சின்டிரெல்லா மேன், இந்த படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பு சிலகாலமாகவே இருந்து வந்தது, இதற்கு முக்கியமான சில காரணங்களும் உண்டு. ரான் ஹோவார்ட் இயக்கத்தில், ரஸல் குரோ நடிப்பதால் வந்த எதிர்பார்ப்பு. இவர்களின் சேர்க்கையில் வந்த ‘A Beautiful Mind’ படம் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால். இந்த படத்தையும் பார்க்கவேண்டும் எண்ணம் ஆரம்பத்திலேயே எழுந்தது.
இது அமேரிக்காவின் டிப்ரஷன் எராவில் நடந்த ஒரு குத்துச்சண்டை வீரனைப்பற்றிய உண்மைச் சம்பவத்தைப்பற்றிய படம். அமேரிக்க மக்கள் முட்டிக்காலில் நின்றுகொண்டிருந்த பொழுது அவர்களை தன் பாக்ஸிங் திறமையால் நுனிக்காலில் நிற்கவைத்தவர் என்ற பெருமை பெற்ற ஜேம்ஸ் பிராட்டாக் பற்றிய உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் சின்டிரெல்லா மேன்.
படத்தின் தலைப்புக்கு கவித்துவமான விளக்கம் உண்டு, அதாவது ஜேம்ஸ் பிராட்டாக் சிறிய அளவிலான பாக்ஸராக இருந்து உலகத்தின் ஹெவிவைட் சாம்பியனானது ஒரு கற்பனைக்கதையைப் போன்றதாகவே இருந்தது. தன்னுடைய முப்பதாவது வயதில், பாக்ஸிங் ரிங்கில் தன்னுடைய தாக்குதலால் இரண்டு நபர்களை கொன்றதாக பெயர்பெற்ற மாக் பியரரை வென்றது ஹெவிவைட் பாக்ஸிங்கில் இன்றும் குறிப்பிடப்படும் ஒரு மிகப்பெரிய வெற்றி. போட்டிக்கு முன்பு 1/10 மட்டுமே வெல்வதற்காக பெற்றிருந்த பிராட்டாக் வென்றது பாக்ஸிங்கின் மிகப்பெரிய அப்செட் இன்றைக்குவரைக்கும்.
மில்லியன் டாலர் பேபியைப்போன்றோ, இல்லை அதற்கு முன் வந்த பாக்ஸிங் படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது இந்த சின்டிரெல்லா மேன். படத்தில் பாக்ஸிங் இடம்பெற்றிருந்தாலும். ஜேம்ஸின் வாழ்கையைத்தான் இயக்குநர் வெகுவாக படமாக்கியிருப்பார். அவருடைய ஏழ்மை, அமேரிக்காவின் தொழில் முடக்கம் இப்படியாக.
படம் 1929ல் ஜேம்ஸ் லைட்வைட் சாம்பியன்ஷிப்பிற்காக மோதும் போட்டியில் தொடங்கும். அப்பொழுது அவர் குடும்பம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான பணத்தை சம்பாதித்துக்கொண்டு இருக்கும் பிராட்டாக், பிறப்பில் ஒரு ஐரிஷ். பின்னர் நடக்கும் அமேரிக்க ஸ்டாக் மார்க்கெட் இழப்பில் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அளவிற்கு போய்விடும். பின்னர் சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல், தன்னுடைய வலது கையில் அடிபட்டிருக்கும் நிலையிலும் சண்டையில் பங்கேற்று கையை உடைத்துக்கொள்ளும் பிராட்டாக்கின் பாக்ஸிங் லைசன்ஸ் ரத்துசெய்யப்படும்.
இந்தச் சமயத்தில் அவர் குடும்பம் மின்சாரத்திற்கு கூட பணமில்லாமல் வீட்டில் இருந்து இணைப்புத்துண்டிக்கப்படும். இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பாக்ஸிங் வீரரின் முன்னறிவிப்பில்லா விலகலில் மீண்டும் பாக்ஸிங் செய்ய பிராட்டாக்கிற்கு ஒருவாய்ப்பு வழங்கப்படும். பின்னர் அந்தப்போட்டியில் வெற்றி பெற்று பிராட்டாக் எப்படி உலக ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் மாக்ஸ் பியரரை வெல்கிறார் என்பதே கதை.
கொஞ்சம் மென்மைத்தன்மையுள்ள பாக்ஸராக பிராட்டாக்கின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆஸ்கர் வின்னர் ருஸல் குரோ, குறிப்பாக சில காட்சிகளில் வசனங்கள் இல்லாமல் தன்னுடைய முகபாவத்திலேயே பேசும் பொழுது பின்னுகிறார். அவருடைய மனைவியாக மற்றொருமொறு ஆஸ்கர் வின்னர் ரெனி ஷெல்வேக்கர் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் பரவாயில்லை செய்திருக்கிறார், கொஞ்சம் கஷ்டமான கதாப்பாத்திரம், இருந்தாலும் பரவாயில்லை லெவல்தான். பிராட்டாக்கின் மேனேஜராக பவுல் கிமாட்டி நடித்திருக்கிறார் அவரின் திறமை பல காட்சிகளில் பளிரிடுகிறது. பாக்ஸிங் போட்டிகளில் காமிராவின் கோணங்கள் எனக்கு கொஞ்சம் புதியதாய்ப்பட்டது. மற்றபடி இயக்குநரின் திறமை படமாக்களில் தெரியத்தான் செய்கிறது.
தன் மகன் சாப்பாட்டிற்காகத் திருடிவிடும் சூழ்நிலையில், எக்காரணம் கொண்டும் அவனை மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அனுப்பமாட்டேன் என்று சொல்லும் காட்சி நன்றாய் இருக்கும். பிறகு ஹெவிவைட் சாம்பியன்ஷிப்போட்டிக்கு முன் நடக்கும் பேட்டியில், தான் சண்டையிடுவதும் வெற்றிபெறுவதும் தன் குடும்பத்திற்கு தேவையான பாலை(சாப்பாட்டை) தரவே என்று சொல்லும் காட்சியும் நன்றாய் இருக்கும்.
இதுபோல இயக்குநரின் டச் சில இடங்களில் தெரியும், பாக்ஸிங் படமாதலால் கொஞ்சம் கெட்டவார்த்தைகள் நிரம்பிய படம் தான் இதுவும்.
பிராட்டாக் அந்தப்போட்டிக்கு பிறகு, இரண்டாண்டு கழித்து தன் ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பை ஜான் எஹுன்றி லீவிஸிடம் இழந்தார். ஆனால் அந்தப்போட்டியில் கிடைத்த பணத்தில் கடைசிவரை அவர் வாழவழிகிடைத்தது. அதன்பிறகு அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்றார். இவருடைய திறமையைக் கருத்தில் கொண்டு அமேரிக்க அரசு இவருடைய படம் இடம்பெற்றுள்ள தபால்தலையை வெளியிட்டது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் ரஸல் மற்றும் ரோன் ஹோவார்ட் இருக்கிறார்கள் இந்தப்படத்திற்காக கிடைக்குமா தெரியவில்லை. மற்றபடிக்கு ரோன் ஹோவார்டுக்காகவும் ரஸல் குரொவுக்குமாக ஒருமுறை நிச்சயமாய்ப் பார்க்கலாம்.
References
http://movies.yahoo.com
http://en.wikipedia.com
http://www.jamesjbraddock.com
இந்தப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். A BEAUTIFULL MIND அருமையான படம். ரஸ்ஸல் குரோவின் நடிப்பும் அபாரமாக இருக்கும்.
ReplyDelete