Showing posts with label அகிலா கதைகள் அறுபத்தைந்து. Show all posts
Showing posts with label அகிலா கதைகள் அறுபத்தைந்து. Show all posts

In அகிலா கதைகள் அறுபத்தைந்து காதல் காமம்

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்


அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான்.

"என்னடி பார்க்கிற!"

"இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு மாதிரியில்ல இருக்கு. அதான் பார்த்தேன்."

அகிலாவிற்கு பொறாமையா? காலையில் இருந்து எவ்வளவோ பார்த்தாகிவிட்டது இதுவும் இருந்துவிட்டு போகட்டும். "வேற எதாவது கேர்ள் ப்ரண்டு இருக்கான்னு சந்தேகப்பட்டுடாத தாயே! வாழ்க்கையில் அந்தத் தப்பை நான் ஒரேயொரு தரம் தான் செய்திருக்கேன்."

அவள் சிரித்தாள்.

"சரி இரு நான் ஒரு காப்பி போட்டுட்டு வர்றேன்." நான் சிறிய அளவில் சமைப்பேன் என்பதுவரை அகிலாவிற்குத் தெரியும் அவளும் நான் போடுறேன் என்று வரவில்லை, வரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்தேன் தெரியும்.

நான் சமையற்கட்டில் பாலில் காபிப் பொடி கலந்து கொண்டிருந்த பொழுது அகிலா,

"தாஸ் நான் வாலிபால், கொக்கொ எல்லாம் விளையாடுவேன் தெரியுமா?"

எதற்காக அகிலா இதைச் சொல்கிறாள் என்று உண்மையில் புரியவில்லை. நான் சமையல்கட்டில் இருந்து வெளியில் வந்து,

"அதக்கு என்ன?" அவள் என் புத்தக ஷெல்பின் பக்கத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தாள். கேட்டுவிட்டு மீண்டும் உள்ளே நகர்ந்து சர்க்கரை கலக்கத் தொடங்கினேன்.

"அதனால என் ஹைமன்..." அவள் முடிக்கவில்லை நான் கைகளில் இரண்டு காப்பி கோப்பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபடி.

"இன்னிக்கு நீ உதைபடாம போகமாட்டேன்னு நினைக்கிறேன். வாழ்க்கையில் பொண்டாட்டிகிட்ட கையை நீட்டுறது பெரிய அயோக்கியத்தனம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை. என்னை நீ அது தப்புன்னு நினைக்க வைச்சிருவேன்னு நினைக்கிறேன்."

அவள் கைகளில் ஒரு கோப்பையை திணித்தபடி சொன்னேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவேயில்லை, காலையில் இருந்து போய்க்கொண்டிருந்த இந்த விஷயத்தைப் பற்றி அகிலா கடைசியாக சொல்ல நினைத்தது இதுவாகத்தான் இருக்கும் இதற்கு மேல் பேசமாட்டாள் என்று தெரிந்ததால் நானும் அதற்கு மேல் வளர்க்காமல் விட்டுவிட்டேன். காபி குடிக்கும் வரை சும்மாயிருந்தவள்,

"நான் உன் பெட்ரூமைப் பார்க்கலாமா?"

அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் நான் சிரித்தேன், அவளும் சிரித்தாள். என் பதிலுக்காய் காத்திராமல் என் பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

"ம்ம்ம் பரவயில்லையே சுத்தமா வைச்சிருக்க!" மெத்தைக்கு பக்கத்திலிருந்த அபூர்வமாய் நானும் அவளும் சேர்ந்து இருக்கும் படி ஒரு புகைப்பட்டதை பெரிதாக்கி வைத்திருந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள், சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் என்னிடம்,

"எனக்கும் இதை ஒரு காப்பி போட்டுக்கொடுக்கிறியா தாஸ்!"

"செய்துட்டா போச்சு."

நகர்ந்து அறையில் நான் வரைந்து மாட்டிவிட்டிருந்த வண்ண ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இதெல்லாம் நீ வரைஞ்சதா!" நான் பதில் சொல்லவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை, "பிரமாதமாயிருக்கு! நீ இவ்வளவு நல்லா வரையுவன்னு சொல்லவேயில்லையே!" நான் வெறுமையாய் சிரித்து வைத்தேன்.



அதுவரை என்பக்கம் திரும்பாதவள் என்னை நோக்கித் திரும்பி காதலுடன் பார்த்து, "என்னையும் ஒரு படம் வரைஞ்சு கொடேன்!" என்று கேட்டாள். எனக்கு அந்தக் கண்களின் மொழி புரிந்தது. நான் நேரடியாகவே,

"தாயே உன்னை இனிமே தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு வைச்சிருக்கேன். தயவு செய்து வம்பு செய்யாமல் போய்டு தாயே!" என்றேன்.

அவள் மழுப்பவில்லை, நான் உன்னிடம் அதைக் கேட்கலையே என்று நடிக்கவில்லை.

"அதுக்குள்ள அலுத்துவிட்டதா?" என்றாள். காலையில் என்னிடம் அவள் உரையாடத் தொடங்கியதிலிருந்து அன்றைய பொழுது முழுவதும் ஒரு முறை கண்முன்னே வந்து மறைந்தது. நான் அகிலாவை முதலில் பார்த்து பின்னர் அவளைப் பிடித்துப் போனதிலிருந்து மனதில் உருவாக்கி வைத்திருந்த தருணம். எத்தனை முறை கற்பனை செய்து வைத்திருந்த உரையாடல்கள், ஆனால் எல்லாம் சுருண்டு கொண்டு கல்யாணத்திற்கு முன் இனிமேல் எனக்கு எதுவுமே வேண்டாம் என்பது போலிருந்தது.

"என்கிட்ட காண்டம் இல்ல!" நான் நடித்தேன்.

"பயமுறுத்திப் பார்க்கிறியா! ஊட்டியில் படுக்கைக்கு வரும் முன்ன உன்கிட்ட இருந்ததான்னு கேட்டுக்கிட்டா வந்தேன். இருந்தது உபயோகிச்சிக்கிட்ட இல்லாமல் இருந்திருந்தால் என்னால் என்ன சொல்லியிருக்க முடியும்..." அவள் உரையாடலில் இருந்த அறிவுஜீவித்தனம், அவளிடம் சற்று முன் நான் பார்த்த காமம் இல்லாமல் போயிருந்ததை காட்டிக் கொடுத்தது. "...பிடிக்கலைன்னா விடு, நான் பிடிக்காதவங்களை கம்பெல் செய்வதில்லை." நக்கலாய்ச் சிரித்தாள்.

அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று தெரிந்தது, என்னை உரையாடலுக்குள் இழுக்க நினைக்கும் அவள் மனம் புரிந்தது. நான் விலகிக் கொண்டிருந்தேன்.

"அகிலா, இது ஒரு கனவெனக்கு. எவ்வளவு சாதாரணமா கேட்டுவிட்ட ஒரு கண் பார்வையால் சம்மதமான்னு. எத்தனை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எது சரியா வரும் என்று நான் கணக்கு போடாத நாட்களே இல்லை. இந்த ரூமுக்கு மட்டும் காதிருந்து கைகள் இருந்திருந்தால் நான் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு உன்னை இந்நேரம் தன் கைகளால் நிர்வாணப்படுத்தியிருக்கும். அத்தனை கற்பனைகள் அத்தனை கள்ளச்சிரிப்புக்களைப் பார்த்திருக்கும் இந்த ரூம். என்ன செய்ய இன்னிக்கு காலையில் இருந்து நீ செஞ்சதுக்கு நான் உனக்கு கொடுக்கிற தண்டனை உன்னைத் தொடாம இங்கேர்ந்து அனுப்புறதுதான். இனி நான் உன்னை தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் தான். நீ கிளம்பு."

நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உன் முகம் வெளிப்படுத்தின உணர்ச்சிகள் அத்தனையையும் தனித்தனி ஓவியமா தீட்டணும் என்கிற ஆர்வம் வந்ததெனக்கு. முடித்ததும் சட்டென்று நெருங்கி வந்து காலையில் இருந்து நோகடித்த இதயத்திற்கான மருந்தை உதட்டு வழியாக வழங்கிவிட்டு நீயாய் பிரிந்து நின்றாய். நான் உன்னை தடுத்திருக்கவில்லை. கல்லாய் இருக்க உனக்கு மட்டும் தான் தெரியுமாயென்ன.

"இதிலேர்ந்து ஒரு ட்ராயிங்கை நான் எடுத்துக்கலாமா?" தேவையில்லாத கேள்வி உனக்கு என்று இல்லாத ஒன்று அந்த அறையில் எதுவுமே இருக்க முடியாது. நிர்வாண நிலையடையாத ஓவியம் ஒன்றை எடுத்துக் கொண்டாய்.

"ஞாபகம் வைச்சிக்கோ நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்." சிரித்தப்படி சொன்ன உன்னை வழியனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்ததும் அசைபோட நிறைய மீதியிருந்தது அன்றைய பொழுதுகள்.

March 05, 2009

10:11 AM aeswari: defloration - the act of having sexual intercourse with a virgin; devirgination.
me: எனக்கு அதுக்கு அர்த்தம் முன்னமே தெரியும்
aeswari: அப்ப ஜெயா முன்னாடி அப்படியான்னு கேட்டதுக்கு என்ன அர்த்தம்.
me: சும்மா ஜோக் பண்ணினேன் அகிலா :(
aeswari: இல்லை உனக்கு என் மேல டவுட்.
உன் கூட படுத்தவ தான வேற யார் கூடவும் படித்திருப்பான்னு
me: akila, this is idiotic
rubbish
உனக்கே நல்லா தெரியும், நீ வெர்ஜினா இல்லையா என்பது கூட எனக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று
aeswari: அப்ப நீ என்ன நம்பலை அதான

அடுத்த வரி அடிப்பதற்குள் அவள் அங்கே இல்லை, எல்லாம் என் முட்டாள்த்தனம். ட்ரீட் கேட்ட ஜெயஸ்ரீ காரணமாய்ச் சொன்ன defloration வார்த்தையும் அதை உபயோகித்து அகிலாவை வம்பிழுக்க நான் அவளிடம் கேட்ட 'அப்படியா'வும் இத்தனை தூரம் பெரிதாகும் என்று நான் நினைக்கவில்லை. அன்றைக்கு தலையில் ஜூஸைக் கொட்டிவிட்டுப் போனவள் தான், மொபைல் போனை அணைத்து வைத்திருந்ததால் என்னால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. அடுத்த நாள் காலை அலுவலகம் வந்த உடனேயே அவளிடம் இருந்து வந்த இந்தத் தாக்குதல் என்னைக் கொஞ்சம் நகர்த்தித் தான் பார்த்தது. என்னால் அகிலா அப்படிப் பேசுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் யோசனைத் திறன் மீதே எனக்குச் சந்தேகம் வந்த பொழுது ஜெயஸ்ரீயின் அழைப்பு வந்தது.

"சொல்லு ஜெயா"

"என்னப் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.

"என்னப் பிரச்சனையோ அவ அழறா! மூணு வருஷத்தில் அகிலாவை நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதானா. அவ தன்னோட ஷெல்லுக்குள் போய்க்கிட்டிருக்கா, சாட்டிங்கில் எதுவும் பேசாதீங்க போனிலையும் கூட எதுன்னாலும் நேரில் பேசுங்க. காலையில் என்னையுமே காரணமில்லாமல் திட்டிக்கொண்டிருந்தாள், அவ எது சொன்னாலும் மனசில் வைச்சிக்காதீங்க ப்ளீஸ்!" சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

ஒரே அலுவலகம் தான் என்றாலும் வேறு வேறு கட்டடங்களில் இருந்ததால், என் இடத்திலிருந்து அவளிடத்திற்கு வந்திருந்தேன். நான் வருவதைப் பார்த்ததும் அவளாய் போய் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ராஜா எனக்கும் அவளுக்கும் ஒரு நல்ல நண்பன், ஆனால் அவளை விடவும் சீனியர் சொல்லப்போனால் அவளுக்கு வேலை பகிர்ந்தளிப்பவன். பெரும்பாலும் அது போன்ற சமயங்களில் நான் நகர்ந்துவிடுவேன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று, அவள் அதை அன்றும் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

நான் ராஜாவிடம் நேரடியாய், "dude excuse me.," என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை சொல்லவில்லை என்னுடன் வந்தாள். சிறிது தூரம் வந்ததும், அவளாய்,

"அதான் வர்றேன்ல கையை விடு!" மெதுவாய்த்தான் சொன்னாள். அவள் என்னிடம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அமில மழை கொட்டிய அகிலாவாக அல்லாமல் பழைய சிடுமூஞ்சி அகிலாவாகத்தான் இருந்தாள், நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவளிடம் கோபமில்லை, கண்களில் ஆத்திரமில்லை அவள் அழுதிருப்பதற்கான சாயல் எதுவும் இல்லை ஜெயஸ்ரீ பொய் சொல்லியிருக்க ஞாயமில்லை. அவள் 'என்ன' என்பதைப் போல் தோளைக் குலுக்கிக் காட்ட, நான் அவள் கையை விடுவித்தேன். அலுவலகத்தை விட்டு வெளியில் பார்க்கிங்கிற்கு வந்து வண்டியை வெளியில் எடுத்தேன், அருகில் வந்து உட்கார்ந்து கொண்டவள் எதையும் பேசவில்லை.

டிஃபென்ஸ் காலனி அண்ணாச்சி ரெஸ்டாரண்டில் மூலையொன்றைக் கண்டுபிடித்து உட்கார்ந்ததும்.

"சொல்லு என்ன தான் உன் பிரச்சனை."

அவள் பதில் பேசவில்லை, டேபிளில் இருந்த பெப்பர் சால்ட் குடுவைகளைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.

"என் தப்பு தான் மன்னிச்சிக்கோ அப்படி கேட்டிருக்கக்கூடாது தான். நான் சத்தியமா விளையாட்டுக்குத்தான் கேட்டேன், நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பேன்னு நான் நினைக்கவேயில்லை!" அகிலா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள், அவள் அழுதுவிடுவாள் என்று நினைத்தேன். சர்வர் இடைபுகுந்தார், அவள் சமாளித்துக் கொண்டாள்.

"நீ என்னயிருந்தாலும் ஜெயா முன்னாடி அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."

நான் அவள் முடிக்கட்டும் என்றிருந்தேன். அவளால் வார்த்தைகளைத் தேர்ச்சி செய்து அமைத்து பேச முடியவில்லை தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"மனசில இல்லாமையா வார்த்தையா வரும், உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. இதெல்லாம் நான் சரின்னு சொன்னதால தான இல்லாட்டி அப்படி ஒரு வார்த்தையை நான் கேட்டிருக்க வந்திருக்குமா? இந்த மூணு வருஷத்துல இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லியிருப்பியா? உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. அன்னிக்கு நான் உனக்காக எதையெல்லாமோ செஞ்சப்ப நீ என்னை அப்படித்தான பார்த்திருப்ப, நினைச்சிறுப்ப, அலையறா பாருன்னு..." அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு அன்றைக்கு பொழுது நினைவிற்கு வந்தது, நான் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் அவள் செய்தாள் தான் ஆனால் அவளை என்னால் ஒரு நிமிடம் கூட அவள் சொல்லிக் கொண்டிருப்பது போல நினைக்க முடியாது, அது அவளுக்கும் தெரியும். மூன்று வருட பழக்கம் எங்களிடையே அன்றைக்கு சுமூகமான உறவை சுலபமாகவே ஏற்படுத்தியது, சாட்டிங்கில் நாங்கள் பேசாத விஷயங்களே இருந்திருக்காது. என்னுடைய எல்லைகள் மூன்றாண்டுகளில் அவளுடைய நீள அகலங்களுக்கு நீண்டிருக்கிறது, நேரில் பேசிக்கொள்ளாத குறையே இல்லாமல் இருந்தது. அது அன்றைக்கு புரியவும் செய்தது, என்னைப் பற்றி அவளுக்கு அவளைப் பற்றி எனக்கு நாங்கள் தெரிந்து கொண்டதாக நினைத்ததை விடவும் அதிகம் தெரிந்திருந்தது.

நண்பர்கள் எச்சரித்திருந்ததால் நான் முதலில் எதையும் அவளிடம் வித்தியாசமாக முயற்சி செய்யவில்லை. ஆனால் அவளுக்கு அதெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவது என்பது அவள் உடலைப் பெறுவதற்கான லைசென்ஸ் கிடையாது என்று அவள் எனக்கு எழுதியிருந்தது நினைவில் இருந்தது. அவள் எழுதுவற்கென்று எழுதாமல் முழு மனதுடன் எழுதியிருந்தது புரிந்ததால், நண்பனே கணவனே அமைந்த விட்ட சந்தோஷத்தை அவள் கொண்டாடிக் கொண்டிருந்தாள் என்று நான் உணர்ந்து கொண்டேன். நான் அவளை இன்னும் மனைவியாகப் பார்க்காமல் காதலியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் காதலியுடனான திருமணத்திற்கு முன்பான உறவானது சொர்கத்திற்கு ஒப்பானது என்ற கற்பனை என்னிடம் இருந்தது. அவளுடைய கம்பீரம் கலந்த காமத்தில் நான் எப்பொழுதையும் போல் ஆச்சர்யத்துடன் பங்கு கொண்டேன், அந்த ஆச்சர்யத்தை சாமர்த்தியமாக நான் மறைத்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நான் அவளிடம் காண்பித்திருக்கக்கூடிய ஆச்சர்யம் தான் என் முன்னால் அவள் பெய்யென பெய்யும் கண்ணீருடன் உட்கார வைத்திருந்தது என்று புரியத் தொடங்கியது. ஆனாலும் கூட என்னால் இந்தப் பிரச்சனையை தள்ளி நின்று பார்க்க முடியவில்லை, நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன், ஜெயஸ்ரீ, அகிலா அழுதாள் என்று சொன்னது என்னை நிலைகொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது. என் எதிரில் அகிலா எப்பொழுது அழலாம் எனக் காத்திருப்பது போல் இருந்தது இன்னும் தடுமாறச் செய்தது, நிர்வாணத்தில் கூட குறைந்திடாத அவளது கம்பீரம் இங்கே இல்லாமல் போயிருந்தது. ஒரு அபூர்வமான பொழுதாகத்தான் அது இருந்திருக்க வேண்டும் என் கண்கள் கசியத் தொடங்கியிருந்தன.

அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள், "நீ உண்மையிலேயே நினைக்கிறியா என்னால் உன்னைப் பத்தி அப்படி நினைக்க முடியும்னு." சாதாரணமான வார்த்தைகள் தான் ஆனால் அந்தச் சமயத்தில் அவளை உலுக்கிப் பார்த்திருக்க வேண்டும். அவள் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எத்தனை தடவை நீ என்கிட்ட கேட்ட, என்னால அப்படி எப்படி நினைக்க முடிஞ்சதுன்னு. நீதான் என்னை தப்பா நினைச்சிக் கிட்டிருக்க. உன்னைய நான் எங்க வைச்சிருக்கேன் தெரியுமா?" கடகடவென்று கண்களில் வெகுவாகவே வரத் தொடங்கியிருந்தது. நான் பெரும்பாலும் அழுததில்லை என்றாலும் நான் அழுத பொழுதுகள் எல்லாம் நம்பிக்கை துரோகங்களை முன்வைத்தாகத்தான் இருந்திருக்கும். நான் நம்பிய ஒருவர் என்னை நம்பாமல் போன பொழுதுகள் என்னை வெகுவான சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி அழுகையாக நீண்டிருக்கிறது. ஆனால் முகம் கோணி என்னை மறைத்த தனிமையில் பொங்கியிருக்கிறேன், பொதுவில் இரண்டாம் நபர் முன் அழுதது சின்ன வயதிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே நம்பிக்கை துரோகம் இல்லை முகக் கோணலாகி விகாரமான மனமொருமித்த அழுகை இல்லை. ஆனால் கண்ணீர் இருந்தது, அகிலா என்னை தவறாகப் புரிந்து கொண்டாள் என்ற வருத்தம் இருந்தது. மனம் சட்டென்று தன் கட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொண்ட ஒரு அபூர்வமான பொழுது, சினிமா மெலோட்டிராமக்களின் பொழுது எதேட்சையாக வெளியாகும் கண்ணீரை ஒத்தது என்னுடைய இந்தக் கண்ணீர்.

அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை, சோற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் டிஷ்யூ ஒன்றை எடுத்து துடைத்துக் கொண்டேன், எனக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஒரு பெண்ணின் முன்னால் கண்ணீர்விட்டது. நான் நிலைமையை சரியாக்க நினைத்தேன், ஆனால் என்ன சொல்லி அகிலாவை சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. அவளே உதவினாள்,

"தாஸ் என்னை நம்பு தாஸ், நான் ஒரு வெர்ஜினாத்தான் இருந்தேன்..." அவள் முடிக்கவில்லை, நான் தலையில் அடித்துக் கொள்ளாதது தான் குறை. வேதாளம் இப்பொழுது இன்னொரு வழியாக முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொண்டேன். இதற்கு நான் நேரடியாய் என்ன பதில் சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் அவள் இப்பொழுது சரியாகிவிட்டிருந்தாள் அவள் கூண்டுக்குள் இருந்து முற்றிலும் வெளியில் வராவிட்டாலும் நேரடியாய், ஒரு வழிக்கு, விஷயத்திற்கு வந்திருந்தாள். நான் என் பழைய முறையை உபயோகிக்க தீர்மானித்தேன். ஏனென்றால் அவள் மனதிற்குள் எனக்கு அவளுடைய கற்பைப் பற்றிய கேள்விகள் இருக்காது என்று தெரிந்திருக்கும், இதுகூட அவள் என்னுடன் வைத்துக் கொண்ட உறவை மய்யப்படுத்தி தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்ளும் தன்னைத் தானே சிலுவையில் ஏற்றிக் கொள்ளும் ஒரு வழியாகத்தான் அவள் முன்வைத்திருக்க வேண்டும். என்னைத் திட்டுவதன் மூலம் ஜெயாவை திட்டுவதன் மூலம் அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டு, தவறாக அவள் உணர்ந்ததற்கு ப்ராயச்சித்தம் செய்து கொண்டிருந்தாள்.

இதுவும் கூட ஒரு நாடகமாக அந்த உறவை, இயற்கையாக அவளிடம் பொழிந்த ஆர்வத்தை, அதன் வழியே அவள் பெற்ற சந்தோஷத்தை மறைத்து கேள்விக்குள்ளாக்கி அவள் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் அந்த முதல் முகத்தை திருப்தி செய்வதற்காகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டியை நான் ஊட்டி இரவில் பார்த்தேன், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டெல்லாம், நான் மட்டுமல்லாமல் அவளும் முதல் முறையாய்ப் பார்த்த அந்த மற்ற முகம் அவளுடையது அல்ல என்று நம்ப வைக்கும் முயற்சி என்று நான் நினைத்தேன்.

"சரி அகிலா, நம்புறேன். நீ இதுக்கு முன்ன ஒரு தடவை கூட மாஸ்டர்பேஷன் செய்யலைன்னு சொல்லு அதையும் நம்புறேன்."

அது ஒரு ஆயுதம் ஒரு நேரடித் தாக்குதல் அவள் தாக்க நான் பதுங்க நான் தாக்க அவள் மறைந்து கொள்ள என்று சென்று கொண்டிருந்த ஒரு அழகான யுத்தத்தில் என் தரப்பு பிரம்மாஸ்திரம். நாங்கள் இதைப் பற்றி உரையாடியிருக்கிறோம், ஆரம்பித்த முதல் கணத்தில் சாட்டிங்கில் இருந்து மறைந்து போய், வாரக்கணக்கில் முகம் காட்டாமல் இருந்து, பின்னர் சாட்டில் மௌன மொழி பகர்ந்து கடைசியில், "நம்பினால் நம்பு நம்பாட்டின்னா போ! நான் செய்ததில்லை!" என்பது வரையில் வந்து நின்றிருந்தது. அவள் பேரில் எனக்கு ஊட்டி செல்வது வரை இருந்த ஒரு சிறிய பயம் அதற்கு மேல் அந்த விஷயத்தில் என்னை நகர விடாமல் செய்திருந்தது.

கிசுகிசுப்பாய் தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நான் சொன்ன அந்த வார்த்தைகள் முதலில் அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்தன. என்னால் பொதுவிடத்தில் அவளிடம் அப்படி பேச முடியும் என்று அவள் நினைத்திருக்க மாட்டாள், ஏனென்றால் நான் அதுவரை அப்படிச் செய்ததில்லை. ஊட்டியில் கூட நான் அவளிடம் பொதுவில் அத்துமீறுதல் எதையும் செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை நான் இழுத்துச் செல்லும் இடம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் அவள் சப்தமாய்ச் சிரித்தாள், நான் அவள் என் தலையில் சாப்பாட்டைக் கொட்டிவிடக்கூடாதென்று பயந்து கொண்டிருந்தேன். எனக்கு நன்றாய்த் தெரியும் அந்த விஷயம் அவளை கூண்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வருமென்பதையும் அதைவிட அவளுடைய கம்பீரத்தை அவளுக்கு திரும்பக் கொடுக்குமென்பதையும்.

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை, "உன்னை மாதிரின்னு நினைச்சியா!" இடைவெளி விட்டவள், நான் சிரித்துக் கொண்டிருந்ததால், "உன் கிட்டப்போய் இதையெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன் பார்! என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்."

அவள் கட்டிக்கொண்டிருந்த கூண்டு இப்பொழுது அவளில்லாமல் அநாதையாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சாப்பிடுவதை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம், கடைசி மூன்று நாட்கள் எங்களிடம் கொண்டு வந்த மாற்றத்தை நினைத்து.

"சரி ஆபீஸ் போறியா. பிரச்சனை எதுவும் பண்ண மாட்டியே திரும்ப?" அவள் இல்லை என்று தலையாட்டியபடி.

"உன் வீடு இங்க பக்கத்தில் தான கூட்டிக்கிட்டு போயேன்." எத்தனையோ முறை அழைத்திருப்பேன் அவளை, அவள் வந்ததில்லை. இப்பொழுது வருகிறேன் என்கிறாள் நான் அதை மீறியும் அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று படிக்க முயன்றேன்.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In அகிலா கதைகள் அறுபத்தைந்து சிறுகதை

பின்புத்தி உணர மறுத்த உண்மையைப் பற்றிய சில குறிப்புகள்

பெண்களைப் பற்றிய என் நிலைப்பாடு எப்பொழுதும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. கோ-எஜுகேஷன் பள்ளிகளில் ஆரம்பித்த பெண்களின் மீது உண்டான காரணமேயில்லாத பொறாமையாகட்டும், பெண் என்ற காரணத்தினாலேயே நிறைய இடங்களில் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த சலுகைகளால் வந்த கோபமாகட்டும் அதிக காலம் தாக்குப்பிடிக்கவில்லை. தற்சமயங்களில் அந்நாட்களைப் பற்றிய எண்ணங்கள் புன்னகையை மட்டுமே வரவழைக்கின்றன. கல்லூரிப் பருவம் அவிழ்த்த பல ரகசியங்களில் உடைந்து போன பிறகான மிச்ச சொச்ச நிலைப்பாடுகளும் திருமணத்திற்குப் பிறகு சிதறிப்போனது. கடைசி வரையில் தொற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கான பொதுப்புத்தியைப் பற்றிய சிந்தனைகள் கூட அகிலாவினுடனான இந்த ஆறாண்டுகால மணவாழ்வில் கடற்கரைக்குச் சென்று வந்த பிறகு கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் மணலைப் போல் எங்கோ ஒரு மூளைக்கு தூக்கி எறியப்பட்டிருந்தது. ஆனால் அது தவறோ என்று நான் மறுபரிசீலனை செய்ய நினைக்கும் அளவிற்கு வந்ததற்கும் அகிலாவே முழுக்காரணம்.

ஒரு மாதமாகவே அகிலாவுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தாலும் பிரச்சனையை நானாக வேட்டிக்குள் விட்டுக்கொள்ள விருப்பமில்லாமல் மௌனமாகவே இருந்தேன். பவானியாவது பரவாயில்லை கொஞ்சம் பெரிய பையன் குந்தவைக்கு இன்னும் இரண்டு வருஷம் கூட ஆகலை, அவளையும் அம்மாவிடம் ரூமில் விட்டுவிட்டு பெட்ரூமிற்கு தனியாக வரத்தொடங்கியிருந்தாள். அம்மாவுமே கூட என்னை தப்பா நினைத்திருக்கலாம்.

தாம்பத்தியத்திற்கான தேவை இல்லையென்று சொல்லாவிட்டாலும் அதற்காக அகிலாவை நச்சுப் பண்ணியது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அவளுடைய இயல்பான ஆர்வமும் எங்களுக்கிடையில் இந்த விஷயத்தில் பெரிய ஈகோ பிரச்சனை இல்லாததும் சுலபமான தாம்பத்ய உறவை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சில நாட்களாக அவளை யாரோ இல்லை அவளேயோ கட்டாயப்படுத்துவதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு. இப்படியே போய்க்கொண்டிருந்த ஒரு வாரத்தின் கடைசியில் இரவில் சட்டென்று விழித்தவனுக்கு பக்கத்தில் படுக்கையில் அகிலா தூங்காமல் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து பயந்தே போனேன்.

"ஏம்மா என்னாச்சு தூங்கலையா? அழுதுக்கிட்டிருக்யா என்ன?" என்று கேட்டதும்

"அதெல்லாம் ஒன்றுமில்லை..." என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது அவள் வார்த்தைகளால் திருப்தியடையாமல் அவளை நெருங்கி கன்னத்தை தொட்டுப் பார்க்க அவள் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.

"என்னாடி இது?"

அவளிடம் பதிலில்லை

"உடம்பு வலிக்குதா?" அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் பதிலெதுவும் சொல்லாமல் முறைத்துப் பார்த்தவள் சில நிமிடங்களில் குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்.

அவளை இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன்

தோளில் முகம் புகைத்தவள்

"உங்களுக்கு இப்பல்லாம் என்னைக்கண்டா பிடிக்கிறதில்லை?" காதுக்குள் குசுகுசுத்தாள். அந்த அறையில் சுவருகளுக்கு கூட கேட்டுவிடாமல் சொல்ல நினைத்திருப்பளோ என்னவோ? அவள் சொன்னது அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். அவளுடைய அழுகை கட்டுப்படுத்த முடியாததாய் ஆனது.

திருமணம் ஆன புதிதில் சண்டை போட்டு இருவரும் பிரிந்திருந்த பொழுதும் அவள் பெரிதாய் அழுததில்லை. நாங்கள் இருவரும் தவறு செய்திருந்தாலும் அவள் அதற்கான தன் பங்கு தண்டனையாய் என்னைப் பிரிந்து இருக்கும் கடும் முடிவை எடுத்திருந்தாள் இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் பொங்குகின்ற காதலோடு தூரத்தில் இருந்து கவனித்தோம். சின்ன ஊடல்தான் அது. அவள் எனக்கானவள் என்றும் என்னைத் தவிர இன்னொருத்தரை அவள் முன் காலத்தில் விரும்பியிருந்தாள் என்ற ஒரு எண்ணம் கூட கோபமாகிய காரணம் அது. என்னைப் பற்றி மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வது எத்தனை தூரம் எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்ததோ அதே அளவு மனவருத்தம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் என்னைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாத பொழுதும் வந்தது. ஆனால் மற்றவர்கள் என்னைச் சரியாக உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதில் நான் காட்டிய ஆர்வத்தில் சிறிதளவு கூட என்னைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நம்பியவர்களிடம் நான் காட்டவில்லை. ஏனென்றால் அது போலித்தனமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தேன். அகிலாவைப் பற்றி தெரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட ப்ரயத்தனத்தைப் போல் அவளும் செய்வாள் என்றே நினைத்தேன்.

அவளுக்குப் பிடித்த சிறுசிறு விஷயங்களைக் கூட கவனித்து ஆனால் கவனிக்காதது போல் நான் செய்துவந்தது அவளுக்குத் தெரிந்தேயிருக்கவேண்டும். அந்தச் சமயங்களில் அவள் மனம் அடையும் பூரிப்பு சிறுநகையாக உதட்டோரத்தில் காட்டிக்கொடுத்துவிடும். உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த சிலர் தொடர்ச்சியாக என்னைத் தவறாகப் புரிந்துகொண்டபொழுது சரி இவ்வளவுதான் இவர்கள் என்று விட்டுவிட்டு நகர்ந்ததைப் போல் என்னால் அகிலாவைக் கடக்க முடியாததற்கும் அவளே தான் காரணம். அவள் நான் மாட்டிக்கொள்ளும் முகமூடிகளைத் தாண்டி என்னைத் தேடுபவளாகயிருந்தாள், பல சமயம் கையும் களவுமாக முகமூடிகள் கழற்றப்பட்டு அவள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஏன் இத்தனை நாடகம் எதற்காக இப்படி ஒளிந்து மறைந்து விளையாடுவது நாமாக நம்மை வெளிக்காட்டினால் என்ன? என்பது போல் நிறைய கேள்விகளுடன் அவள் எப்பொழுது தயாராகயிருப்பாள். எனக்குப் புரிந்திருந்தால் சொல்லித்தானிருப்பேன் ஆனால் உண்மையில் எனக்கே ஏன் அப்படி என்று புரியவில்லை; என்னை நானாகச் சொல்லிக்கொள்ளாமல் மற்றவர்களாய் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எதுவும் மனநோயுடன் சம்மந்தப்பட்டதா என்ற கேள்விமட்டும் தூரத்தில் தொக்கி நிற்கும். ஆனால் வாழ்க்கை இதனால் சுவாரசியமாயிருப்பதாகப் பட்டதெனக்கு. திருமணத்திற்குப் பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அகிலா இந்த விஷயத்தில் என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருந்தாள். அதனால் அவளுடைய சமீபத்திய நடவடிக்கைகள் கோபத்தை வரவழைக்காமல் என்னில் வருத்தத்தையே அதிகம் வரவழைத்தது.

எனக்கும் அவள் என்னிடம் அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை போட்டு உடைத்துவிட்டாள் தேவலை என்றிருந்தது ஆனால் வழமை போல் நல்லதொரு நாளுக்காக நான் காத்திருந்தேன். என் உறக்கம் பெரும்பாலும் நீண்டதாக இடையில் விழிப்பு இல்லாததாக முழுமையானதாகவே இருந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அமைந்த மனைவியின் காரணமாகவும் மாற்றம் எதுவும் இருந்தது கிடையாது; இரவு பாத்ரூம் ஒரு தடவை போய்விட்டு வந்து படுத்தால் காலை ஆறு ஆறரை மணிவரை அசத்திக்கொண்டு வரும் தூக்கத்தின் மீது அகிலாவிற்கே கூட பொறாமை உண்டு. 'போன ஜென்மத்தில் நீங்க புண்ணியம் செஞ்சிருக்கணும் இப்படி தூங்குறதுக்கு' என்று அடிக்கடி சொல்வாள். அன்று உலகதிசயமாய் நான் தூக்கத்தில் இருந்து இடையிலேயே எழ அகிலா அழுது கொண்டிருந்தது தெரிந்தது, நான் எழுந்தது அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது. வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஆனால் சிறிது நாட்களாகவே அவள் என்னிடம் நடத்திக் கொண்டிருந்த நாடகம் கொஞ்சம் அவளைத் தூண்டிப் பார்த்திருக்க வேண்டும். கேவலாகத் தொடர்ந்த அழுகை என் தோள்களில் முடிந்தது. நான் முழுவதுமாய் முடியக் காத்திருந்தேன்.

"என்ன பிரச்சனை உனக்கு?" அவளை அருகில் இழுத்து ஆறுதல்படுத்தியபடி கேட்டேன்.

"உங்களுக்கு என்னைப் பிடிக்கலை!" என் கேள்விக்கான பதில் அதுவா இல்லை ஒரு ஸ்டேட்மென்ட் விடுகிறாளா உண்மையில் புரியவில்லை.

"புரியல..." என்றேன்.

"கொஞ்ச நாளாவே உங்களுக்கு என்னைப் பிடிக்கல, நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா சொல்லிடுங்கோ. என்னால உங்களைப் பிரிஞ்சி இருக்கவே முடியாது..." அவளுடைய வார்த்தைகளில் ஒரு தேர்வேயில்லை வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு உண்மையிலேயே பயங்கரக் குழப்பமாகயிருந்தது.

"என்னாம்மா சொல்ற நீ உண்மையிலயே புரியல. எதைச் சொல்றதுன்னாலும் தெளிவா சொல்லு" என்றேன்.

கொஞ்சம் நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள். மறுபக்கம் திரும்பி,

"உங்களுக்கு இன்னொரு பொண்ணொட தொடர்பிருக்கு!"

கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன், இதுவரையில் என்னைப் பற்றி அகிலா சொன்னதில் மிகப்பெரிய பழி இதுவாகத்தான் இருக்கமுடியும். என் முகமூடிகளைக் கழட்டிவிட்டு என்னையறிந்த ஒருத்தியாய் தான் என்னால் அவளை உணரமுடிந்திருந்தது. அவளை அப்படி என்னைத் தவறாக நினைக்க வைக்கும் படி நான் என்ன செய்திருந்தேன் என்ற யோசனை பெரும்பாலும் பூஜ்ஜியத்தில் முடிவடைந்தது. உண்மையில் என்னால் கண்டுணர முடியாத எல்லைக்கு வெளியே இந்த விஷயங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளால் அப்படி ஒரு வார்த்தையை எப்படி சொல்ல முடிந்தது என்ன திமிர் இருக்கும் என்ற எண்ணம் பின்னால் வந்த அவள் அப்படி நினைக்கும் படி நான் நடந்து கொண்டிருந்தால் அவள் இதை என்னிடம் சொல்ல எத்தனை சிரமப்பட்டிருப்பாள் என்பதை உணர்ந்ததும் கொஞ்ச காலமாய் எங்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்த வலை விலகுவதாய் உணரமுடிந்தது. வலையைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தாலும் எதனால் அப்படி ஒரு வலை எங்களைச் சூழ்ந்தது என்று புரியாததால் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தேன்.

நான் சூழ்நிலையை வியந்தபடி உட்கார்ந்திருக்க, மெதுவாய் எழுந்து போய் பீரோவைத் திறந்தவள். கைகளில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள், ஏற்கனவே நான் கண்ணாடி வேறு; கண்ணாடி போடாமல் பகல் நேரத்திலேயே எதுவும் தெரியாதென்பதால் எதுவாயிருந்தாலும் அருகில் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு அவள் கொண்டு வந்து காண்பித்த பொருள் மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அவளுடைய தலைமுடிதான் அது.

"இது உங்க சட்டையில் இருந்தது. சத்தியமாய் இது என் முடியில்லை! அப்ப யாரோடது."

வாய் திறக்க முடியாத மௌனத்தால் கட்டப்பட்டவன் போல் அயற்சியடைந்து போய் நான், நிச்சயம் அகிலாவிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி சந்தேகப்படும் அளவிற்கு அகிலா எப்பொழுது ஆனால் என்பது எனக்கு ஆச்சர்யத்தையும் அதே சமயம் மிகுந்த வருத்தத்தையும் வரவழைத்தது. அவளை சமாதானப்படுத்தும் வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை.

"என்ன அகிலா இது! நீயா இப்படி கேக்குற?"

இன்னமும் விசும்பிக் கொண்டுதானிருந்தாள்.

"சொன்னேன்ல இது என் முடி கிடையாது, எம்மேலாணை என் குழந்தைகள் மேல்..." சொல்லவந்தவள் முடிக்காமல் நிறுத்தினாள்.

"சரிடி இது உன்னோடதாவே இல்லாம இருக்கட்டும். அதுக்காக என்னைச் சந்தேகப்படுவதா?" கேள்விக்கு பதில் சொல்லாமல் திரும்பவும் பீரோவிற்கு நடந்தாள். அடுத்து என்ன மேட்டர் என்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன். என் ஃபேவரைட் சட்டையுடன் வந்தாள்.

"மோந்து பாருங்க!" சத்தியமாய் அப்படி ஒரு அகிலாவை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. இந்தக் கணத்தை இப்படியே மறந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படிச் சந்தேகப்படும் தோரணையுடனான அகிலாவின் முகம் என் மனதில் பதிந்துவிடக்கூடாதென்று நினைத்தவனாய் வேறு பக்கம் தலையை திருப்பினேன்.

"ஹ்ம்ம்ம்" என்று அழைத்தவள் கைகளில் திணித்தாள், அனிச்சையாய் நான் சட்டையை முகர்ந்து பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"இது நானோ நீங்களோ உபயோகப்படுத்துற செண்ட் கிடையாது. வேற செண்ட் அதுவும் பொண்ணுங்க உபயோகப்படுத்துறது!"

எனக்கு தலையைச் சுற்றுக் கொண்டு வந்தது, என்னிடம் எதுவும் விளையாடுகிறாளா என்று கூட நினைத்தேன் ஆனால் சில காலமாய் அவள் இருந்த மனநிலை அப்படி இருக்கவே முடியாது என்று சொல்லியதால் என்னதான் பிரச்சனையா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப சொல்லுங்க என்ன விஷயம் போய்க்கிட்டிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? இரண்டு குழந்தைகள் பிறந்ததும் கழட்டி விடணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?" அவள் கண்கள் இன்னொரு முறை மழை பொழியக்கூடிய மேகமாய் திரண்டு இருளத் தொடங்கியது.

ஒரு அறை விடலாம் என்று நினைத்தேன் நான், "அகிலா ஸ்டாப் இட். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? லூசாய்ட்டியா நீ?" என்றதும் என் கைகளில் இருந்த சைட்டையைப் பிடுங்கியவள் அதன் பாக்கெட்டில் இருந்து ஒரு பில் எடுத்து என்னிடம் நீட்டினாள். "அப்ப இதுக்கு என்ன சொல்றீங்க. இப்படி ஒரு பட்டுப்புடவை எனக்கோ உங்கம்மாவுக்கோ நீங்க வாங்கலை. அப்ப யாருக்கு வாங்கினது இது."

கைகளில் திணிக்கப்பட்ட பில் ஒரு மாதத்திற்கு முன்னர் நான் 10,000 ரூபாய்க் கொடுத்து பட்டுப்புடவை வாங்கியதாய்ச் சொன்னது ஆமாம் பில் என் பெயரில் தான் இருந்தது. ஆனால் நான் அகிலாவை விட்டுவிட்டு இந்த ஆறுவருடங்களில் பொருட்கள் வாங்கியதில்லை அதுவும் மிக நிச்சயமாய் பட்டுப்புடவை. கடையின் பெயரைப் பார்த்ததும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் என்ன நடந்திருக்க முடியும் என்கிற வழிக்கு என் நினைவுகள் என்னை அழைத்துச் சென்றன. சட்டென்று அனல்மழை பொழிய சூழ்ந்திருந்த மேகம் விலகியதைப் போன்ற உணர்வு. எனக்கு கொஞ்சம் சிரிப்பாய்க் கூட வந்தது என்னால் நடந்திருக்கக்கூடிய அனைத்தையும் ஒருவாறு ஊகிக்க முடிந்ததும்.

அவளை அருகில் அழைத்தேன், நெருங்கி வந்தவளை அருகில் உட்கார வைத்துவிட்டு, மெதுவாய்ச் சிரித்தபடி.

"நான் தோத்துட்டேன் அகிலா, நான் தோத்துட்டேன் அதுவும் உன்னால." சொல்லிக் கொண்டிருந்த என்னை அவள் அழுதபடியே ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

நான் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் என் அலுவல பெண் தோழியொருத்தி, தன் கணவர் மீதிருக்கும் சந்தேகத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது திமிராய் என் மனைவி என்னைச் சந்தேகப்படவே மாட்டாள். நாங்க இரண்டுபேரும் அப்படி இப்படி என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். அவள் அப்படியிருக்கவே முடியாது பெண்கள் என்றால் தங்கள் கணவனைப் பற்றிச் சந்தேகப்படாமல் இருக்கவேமுடியாது என்று சொன்னவள் என்னிடம் அதை நிரூபித்துக் காட்டுவதாய் பெட் கட்டினாள். அவள் தான் இப்படிச் செய்திருக்கவேண்டும் என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தேன். நம்புவதைப் போல் இல்லாததால் சட்டென்று அவளை தொலைபேசியில் அழைத்தேன், நடு இரவு தான் ஆனால் வேறு வழியில்லை அகிலா சந்தேகப்படுவதை விடவும் எனக்குப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்று நினைத்தேன்.

நடு இரவு தொலைபேசி அழைப்பை எடுத்தவளிடம் என்றுமில்லாத அளவிற்கு புன்னகை மறுமுனையில் கேட்டது.

"என் பெண்டாட்டி சந்தேகப்பட்டுட்டா நான் தோத்துட்டேன் நீயே பேசு!" என்று சொல்லி அகிலாவிடம் கொடுத்தேன். திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த அகிலா பேசமாட்டேன் என்று சொல்லி நழுவ நினைத்த பொழுதும் அவளிடம் சாமர்த்தியமாய் திணித்தேவிட்டேன்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், இவள் இந்தப் பக்கம் சிரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு அதைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது. மாதக்கணக்கில் அவள் முகத்தில் சிரிப்பையே நான் பார்த்ததில்லை. இவள் இந்தப் பக்கம் பேசும் வார்த்தைகளை வைத்து அவள் அந்தப்பக்கம் சொல்லும் விஷயத்தை ஊகிக்க முயன்று கொண்டிருந்தேன்.

"ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னுமில்லை உண்மையில் சந்தேகமெல்லாம் படலை சும்மா கேட்டுக்கிட்டிருந்தேன் அவர் உளருறார்." என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி புன்னகைத்தவாறு.

"சரிங்க ஒன்றும் பிரச்சனையில்லை" என்று சொல்லி வைத்தாள். வேகமாய் என்னிடம் வந்தவள் என் நெஞ்சில் குத்தியபடி.

"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல, ச்ச கடைசியில் இப்படி ஆய்டுச்சே!" என்று ரொம்பவும் வருத்தப்பட்டாள். அந்த ஒரு மாதமாய் அவளிடம் இருந்த முகம் இல்லை இது, அவளால் நடிக்க முடியாது எனக்கு நன்றாய்த் தெரியும். உண்மையிலேயே தன் புருஷனை இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டதாய் வருத்தப்பட்டதாகவே தெரிந்தது.

"அந்தம்மா சொல்லுது நான் பார்த்த இந்த மூணு விஷயம் இருக்கில்லையா இது மாதிரி நிறைய ட்ரை பண்ணினாங்களாம். பாருங்க நான் கடைசியில் இந்த மூணு விஷயத்தில் விழுந்துட்டேன். அந்தம்மா சொன்னிச்சு நான் முன்ன பண்ணினதுக்கு விழுந்துடுவேன்னு நினைச்சாங்களாம், ஆனால் முடி விஷயம் எல்லாத்தையும் விழ வைச்சிடும்னு தெரியும்னு சொன்னாங்க. நானும் அந்த முடி விஷயத்தில் ஆரம்பிச்சி தான் மத்த இரண்டையும் கண்டுபிடிச்சேன். சாரிங்க. உங்களை அப்படி நினைச்சிருக்கக்கூடாது தப்புதான்." உண்மையில் வருத்தப்பட்டாள்.

நான், "ஏய் இங்கப்பாரு என்னா சும்மா வருத்தப்பட்டேன்னு சொல்லி சரிபண்ணிடலாம்னு பார்க்கறியா! அதெல்லாம் சரிப்படாது இதுக்கு சரியான உபகாரம் செய்தாகணும். நான் மூணாவது ஒரு ப்ராடக்ட் தயார்ப்பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..." என்றபடி ஆரம்பிக்க,

"ஆளைப்பாரு இந்தியாவுக்கு இரண்டே பெரும் பாரம் மூணாவதாம்ல. கனவு காணுறதை விட்டுட்டு மரியாதையாத் தூங்கப்பாருங்க நாளைக்கு ஆபீஸ் போகணும்ல" கண்டிப்புடன் சொல்லியபடி எழுந்து வந்து உட்கார்ந்திருந்த என் 'பெரிய' நெற்றியில் முத்தமொன்று வைத்தாள் பழைய 'ஹவில்தார்' மனைவி அகிலா.

PS: ரப் நே பனா தி ஜோடி படம் பார்த்துவிட்டு வந்து படம் பற்றிய நினைவுகளை எழுதியதும் சட்டென்று இதைப் போன்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதிய ஞாபகம் இருந்ததால் தேடிப்பார்த்தேன். அகிலா ப்ராஞ்செய்ஸ்க்காக எழுதி முடிக்கப்படாமலும் பதிவிடப்படாமலும் இருந்த இந்தக் கதையை பண்புடனுக்காக அனுப்பி வைத்திருந்தேன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In அகிலா கதைகள் அறுபத்தைந்து

அகஅ - அன்புள்ள அகிலாவிற்கு




எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்
அகிலா கதைகள் அறுபத்தைந்து

என் எழுத்தைப் படிக்க முடியாதவர்களுக்கு...

அன்புள்ள அகிலாவிற்கு,

நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.

காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!

அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ' அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In அகிலா கதைகள் அறுபத்தைந்து சிறுகதை

அகிலா கதைகள் அறுபத்தைந்து

"சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?"

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

"ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?"

"உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?"

"இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை".

"ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?"

நான் மௌனமாயிருந்தேன்.

"பதில் சொல்லுங்க சார்." கத்தினாள் மறுமுனையில்

"ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்."

கேட்டவள் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கிற!"

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு "உங்கக்கிட்ட 'ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்'ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி."

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே "ம்ம்ம்" என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

"...ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

---------------------

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்

* தொடர்கதையாக ஆக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஆகாது போலிருக்கு.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts