In காதல் கதை தொடர்கதை மதுமிதா ரவிவர்மன்

மதுமிதா - 4

அடுத்த நாள் வீட்டில் நான் பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்த பொழுது வீட்டு ஓனர் வந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மதுமிதா என்ற பொண்ணுக்கு ஆக்ஸிடெண்டாம் சைல்ட் ஜிஸஸ்ல வைத்திருக்கிறார்களாம், உங்களை உடனே புறப்பட்டு வரச்சொன்னார்கள் என்று சொன்னார். நான் பதறிப்போய் உடனே கிளம்பி மருத்துவனை போனால் அங்கு அவளைக் கொண்டுவந்து மருத்துவனையில் சேர்த்தவர் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்.

"ஒன்னுமில்லை தம்பி, ஒரு சின்ன பொண்ணு பட்டென்று திரும்பி ரோட்டுக்கு வந்திருச்சு, எதிர்த்தாப்புல பார்த்தா ஒரு லாரி வேகமா வந்துக்கிட்டு இருக்கு. அந்த டிரைவரும் ரொம்ப வேகமா ப்ரேக் போட்டுட்டான். ஆனா இறக்கம். அதுக்குள்ள இந்தப் பொண்ணு இடையில் பூந்து குழந்தையை தூக்கி வீசிறுச்சி; ஆனாலும் அந்த லாரி இந்தபொண்ணு மேல மோதி இந்தப் பொண்ணை தூக்கி எறிஞ்சிருச்சி. வலது பக்கம் முழுக்க பலத்த அடி. நிறைய ரத்தம் போயிருச்சு, மற்றபடிக்கு உயிருக்கு ஆபத்தில்லை. இனிமே நீங்க பார்த்துப்பீங்கல்ல; நான் வரேன்" அந்த மனிதருக்கு நன்றி சொல்லி அனுப்பிவைத்தேன்.

டாக்டர் என்னருகில் வந்தார்,

"சொல்லுங்க டாக்டர்."

"இல்லை ஒரு மைனர் ஆப்பரேஷன் பண்ண வேண்டியிருக்கும் போலிருக்கு, மொத்தமா ஒரு லட்சம் ரூபா செலவாகும். பண்ணலாம்ல?"

"நிச்சயமா டாக்டர், நீங்க பண்ணீருங்க. நான் கவுண்டரில் பணத்தை கட்டிவிடுகிறேன்."

ஆபரேஷன் முடிந்து என்னிடம் மீண்டும் வந்த டாக்டர், "ஒன்றும் பிரச்சனையில்லை, இரண்டு மூணு மாசத்துக்கு. வலது காலும், வலது கையும் அசைக்கமுடியாது. நிறைய வலியிருக்கும். பார்த்துக்கோங்க. ஆஸ்பிடலில் வைச்சிருந்தீங்கன்னா கொஞ்சம் செலவாகும். இரண்டு நாளில் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடலாம். வாரம் ஒரு தடவை வந்து பார்த்தா போதும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ரொம்ப பலவீனமா இருக்காங்க; நிறைய சாப்பிட சொல்லுங்க. ஜூஸ், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுங்க; சின்ன ஆப்பரேஷனையே அவங்க உடம்பு தாங்க மாட்டேங்குது."

நான் அவளைப் பார்க்கப் போனேன். தூங்கிக் கொண்டிருந்ததால் பார்க்கவே பாவமாயிருந்தது. ஆபரேஷன் செய்துவிட்டு பச்சை நிற ட்ரெஸ்ஸில் வைத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் மெதுவாக கண்விழித்துப் பார்த்த அவள், "ரவி வந்திட்டீங்களா?"

"ம்ம்ம், வந்திட்டேன். அதிகமா பேசாதே; ஒன்னும் பிரச்சனையில்லை. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவார்கள். வீட்டுக்குப் போய்விடலாம். இப்ப பேசாம கண்ண மூடித் தூங்கு."

கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் பிறகு தூங்கிப்போனாள். இரண்டு நாள் கழித்து அவளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன். வீல்சேரில் ஆம்புலன்ஸில் வந்தவளை, தூக்கிக்கொண்டுவந்து கட்டிலில் கிடத்தினேன். பின்னர் ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு வந்தால், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

"என்னம்மா ரொம்ப வலிக்குதா?"

"ரவி எனக்கு எவ்வளவு செலவாச்சு?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள்.

நான் பதில் சொல்லாமல் அமைதியாக அந்த இடத்தைவிட்டு சமையல்கட்டிற்கு வந்து, "ஹார்லிக்ஸ் சாப்பிடுறியா?" கேட்டேன்.

"ரவி இங்க கொஞ்சம் வரீங்களா, ப்ளீஸ்." நான் வந்தேன் கையில் ஹார்லிக்ஸ் கலக்கிக்கொண்டு.

"சொல்லுங்க எவ்வளவு செலவாச்சு?"

நான் அவள் அருகில் அமைதியாக உட்கார்ந்து அவள் தலையைத் தடவினேன். பின்னர், "இந்த தேவதைக்கு காசு எதுவும் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார் டாக்டர்; அதானால எல்லாமும் இலவசம்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

"நர்ஸம்மா சொன்னாங்க..." முடிக்காமல் என்னைப் பார்த்தாள்.

"என்ன சொன்னாங்க?"

"லட்சத்துக்கு மேல செலவாகியிருக்கும்னு... உண்மையா?"

நான் பதில் சொல்லவில்லை,

"பதில் சொல்லுங்க, ஒரு லட்சம் வாங்கினீங்கன்னா. எப்பிடித் திரும்ப கட்டுவீங்க..."

நான் திரும்பவும் அவள் தலையை தடவிக் கொடுத்துவிட்டு, "பார்க்கத்தானே போற... இங்கபாரு, நீ அதிகமா பேசக்கூடாதுன்னு டாக்டர் கண்டிப்பா சொல்லியிருக்காரு. உனக்கு என்ன கேள்வி கேட்கணுமோ அதையெல்லாம் மனசில் எழுதி வைச்சுக்கோ மூணுமாசம் கழிச்சுக் கேளு. இப்ப பேசாமல் படுத்துத் தூங்கு."

வலியின் காரணமாக சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள்.

மதியம் ஒரு மணி போல், கையில் சுடுதண்ணீருடனும், ஸ்பாஞ்சுடனும் வந்து அவளை எழுப்பினேன். என்ன என்பது போல் பார்த்தாள்.

"ஸ்பாஞ் பாத்..." சொல்லிவிட்டு அவள் உடைகளை கழட்டி பக்கத்தில் வைத்துவிட்டு, ஸ்பாஞ் பாத் கொடுத்ததற்குப் பிறகு புதிய உடைகளை போட்டுவிட்டு பழைய உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

"ரவி அதையெங்க எடுத்துட்டு போறீங்க?"

"துவைக்கிறதுக்கு?" சொல்லிவிட்டு பாத்ரூமிற்கு கிளம்பினேன்.

என்னுடைய, அவளுடைய துணிகளை துவைத்து, மொட்டைமாடியில் காயப்போட்டுவிட்டு. இருவருக்கும் சமைக்கத் தொடங்கினேன். தால் ஃபிரையும் ரொட்டியும் செய்தேன். பின்னர் அவளுக்காக இரண்டு கிளாஸ் மொஸம்பி ஜூஸ் செய்து வைத்துக்கொண்டு அவளை எழுப்பினேன்.

"சாப்பிட்டுட்டு படுத்துக்கோ."

எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள். நான் அவளுக்கு மெதுவாய் ரொட்டியை ஊட்டிவிடத் தொடங்கினேன். சாப்பிட்டு முடித்ததும் ஜூஸ் கொடுத்தேன் குடித்துவிட்டு, "நீங்க சாப்பிட்டுட்டீங்களா?"

"இல்லை இனிமேல்தான்." நான் சொல்லிவிட்டு மெதுவாக அந்தத் தட்டிலேயே கையைக் கழுவினேன். பிறகு, பரணில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தேன்,

"என்னங்க இருக்கு அந்தப் பெட்டியில?"

"ம்ம்ம், பூதம் இருக்கு" சொல்லிவிட்டுச் சிரித்தேன். பிறகு அந்தப் பெட்டியில் இருந்து கம்ப்யூட்டர் எடுத்து அசெம்பிள் செய்ய ஆரம்பித்தேன்.

"உங்களுக்கு கம்ப்யூட்டர் எல்லாம் தெரியுமா? நீங்க சொல்லவேயில்லையே?"

நான் திரும்பி அவளைப் பார்த்து சிரித்தேன்.

"நான் படிச்சது, வேலைபார்த்தது எல்லாமே கம்ப்யூட்டரில்தான். ஆனால் சில வருடங்களிலேயே இந்த வேலை பிடிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் அந்த கம்பெனி ஒனர் சொல்லியிருந்தார். நீ எப்ப வேண்டுமானாலும் திரும்பி வரலாம்னு. அதான் நேத்திக்கு போய் கேட்டிருந்தேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். பிறகு உன் நிலைமையை சொன்னதும், சரி நீ வீட்டிலிருந்தே வேலை பாருன்னு சொல்லிட்டார்"

"வீட்டிலிருந்தேன்னா எப்பிடி?"

"சொன்னா உனக்குப் புரியாது?"

"இல்லை, நான் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கவில்லையென்றாலும், நான் ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்தது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் தான்; அதனால் புரியும் சொல்லுங்க?"

நான் அவள் கேட்டதை விட்டுவிட்டு, அவளை வம்புக்கு இழுத்தேன்.

"நீ ரிசப்ஷனிஸ்டா வேலைபார்த்தியா, உன் மூஞ்சிக்கு யாரு அந்த வேலையைக் கொடுத்தது."

"ஏன் என் மூஞ்சிக்கு என்ன குறைச்சல், சொல்லப்போனால் அந்த கம்பெனியிலேயே நான் தான் அழகு. ம்ம்ம், பேச்சை மாத்தாதீங்க, என்ன வேலை?"

"ப்ரொடக்ஷன் சப்போர்ட்"

"அப்பிடின்னா?"

"அதனாலத்தான் சொன்னேன் உனக்கு புரியாதுன்னு..." நான் சொன்னதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். "இங்கபாரு கம்பெனி ப்ரோஜக்ட் பண்ணி கிளெயண்ட்கிட்ட கொடுக்கும், அவங்க அதை யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க, அப்ப ஏதாவது பிரச்சனைன்னாலோ, இல்லை ஏதாவது மாத்தணும்னாலோ என்கிட்ட கேட்பாங்க. நான் பிரச்சனையை சால்வ் பண்ணணும் அவ்வளவுதான்," சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"உங்களுக்கு அவ்வளவு தெரியுமா, சரி இதுக்கு எவ்வளவு சம்பளம்?"

நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன்.

"சாரி உங்க பர்ஸனல் விஷயத்தைக் கேட்டிட்டேன் மன்னிச்சுடுங்க!" சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டாள். நான் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். பின்னர் அவளைத் திருப்பி, "ஒரு நாற்பதாயிரம் இருக்கும்னு வைச்சுக்யோயேன்"

"ரவி, இவ்வளவு சம்பளம் கிடைக்கும்னா, நீங்க ஏன் இந்த வேலையைத் தொடரலை. பரோட்டாக்கடையில் எல்லாம் ஏன் வேலைபாத்தீங்க?"

"இங்கபாரு மது, நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னது தான், எனக்கு அந்த வாழ்க்கை போரடித்தது. பிறகு எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவை நான் சம்பாதித்துக் கொண்டேன். இப்ப எனக்கு தேவை, நிறைய காசு, அதான் இந்த வேலை. உனக்கு சரியானதும் திரும்பவும் இந்த வேலையை விட்டுவிடுவேன்."

அவள் என்னிடம் எதையோ கேட்க வந்து பிறகு விட்டுவிட்டாள். அன்று மாலை ஒருதரம் ஸ்பாஞ்பாத் கொடுத்துவிட்டு, இரவு சாப்பாடு சமைக்கத் தொடங்கினேன். கிளெயண்ட் அமேரிக்கன் என்பதால் இரவு பத்துமணிக்கு மேல்தான் வருவான். அதற்குள் சாப்பாடு சமைத்து, அவளுக்குக் கொடுத்துவிடலாம் என்று ஒரு யோசனை. ரசம் வைத்துவிட்டு, உருளைக்கிழங்கு வறுவல் செய்திருந்தேன்.

அவளை எழுப்பினேன்.

"ஏய் நீ தூங்கலை?"

"இல்லை" அதற்குப் பிறகு என் வியாதி அவளுக்கு வந்திருந்தது, பேசாமல் மௌனம் சாதிக்கத் தொடங்கியிருந்தாள்.

இப்படியே ஒருவாரம் சென்றிருந்தது, தினமும் நானே சமைத்து அவளைக் கொல்லாமல் சிலநாள் ஹோட்டலிலும் வாங்கிவந்து கொடுத்தேன். அன்று காலை எப்பொழுதும் போல் ஸ்பாஞ்பாத் கொடுக்க வந்ததும், "ரவி..."

"சொல்லு மது"

"இல்லை, எனக்கு இன்னிக்கு டேட்ஸ்..."

நான் சிறிது நேரம் யோசித்துவிட்டு, "மது ஒன்றும் பிரச்சனையில்லை, நீ என்ன செய்யவேண்டுமென்று சொல், நான் செய்கிறேன்."

முடிந்ததும் அவள், "ரவி, கஷ்டமாயில்லை?"

"இதிலென்ன கஷ்டம் மது, எனக்கு அடிபட்டிருந்தா நீ செஞ்சிருக்க மாட்டியா?"

"இல்லை ரவி, எனக்கு அப்படிதோணலை, உண்மையை சொல்லணும்னா நான் பண்ணியிருக்கமாட்டேன்னுதான் சொல்லுவேன். எனக்கு முதலிலேயே என்னடா இது இவன்கூட ஒரு தடவை படுத்து எந்திருச்சததுக்கு இந்த கேடான்னு தான் நினைச்சிருப்பேன். சமைச்சு, துணிதுவைச்சு, கழுவிவுட்டு, நாப்கின் மாட்டிவிட்டு. ம்ஹ¤ம் நான் பண்ணியிருக்க மாட்டேன்." சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள். நான் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

நான்கைந்து நாள்கள் ஆகியிருக்கும், ஒருநாள் இரவு நான் கிளெயண்ட் ஒருவனிடம் பேசி க்கொண்டிருந்தேன். அவள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அரைமணிநேரம் அந்த அமெரிக்கனிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்ததும். அவள் அருகில் போய் உட்கார்ந்தேன்.

"மது தூங்கலை?"

"இல்லை... நீங்க எப்ப தூங்குவீங்க?"

"இல்ல நான் தூங்குறதுக்கு லேட்டாகும், இன்னொரு கால் வர வேண்டியிருக்கிறது. நீ தூங்கு"

"இங்க தூங்குங்களேன்..."

எனக்கு புரிந்தது,

"மது, உன் உடம்பு ரொம்ப வீக்காயிருக்காம், டாக்டர் கூடாதுன்னு சொல்லியிருக்கார். இரண்டு மாசம் ஆகட்டும் பார்த்துக்கலாம்."

கொஞ்ச நேரம் பேசமாலிருந்தவள், என் வலது கையை அவளது இடது கையால் பிடித்தாள். சிறிது நேரம் கழித்து,

"ஒரு முத்தமாவது..."

"ம்ம்ம்."

கிளெயன்ட் கால் பண்ணியிருந்தான்; அதனால் அவளைத் தூங்கச்சொல்லிவிட்டு நான் அந்த காலை அட்டெண்ட் பண்ணினேன்.

(தொடரும்...)

Related Articles

2 comments:

  1. enjoy reading your stories please keep on coming

    ReplyDelete

Popular Posts