பேன்னு நினைச்சேன். சரி, ம்ம்ம் சொல்லு."
"இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு, எனக்குப் புரியலை," சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, "அப்புறம் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கு, உங்க பொண்டாட்டிக்கு மூளை வளர்ச்சி இல்லை, நாம இப்ப அவங்களைத்தான் பார்க்கப் போறோம். என்ன நான் சொல்றது சரியா?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள்.
என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். பிறகு, "உனக்குத் தங்கம் பிடிக்குமா?"
"ஏன் தாலி வாங்கப்போறீங்களா? பொதுவா சொல்லப்போனால் பிடிக்காது, என் உடம்பில் ஒரு சொட்டு தங்கம் கூட இருக்காது. அதுதான் நீங்க பார்த்திருப்பீங்கல்ல. தாலின்னா பரவாயில்லை சின்னதா தங்கம் இருக்கலாம். இல்லைன்னா பரவாயில்லை ஒரு மஞ்சள் கயிறுகூட போதும்."
அன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததாலயோ இல்லை அவள் பேசியது மிகவும் வேடிக்கையாக இருந்ததோ நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். அவளும் நான் சிரிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்னம்மா பார்க்கிற?"
"நீங்க இப்பிடி சிரிச்சு நான் பார்த்ததே கிடையாது, அதுவும் இந்த இரண்டு மாசத்துல நீங்க கொஞ்சம் சோகமா இருந்த நாள் தான் அதிகம். ஒருவேளை நான் உங்களை கஷ்டப்படுத்திட்டனோ என்னவோ? நீங்க தலை சீவவே இல்லை, பாருங்க உங்க முடியெப்பிடி பறக்குதுன்னு, இங்க வாங்க நான் ரப்பர்பேண்ட் போட்டுவிடுறேன்."
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு தூக்கம் வருது. நான் கொஞ்சம் தூங்குறேன்." சொல்லிவிட்டு அப்படியே சீட்டில் தலைசாய்த்து தூங்கத்தொடங்கினேன். ஆனால் அவள் என் தோளை பிடித்திழுத்து என் தலையை அவள் மடியில் வைத்துவிட்டு, "தூங்குங்க" என்றாள். பிறகு என் தலைமுடிக்குள் விரல்களை விட்டு சிக்கெடுக்கத் தொடங்கினாள். நான் தூங்கிப்போனேன். நான் எழுந்த பொழுது என்தோளில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவளை எழுப்பாமல் மெதுவாக எழுந்து அவளை என் மடியில் படுக்கவைத்தேன். பிறகு, "ராம்சிங், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"
"மூணுமணிநேரத்தில் வீட்டில் இருக்கலாம்க"
நான் அவளைப் பார்த்தேன், சுடிதார்தான் போட்டிருந்தாள். சேலைகட்ட சொல்லியிருக்கலாம்னு நினைச்சேன். பாவமாக இருந்தது, என்னை நம்பி எங்கன்னு கூட கேட்காமல் வந்து கொண்டிருந்தவளை பார்க்கும்பொழுது. மெதுவாய் அவள் உதட்டை விரலால் வருடினேன். விழித்துக்கொண்டாள். என்னைப்பார்த்து சிரித்தாள்.
"என்னம்மா எழுந்துட்ட?"
"யாரோ எழுப்பின மாதிரி இருந்தது..."
"சரி பக்கத்தில் உட்காரு, உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்."
சற்று ஆர்வமாகி, "ம்ம்ம், சொல்லுங்க"
"இங்கப்பாரு என் பர்ஸனல் விஷயங்களை நீ கேட்டதில்லை, நானும் சொன்னதில்லை, ஆனால் இனிமேல் வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி உனக்கு அருள்மொழிவர்மரைத் தெரியுமா?"
"யாரைக் கேக்குறீங்க? வரலாற்று கதாப்பாத்திரத்தையா?"
"இல்லை, இன்ட்டஸ்ரியலிஸ்ட் அருள்மொழிவர்மரை..."
"ம்ம்ம் தெரியுமே, கேள்விபட்டிருக்கேன் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர். ராஜபரம்பரைனு சொல்லுவாங்க, மன்னர்களுடைய நிலங்களையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் இண்டஸ்ரியில் புகுந்து நிறைய சம்பாதிச்சாருன்னு சொல்வாங்க, ஏன் கேக்குறீங்க?"
கொஞ்சநேரம் அவளையே பார்த்துக்கிட்டிருந்துட்டு, "அவருதான் என்னோட அப்பா, ஸ்ரீலஸ்ரீ அருள்மொழிவர்ம ஜெகவீர பூபதி, நான் அவரோட ஒரே ஒரு பையன் ஸ்ரீலஸ்ரீ ரவிவர்ம மகேந்திர பூபதி..." சொல்லிவிட்டு நான் அமைதியாக இருந்தேன். அவள் நம்ப முடியாமல் என்னையே பார்த்தாள்.
நெருக்கமாக உட்கார்ந்திருந்தவள், கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்.
"அப்பிடின்னா..."
"அவரோட அத்துனை கோடி சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு."
"அதெப்பிடி முடியும், நீங்க எப்பிடி பாதுகாப்பே இல்லாம தனியா ஒரு வீட்டில் இருக்க முடியும். அதுமட்டுமில்லாம அருள்மொழிவர்மருக்கும் உங்களுக்கும் இடையில் நிறைய வயசு வித்தியாசம் இருக்கும்..."
நான் அவளிடம் நேராக பதில் சொல்லாமல், "ராம்சிங், கொஞ்சம் திரும்புங்க..." ராம்சிங் திரும்ப மதுமிதாவிடம்
"இவரை நீ பார்த்ததுண்டா?"
"ம்ம்ம் பார்த்திருக்கிறேன், டீக்கடையில் வேலை பார்க்கிறார்னு நினைக்கிறேன்."
"அப்பிடியே திரும்பி கொஞ்சம் நம்ப வண்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் பாரு..." அங்கே இரண்டு மூன்று குவாலிஸ்கள் இருந்தன. "இதெல்லாம் என் பாதுகாப்புக்குத்தான், எல்லாம் அப்பா ஏற்பாடு. நான் வரிசையாக சொல்கிறேன் அப்பொழுது புரியும் உனக்கு." மூச்சை கொஞ்சம் இழுத்துவிட்டு, கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்திருந்த அவளை பக்கத்தில் இழுத்து அவள் தோளில் கையை போட்டேன். பிறகு, "எங்கப்பா தொழில் விஷயமா காஷ்மீர் போயிருந்தப்ப அங்க இருந்த தொழில் அதிபர் பெண்ணான ஒரு காஷ்மீரியப் பெண்ணை கல்யாணம் பண்ணி கூப்டுட்டு வந்துட்டார். கல்யாணம் ஆன முதல் வருஷமே எங்கக்கா பிறந்துட்டாங்க. ஆனா அதற்கு பிறகு அவங்களுக்கு கர்ப்பம் நிலைக்கவேயில்லை, சுமார் பதினெட்டுவருஷத்துக்கு பிறகுதான் நான் பிறந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் பிறந்த ஒரு மாதத்தில் எங்கக்காவுக்கும் குழந்தை பிறந்தது. எங்கக்காவுக்கு எங்க மாமாவை அதாவது எங்கம்மாவுடைய தம்பியைதான் கல்யாணம் பண்ணிவைச்சாங்க. இப்ப எங்க மாமாதான் எல்லாவற்றையும் பார்த்துக்கிறார். நான் பிறந்த ஒரு மாசத்திலேயே எங்கம்மா இறந்துட்டாங்க. அதிலேர்ந்து என்னை வளர்த்தது எல்லாம் எங்கக்காதான்."
கொஞ்சம் நிறுத்தினேன். பிறகு, "நானும் எங்கக்காவும் அப்பிடியே எங்கம்மாவைக் கொண்டு பிறந்திருந்தோம். எங்கப்பாவும் கொஞ்சம் கலர்தான் என்றாலும் அம்மா அச்சு அசல் ஒரு காஷ்மீரி. இன்னும் சொல்லப்போனால் எங்கக்கா பொண்ணு வானதிக்கும் எனக்குமே முகத்தில் நிறைய ஒற்றுமை இருக்கும். எல்லோருமே நான், எங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் பிறந்ததாகவும் அக்காபெண்ணு என் ட்வின்னும் சொல்லிப்பாங்க." சொல்லிவிட்டு நான் சிரித்தேன்.
அவள் இடையில் புகுந்து, "உங்கம்மா காஷ்மீரி என்றால் உங்களுக்கு காஷ்மீரி தெரியுமா?"
அவளை இன்னும் கொஞ்சம் இறுக்கிவிட்டு, "ரொம்ப நல்லாவே பேசுவோம், வீட்டில் எங்கப்பாவை தவிர நாங்க எல்லோருமே நல்லா காஷ்மீரி பேசுவோம். தாயோட மொழின்னு எங்கப்பா எங்களுக்கு ஆளுங்களை வைச்சு கத்துக்கொடுத்தாரு, வீட்டிலும் பெரும்பாலும் அதுதான் பேசுவோம்."
"அப்ப நீங்க சாமியார்கிட்ட சிஷ்யனா போனேன்னு சொன்னதெல்லாம் பொய்யா?"
"இங்கப்பாரு என்னைச் சொல்லவிடு, பாதியில் நீதான் குறிக்கிட்ட; சரி, பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு சொல்வாங்க, நான் பார்ன் வித் கோல்டன் ஸ்பூன். ஒரே ஒரு ஆண் வாரிசு, அம்மாயில்லாத பிள்ளை அப்பிடின்னு என்னைக் கஷ்டமே தெரியாம வளர்த்திட்டாங்க. முதல் இரண்டு மூன்று வருடங்கள் தரையில் கூட கால்பட விடமாட்டாங்களாம். பின்னர் டாக்டர் சொல்லித்தான் தரையிலேயே விட்டாங்களாம். என்னை அதட்டவோ திட்டவோ அந்த வீட்டில் யாருக்குமே உரிமை கிடையாது, நானும் அவ்வளவு திமிரா நடந்துக்க மாட்டேன். எக்கக்கா என்னை வளர்த்ததாலே எனக்கு ஒரு பெண்பிள்ளைக்குரிய அத்தனை குணங்களும் இருந்ததுன்னு சொல்வாங்க. எங்கப்பா பிஸினஸ் காரணமா உலகம் பூரா சுத்தத் தொடங்கிய காலம் அது..."
நான் சிறிது நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தேன், "எங்கவீட்டில் நிறைய பெண்கள் உண்டு, எங்கப்பாவிற்கே நிறைய மனைவிகள் இருந்தார்கள். அதனால் நான் பெரும்பொழுதுகளை பெண்களுடன் தான் கழித்தேன். இப்படியே வளர்ந்ததால எனக்கு வாழ்க்கை சிறிது சிறிதாக போரடிக்கத் தொடங்கியிருந்தது. நான் எதுவுமே செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. இது எனக்கு ஒரு விதமான வெறுப்பைத்தான் வளர்த்தது. அந்த சமயத்தில் தான் அந்தச் சாமியார் என் வீட்டிற்கு வந்திருந்தார். சிறு வயதில் இருந்தே அவரிடம் ஈர்ப்பு உண்டாகியது. பின்னர் வயது அதிகமானதும் அவருடனே செல்ல ஆவல் அதிகமானது. நான் இதை என்வீட்டில் சொல்லி அவருடன் இமயமலைக்குக் கிளம்பினேன்."
இடைமறித்த அவள், "விளையாடுறீங்களா, இவ்வளவு செல்லமா வளர்த்த பையனை ஒரு சாமியாரை நம்பி இமயமலைக்கு அனுப்புறதா. சும்மா காதில் பூ சுத்தாதீங்க" சொல்லிவிட்டுச் சிரித்தாள், பதிலுக்கு நானும் சிரித்தேன்.
"அது ஒரு பெரிய கதை, சரி அதையும் சொல்லுறேன். அப்ப எக்கக்கா பிறந்து ஒரு பதினாறு வருஷம் ஆகியிருக்கும், அதாவது நான் பிறக்குறதுக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, அந்த சாமியார் வீட்டிற்கு வந்திருந்தாராம். எங்கப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. அந்தச் சாமியார் என் தாய் தந்தையிடம் இன்னும் இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும், அது பிறந்த உடன் அதன் தாய்க்கு ஒரு பெரிய கண்டம் இருக்கும்னு சொல்லிட்டுப் போனாராம்.
அதுமாதிரியே இரண்டு வருடம் கழித்து நான் பிறந்தேன், பிறந்தவுடன் அங்குவந்த அந்த சாமியார் என் ஜாதகத்தைக் கணித்துவிட்டு இவன் மிக வல்லவனாக வளர்வான்; ஆனால் பத்து வருடம் கழித்து அதாவது அவன் பத்தாவது வயதிலிருந்து இருபதாவது வயது வரை அவன் என்ன கேட்டாலும், சொன்னாலும் மறுக்காதீர்கள். மறுத்தீர்கள் என்றால் அது மிகப்பெரிய விபரீதத்தில் முடியும். ஆனால் இவன் உங்களுக்குத்தான், என்ன நடந்தாலும், நிச்சயம் உங்களிடம் திரும்பி வந்துவிடுவான்!"
"ரவி இது பாபா கதை மாதிரி இருக்கு."
"ஸ்ஸ்சு, கொஞ்சம் சும்மாயிரு, நான் படிப்பில், வரைவதில், எல்லாவற்றிலும் முதல்வனாக இருந்தேன். எங்கப்பா உதவியில்லாமலே நான் கல்லூரிகளில் படித்தேன். என் உடன் படித்தவர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது. இதுதான் நான் பத்து வயது கடந்த பிறகு அக்காவிடம் முதலில் கேட்டது. ஓப்புக்கொண்டார்கள். இப்படியே தொடர்ந்து பின்னர் இமயமலைக்கும் சென்றேன். பிறகுதான் உன்னிடம் முன்பே சொல்லயிருந்தேன், அந்தச் சாமியார் எனக்கு வயசாகவில்லையென்று திரும்ப அனுப்பிவிட்டார்."
"அதற்கு பிறகு நான் மிகவும் மாறியிருந்தேன். வீட்டில் அக்காவிடம் மட்டும்தான் பேசுவேன். எப்பப் பார்த்தாலும் தியானம் தான். பக்திதான். எங்கப்பா பயந்து போய் என்னை பிஸினஸில் இறக்கினார். நானும் மறுக்காமல் அதையும் செய்தேன். அந்த வருடம் எங்கள் கம்பெனி அதன் வாழ்நாளில் மிகப்பெரிய டர்ன் ஓவரைச் செய்திருந்தது, நான் நேராய் தந்தையிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, நான் சென்னை போய் தனியாய் இருக்கவேண்டும் எனச் சொன்னேன். கொஞ்சம் யோசித்த அவர் பிறகு சரியென்று சொல்லிவிட்டார். ஆனால் சில கண்டிஷன் போட்டார். அதில் ஒன்றுதான் என்னுடன் இருக்கும் இந்த துப்பாக்கி வைத்திருக்கும் காவலாளிகள். இதுதான் நான் மெட்ராஸ் வந்த கதை. பிறகுதான் தெரியுமே உன்னைச் சந்தித்து, காதலித்து அப்புறம் அப்புறம்..." சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன்.
"ரவி நீங்க சொல்றதெல்லாம் உண்மையா, நம்பவே முடியலை. காற்றில் நடக்கிறமாதிரி இருக்கு, அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்னைய கூட்டிட்டு போறீங்களே, சரியா வருமா." கொஞ்சம் நிறுத்திவிட்டு "நான் அப்பா அம்மா பெயரே தெரியாத பெண்ணு; உங்கவீட்டில் ஒத்துக்குவாங்களா?" அவள் கண்களில் நீர்கட்டிக்கொண்டிருந்தது.
"என்னம்மா இது, இப்பெல்லாம் நீ முன்னமாதிரி இல்லை, நான் உன்னை பார்த்ததில் இருந்தே நினைத்திருக்கிறேன். மது எப்பவாவது அழுமா இல்லை இதுக்கு முன்னாடி அழுதிருக்குமான்னு, அதனாலத்தான் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கவீட்டில் நான் சாமியாரா போயிருவேனோன்னு ஒரே பயம். எனக்கு கல்யாணம் எப்பிடியாவது பண்ணிரணும்னு பார்த்தாங்க. நான் மறுத்துட்டு இங்க வந்திட்டேன். இப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னா சந்தோஷப்படுவாங்க. ஆனா உன்னைப் பத்தி முழுசா விசாரிப்பாங்க, உனக்கே தெரியாத உன்னைப்பத்திய விஷயங்கள் எல்லாம் இன்னேரம் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கும்."
"எனக்காக எங்கக்கா எதையும் செய்வாங்க, நான் கேட்கவேண்டியதேயிருக்காது, நான் கேட்டுட்டன்னா அதுக்கு வேற பதிலே கிடையாது. அதான் சொன்னேனே." நான் சிரித்தேன்.
"உங்கவீட்டுக்கு என்னைப்பத்தித் தெரியுமா?"
"என்ன விளையாட்டா? நீ என் ரூமிற்கு வந்திருக்க; என்கூட தங்கியிருக்க; அதுக்கெல்லாம் முன்னாடியே இந்த செக்யூரிட்டிஸ் மூலமா விஷயம் போயிருக்கும். ஆனா நமக்கு அது நடந்த அடுத்தநாள் நான் அக்காவிடம் சொல்லி பர்மிஷன் வாங்கினேன்."
"என்ன பர்மிஷன்?"
"சொல்றதுதான் அக்கான்னு; ஆனா என்னை வளர்த்த அம்மா, எங்கக்கா. அவங்க ஒன்னு சொல்லிட்டா என்னால் மறுக்க முடியாது. அவங்க பெண்ணுக்கு நான் முறைமாமன். இதுவரைக்கும் செய்யவேண்டிய எல்லா முறையையும் நான்தான் செய்திருக்கேன். எங்கக்கா என்னிடம் வந்து என் பெண்ணை கட்டிக்கோன்னு சொன்னா என்னால் மறுக்க முடியாது. அதான் அக்காவிடம் முதலில் சொல்லி பர்மிஷன் கேட்டேன்."
"என்ன சொன்னாங்க?"
"அக்காவுக்கு ரொம்ப சந்தோஷம், உடனே உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஆனா உனக்குதான் ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்ததே. அதனால் உன்னை மருத்துவமனையில் வந்து பார்த்துவிட்டு போனார்கள். அதெல்லாம் உனக்குத் தெரியாது."
"அப்ப வேற இடத்தில், வேறு மாதிரி எனக்கு ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கலாமே? நான் தவறாக கேட்கலை, ஏன் அப்ப அந்த முடிவுக்கு வந்திருந்தீங்க?"
"இதுக்கும் நீயே பதில் சொல்லிட்ட, ஒரு விஷயம் நான் எங்கப்பாவிடம் காசு வாங்காமல், அவர் பெயரை உபயோகிக்காமல் இருக்க வேண்டுமென்றுதான் மெட்ராஸ் வந்தது. அதனால் நான் உன் காரணமாக அப்பாவைப் பார்க்கவில்லை. ஆனால் உனக்கு உடனடியாக ஒருலட்சம் அப்பாவினுடைய பணம் வாங்கினேன், இந்த செக்யூரிட்டிகளிடம் இருந்து. அதையும் திரும்ப கொடுத்துவிட்டேன். மற்றபடிக்கு நான் ஒரு பணக்காரன்னு சொல்லி உன் காதலைப் பெற விரும்பலை. அதற்கு முன்பாகவே நமக்கு உடலால் தொடர்பு இருந்தாலும் மனதால் நீ அவ்வளவு நெருங்கவில்லை, அதுதான், உன்னை மனதாலும் நான் முழுவதுமாக நெருங்குவதற்கு அப்படி செய்தேன்."
"காலையில் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொன்னதும் நான் அப்படியே வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டேன். அதுவும் நீ பழைய வாழ்க்கையில் எந்த தப்பு பண்ணியிருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னவுடன் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது பிறகு, உன்னை அப்பிடியே தூக்கிட்டு போய் எல்லா தப்பும் பண்ணனும் நினைச்சேன். சரி பாவம் பொண்ணு ஆக்ஸிடெண்ட் ஆன உடம்பு; பின்னாடி பார்த்துக்கலாம்னு சொல்லித்தான் விட்டுட்டேன். பின்னர் அக்காகிட்ட விஷயத்தைச் சொல்லி நான் அவளைக் கூட்டிட்டுவரேன், வண்டி அனுப்புன்னு சொல்லிட்டு வந்தேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
அதைக் கேட்ட அவள் முகம் சிவந்தது. பின்னர் அவள், "இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிரலை, ஹார்லிக்ஸ், ஜூஸ் எல்லாம் குடிச்சிட்டு இப்ப தெம்பாத்தான் இருக்கேன். வாங்க ஹோட்டல்ல ரூம் போட்டு தப்பு பண்ணலாம்" சொல்லிவிட்டு தன் இரண்டு கைகளால் தன் கண்ணை மூடிக்கொண்டாள்.
"ஏய், ஏய், காட்டு, காட்டு, நீ வெட்கப்பட்டு நான் பார்த்ததே கிடையாது. நான் அவள் கைகளை விலக்கப்பார்க்க, அவள் என் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.
"அப்புறம் ஒரு விஷயம், நாம வீட்டுக்கு போனதுக்குபிறகு என்னைத் தேடாதே, நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன், பின்னாடி நானே உன்னை வந்து பார்க்கிறேன்."
நாங்கள் வீட்டிற்கு போனதுமே, என் அக்கா வாசல் வரை வந்து மதுவிடம், "வாம்மா, ஒருவழியா இப்பயாவது கூட்டிட்டு வந்தானே..." அக்கா சொல்ல, அவள் என்னையே பார்த்தாள். அக்காவிற்கு நாற்பதுக்கு மேல் வயதிருக்கும் என்று சொன்னாலும் நம்பமுடியாது. பின்னாலேயே வானதியும் நின்றிருந்தாள். மதுமிதாவிற்கு அவர்கள் இருவரையும் பார்க்க என்னுடைய பெண் உருவம் போல் இருந்திருக்கும், அதுவும் வானதி மப்பூம் மந்தாரமாய், அரண்மனைப் பெண்களுக்கே உரிய நகைகள் எல்லாம் போட்டுக்கொண்டிருக்க, தேவதை போல் இருந்தாள். நான் நேராக வானதியிடம், "இங்கப்பாரு, இனிமே இவளை நீதான் பார்த்துக்கணும். அவ ஏதாவது குறை சொன்னான்னா உன்னைத்தான் உதைப்பேன்." சொன்னவுடன் அவளும் எப்பொழுதும் போல "சரிங்க அத்தான்," சொல்லிவிட்டு மதுமிதாவைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள். அக்கா என்னிடம், "என்னடா கல்யாணம் பண்ணிற வேண்டியதுதானே, இல்லை கல்யாணம் பண்ணிக்கலாமலேயே..." காஷ்மீரியில் கேட்டுவிட்டுச் சிரித்தார்கள்.
"அக்கா என்னயிது விளையாட்டு, அப்பாகிட்ட சொல்லீட்டீங்கள்ல, எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு இருக்கீங்க?"
"எல்லா ஏற்பாடும் போய்க்கிட்டிருக்கு. அப்பா ஒரு கண்டிஷன் தான் போடுறார். நீ கல்யாணத்துக்குப் பிறகும் சாமியார் மாதிரி இருக்காம, கம்பெனிய பார்த்துக்கணும்னு சொன்னார்."
"அதெல்லாம் பார்த்துக்கறேன், அப்பாகிட்ட மதுமிதாவைக் காட்டணுமே?"
"இனிமே அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ஏற்கனையே உங்க பெண்டாட்டிய பார்த்துக்கிட்டது போதும். சரி போய் இந்த சாமியார் வேஷத்தையெல்லாம் களைச்சுட்டு வந்துரு!" சொல்லிவிட்டுச் சிரித்தார்கள்.
(தொடரும்...)
0 comments:
Post a Comment