In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 3

அடுத்த நாள் காலையில் மோகன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக நடந்து வந்து கொண்ருந்தார்கள். ஆஹா இன்று கனிமொழியிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தவனாய் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நுழைந்தான். பெண்கள் டீக்கடையில் டீ குடிப்பதில்லை. கனிமொழி தூரத்தில் இருந்து அவனை கோபத்துடன் பார்த்தாள். ஆனால் கல்லூரிப் பேருந்தில் வந்து உட்கார்ந்ததும் மாட்டிக் கொண்டான்.

கனிமொழி, "சார்லஸ், நீங்க முன்னாடி ஸீட்டில் உட்காருங்களேன்" என்று சார்லஸை எழுப்பிவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். மனம் பதற்றப்படத் தொடங்கியது.

"என்னம்மா சொல்றா உன் பிரண்ட்?" அவனே ஆரம்பித்தேன்.

"ஆனாலும் அண்ணே, நீங்க பண்ணினது சரியில்லை!"

"எதைச் சொல்ற?..."

"அகிலா நேத்திக்கு பூரா ஒரே அழுகை, நான் பயந்திட்டேன் யாராவது நான் இல்லைன்னு ரேகிங் ஏதும் பண்ணிட்டாங்களோன்னு. ஆனா நம்ம காலேஜூல ரேகிங் கிடையாதுங்கறதால, ஏண்டி அழறேன்னு கேட்டா உங்க பேரைச் சொல்றா, சின்னப் புள்ளையை இப்படியா பயமுறுத்துறது?"

"இதென்னாடி வம்பாயிருக்கு, நான் என்னா பண்ணினேன் உன் ஃபிரண்டை, கூப்பிடு அவளையே கேட்கிறேன்!"

"ம்... இங்கப் பாருங்க, நான் சொன்னேன்னு சொன்ன பின்னாடியும் நோட்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே." அவள் உண்மையில் கோபத்துடன் கேட்டாள்.

"ஏய் இங்கப் பாரு அவ உங்கிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன், அவளை காலேஜூல பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சுப்போட்டியில பார்த்தேன், என்னைப் பத்தி தப்பா பேசினா, அடிச்சிட்டேன், பின்னாடி தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பும் கேட்டுட்டேன். நீயே சொல்லு அவளோ பர்ஸ்ட் இயர், என்கிட்ட நேரா வந்து நோட்ஸ் கொடுன்னா எப்பிடு கொடுப்பேன், அவ முதல்ல உன் பேரைச் சொல்லவே இல்லை, சொன்ன பின்னாடி கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்"

"ஆகா, இவ்வளவு நடந்திருக்கா. கள்ளி என்கிட்ட சொல்லவேயில்லை, ஆமா ஒரு நாள் வந்து உம்முன்னு உட்கார்ந்திருந்தா, அப்பிடியிருக்க மாட்டாளேன்னு, என்னாடின்னு கேட்டேன். ஒன்னுமில்லைன்னுட்டா, சரி யாரோ ஒரு பையனை சாக்கா வச்சு சொன்னீங்களாம் நோட்ஸ் தரேன்னு, அதை ஏன் என்கிட்ட நேரே சொல்லலைன்னுதான் ஒரே அழுகை." பின்னர் குரலை குறைத்து, "அண்ணே, அவளுக்கு அம்மா கிடையாது, அப்பா புரோகிதம் அதனால காசு கிடையாது. +2வில நல்ல மார்க் ஆனாலும் இங்க நம்ம காலேஜூல தான் சீட் கிடைத்தது. அது மட்டுமில்லாம ரொம்ப வெகுளிப் பொண்ணு, ஊரு, ஒலகத்தப்பத்தி ஒண்ணுமே தெரியாது. அவங்கப்பா என்கிட்ட வந்து நீதாம்மா பார்த்துக்கணும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காரு, இப்பக்கூட எங்கவீட்டுக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்னு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேங்கிறா; அப்பா இவளை தனியா அனுப்ப முடியாது. வேணுமின்னா நீயும் ஹாஸ்டல்ல தங்கிப் படீங்கிறார். இவளால நானும் இப்ப ஹாஸ்டல்ல தங்கணும்." மூஞ்சை சோகமாக வைத்துக் கொண்டாள்.

"சரி நான் ஏதாவது சொல்லணுமா உன் ஃப்ரெண்ட்டுகிட்ட?"

"அண்ணே, அவ அப்படியே உங்கள மாதிரி தான், நல்லா படிப்பா, நல்லா பேசுவா, நல்லா ஓவியம் கூட வரைவா, நான் நினைச்சேன் நம்ம கூட அவளையும் சேர்த்துக்கிலாம்னு, நீங்கத்தான் உங்களுக்கு ஒத்து வராதவுங்க கூட பழகமாட்டீங்க. இவளோட எல்லாமும் ஒத்துவரும்னாலும் அதுக்காட்டியும் சண்டை போட்டு, அடிச்சுவேறபுட்டீங்க. நான் சொல்றத சொல்லிட்டேன் இனிமே உங்க விருப்பம்." என்று சொல்லிவிட்டு திரும்ப போய் அகிலாவிடம் உட்கார்ந்து கொண்டாள்.

பிறகு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள், சிறிது நேரத்தில் அகிலா மீண்டும் அழத் தொடங்கினாள்.

அய்யோ இதென்னடா பெரும் தலை வேதனையாப்போச்சே என்று நினைத்துக்கொண்டே மோகன் கண்களை மூடினான்.

அன்றைக்கெல்லாம் நிறைய வேலை இருந்ததால் வேறு எதைப்பற்றிய நினைவும் வரவே இல்லை அவனுக்கு. சாப்பிடும் நேரத்தில் கனிமொழி அவனைப் பார்க்க வந்திருந்தாள், அவளிடம் அகிலா கேட்ட நோட்ஸ்களைக் கொடுத்து விட்டு, "இங்கப்பாரு உன் ஃபிரண்ட்கிட்ட சொல்லு, அவ உட்கார்ந்து காப்பி எடுப்பாளோ, இல்லை ஜெராக்ஸ் எடுப்பாளோ எனக்குத் தெரியாது, இரண்டு நாள்ல எனக்கு நோட்ஸ் திரும்ப வேண்டும். உனக்காகத்தான் அவளுக்கு நோட்ஸ் கொடுக்கிறேன். எனக்கு ரொம்ப வேலையிருக்கு இன்னொருநாள் உட்கார்ந்து பேசுவோம்" என்று சொன்னதும் அவளும் சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை, கல்லூரி கிடையாது என்பதால் வீட்டில் ஆஸ்திரேலியா விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே யாரோ கூப்பிடுவது போல் சப்தம் கேட்டது, ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அகிலா நின்று கொண்டிருந்தாள்.

"அத்தே..."

தன் அம்மாவையா கூப்பிடுறாள் பாவி என்று நினைத்து, உடனே வெளியில் வரலாம் என்று நினைத்தால் அவன் அணிந்திருந்த உடுப்பு பத்தலை, அதனால் மேல்சட்டையைத் தேடி போட்டுக் கொள்வதற்குள், அவன் அம்மா கதவைத் திறந்துவிட்டார்கள்.

"யாரும்மா நீ?"

"அத்தே, இது மோகன் வீடு தானே, எனக்கு அவரைப் பார்க்கணும்..."

"அவன் வீடுதான் நீயாரும்மா?"

"நான் அவர் கூடப் படிக்கிற பொண்ணு, சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன், என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தே!" என்று சட்டென்று அவங்கம்மா காலில் விழுந்துவிட்டாள்.

அம்மா உடனே பதற்றமாகி, "என்ன பொண்ணும்மா நீ, கால்ல எல்லாம் விழுந்துட்டு. கூப்பிடுறேன் பேசிக்கிட்டிரு, நான் உனக்கு காப்பி கொண்டு வரேன்" என்று அவளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள வந்து அவனிடம் "டேய், உன்னைப் பார்க்க யாரோ பொண்ணு வந்திருக்கு, போய்ப்பாரு" என்று சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் போய்விட்டார்கள்.

நேராய் அவளிடம் சென்று, "ஏய், இங்க எதுக்கு வந்த?" அவன் கேட்க

"ஏங்க, அந்த சுவற்றில இருக்கிறது நீங்க வரைஞ்சதா, சூப்பராயிருக்கு" வீட்டுச் சுவற்றில் சாக்பீஸ் கொண்டு வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து தான் கேட்டாள்.

"இத சொல்லறதுக்குத்தான் வந்தியா?" ஏறக்குறைய கத்தினான்.

"இல்ல, நீங்கத்தான் கனி அக்காகிட்ட நோட்ஸ் சீக்கிரம் வேண்டும்னு கேட்டீங்களாம். அதான், ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்பிடியே உங்க வீட்டிலேயே திரும்பி கொடுத்துட்டு வந்திரலாம்னு வந்தேன்."

அடுத்தக் கேள்வி கேட்குறதுக்குள்ள அம்மா காபி டம்பளருடன் திரும்பி வந்து, "கனி அக்காவா அது யாரு? தம்பி, நம்ம கனிமொழியா" அவளிடம் நீட்டினார்கள்.

"ம்ம்ம்... நம்ம கனிமொழிதான், இவ அவளோட தங்கச்சி முறை, அகிலாண்டேஸ்வரின்னு பேரு, நம்ப காலேஜூலத்தான் படிக்குது!"

"அப்பிடியா, நீ பேசிட்டிரு நான் கடைவரைக்கும் போய்ட்டு வந்திர்ரேன்"

அம்மா போனபிறகு, "அதுக்காக, வீட்டுக்கா கொண்டு வரச்சொன்னது? திங்கட்கிழமை காலேஜூல கொடுக்க வேண்டியதுதானே?"

"ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" திரும்பவும் கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது அவளிடம்.

"சரி கொடுத்துட்டேல்ல, கிளம்புறது" நழுவத் தயாரானான்.

"என்னை துரத்துறதிலேயே இருக்கீங்க..." புலம்பினாள்.

"சரி, என்னாத்தான் பண்ணனும்"

"எனக்கு இங்கிருக்கிற லைப்பிரரியில, மெம்பராகணும். கனி அக்காதான் சொன்னாங்க நீங்க மெம்பருன்னு; நான் மெம்பராகணும்னா, ஏற்கனையே இருக்கிற மெம்பர் யாராவது கையெழுத்து போடணுமாம். அதான் நீங்க போடுவீங்களான்னு கேட்க வந்தேன்." என்னவோ ப்ளான் போட்டுத்தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தான்.

"நாளைக்கு காலையில வந்து கையெழுத்து போடுறேன், இப்ப கிளம்புறியா?" அம்மா திரும்ப வருவதற்குள் அவளை அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தான்.

"அத்த வந்ததும் சொல்லிட்டு போறேன்" பிடிவாதம் செய்தாள்.

இன்றைக்கு உதை வாங்கித்தராம போக மாட்டாள் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டு, "அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ கிளம்பு!" என்று சொல்லி அவளை அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகியது அவனுக்கு.

அம்மா வந்தவுடன் முதல் வேலையா அவனிடம் வந்து, "என்னடா அவ அத்தைங்கிறா, எனக்கெங்கையோ உதைக்கிற மாதிரி இருக்குதே?!" என்று ஒரு மாதிரி முகத்தை வைச்சுக்கிட்டு கேட்க.

"எல்லாம் என் தலையெழுத்து வேற என்னா", என்று சொல்லிட்டு மீண்டும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினான். அவன் வீடு கொடுத்திருந்த சுதந்திரத்தை அவன் உபயோகித்ததில்லை. மோகன் அப்பா இருந்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும் கூட ஆனால் அவர் அந்தச் சமயம் வீட்டில் இல்லை.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 2

"உங்களோட நோட்ஸ் எனக்கு வேண்டும், கிடைக்குமா?".

மேடையிலிருந்து இறங்கியதும் நேராக ஆயாக்கடைக்குப் போய் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டிவிட்டு, வகுப்பிற்கு செல்ல படியேறினான். அவன் கல்லூரி இருந்த காட்டில் சாப்பிடுவதற்கான உணவங்கள் அப்பொழுது இல்லை. அவன் கல்லூரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பிரபலமான பொறியியல் கல்லூரி அருகில் கூட பெரிய உணவகங்கள் கிடையாது. கிழக்குப் பக்கம் ஐந்து கிலோமீட்டர் மேற்குப்பக்கம் பத்து கிலோமீட்டர் தள்ளித்தான் குறிப்பிடும்படியான ஊர்கள் இருந்தன. கல்லூரி இருந்த இடத்தின் அருகில் இருந்த ரைஸ்மில்லிற்காய் ஒரு தாத்தா பாட்டி நடத்தி வந்த கடை தான். பொதுவாய் டேஸ்காலர்கள் அங்கே உணவருந்த வருவதில்லை, ஆனால் மோகன் டேஸ்காலராக இருந்தாலும் ஆயாவுடனான பழக்கத்தில் அங்கே வருவதை வழக்கமாக வைத்திருந்தான். அவன் திரும்பிப்
 போகின்ற வழியிலேயே நின்று கொண்டிருந்தாள். என்னடா இது இவளைப் பார்க்க வேண்டியிருக்கிறதேன்னு மோகன் நினைத்துக்கொண்டே நகர்ந்தான், அவன் கடக்கும் பொழுது அவள் கேட்டாள்.

உடனே, "முதல்ல நான் உங்களோட சீனியர்ன்னு தெரியுமா, நீங்க முதல் வருடம் படிக்க வந்திருக்கிறீங்க. சொல்லப்போனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் தான் கேட்கணும். எங்கிட்ட கேட்கிறீங்க. நோட்ஸ் என்கிட்டயிருந்தாலுமே யார்க்கு தரணும்னு நான் முதல்ல யோசிக்கணும். உங்களைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது, நான் நோட்ஸ் தருவேன்னு எப்படி நினைச்சீங்க, ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க முதலாம் ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க, நான் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அவ்வளவுதான் நமக்குள்ள உள்ளது. முன்னாடி நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டாச்சு, அவ்வளவுதான்!" என்று சொல்லிவிட்டு வகுப்பிற்குள் நுழைந்தான்.

அங்கே என்னுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர்கள் இருந்தார்கள்.

"ம்ம்ம்... சொல்லுங்கண்ணே!!" என்றான்.

"அண்ணே, எங்க ஜூனியரைப் வரவேற்க போறோம், உங்களையும் கூட்டிக்கிட்டு போகச் சொல்லி பிரின்ஸி சொன்னாரு, வரீங்களா?"

"என்னடா வம்பாப் போச்சு, உன் ஜூனியரை வரவேற்க நான் எதற்கு, பிரின்ஸிக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏனாம்?"

"ராகிங் பிராப்ளம் இருப்பதால் உங்களையும் கூட்டிக்கிட்டு போகச்சொல்லி சேர்மன் சொன்னாராம்."

"சரி வந்து தொலையுறேன், ஆனா ஒன்னும் பேசமாட்டேன். இங்கையே சொல்லிட்டேன்".

எல்லா புதுமுகங்களும் உட்கார்ந்திருந்தார்கள், இவள் முதல் பெஞ்சிலேயே உட்கார்ந்திருந்தாள், முகம் வாடியிருந்தது. அவனைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.

"இவர்களெல்லாம் உங்க சீனியர்கள், இவன் பேரு சுந்தரம், கிளாஸ் ரெப். இனிமே சுந்தரம் உங்ககிட்ட பேசுவான்" மோகன் விலகி பின்னால் சென்று நின்றான்.

அவன் நன்றாகவே பேசினான், பேச்சின் இடையே விஷயம் நோட்ஸ் பக்கம் வந்தது. சுந்தரம் என்னவோ பதில் சொன்னான், அப்போது அவன் எதேச்சையாக அவளைப் பார்க்க அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்தது.

"அண்ணே..." சுந்தரம் கூப்பிட்டதும் தான் மீண்டும் உணர்ச்சி வந்தது.

"ம்ம்ம்... சொல்லு சுந்தரம்".

"இவங்க சிலபஸ் மாறியிருக்காம், பர்ஸ்ட் செமஸ்டர்ல சி-யும், டேட்டா ஸ்ட்ரெக்சரும் இருக்காம். அது எங்களுக்கும் இப்பத்தான் - மூன்றாம் செமஸ்டரில் இருக்கு. நோட்ஸ் வேண்டுமாம். எங்களிடம் இல்லையே? அதான் என்ன செய்யறதுன்னு..."

இது அவன் எதிர்பாராதது, அவள் இதைத் தெரிந்து கொண்டுதான் அவனிடம்  கேட்டாளா என்று அவன் யோசித்தான், ஐயோ என்னடா இது சோதனை என்று நினைத்துக் கொண்டவனாய்

"ஸ்டுடண்ட்ஸ், இங்கே லக்சரர்ஸ் தற்ற நோட்ஸே போதும், அப்புறம் புக்ஸ் இருக்கும். உங்களுக்கு சீனியர் நோட்ஸ் தேவைப்படாது, தேவைப்பட்டால் உங்க லெக்சரர் மூலமா மூவ் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். இப்பொழுதும் அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு அவர்கள் ஒவ்வொருவருடைய பெயர், ஊர், அப்பாவின் தொழில் இன்னபிற விவரங்களைச் சொன்னார்கள். கேட்காமல் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு அவள் சொல்லும் விவரங்களை கூர்மையாகக் கேட்டேன். பெயர் அகிலாண்டேஸ்வரி, ஊர் ஸ்ரீரங்கம், அப்பா புரோகிதர்.

இதன் கடைசியில், சுந்தரம் கேட்க கூடாத ஒரு கேள்வியைக் கேட்டான்.

"உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேட்கலாம்" என்றான்.

உடனே அகிலா எழுந்து "நான் பேச்சுப்போட்டியில் கலந்துப்பேன், அதுக்கு யார்கிட்ட கேட்கணும்?" என்று கேட்டுவிட்டு அவனை வேறு தனியாகப் பார்த்தாள்.

"தாஸ் அண்ணாதான் கல்ச்சுரல் லீட், அவர்கிட்டத் தான் சொல்லணும். ஆனா உங்களுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அண்ணா வருஷாவருஷம் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கி வருவார்," என்று சொல்லி பெருமையாக வேறு அவனைப் பார்த்தான்.

தலையெழுத்தே வம்புல மாட்டிவிட்டுட்டானே என்று நினைத்தவனாய் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உங்கள் பெயரையும் பதிவு செய்யலாம். போட்டிக்கு முன்பு கல்லுரியில் ஒரு போட்டி நடக்கும். அதில் வென்றவர்கள் தான் யுனிவர்சிட்டி போட்டியில் கலந்திக்கணும். அதனால உங்கள்ல யார் யாரெல்லாம் நல்லா பேசுவீங்களோ அவங்களெல்லாம் கலந்துக்கலாம். அதுக்கு மாலை நேரத்தில என்னை தனியா பாருங்க" என்று மோகன் சொன்னான். அவளுக்காக என்றில்லாவிட்டாலும், அதுதான் முறை.

என்னடா இது இன்று சுத்தி சுத்தி அடிக்குதே என்று  நினைத்துக்கொண்டவனாய் மீண்டும் வகுப்பறைக்கு வந்தான்.

மாலை ஐந்து மணியிருக்கும், கல்லூரி எப்பொழுதும் நாலே காலுக்கே முடிந்துவிடும், ஆனால் அன்று கொஞ்சம் வேலையிருந்ததால் அவன் கிளம்பியிருக்கவில்லை. ஐந்து மணிக்கு அகிலா பர்ஸ்ட் ப்ளோரிலுள்ள அவன் வகுப்பறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் என்னவோ நினைத்தவனாய் வாசல் பக்கம் திரும்ப நின்று கொண்டிருந்தாள். எப்பொழுதிலிருந்து நிற்கிறாளோ தெரியவில்லையென்று நினைத்து உள்ளே கூப்பிட்டான்.

"மறந்தே போயிட்டேன், கூப்பிட்டுயிருக்கலாம்ல."

"இல்ல இன்னொரு பையனும் வந்தான், இப்ப கீழே போயிருக்கான் வரட்டுமேன்னு பார்த்தேன். அதுமட்டுமில்லாம உங்களை கூப்பிட பயமாயிருந்தது" என்று சொன்னாள்.

அவன் அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கவனிக்காதது போல விட்டுவிட்டு.

"சரி சொல்லு, நான் உனக்கு என்ன பண்ணனும்"

"இல்ல நீங்கதான் பேச்சுப்போட்டியில கலந்துக்கணும்னா உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா நான் பேச்சுப்போட்டியில கலந்துக்கல; வேற என்ன போட்டியிலெல்லாம் கல்லூரி கலந்துக்கும்னு தெரிஞ்சா, எதிலாவாது கலந்துக்கலாமேன்னுதான்"

வேண்டுமென்றே அவனைக் கிண்டுகிறாள் என்று அவன் ‘ஏன் பேச்சுப்போட்டியில கலந்துக்கலை’என்று கேட்கவில்லை.

"நாங்க அது இல்லாம, ஸ்கிட், மைம் இரண்டுலேயும் கலந்துப்போம், டான்ஸ் மற்றதெல்லாம் என்கிட்ட இல்லை"

"நான் டான்ஸ் ஆடமாட்டேன், நாடகத்தில் கலந்துக்கிறேன், முன்னாடி எங்க ஸ்கூல் நாடகத்திலெல்லம் நடிச்சிருக்கேன்"

மோகன் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி உன் பேரை சேர்த்துக்கிறேன், தேவையிருந்தால் கூப்பிடுகிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு என் நோட்டில் நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தேன்.

ஆனா ஒரு இரண்டு நிமிஷம் ஆகியிருக்கும் அவள் கிளம்பாததால்,

"ம்ம்ம்... அப்புறம்?" என்றான்.

அவள், "இல்லை, நோட்ஸ்..." என்றாள் முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு.

"நான் உன்கிட்ட முதல்லையே சொன்னேன், பின்னாடி கிளாஸ்லையும் சொன்னேன்... இதுக்கு மேல உனக்கு என்ன தெரியணும்." அவனுக்கு உண்மையிலேயே தெரியாததால் கேட்டான்.

"இல்லை, கனிமொழி அக்காத்தான் உங்க கிட்ட கேட்கச் சொன்னாங்க, அவங்க எனக்கு அக்கா முறை வரும். ஆனா இதை உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள என்னன்னமோ நடந்திருச்சி, உங்களுக்கும் என்னை பிடிக்காமப் போச்சு..." கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் என்று தோன்றியது அவனுக்கு.

"கனிமொழியா?" கனிமொழி மோகனுடைய இரண்டாம் ஆண்டு ஜூனியர், சொல்லப்போனால் அவனுடைய ஒரே பெண் தோழி, நாடகத்திலெல்லாம் அவனுடன் நடிக்கும் பெண், இன்னும் சொல்லப்போனால் இந்தக் கல்லுரியிலேயே அவனைக் கிண்டல் அடிக்கக்கூடிய அளவு உரிமையுள்ளவள் அவள் ஒருத்தி தான்.

"கனிமொழிக்கு என்ன ஆச்சு, இன்னிக்கு ஆளையே காணோம்?" பதறியபடி கேட்டான், இவளிடம் நான் நடந்துகொண்டது தெரிந்தால் என்ன கேட்பாளோ என்று நினைத்தபடி. நிச்சயம் வம்பிழுப்பாள் என்று தெரியும் அவனுக்

"உடம்புக்கு கொஞ்சம் சரியில்லை, நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்" இன்னும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டுதானிருந்தது. நல்ல நேரம் அவள் சொன்ன அந்த மற்றொரு பையன் வந்தான் இவன் தப்பித்தேன்.

"அண்ணா நானும் நல்லா பேசுவேன், நீங்க நாடகமெல்லாம் போடுவீங்கன்னு கேள்விப்பட்டேன், நானும் நடிக்கலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்."

"சரி உன்பேரு சொல்லு, எழுதிக்கிறேன், தமிழ் எச்ஓடி கிட்ட சொல்றேன். வாய்ப்பிருந்தா கூப்பிடுறேன்"

"அண்ணா, உங்க நோட்ஸத்தான் லெக்சரர்ஸ் யூஸ் பண்ணுவாங்களாமே, நோட்ஸ் கிடைக்குமா சி-க்கும், டேட்டா ஸ்ட்ரெக்சருக்கும்"

அவனுடைய நோட்ஸுக்கு அந்தப் பெருமை இருந்தது தான். லைப்ரரி லைப்ரரியாய் அலைந்து அவன் எழுதியிருந்ததை திருத்தி படம் வரைந்து விவரித்திருந்ததை அவன் கல்லூரியில் எல்லோருமே உபயோகித்து வந்தனர் என்றாலும் இன்னொருவர் எழுதியதைப் படிப்பதைவிடவும் அவன் செய்தது போல் உணர்ந்து எழுதிப் படித்தால் தான் தேர்ச்சிக்கு உதவியாய் இருக்கும்.

"யேய், அப்படியெல்லாம் உன்கிட்ட யார் சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை, என்னடா இது ஜூனியரா வந்த இரண்டாவது நாளிலேயே எனக்கும் என் வாத்தியாருங்களுக்கும் சண்டை மூட்டிவிட்ருவீங்க போலிருக்கே? இந்தப் பொண்ணுக்கிட்ட நோட்ஸ் கொடுக்கிறேன் வாங்கிக்க, எனக்கு கொஞ்ச வேலையிருக்கு அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லிட்டு அவளைப் பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பவும் நோட்ஸ் எழுதத் தொடங்கினான்.

அன்றைக்கென்னமோ கீழே விழுந்து இன்னும் கீழே போய்க் கொண்டேயிருந்தது  போல் தோன்றியது அவனுக்கு.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 1

பளீரென்று அவள் கன்னத்தில் அறைந்து மோகன் தன் வாழ்நாளில் என்றுமே சொல்லியிராத ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி அவளைத் திட்டிவிட்டு பின்னர் கோபமாய் "மரியாதையா நடந்துக்கோ, தெரிஞ்சத மட்டும் பேசு" என்று சொல்லி வேகமாக அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அன்றைய பொழுதின் நினைவுகள்  மீண்டும் மீண்டும் வந்து அவன் கழுத்தை நெரித்து இரவு தூக்கம் வராமல் செய்யத்தொடங்கியது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களின் பொழுது பேச்சுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவன் அன்றைய தலைப்பில் மிக அருமையாகப் பேசி, காந்தி, பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் இவர்களின் கருத்துக்களையும் இடையிடையே இட்டு, 'என் சிறுநீரைக் குடித்தால் உனக்கு விடுதலை தருகிறேன்' என்று சொன்ன அமெரிக்க சார்பு பொலிவிய அரசிடம், 'என் தலை மயிறு கூட அந்த சுதந்திரத்தை ஏற்காது' என்று சொல்லி இறந்து போன செகுவாராவின் கருத்துக்களைச் சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் கரவொலி.

பின்னால் வந்து பேசிய அவளை அதற்கு முன்பு மோகன் திருச்சியில் பார்த்ததில்லை, பெரும்பாலும் கல்லூரிக்கிடையிலான பள்ளிகளுக்கிடையிலான பேச்சுப்போட்டிகளில் மிகவும் தெரிந்த நண்பர்களே பங்குகொள்வார்கள். ஆனால் இந்தப் பேச்சுப்போட்டி வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்குமானது - யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளலாம். அவன் பேசி முடித்தபின் மேடையேறிய அவள், முதல் வரியிலேயே "முன்னால் பேசிட்டு போனாரே, அவரை நேற்று ஒரு பெட்டிக்கடையருகில் கையில் சிகரெட்டுடன் பார்த்தேன், இவரும் இவர் நண்பர்களும் சேர்ந்து அங்கு போகும் பெண்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள், இப்படிப்பட்ட இவருக்கு செகுவாராவைப் பற்றி பேச அருகதையே இல்லை!" என்று சொல்ல, போட்டி நடந்த இடம் ஒரு பெண்கள் கல்லூரி என்பதால் பலத்த கரகோஷம், அதன் பின்பு அவளுக்கு கொடுத்திருந்த தலைப்பிலும் பேசினாள். அவள் பேசிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பெண்களை மதிக்கும் மோகன், அப்படி நடந்து கொண்டது அவனுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இதெல்லாம் நடந்து முடிந்திருந்த ஒரு காலையில் மத்தியப் பேருந்து நிலையத்தில் கல்லூரிப் பேருந்திற்காக மோகன் காத்துக்கொண்டிருந்தான், திருவெறும்பூருக்கு அவன் கல்லூரிப் பேருந்து வராதென்பதால் எப்பொழுதையும் போல் இன்னொரு பேருந்து மாறிவந்திருந்தான். விராலிமலை செல்லும் பேருந்துகள் நிற்கும் நிழற்குடை அருகில் நண்பர்கள் ஆசிரியர்களுடன் நின்றுகொண்டிருந்தான். தூரத்தில் வருவது அவனைத் திட்டியவளைப் போல் தோன்றியதால் தூணிற்குப் பின்னால் சென்று மறைந்து கொள்ள உத்தேசித்தான் ஆனால் அவளும் அவர்களுடைய நிழற்குடை அருகில் வந்ததால், இதை இங்கேயே இன்றே முடித்துக் கொள்ள நல்ல வேளையாய்ப் போய்விட்டதே என்று நினைத்தவனாய் நேராய் அவளிடம் சென்று,

"உன்கிட்ட கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்." அவன் சொன்னதும், கொஞ்சம் விலகி வந்தவள், "ம்ம்ம் சொல்லுங்கள்."

"என்னை மன்னிச்சிருங்க, நேத்து கோபத்திலே திட்டிட்டேன், அந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்க கூடாதுதான், ஆனால் சொல்லிட்டேன், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!" சொல்லிவிட்டு அவள் கண்களையே உறுத்துப் பார்த்தான், அவனிடம் கபடமில்லை.

"நேத்திக்கு நீங்க என்னவோ திட்டினீங்கன்னு தெரியும், ஆனா சத்தத்துல என்ன சொன்னீங்கன்னு கேட்கலை, பரவாயில்லை, எம்மேலையும் தப்பிருக்கே, நீங்க சாதாரணமா எடுத்துப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க கோபமாய்ட்டீங்க ஆமா உங்களுக்குத்தான் முதல் பரிசு கொடுத்தாங்க, ஆனா வாங்க நீங்க வரலையே?" கேட்டாள்.

"இல்லை மனசு சரியில்லை, அதான் வாங்கலை, அது ஒன்னும் பிரச்சனையில்லை, தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க!" என்று சொல்லிவிட்டு அவளைவிட்டு நகர்ந்துவந்து நின்றான்.

சிறிது நேரத்தில் கல்லூரிப்பேருந்து வந்து நின்றது, அவனும் நண்பர்களும் ஏறி உட்கார்ந்து கொண்ட சிறிது நேரத்தில் அவளும் வந்து உட்கார்ந்தாள். மோகனால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை, உடனே சார்லஸிடம், 'டேய் யார்ரா அவ? நம்ம காலேஜா?' என்று கேட்டான்.

“யாருக்குத் தெரியும், ஃபர்ஸ்ட் இயரா இருக்கும், நம்ம பஸ்ல ஏற்றான்னா நம்ம காலேஜாத்தான் இருக்கும்.” இது சார்லஸ்.

அய்யோ இந்த விஷயம் இதோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் முடியாது போலிருக்கிறதே, இன்னும் ஒரு வருஷம் இவளோட குப்பை கொட்ட வேண்டும் போலிருக்கிறதே என்று அவன் நினைத்தான். ஆனால் வாழ்க்கை வேறு விதமாக நினைத்திருந்தது.

அன்று கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக மாணவர்கள் வரும் நாள், நிர்வாகம் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது அவர்கள் கல்லூரி நிர்வாகம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் நடத்தும் பொறுப்பு மோகனுக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும். எல்லா ஏற்பாடுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முடிந்திருந்தது, சில கடைசி நேர விஷயங்கள் மட்டும் மீதமிருந்ததன. இரண்டு மணிநேரக் கலைநிகழ்ச்சிகள், 90 சதவீத பொறுப்புகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, நடத்துவதை மட்டும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா நிகழ்சிகளையும் ரிகர்ஸல் பார்த்தாகிவிட்டது. மேடையும், நிகழ்ச்சியை நடத்துவதும் மோகன் பொறுப்பில் இருந்தது.

காலையில் கல்லூரிக்குள் நிழைந்ததுமே பிரின்ஸிபால் மோகனிடம், "தாஸ், எல்லாம் முடிஞ்சிருச்சா, ஒன்னும் தப்பில்லையே. ஏடாகூடமாச்சுன்னா சேர்மன் கோச்சுக்குவார் பார்த்துக்கோ!".

"இல்லை சார், எல்லாம் சூப்பராக வந்திருக்கு, இந்த வருஷம் அசந்திரப் போறீங்க பாருங்க," என்றான்.

நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்தது, சொல்லப்போனால் மற்ற ஆண்டுகளைவிட மிகச் சிறப்பாக இருந்தது, மற்ற ஆண்டுகளில் ரிகர்ஸல் பார்க்காமல் வந்து விடுவார்கள், அதனால் கடைசிநேரக் குழப்பங்கள் இருக்கும். இது தெரிந்துதான் மோகன் எல்லா நிகழ்சிகளுக்கும் ரிகர்ஸல் தரவேண்டும் என்று கட்டாயமாகச் சொல்லியிருந்தான், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் நன்றாகச் செய்திருந்தார்கள், ஆக மொத்தம் எல்லாம் நன்றாக நடந்தது.

வாழ்த்துரை கூறவந்த சேர்மன், மிகவும் உற்சாகமாகி மேடையில் நின்று கொண்டிருந்த அவனை அருகில் அழைத்து, “இவரு மோகன், மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன், வருஷாவருஷம், இவர் மற்றும் இவரோட குழுவால் கல்லுரிக்கு நிறைய பரிசு, நிறைய கேடயங்கள், நல்ல பேரு கிடைச்சுக்கிட்டிருக்கு, எனக்குத் தெரியும் இந்த வருஷம் விழா நல்லாயிருக்குமுன்னு. புது மாணவர்களாகிய நீங்கள் இவரை மாதிரித்தான் வரணும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இவரை நீங்க கேட்கலாம்” என்று ஒரே பாராட்டு மழை.

பிறகு "உங்கள்ளேர்ந்து - புதிய மாணவர்களிடம் - ஒருத்தர் வந்து விழா எப்படியிருந்தது. நீங்கள் கல்லூரிகிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!" என்று சொல்லி உட்கார்ந்திருந்த புதிய மாணவர்களைப் பார்த்தார். அவனும் அப்போழுதுதான் அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தான். மூன்றாம் நான்காம் வரிசையில் உட்கார்ந்திருந்த அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான்.

கொஞ்ச நேரம் யாருமே வரவில்லை, கடைசியில் அவன் நினைத்ததைப் போலவே அவள் தான் மேடையேறி வந்தாள்.

நிகழ்ச்சிகள் நன்றாக இருந்ததாகவும், சீனியர்கள், ஜூனியர்களுக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் கூறிவிட்டுச் சென்றாள். நன்றியுரை கூறவந்த அவன் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு - அவளுக்கும் சேர்த்து - 'நானும் சீனியர் என்பதால் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவுவதாக'க் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தான்.

நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே அவள் அவனிடம் வந்து அப்படி ஒன்றை கேட்பாள் என்று கனவிலும் அவன் நினைத்திருக்கவில்லை.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

ரெக்க ரெமோ மற்றும் தேவி

தமிழ்ப்படங்களப் பத்தில் தமிழில் நாலு வரி எழுதி எத்தன நாளாகுது. தலைப்பின் வரிசை தரவரிசை இல்லை, நான் பார்த்த வரிசை. நான் அப்படியேப் போறேன்.


ரெக்க படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதி சொன்ன மாதிரி, அவர் மனசாட்சி கேட்ட கேள்விக்கான பதில் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாதுங்கிறது தான். ஆனா இந்த மாதிரி அப்பப்ப ஒரு கல்லு உட்டுத்தான் ஆகணும் இல்லாட்டி முடியாது. இந்த முற கல்லு பட்டு மாங்கா விழல. அதுனால என்ன. தன்னோட திறமைய நல்லா வெளிக்காட்டியிருக்காரு. கதையெல்லாம் தேவையேயில்லைன்னு முடிவு பண்ணி இறங்கியிருக்காங்க. சின்ன கல்லு பெத்த லாபம் ஃபார்முலான்னு நினைக்கிறேன். காசு வந்துடுமாயிருக்கும்.


ரெமோ ஜெனியுனா நல்ல காமடியிருக்குற படம் வெடிச்சிரிப்பு நாலைந்து முறை வந்ததுன்னா படம் முழுக்க எல்லாவிதமான காமடியும் வைச்சிருக்காங்க. யோகி பாபு, ராஜேந்திரன், சதீஷ்னு காமடி நல்லா வொர்க்கவுட் ஆயிருக்கு. இந்தப் படம் பார்க்கும் பொழுது ரெக்க படத்து லட்சுமி மேனன் கேரக்டர் பெரிய லூசா இல்லை ரெமோ படத்து கீர்த்தி சுரேஷ் பெரிய லூசான்னு ஒரு யோசனை. ஆனா நிச்சயமா கீர்த்தி சுரேஷ் கேரக்டர் தான் பெரிய லூசு. அமெரிக்கால சம்மர்ல இந்த மாதிரி ரொமான்டிக் காமடியெல்லாம் தொடர்ச்சியா வரும். ஸ்டாக்கிங் பத்தியெல்லாம் டிவிட்டரில் பெரிய ரெயில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனா இப்படியே டிரெயின் விட்டிக்கிட்டிருந்தா என்ன படம் தான் எடுக்கிறது. புள்ளைகள நீங்க ஒழுங்கா வளர்த்தா சினிமா பார்த்து கெட்டுப் போக மாட்டாங்க. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன் ஒரு முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கலாம், போதும் காமடி ஓரியன்டட் மூவிஸ்.


தேவி படத்தோட ட்ரைலர பார்த்தாலே கதை இன்னதுன்னு தெரியும். அதே கதை தான். ஆனால் அந்தக் கதையில் ஸ்கோப் நிறைய இருந்தது. காமடிக்கு ஆக்டிங்கிற்கு என்று. எதையும் உபயோகிக்கவேயில்லை இவர்கள். பிரபு தேவா கேட்கவேவேண்டாம் இயல்பாய் இருக்கிறார், தமன்னா நடித்திருக்கிறார் ஆனாலும் ஒரு டச் மிஸ்ஸிங், அது கேரக்டர் குறைபாடு. தமன்னாவுடையது அல்ல. மூணு லாங்குவேஜில் படமெடுக்குறேன்னு கொலை செய்திருக்கிறார்கள். இந்த இழவை இந்தியிலேயே எடுத்திருக்கலாம். இதை தமிழ்ப்படம்னு சொல்லித்தொலையாதீங்கடா! மணிரத்னம் எடுக்கும் இந்தி/தமிழ் படத்தை விட மோசமாயிருக்கு. ஒரே நல்ல விஷயம் பிரபு தேவா தான். பெண்ணியவாதிகளுக்குப் பிடித்தப் படமாயிருக்கலாம் தேவி, ரெக்க ரெமோவைக் கன்ஸிடர் செய்தால் தேவியில் தமன்னாவின் கேரக்டர் ரொம்பவே தேவலை. கொடுமைக்கென்று ரெக்க ரெமோவை விட தேவி படம் தான். அதன் காரணம் தேவியில்லை, ரெக்கையும் ரெமோவும் தான்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts